02.11.2016 : அனுஷ உத்ஸவம்
*********************************************************
இன்று, உலகெங்கும் அனுஷ வைபவம் கொண்டாடப்படுகிறது.
இந்த அனுஷ தினத்திலே, அந்த அனுஷ நாயகனுக்கு, கண்ணனுக்குப் பெரியாழ்வார் பாடியது போல் ஒரு பல்லாண்டு பாட வேண்டுமென்று தோன்றியது.
அவாவினைக் கொடுத்து, அந்த ஆசை நிறைவேற சந்தமும் வார்த்தையும் கொடுத்தருளிய பெரியவாளின் பதமலருக்கு இப்பாடலை சமர்ப்பிக்கிறேன்.
****************************************************************************
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு அடியாரெம் நெஞ்சம் என்னும்
இல்லத்தில் இறை நீயும் சுகமாக வாழவே பல்லாண்டு சொல்லி நின்றேன்
(1)
நினது சீரடியார்கள்
குழுவதில் நின்னோடு பிரிவின்றி பல்லாண்டு
உனையிங்கு எமக்கென்று
தருமுந்தன் நாமத்தோடாயிரம் பல்லாண்டு
தனையேதம் அடியார்கள்
தமக்குடன் தரும்பாத மலரோடு பல்லாண்டு
வினையெலாம் தகர்க்குமத்
தண்டமும் காவியும் உடன்வரப் பல்லாண்டு (2)
மனதிலே உனையன்றி
வேறேதும் நினைவின்றி ஆயிரம் பல்லாண்டு
எனதென்று ஏதுமிங்கில்லாமல்
உன்னோடு கலந்திங்கு பல்லாண்டு
நானென்ற எண்ணமிங்கற்றுவுன்
அடியோடு ஆயிரம் பல்லாண்டு
வானுறு தேவர்கள்
வண்ணமாய் ஈசனாம் உன்னோடு பல்லாண்டு (3)
காணுமவ்விடமெலாம்
சங்கரன் தாளையே கண்டிங்கு வாழுமடியீர்!
வேணுவை இசைக்குமவ்
வித்தகன் போற்றிடும் சங்கரன் அவதாரமாய்
தாணுமாலயனுமாய்
நின்றவன் சேவடி துணையெனப் பல்லாண்டு
ஊணுடல் தேய நடந்த
அத் தெய்வத்திற்கேயனப் பல்லாண்டு (4)
எந்தை தாயோடு அவர்தந்தை தாயுமாய் தன்பாத சேவகமே
எந்தையே தந்திங்கு
எனையாண்ட அன்பினைப் பாடியே பல்லாண்டு
பிந்தியும் மகன்,
மகள், அவர்குலச் சிறாரென என்றேன்றுமென்றென்றுமாய்
சிந்தையில் தேவனாம்
அவனையே வைத்திந்தக் குலம்வாழப் பல்லாண்டு (5)
வேதம் நிலைபெறவென்றிங்கு
வாழ்பவன் பேர் சொல்லிப் பல்லாண்டு
ஆதவனென்றிங்கு
இருள் தகர்த்தாளுவான் புகழ்பாடிப் பல்லாண்டு
போதம் அருளிட வந்ததோர்
ஞானச் சுடருக்குப் பல்லாண்டு
நாதன் அவன் நினைவாகவே
வாழ்ந்திடும் தொண்டர்க்குப் பல்லாண்டு (6)
பக்தர்க்கதிபதி
அவன் வாழும் காஞ்சியம்பதிக்கொரு பல்லாண்டு
திக்கெலாம் போற்றிடும்
அண்டர்கோன் அவனுடை தண்டமும் பல்லாண்டு
சக்தியும் சிவமுமாய்
நின்றிடும் அவன் ருத்திராக்ஷமும் பல்லாண்டு
துக்கமெலாமிங்கு
நீக்கிடும் தெய்வமாக் குரலுக்குப் பல்லாண்டு (7)
ஜகத்குருவென்றிந்த
உலகெலாம் போற்றிடும் திருவுக்குப் பல்லாண்டு
அகத்துளே வந்துனின்றருளாட்சி
செய்திடும் குருவுக்குப் பல்லாண்டு
புகலென அவன் பாதம்
பற்றினோர்க்குடனருள் சித்தர்க்குப் பல்லாண்டு
ககனமும் வானமும்
புவனமும் வாழ்த்துமோர் முக்தர்க்குப் பல்லாண்டு (8)
வெந்துயர் அறுத்திடும்
சீலனை சுமந்திட்ட பல்லாக்கு பல்லாண்டு
அன்புரு வாழ்ந்த
அம்மேனா அதற்குமோர் ஆயிரம் பல்லாண்டு
எந்தையும் தாங்கலாய்க்
கைப்பிடித்தேகிய வண்டியும் பல்லாண்டு
சுந்தரன் பொற்பதம்
அதனையே தாங்கிய இடமெலாம் பல்லாண்டு (9)
கண்ணெச்சில் நேராமல்,
எத்தீங்கும் வாராதென் ஐயர்க்குப் பல்லாண்டு
பண்ணெடுத்தாயிரம்
பாடலால் காப்பிட்டு ஆயிரம் பல்லாண்டு
விண்ணவர் கோனுக்கு,
எம்முடை அமுதத்திற்காயிரம் பல்லாண்டு
எண்ணிடும் எண்ணமெலாம்
நிறைந்தானுக்கு நித்தியம் பல்லாண்டு (10)
நற்றுணை ஆகிடும்
ரக்ஷையாம் குருபாத ரக்ஷைக்கோர் பல்லாண்டு
பற்றினை நீக்கியே
பரமனைத் தரும்பாதக் குறடுக்கோர் பல்லாண்டு
உற்றெதிர் வரும்துன்பம்
களைந்தருள் பாதுகை ஆயிரம் பல்லாண்டு
கற்றிலா மூடர்க்கும்
அருள்ஞானப் பாதுகை புகழ்பாடிப் பல்லாண்டு (11)
பல்லாண்டு பாடியே
பரவுவோர் அவரொடும் ஆயிரம் பல்லாண்டு
நல்லறம் ஆகுமாம்
ஐயனைத் தொழுதிடல்; அவருக்கே பல்லாண்டு
சொல்லறம் ஆகிடும்
“பெரியவா” என்றவோர் சொல்லுக்கே பல்லாண்டு
எல்லோரும் குருபதம்
உற்றிங்கு வாழவே ஆயிரம் பல்லாண்டு (12)