Friday, October 28, 2016

29.10.2016 : தீபாவளி நன்னாள்

29.10.2016 : தீபாவளி நன்னாள்

பெரியவா சரணம். அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இன்றைய நாளில், "ஜனனி நினுவினா" என்று சுப்பராய ஸாஸ்த்திரிகளின், ரீதிகௌளையில் அமைந்த பாடலின் வரிகள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

"ஈ ஜகமுலோ திக்கெவரம்மா" என்று மனமும் உயிரும் உருகிக் கரையும் அற்புதமான பாடல்.......

அந்த ஜகஜனனியேதானே இங்கே நமது பெரியவாளாய் வந்திருக்கிறாள்....

பெரியவாளின் பதம் பணிந்து, ரீதி கௌளையில் ஒரு பாடல்....

********************************************************************


ஐயா நீ வாராய்……என்
ஐயா நீ வாராய் ….
இன்முகம் காட்டி எந்தன் (ஐயா)

பொன்மலர்ப் பாதம் நோக
உலகெல்லாம் நடந்தீரே
சின்னஞ்சிறுவன் இவன்
குரலை கேட்டிங்கு
ஐயா நீ வாராய்……என்
ஐயா நீ வாராய் ….

உமையே நினைத்திருந்தேன்
உயிரும் தரித்திருந்தேன்
இமையும் மூடாது விழியில் ஆறோட
வினையின் வேர்மூலம் விலக்கும் பதம் சேர
ஐயா நீ வாராய்……என்
ஐயா நீ வாராய் ….

Tuesday, October 18, 2016

18.10.2016 : கிருத்திகை : பத்தர்க்கென நச்சை அமுதென

18.10.2016 : இன்று, கிருத்திகை.


இந்த கிருத்திகை நாட்கள் தோறும், கையில் வேலில்லாமல், தண்டத்துடன் வந்து நம்மிடம் நடமாடிய ஸ்வாமிநாதனேயாகிய பெரியவாளின் மேல், திருப்புகழ் பாடலின் சந்தத்தில், ஒரு பாடலைப் பாடுவது என்று ஆவல்.


இன்றைய கிரித்திகையிலும் அந்த ஆவலை நிறைவேற்றிக் கொடுத்த பெரியவாளின் பதகமலங்களுக்கு இந்தப் பாடலை காணிக்கையாக்குகிறேன்.
************************************************************


"முத்தைத் திரு பத்தித் திருநகை" என்ற திருப்புகழ் சந்தத்திலே இந்த்ப் பாடலை அமைந்திருக்கிறது....


******************************************************************************


பத்தர்க்கென நச்சை அமுதென
இச்சையொடு முற்றும் பருகிய
உள்ளம்கவர் கள்வன் அவனது - வடிவான


அத்தன்பெரு வித்தன் மனதினில்
நித்தம்உறை சித்தன் கரமது
நித்தம்தரு பக்திக் கனியது - வரமாக


புத்தன்மத மித்யைச் சிதறிட
புத்தம்புது வித்தைக் கொடுதரு
சுத்தன்உரு சித்தன் அருளொடு - இனிதேகி


இக்கட்டுக ளைப்பற் பொடிதரு
திக்கட்ரவர் கட்குத் துணைவரு
ரக்ஷித்தருள் நின்பொற் பதமது - தருவாயே!

Tuesday, September 20, 2016

21.09.2016 : கிருத்திகை நாள் : நித்தமு மடிபணிந்துற்றிடு மடியவர்

21.09.2016 : கிருத்திகை நாள்

இன்று, கிருத்திகை.

கிருத்திகை தோறும், அந்த முருகனுக்குப் பிடித்த திருப்புகழின் மெட்டிலே, அந்தக் குமரனின் ஞானமே வடிவாய் வந்த என் உம்மாச்சித் தாத்தாவின் மேலே ஒரு பாடல் பாடுவது,  அவர் அருளால் நடந்து கொண்டிருக்கிறது.


இன்றைய பாடல் : "கைத்தல நிறைகனி" மெட்டில்.

"தத்தன தனதன தத்தன தனதன
 தத்தன தனதன  - தனதானா"

இன்றைய கிருத்திகைத் திருநாள் பாடல், பெரியவா பொற்பாத கமலங்களுக்கு, சமர்ப்பணம்.
*******************************************

நித்தமு மடிபணிந்துற்றிடு மடியவர்
சித்தம துறைஎழில் - சிவரூபா!      

பக்தியொ டுனதடி பற்றிடு மெவரையும்
முக்திகொ டருளிடு - உமைபாலா!

பங்கயப் பதமலர் நொந்திட கடிதுவன்
தெங்களுக்கருளிடும்  -  குருனாதா!

எக்கண முனைநினை புத்தியொ டுனதடி
உற்றிடு நலமருள் யதிராஜா!


அற்பனென் உளமதை சற்குரு உறைதிரு
நற்பத மெனகதி தருவாயே!

கற்பக மெனவொரு அற்புத மதுசெயும்
பொற்பத மலரதை அருள்வாயே!

Wednesday, September 7, 2016

அனுஷப் பாடல் : 8.9.16 : பதமென்னைச் சேராயோ?

08.09.2016 : அனுஷ தினம்: 
*******************************

இன்றைய அனுஷ தினத்திலே, பெரியவாளிடம் அடியேன் தினமும் கேட்கும் கேள்விகளைப் பாடலாக, அடியார் குழாத்துடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பெரியவாளின் அடியார்கள் பெரியவாளிடம் பல விதத்திலே பக்தி செய்வார்கள்.

பிரதோஷ மாமா போன்ற அத்யந்தத் தொண்டர்கள் பெரியவாளே உயிர் மூச்சாய் வாழ்ந்தார்கள். கணேச மாமா போன்றவர்கள், பெரியவாளைப் பற்றிப் பேசும்போதும், அவர் பற்றி, அவர் செய்தன பற்றி நடித்துக் காட்டும்போதும், பெரியவாளாகவே மாறி விடுகிறார்கள்.

எனது அருமை நண்பர்களான சாணு அண்ணாவிற்கும், கார்த்தி அண்ணாவிற்கும் "பெரியவா" என்றாலே நா தழுதழுக்கும். கண் கலங்கும்.

"தெய்வத்தின் குரல்" படிப்பதற்காகவே தமிழ் கற்று, பெரியவா ஸ்மரணையே வாழ்வாய்க் கொண்டிருக்கும் கீதாம்மா, அனுதினமும் பெரியவா பாடலால் ஒரு பக்தி இயக்கமே நடத்திக் கொண்டிருக்கும் இந்துமதி ஐயர் போன்றவர்களின் பக்தியை என்ன சொல்வது?

இன்னும் கோடானகோடி பேர்கள் பெரியவாளின் அத்யந்த பக்தர்களாய், அணுக்கத் தொண்டர்களாய் இருக்கிறார்கள். பெரியவா சொன்ன வழியிலே நடந்து, வேத ரக்ஷணம் முதல், வாழ்வின் ஒவ்வொடு செயலிலும் பெரியவா காட்டிய பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறார்கள்.

அடியேனுக்கும் இந்த பக்தர்களின் பக்தியிலே, கோடியில் ஒரு பங்காவது வரட்டும்.

அடியேன் செய்வது பக்தியா என்றே இன்னும் தெரியவில்லை...!!

இங்கே நான் செய்வதெல்லாம், பெரியவாளிடம் பேசிக் கொண்டிருப்பதுதான். அவரைக் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பேன். "என்னையும்  பிரயோஜனம் இல்லாம இப்படி வைச்சுரிக்கியே" என்று திட்டிக் கொண்டிருப்பேன்.

வேதம் கற்காமல், சமஸ்க்ருத மொழி கூட அறியாமல், சிகை வைத்துக் கொள்ளாமல், பெரியவா சொன்ன ஆயிரமாயிர உபதேசங்களில் ஒரு உபதேசத்தையும் ஒழுங்காகப் பின்பற்றாமல், "நானும் பெரியவாளின் பக்தன்" என்று சொல்லிக்கொண்டு, வேஷம்தான் போட்டுக் கொண்டிருக்கிறேன்.

இருந்தாலும், "அப்பா, எனக்கும் அருள் பண்ணேன்" என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

"இப்படி என்னை வைச்சிருக்கியே, என்னைக் கொஞ்சம் ஒழுங்காப் பண்ணேன்; பண்ணினா, உனக்கு என்ன குறைஞ்சு போயிடும்?" என்று தினமும் அவருக்கு "அர்ச்சனை" பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

சமயத்தில், பெரியவாளின் படங்களிலே அவரது சிரிப்பைப் பார்க்கும்போது, "என் ரெண்டும் கெட்டான் நிலையைப் பார்த்துதான் சிரிக்கிறார்" என்று நிச்சயமாகத் தோன்றும்.

"என் நிலைமையைப் பார்த்தா, உனக்கு சிரிப்பு வரதோ?" என்று அவரையேதான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

பெரியவா சரணம், சரணம்.
************************************************************


பதமென்னைச் சேராயோ?
***********************************



உயிர்கொண்டு வந்திங்குப் பிறந்துமோர் அறிவின்றி
உயிர்நீயே என்னுமொரு உணர்வின்றி வளர்ந்த சிறு
பயிரிதனைக் கண்டதனால் வந்ததொரு சிரிப்பிதுவோ?
மயல்நீக்க வாராயோ? பதமென்னைச் சேராயோ? (1)

வளர்கின்ற வேளையிலும், உனையிங்கு அறியாமல்
தளர்நடையே போட்டிருந்தேன்; தயையேதும் அறியாயிக்
களர்நிலத்தைக் கண்டதனால் வந்ததொரு சிரிப்பிதுவோ?
இளநிலவைச் சூடியவா! பதமென்னைச் சேராயோ? (2)

விடலையாய் மலர்ந்திருந்தும், உன் நாமம் கேட்டிருந்தும்
இடம்தேடி வாராத, உன் முறுவல் பாராத,
மட நெஞ்சைக் கண்டதனால் வந்ததொரு முறுவலிதோ?
விடமுண்ட கண்டா நின் பதமென்னைச் சேராயோ? (3)

கல்லூரிப் பருவத்தில் கால் போன போக்கெல்லாம்
நில்லாமல் போயிருந்தும் உன்னிடமே வாராத
பொல்லாத மடமையினை கண்டதனால் வரும் சிரிப்போ?
எல்லோர்க்கும் எளியவனே! பதமென்னைச் சேராயோ? (4)

வேலைக்கு சேர்ந்து  குறி பணமென்று ஆகி மனம்
பாலைபோலாகி குளிர் தருவுன்னைச் சேராத
ஆலைக்கரும்பு இதைக் கண்டதனால் வரும் சிரிப்போ?
காலைக் கதிரொளியாய்! பதமென்னைச் சேராயோ? (5)

மணமாகி சம்சார பந்தத்தில் அகப்பட்டுன்
குணமொன்றும் நினையாது பதமிங்கு சேராது
பிணம்போன்று வாழ்வோனைக் கண்டதனால் வரும் சிரிப்போ?
குணக்கடலோய்! பரிந்திங்குன் பதமென்னைச் சேராயோ? (6)

வயதேறி வரும் நாளில் நரையோடு திரைகூடும்
பயமிங்கிருந்தாலும் உனைவந்து சேராத
மயல்கொண்ட மனம்தன்னைக் கண்டதனால் வரும் சிரிப்போ?
தயை கொண்டு பாராயோ? பதமென்னைச் சேராயோ? (7)

பிணி மூப்பு வந்திங்கென் அறிவழியும் உன்பாதம்
பணியாத உடலழியும் அவ்வேளை அருள்கூர்ந்து
தணிவோடு சிறியேனை உன்பங்கயப் பாத
அணியாகக் கொள்வாயோ? பதமென்னைச் சேர்ப்பாயோ? (8)

யமபடர்கள் வந்தென்னை வாவென்று சொலும்வேளை
‘நம’வென்று ஓர்பூவை உன்பாதம் சேராத
குமதிக்கும் தயைகூர்ந்து தாயாக மடிதந்துத்
தமதாகக் கொள்வாயோ? பதமென்னைச் சேர்ப்பாயோ? (9)

மரணத்தின் வாசலிலே உயிர்செல்லும் அவ்வேளை
அரனே நீ வந்திந்த உயிருந்தன் மடிகொண்டு
சிரம்கோதி கரம்வைத்து “அஞ்சல்” என்றருளாயோ?
தரமொன்றும் இல்லானை, உன்பாதம் சேராயோ? (10)


Thursday, August 25, 2016

25.08.2016 : கண்ணன் மீண்டும் வந்தனன்!

25.08.2016 : கண்ணன் மீண்டும் வந்தனன்
********************************************************************


இன்று, கிருஷ்ண ஜயந்தி. எல்லார் இல்லங்களிலும் குழந்தைக் கண்ணன் தன் குஞ்சுக் கால்கள் வைத்து வரும் நாள்.

எங்கள் இல்லத்திலும் இன்று கண்ணன் வந்தான். வெண்ணெய் உண்டு மகிழ்ந்தான்.

கண்ணன் வரும் இந்த நாளில், கீதை சொல்லி ஜகத்குருவாய் நின்ற அந்த மாயன், தனது ஸ்வரூபம் ஒளித்து, அப்படியே opposite ஆக வந்து, தான் சொன்ன கீதை வழியே தானே வாழ்ந்து காட்டியதைப் பாட வேண்டும்போல் தோன்றியது.

வெண்ணெய் திருடி உண்டவன், உணவும் உட்கொள்ளாது பட்டினி கிடந்து, விரதம் இருந்து இந்த உலகு இன்புறச் செய்ததைச் சொல்லவேண்டும் என்று தோன்றியது.

பார்த்தனுக்குத் தேரோட்டியவன் கால் கடுக்க நடந்ததையும் சொல்ல வேண்டாமா?

கோபிகைகள் சூழ நின்றவன், பதினாறாயிரம் மனைவியர் கொண்டவன், துறவு பூண்டு வந்ததைச் சொல்ல வேண்டாமா?

"பொய்யன்" என்றே பெயர் பெற்றோன், மெய்யொன்றே புகலும் ஞானியாய் வந்ததைச் சொல்லவேண்டாமா?

தீயவர்களைக் குழந்தையாயிருக்கும்போதே மாய்த்தவன், இந்த ஓர் ஜகத்குரு அவதாரத்தில், தீயவர்கள் மனதையும் தனது அன்பு வெள்ளத்தால் மாற்றி அந்தத் தீமையை மட்டும் அழித்ததைப் பேச வேண்டாமா?

இதையெல்லாம் சொல்லும் விதத்தில் ஒரு சிறிய பாடல்.

அந்தக் கிருஷ்ண ஜகத்குருவுக்கும், அந்த கோவிந்தனின் நாமத்தைப் போற்றிய சங்கர குருவெனவே வந்த எங்கள் சங்கரனாம் பெரியவாளின் பாதாரவிந்தங்களுக்கும், இப்பாடல், சமர்ப்பணம்.

*************

கீதை சொன்னக் கண்ணன் தானும் வாழ்ந்து காட்ட வந்தனன்
பாதை காட்ட காவி பூண்டு தானும் பூமி வந்தனன்
வெண்ணெய் திருடி உண்ட கண்ணன் உணவொழித்து நின்றனன்
வண்ணத் தேரை ஓட்டி வந்தோன், கால் கடுக்க வந்தனன்
பெண்கள் சூழ நின்ற கண்ணன் துறவு பூண்டு வந்தனன்
எண்ணிலாத பொய்யன் மெய்யை மட்டும் சொல்லி நின்றனன்!
தீயர் மாயச் செய்த மாயன் கருணை ரூபம் கொண்டனன்
தீயர் மனமும் மாறும் அன்பு காட்டித் தீமை கொன்றனன்

***********************

பெரியவா சரணம், சரணம்

Wednesday, August 24, 2016

24.08.2016 : கிருத்திகை நாள்: வேதம் வாழ்ந்திட வந்தாய் நமோ நமோ

24.08.2016 : கிருத்திகை நாள்

இன்று, கிருத்திகை.

ஒவ்வொரு கிருத்திகையிலும், அந்த அறுமுகன் மேலே ஒரு ஆறு பதங்கள், பாமாலையாய்த் தொடுத்து சாற்றுவது வழக்கம்.

அந்தப் பாமாலைகள் 108 நிறைவடைந்து விட்டன.

என்றாலும், கிருத்திகை தோறும், அந்த முருகனுக்குப் பிடித்த திருப்புகழில் ஒரு திருப்புகழின் மெட்டிலே, அந்தக் குமரனின் ஞானமே வடிவாய் வந்த என் உம்மாச்சித் தாத்தாவின் மேலே ஒரு பாடல் பாடுவது,  சென்ற கிருத்திகையிலிருந்து தொடங்கி இருக்கிறது.

இன்றைய கிருத்திகைத் திருநாள் பாடல், பெரியவா பொற்பாத கமலங்களுக்கு, சமர்ப்பணம்.

இன்றைய பாடல் : "நாத விந்து கலாதீ நமோ நமோ" மெட்டில்.

வேதம் வாழ்ந்திட வந்தாய் நமோ நமோ


வேதம் வாழ்ந்திட வந்தாய் நமோ நமோ
வேத ரூபனாய் நின்றாய் நமோ நமோ
வேதியர் தொழும் பாதா நமோ நமோ  - காஞ்சிவாழ்

காமகோடிப் ரஸாதா நமோ நமோ
நாமகோடிப் ரகாஸா நமோ நமோ
சேமகோடி பொற்பாதா நமோ நமோ - குருநாதா!

ஆதி சங்கரி பாலா நமோ நமோ
ஜோதி மங்கல ரூபா நமோ நமோ
பூதி கமலசெம் பாதா நமோ நமோ – வருவாயே!

யோகமந்த்ரஸ்வ ரூபா நமோ நமோ
ஆகமம் உரை தேவா நமோ நமோ

சோகம் தீர்க்கும்நற் பாதா நமோ – அருள்தாராய்!

பாடலின் இறுதிப் பதங்கள் "காஞ்சிவாழ் குருநாதா! வருவாயே! அருள்தாராய்" என்று அமைந்திருப்பதும் பெரியவா கருணையே. 

Thursday, August 11, 2016

12.08.2016 : அனுஷ தினம் : பெரியவா பாத தசகம்:

12.08.2016 : அனுஷ தினம்

இன்றைய அனுஷ தினத்திலே, பெரியவாளை, அகில லோக ரக்ஷகனை, தீன சரண்யனை, ஜகத் குருவை, அவரது கருணையை, அருளை, சிந்திக்கும்போது, திருமூலரின் இந்தப் பாடல்தான் நினவுக்கு வருகிறது :

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே   (திருமந்திரம் 139)

அப்படி சிந்திக்கும்போது, பெரியவாளின் பாதாரவிந்தமும், அந்தப் பாதமலர்களின் வழியே பெருகி ஓடும் அருட்தேனும் கண்முன் வருகிறது. 

திருமூலரின் மற்றொரு பாடலும் நினைவுக்கு வருகிறது : 

திருவடியே சிவமாவது தேறில்
திருவடியே சிவலோகம் சிந்திக்கில்
திருவடியே செல்கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள் தெளிவார்க்கே  (திருமந்திரம் 138)


அனுஷத்தன்று, அகத்தில் இல்லாமல் அலுவலக வேலையாய் டெல்லியில் இன்றைய தினம் இருக்கும்போது, என்ன செய்வது? அனுஷ பூஜை எப்படிச் செய்வது?

அந்தத் திருவடி மலர்களை சிந்திப்பதே இன்றைய அனுஷ பூஜை என்றும் தோன்றியது.

அந்தப் பதமலர்களுக்கு, திருவடிகளுக்கு, இந்தப் பாடல் அர்ப்பணம். 

பெரியவா பாத தசகம்: 

எங்குலம் வாழ வந்த, பங்கயப் பாதம் போற்றி!
மங்கலம் சேர்க்கும் பைம்பூண் பதமலர்க் கமலம் போற்றி
பொங்குமாக் கடலாய்க் கருணை பொழிமலர்ப் பதமே போற்றி
சங்கர மூர்த்தி பாதம் பணிந்தனம் போற்றி போற்றி! (1)

மும்மலம் நீக்க வந்த முகிழ்மலர்ப் பதமே போற்றி
இம்மையும் மறுமை நோயும் தீர்த்திடும் மருந்தே போற்றி
அம்மையாய் அப்பனாய் வந்தருள்தரும் சரணம் போற்றி!
எம்மையே காக்கவந்த சேவடி போற்றி! போற்றி (2)

நாடெலாம் நடந்து எங்கள் குறை களை கழலே போற்றி
காடெலாம் திரிந்து எம்மைக் காத்திடும் நிழலே போற்றி
வீடுபேறதற்கும் மேலாம் பதம் தரும் பதமே போற்றி
தேடிவந்தபயம் நல்கும் தீம்பதம் போற்றி போற்றி! (3)

அன்று இவ்வுலகம் மூன்றும் அளந்த இவ்வடிகள் போற்றி
கன்றையும் சகடம் தானும் உதைத்த அக்கழல்கள் போற்றி
ஒன்றதாம் பொருளைச் சொல்ல உலவிய பதங்கள் போற்றி
நின்றெமதிதயம் வாழும் சீரடி போற்றி போற்றி! (4)

கல்லையும் பெண்ணாய்ப் பாவம் தீர்த்த சேவடிகள் போற்றி
தில்லையில் நித்தம் நடனம் ஆடும் நல்லடிகள் போற்றி
ஒல்லை வந்தடியார் துன்பம் நீக்கும் சீரடிகள் போற்றி
நல்லவர் நெஞ்சில் வாழும் பொற்பதம் போற்றி போற்றி (5)

பாண்டவர்க்காகத் தூது நடந்த சேவடிகள்  போற்றி
தாண்டவம் ஆடிக் காளி செறுக்கழி பதமே போற்றி
ஆண்டவன் அவனாய் வந்து ஆண்டருள் பதமே போற்றி
வேண்டினோர்க்கருளும் நாதன் குரைகழல் போற்றி போற்றி! (6)

பஞ்சினும் மென்மையாமச் செம்மலர்ப் பதங்கள் போற்றி
அஞ்சிடும் அடியார்க்கெல்லாம் அடைக்கலம் ஆனாய் போற்றி
தஞ்சமென்றலருவோர்க்கு அபயமாம் அடிகள் போற்றி
நஞ்சுடைக் கண்டன் ரூபன் பொற்பதம் போற்றி போற்றி (7)

அரியாசனத்திருந்து அகிலமே ஆண்டாய் போற்றி!
அரி அயன் தேடிக் காணா திருவடி மலர்கள் போற்றி
பரிந்தெனக்கபயம் நல்கும் பங்கய மலர்கள் போற்றி
திரிபுரம் செற்ற தேவே நின்னடி போற்றி போற்றி! (8)

வேதமே வாழவென்று திரிந்த அவ்வடிகள் போற்றி
ஆதவன் இயக்கம் போன்று ஓய்விலாப் பதங்கள் போற்றி
மாதவம் செய்வோருக்கும் கிட்டறும் பதமே போற்றி
நாதனே தானாயான நற்பதம் போற்றி போற்றி! (9)

குலம், கல்வி செல்வம் யாவும் அருளும் சீரடிகள் போற்றி
புலருமோர்க் காலைப் போதில் தொழுதனன் அடிகள் போற்றி
அலர்கதிர் ஞாயிறென்ன ஒளிரும் சேவடிகள் போற்றி
மலருமே தோற்கும் நாதன் மெல்லடி போற்றி! போற்றி! (10)