Friday, March 17, 2017

18.3.2017 : அனுஷ நன்னாள் : சல்லடை ஏழால்

18.3.2017 : அனுஷ நன்னாள் : சல்லடை ஏழால் 



இன்று, அனுஷ நன்னாள். பெரியவாளின் பக்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி, அனுஷ ஜோதியை ஆராதிக்கும் நாள். உம்மாச்சித் தாத்தாவைக் கொண்டாடி மகிழும் நாள்.

பக்தர்களுக்கு மகிழ்ச்சியான நாள்தான்.

பக்தி ஏதும் இல்லாமலேயே, "பக்தன்" என்று தன்னை நினைத்துக் கொள்பவனுக்கு? பக்தன் போல நடிப்பவனுக்கு?

"நானும் பக்தந்தானா?" என்று சந்தேகத்திலேயே இருப்பவனுக்கு?

பக்தி ஏதும் இல்லாமல், பக்தன் போல் நடித்து, பக்தி இருப்பது போல் நடந்து கொள்ளும் அடியேனுக்கு, "என்று எனக்கு முழுதான பக்தி வரும்?" என்று அழுது அரற்றவென்றே ஏற்பட்ட நாள் என்றுதான் தோன்றுகிறது.

பொள்ளாச்சி ஜயம் என்ற அத்யந்த பக்தைக்கு ஒரு முறை பெரியவா சொல்லியிருக்கிறார் : "நான், என்னிடம் எல்லாரையும் நெருங்க விடுவது இல்லை. என் பக்தர்களை ஏழு சல்லடை இட்டுச் சலித்தாக்கும் தேர்ந்தெடுக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறார்.

"உண்மையிலேயே இவனுக்கு பக்தி இருக்கிறதா" என்று ஏழு விதமான சல்லடையிலிட்டுச் சலித்துத் தேர்ந்தெடுக்கிறார் பெரியவா என்றால், அந்தச் சல்லடை பக்கம் கூடப் போகத் தகுதியில்லாத அடியேன் கதிதான் என்ன?

பெரியவா மேல் முழுமையான பக்தி ஏதும் இல்லாவிட்டாலும், "பக்தி பண்ண வேண்டும்" என்ற நினைவைக் கொடுத்த அந்தப் பெரியவாளேதான் பக்தியையும் கொடுக்க வேண்டும்.



பெரியவா சரணம்.


“சல்லடை ஏழால் எந்தன் பக்தரை சலித்தெடுப்பேன்”
   என்று நீ சொன்னாய்; அந்தச் சல்லடை ஏதோ ஒன்றில்,
புல்லனாம் என்னையிட்டு சலித்திவன் சரியேயில்லை
   என்று நீ சொன்னால்கூட மகிழுவேன் ஆனால் என்னை
சல்லடை ஏழில் ஒன்றில் இடவுமே கூடாதென்று,
   அருகதை ஏதும் இவனுக்கில்லவே இல்லையென்று
சொல்லி நீ நின்றால் இந்த அடிமை நான் என்ன செய்வேன்?
   யாரிடம் அழுது நிற்பேன்? உன்பதம் எவ்வாறடைவேன்?

கடையனிற் கடையன் அடியேன் உன்பதம் சேர்வதெந்தன்
   முயற்சியாலவதொன்றோ? உன்னருள் அன்றி இங்கே
கடைத்தேரும் வழியும் உண்டோ? “சேய் இவன் பாவம்” என்று
   உன் மனம் நினைத்தாலன்றி, எனக்கினி கதியும் உண்டோ?
விடையேறும் அத்தன் வடிவே! அன்னையும் ஆகி நின்றோய்!
   கனிவுடன் என்னைப் பார்த்து, புன்னகை முறுவல் பூத்து,
கடைக்கண்ணால் அருளை வார்த்து, பரிவுடன் என்னை ஏற்று,
   பதமலர் அருள்வாயப்பா! அருள்மழை பொழிவாயப்பா! 

No comments:

Post a Comment