Sunday, May 10, 2015

Periyava : Periyava Ashtoththara Sadha Namavali : 19

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"பாஹுதண்டலசத் வேணுதண்டகாய நமோ நம" (19)

"கையில் (சன்னியாசிகளுக்குரிய) மூங்கில் தண்டத்துடன் விளங்குபவருக்கு நமஸ்காரம்" (19)



"Obeisance to Him, in whose hand rests the bambo staff of a sanyasin"


தண்டமாம் மூங்கிலேந்தி எளிமையே உருவாய் நின்று
கண்டவர் தொழுதுநிற்க மூவுலகும் மற்றும் இந்த
அண்டமே ஆட்சி செய்யும் அருள்முனியாய் விளங்கும்
தண்டபாணி தெய்வத்தின்தாள் பற்றினோம் போற்றி போற்றி


Saturday, May 9, 2015

Periyava : Periyavalum Ramanarum : My periyappa's experience

எனது பெரியப்பா ஸ்ரீமான் (லேட்) சுந்தரேஸ்வர ஐயர், பிக்ஷாண்டார் கோவில், என்னிடம் நீண்ட நாள் முன்பு பகிர்ந்து கொண்ட செய்தி ஒன்றை இந்தக் குழுமத்தில், பெரியவா பக்தர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன். அடியேனுடைய பெரியப்பா தற்போது பூதவுடலுடன் இல்லை. அப்படிப்பட்ட சமயத்தில் அவர் சொன்ன நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ளலாமா என்றும் ஒரு சந்தேகம் என்னுள் எழுகிறது (நான் ஏதேனும் தவறாகச் சொல்லிவிடக்கூடாது இல்லையா - சுட்டிக் காட்ட, சரி செய்ய, அவர் இல்லையே). ஆனாலும், தவறு ஏதும் இல்லமல் இதனை சரியாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள, ஸ்ரீசரணர் அருளட்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
எனது பெரியப்பா (ஸ்ரீமான் (லேட்) சுந்தரேஸ்வர ஐயர், பிக்ஷாண்டார் கோவில்), ஒரு முறை, திருவண்ணாமலை சென்று, ஸ்வாமி தரிசனம் செய்து, பின்னர் ஸ்ரீ ரமண மஹரிஷியை தரிசிக்கச் சென்றார். அப்பொது 1940 -1945 ஆக இருக்கலாம். மஹரிஷியைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும், முதல் முறை தரிசனம். எல்லோருடனும் சேர்ந்து மஹரிஷி சாப்பிடுவதை, அதிலும் இட்லி சாப்பிடுவதை பார்த்து அதிசயித்தார்.


பின்னர், ரமண மஹரிஷி தரிசனம் கொடுக்க ஹாலுக்கு வந்த போது, எல்லோருடனும் சேர்ந்து, எனது பெரியப்பாவும் ஹாலுக்கு வந்து, அனைவருடனும் அமர்ந்து கொண்டார். அப்போது அவருக்கு ஒரு அதிசய அனுபவம் ஏற்பட்டது. மஹரிஷிகளின் கண்கள், எனது பெரியப்பாவின் கண்களை ஒரு முறை நோக்கின. அவ்வளவுதான். எனது பெரியப்பா, உடல் லேசாக ஆனது போல் உணர்ந்தார். மிக ஆனந்தமாகவும் சந்தோஷமாகவும் உணர்ந்தார். தன் நினைவு இழந்தார். ஒரு கட்டத்தில், மஹரிஷிகள் தனது அருட்பார்வையை எனது பெரியப்பாவின் கண்களிலிருந்து விலக்க, தனது சுய நினைவைப் பெற்றார். எத்தனை நேரம் இது போன்று இருந்தது என்று அவருக்குத் தெரியவில்லை. இது என்ன அனுபவம் என்றும் அவருக்குப் புரியவில்லை. யாரிடம் கேட்பது? பெரியவாளிடம் சென்று கேட்கலாம் என்று தீர்மானித்தார்.
பெரியவாளை (எந்த இடத்தில் பெரியவாளைப் பார்த்தார் என்பது இப்போது எனக்கு நினைவில் இல்லை) சென்று தரிசனம் செய்துகொண்டார். பெரியவா சற்றே ஓய்வாக இருந்தபோது, அருகில் சென்று பணிந்தார். தன் தாத்தா பெயர் (நாராயண ஐயர்), அப்பா பெயர் (கணபதி ஐயர்), அம்மா பெயர் (ஈஸ்வரி), தனது மாமா தாத்தா பெயர் (பைங்கானாடு பஞ்சாபகேச ஐயர் - பெரியவாளின் ரிக் வேத குரு), பிறகு கடைசியில் தனது பெயர் - எல்லாம் சொல்லி வந்தனம் செய்து கொண்டார். பின்னர், தன் அனுபவம் பற்றிப் ப்ரஸ்தாபித்தார்.


"சமீபமா, திருவண்ணாமலைக்குப் போயிருந்தேன்"
பெரியவாளின் முகத்தில் புன்னகை. "பெரியவாளைப் பார்த்தியோ?"
நாம் எல்லொரும் 'பெரியவா' எனக் கொண்டாடும் அந்த தெய்வம் 'பெரியவாளைப் பார்த்தியோ' என்று ரமண மஹரிஷிகளைப் பற்றிக் கேட்டது!
"ஆமாம். பார்த்தேன்.." என்றார் பெரியப்பா.
"என்னது? பார்த்தேன்னு சொல்லிட்டு இழுக்கறயே, என்ன சொல்லு!"
ஸ்ரீ சரணர், வந்தவர் எதோ சொல்ல நினைக்கிறார், அதைக் கேட்பது சரியா தவறா என்று புரியாமல் இருக்கிறார் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு மேலும் சொல்லுமாறு ஊக்கப்படுத்துகிறார்!
பெரியப்பா : "இல்ல, மஹரிஷியைப் பார்த்தேன். நல்ல தரிசனம். எல்லாரோடையும் சேர்ந்து சாப்ட்டார்..."
ஸ்ரீ சரணர் : "சாப்டார்னு இழுக்கறயே! என்ன, ரமணர் இட்லி சாப்ட்டாரோ? அதானே?"
பெரியவாளுக்குத் தெரியாதது ஏதாவது உண்டா என்ன! பெரியப்பாவின் சந்தேகத்தை சரியாகப் பிடித்து விட்டார் !
பெரியப்பா : "ஆ..ஆமாம். சாப்ட்டார்"
ஸ்ரீ சரணர் : "என்னடா இது, இங்க இவா இட்லி சாப்டரது இல்லையே, மஹரிஷி மட்டும் சாப்ட்டாரே ..ந்னு பாக்கறையோ?"
பெரியப்பா : "ஆ ..ஆமாம் பெரியவா"
ஓரு புன்சிரிப்போடு ஸ்ரீ சரணர் சொல்ல ஆரம்பித்தார்.
"அவா எல்லா ஆஸ்ரம நிலையயும் தாண்டியாச்சு. அவாளுக்கு, மடம்னு ஒரு கட்டும் காவலும் இல்லை. ஆனா, இங்க அப்படி இல்லை. இந்த மடத்துக்குன்னு ஒரு சம்ப்ரதாயம் இருக்கு. ஓரு கட்டுத் திட்டம் இருக்கு. அதையெல்லம் காப்பாத்த வேண்டிய கடமையும் எனக்கு இருக்கு. அதனாலதான் இங்க இட்லி சாப்படர வழக்கம் இல்லை. புரிஞ்சுதா?"
"ம்..ம்" என்று தலையாட்டினார் பெரியப்பா.
ஸ்ரீ சரணர் : "சரி. அங்க வேறென்ன நடந்தது?"
பெரியப்பா : "நாங்கள்ளாம் சாயங்காலமா தரிசனத்துக்குப் போயிருந்தோம். அப்போ, மஹரிஷியோட திருமுகத்தையே பார்த்துண்டு இருந்தேன். டக்குன்னு ஒரு சமயத்துல, அவர் என்னைப் பார்த்தார். அவரோட கண்கள் என் கண்களைப் பார்த்தவொடனே, எனக்கு ஏதோ ஆயிடுத்து. ஸ்மரணையே போனா மாதிரி இருந்துது. உடம்பு லேசா ஆன மாதிரி இருந்தது. ரொம்பவும் ஆனந்தமா இருந்துது. அந்த மாதிரி எவ்வளவு நேரம் இருந்தேன்னு தெரியலை. திடும்னு ஸ்மரணை வந்த போது மஹரிஷியோட பார்வை வேற யார் பக்கமோ திரும்பியிருந்தது...."
ஸ்ரீ சரணர் : "என்ன ஆச்சுன்னு தெரியலையோ?"
பெரியப்பா : "ஆமாம்"
ஸ்ரீ சரணர் : "அந்த மாதிரியே இருந்துட்டா, ரொம்ப நன்னா இருக்கும்னு தோணறதோ?"
பெரியப்பா : "ஆமாம்"
பெரியவா மென்மையாகச் சிரித்தார். சற்று நேரம் மௌனமாக இருந்தார். பின் மெல்லிய குரலில் சொன்னார் :
"அவா உன் மனசை சித்த நேரம் இல்லாமப் பண்ணியிருக்கா. மனசே இல்லாம போயிடுத்துன்னா, ஆனந்தம்தான். அந்த ஆனந்தத்துல, ஒரு துளியை உனக்குக் குடுத்து இருக்கா. அடிக்கடி சன்னதிக்குப் போய் தரிசனம் பண்ணிக்கோ" .
பெரியப்பா, பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு திரும்பி விட்டார். இதன்பிறகு சில முறை, மஹரிஷிகளையும் தரிசனம் செய்தார்.
இந்த நிகழ்ச்சி பற்றிப் பலமுறை என்னிடம் கூறி சந்தோஷப்படுவார் எனது பெரியப்பா. மஹரிஷிகளைப் பற்றிக் கேட்டபோது "பெரியவா எப்படி இருக்கா" என்று கேட்டது; "சாப்டார்னு இழுக்கறயே! என்ன, ரமணர் இட்லி சாப்டாரோ? அதானே?" என்று கேட்டது; "அவா உன் மனசை சித்த நேரம் இல்லாமப் பண்ணியிருக்கா" என்று விளக்கம் சொன்னது; "அடிக்கடி சன்னதிக்குப் போய் தரிசனம் பண்ணிக்கோ" என்று வழி காட்டியது என்று பெரியவா சொன்ன ஒவ்வொன்றையும் சொல்லிச் சொல்லி ஆனந்தப்படுவார் அவர்!

Periyava : Periyava Ashtoththara Sadha Namavali Stotram : 18

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"கடாக்ஷமாத்ர மோக்ஷேச்சா ஜனகாய நமோ நம" (18)

"வெறும் கடாக்ஷத்தாலேயே ஜனங்களுக்கு மோக்ஷத்தில் இச்சையை உண்டாக்கக் கூடியவருக்கு நமஸ்காரம்" (18)

"Obeisance to Him who generates a desire (among people) for moksha merely by his glance" (18)


போகத்தில் விழுந்திருக்கும் மாந்தரைத் தமதுதவ

யோகத்தால், கருணைபொழி நயனங்கள் தாமருளும்

வேகத்தால் மாற்றிவைத்து அவர்க்குமே இங்கு மோக்ஷ

தாகத்தை தந்துநிற்கும் குருமுனிதாள் போற்றி போற்றி (18)

Friday, May 8, 2015

Periyava : Periyava Ashtoththara Sadha Namavali : 17

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan


பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"கடீதடலசச்சாரு-காஷாயாய நமோ நம" (17)

"இடையில் விளங்கும் அழகிய காஷாய வஸ்த்ரம் கொண்டவருக்கு நமஸ்காரம்" (17)

"Obeisance to Him whose waist is draped by a beautiful ochre vastram" (17)


பெரும்பித்தன் புலித்தோலை அரைக்கிசைத்து ஆடினவன்,
பெரும்யானைத் தோலுரித்து, மேலாடை ஆக்கினவன்,
பெரும்வெளியைத் தானுடுத்தும் திகம்பரனாம் சிவநாதன்,
அரும்காவி இடையணியும் அற்புதன்தாள் போற்றி போற்றி (17)


Thursday, May 7, 2015

Periyava : Periyava Ashtoththara Sadha Namavali : 16

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"அத்வைதானந்த - பரித- சித்ரூபாய நமோ நம" (16)

"அத்வைத ஆனந்தத்தால் நிரம்பிய சித்ரூபிக்கு, நமஸ்காரம்" (16)

"Obeisance to Him who is the form of the cit (consciousness) filled with the nectar of Advaita" (16)




ஆனந்தக் கடலாய்வந்த அத்வைத மூர்த்தி சத்சித்
ஆனந்த சாகரத்தில் திளைத்திடும் யோக மூர்த்தி
வானந்தமான இந்த ஜகமெலாம் காக்கும் ஞான
ஆனந்த மூர்த்தி பாதம் வணங்கினோம் போற்றி போற்றி (16)

Wednesday, May 6, 2015

Periyava : Periyava Ashtoththara Sadha Namavali : 15

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

"அமந்தானந்த க்ருன்மந்த கமனாய நமோ நம" (15)

"மெல்லிய நடையால் அளவில்லா ஆனந்தம் கொடுப்பவருக்கு நமஸ்காரம்" (15)

"Obeisance to Him who, though with a bounded gait, gives us unbounded Ananda" (15)



பேறாயிரம் கொடுக்கும் கேளாமல்தான் கொடுக்கும்
நூறாயிரம் ஜன்மம் செய்தவத்தால் கிடைக்கும்
வாராமல் வந்துதித்த மாமுனியின் பதமலரை
சீரான நடை அழகை வணங்கினோம் போற்றி போற்றி
(15)


இந்த நாமாவில் எனக்குச் சற்றே சந்தேகம் இருக்கிறது. பெரியவா நடை, மிக வேகமான நடை. மெதுவான நடை இல்லை. 'மந்த கமனம்' என்பது, சாதாரணமாக, 'மெதுவாக' நடப்பதைத்தானே குறிக்கும்? இங்கே, நாமாவின் தமிழாக்கம், 'மெல்லிய நடையால்' என்று இருக்கிறது. 'மெல்லிய நடை' என்று, சாதாரணமாகச் சொல்வது இல்லை. 'அதிராத நடை' என்பதை, இங்கே, 'மெல்லிய நடை' என்று குறிக்கிறார்களா?

ஆங்கில மொழிபெயர்ப்பு, 'அளவான நடை ஆனால், அளவில்லாத அருள்' என்பது போல் தொனிக்கிறது...

தெரிந்தவர்கள் யாரேனும், விளக்கமாகச் சொல்லுங்களேன்!!

Tuesday, May 5, 2015

Periyava : Periyava Ashtoththra Sadha Namavali Stotram : 14

பெரியவா அஷ்டோத்தர சத நாமாவளி ஸ்தோத்ரம்
The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by Sri. Ravi Venkatraman
Tamil poems by Visvanathan
பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்கு, இந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

“காந்திநிர்ஜித சூர்யேந்து கம்பராய நமோ நம” (14)

“சூரியனையும் சந்திரனையும் தன் காந்தியால் வெல்லக் கூடிய அழகிய தேஜசுடையவருக்கு நமஸ்காரம்” (14)

“Obeisance to Him whose beautiful tejas (lustre) dulls the shine of the sun and the moon” (14)


சுடர்மேனியின் திகழ்ஜோதியில் கதிரோனொளி மறைய
இடர்தீர்த்திடும் முகஜோதியில் நிறைமாமதி நாண
தொடர்மாயையும் கரஜோதியின் ஒருஆசியில் அழிய
அடர்வல்வினை பதஜோதியின் ஒருகாட்சியில் அறுமே (14)

இந்த நாமாவளிக்கன பாடல் எழுத ஆரம்பிக்கும்போது, கம்பராமாயணக் காட்சிதான் கண்முன் விரிந்தது. ராமன், ஸீதையோடும், இளைய பெருமாளோடும் கானகம் நடக்கிறான். அவன் மேனிப் ப்ரகாசத்தில், சூரியனின் ப்ரகாசம்கூட மறைந்து போகிறது என்று கம்பன் எழுதும் அந்தக் காட்சி தான் நினைவுக்கு வந்தது



"வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய, 

'
பொய்யோ' எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்

மையோ, மரகதமோ, மறிகடலோ, மழைமுகிலோ,

ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்"  (கம்பராமாயணம்)


அதே சந்ததில், இன்றைய நாமவளிக்கான பாடலும் அமைந்து போனது, பெரியவா அனுக்ரஹம்தான்