Monday, August 28, 2017

29.08.2017 : அனுஷ நன்னாள் : என் நெஞ்சை அஞ்சுவேனே

29.08.2017 : அனுஷ நன்னாள்

இன்று, அனுஷ நன்னாள்.

நேற்று, திருவாசகத்தில் “அச்சப்பத்து” பதிகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன்.

மாணிக்கவாசகப் பெருமான் இறைவனிடம் ஊறியவர். இறைவனாலேயே ஆட்கொள்ளப்பட்டவர். இறையிலே தோய்ந்து, நமக்குத் திருவாசகத் தேனை அளித்தவர். அப்படிப்பட்டவர், தான் எதனைப் பற்றி அச்சப்படுகிறார் என்று ஒரு பட்டியல் போடுகிறார்.

அச்சப்பட எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றை எல்லாம் விடவும், சிவபெருமானைத் தெய்வம் என்று நினையாதவரிடம், திருநீறு அணியாதவரிடம் பெரும் அச்சம் கொள்ளுகிறார் மாணிக்கவாசகப் பெருமான்!

உதாரணத்திற்கு, இந்தப் பாடல் :

அச்சப் பத்து

புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்;
கற்றை வார் சடை எம் அண்ணல், கண் நுதல், பாதம் நண்ணி,
மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து, எம் பெம்மாற்கு
அற்றிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

“பாம்பைப் பற்றி நான் அஞ்சவில்லை. பொய்யர்களைப் பற்றியும் நான் அஞ்சவில்லை. ஆனால், சடையுடை அண்ணல், எம்பெருமானாம் ஈசனைத் தவிரவும் ஓர் தெய்வம் உண்டு என்று நினைத்திருப்பவர்களைக் கண்டால், நான் அஞ்சுகிறேன்” என்று சொல்லுகிறார்.

(மிக ஆச்சர்யமான அந்தப் பத்துப் பாடல்களையும் படிக்க ஆவல் இருப்பின், இங்கே காணலாம் :  http://www.tamilvu.org/slet/l4180/l4180son.jsp?subid=2353)

என்னைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். 

எனக்கு, என்ன பயம்? எவைகளிடத்தில் மிகவும் பயம்? நினைத்துப் பார்த்ததில், நான் மிகவும் பயப்படுவது என் நெஞ்சை நினைத்தேதான் என்று தோன்றியது. 

ஏதோ ஒரு நாள், எப்போதோ ஒரு முறை அந்தப் பெரியவாளை நினைக்கும் இந்த நெஞ்சு, அப்படி ஏதோ ஒரு முறை நினைப்பதையும் மறந்து விட்டால்? என்றோ ஒரு முறையாவது அவர் திருநாமம் நினைக்கும் இந்த நெஞ்சு, திருநாமம் நினைப்பதையே சுத்தமாய் நிறுத்திவிட்டால்? இதைவிடவும் பெரும் பயம் வேறென்ன இருக்க முடியும்?


என் நெஞ்சை அஞ்சுவேனே

கூற்றுவன் வரினும் அஞ்சேன்; கொடுந்துயர் தரினும் அஞ்சேன்
ஆற்றுநீர்ச் சடையன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (1)

உறு பிணி அதுவும் அஞ்சேன்; மூப்பினோடயர்வும் அஞ்சேன்
அறுமுகன் அத்தன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (2)

வறுமையின் கோரம் அஞ்சேன்; தளர்ச்சியின் தாக்கம் அஞ்சேன்
கருமிடற்றத்தன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (3)

மதியிலா மடமை அஞ்சேன்; விதியினோர் கொடுமை அஞ்சேன்
மதியணி தேவன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (4)

நஞ்சினை ஊட்டில் அஞ்சேன் ; அஞ்சுவதேதும் அஞ்சேன்
அஞ்செழுத்தறியா எந்தன் நெஞ்சையே அஞ்சுவேனே (5)

சிலைசிந்து வாளி அஞ்சேன்; நிலையிலா யாக்கை அஞ்சேன்
மலைமகள் கொழுனன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (6)

வஞ்சகர் நெஞ்சம் அஞ்சேன்; தீயவர் செயலும் அஞ்சேன்
தஞ்சமே தருமப் பாதம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (7)

கயவர்தம் தீமை அஞ்சேன்; சயமிலா வாழ்க்கை அஞ்சேன்
மயர்வறு நாமம் நினையா என் நெஞ்சு அஞ்சுவேனே (8)

மாதர்தம் முறுவல் அஞ்சேன்; வேலெறி விழிகள் அஞ்சேன்
நாதனைச் சிந்தை செய்யா என் நெஞ்சு அஞ்சுவேனே (9)

துன்பமும் துயரும் அஞ்சேன்; இல்லையென்றிரத்தல் அஞ்சேன்
இன்பமாம் எந்தை நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (10)

இகழ்வதே வரினும் அஞ்சேன்; சதியொடு சாபம் அஞ்சேன்
சுகமதாம் எந்தை நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (11)

பஞ்சமும் பசியும் அஞ்சேன்; நஞ்சுமிழ் அரவும் அஞ்சேன்
நஞ்சுண்ட கண்டத்தானை மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (12)

பிறப்புடன் இறப்புமஞ்சேன்; சிறப்பில்லா இருப்பும் அஞ்சேன்
துறவிகள் வேந்தன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (13)

மதம் கொண்ட பிளிற்றையஞ்சேன்; பசி கொண்ட புலியும் அஞ்சேன்
சதமவன் நாமம் நினையா என் நெஞ்சு அஞ்சுவேனே (14)

அவப்பெயர் வரினும் அஞ்சேன்; சவமாகிப் போதல் அஞ்சேன்
தவத்திருப் பெரியோன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (15)

பெரு நெருப்பதையும் அஞ்சேன்; கடல் விழுங்கிடினும் அஞ்சேன்
தருமத்தின் தலைவன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (16)

மலை புரண்டிடினும் அஞ்சேன்; நிலம் பெயர்ந்திடினும் அஞ்சேன்
கலைமதி அணிந்தோன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (17)

வான் இங்கு வீழின் அஞ்சேன்; கோனவன் சீற்றம் அஞ்சேன்
வானவர் தலைவன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (18)

நரகினோர் துயரும் அஞ்சேன்; சிறையினில் தனிமை அஞ்சேன்
நரவேட சிவனின் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (19)

நவகோள்கள் அவையும் அஞ்சேன்; காலமும் கணக்கும் அஞ்சேன்
தவராஜன் நாமம் நினையா என் நெஞ்சு அஞ்சுவேனே (20)

அந்த பயத்தை, அப்படி பயப்பட வைத்த இந்த என் நெஞ்சகத்தை, பெரியவாளுக்கு, இந்த அனுஷத்தில் சமர்ப்பணம் செய்கிறேன்.




பெரியவா சரணம். 

Monday, August 14, 2017

கிருத்திகை : 15.08.2017 : மதியொடு மடந்தை சூடி

இன்று கிருத்திகை. கிருத்திகை தோறும், அந்த குருபரனேயான பெரியவாள் 

மேலே அந்தக் குருபரன் மேல் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழின் ஒரு

சந்தத்திலே ஒரு பாடல் புனைவது, இன்றும், அவர் அருளாலே 

நிகழ்ந்திருக்கிறது.


இன்றைய பாடல்,

“இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி

     னிருவினை யிடைந்து போக ...... மலமூட


என்னும் திருப்புகழின் சந்தத்திலே அமைந்திருக்கிறது. 


“தனதன தனந்த தான தனதன தனந்த தான
     தனதன தனந்த தான ...... தனதான”             என்னும் சந்தம்.




பெரியவா சரணம். 


......... இன்றைய பாடல் .........



மதியொடு மடந்தை சூடி, விதியரி அயன்று போக

   தழலுரு விரித்த  தேவர்…..பெருமானே

கடலதைக் கடைந்த போது, பெருகிய விடத்தை வாரி

   அமுதென விழுங்கி  க்ஷேமம் அருள்வோனே

கதியென சிறந்த தூய பதமதை அடைந்த பாலன்

     நலமுடன் உவந்து வாழ……..அருள்தேவே

மலையினை எடுத்து கோப ரனைவரும்  வியக்க வான

     மழையினைத் தடுத்த வேதப் …..பொருளோனே

கொடுவினை தொடர்ந்து ஏக, மதியது மயங்கி மோக

   மயலிடை உழன்று வாட….…அதிமூட

இருளது கிடந்து பாடு படுமொரு சிதைந்த ஆவி

   அடுதுய ரடர்ந்து வீழ….விடலாமோ?

முகமல ரமிழ்தை வாரிப், பருகிட உயர்ந்த சீல

     அருகதை அளித்து சேவை ……தருவாயே

பதமல ரடைந்து ஞான ஒளியது விரிக்கு மோன


    சுகமதி லமிழ்ந்து வாழ…அருள்வாயே

Tuesday, August 1, 2017

02.08.2017 : அனுஷ நன்னாள்

02.08.2017 : அனுஷ நன்னாள்

இன்று, அனுஷ நன்னாள். அந்த அனுஷத் தேவின் பதமலரைத் தாங்கி நிற்கும் பாத ரக்ஷையைப் பற்றிப் பாடவேண்டுமென்று தோன்றியது.

பெரியவா சரணம்.




திருக்குறடுப் போற்றிப் பாமாலை 

ஒரு நொடியும் ஒழியாது நாடெங்கும் நடை நடந்த
திருப்பாதம் தாங்கி நிற்கும் திருக்குறடே உனைப் பணிந்தேன் (1)

இருமையெனும் மயக்கறுத்து ஒருமையினை நிலை நாட்டும்
உருவமதைத் தாங்கி நிற்கும் திருக்குறடே உனைப் பணிந்தேன் (2)

மும்மலமும் போக்க வந்த முதல்வந்தன் திருப்பாதம்
செம்மையுறத் தாங்கி நிற்கும் திருக்குறடே உனைப் பணிந்தேன் (3)

சதுர்வேதம் தினம் ஓதும் மலர்ப்பாதம் தனை நித்தம்
பதமாகத் தாங்கி நிற்கும் திருக்குறடே உனைப் பணிந்தேன் (4)

ஐம்பூதம் அவை பணியும்  திருப்பாதம் தனைத் தாங்கி
இம்மையிருள் போக்க வந்த திருக்குறடே உனைப் பணிந்தேன் (5)

அறுமுகனின் பெயர் தாங்கி வந்த சிவன் மலர்ப் பாதம்
பெருமையுடன் தான் சுமக்கும் திருக்குறடே உனைப் பணிந்தேன் (6)

ஏழுலகம் போற்றுமந்த திருப்பாதம் தனைத் தாங்கி
வாழுகின்ற அருளாழி, திருக்குறடே உனைப் பணிந்தேன் (7)

எண்குணத்தான் திருப்பாதம் தன் குணத்தால் நிதம் தாங்கும்
விண்ணுமண்ணும் போற்றுமுயர் திருக்குறடே உனைப் பணிந்தேன் (8)

நவகோளும் சுற்றிவரும் நாயகனின் திருப்பாதம்
தவத்தாலே தாங்குமுயர் திருக்குறடே உனைப் பணிந்தேன் (9)

பித்தனவன் உருவாமச் சித்தனவன் பதம் தாங்கும்

வித்தகமே, திருக்குறடே, நித்தமுந்தன் பதம் பணிந்தேன் (10)

Tuesday, July 18, 2017

19.07.2017 : கிருத்திகை.

19.07.2017 : கிருத்திகை.

ஒவ்வொரு கிருத்திகை தினத்திலும், அந்த குருபரனேயான பெரியவாளின் மேலே, திருப்புகழின் ஒரு சந்தத்திலே ஒரு பாமாலை புனைந்து சமர்ப்பிப்பது, இன்றைய கிருத்திகை தினத்திலும், அவர் அருளாலே தொடர்கிறது.

"ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத
     
நாடண்டி நமசி வாய ...... வரையேறி"

என்னும் பாடலின் சந்தமாம்,

“தானந்த தனன தான தானந்த தனன தான
     
தானந்த தனன தான ...... தனதான” என்ற சந்தத்தில் இந்தப் பாடல்

ஓரந்த மெதுவி லாத ஆனந்த மயம தான
   கோனுந்த னடிக ளேக….அருள்தாராய் (1)

தாயுந்த னறிவி லாத சேயிந்த கடைய னான
   ஈனன்இ வனையு மாள…வருவாயே (2)

ஆறங்க முடையதான வேதங்கள் தினமு மோது
   பாதங்கள் பணியு சேவை – தருவாயே (3)

பாரெங்கும் புகழு ஞான போதத்தை எளிமை யாக
   யாரும்பு ரியும தான - சுவையான (4)

தேனுந்த னுரைக ளோதி நானுந்த னடிகள் சேர
   நாதன்உ னடியில் வாழ – அருள்வாயே (5)

Wednesday, July 5, 2017

06.07.2017 : அனுஷ நன்னாள்: “என் முயற்சி” யென்று ஒன்றால் ஆவது என்ன இங்கு ?

06.07.2017 : அனுஷ நன்னாள்:

இன்றைய அனுஷ தினத்திலே, மனதிலே ஒரு கேள்வி. அந்த ஈசனாம் பெரியவாளின் அருளை அடைய, ஒரே வழி, அவரின் பதகமலங்களைப் பற்றுதலே என்று அடியார்களும் அன்பர்களும் சொல்கிறார்கள். ஆனால், அந்தத் திருப்பாதங்களை எவ்வாறு அடைய முடியும்? அவர் அருள் இருந்தால்தானே அடைய முடியும்? “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்றல்லவோ பெரியவர்களெல்லாம் நமக்குச் சொல்லுகிறார்கள்?
“அருள் கிடைக்கப் பதம் வேண்டும் – பதம் கிடைக்க அருள் வேண்டும்” – என்றால், இதில், நம் முயற்சியால் ஆவதென்ன? புரியவில்லை.
பெரியவாளையே கேட்டு, அவரையே சரணடைவது ஒன்றுதான் வழியோ?
பெரியவா சரணம்.




உன்மலர்ப் பாதம் பற்றி உன்னையே சேர வேண்டும்
என்று நான் ஆசைப்பட்டு, “வழிசொல்லும்” என்று உந்தன்
இன்னடியாரைக் கேட்க, வழிசொன்னார், “நானிலத்தில்
உன்னருள் கிடைத்திட்டாலே உன்பதம் கிடைக்கும்” என்றார்! (1)

“இன்னருள் கிடைக்க நானும் என்னதான் செய்ய வேண்டும்?”
என்றுடன் அவரைக் கேட்க, இதழ்க்கடைச் சிரிப்பொன்றோடு,
மென்மையாய் அவரும் சொன்னார், “பெரியவா நாமம் சொல்லி,
பொன்மலர்த் தாளைப் பற்றி நிற்றலே வழியிங்கென்றார்” (2)

தலைசுற்றி நின்றேன் நானும்! உன்னருள் கிடைக்க நானும்
மலைமகள் வடிவே உந்தன் பதமலர் பற்ற வேண்டும்!
அலைகடல் துயிலும் அரசே, பதமலர் பற்றுதர்க்கோ,
விலைமதிப்பில்லா உந்தன் அருளன்றோ இங்கு வேண்டும்? (3)


“என் முயற்சி” யென்று ஒன்றால் ஆவது என்ன
இங்கு ?
உன் மனம் கனிந்து நீயே இரங்கி வந்தென்னை நோக்கி
“அன்பனே! குழந்தாய்! வா, என் அடிபற்று” என்று சொல்லி
இன்னருள் தந்து என்னை அடிமையாய்க் கொள்ளுவாயோ? (4)

உன்னருளாலே உந்தன் தாளினை வணங்கும் பேற்றை
மின்னொளிர் கமல பாதம் அடைந்திடும் அரிய பேற்றை
சின்னவன் கடையனேன் எனக்குமே நல்குவாயோ?
என்னுடை ஈசா! இங்கு, வந்தெனக்கருளுவாயோ? (5)

Wednesday, June 21, 2017

21.06.2017 : கிருத்திகை.

21.06.2017 : கிருத்திகை.

ஒவ்வொரு கிருத்திகை தினத்திலும், அந்த குருபரனேயான பெரியவாளின் 

மேலே, திருப்புகழின் ஒரு சந்தத்திலே ஒரு பாமாலை புனைந்து 

சமர்ப்பிப்பது, இன்றைய கிருத்திகை தினத்திலும், அவர் அருளாலே தொடர்கிறது.

“வசனமிக வேற்றி ...... மறவாதே
     மனதுதுய ராற்றி ...... லுழலாதே” என்ற பாடல்.

“தனதனன தாத்த ...... தனதான
     
தனதனன தாத்த ...... தனதான” என்ற சந்தம்.

பெரியவா சரணம்.





வயதுமிக போக்கி ..….உடலாலே
  துயரமிகு தேக்கி……..மனதாலே

உனதுபத மேத்தி……நினையாதே
   எனதுசிறு வாழ்வி…..லுழல்வேனே

குருபரனு மேத்து….மிறையோனே
    உலகமுழு தீந்த …..அரியோனே

அடியவனைக் காக்க வருவாயே

   சரணமெனக் கீந்து…..அருள்வாயே

Wednesday, June 7, 2017

08.06.2017: பெரியவா ஜயந்தி

08.06.2017: பெரியவா ஜயந்தி
**********************************************
இன்று, பெரியவா ஜயந்தி. அனுஷத் திருநக்ஷத்ரம். இந்த நாளிலே, பெரியவா அன்று முதல் இன்று வரை செய்த பலப்பல அவதாரங்களை நினைவு கூர்ந்து, பெரியவா என்று வந்த இந்தத் திரு அவதாரத்திலே அவர் நமக்குக் காட்டிய கருணையை நினைவு கூர்ந்து, அவர் பதமலருக்கு, இந்தப் பாடலை அர்ப்பணிக்கிறேன்.
**************************************************************


முன்னாளோர் மலையை முதுகில் தாங்கியே தேவருக்காய்
என்னாளும் வாழவைக்கும் அமுதத்தை தேடித்தந்தாய்! (1)
அமுதுண்ணும் நேரம் வந்த விஷத்தையும் நீயே உண்டு
இமையோரைக் காத்து நின்றாய்! திருநீல கண்டனானாய்! (2)
பக்தனைக் காக்கவென்று தூணிலே காத்திருந்தாய்!
யுக்தமாய் நேரம் பார்த்து அரக்கனை அழிக்க வந்தாய்! (3)
வாமன உருவம் பூண்டு அரக்கனை அடக்கி நின்றாய்!
சேமமே நல்கும் விஸ்வரூபமும் காட்டி நின்றாய்! (4)
அரசையே துறந்து காட்டில் அலைந்துமே திரிந்து சீதை
அவளையும் இழந்து துன்பம் அடைந்துழந்திளைத்துப் பின்னர் (5)
குரங்கினத்தரசன் உதவி கொண்டவன் மூலம் லங்கை
அரக்கனைக் கொன்றாய் நங்கை அவளையும் மீட்டுச் சென்றாய்! (6)
ஒன்றன்பின் ஒருவராக அரக்கரை மாய்த்து ஆயர்
நன்றங்கு வாழவென்று அத்தனை பாடு பட்டாய்! (7)
கிரிதனைத் தூக்கி நின்றாய்! கோகுலம் காத்து நின்றாய்
விரியுலகெல்லாம் போற்றக் கம்சனை அழித்து நின்றாய் (8)
பாண்டவர்க்காகத் தூது நடந்துடல் நொந்து நின்றாய்
வேண்டியே பார்த்தன் கேட்க, கீதையே சொல்லி நின்றாய் (9)
திரிபுரம் அமர்ந்து ஓடி, திசையெலாம் அழித்தோர் தம்மை
சிரிப்பினால் அழித்து அன்பர் சிறக்கவே செய்து நின்றாய்! (10)
பாதமே பிடித்த பாலன் வாழவே காலன் தன்னை
நாதனே உதைத்துக் கால காலனாய் அன்று நின்றாய்! (11)
பிட்டுக்கு மண் சுமந்தாய்! பிரம்படி அதுவும் பட்டாய்!
இட்டமாய் தருமி வாழக் கவிதையும் தந்து நின்றாய்! (12)
பித்தனென்றன்பர் ஏச, இன்பமாய் ஏற்று நின்றாய்!
அத்தனே அம்மையாகப் ப்ரசவமும் பார்த்து நின்றாய்! (13)
மூகனுக்காக வந்து கவிமழை பெய்ய வைத்தாய்!
ஏகம்பன் பாகமானாய்! காஞ்சித் தாயெனவே நின்றாய்! (14)
எத்தனை விதமாயெல்லாம் இப்புவி வந்துதித்தாய்!
பக்தரைக் காக்கவென்று, எத்தனைப் பாடுபட்டாய்!! (15)
இத்தனை அவதாரங்கள் எடுத்து நீ பட்ட கஷ்டம்
மொத்தமாய் ஒன்றுமில்லை என்றிங்கு சொல்லுமாறு (16)
முற்றுமே துறந்து நிற்கும் முனிவனாய்க் கோலம் பூண்டு
நற்றவக் காஞ்சியென்னும் நகர்செய்மா புண்ணியத்தால் (17)
சங்கரன் மகிழ மண்ணில், “பெரியவா” என்னும் திவ்ய
மங்கல நாமம் கொண்டு இவ்வுலகெல்லாம் வாழ (18)
நல்லவர் மற்றும் இன்றி, அல்லோரும் வாழ, நன்கு
பல்கலை வாழ, என்றும் நான்மறை வாழ நீயும் (19)
எத்தனை பாடுபட்டாய்! எத்தனை நடை நடந்தாய்!
சித்தனே நூறு ஆண்டு வித்தகம் செய்து நின்றாய்! (20)
தெய்வத்தின் குரலைத் தந்தாய்! நான்மறை சாரம் தந்தாய்
செய்வது அறியா நின்றக் கடையரும் வாழச் செய்தாய்! (21)
ஒவ்வொரு அடியாருக்கும் “உம்மாச்சித் தாத்தா”வானாய்!
ஒவ்வொரு அடியாரகமும் உன்னகம் ஆக்கி நின்றாய்! (22)
இன்று உன் பிறந்த நாளில் உன்னையே நினைத்திருக்கும்
அன்பரைக் காக்க நீயும் அருள்மழை பொழிய வேண்டும்! (23)
உன்பெயர் சொல்லும் யாரும் உயரவே அருளல் வேண்டும்!
உன்னையே நினக்கும் நெஞ்சம் சிறக்கவே அருளல் வேண்டும்! (24)
அடியவர் தம்மைக் காக்கும் விரதமே பூண்ட தேவே!
கொடியவர் தமையும் காத்துன் அடியாராய்க் கொள்ளல் வேண்டும்! (25)
அன்பர்கள் நெஞ்சில் நின்று அல்லகள் போக்கும் தேவே!
துன்பமே உழலும் எனையும் கொஞ்சம் நீ பார்க்க வேண்டும்! (26)
உன்பக்தன் போல இங்கு வேஷமே போட்டு வாழும்
என்மேலும் கொஞ்சம் கருணை நீயுமே காட்ட வேண்டும்! (27)