Sunday, July 26, 2020

Guruvaram songs

8.8.19

சக்தி நாயகன் நீ என்று அறிந்திடும் அறிவு கேட்டேன்
பக்தியால் உருகி உன்னைப் பற்றிடும் நெஞ்சம் கேட்டேன்
எக்கதி ஏதும் இல்லேன்; உன்மலர்த் தாளே இங்கு
திக்கெனக்கென்று வந்தேன் பதம்சதம் அருள்வாயப்பா
 
15.8.19

மடையிலி வெள்ளம் போலக் கருணையே அளிக்கும் பாதம்
குடையென என் சிரத்தில் கொள்ளவே ஓர் பேராசை!
கடையனென் மடியில் உந்தன் பதமலர் வைத்து எங்கும்
நடையாக நடந்த பாதம் பிடிக்கவே ஓர் பேராசை!

26.12.19

குருவருள் துணைவரின் கொடியவை தொலைந்திடும்
குருவருள் அணைதரின் காலனும் கைதொழும்
குருவருள் உடன்வரின் வினையெலாம் வற்றிடும்
குருவருள் ஒன்றினால் பிறவியும் போகுமே

2.1.2020

குவளையாம் கண்கள் கண்டேன்; கடல்போலக் கருணை கண்டேன்
பவளம்போல் மேனி கண்டேன்; பவவினை அழியக் கண்டேன்
துவராடை இடையில் கண்டேன்; துயரெலாம் நீங்கக் கண்டேன்
தவராஜன் பாதம் கண்டேன்; வேறெதும் வேண்டா நின்றேன்

9.1.2020:

உன்னையே காணும் பேற்றை, வேறெதும் காணாப் பேற்றை,
உன்னையே நினைக்கும் பேற்றை, வேறேதும் நினையாப் பேற்றை,
உன்னையே எனக்குள் கொள்ளும் அப்பேற்றை மட்டும் என்றும்
உன்னிடம் கேட்டு நின்றேன்; தந்தருள் புரிவாய் ஐயா!

16.1.2020:

விடையது ஏறும் பெம்மான் வடிவமாய் வந்தோன் நாமம்
இடை முதல் ஈறு என்ன எல்லாமாய் ஆனோன் நாமம்
கடையவன் எனக்கும் இங்கே நற்பதம் அளிக்கும் நாமம்
விடையதாம் பவப்பிணிக்கு, பெரியவா என்னும் நாமம்

23.1.2020
பொழிற் சோலை பூத்திருக்கும் பங்கயத்துப் பதமலர்கள்
எழிற் காந்தி சுடரொளியாய் மின்னிடுமம்மேனியொளி
தொழும்கைகள் வாழ்ந்திடவே வாழ்த்திடுமக் கரமலர்கள்
அழுமுன்னே ஓடிவந்து அரவணைக்கும் கருணைமுகம்!


9.7.20
அற்புதத் திருவடி அற்புதன் திருவடி
கற்றவர் தொழுதிடும் கற்பகத் திருவடி
சொற்பதம் கடந்தவன் நற்பத மலரடி
உற்றவர்க்கருளிடும் நற்கதி உய்த்திடும்