19.11.17 : அனுஷ தினம் :
இன்று, அனுஷம். பெரியவா பக்தர்கள் கூடி, அந்த சங்கர தெய்வத்தை ஆராதிக்கும் தினம்.
இன்றைய தினத்திலே, அந்த கயிலாய சங்கரன், இந்தப் புவி மிது இறங்கிக் காஞ்சி சங்கரனாய்த் திகழ்ந்ததன் காரணம் என்னவாய் இருக்குமென்று சற்றே வேடிக்கையாய் நினைக்கத் தோன்றியது.
“தந்தை தாயிருந்தால், உலகத்தில் உமக்கிந்தத் தாழ்வெல்லாம் வருமோ ஐயா” என்றும், “ஏன் பள்ளி கொண்டீரய்யா” என்றும், ஸ்வாதீனமாக அந்த பக்தப் பராதீனனைப் பாடுவது மரபுதானே? அந்த மரபினை ஒட்டி, எங்கள் உம்மாச்சித் தாத்தாவாம் இந்த சங்கரனாக – அந்த சங்கரன் அவதாரம் செய்ததை, நிந்தாஸ்துதிபோல் பாடிய பாடலை, அவரது திருவடிகளிலேயே சமர்ப்பிக்கிறேன்.
உன் இடம் தனதாகப் பெண்ணவள் தானேக,
தன் இடம் விட்டிங்கு தரைமீது வந்தாயோ? (1)
தலையேறி மனைவிசெய் கொடுமையே தாளாமல்
மலைவிடுத்தவனியில் தனியாக வந்தாயோ? (2)
குமரனும் கோபத்தில் ஆண்டியாய் ஆனதில்
விமலனே நீயுமே அவனைப்போல் வந்தாயோ? (3)
பித்தனே என்றுந்தன் பக்தனும் ஏசிட
அத்தனே நீயுமே முக்தனாய் வந்தாயோ? (4)
செருப்பதை பக்தனுன் மேனியில் வீசிட
விருப்பெலாம் விட்டு நீ உலகினில் வந்தாயோ? (5)
வில்லினால் விஜயனும் அடித்ததால் நொந்தங்கு
நில்லாமல் காஞ்சியில் இளைப்பாற வந்தாயோ? (6)
மண்சுமந்தயர்ந்த நாள் வாங்கிய பிரம்படிப்
புண்ணுமே ஆற்றிட மறுபடி வந்தாயோ? (7)
மதனையே எரித்தும் நீ குடும்பியாய்ப் போனதை
நிதமுமே நினைத்திங்குத் துறவியாய் வந்தாயோ? (8)
சதியவள் தந்தையும் மதிக்காமல் போனதால்
இதயமே நொந்து நீ இறங்கியே வந்தாயோ? (9)
அடியவர்க்கென்றுமே அருள்மழை பொழியவே
கடிநகர் காஞ்சிக்கு விரைந்து நீ வந்தாயோ? (10)
சங்கரா! நீ இங்குப் “பெரியவா” என வந்த
மங்கலம் தனை நிந்தாஸ்துதியாகப் பாடியதை
“சங்கடம்” என உதறித் தள்ளாமல் நீ ஏற்பாய்!
பங்கய மலர்ப்பாதம் தந்தென்னைக் காத்திடுவாய்!