Saturday, January 13, 2018

13/01/2018 : அனுஷ தினம்

13/01/2018 : அனுஷ தினம்

சென்னையிலிருந்து குடிபெயர்ந்து பெங்களூர் வாழ்வு. பெங்களூரிலிருந்து குடிபெயர்ந்து மும்பாய். சரியாய் 1 வருஷம் மும்பாய் வாழ்க்கை. மறுபடி இப்போது பெங்களூர் வாழ்வு. அலைச்சல். மறுபடியும் குழந்தைகளுடைய school; மறுபடியும் வீடு தேடும் படலம். வேலை. அடுத்து என்ன அடுத்து என்ன என்று மென்மேலும் உத்யோக நினைவு. சாப்பாடு. தூக்கம்.

பெரியவாளை நினைக்க எங்கே நேரம்?

துளி பக்தி இருந்தாலும் ஓடி வந்து அருளும் அந்த தெய்வமேதான் அந்த ஒரு துளி பக்தியையும் கொடுத்து அருள வேண்டும்.

பெரியவா சரணம்.




****************************************************************


ஊனதும் உருகி நில்லேன்; உள்ளொளி ஏதும் இல்லேன்
தேனுனை அறியாப் பிறவி படைத்திங்கும் கவலை இல்லேன்
நானெனதென்றே வாழும் வாழ்வதே குறியாய்க் கொண்டேன்
வானவர் ஏத்தும் கோனே! வந்தெனைக் காப்பாய் ஐயா (1)

சிந்தையில் உன்னை வைத்து செந்தமிழ் கொண்டு பாடி
எந்தையே ஐயா என்று சந்ததம் போற்றி நில்லேன்
வெந்துயர் வாழ்வை மெய்யாய் கொண்டு நாள் கழிக்கின்றேனே!
முந்தைய வினையோ? எந்தாய்! வந்தெனைக் காப்பாய் ஐயா! (2)

உண்டுவீண் உறங்கி நாளும் வாழ்வினைக் கழித்தும் என்றும்
விண்ணவர் ஏத்திப் போற்றித் தொழுதெழும் அமுதாம் உந்தன்
தண்மலர்ப் பாதம் எண்ணாக் கடையனாய் இருக்கின்றேனை
அண்ணலே அபயம் தந்து அன்னையாய்க் காப்பாய் ஐயா! (3)

அன்பதே சிவமாம்; அன்பில் என்பதும் உருகும் என்பார்
என்மனம் என்னும் பாலை வனத்தினில் உன்பால் வைக்கும்
அன்பது துளியும் இல்லேன்; இலையெனும் பதைப்புமில்லேன்
நன்மையே அறியா நெஞ்சன் என்னையும் காப்பாய் ஐயா (4)

நாமமே கேட்க உள்ளம் உருகியே நிற்பாரந்த
சேமமே கொண்டார் கூட்டம் சேர்ந்துமே மாறா நெஞ்சில்
காமமும் களவும் கோபம் மட்டுமே கொண்டேன் உமையாள்
வாமமே கொண்டோய் வந்து என்னையும் காப்பாய் ஐயா (5)

அருளதே வடிவாய் வந்தோய்! உன்னருள் நாடேன்; வீணாம்
பொருளதே நாடும் தீய வழக்கதே வாழ்வாய்க் கொண்டேன்
மருளதே மனமாய்க் கொண்டேன்; அந்தகன் வருமுன் வந்துக்
குருபரா நீயும் இந்தக் கடையனை காப்பாய் ஐயா (6)

மனைவியை மக்கள் தம்மை, போற்றிடும் சுற்றம் தம்மை
அனைத்துமாய் எண்ணி வாழ்வேன்; பரமனே உன்னை நெஞ்சில்
தினையளவேதும் எண்ணா நிலையதில் பயமும் இல்லேன்
வினைப்பயன் தானோ? எந்தாய்! வந்து நீ காப்பாய் ஐயா (7) 

உறவென்று உன்னைக் கொள்ளேன்; உன்பதம் நினையேன் வாழ்வில்
பிறருக்கே உழைத்து நின்றேன்; பணத்திற்கே குறியாய் நின்றேன்
அறநெறி ஏதும் இல்லேன்; பக்தியோ சிறிதும் இல்லேன்
மறலியே வருமுன் வந்து என்னை நீ காப்பாய் ஐயா (8)

பதவியைப் பொருளை, போக வாழ்வினை அடைவதொன்றே
சதமெனக் கொண்டேன்; துன்பம் துயருமே வந்தும் உந்தன்
பதமதை நாடி வீழ்ந்துக் கதறிடா நெஞ்சம் கொண்ட
அதமனைக் கடைக்கண் பார்வை கண்டு நீ காப்பாய் ஐயா! (9)

இன்னருள் ஒன்றே வேண்டி உன்பதம் நாடி என்றும்
உன்னடி போற்றி நிற்கும் அடியவர் கோடி உண்டு
உன்னருள் நாடா நிற்கும் ஒருவனை எங்கு காண்பாய்?
அன்னையே! அப்பா! வந்தேன்! என்னையும் காப்பாய் ஐயா! (10)


Friday, December 15, 2017

16/12/17 : அனுஷ தினம் : மிரட்டல் பாமாலை

16/12/17 : அனுஷ தினம்

இன்று, அனுஷம். பெரியவாளின் பக்தர்களெல்லாம் கூடி, அந்த வேத நாயகனைத் தொழுது வணங்கி அனுக்ரஹம் பெறும் நாள். பெரியவாளின் பலப்பல அனுக்ரஹங்களைப் பற்றிப் பேசிக் களித்து அனுபவிக்கும் நாள். அவரது உபதேசங்களை எண்ணி எண்ணி இன்புற்று, அதன்வழி நடக்கும் நாள்.


இந்த இனிய நாளிலே, “பெரியவாளின் அருள் பெறுவதற்கு என்ன வழி” என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.


பதம் பணிந்து பக்தி செய்து கண்ணீரால் பாதம் அலம்புவதுதான் ஒரே வழி என்று பெரியோர்கள் சொல்லிக் கொடுத்திருந்தாலும், ஒரு துளியும் பக்தி பண்ண வராத இந்த மனதை வைத்துக்கோண்டு என்ன செய்வது? அழத் தெரியாத குழந்தைக்கு, பால் எப்படி கிடைக்கும்?


குழந்தை, “என்னைத் தூக்கிக்கோ” என்று அம்மாவிடம் சொல்லுகிறது. அம்மாவோ அடுக்களையில் வேலையாய் இருக்கிறாள். ஒரு பொம்மையைக் கொடுத்து போக்குக்காட்டிவிட்டு அவள், தன் வேலையைப் பார்க்கிறாள். குழந்தையும், பொம்மை கிடைத்த ஜோரில், அம்மாவை சற்றே மறந்து விளையாடுகிறது. மறுபடியும் அம்மா ஞாபகம் வர, “தூக்கிக்கோ” எங்கிறது. அம்மா கண்டுகொள்ளாமல் இருந்தால், அம்மாவை மிரட்டுகிறது. “தூக்கிக்கலைன்னா, உங்கிட்ட பேச மாட்டேன்” எங்கிறது. அம்மா தூக்கிக்கொள்ளும் வரை, விதவிதமாக மிரட்டிப் பார்க்கிறது. குழந்தை மிரட்டும் இந்த அழகை மெச்சித் தூக்கிக்கொள்ளாத அம்மாவும் உண்டா என்ன?


இரவு தாத்தாவின் அருகிலே படுத்துறங்கும் பேரன், கதை சொல்லச் சொல்கிறான். தாத்தாவோ. “நாளைக்கு சொல்றேன். இப்ப தூங்கு” எங்கிறார். பேரன் கேட்பதாய் இல்லை. “நீ கதை சொல்லலைன்னா, உன்னை ‘bad தாத்தா’ ந்னு எல்லாரும் சொல்வா. நீ good தாத்தா தான? கதை சொல்லு” என்கிறான். இப்படி, ஆசையாய் மிரட்டும் அந்தக் பேரனுக்குக் கதை சொல்ல மறுக்கும் தாத்தாவும் உலகில் உண்டா என்ன?


இப்படி, குழந்தைகள் அம்மாவை, அப்பாவை, தாத்தாவை என்று அனைத்து உறவுகளையும் “மிரட்டி” காரியம் சாதித்துக் கொள்வது, நாம் எல்லோரும் அறிந்த, ஒன்றுதான்.


அழுதால் அம்மா வருவாள்தான். ஆனாலும், அழுவதையும் விட, இப்படி ஆசையாய் “மிரட்டினால்”, இன்னும் வேகமாக ஓடிவந்து தூக்கிக் கொஞ்சுவாளில்லையா?

பெரியவாளின் அருள் பெறுவதற்கும், இப்படிக் குழந்தையாக இருந்து, அவரை “மிரட்டினால் என்ன” என்று தோன்றியது.

பெரியவாளை என்ன சொல்லி “மிரட்டுவது”?

தர்ம ஸ்வரூபன், எதற்கு மசிவார்? “நீ செய்வது தர்மமே இல்லை” என்று மிரட்டினால் மசிவார் – இல்லையா?

குழந்தையைக் காப்பது தாயின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தாய் தவறக்கூடாது. மகனிடம் அன்பு காட்டுவது தந்தையின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தந்தை தவறக்கூடாது. பதம் வீழ்ந்த சிஷ்யனை பரிந்து காப்பது குருவின் கடமை. அதிலிருந்து குரு தவறாலாமா? அப்படித் தவறினால் உலகு பரிகசிக்காதா?

“தராதரம்” பார்த்து அன்னையோ, தந்தையோ, குருவோ அன்பு காட்டுவது இல்லை. சமர்த்துக் குழந்தையிடமும் அசட்டுக் குழந்தையிடமும் ஒரே மாதிரி அன்பு காட்டுபவள்தானே தாய்? நிறைய சமயங்களில், சமர்த்துக் குழந்தையிடம் காட்டுவதை விடவும்கூட, அசடாய், ஒன்றும் தெரியாமல் இருக்கும் குழந்தையிடம்தானே தாய் இன்னும் நிறைய பரிவு காட்டுவாள்? “இந்தக் குழந்தை இந்த உலகிலே என்ன செய்யப் போகிறதோ” என்று கவலைப்பட்டு பிரியம் காட்டுவாள்?

நாமெல்லாம் அந்தப் பெரியவாளின் குழந்தைகள் இல்லையா? நம்மைக் காப்பதும், நம்மிடம் அன்பு காட்டுவதும் அந்தப் பெரியவாளின் கடமை இல்லையா?

எனக்கு பக்தி எதுவும் இல்லை என்பதால் – நான் ஒரு அசட்டுக் குழந்தை என்பதால் அந்தத் தாய் என்னிடம் அன்பு காட்டாமல் இருந்துவிடலாமா? இப்படி இந்தக் குழந்தை மூடனாய், முரடனாய் இருக்கிறதே என்று, எல்லாரிடமும் காட்டும் அன்பைவிட ஒருபடி ஜாஸ்தியாக அல்லவா அன்பு காட்ட வேண்டும்? அதிகமாக அல்லவா அருள் செய்ய வேண்டும்?

அப்படிச் செய்யாமல் போனால் அது தவறுதானே? அது தருமம் இல்லைதானே? உலகு பழிக்கும்தானே?

பெரியவாளே!! உம்மாச்சித் தாத்தா! இந்தப் பழி உங்களுக்கு வேண்டாம். உங்கள் நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்!! அனைவருக்கும் ஓடி வந்து அருளும் தெய்வம் என்று உலகம் சொல்லும் அந்தப் புகழை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

அப்படி ஓடி வந்து, அடியேனை காப்பாற்றாவிட்டால், உங்களுக்குத்தான் கெட்ட பெயர்! ஆசையாய் ஓடிவந்து காலைக் கட்டிக் கொண்ட குழந்தையை அன்புடன் கொஞ்சத் தெரியாத தாத்தா என்று, உலகம் உங்களைத்தான் தூற்றும்.ஆந்த அவப் பெயர் உங்களுக்கு வேண்டாம். அப்படி ஏதும் அவப்பெயர் வருவதற்கு முன்னர், அடியேனுக்கு, அருள் செய்து விடுங்கள்!!

எனக்காக என்று இல்லையானாலும், இந்த கெட்ட பெயர் வராமல் இருப்பதற்காகவாவது அருள் செய்து விடுங்கள்!!

இப்படி மிரட்டினால், காரியம் ஆகுமோ? அந்தத் தெய்வம் மசியுமோ?

இந்த யோசனையில் எழுந்த பாமாலையை, அந்த உம்மாச்சித் தாத்தாவின் பதமலருக்கே அணிவிக்கிறேன்.


பெரியவா சரணம்.




அழுதிடும் மழலைதன்னைத் தாயவள் தள்ளி வைத்தால்
பழுதன்றோ? உலகோரெல்லாம் பரிகசித்தெள்ளிடாரோ? (1)

அப்பாயென்றோடி வந்த மகனையே அடித்தால் அதனை
தப்பென்று சொல்லிடாரோ? தந்தையை ஏசிடாரோ? (2)

குருபதம் வீழ்ந்த சிஷ்யன் அவனையே ஒதுக்கி வைக்கும்
குருவினை மதித்துப் போற்றும் மனிதரும் உலகில் உண்டோ? (3)

பெயரனை அணையா நிற்கும் பாட்டனும் உலகில் உண்டோ?
மயர்வென்று சொல்லிடாரோ? பாட்டனை எள்ளிடாரோ? (4)

வேயுறு தோளி பங்கன் வடிவாக வந்துதித்தோய்!
தாய், தந்தை, அன்புப் பாட்டன் , குரு ,தெய்வம், அனைத்தும் நீயே! (5)

ஆய்ந்துணர் அறிவொன்றில்லா அற்பனே நானென்றாலும்
நீயென்னைத் தள்ளி வைத்தால் உலகுன்னைப் பழித்திடாதோ? (6)

அப்பழுக்கேதும் இல்லா வாழ்வன்றோ வாழ்ந்தாய் நீயும்?
ஒப்புயர்வேதுமில்லா வாழ்வன்றோ உந்தன் வாழ்வு? (7)

கறைக்கண்டா! உந்தன் பெயரும் கறையாகக் கூடாதன்றோ?
மறைநாதா உந்தன் புகழும் குறைந்திடக் கூடாதன்றோ? (8)

அடியவர்க்கென்று ஓடிவந்தருள் செய்யும் வேத
விடிவெள்ளி ! கஞ்சி வாழும், அவ்யாஜ கருணா மூர்த்தி! (9)

தகுதியென்றொன்றும் இல்லா வினையினேன் என்றாலும் நீ
உகந்தெனக்கருளாவிட்டால் உனக்குத்தான் பழியும் சேரும்! (10)

அயராது ஒரு நூற்றாண்டு நீ சேர்த்து வைத்த நல்ல
பெயருமே கெட்டுப் போகும்! அதனையே தவிர்க்கும் அந்த (11)

ஒரு நோக்கிற்காகவே நான் உன்னருள் கேட்டேனப்பா!
திருவருள் புரிவாயப்பா! உன்பதம் தருவாயப்பா! (12)

Wednesday, December 13, 2017

14.12.2017 : பெரியவா ஆராதனை : கண்ணீர் மாலை


14.12.2017 : பெரியவா ஆராதனை : கண்ணீர் மாலை

இன்று குருவாரம். பெரியவா ஆராதனை நடக்கும் நாள்.

“யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே”  என்றார் மாணிக்கவாசகர்.

அந்த இறைவன் மலர் மாலையை உகக்கிறான். மலர் மாலையினும், பாமாலை உகக்கிறான். பாமாலையினும், பக்தர்களின் கண்ணீரை உகக்கிறான்.

அவன் பதம் தேடி, அழுத கண்ணீரால் செய்த பாமாலையை, இந்தக் கண்ணீர் மாலையை நிச்சயம் உகப்பான் என்றுதான் தோன்றுகிறது.

பெரியவா சரணம்.



அழுதால் உன்னையே பெறலாம் என்றாரே
கெழுதகைப் பெரியோரும்; நாளெலாம் உனையெண்னி
அழுவதே வாழ்வாகக் கொண்டேனைக் காவாயோ
பழுதிவன் என்னாமல் வந்து (1)

ஒரு சேய் அழுகைக்கு இரங்கியே   நீயன்று
பெருமுலை அமுதூட்டி நின்றனை இன்றிந்த
சிறு சேய் அழுகைக்கிரங்காயோ? உன்மனம்
உருகாதோ கண்ணீரைக் கண்டு (2)

உன்பதம் கண்ணீரால் அலம்பிட அருள்வாய் நீ
என்றெங்கள் பெரியோரும் சொன்னாரே! பிறைசூடி!
மன்றாடும் உமைநேசா! அழுகையாம் ஆற்றிலே
கன்றிவன் கரைவதும் பார் (3)

பதமதை மலரினால் அருச்சனை செய்வதின்
இதமதாம் கண்ணீரும் உனக்கென்றார் பெரியோரும்
சதமுமே கண்ணீரால் உன்பாதம் நனைத்தேங்கும்
அதமனை வந்து நீ கா (4)

நித்தமும் தண்ணீரால் அபிஷேகம் செய்வதின்
வித்தகா கண்ணீரை உவப்பாய் நீ என்பாரே
சித்தமும் சோர்ந்திங்கே கண்ணிரு குளமானேன்
அத்தனே வந்தென்னைக் கா (5)

பாவியேன் நானுமென் நெஞ்சுமே பொய் ஆனால்
மேவியே உன்பதம் அழுதிட்டால் பெறலாமென்
றாவியே அன்றுமா ணிக்கவாசகர் சொன்னார்!
தாவியே வந்தென்னைக் கா (6)

புலம்பலால் அருச்சனை செய்தனன் கண்ணீரால்
அலம்பினன் நின்பாதம் தாய் தந்தை குரு எந்தன்
உலகெலாம் நீ இங்கே உனைத்தேடி நின்றேனென்
குலம் வாழ வந்தென்னைக் கா (7)

கங்கையைச் சடையினில் தாங்கினை அவள்வேகம்
மங்கிடும் என் கண்ணீர் முன்னாலே நிற்காமல்
பொங்கிடும் அழுகையால் நீராட்டி நின்றேனை
இங்குடன் வந்து நீ கா (8)

அடியார்கள் அழுதிட்டால் அவனியே தாங்காது
அடியேனும் அழுதேங்க அதை நீயும் பார்ப்பாயோ?
அடித்திட்ட அடி போதும் பதமென்னும் அருள் தந்து
கடிதேகி வந்தென்னைக் கா (9)


உண்ணாமல் உறங்காமல் உன்பாதம் நினைத்துன்னைக்
கண்ணீராம் வென்னீரால் அபிஷேகம் செய்பவனை
 “கண்ணே என் மணியே என் குழந்தாய் நீ” எனக் கொஞ்சி

நண்ணி வந்துன்பதம் தா (10)

Sunday, November 19, 2017

19.11.17 : அனுஷ தினம்

19.11.17 : அனுஷ தினம் :

இன்று, அனுஷம். பெரியவா பக்தர்கள் கூடி, அந்த சங்கர தெய்வத்தை ஆராதிக்கும் தினம்.

இன்றைய தினத்திலே, அந்த கயிலாய சங்கரன், இந்தப் புவி மிது இறங்கிக் காஞ்சி சங்கரனாய்த் திகழ்ந்ததன் காரணம் என்னவாய் இருக்குமென்று சற்றே வேடிக்கையாய் நினைக்கத் தோன்றியது.

“தந்தை தாயிருந்தால், உலகத்தில் உமக்கிந்தத் தாழ்வெல்லாம் வருமோ ஐயா” என்றும், “ஏன் பள்ளி கொண்டீரய்யா” என்றும், ஸ்வாதீனமாக அந்த பக்தப் பராதீனனைப் பாடுவது மரபுதானே? அந்த மரபினை ஒட்டி, எங்கள் உம்மாச்சித் தாத்தாவாம் இந்த சங்கரனாக – அந்த சங்கரன் அவதாரம் செய்ததை, நிந்தாஸ்துதிபோல் பாடிய பாடலை, அவரது திருவடிகளிலேயே சமர்ப்பிக்கிறேன்.

பெரியவா சரணம்.




உன் இடம் தனதாகப் பெண்ணவள் தானேக,
தன் இடம் விட்டிங்கு தரைமீது வந்தாயோ? (1)

தலையேறி மனைவிசெய் கொடுமையே தாளாமல்
மலைவிடுத்தவனியில் தனியாக வந்தாயோ? (2)

குமரனும் கோபத்தில் ஆண்டியாய் ஆனதில்
விமலனே நீயுமே அவனைப்போல் வந்தாயோ? (3)

பித்தனே என்றுந்தன் பக்தனும் ஏசிட
அத்தனே நீயுமே முக்தனாய் வந்தாயோ? (4)

செருப்பதை பக்தனுன் மேனியில் வீசிட
விருப்பெலாம் விட்டு நீ உலகினில் வந்தாயோ? (5)

வில்லினால் விஜயனும் அடித்ததால் நொந்தங்கு
நில்லாமல் காஞ்சியில் இளைப்பாற வந்தாயோ? (6)

மண்சுமந்தயர்ந்த நாள் வாங்கிய பிரம்படிப்
புண்ணுமே ஆற்றிட மறுபடி வந்தாயோ? (7)

மதனையே எரித்தும் நீ குடும்பியாய்ப் போனதை
நிதமுமே நினைத்திங்குத் துறவியாய் வந்தாயோ? (8)

சதியவள் தந்தையும் மதிக்காமல் போனதால்
இதயமே நொந்து நீ இறங்கியே வந்தாயோ? (9)

அடியவர்க்கென்றுமே அருள்மழை பொழியவே
கடிநகர் காஞ்சிக்கு விரைந்து நீ வந்தாயோ? (10)

சங்கரா! நீ இங்குப் “பெரியவா” என வந்த
மங்கலம் தனை நிந்தாஸ்துதியாகப் பாடியதை
“சங்கடம்” என உதறித் தள்ளாமல் நீ ஏற்பாய்!
பங்கய மலர்ப்பாதம் தந்தென்னைக் காத்திடுவாய்!