Sunday, June 16, 2019

Anusham : 16.06.2019

Anusham : 16.06.2019



நிதம் நாடு நகரமெல்லாம் சுற்றிவந்தடியாருக்கு
சதமருள் மலர்கள் கண்டேன்; அருளுமம்மலர்கள் நாதன்
பதமலர் என்றும் கண்டேன்; இதமருட் பதமே என்றும்
கதியெனக்கென்றும் கண்டேன்; கழலிணை பணிந்தேனையா!  (1)

அருள்மலை ஒன்றை வையம் யாவைக்கும் தாயாம் உண்மைப் 
பொருள்மலை ஒன்றை, துன்பம், படுதுயர், சோகமென்னும்
இருள்மலையெல்லாம் போக்கும் ஜோதியாம் மலையைத் தூக்கி
வரும் பத மலர்கள் கண்டேன்; கழலிணை பணிந்தேனையா (2)

அறம் பொருள் இன்பம் வீடு அனைத்தையும் அருளும் ஞானத் 
துறவினோர் ஒளியை, எந்தன் தாயொடு தந்தையான
உறவதை, எந்தன் நெஞ்சில் வாழ் துவராடை வேந்தை
பிறப்பறுப்பானைக் கண்டேன்; கழலிணை பணிந்தேனையா! (3)

பவரோகம் தீர்த்து ஆளும் பிஞ்சகப் பெம்மான் தன்னை,
சிவமதை,  அரையில் பூண்ட துவராடை தன்னை நித்தம்
நவநவக் கோலம் காட்டும் மதிபுனற்சடையன் தன்னை
உவந்தெனதுளமே கண்டேன்; கழலிணை பணிந்தேனையா! (4)

வந்திடும் அடியார்க்கெல்லாம் வரமருள் தேவை, நெஞ்சில்
சிந்தனை செய்தோர்க்கெல்லாம் நலமருள் கோவை, நாளும்
வந்தனை செய்வோர் வாழ்வில் ஒளியதாம் ஜோதி தன்னை
எந்தையைக் கண்டேன் உந்தன் கலழிணை பணிந்தேனையா! (5)

கரமலர் தன்னை, நாயிற் கடையனாம் எனக்குமிங்கே
வரமருள் ஹஸ்தம் தன்னை, மெய்யடியாரை வாழ்த்திப்
பரமதும் நல்கும் பேற்றை,  கருணையாம் ஊற்றை,  கஞ்சி
வரதனைக் கண்டேன் அந்தக் கழலிணை பணிந்தேனையா! (6)

அமுததாம் தவத்தை, வாக்கை, உளமுடல் எல்லாமிங்கே
நமக்கென நல்கி நாம்செய் பாவமாம் நஞ்சையெல்லாம்
தமக்கெனக் கொள்ளும் தியாக வேந்தினை, பாகம் வாழும்
உமையவள் தன்னைக் கண்டேன்; கழலிணை பணிந்தேனயா! (7)

நஞ்சுண்ட கண்டன் தன்னை, அரவணி ஈசன் தன்னை
மஞ்சுண்ட கயிலை வாழும் மாமதி சூடி தன்னை,
அஞ்சுண்ட எந்தன் உள்ளம் ஆறுதல் பெறவே வந்த
அஞ்செழுத்தானை கண்டேன்; கழலிணை பணிந்தேனையா! (8)

உலகெலாம் போற்றுமந்த ஒளிமலர் முகத்தைக் கண்டேன்
நலமெலாம் தருமோர் நாமம் சிவமதாய் சிரிக்கக் கண்டேன்
குலம் குணம் செல்வம் தந்து, சீரொடு சிறப்பும் நல்கும்
புலர் கதிர் முகமே கண்டேன்! கழலிணை பணிந்தேனையா! (9)

பொங்கிடும் அன்பு கண்டேன்; பொன்மலர் முகமே கண்டேன்
மங்கலம் பொங்கக் கண்டேன்; முகம் உளம் நிறையக் கண்டேன்
சங்கு சக்கரமும் கண்டேன்! உமையொரு பாகன் கண்டேன்
எங்குமானந்தம் கண்டேன் ; கழலிணை பணிந்தேனையா! (10)