Tuesday, September 20, 2016

21.09.2016 : கிருத்திகை நாள் : நித்தமு மடிபணிந்துற்றிடு மடியவர்

21.09.2016 : கிருத்திகை நாள்

இன்று, கிருத்திகை.

கிருத்திகை தோறும், அந்த முருகனுக்குப் பிடித்த திருப்புகழின் மெட்டிலே, அந்தக் குமரனின் ஞானமே வடிவாய் வந்த என் உம்மாச்சித் தாத்தாவின் மேலே ஒரு பாடல் பாடுவது,  அவர் அருளால் நடந்து கொண்டிருக்கிறது.


இன்றைய பாடல் : "கைத்தல நிறைகனி" மெட்டில்.

"தத்தன தனதன தத்தன தனதன
 தத்தன தனதன  - தனதானா"

இன்றைய கிருத்திகைத் திருநாள் பாடல், பெரியவா பொற்பாத கமலங்களுக்கு, சமர்ப்பணம்.
*******************************************

நித்தமு மடிபணிந்துற்றிடு மடியவர்
சித்தம துறைஎழில் - சிவரூபா!      

பக்தியொ டுனதடி பற்றிடு மெவரையும்
முக்திகொ டருளிடு - உமைபாலா!

பங்கயப் பதமலர் நொந்திட கடிதுவன்
தெங்களுக்கருளிடும்  -  குருனாதா!

எக்கண முனைநினை புத்தியொ டுனதடி
உற்றிடு நலமருள் யதிராஜா!


அற்பனென் உளமதை சற்குரு உறைதிரு
நற்பத மெனகதி தருவாயே!

கற்பக மெனவொரு அற்புத மதுசெயும்
பொற்பத மலரதை அருள்வாயே!

Wednesday, September 7, 2016

அனுஷப் பாடல் : 8.9.16 : பதமென்னைச் சேராயோ?

08.09.2016 : அனுஷ தினம்: 
*******************************

இன்றைய அனுஷ தினத்திலே, பெரியவாளிடம் அடியேன் தினமும் கேட்கும் கேள்விகளைப் பாடலாக, அடியார் குழாத்துடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பெரியவாளின் அடியார்கள் பெரியவாளிடம் பல விதத்திலே பக்தி செய்வார்கள்.

பிரதோஷ மாமா போன்ற அத்யந்தத் தொண்டர்கள் பெரியவாளே உயிர் மூச்சாய் வாழ்ந்தார்கள். கணேச மாமா போன்றவர்கள், பெரியவாளைப் பற்றிப் பேசும்போதும், அவர் பற்றி, அவர் செய்தன பற்றி நடித்துக் காட்டும்போதும், பெரியவாளாகவே மாறி விடுகிறார்கள்.

எனது அருமை நண்பர்களான சாணு அண்ணாவிற்கும், கார்த்தி அண்ணாவிற்கும் "பெரியவா" என்றாலே நா தழுதழுக்கும். கண் கலங்கும்.

"தெய்வத்தின் குரல்" படிப்பதற்காகவே தமிழ் கற்று, பெரியவா ஸ்மரணையே வாழ்வாய்க் கொண்டிருக்கும் கீதாம்மா, அனுதினமும் பெரியவா பாடலால் ஒரு பக்தி இயக்கமே நடத்திக் கொண்டிருக்கும் இந்துமதி ஐயர் போன்றவர்களின் பக்தியை என்ன சொல்வது?

இன்னும் கோடானகோடி பேர்கள் பெரியவாளின் அத்யந்த பக்தர்களாய், அணுக்கத் தொண்டர்களாய் இருக்கிறார்கள். பெரியவா சொன்ன வழியிலே நடந்து, வேத ரக்ஷணம் முதல், வாழ்வின் ஒவ்வொடு செயலிலும் பெரியவா காட்டிய பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறார்கள்.

அடியேனுக்கும் இந்த பக்தர்களின் பக்தியிலே, கோடியில் ஒரு பங்காவது வரட்டும்.

அடியேன் செய்வது பக்தியா என்றே இன்னும் தெரியவில்லை...!!

இங்கே நான் செய்வதெல்லாம், பெரியவாளிடம் பேசிக் கொண்டிருப்பதுதான். அவரைக் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பேன். "என்னையும்  பிரயோஜனம் இல்லாம இப்படி வைச்சுரிக்கியே" என்று திட்டிக் கொண்டிருப்பேன்.

வேதம் கற்காமல், சமஸ்க்ருத மொழி கூட அறியாமல், சிகை வைத்துக் கொள்ளாமல், பெரியவா சொன்ன ஆயிரமாயிர உபதேசங்களில் ஒரு உபதேசத்தையும் ஒழுங்காகப் பின்பற்றாமல், "நானும் பெரியவாளின் பக்தன்" என்று சொல்லிக்கொண்டு, வேஷம்தான் போட்டுக் கொண்டிருக்கிறேன்.

இருந்தாலும், "அப்பா, எனக்கும் அருள் பண்ணேன்" என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

"இப்படி என்னை வைச்சிருக்கியே, என்னைக் கொஞ்சம் ஒழுங்காப் பண்ணேன்; பண்ணினா, உனக்கு என்ன குறைஞ்சு போயிடும்?" என்று தினமும் அவருக்கு "அர்ச்சனை" பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

சமயத்தில், பெரியவாளின் படங்களிலே அவரது சிரிப்பைப் பார்க்கும்போது, "என் ரெண்டும் கெட்டான் நிலையைப் பார்த்துதான் சிரிக்கிறார்" என்று நிச்சயமாகத் தோன்றும்.

"என் நிலைமையைப் பார்த்தா, உனக்கு சிரிப்பு வரதோ?" என்று அவரையேதான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

பெரியவா சரணம், சரணம்.
************************************************************


பதமென்னைச் சேராயோ?
***********************************



உயிர்கொண்டு வந்திங்குப் பிறந்துமோர் அறிவின்றி
உயிர்நீயே என்னுமொரு உணர்வின்றி வளர்ந்த சிறு
பயிரிதனைக் கண்டதனால் வந்ததொரு சிரிப்பிதுவோ?
மயல்நீக்க வாராயோ? பதமென்னைச் சேராயோ? (1)

வளர்கின்ற வேளையிலும், உனையிங்கு அறியாமல்
தளர்நடையே போட்டிருந்தேன்; தயையேதும் அறியாயிக்
களர்நிலத்தைக் கண்டதனால் வந்ததொரு சிரிப்பிதுவோ?
இளநிலவைச் சூடியவா! பதமென்னைச் சேராயோ? (2)

விடலையாய் மலர்ந்திருந்தும், உன் நாமம் கேட்டிருந்தும்
இடம்தேடி வாராத, உன் முறுவல் பாராத,
மட நெஞ்சைக் கண்டதனால் வந்ததொரு முறுவலிதோ?
விடமுண்ட கண்டா நின் பதமென்னைச் சேராயோ? (3)

கல்லூரிப் பருவத்தில் கால் போன போக்கெல்லாம்
நில்லாமல் போயிருந்தும் உன்னிடமே வாராத
பொல்லாத மடமையினை கண்டதனால் வரும் சிரிப்போ?
எல்லோர்க்கும் எளியவனே! பதமென்னைச் சேராயோ? (4)

வேலைக்கு சேர்ந்து  குறி பணமென்று ஆகி மனம்
பாலைபோலாகி குளிர் தருவுன்னைச் சேராத
ஆலைக்கரும்பு இதைக் கண்டதனால் வரும் சிரிப்போ?
காலைக் கதிரொளியாய்! பதமென்னைச் சேராயோ? (5)

மணமாகி சம்சார பந்தத்தில் அகப்பட்டுன்
குணமொன்றும் நினையாது பதமிங்கு சேராது
பிணம்போன்று வாழ்வோனைக் கண்டதனால் வரும் சிரிப்போ?
குணக்கடலோய்! பரிந்திங்குன் பதமென்னைச் சேராயோ? (6)

வயதேறி வரும் நாளில் நரையோடு திரைகூடும்
பயமிங்கிருந்தாலும் உனைவந்து சேராத
மயல்கொண்ட மனம்தன்னைக் கண்டதனால் வரும் சிரிப்போ?
தயை கொண்டு பாராயோ? பதமென்னைச் சேராயோ? (7)

பிணி மூப்பு வந்திங்கென் அறிவழியும் உன்பாதம்
பணியாத உடலழியும் அவ்வேளை அருள்கூர்ந்து
தணிவோடு சிறியேனை உன்பங்கயப் பாத
அணியாகக் கொள்வாயோ? பதமென்னைச் சேர்ப்பாயோ? (8)

யமபடர்கள் வந்தென்னை வாவென்று சொலும்வேளை
‘நம’வென்று ஓர்பூவை உன்பாதம் சேராத
குமதிக்கும் தயைகூர்ந்து தாயாக மடிதந்துத்
தமதாகக் கொள்வாயோ? பதமென்னைச் சேர்ப்பாயோ? (9)

மரணத்தின் வாசலிலே உயிர்செல்லும் அவ்வேளை
அரனே நீ வந்திந்த உயிருந்தன் மடிகொண்டு
சிரம்கோதி கரம்வைத்து “அஞ்சல்” என்றருளாயோ?
தரமொன்றும் இல்லானை, உன்பாதம் சேராயோ? (10)