குற்றமே நிறைந்த நெஞ்சு எல்லாரிடத்தும் குற்றம் காணுவது இயற்கைதான்! அதனால்தான், அந்தப் பெரியவாளிடமும், என்னால் மேலும் மேலும் குற்றம் காண முடிகிறது. போன வருடம், பெரியவாளிடம் ஒரு ஆறு குற்றங்கள் கண்டுபிடித்து, "குற்றப் பாமாலை" சாற்றியிருந்தேன்.
சற்றேறக்குறைய ஒரு வருஷம் கழித்து, மற்றுமொரு ஆறு குறைகள் கண்டுபிடித்து, குற்றப் பாமாலை part 2 என்று, மேலும் ஒரு ஆறு குற்றங்களை - ஆக மொத்தம் - பன்னிரெண்டு குற்றங்களைப் பெரியவா மேல் சுமத்தி இருக்கிறேன்.
பக்தர் குழாம் கூடி, அடியேனை அடிக்க வருமுன், அந்தப் பெரியவாளிடமே ஓடிப்போய்த் தஞ்சமடைது விடுகிறேன்!!
பெரியவா சரணம்.
நாளையும் நாளை மறு நாளும் அனுஷக் கொண்டாட்டங்கள்! இந்த அனுஷ வைபவத்தின் பொழுது, பெரியவாளைப் பற்றி ஸ்மரிக்கும்போது, பெரியவாளிடம் ஏதும் குறை இருக்கிறதோ என்று யோசனை செய்யத்தோன்றியது. சர்வேஸ்வரனிடம் குறை இருக்குமா என்ன?
"ம்ம்..இருக்கே" என்று தோன்றியது. ஆறு குற்றங்கள் மனதில் தோன்றின. அவையே இங்கே, பாமாலையாக, "குற்றப் பாமாலையாக" மலர்ந்திருக்கின்றன.
பெரியவா கடாக்ஷம்.
வஞ்சமாய்ப் புகழ்ந்த வார்த்தை படித்த உம் அடியார் தம்மை
தஞ்சமாய் நீரே கொண்டு ஆண்டருள் புரிவீர் ஐயா!
16.07.2016: குற்றப் பாமாலை : Part 2 : குற்றங்கள் 7 முதல் 12 வரை:
ஏழாம் குற்றம் : பரமேஸ்வரனாய்
இருந்தும், கடமை தவறுதல்
ஈஸ்வரன் நீயே என்பார் உலகெலாம் ஆளும் அந்த
ஸாஸ்வத தெய்வம் நீயே என்றுமே சொல்வாருன்னை!
ஈஸ்வரன் என்றால் பூத - ப்ரேத பைசாசம் எல்லாம்
பரிவாரமாகக் கூட இருந்திடும் என்பார் ஐயா!
மனிதரில் விலக்காம் அந்த கணங்களை அடியாராக
இனிதுடன் ஏற்றாய் நீயும்! உவப்புடன் சுற்றி வந்தாய்!
உளமெலாம் தீமை ஒன்றே கொண்டவன் என்பதால் நான்
அளவிலே சற்றும் குறையா பூத பேய்
தானே அன்றோ?
பூதபேய் எல்லாம் இங்கே உன்னுடை
கணங்களென்றால்
பேதமே செய்து என்னை மட்டுமே
விட்டதேனோ??
கணங்களின் தலைவனாம் நீ, அடிமையாம்
என்னை மட்டும்
தனதெனக் கொள்ளா நின்றாய்! தவறன்றோ
இதுவும் ஐயா?
எட்டாம் குற்றம் : சன்னியாஸி நடித்தல், மறைத்தல்
காமனை எரித்த அந்த சிவனுமே ஜபிக்குமந்த
ராமனும் நீயே என்பார், சத்தியம் நீயே என்பார்!
சத்தியம் அன்றி வேறொர் வார்த்தையே அறியாய் என்பார்
நித்தமும் சொன்னதெல்லாம் சத்தியம் ஆகும் என்பார்!
வந்திடும் பக்தர் கூட்டம் அத்தனை பேரின் உள்ளம்,
சிந்தனை முற்றும் நன்றாய் அறிந்தவோர் தெய்வம் என்பார்!
எங்கிலும் நிறைந்தோன் நீயே, யாவையும் அறிந்தோன் நீயே
மங்கலம் எல்லாம் சேர்க்கும் கருணையாம் தெய்வம் நீயே
தெய்வமாய் இங்கு நீயே இருந்துமே என்றும் தன்னை
முழுதுமாய் மறைத்து நின்றாய்! மனிதனாய் நடித்து நின்றாய்!
"பரமனே நீதான்" என்று பக்தர்கள் சொல்லும்போதும்,
"அரனவன் அருள்வான்" என்பாய்! "அன்னையின் அருளால்" என்பாய்!
"காமாக்ஷி அருளால்" என்பாய்! "சங்கரன்
செயலால்" என்பாய்!
ஏமாற்றி மனிதன் போல “நானெதும்
அறியேன்” என்பாய்!
தன்னையே ஒளித்து நன்றாய் நாடகம் நடித்து விட்டாய்!
பின்னுமே மனிதன் போல வார்த்தைகள் சொல்லிவிட்டாய்!
பொய்யேதும் இன்றி உண்மை வாழ்க்கையே வாழ்ந்து காட்டி
மெய்யதே ஆனோய் நீயே! செய்தது சரியோ ஐயா??
ஒன்பதாம் குற்றம் : நல்லோர்க்கு வேதனையும், தீயோர்க்கு நல்வாழ்வும்
தருதல்
இதிகாச புராணமெல்லாம் முழுவதும் படித்துப்
பார்த்தேன்!
மதியதும் மழுங்கிப் போகும் அளவிற்குக்
குழம்பிப் போனேன்!
ப்ரஹலாதன் உந்தன் பக்தன்! நாளெலாம் நாமம் சொன்னான்!
இரண்யாக்ஷன் பொல்லாத் தீயோன்! கடவுளும் நானே என்றான்!
பக்தனோ நாளும் பொழுதும் துன்பமே அடைந்து வந்தான்!
யுக்தியாய்க் கொடுமை செய்த தீயோனோ நன்றாய் வாழ்ந்தான்!
அரசனாய், அமரர் போற்ற, என்றுமே வாழ்ந்து பின்னர்
நரசிம்ம மூர்த்தி கையால் நிமிடத்தில் மாண்டு போனான்!
பாண்டவர் இறுதிப் போரில் வென்றனர் என்றாலும்மே
ஆங்கவர் வாழ்வில் மிக்கத் துன்பமே மிகுந்ததம்மா!
கௌரவர் தரும வாழ்வு வாழ்ந்தவர் அல்லர் எனினும்
பாரதப் போரது வந்த நாள்வரை நன்கே வாழ்ந்தார்!
நல்லவர் தாழ்வும் மிக்கத் தீயவர் உயர்வும் ஏனோ?
சொல் எனக் கேட்டால், நீயும், “விதியினோர் செயலாம்’ என்பாய்!
படைப்பது நீயே அன்றோ? அழிப்பதும் நீயே அன்றோ?
படைத்த இவ்வுலகைக் காக்கும் கடமையும் உனதே அன்றோ?
விதியெலாம் தெய்வம் உந்தன் விளையாட்டுத் தானே இங்கே?
கதிதந்து காத்தல் செய்யாய்! விதிதன்னைச் சொல்வதேனோ?
நாங்களெல்லாமும் உந்தன் விளையாட்டு பொம்மைதானோ?
பாங்குடன் ஆடும் பொம்ம லாட்டமும் எங்கள் மீதோ?
அன்னையாய் அருளும் நீயே, “விதிபோல நடக்கும்” என்றால்,
உன்னையே கேட்பார் யாரோ? இதுமிகக் குறையே அன்றோ?
பத்தாம் குற்றம் : குழப்புதல்
உலகத்து குரு நீர் என்பார், சொல்வதே வேதம் என்பார்!
பலகற்றோர் எல்லாம் உந்தன் பாதமே பணிவார் என்பார்
அளப்பறும் பாதம் காட்டி, களிப்புறும் பாதை காட்டி
தெளிவினைத் தருதல் இங்கே குருவினோர் பணியாம் என்பார்
“அவன் அருளாலே நாமும் அவன் தாளைப் பணிவோம்” என்பாய்!
“சிவன் அடி பணிந்தால் உடனே அவன் அருள் தருவான்” என்பாய்!
"குரு பதம் பணிந்தால் இங்கே அருளது கிடைக்கும்" என்பாய்!
"அருளது கிடைத்தால் அந்த குருபதம் கிடைக்கும்" என்பாய்!
ஒன்றுமே புரியாமல்தான், குழம்பியே போனேன் நானும்!
என்னதான் சொல்லுகின்றாய் என்றுடன் நினைத்துப் பார்த்தேன்!
குரு உந்தன் பதம் பணிந்தால், உன்னருள் கிடைக்கும் ஆனால்
அருளது கிடைக்க முதலில் உன் பதம் பணிய வேண்டும்!
என்னுடை முயற்சியாலே நடப்பது ஏதும் உண்டோ?
உன்னுடை அருளேதன்றி நடப்பது ஏதும் உண்டோ?
உன்பதம் பணிய முதலில் உன்னருள் வேண்டுமென்றால்,
என்றுதான் பணிவேன் உன்னை? என்றருள் பெருவேனிங்கு?
தெளிவினைத் தேடி நானும் உம்மையே தேடி வந்தேன்!
களிப்புடன் நீயும் என்னைக் குழப்பியே சிரித்து நின்றாய்!
நீயுமே சொல்லும் வார்த்தை என்னையே குழப்பி விட்டால்,
நானிந்த நானிலத்தில் எங்கினிச் செல்வேனப்பா?
பதினொன்றாம் குற்றாம்
: பக்தர்களுக்கு அருள்வதில் பேதம் பார்த்தல்
காஞ்சியின் தாய்
நீ என்பார்; பக்தரின் தந்தை என்பார்!
வாஞ்சையாய் அருளும்
குருவும் தெய்வமும் நீயே என்பார்!
குழந்தைகள் அழும்
நேரத்தில், தாய்க்கெதும் பேதம் உண்டோ?
அழுதிடும் சேயைக்
காக்க, வருபவள் தாயே அன்றோ?
மக்களைக் காக்கவென்று
வருபவன் தந்தை அன்றோ?
சிக்கலைத் தீர்த்து
அன்பாய் அணைப்பவன் தந்தை அன்றோ?
இருள்தனை நீக்கித்
துயர மருள்தனைப் போக்கி நாளும்
அருள்தனைக் கொடுத்து
பாதை தருவது குருவேயன்றோ?
விதிதனை மாற்றித்
துன்பச் சதியெலாம் நீக்கி இன்பக்
கதியதைச் சேர்த்து
நன்மைபுரிவதும் தெய்வம் அன்றோ?
குழந்தைகள் நடுவில்
தாயும் பேதமே பார்ப்பதுண்டோ?
மழலைகள் நடுவில்
தந்தை பட்சமே பார்ப்பதுண்டோ?
சீடர்கள் தம்மில்
குருவும் பேதமே பார்ப்பதுண்டோ?
நாடுமோர் தெய்வம்
பார பட்சமே பார்ப்பதுண்டோ?
உம்மையே நினைந்திருக்கும்
பக்தர்கள் அனைவருக்கும்
தம்மிச்சையாகச்
சென்று அருள்புரிந்தீரே ஐயா!
தந்தையாய்த் தாயுமாகிக்
குருவுமாய் தெய்வம் தானாய்
எந்தையே எல்லாமானாய்!
அழ ஏனோ வைத்தீர் ஐயா?
எப்போதாவதும்மை நினைத்திடும் சேயன் என்று
எப்போதும் அழவே என்னை வைப்பதும் சரியோ ஐயா?
பனிரெண்டாம் குற்றம்
: இந்த பூத உடலை விட்டு விட்டது
தெய்வமும் கலியுகத்தில் அர்ச்சையாய் நிற்கும் என்பார்
தெய்வமே கோவில் தோறும் நின்றருள் செய்யும் என்பார்
அர்ச்சையாய் நிற்கும் தெய்வம் நடமாட வந்ததென்பார்!
அற்புத தெய்வம் நீயே நடந்திங்கு வந்தாய் என்பார்!
இத்தனை தீனர் நாங்கள் இருந்துமே எம்மை விட்டுப்
பித்தரைப் போல எம்மைப் புலம்பவே விட்டு விட்டு
இத்தரை மீது உந்தன் உடல் விட்டு விட்டாயப்பா!
பத்தரைப் புலம்பவிட்டு, உடல்விட்டு நின்றாயப்பா!
“பெரியவா சர்வவ்யாபி, சர்வஞ்ஞர்” என்று சொல்வார்!
விரியுலகெங்கும் இங்கே நீயுளாய் என்றும் சொல்வார்!
இவ்வுடல் ஒருநாள் அழியும் இதிலென்ன வருத்தம் என்பார்!
இவ்வுடல் விட்டாலும் நீ இங்குளாய் என்றும் சொல்வார்!
கனவிலே வந்தாய் நீயே என்றுமே சொல்வார் உண்டு
நனவிலும் எதிரே வந்தாய் என்றுமே சொல்வார் உண்டு
தீயவர் கனவில் என்றும் நீ வருவாயோ அப்பா?
தீயவர் எதிரே வந்து அருள்தருவாயோ அப்பா?
நிச்சயம் மாட்டாய் நீயும்! தீமையே நிறைந்த நெஞ்சம்
இச்சையே கொளினும் வாராய்! நிச்சயம் அருளே தாராய்!
ஆயினும் இங்கு நீயே உடல்கொண்டு வாழ்ந்த காலம்
பேயினும் பேயாம் நெஞ்சம் கொண்டவன் நானும் கூட
உன்னையே வந்து பார்க்கும் யோகமே இருந்ததப்பா!
என்னையே நீயும் பார்க்கும் யோகமே இலையென்றாலும்
உன்னருட்கோலம் காணும் வரமொன்று இருந்ததப்பா!
உன்னெழில் முகமே காணும் அருளொன்று இருந்ததப்பா!
இன்னுடல் நீத்து நீயும் உலகெங்கும் நிறைந்தும்கூட
இன்முகம் எதிரே காண, நெஞ்சமும் ஏங்குதப்பா!
தீமையே உருவாய் வந்தேன் எனினும் உன் அடியானன்றோ?
சேமமே தருமுன் கோலம் மறைத்ததும் குறையே அன்றோ?
பலஸ்ருதி:
உன்குறை என்று
இங்கே இயம்பிய குறைகள் யாவும்
என்குறை அன்றி
வேறு உன்குறை என்றொன்றுண்டோ?
தன்னிடம் சினந்து
பேசி ஓடிடும் குழந்தை கண்டால்
இன்மொழி பேசித்
தாயும் ஓடிவந்தணைப்பளன்றோ?
உன்னிடம் குறைகள்
கண்டு பேசிடும் செய்கை எல்லாம்
என்னை நீ அரவணைக்கச்
செய்திடும் முயற்சி அன்றோ?
வஞ்சமாய் உன்னை இங்கு புகழ்ந்த இவ்வார்த்தையெல்லாம்
செஞ்சொலால் மாலை
என்று ஏற்று நீ அருள்வாயப்பா!