Friday, March 31, 2017

01.04.2017 : கிருத்திகை நன்னாள் : ஒருகணமு முனதுபதம் தேடிச் சேவித் தறியேனே

01.04.2017 : கிருத்திகை நன்னாள்

நேற்றும், இன்றும் கிருத்திகை.  ஒவ்வொரு கிருத்திகை நாளிலும்,   அந்த குருபரனேயான பெரியவாளின் மேல் ஒரு பாமாலையை,  குருபரன் மகிழ்ந்த திருப்புகழின் ஒரு சந்தத்திலே புனைந்து அணிவிப்பது, அந்தப் பெரியவாளின் கருணையினால், இன்றும் தொடர்கிறது.

"ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே
     உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே"  என்று வரும் 
பாடலின் சந்தத்திலே, இன்றைய பாடல். 
தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான
     தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான    என்ற சந்தம்.




ஒருகணமு முனதுபதம் தேடிச் சேவித்  தறியேனே
  உனதுவுரை எனதுவழி யாகப் போகக்  கிடையேனே

திருவருளை முழுமனது மாகத் தேடிச் சுகியேனே
  குருபரனை எனதுவுயி ராகப் பாவித் துணரேனே

அகமதனி லுனையறியு மார்கம் ஏதும் தெரியேனே
 உயிரதனி லுனையெழுதி நாளும் வாழக் கிடையேனே
 
புவியதனி லுனதுபத மேவும் சீலம் அருள்வாயே

  உனதருளி லனுதினமும் வாழும் கோலம் அருள்வாயே 

Friday, March 17, 2017

18.3.2017 : அனுஷ நன்னாள் : சல்லடை ஏழால்

18.3.2017 : அனுஷ நன்னாள் : சல்லடை ஏழால் 



இன்று, அனுஷ நன்னாள். பெரியவாளின் பக்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி, அனுஷ ஜோதியை ஆராதிக்கும் நாள். உம்மாச்சித் தாத்தாவைக் கொண்டாடி மகிழும் நாள்.

பக்தர்களுக்கு மகிழ்ச்சியான நாள்தான்.

பக்தி ஏதும் இல்லாமலேயே, "பக்தன்" என்று தன்னை நினைத்துக் கொள்பவனுக்கு? பக்தன் போல நடிப்பவனுக்கு?

"நானும் பக்தந்தானா?" என்று சந்தேகத்திலேயே இருப்பவனுக்கு?

பக்தி ஏதும் இல்லாமல், பக்தன் போல் நடித்து, பக்தி இருப்பது போல் நடந்து கொள்ளும் அடியேனுக்கு, "என்று எனக்கு முழுதான பக்தி வரும்?" என்று அழுது அரற்றவென்றே ஏற்பட்ட நாள் என்றுதான் தோன்றுகிறது.

பொள்ளாச்சி ஜயம் என்ற அத்யந்த பக்தைக்கு ஒரு முறை பெரியவா சொல்லியிருக்கிறார் : "நான், என்னிடம் எல்லாரையும் நெருங்க விடுவது இல்லை. என் பக்தர்களை ஏழு சல்லடை இட்டுச் சலித்தாக்கும் தேர்ந்தெடுக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறார்.

"உண்மையிலேயே இவனுக்கு பக்தி இருக்கிறதா" என்று ஏழு விதமான சல்லடையிலிட்டுச் சலித்துத் தேர்ந்தெடுக்கிறார் பெரியவா என்றால், அந்தச் சல்லடை பக்கம் கூடப் போகத் தகுதியில்லாத அடியேன் கதிதான் என்ன?

பெரியவா மேல் முழுமையான பக்தி ஏதும் இல்லாவிட்டாலும், "பக்தி பண்ண வேண்டும்" என்ற நினைவைக் கொடுத்த அந்தப் பெரியவாளேதான் பக்தியையும் கொடுக்க வேண்டும்.



பெரியவா சரணம்.


“சல்லடை ஏழால் எந்தன் பக்தரை சலித்தெடுப்பேன்”
   என்று நீ சொன்னாய்; அந்தச் சல்லடை ஏதோ ஒன்றில்,
புல்லனாம் என்னையிட்டு சலித்திவன் சரியேயில்லை
   என்று நீ சொன்னால்கூட மகிழுவேன் ஆனால் என்னை
சல்லடை ஏழில் ஒன்றில் இடவுமே கூடாதென்று,
   அருகதை ஏதும் இவனுக்கில்லவே இல்லையென்று
சொல்லி நீ நின்றால் இந்த அடிமை நான் என்ன செய்வேன்?
   யாரிடம் அழுது நிற்பேன்? உன்பதம் எவ்வாறடைவேன்?

கடையனிற் கடையன் அடியேன் உன்பதம் சேர்வதெந்தன்
   முயற்சியாலவதொன்றோ? உன்னருள் அன்றி இங்கே
கடைத்தேரும் வழியும் உண்டோ? “சேய் இவன் பாவம்” என்று
   உன் மனம் நினைத்தாலன்றி, எனக்கினி கதியும் உண்டோ?
விடையேறும் அத்தன் வடிவே! அன்னையும் ஆகி நின்றோய்!
   கனிவுடன் என்னைப் பார்த்து, புன்னகை முறுவல் பூத்து,
கடைக்கண்ணால் அருளை வார்த்து, பரிவுடன் என்னை ஏற்று,
   பதமலர் அருள்வாயப்பா! அருள்மழை பொழிவாயப்பா! 

Sunday, March 5, 2017

5.3.2017: நேற்று கிருத்திகை: இன்பமருள் சோதிமுகம் .. ... அதுதேடி

5.3.2017: நேற்று கிருத்திகை:
*********************************************
ஒவ்வொரு கிருத்திகைப் பொழுதையும் ஒட்டி, திருப்புகழ்ச் சந்த்த்திலே அந்த குருபரனேயான பெரியவா மேலே ஒரு பாடல் பாடுவது, அவர் அருளாலே இந்தக் கிருத்திகையிலும் தொடர்கிறது.


பெரியவா சரணம்.
தந்ததனத் தானதனத் ...... தனதான
தந்ததனத் தானதனத் ...... தனதான
......... பாடல் .........
("உம்பர்தருத் தேநுமணி" எனத் தொடங்குல் பாடலின் சந்தம்)
இன்பமருள் சோதிமுகம் .. ... அதுதேடி
கண்ணருளும் ஞானமுதச் .. .. சுவைநாடி
பக்தரவர் ஓடிவரும்.. .. திருநாளில்
வந்துஅவர்க் காகவருள் .. ..தருவாயே
சுத்தமறை ஓதுமுரைப் .. .. பொருளோனே
அன்பர்மனத் தாமரையில்.. .. அமர்வோனே
கெஞ்சுமிவன் வேதனையும்.. .. அறியாயோ?
கஞ்சமலர் பாதமதும்.. .. தருவாயோ?

Saturday, February 18, 2017

18.02.2017 நாளை (19.2.17) அனுஷ நன்னாள்....

18.02.17 அனுஷப் பாடல்:

நாளை (19.2.2017) , அனுஷ நன்னாள். சென்னையில், சேத்துப்பட்டில், மேயர் ராமனாதன் ரோட்டில், சங்கராலயாவில் மஹாபெரியவாளுக்குப் புஷ்பாஞ்சலி நடை பெறுகிறது. 121 பக்தர்கள் ஒருசேர ஸ்ரீருத்ர ஜபம் செய்து, சமஷ்டியாய் அர்ச்சனை செய்து அந்த மஹாபுஷ்பங்களாலே சதுர்வேத பாராயணங்களுடன், ஸ்ரீசரணாளுக்கு, புஷ்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

இந்த புஷ்பாஞ்சலி நடைபெறும் சமயத்தில் அடியேன் மனதிலே இன்றே ஒரு சிறிய புஷ்பாஞ்சலி செய்து பார்த்தேன்.

அழகிய மலர்கள் கொண்டு அந்த அழகிய தாளிணைகளுக்கும், புஷ்பம் போன்ற மேனிக்கும், பூஜை செய்து மனதிலே கண்ட தரிசனத்தை, இங்கே பாடலாய் வடிக்கப் பார்க்கிறேன்.

பெரியவா சரணம்.

****************************************************************************

தாமரை புஷ்பம் கொண்டு தாமரை மலர்த்தாள் தன்னை
சாமமும் போற்றி நிற்பேன் சரணமே தருவாயென்பேன் (1)

மல்லிகை மாலை உந்தன் தோளிலே சாற்றி சித்தம்
சில்லெனக் குளிர உந்தன் கண்களே கண்டு நிற்பேன் (2)

ரோஜாவால் மாலை செய்து துறவிகள் அரசனாம் என்
ராஜாவாம் உனக்குச் சூடி அழகினைப் பருகி நிற்பேன் (3)

முல்லையால் செய்த மாலை கழுத்தினில் சாற்றி இன்பத்
தெல்லையும் இதுவேயென்று உன்னையே பார்த்திருப்பேன் (4)

அரளியால் பந்தலிட்டு அரனுனை ஏற்றி வைத்தென்
சிரமதை உந்தன் தாளில் வைத்து நான் வாழ்ந்திருப்பேன் (5)

சண்பகப் பூவால் உந்தன் மார்பினில் மாலையிட்டுக்
கண்களும் குளிர உன்னை இன்புறக் கண்டு நிற்பேன் (6)

நந்தியாவட்டை மாலை நந்தீசன் உனக்கு சாற்றி
மந்திரம் உந்தன் நாமம் சொல்லியே வாழ்ந்திருப்பேன் (7)

குவளையால் மாலை செய்து மதிமுகம் ஒளிரச் சாற்றி
கவலையாம் நோயும் தீர்ந்துன் தாளிணை சேர்ந்திருப்பேன் (8)

நறுமலர் யாவும் தோற்கும் வாசனை மலர்த்தாளுக்கு
சிறுமலர் தொடுத்த மாலை சூட்டியென் மனம் களிப்பேன் (9)

மலர்களெல்லாமும் தோற்கும் மென்மையே வடிவாம் பாதம்
சிலமலர் கொண்டு பூஜை செய்து நான் களித்திருப்பேன் (10)

வாசனை மலர்கள் கோடி மாலையாய்த் தொடுத்தெடுத்தென்
ஈசனாம் உந்தன் பூஜை செய்வதே வாழ்வாய்க் கொள்வேன் (11)

பூவினால் கோர்த்த மாலை, மாலையில் வாடுமென்று
பாவினால் மாலை கோர்த்து, மேனியில் சாற்றி நிற்பேன் (12)

நாவினால் பாடி உன்னை மனதிலே எண்ணி உந்தன்
ஏவலே நாடி நிற்பேன்; பேரருள் தேடி நிற்பேன் (13)

காவலா காப்பாயென்றுன் தாளதே சிரமேற் கொண்டு
ஆவலாய் ஓடி வந்துன் சரணமே நாடி நிற்பேன் (14)

Sunday, February 5, 2017

5.2.2017 : கிருத்திகை: எக்கணமு மெய்த்தவநி னைப்பிலமர் வித்தகனை

5.2.2017 : கிருத்திகை:
************************************

ஒவ்வொரு கிருத்திகை தோறும், அந்த வடிவேலனேயான பெரியவாளின் மேலெ, அந்தக் கந்தன் புகழ் பாடும் திருப்புகழின் ஒரு சந்தத்திலே ஒரு பாடல் பாடுவது என்பது, இந்தக் க்ருத்திகையிலும், பெரியவாளின் அனுக்ரஹத்தில் நடந்திருக்கிறது.

பாடலைப் பெரியவாளின் சரணத்தில் அர்ப்பணிக்கிறேன்.

இன்றைய பாடல், "பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்" என்ற பாடலின் மெட்டின் அடிப்படையில், வருகிறது.

"தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன ...... தனதான" என்ற சந்தம்.

********************************************************************

எக்கணமு மெய்த்தவநி னைப்பிலமர் வித்தகனை
நிர்மலனைப் பற்றிமிக விரைவாக (1)

பங்கயம லர்க்கரமு வந்தருளு கொற்றவனை
பித்தனவ நொத்தவனின் கழலேகி (2)

பக்தியொடு உந்தனிரு பங்கயம லற்கழலில்
என்புருக உள்ளமதும் நிலையேனோ? (3)

பற்றழிய சிட்சைதரு ரட்சகனில் பற்றிருகி
மற்றழிய உன்னினைவில் இறவேனோ? (4)

முந்தைவினை முற்றழிய பொற்கழலைப் பற்றிவரு
மந்தகனும் கட்டழியப் பெறுவேனோ? (5)

அன்புருவும் அன்னையென வந்துமனப் பந்தலதில்
தங்கிதரு மந்தசுகம் அடைவேனோ? (6)

எந்தையுனை சிந்தையினில் கொண்டுருகி இவ்வுலகில்
உந்தனிணை பத்மபதம் - உறுவேனோ? (7)

Saturday, January 7, 2017

08.01.2017 : கிருத்திகை நாள் : "பத கமல மீது சற்று"

08.01.2017 : கிருத்திகை நாள்





இன்று, கிருத்திகை. அது மட்டுமல்லாது, January - 8th - இன்று தான் - பெரியவா தனது பூத உடலை உகுத்த நாள்

ஒவ்வொரு கிருத்திகையிலும், அந்த ஸ்வாமிநாதனின் பெயர் தாங்கி வந்த சிவரூபனாம் பெரியவாளின் மீது, அந்த ஸ்வாமிநாதனுக்கு உகந்த திருப்புகழின் ஓர் சந்தத்திலே, ஒரு பாடல் பாடும் திருப்பணி, இன்றும்  பெரியவாளின் அருளால், தொடர்கிறது.

இன்று, "சரண கமலா லயத்தை அரை நிமிஷ நேர மட்டில்.." என்ற திருப்புகழ் சந்தத்திலே , ஒரு பாமாலை.

பெரியவா சரணம்.


தனதனன தான தத்த தனதனன தான தத்த
     தனதனன தான தத்த ...... தனதான

பத கமல மீது சற்று மன மதனை நானும் வைத்து
     உனை தினமு மேது திக்க - அறியேனே

சத முனது தாளை உற்று கதி அடைய வேகம் கற்று
     உன தருளை நாட சித்த - மடைவேனோ

முக கமல ஜோதி கண்டு இத மிதென நாளும் வந்து
     கர மருளு மாசி கொண்டு - பெருவாழ்வு   

இக பரமு மாக நித்ய சுக மதுவு மேகொ டுத்து
     நித முனையு மேசு கிக்க - அருள்வாயே

மதி அதனை சூடு கொண்டை கரை யதுவு மான தொண்டை
     விதி யதனை சாடு மெந்தை - சிவரூபா

அதி வினைக ளேது மிங்கு சதி புரித லேத டுத்து
    கதி உனது பாத பத்மம் -  தருவாயே

மரு ளதனை யேய கற்றி, அரு ளதனை யேபு கட்டி
    திரு வடியை யேகொ டுத்து - பெரியோனே

சிறு வனிவ னாசை கண்டு,   உரு குமன மேபு குந்து,

    தரி சனமு மேவு கந்து  - தருவாயே

Monday, December 12, 2016

12.12.2016 : கார்த்திகைப் பண்டிகை. திருவண்ணாமலை தீபம்

12.12.2016 : கார்த்திகைப் பண்டிகை. திருவண்ணாமலை தீபம்
**************************************************************

இன்றுபெரிய கார்த்திகை. திருவண்ணாமலையிலே தீபத் திருவிழா.

ஒவ்வொரு கிருத்திகையிலும் அந்த நடமாடும் தெய்வத்தின்மேல், திருப்புகழ் மெட்டிலே ஒரு பாடல் பாடி, அவர் பாதத்திலே சமர்ப்பிப்பது, அவரருளாலே, இன்றும் தொடர்கிறது.

இன்றைய புயல் நாளிலே, சென்னையும் அதனைச் சுற்றிய இடங்களும் பெரும் சேதமுறாமல், பெரும் அழிவுகள் நிகழாமல் காக்கவேண்டுமெனப் ப்ரார்த்தனையோடு, பாடலை சமர்ப்பிக்கிறேன்.

*******************************************************************************

"பாதிமதி நதி" மெட்டு.

தான தனதன தான தனதன
தான தனதன ...... தனதான



வேத முறைதிரு நாத னவனுரு
ஓத மகற்றிடு - சிவநேசா!

வாத மவைதனை வேத னையைமிக
ஓட அருள்திரு - சிவபாலா!

போக மதில்மன மூழ்கி அழுதிடு
சோக மயல்தனை - களைவோனே

வேக நடையுடன் நாடு முழுதிலும்
பாதம் பதிவிடு - குருநாதா!

நாம மொருமுறை ஓது மடியவர்
வாழ்வி லொளியருள் - பெரியோனே

காம னுயிர்தரு மாது உறைதிரு
காஞ்சி வளநகர் - உறைவோனே

நாளு முனைமற வாத நினைவொடு
நானு மவனியில் - உன்தாளே

பாடும் பணியதை நாளும் நடத்திட
தேடும் பதமதைத் - தருவாயே

ஓல மிகுந்திடு ஞால மிதை விட
சீலக் கனிமுகம் - தருவாயே

கால னெனைக்கொடு போகு நொடியெனை
வேக மணைத்தருள் - புரிவாயே!