Tuesday, July 18, 2017

19.07.2017 : கிருத்திகை.

19.07.2017 : கிருத்திகை.

ஒவ்வொரு கிருத்திகை தினத்திலும், அந்த குருபரனேயான பெரியவாளின் மேலே, திருப்புகழின் ஒரு சந்தத்திலே ஒரு பாமாலை புனைந்து சமர்ப்பிப்பது, இன்றைய கிருத்திகை தினத்திலும், அவர் அருளாலே தொடர்கிறது.

"ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத
     
நாடண்டி நமசி வாய ...... வரையேறி"

என்னும் பாடலின் சந்தமாம்,

“தானந்த தனன தான தானந்த தனன தான
     
தானந்த தனன தான ...... தனதான” என்ற சந்தத்தில் இந்தப் பாடல்

ஓரந்த மெதுவி லாத ஆனந்த மயம தான
   கோனுந்த னடிக ளேக….அருள்தாராய் (1)

தாயுந்த னறிவி லாத சேயிந்த கடைய னான
   ஈனன்இ வனையு மாள…வருவாயே (2)

ஆறங்க முடையதான வேதங்கள் தினமு மோது
   பாதங்கள் பணியு சேவை – தருவாயே (3)

பாரெங்கும் புகழு ஞான போதத்தை எளிமை யாக
   யாரும்பு ரியும தான - சுவையான (4)

தேனுந்த னுரைக ளோதி நானுந்த னடிகள் சேர
   நாதன்உ னடியில் வாழ – அருள்வாயே (5)

Wednesday, July 5, 2017

06.07.2017 : அனுஷ நன்னாள்: “என் முயற்சி” யென்று ஒன்றால் ஆவது என்ன இங்கு ?

06.07.2017 : அனுஷ நன்னாள்:

இன்றைய அனுஷ தினத்திலே, மனதிலே ஒரு கேள்வி. அந்த ஈசனாம் பெரியவாளின் அருளை அடைய, ஒரே வழி, அவரின் பதகமலங்களைப் பற்றுதலே என்று அடியார்களும் அன்பர்களும் சொல்கிறார்கள். ஆனால், அந்தத் திருப்பாதங்களை எவ்வாறு அடைய முடியும்? அவர் அருள் இருந்தால்தானே அடைய முடியும்? “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்றல்லவோ பெரியவர்களெல்லாம் நமக்குச் சொல்லுகிறார்கள்?
“அருள் கிடைக்கப் பதம் வேண்டும் – பதம் கிடைக்க அருள் வேண்டும்” – என்றால், இதில், நம் முயற்சியால் ஆவதென்ன? புரியவில்லை.
பெரியவாளையே கேட்டு, அவரையே சரணடைவது ஒன்றுதான் வழியோ?
பெரியவா சரணம்.




உன்மலர்ப் பாதம் பற்றி உன்னையே சேர வேண்டும்
என்று நான் ஆசைப்பட்டு, “வழிசொல்லும்” என்று உந்தன்
இன்னடியாரைக் கேட்க, வழிசொன்னார், “நானிலத்தில்
உன்னருள் கிடைத்திட்டாலே உன்பதம் கிடைக்கும்” என்றார்! (1)

“இன்னருள் கிடைக்க நானும் என்னதான் செய்ய வேண்டும்?”
என்றுடன் அவரைக் கேட்க, இதழ்க்கடைச் சிரிப்பொன்றோடு,
மென்மையாய் அவரும் சொன்னார், “பெரியவா நாமம் சொல்லி,
பொன்மலர்த் தாளைப் பற்றி நிற்றலே வழியிங்கென்றார்” (2)

தலைசுற்றி நின்றேன் நானும்! உன்னருள் கிடைக்க நானும்
மலைமகள் வடிவே உந்தன் பதமலர் பற்ற வேண்டும்!
அலைகடல் துயிலும் அரசே, பதமலர் பற்றுதர்க்கோ,
விலைமதிப்பில்லா உந்தன் அருளன்றோ இங்கு வேண்டும்? (3)


“என் முயற்சி” யென்று ஒன்றால் ஆவது என்ன
இங்கு ?
உன் மனம் கனிந்து நீயே இரங்கி வந்தென்னை நோக்கி
“அன்பனே! குழந்தாய்! வா, என் அடிபற்று” என்று சொல்லி
இன்னருள் தந்து என்னை அடிமையாய்க் கொள்ளுவாயோ? (4)

உன்னருளாலே உந்தன் தாளினை வணங்கும் பேற்றை
மின்னொளிர் கமல பாதம் அடைந்திடும் அரிய பேற்றை
சின்னவன் கடையனேன் எனக்குமே நல்குவாயோ?
என்னுடை ஈசா! இங்கு, வந்தெனக்கருளுவாயோ? (5)

Wednesday, June 21, 2017

21.06.2017 : கிருத்திகை.

21.06.2017 : கிருத்திகை.

ஒவ்வொரு கிருத்திகை தினத்திலும், அந்த குருபரனேயான பெரியவாளின் 

மேலே, திருப்புகழின் ஒரு சந்தத்திலே ஒரு பாமாலை புனைந்து 

சமர்ப்பிப்பது, இன்றைய கிருத்திகை தினத்திலும், அவர் அருளாலே தொடர்கிறது.

“வசனமிக வேற்றி ...... மறவாதே
     மனதுதுய ராற்றி ...... லுழலாதே” என்ற பாடல்.

“தனதனன தாத்த ...... தனதான
     
தனதனன தாத்த ...... தனதான” என்ற சந்தம்.

பெரியவா சரணம்.





வயதுமிக போக்கி ..….உடலாலே
  துயரமிகு தேக்கி……..மனதாலே

உனதுபத மேத்தி……நினையாதே
   எனதுசிறு வாழ்வி…..லுழல்வேனே

குருபரனு மேத்து….மிறையோனே
    உலகமுழு தீந்த …..அரியோனே

அடியவனைக் காக்க வருவாயே

   சரணமெனக் கீந்து…..அருள்வாயே

Wednesday, June 7, 2017

08.06.2017: பெரியவா ஜயந்தி

08.06.2017: பெரியவா ஜயந்தி
**********************************************
இன்று, பெரியவா ஜயந்தி. அனுஷத் திருநக்ஷத்ரம். இந்த நாளிலே, பெரியவா அன்று முதல் இன்று வரை செய்த பலப்பல அவதாரங்களை நினைவு கூர்ந்து, பெரியவா என்று வந்த இந்தத் திரு அவதாரத்திலே அவர் நமக்குக் காட்டிய கருணையை நினைவு கூர்ந்து, அவர் பதமலருக்கு, இந்தப் பாடலை அர்ப்பணிக்கிறேன்.
**************************************************************


முன்னாளோர் மலையை முதுகில் தாங்கியே தேவருக்காய்
என்னாளும் வாழவைக்கும் அமுதத்தை தேடித்தந்தாய்! (1)
அமுதுண்ணும் நேரம் வந்த விஷத்தையும் நீயே உண்டு
இமையோரைக் காத்து நின்றாய்! திருநீல கண்டனானாய்! (2)
பக்தனைக் காக்கவென்று தூணிலே காத்திருந்தாய்!
யுக்தமாய் நேரம் பார்த்து அரக்கனை அழிக்க வந்தாய்! (3)
வாமன உருவம் பூண்டு அரக்கனை அடக்கி நின்றாய்!
சேமமே நல்கும் விஸ்வரூபமும் காட்டி நின்றாய்! (4)
அரசையே துறந்து காட்டில் அலைந்துமே திரிந்து சீதை
அவளையும் இழந்து துன்பம் அடைந்துழந்திளைத்துப் பின்னர் (5)
குரங்கினத்தரசன் உதவி கொண்டவன் மூலம் லங்கை
அரக்கனைக் கொன்றாய் நங்கை அவளையும் மீட்டுச் சென்றாய்! (6)
ஒன்றன்பின் ஒருவராக அரக்கரை மாய்த்து ஆயர்
நன்றங்கு வாழவென்று அத்தனை பாடு பட்டாய்! (7)
கிரிதனைத் தூக்கி நின்றாய்! கோகுலம் காத்து நின்றாய்
விரியுலகெல்லாம் போற்றக் கம்சனை அழித்து நின்றாய் (8)
பாண்டவர்க்காகத் தூது நடந்துடல் நொந்து நின்றாய்
வேண்டியே பார்த்தன் கேட்க, கீதையே சொல்லி நின்றாய் (9)
திரிபுரம் அமர்ந்து ஓடி, திசையெலாம் அழித்தோர் தம்மை
சிரிப்பினால் அழித்து அன்பர் சிறக்கவே செய்து நின்றாய்! (10)
பாதமே பிடித்த பாலன் வாழவே காலன் தன்னை
நாதனே உதைத்துக் கால காலனாய் அன்று நின்றாய்! (11)
பிட்டுக்கு மண் சுமந்தாய்! பிரம்படி அதுவும் பட்டாய்!
இட்டமாய் தருமி வாழக் கவிதையும் தந்து நின்றாய்! (12)
பித்தனென்றன்பர் ஏச, இன்பமாய் ஏற்று நின்றாய்!
அத்தனே அம்மையாகப் ப்ரசவமும் பார்த்து நின்றாய்! (13)
மூகனுக்காக வந்து கவிமழை பெய்ய வைத்தாய்!
ஏகம்பன் பாகமானாய்! காஞ்சித் தாயெனவே நின்றாய்! (14)
எத்தனை விதமாயெல்லாம் இப்புவி வந்துதித்தாய்!
பக்தரைக் காக்கவென்று, எத்தனைப் பாடுபட்டாய்!! (15)
இத்தனை அவதாரங்கள் எடுத்து நீ பட்ட கஷ்டம்
மொத்தமாய் ஒன்றுமில்லை என்றிங்கு சொல்லுமாறு (16)
முற்றுமே துறந்து நிற்கும் முனிவனாய்க் கோலம் பூண்டு
நற்றவக் காஞ்சியென்னும் நகர்செய்மா புண்ணியத்தால் (17)
சங்கரன் மகிழ மண்ணில், “பெரியவா” என்னும் திவ்ய
மங்கல நாமம் கொண்டு இவ்வுலகெல்லாம் வாழ (18)
நல்லவர் மற்றும் இன்றி, அல்லோரும் வாழ, நன்கு
பல்கலை வாழ, என்றும் நான்மறை வாழ நீயும் (19)
எத்தனை பாடுபட்டாய்! எத்தனை நடை நடந்தாய்!
சித்தனே நூறு ஆண்டு வித்தகம் செய்து நின்றாய்! (20)
தெய்வத்தின் குரலைத் தந்தாய்! நான்மறை சாரம் தந்தாய்
செய்வது அறியா நின்றக் கடையரும் வாழச் செய்தாய்! (21)
ஒவ்வொரு அடியாருக்கும் “உம்மாச்சித் தாத்தா”வானாய்!
ஒவ்வொரு அடியாரகமும் உன்னகம் ஆக்கி நின்றாய்! (22)
இன்று உன் பிறந்த நாளில் உன்னையே நினைத்திருக்கும்
அன்பரைக் காக்க நீயும் அருள்மழை பொழிய வேண்டும்! (23)
உன்பெயர் சொல்லும் யாரும் உயரவே அருளல் வேண்டும்!
உன்னையே நினக்கும் நெஞ்சம் சிறக்கவே அருளல் வேண்டும்! (24)
அடியவர் தம்மைக் காக்கும் விரதமே பூண்ட தேவே!
கொடியவர் தமையும் காத்துன் அடியாராய்க் கொள்ளல் வேண்டும்! (25)
அன்பர்கள் நெஞ்சில் நின்று அல்லகள் போக்கும் தேவே!
துன்பமே உழலும் எனையும் கொஞ்சம் நீ பார்க்க வேண்டும்! (26)
உன்பக்தன் போல இங்கு வேஷமே போட்டு வாழும்
என்மேலும் கொஞ்சம் கருணை நீயுமே காட்ட வேண்டும்! (27)

Thursday, May 25, 2017

25.05.2017 : கிருத்திகை நன்னாள்


25.05.2017 : கிருத்திகை நன்னாள்

இன்று, கிருத்திகை நன்னாள். இன்றைய தினத்தில், அந்த அருணகிரியார் தந்த திருப்புகழ் சந்தத்ததிலே, அந்த ஸ்வாமிநாதனேயான நம் பெரியவாளைப் பாடும் பாக்யம் தந்ததும், பெரியவாளின் அருளாலே அல்லவா!


பெரியவாளின் தாள் பணிந்து, அவரது பாத கமலங்களுக்கு, இப்பாடலை அர்ர்பணம் செய்கிறேன். 


அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி என்ற பாடலின், 

தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான  என்ற சந்தம். 




உளமதி லேகி உதிரமு மாகி உயிரது ஆளும்…இறையோனே
இளமதி சூடி கனலது மேந்தி சபையினி லாடு மிளையோனே
கெழுதகை ஞான அறிஞரும் தேடு மறைமுடி வானப் பெரியோனே
இருபத மேவி அடியனும் வாழ எனதகம் தேடி.. வரவேணும்
அதியழ கான முகமது காண அடியனுக் காசி தரவேணும்
பலமதப் பேரும் அடிபணின் தேகும் திருவடி சேவை தருவாயே
உனைமற வாத மனமது மீந்து மகிழ்வுடன் வாழ அருள்வாயே

வளமது கூடி மனநிறை வாக அடியனும் வாழ அருள்வாயே

Friday, May 12, 2017

13.05.207 : எந்தையே ஆதரிப்பாய்!

13.05.207 : எந்தையே ஆதரிப்பாய்!
*********************************************************

நேற்று அனுஷம். பக்த கோடிகள் அனைவரும் அனுஷதினத்தில் ஒன்றுகூடி, உம்மாச்சித் தாத்தாவை ஆராதித்து ஆனந்தம் அடையும் தினம்.

சென்ற அனுஷத்தன்று மும்பை வந்தோம். இதோ அடுத்த அனுஷம். வேலைக்காக, வயிற்றுக்காக, சென்னை விட்டு, பெங்களூர் விட்டு, இதோ மும்பை வந்தாகிவிட்டது. நினைத்துக்கொண்டால், சட்டென்று காஞ்சீபுரம் போய் தாத்தாவைப் பார்ப்பது இங்கிருக்கும் வரை முடியாது. பக்கத்தில் ஏதும் அடியார்கள் கூடி அனுஷ பூஜைகள் நடப்பதாகவும் தெரியவில்லை. மனதிலேயே நினத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் மனது ஒருநிலைப்பட்டு அவரையே நினைத்துவிடுகிறதா என்ன?

உன்னையே நினைக்கும் அந்த நினைவையும், அப்படிப்பட்ட மனதையும் அருள்வாயப்பா, ஆதரிப்பாயப்பா என்று அவரையே வேண்டிக்கொண்டு, இப்பாடலை, பெரியவாளின் திருவடி மலர்களுக்கு, அர்ப்பணிக்கிறேன்.



அறிவொன்றுமில்லேன் நெஞ்சில் அன்பிலேன் நீயன்றிங்குப்
பிறிதொன்றும் இல்லையென்னும் சிந்தையும் இல்லேன் நன்மை
சிறிதொன்றும் இல்லேன் கீழ்மை வடிவெடுத்தேகினேனை
நிறையன்றி வேறேதில்லா எந்தையே ஆதரிப்பாய்! (1)

அன்பர்தம் கூட்டம் தந்தும், அன்புடன் நாமம் தந்தும்
இன்பமாய் வாழ உந்தன் சரணத்தில் இடமே தந்தும்
முன்வினை துரத்த ஓடி முடிவிலாத் துன்பமுற்றேன்
என்னையே நீயும் கொஞ்சம் அருள்கூர்ந்து ஆதரிப்பாய்! (2)

பண்ணொடு பாடல் தந்தாய்; பாடிடத் தமிழும் தந்தாய்
தண்மலர்ப் பாதம் தந்தாய்; தாங்கிடத் தலையும் தந்தாய்
விண்ணவர் போற்றும் உன்னை நினையாமல் அழியும் பொன்னும்
மண்ணுமே தேடும் என்னைப் பரிந்துடன் ஆதரிப்பாய்! (3)

தமிழ்நாட்டில் பிறப்பு தந்தாய்! தமிழறிவும் நீயே தந்தாய்!
அமிழ்தினும் இனிய உன்னை நினைக்கவே மனமும் தந்தாய்!
உமைபங்கா உன்னைப் பாடும் பணி விட்டு ஓடி வாழ்வே
சுமையான பாவியென்னைப் பரிந்துடன் ஆதரிப்பாய்! (4)

உனையன்றி வேறு எந்த உணர்வையும் நீக்கி என்னுள்
நினைவெலாம் நீயே ஆகி, காண்பதும் பேச்சும் மூச்சும்
அனைத்துமே நீயே ஆகி, வாழ்வதன் பொருளும் ஆகி
எனைக்காத்து அருள்வாயப்பா! ஆதரித்தருள்வாயப்பா! (5)

Thursday, April 27, 2017

28.04.2017 : கிருத்திகை நன்னாள் : திருஞான சுந்தரக் ….கிழவோனே!

28.04.2017 : கிருத்திகை நன்னாள் : திருஞான சுந்தரக் ….கிழவோனே!
***************************************************************************************************************

ஒவ்வொரு கிருத்திகையிலும், அந்தக் குமரனுக்குப் பிடித்த அழகிய திருப்புகழின் ஒரு சந்தத்திலே, ஸ்வாமிநாதனாய் அவதாரம் செய்த நம் பெரியவாளைப் பாடும் சந்தோஷம், அவர் அருளாலே இன்றும் தொடர்கிறது. 

அபகார நிந்தைபட் ...... டுழலாதே ....     அறியாத வஞ்சரைக் ...... குறியாதே என்ற பாடலின் 

தனதான தந்தனத் ...... தனதான
     தனதான தந்தனத் ...... தனதான     என்ற சந்தம்.  

பெரியவா சரணம். 



ஒருநாளு முன்பதம்….நினையாதே
     தவயோக மென்பதும் ….அறியாதே
உருகாத ழிந்திடும் …..மனதாலே
     உனைநான டைந்திடப் …..பெறுவேனோ?
அரனோடு சக்தியின்…….வடிவோனே!
     தவராஜ சங்கரப் …பெயரோனே!
அடியார வர்மனம்…உறைவோனே!
     திருஞான சுந்தரக் ….கிழவோனே!