First 6 stanzas published on 31/5/2015
இன்று, வைகாசி விசாகம். முருகனுடைய திருநாள்.
கதிர்வேலவா உனை நிதம்
பாடவென்று
துதி செய்தேன் இங்குவந்து - மதியே
அருள் கணபதியே வந்தென்மன
இருளே நீங்கிடச் செய்
உருவாய் விளங்கி அருவாய் மறைந்து
குருவாய் மலரும் பொருளே - முருகா!
காக்கும் தேவே, வந்திங்கு
எந்தன்
வாக்கையும் தவறாமல் கா! (1)
குறைதீர என்று உனைஏத்தி நின்றேன்
முறைகேட்டு நீயும் வாராய் - உரைசெய்
பழம்கேட்டுச் சென்ற பழமான கந்தா
அழகான மயில்மீது வருவாய் (2)
முகமாறு கொண்ட சிவஞான ஸ்கந்த
குகஸ்வாமி நாத போதா - அகமே
உனையே நினைந்து தவமே புரிந்து
நினையே அடைய அருள்வாய்
(3)
ஈராறு கரமும் எடுத்திங்கு வந்து
பாராளும் ஜோதி வடிவே - வீரா!
உயர்வான பாதம் தலைமீது வைத்தென்
துயர்தீர நீயும் வாராய்! (4)
திருவோடிருக்கும் மலர் நாபனுக்கும்
பொருளாயிருக்கும் குஹனே - அருளால்
தீயேன் எனக்கும் உன்பாத பத்மம்
நீயே உவந்து தாராய் (5)
குறவள்ளி பாதம் தலைமேல் இருத்தி
உறவாடி நின்ற குமரா - பறவை
பரியாகி இங்குக் கொடியாக்கிக் கொண்ட
அரிதானுகந்த மருகா (6)
Published on 14-06-2015 : Kruthigai day today
மறை நான்கினுக்கும் முடிவாக வந்த
இறையாதி தேவமைந்தா! - விரைவாய்
உனதாசி தந்துன் கழல்தந்து என்னை
நினதாக்கிக் கொண்டு அருள்வாய் (7)
தெய்வானை தன்னை மணம்கொண்ட அந்த
மெய்ஞான நித்ய வேதா - செய்த
வினையாவும் இங்கு விரைந்தோட நீயும்
எனையாள ஓடி வாராய் (8)
உமைதந்த வேலும் பலம்கொண்ட தோளும்
நமைக்காக்க இங்கு வருமே - தமையே
குஹர்க்காகத் தந்த அடியார்க்கு என்றும்
மஹத்தான வாழ்வு தருமே! (9)
அறுவேறு பெண்டிர் முலைப்பாலுமுண்டு
திருநாமம் கொண்ட அழகா - திருக்கை
வடிவேலுக்கன்று இறையான சூரன்
கொடியாகக் கொண்ட குமரா (10)
சிரிப்பாலே அன்று புரமூன்றெரித்த
விரிசடையன் ஈசன் மகனே - விரிவாய்
தந்தைக்குப் ப்ரணவம் உபதேசம் செய்த
எந்தை நீ ஸ்வாமி நாதா! (11)
முக்கண்ணன் நெற்றிப் பொறியாகி வந்து
அக்கண்ணன் மெச்சும் மருகா - திக்கு
எட்டுமே அதிர நின்ற அச் சூரன்
கொட்டம் முடித்த முருகா (12)
Published on 11.07.2015 : Kritigai day
மிகத்தீனன் அருண கிரினாதன் அன்றுன்
புகழ்பாட அருளும் செய்தாய் - அகமே
ஒருநாளும் உன்னை நினையாத மட்டி
பெருமூடன் எனக்கும் அருள்வாய் (13)
தமிழ்ப்பாட்டி ஔவை மிகச் சோர்ந்தபோது
அமிழ்தான கனியும் தந்தாய் - குமிழ்புன்
சிரிப்பாலே சுட்ட கனியீன்று அவளை
விரிஞானம் அடையச் செய்தாய் (14)
ஓமென்ற ப்ரணவ மந்த்ரத்தின் பொருளி
தாமென்று அறியா பிரமனைப் - போமென்று
சிறையிலே தள்ளி படைப்பென்னும் வேலை
நிறைவாகச் செய்த வேளே! (15)
தந்தைக்கும் ப்ரணவ மந்த்ரத்தைச் சொல்லி
எந்தைக்கும் ஸ்வாமி ஆனாய் - கந்தா
உருகாத கல்நெஞ்சுடையோன் எனக்கும்
குருவாக நீயும் வாராய்! (16)
பழம் கொண்டானண்ணன் பெற்றோரைச் சுற்றி
பழமின்றி நீயும் சென்றாய் - பழம்நீ
தானாயிருக்க பழம் இல்லை என்றா
போனாய்நீ அன்று முருகா! (17)
வஞ்சிக் குறவள்ளியை மணக்கவே அன்று
தஞ்சம் புகுந்தாய் அண்ணனை
- அன்றுமாம்
பழத்திற்கு கோபம் தீர்ந்ததோ வள்ளிப்
பழமின்று கிடைத்த தாலே
(18)
Written on 08.08.2015 :
Krithigai day
அஞ்சுதல் அகற்றி ஆறுதல் தந்திடும்
கொஞ்சு தமிழ்க் கடவுளே - தஞ்சம்
என்றுனை அடைந்தேன் என்னையும் இங்குன்
கன்றுபோல் நீயும் கா (19)
அலைவாயில் அங்கு அலையாடும் அழகை
சிலைபோல நின்று ரசிப்பாய் - அலையும்
என்நெஞ்சம் அதிலும் உன் பார்வை சேராய்
உன்நெஞ்சு இளகி நீயே (20)
தோல் நீங்கின்காணச் சகிக்காத உடலை
பால் ஊற்றி வளர்த்திட்டேனே - வேலை
சற்றும் நினையாத பாதம் பணியாத
முற்றும் மூடனாம் நானே (21)
ஆறு முகமிருந்தும் பாராதோ ஒருமுகம்?
இருபத்துக் கரமிருந்தும் அணையாதோ- ஒருகரம்?
உந்தனை நினைத்துளம் சோர்ந்திட்டேன் நானும்,
கந்தனே எனைஉன்னடி சேர் (22)
செந்தூரில் நின்று வேலொன்று கொண்டு
விந்தைபல செய்த குஹனே - எந்தாய்
எனதாவி இங்கு உடல்நீங்கும் முன்பு
உனதாக்கிக் கொள்ள வருவாய் (23)
சங்கரனும் அன்று வந்தித்து நின்ற
ஐங்கரன் தம்பி வேலா - கிங்கரன்
எனையேயுன் தொண்டில் முழுதாகக் கொண்டு
எனையேநீ ஆள வாராய் (24)
Written on Krithigai day : 05.09.2015
உருவிலே சிறுவன் திருவிலே பெரியன்
குருவென வந்த குஹனே - கருவில்
மீண்டுமே வந்து மேனியே நொந்து
மாண்டுதான் போகாமர் கா! (25)
அருணகிரிக்கன்று ஒரு நொடிப்போதில்
திருப்புகழ் தந்த முருகா - குருவாய்
எனக்கும் உவந்து தமிழ்ஞானம் தந்து
உனையென்றும் பாட அருள்வாய் (26)
விதியையே நொந்து தனைமாய்க்க எண்ணி
பதிதேடி வந்த அவனின் - மதியை
தனைமாற்றி உந்தன் பதம்சேர்த்து அன்றே
வினைதீர்த்த வெற்றி வேலா! (27)
வேலனே உன்னை நான் அடைவதற்குள்
காலனோ என்னைக் கவர்வான் - ஆலமுண்
ஈசனின் மைந்தா! நீயுமுன் வந்து
நேசமாய் அபயம் தாராய் (28)
மலையாக நின்ற பெருமாயை தன்னை
இலையென்று செய்த முருகா - நிலையாய்
இங்கெந்தன் உள்ளம் தனில்நின்று நீயும்
மங்காத செல்வம் தருவாய் (29)
உனைப்பாடும் பணியே பணியாகத் தந்து
வினையாவும் தீர்த்து விடுவாய் - எனையே
அடிபோற்றும் தொண்டர் கடைக்கோடிதன்னில்
குடியேற்றி வாழ விடுவாய் (30)
Written on Krithigai day : 2.10.2015
இன்று, கிருத்திகை.
கிருத்திகை தோறும், ஒரு ஆறு பாடல்கள், அந்த அறுமுகன் மேல், அந்த ஸ்வாமினாதன் மேல் வரைவது, தொடர்கிறது.
யோகியார், ராம்ஸூரத் குமார் அவர்கள் ஒருமுறை, ஒரு அடியாரை, புலவர் பெரியசாமித் தூரன் அவர்களைக் கேட்டார் : "உனக்கு என்ன வேணும்?"
பெரியசாமித் தூரன் அவர்கள் சொன்னார் : "நான், முருக பக்தன். எனக்கு, முருக தரிசனம் நேர்ல வேணும். அந்த அனுக்ரஹம் பண்ணணும்"
யோகியார், சிரித்துக் கொண்டே சொன்னாராம் : "Lord Muruga, is living in Kanchipuram now, without His
two consorts. Go and have His Darshan"
அந்த முருகன் நம் பெரிய பெரியவாளேதான். முருகன் பாடலென்று எழுதினாலும், பெரியவா மேல் சாற்றும் பாமலைகளில் இதுவும் ஒன்று என்றுதான் தோன்றுகிறது.
பெரியவா கருணை.
என் இனிய நண்பர், கார்த்தி அண்ணா ஒருமுறை explain பண்ணினாற்போல, பெரியவா = கருணை. So, "பெரியவா கருணை" என்று சொல்லும்போது, அந்தக் கருணாமூர்த்தியை இரு முறை நினைப்பதுபோல், இருமுறை சொல்வதுபோல்.
சொல்லற்று இங்கு சும்மா இரென்று
நல்வார்த்தை சொன்ன முருகா - எல்லாப்
பொருளாக நீயே இருந்திங்கெனக்கு
மருந்தாக நீயும் வாராய் (31)
பெரும்வீர ராவணனவன் தோற்று வீழும்
ஓருவீரம் காட்டுமந்த - திருவாம்
கயர்கண்ணி சீதை மனம்வாழும் பச்சை
புயல்ராமன் மெச்சும் வீரா! (32)
மைவண்ணப் பேயை கைவண்ணத்தாலே
பொய்வண்ணமாக்கும் ராமன் - ஐயன்
அன்போடு நித்தம் மருகாவா என்று
இன்போடழைக்கும் குமரா! (33)
சிற்றன்னை சொல்லால் நகரமே நீங்கி
உற்றேகிக் காடு போனான் - சற்றும்
முகம் வாடிடாத ராகவன் மெச்சும்
குகனே நீயிங்கு வாராய்! (34)
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
என்றன்று காடு போனான் - அந்த
மாமனும் கெஞ்சக் கோபமாய்ப் பழனி
மாமலை நின்ற முருகா! (35)
பறவைக்குமன்று கதி மோக்ஷம் தந்தான்
பரவாசு தேவன் ராமன் - திறமாய்
மயிற்கோழியென்று பறவையாய் இன்று
பயிற்கொடியும் கொண்ட குமரா! (36)
29.10.2015 கிருத்திகை அன்று வரைந்த பாடல்கள்
ஆண்டியாய் அன்று பழனியில் நின்று
வேண்டினோர்க் கருளும் முருகா - காண்பார்
வினை தீர்க்குமுந்தன் குமிழ் சிரிப்பாலே
எனையாள ஓடி வாராய்! (37)
சூரனாம் அவனை வேலதால் கொன்று
கூறதாய் ஆக்கி நின்றாய் - மாரன்
அவனைப் பழிக்கும் அழகோடு வந்து
பவரோகம் தீர்க்கும் முருகா! (38)
நஞ்சுண்ணும் தந்தை, மண்ணுண்ணும் மாமன்
விஞ்சியே மோதகம் உண்ணும் - அஞ்சக்
கரத்தனன் அண்ணன் பழமுமே உண்ணா
திறத்தனன் தம்பி அம்மா! (39)
புலியேறும் அன்னை, விடையேறும் தந்தை
எலியேறும் அண்ணன் இங்கே - வலிய
பருந்தேறும் மாமன் மயிலேறும் மருகன்
அருமையாம் குடும்பம் இது! (40)
அழகதன் தெய்வம், அறிவதன் தெய்வம்
பழகிடும் தெய்வக் குமரா - அழகி
வள்ளிக் குறத்தி அவள் காலில்வீழ
எள்ளி நகையாரோ யாரும்? (41)
தந்தைக்கு இருதாரம், குழலூதி நின்று
விந்தை புரிந்த மாமற்கோ - சிந்தையில்
எண்ணி முடியாது, நினைத்தே தானிங்கு
கொண்டாயோ இருதாரம் நீ? (42)
12.11.15 அன்று எழுதப்பட்டது :
இன்றிலிருந்து கந்த சஷ்டி ஆரம்பம். சூரனை வென்று, வேலன் வெற்றிக் கொடி ஏற்றும் திருவிழா.
இந்த ஆறு நாட்களும், ஒவ்வொரு நாளும், அவன் அருளால், அவன் மேல் ஒரு பாடலாயினும் எழுத அனுக்ரஹம் வேண்டி, "அறுமுகன் பாமாலையில்" தொடர்கிறேன்.
ஒருமுகமாய் நினைத்தால் வருவாய்; வந்து
தரும்வரம் எல்லாம் தருவாய் - குருவாய்
அறுமுகம் காட்டும் முருகா வருவாய்,
உறுபதம் தருவாய் உவந்து (43)
13.11.15 :
இருமலர் பக்கம் நிற்க, வந்திங்கு
திருமுகம் காட்டாய் நீயே - முருகா!
மண்ணுண்ணும் மாயன் மருகா எனையே
மண்ணுண்ணும் முன்வந்து கா (44)
14.11.15:
மும்மலமும் போக்கும் முக்கண்ணன் மகனே
நிம்மதி இழந்தந்தழுது அரற்றி - விம்மும்
உன்மகனைக் காக்க வாராயோ நீயும்,
தன்வயமே கொண்டு இனி? (45)
15.11.15:
நான்மறை போற்றும் பொருளே, ஞானத்
தேன்நிறை வானத்தமுதே - ஈன்ற
தாயினும் பரியும் கனிவே, இந்தச்
சேயினைக் காத்து அருளே! (46)
16.11.15:
ஐங்கரன் தம்பி அழகா, கரிய
பைங்குழல் வள்ளிக் கணவா - மங்காப்
பேரொளி விரிக்கும் சுடரே, என்வினை
வேறொடு அறுத்து அருளே! (47)
17.11.15:
ஆறுமுகம் வந்து ஆறுதலைத் தந்து
ஏறுமுகம் வாழ்வில் காட்டாதோ - வேறு
போக்கிடம் உண்டோ எமக்கிங்கு உனையன்றி
சாக்கெதும் சொல்லாமல் வா! (48)
25.11.15
இன்று, கார்த்திகை. பெரிய கார்த்திகை. கார்த்திகை தீப நாள். அந்த சரவணனை நினைத்து, இன்றைய அறுமுகன் பாமாலையைத் தொடர்வோம்.
ஓராறு முகத்திலோர் முகமென்னைப் பாராதோ?
மாறாத பேரின்பம் தாராதோ? - பாராளும்
கந்தனே உந்தன் பதம் பணிந்தேன் என்னை
வந்துடன் சந்ததம் கா (49)
ஈராறு விழியிலோர் விழியென்னைப் பாராதோ?
பேறான பேறதுவும் தாராதோ? - வேறாரும்
பிறவாப் பெரும்பதமும் தருவாரோ உனையன்றி
மறவாமல் நீயென்னைக் கா (50)
ஈராறு கரங்களிலோர் கரமென்னை அணையாதோ?
நேரான வழியென்னை நடவாதோ? - சீரான
சிந்தையதும் சேர்க்காதோ? இக்கணமே அருளுவந்து
எந்தாய்நீ வந்தென்னைக் கா (51)
ஒளியுடைய திருமார்பும் வந்திங்கே தோன்றாதோ?
களிகூர என்முன்னே வாராதோ? - தெளிவையுமே
தாராதோ மனதிற்கே? உன்ரூபம் என்னெஞ்சு
சேராதோ சொல்லாய் முருகா (52)
சேவலுடன் மயிலதுவும் வேலுடனே வந்திங்குன்
ஏவலினால் எந்தனையே காக்காதோ? - பாவமெலாம்
பொடியாக்கி மயற்வெல்லாம் நீக்கியே இங்கென்னை
அடியேனாய் மாற்றியே கா (53)
திருவடிகளைப் பற்றி, சரணமென வந்தேனை
ஒருநொடியில் உன்பதமும் காக்காதோ? - குருபரனே!
மறவாமல் உன்னடியே பிடித்திட்டேன் நானிங்கு
பிறவாமல் எனைநீயும் கா (54)
15.12.15
இன்று, கார்த்திகை. இன்றைய அறுமுகன் பாமாலையைத் தொடர்வோம்.
அநேகமாக எல்லாருக்கும் தெரிந்திருக்கும்-விக்நேச்வரர் மதயானையாக வள்ளியைத் துரத்திக் கொண்டு வந்ததால் தான் அவள் ஸுப்ரம்மண்யரிடம் சேர்ந்தாள் என்ற கதை. இந்த இடத்திலே மூத்தது மோழையில்லை, காளைக்கு மேலே, மத்த கஜமே என்று அண்ணா ஸ்வாமி காட்டினார். வள்ளி சேரமாட்டேன் என்கிறாளே என்று தம்பிதான் அப்போது செயலில்லாமல் நின்றார். அப்புறம் தமையனாரைப் பிரார்த்தித்துக் கொண்டால்தான் இடையூறு நீங்கும் என்று மஹாசக்திமானான தேவஸேனாநாயகர் புரிந்து கொண்டார்;விக்நேச்வரரை ஸ்மரித்து வேண்டிக்கொண்டார். அவரும் உடனே தம்பிக்கு ஸஹாயம் செய்வதற்காக மத யானையாக வந்து வள்ளியை துரத்தியடித்து, தம்பியை அவள் சேரும்படிப் பண்ணினார். 'கைத்தலம் நிறைகணி'என்ற பிள்ளையார் வணக்கத் திருப்புகழில் இதைச் சொல்லித்தான் முடித்திருக்கிறது. அதிலே 'சிறு முருகன்'என்று சொல்லியிருக்கிறது. இதற்கும் முந்தி சின்னஞ்சிறு முருகனாக இருந்தபோதுதான் அவர் சூர ஸம்ஹாரமே பண்ணி, பிற்காலத்தில் 'ஸேநாநீநாம் அஹம் ஸ்கந்த:' (படைத்தலைவர்களில் நான் முருகன்) என்று கீதையில் கிருஷ்ணர்கூட சொல்லும்படியான கீர்த்தியடைந்தது. அப்படிப்பட்டவர் இப்போது நல்ல கட்டிளம் காளைப் பருவத்திலே ஒரு ஸாதாரண வேடப் பெண்ணை அடைய முடியாமல் செயலற்றுப் போயிருந்தார். அந்த அசக்த நிலையை வைத்துத்தான்- வயஸை வைத்தல்ல - 'சிறு முருகன்'என்று அருணகிரிநாதர் போட்டிருக்கிறார். அப்போது அவருக்குக் கார்யஸித்தி ஏற்படச் செய்த 'பெரும்' ஆள் - பெருமாள்- விக்நேச்வரர்தான்.
அதனால்தான் திருப்புகழ்களின் முடிவில் ஸுப்ரம்மண்யருக்கே உரியதாக: வருகிற 'பெருமாளே'என்ற வார்த்தையை இந்தத் திருப்புகழில் மட்டும் விக்நேச்வரருக்குச் சூட்டி முடித்திருக்கிறார். தம்பியையே இஷ்ட தெய்வமாகக் கொண்ட அருணகிரிநாதர் அவரைச் 'சிறுவராக்கி' அண்ணாவைப் 'பெருமாள்' என்று பெருமைப் படுத்துவது விசேஷம்!
- தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதியில் மஹா பெரியவா முருகன் பற்றிச் சொன்னது
அண்ணனின் உதவி இன்றியச் சூரனை
விண்ணில் முடித்த குமரா - நண்ணி
வள்ளியைக் கல்யாணம் பண்ணிடவே சிறு
பிள்ளையாய் ஆன முருகா ! (55)
("அக்குற மகளுடன், அச்சிறு முருகனை, அக்கண மணமருள் பெருமாளே" - திருப்புகழ்)
விசித்ரமாக, ஸுப்ரமண்ய ஸ்வாமி விவாஹத்துக்கு முந்தி ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டவர்!க்ருஹஸ்தாச்ரமத்துக்கு முந்தி ஸந்நியாஸாச்ரமம்!முதலில் ஸந்நியாஸம், அப்புறம் மஹாசக்திமானாக யுத்தம் செய்து சத்ரு ஸம்ஹாரம், அதற்கும் அப்புறம் அண்ணாவின் அநுக்ரஹ சக்தியைக்
கொண்டு
கல்யாணம்
என்று
ஸ்கந்த
சரித்ரம்
வேடிக்கையாக,
புதுமையாகப்
போகிறது.
-
தெய்வத்தின்
குரல்
ஆறாம்
பகுதியில்
மஹா
பெரியவா
முருகன்
பற்றிச்
சொன்னது
இல்லறம் விட்டு துறவறம் நாடுவார்
சொல்லரும் பேர்களிங்கே - சொல்லாய்
துறவறம் விட்டு நீ இல்லறம் கண்டனை
அறமிதோ குமர வேளே! (56)
"பதவிக்கு
வருவார்கள்.
ஆனால்
மஹா
பெரிய
பதவி
- தேவர்களுடைய
ஸேனைகளுக்கெல்லாம்
அதிபதியாக
இருக்கும்
பதவி-
இந்தக்
குமாரர்
ஸம்பவிக்க
வேண்டுமென்று
இவருக்காகவே
காத்துக்
கொண்டிருந்தது!ஜன்மிக்கிறபோதே
தேவர்களின்
ஸேநாதிபதி
அஸுரர்களிடம்
அடி
உதை
பட்டுச்
சொல்லமுடியாத
கஷ்டத்திலிருந்த
தேவர்கள்
இவர்
ஸம்பவித்தால்தான்
தங்களுக்கு
விடிவு,
விமோசனம்
என்று
காத்துக்
கொண்டு,
எதிர்பார்த்துக்
கொண்டு
இருந்த
நிலையில்
ஏற்பட்டது
அவருடைய
'ஸம்பவம்',
அதாவது
தோற்றம்"
மனு,
கினு
போட்டு
'அப்பாயின்ட்மென்ட்'என்றில்லாமல்
ஸகல
தேவ
ஸமூஹத்திற்கும்
ரக்ஷகனாக,
'கம்மான்டர்-இன்-சீஃப்'ஆகப்
பெரிய்ய்ய்ய
அப்பாயின்ட்மென்ட்டோடேயே
அவர்
பிறந்ததுதான்
குமார
ஸம்பவத்தின்
விசேஷம்!"
-
தெய்வத்தின்
குரல்
ஆறாம்
பகுதியில்
மஹா
பெரியவா
முருகன்
பற்றிச்
சொன்னது
வயது முதிர்ந்தபின் பதவியே வருதல்
இயல்பதாம் கந்த வேளே - வியப்புதான்
உதித்திடும் முன்னரே பதவியும் வந்ததே
மதித்துனை நாடி இங்கே! (57)
நீரிலே மூழ்க, நெருப்பும் அணைந்து
வீரியம் அற்று விடுமே - ஆறில்
சேர்ந்ததப் பொறியும் சரவணன் என்னுமோர்
பேர் கொண்டு வந்ததென்னே! (58)
தமிழ்நாட்டிலேயே பொதுவில் இவரை மகாவிஷ்ணுவுடன் சம்பந்தப்படுத்திப் பேசுவது அதிகம். 'மருகன்' என்றும் முருகனைச் சொல்கிறோமே, இது எதனால்? அவர் அம்பாளுக்கு சகோதரராக இருக்கிற மகாவிஷ்ணுவின் மருமகன் என்பதால்தான். 'மால் மருகன்' என்கிறோம். மருமகன் என்றால் மாப்பிள்ளை என்று அர்த்தம். மருமகப்பிள்ளை என்பார்கள். பூர்வத்தில் வள்ளி தேவசேனைகள் மகாவிஷ்ணுவின் புத்திரிகள்தான். அதனால் மாமாவான விஷ்ணு முருகனுக்கு மாமனாராகவும் இருக்கிறார். சிவனுக்கு மகன், மகாவிஷ்ணுவுக்கு மருமகன் என்ற பெருமை இவருக்கே இருக்கிறது. 'மருகோனே' என்று அருணகிரிநாதரும் சொல்வார்.
ஆனால், வடதேசத்தில் இந்த மாமனார் சமாசாரமே சுப்ரமணியருக்குக் கிட்டே வரக்கூடாது. அவர் இங்கே எந்நாளும் பிரம்மச்சாரித் தெய்வம்தான். சில இடங்களில் ஸுப்ரம்மண்யர் கோயிலுக்குள் ஸ்திரீகளை அநுமதிப்பதுகூட இல்லையாம். அத்தனை கடுமை. 'சுப்ரம்மண்யர்' என்ற பெயரும் வடதேசத்தில் பிரசித்தியில்லை. அங்கே அவரைக் 'கார்த்திகேய' என்றே சொல்வார்கள்.
- தெய்வத்தின் குரல் முதல் பகுதியில் மஹா பெரியவா முருகன் பற்றிச் சொன்னது
தென்னாட்டில் இருதாரம் கொண்டிங்கு மாப்பிள்ளை
என்னாகி நின்ற முருகா - மன்னும்
வடநாட்டில் கல்யாணம் ஆகாத பிள்ளையாய்
நடமாடி வருவ தேனோ? (59)
'ஸ்கந்த
பூர்வஜர்'என்பது
ஷோடச
நாமாவில்
கடைசி.
ஸ¨ப்ரஹ்மண்ய ஸ்வாமிக்குத் தமையனார் என்று அர்த்தம். முருகனுக்கு மூத்தவர். அதைவிட, 'முருகனுக்கு முன்னவர்'என்றால்
அழகாக
இருக்கிறது.
'பூர்வஜர்'என்றால்
முன்னால்
பிறந்தவர்.
'அக்ரஜர்'என்றும்
சொல்வதுண்டு.
ஷோடச நாமாக்களில் விக்நேச்வரர் சிவனுடைய புத்ரரென்றோ அம்பாளுடைய புத்ரரென்றோ காட்டப் பெயர் எதுவுமில்லை. அதாவது, இன்னாருக்குரப் பிள்ளை என்று பேரில்லை. இன்னாருக்கப் பதி என்றும் பேர் இல்லை. அவருக்கு பிரம்மச்சாரியாகப் பல உருவ பேதங்கள் இருக்கிற மாதிரியே பத்னி ஸமேதமாகவும் இருக்கின்றன. வல்லபை என்பவளோடு வல்லப கணபதியாக இருக்கிறார். ஸித்தி, புத்தி என்பவர்களுக்கு அவர் பதி என்றும் கேள்வி பட்டிருக்கலாம். ஸித்தி-புத்திகளிடம் அவருக்குப் பிறந்த புத்ரர்களும் உண்டு. அவர்களுக்குத் தகப்பனார் என்று தெரிவிப்பதாகவும் பேரைக் காணோம். ஆனால் பேர் வரிசையைப் பூர்த்தி பண்ணுமிடத்தில், மங்களமான ஸ்தானத்தில் 'ஸ்கந்தனுக்குத் தமையன்'என்று மட்டும் உறவு முறையைச் சொல்லும் ஒரு பெயர் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ஏன் அப்படி?
பொதுவாக, சின்ன வயஸுக்காரரொருத்தரை அவரைவிட வயசில் பெரியவரைச் சொல்லி, அவருக்கு இவர் இன்ன உறவு- பிள்ளை, மருமான், மாப்பிள்ளை, தம்பி என்று ஏதோ ஒன்று சொல்கிறதுதான் முறை. இங்கேயோ வித்யாஸமாகத் தம்பி பேரைச் சொல்லி, அவருக்கு அண்ணா என்று இருக்கிறது. ஏன் இப்படி?
ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் சரித்திரத்தோடு விக்நேச்வரருக்கு அவ்வளவு நெருங்கிய ஸம்பந்தம் இருப்பதால்தான்! தம்பியுடைய ஜனனம், விவாஹம், ஸந்நியாஸம் என்ற மூன்று ரொம்ப முக்யமான வாழ்க்கை நிகழ்ச்சிகளிலும் அண்ணன்காரருக்கு முக்யமான பார்ட் இருக்கிறது. அதனால்தான்!
- தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதியில் மஹா பெரியவா முருகன் பற்றிச் சொன்னது
'இன்னாரின் தம்பி' என்றேயிங்கிளையானை
என்னாளும் சொல்லி வருவார் - இன்னாள்,
'ஸ்கந்த பூர்வஜன்' என்றுந்தன் பேராலே,
விகடனைச் சொல்வ தேனோ? (60)
19.01.2016
இன்று, கார்த்திகை. கார்த்திகை தோறும் அறுமுகனைப் பாமாலையால் துதிப்பது அவன் அருளாலே, இன்றும் தொடர்கிறது.
வெற்றிவேல் வந்திங்கென் கல்மனம் கிழித்துள்ளே
உற்றிடும் உன்னையே காட்டாதோ - கற்றும்
உனையே நினையாத மனத்தேன் முருகா நீ
வினையேன் எனையா ளுவாய் (61)
ஞானவேல் வந்திங்கு "நானை"யே அழித்துடன்
மோனமே என்னுளே கூட்டாதோ - கானமாய்
ஓம்காரனே உந்தன் மயிலேறி வாராயென்
ஆங்காரம் பொடி யாகவே (62)
வீரவேல் வந்திங்கென் உள்ளத்தைப் பிளன்துள்ளே
ஏரகக் கொழுந்தையே காட்டாதோ - சூரனைப்
பொடிசெய்த முருகா நீவந்தென் சிரத்திலுன்
அடிவைத்து அருளு வாயே (63)
சக்திவேல் வந்திங்கென் புத்தியைக் களைந்தென்னுள்
பக்தியே உந்தன்மேல் கூட்டாதோ - முக்தியே
தருமுந்தன் பேர்சொல்ல வாராயோ மனத்துள்ளே
முருகா நீ கோலோச்சவே
(64)
கூர்வேல் வந்திங்கென் மார்பினைக் கிழித்துள்ளே
"பார்" என உன்னையே காட்டாதோ - சீர்கொண்ட
மணிமார்பா! நீ என்னைக் கனிவோடு சேர்த்துந்தன்
அணியாகக் கொண்டி டாயோ (65)
வடிவேல் வந்திங்கென் கடிவினை களைந்தென்னுள்
குடிவாழ் முருகனையே காட்டாதோ - அடியாரை
முப்போதும் காப்பாய்நீ கதிர்வேலா வந்தெனையும்
எப்போதும் காத்தி டப்பா (66)
24.01.2016
இன்று, தைப்பூசம். முருகனுக்கு உகந்த நாள்.
"ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்" என்று முருகன் அடியாரின் சத்சங்கம் கேட்ட வள்ளற்பெருமான் அந்த ஜோதியாய் ஆன நாள்.
அந்த அறுமுகனைப் பாமாலையால் துதிப்பது, அவன் அருளாலே, இன்றும் தொடர்கிறது.
சுடர்வேல் வந்திங்கென் அடர்வினை தகர்த்துள்ளே
படர்மால் மருகனையே காட்டாதோ - இடரெல்லாம்
உடைத்துடன் நீயென்னை மயிலேறியே இங்கு
கடைத்தேற்ற வந்தி டாயோ (67)
கதிர்வேல் வந்திங்கென் விதியினைக் கடிந்தென்தன்
மதியுறை அழகனையே காட்டாதோ - நதியணியும்
முக்கண்ணன் செல்வனே மயிலேறி நீயிங்கு
இக்கணம் வந்தி டாயோ (68)
முத்துவேல் வந்திங்கென் சித்தத்தை அறுத்துள்ளே
அத்தனே உன்னையும் காட்டாதோ - பித்தனாய்
பொருளாசை கொண்டேனை நீமாற்றி அடிதொழுமவ்
வருளாசை புகுத்தி டாயோ (69)
சிங்காரவேல் வந்தென் அங்கம் துளைத்தென்னுள்
தங்கிடும் வேளுனையே காட்டாதோ - எங்கும்
நிறைந்திடும் வேலா!
வந்தி்ங்கே என்னுள்ளக்
கறையெலாம் போக்கி டாயோ (70)
அழகுவேல் வந்திங்கென் பழவினை அழித்தென்னுள்
வழங்கிடும் வேலனையே காட்டாதோ - உழன்றும்
உனையென்றும் நினையா மனமிதையும் நீவாழும்
மனையாகக் கொண்டி டாயோ (71)
அருள்வேல் வந்திங்கென் மருள்தனை அறுத்துள்வாழ்
திருமால் மருகனையே காட்டாதோ - இருள்நீக்கும்
கந்தனே! உந்தன்பேர் செப்பிடவும் அறியாத
எந்தனையும் காத்தி டாயோ (72)
15.02.2016 : இன்று, கார்த்திகை.
******************************************
கார்த்திகை தோறும் அறுமுகனைப் பாமாலையால் துதிப்பது அவன் அருளாலே, இன்றும் தொடர்கிறது.
பச்சைமா மயிலே எந்தன் முருகனை
இச்சையுடன் நீ கொணராயோ - நச்சை
உண்டிவ்வுலகம் காத்தான் மகனை என்
கண்களால் காணவே இங்கு (73)
நீலமா மயிலே உந்தன் மேனியில்
கோலமா முருகனைக் கொணராயோ - சீலத்
திருமால் மருகனை, கண்களால் முழுதுமே
பருகியே மகிழ்ந்திட இங்கு (74)
அழகிய மயிலே, நீயுடன் வள்ளியாம்
குழலியின் கணவனைக் கொணராயோ - குழலூதும்
கண்ணனின் மருகனை, விழிகளால் அனுதினம்
உண்டு களிக்கவே இங்கு (75)
கண்கவர் மயிலேநீ சென்றுடன் கந்தனை
எண்ணம் இனிக்கவே கொணராயோ - மண்ணுண்ணும்
மாயனின் மருகனை, நாயகன் முருகனை
சேயிவன் காணவே இங்கு (76)
ஜொலித்திடும் மயிலேநீ களிப்புடன் கந்தனை
பொலியவுன் முதுகிலே கொணராயோ - ஒலித்திடும்
சதங்கைகள் கொண்டவன் பாதமே கண்டுநான்
நிதமுனைப் பாடவே இங்கு (77)
ஆடிடும் மயிலேநான் தேடிடும் குமரனை
ஓடியே கொணர்ந்துநீ வாராயோ - வாடிடும்
என்னுளம் மகிழவே வேலனை என்னிடம்
தந்திடுவாயோ நீ இங்கு? (78)
13.03.2016 : கிருத்திகை நாள்:
கூவிடும் சேவலே திருமால் மருகனையென்
ஆவியை என்னிடம் அழைத்துவா - தாவியே
உடல்மட்டும் வாழ்ந்திங்கு பயனேது வருவானோ
கடலெல்லை வாழுமக் குமரனே (79)
புலர்ந்திடும் பொழுதினை சொல்லிடும் சேவலே
அலர்கதிர் ஞாயிறும் அயர்ந்திடும் - நிலவவன்
உள்ளத்தில் வந்திங்கு உறையானோ கருணையின்
வெள்ளமே பாய்ச்சி என்னுள் (80)
கொண்டை அணியுறப் பொலிந்திடும் சேவலே
தண்டை அணியுறப் பொலிவானைக் - கொண்டுவா
இதயத்தில் வந்திங்கு நிலையானோ உமையவள்
சுதனவன் வந்து என்னுள் (81)
குமரனின் கொடியிலே ஒளிர்ந்திடும் சேவலே
அமரர்கள் நாதனை அழைத்துவா - சமரிலே
சூரனை வென்றுலகம் காத்தானை நிகரிலா
வீரனை என்முன் இங்கே (82)
கந்தனின் அருகிலே மிளிர்ந்திடும் சேவலே
பந்தள மன்னனின் அண்ணனை - எந்தையை
நொடியிலே நீயுமே அழைத்துவா நானவன்
அடிபணிந்துய்ய வென்றே (83)
குகனவன் வேலையை முடித்திடும் சேவலே
தகப்பன்சாமியைக் கூட்டிவா - அகமெலாம்
உறைபவன் அவனையென் எதிரிலே கண்டுளம்
நிறைந்தவன் பதமலர் அடையவே (84)
குகனவன் பதமலர் ஜொலித்திடும் தண்டையே,
அகமமர் முருகனைக் கண்களால் - சுகமுற
புறத்திலும் காணவே சொல்லிடாய் வள்ளியாம்
குறத்தியின் காதிலே மெல்லவே(85)
அறுமுகன் கால்களில் ஒலித்திடும் தண்டையே
உறுபதம் எடுத்தவன் கொடுத்திட - சிறுவழி
செய்திடாய் பதமலர் உறவலோ உனக்குமே
மெய்தவம் ஏதிலேன் எனக்குமே (86)
சரவணன் பதத்திலே விளங்கிடும் தண்டையே
அரனவன் மகனுமே என்னையே - தரணியில்
அணைத்தருள் அளித்திருள் கிழித்திட ஒலித்தருள்
இணைப்பதமலர் தனைச் சேரவே (87)
முருகனின் அழகிலே ஒளிர்ந்திடும் தண்டையே
குருவவன் காதிலே சொல்லிடாய் - அருகிலே
சீடனாய் கொண்டெந்தன் செவியிலே மந்திரம்
வேடச்சி கணவனும் ஓதவே (88)
ஷண்முகன் நடக்கையில் ஒலித்திடும் தண்டையே
பண்ணுடன் அவனைநான் பாடவே - நண்ணிநீ
தாளமே போட்டிடாய் வேலனைத் தந்திடாய்
வேளையீ தவனையே சேரவே (89)
வள்ளியின் கணவனைத் தழுவிடும் தண்டையே
விள்ளொணாத் துயரிலே வாடிடும் - பிள்ளையென்
இதயமே கண்டவன் செவியிலே ஓதிடாய்
நிதமுமே என்னுளம் வாழவே (90)
07.05.2016 : கிருத்திகை நாள்
தண்டையணிந்த பதத்திலென் மனமமிழ்ந்து
அண்டர்கோன் அரசுடன் கூடாதோ - கண்டுளம்
உருகியே நின்றிடக் கற்றிலேன் என்னையும்
முருகா நின்தாளிணை சேர் (91)
முத்துச் சலங்கை அணிந்த நற்பதத்திலென்
சித்தமே சென்றுடன் கூடாதோ - நித்தமும்
உன்நாமம் ஜபமெனக் கொண்டிலேன் என்னையும்
சண்முகா நின்தாளே சேர் (92)
ரத்தினக் குறடணிந்து ஜொலிக்கும் பதமென்னையே
பித்தனாய் ஆக்கியே பார்க்காதோ - அத்தனே
பற்றியுன் பதமுறக் கற்றிலேன் என்னையும்
பற்றியுன் பதமிங்கு சேர் (93)
வண்ணச் சாந்துடன் திகழுமுன் பதத்திலென்
எண்ணமே சென்றிங்கு இணையாதோ - திண்ணமாய்
உன்னை மனத்திலே இருத்தவே அறிவிலேன்
என்னையும் நிந்தாளில் சேர் (94)
அழைக்குமுன் வந்தருள் புரியுமுன் பதத்திலென்
குழையாத மனமும்தான் இழையாதோ - பிழைவாழ்வை
மெய்யெனக் கொண்டவன் என்னையும் உன்னருள்
கைகொடுத்துன் தாளில் சேர் (95)
மயில்மீதுத் தாவி அமர்ந்திடும் பதத்தையே
பயின்றெனதுள்ளமும் பருகாதோ - துயிலாழ்ந்து
இருக்குமென் மனத்தையே பிடித்திழுத்தழுத்தியுள்
உருக்கியே உன்தாளில் சேர் (96)
03.06.2016 : கிருத்திகை நாள்:
சூரனை அழித்திட்ட பாதமும் அழகின்பேர்
மாரனை பழித்திட்ட காந்தியும் - வீரனே
என்றும் என்னுளம் நிற்கட்டும் உன்னழகை
என்றும் பருகட்டும் கண்கள் (97)
முருகா என்னும்பேர் சொல்லிடவும் சொல்லிநிதம்
திருநாமம் கேட்கும்போதழுதிடவும் - குருநாதா
இருக்கட்டும் எந்தன்வாய் எப்போதும் உன்பெருமை
விரிக்கட்டும் வேறொன்றும் இலாது (98)
குகன்நாமம் கேட்பதுவும் அவன் கோவில் மணிச்சத்தம்
உகப்பதுவும் பெருமைசெவி பருகுவதும் - தகப்பனுக்கு
ஓதியவன் காதைசெவி மடுப்பதுவும் அன்றியிங்கு
சேதியெதும் கேளாதே செவியே (99)
குமரனவன் மேனியதை அலங்காரம் செய்துமணம்
கமழ்சந்தனப்பூச்சு செய்ததனை - அமுதமென
நாசிவழி பருகிடவும் நாடிசுத்தி வந்திடுமே
காசினியே கேட்டிடுவாய் உண்மை! (100)
குருபரனின் கோவிலதை சுற்றுவதே வேலையதாய்
திருவடியார் பாதமதைப் பற்றுவதே - ஒருதொழிலாய்
கொண்டுவிட மாறிவிடும் வினைகளெலாம் இங்குநிதம்
கண்டுயிதைச் சொன்னேன் உலகீரே! (101)
ஐம்பொறியும் குருபரனைப் பற்றிவிடப் பற்றுவிடும்
அம்புவியும் நித்தமுமே வாழ்த்தவரும் - சம்புமகன்
பதமலரைப் போற்றிநிதம் உள்ளவர்க்கு இல்லையிங்கு
நிதமழிக்கும் கவலையெனும் நோய் (102)
01.07.2016 : கிருத்திகை நாள்:
இன்றைய கிருத்திகை நாளிலே, இந்த ஆறு பாடல்களுடன், கிருத்திகை தோறும் அந்த முருகன் மேல், குமரன் மேல், என் குருநாதன் மேல் கவனம் செய்து வந்த "அறுமுகன் பாமாலை" த் தொகுப்பு நிறைவடைகிறது.
இந்த ஆறு பாடல்களில், அந்த அறுமுகனையும், அவனது ஜோதி வடிவையும், அவனது அழகிய பொற்பாதங்களையும் வணங்குவதுடன், அவன் நின்று அருளும் அவனது அறுபடை வீடுகளையும் சேர்த்தே ஸ்மரிக்க வைத்த அவனது கருணையை என்னென்று சொல்வது?
திருப்பரங்குன்றில், தெய்வானையோடு
அருள்
தந்து நின்ற - முருகா!
நிதமருளும் உனது பதமுமென் மனதில்
நிதம் வாழ வரமும் தருவாய் (103)
சூரனைப் போரில் வென்று செந்தூரில்
பாரறிய நின்ற வீரா! - கோரும்
அன்பருக் கென்றும் அருளும் பதமென்தன்
நெஞ்சினில் நிற்க வருவாய் (104)
கோபமே
கொண்டு பழனியில் நின்று
தாபமே
தீர்த்த தேவே – தீப
ஜோதியில்
நிற்கும் கந்தனே உன்னை
ஓதிடும்
ஞானமும் தா! (105)
குருவாக ஸ்வாமி மலைமேலமர்ந்தாய்
உருவமும் அருவும் இல்லாய் - பெருகும்
அமுதாக உந்தன் இருதாளிணையை
எமதாவியோடு
சேராய்! (106)
வள்ளியைக் கொண்டு தணிகையில் நின்று
வெள்ளமாய் அருளைப் பொழிவாய் - கள்ளா!
நான்மறை போற்றும் பாதமென் நெஞ்சில்
கோன்பதித் தாடி நிற்பாய் (107)
பழமன்று ஔவைப் பாட்டிக்குதிர்த்து
பழமுதிர் சோலை நின்றாய் - அழலாய்
எரிகின்ற எந்தன் நெஞ்சத்தில் வந்து
பரிவோடு காட்சி தருவாய் (108)