Saturday, February 20, 2016

பெரியவாளும் ஐயப்பனும் : 17.02.2016 சபரி மலை தரிசனம்:

17.02.2016 சபரி மலை தரிசனம்:

இன்று, சபரி மலையில் ஐயப்ப தரிசனம். குத்துக்காலிட்டமர்ந்து அருள்பாலிக்கும் இந்த தெய்வத்தின் அற்புத தரிசனம் கிடைக்கும்போதுதான் மனதில் கேள்வி: ஐயப்ப ஸ்வாமியைப் போல், குத்துக்காலிட்டமர்ந்து அருளும் தெய்வம் வேறு ஏது?


பெருமாளுக்கு நின்ற திருக்கோலமும், அமர்ந்த திருக்கோலமும்கூட உண்டு என்றாலும், கிடந்த திருக்கோலம் பிரசித்தம். சிவ பெருமானுக்கோ பலவிதமான திருக்கோலங்கள். முருகப் பெருமானுக்கு, நின்ற கோலம் அழகு. கணபதியோ அமர்ந்து அருளும் தெய்வம். பார்வதியும், சரஸ்வதியும், லஷ்மியும் அமர்ந்தும், நின்றும் அருள்செய்கிறார்கள்.

ஆனால், இப்படி, ஐயப்பன் போல், குத்துக்காலிட்டு அமர்ந்து அருள்பாலிப்பது வேறு யாரும் இல்லையோ? என்று மனதில் தோன்றியது.


சட்டென்று, இதோ இருக்கிறதே - என்று பட்டது. இந்த தெய்வத்தின் favorite sitting posture குத்துக்காலிட்டு அமருவது இல்லையோ?























பெரியவாள் என்னும் தெய்வம் இல்லையோ அந்த தெய்வம்? ஐயப்பனை தரிசனம் எய்யும்போது, அபிஷேகம் கண்டபோது, எங்கள் ஐயனும் இப்படித்தானே அமருவார் என்று மனதில் பட்டதை, அந்த சந்தோஷத்தை, ஒரு பாடலாய்ப் பதிவு செய்கிறேன்...

இருகால் குத்திட்டமர்ந்த நின் கோலம் கண்டு
உருகாத மனமுமிங்குளதோ என்னையனே
இருவிழியால் உன்னழகை அள்ளி அள்ளிநிதம்
பருகுமருள் தந்துன் பதமலர் அருள்வாய் அப்பா

இதனை, facebookல் பகிரும்போது, Facebook நண்பர் பெரியவாளையும் 
ஸ்வாமி ஐயப்பனையும் வைத்து ஒரு சிலேடை எழுதச் சொன்னார்...

அடியேனுக்கு சிலேடையெல்லாம் ஒன்றும் தெரியாது...தோன்றியதை 
அப்படியே இங்கே கொடுக்கிறேன்..

இருவரும், அரன்மகன். இருவரும் மாயையாம் புலிவென்று, அறுபகையாம் 
அரக்கியை அழித்தவர்கள். இருவரும், குத்துக்காலிட்டு அழகானதொரு 
அரும்பெரும் கோவில் அமர்ந்து, சரணம் என்று வருபவர்களுக்கு 
அருள்பவர்கள்...இருவரையுமே "ஐயன்" என்று சொல்வார்கள்...


அரன்மகனை, மாயைப் புலிவென்று அறுபகையாம்

அரக்கிதனையழித்து பெருங்கோவிலமர்ந்தானை- சரணமென
குத்துக்காலிட்டமர்ந்து அருள்வானை ஐயனென்பார்

வித்தகரும் அவனை உணர்ந்து

Tuesday, February 2, 2016

அனுஷ தசக ஸ்லோகம் 02.02.2016

02.02.2016 அனுஷ தினம்
*************************

நாளை, அனுஷம். 

பெரியவாளை ஸ்மரணை பண்ணும்போது, 'முதாகராத்த மோதகம்' என்று ஆதி சங்கரர் பிள்ளையார் மேலே செய்த ஸ்தோத்திர மெட்டிலே பாட வேண்டும் போலத் தோன்றியது. 

பாடலை, பெரியவா சரணங்களுக்குக் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். 





அனுஷ தசக ஸ்லோகம்
-------------------------------------------

நிலாவணிந்த நாயகன், கலாதரன், க்ருபாகரன், 
உலாவரும் கதிர் என, நடைநடந்த நாயகன் (1)

உயர்நலம் அருள்பவன், தயையதே நிறைந்தவன்
மயக்கிடும் இசையதாய், மிளிர்ந்திடும் மஹேஸ்வரன் (2)

புனல் மதி விடை சடை, சூலம் ஏதும் இன்றியே
அனல் என அழற்றும் துன்பம்  நீக்கிடும் தயாபரன் (3)

காவியே உடுத்தி வந்த கயிலை நாத சங்கரன்
மேவிடும் துயர் எலாம் களைந்து நிற்கும் தாயவன் (4)

சாம கான லோலன் நாக பூஷணன் திகம்பரன்
வாம பாகம் கௌரி இன்றி மண்ணில் வந்த சுந்தரன் (5)

நான்கு வேதம் வாழ வந்த நாதன் போதம் தீர்ப்பவன்
ஊன் உடம்பு கொண்டு நம்மை ஏய்த்து நின்ற மாயவன் (6)

குருஅருள் கனிந்து தெய்வக் குரலை அள்ளித் தந்தவன்
உறும் துயர் களைபதம் வழங்கி நிற்கும் தூயவன் (7)

காஞ்சித் தாயுமாகி வந்து காட்சி தந்து காப்பவன்
வாஞ்சையாக சேயர் எம்மை வீடும் கொண்டு சேர்ப்பவன் (8)

தண்டம் கொண்டு அண்டம் காக்கும் புண்டரீகப் பாவனன்
கண்டவர் பணிந்து  போற்றும் இன்ப ஜோதி சூரியன் (9)

காம மோக மாயையெல்லாம் நீக்கவந்த வேலவன்
நாமம் சொல்லக் காக்கும் சந்திர சேகரேந்த்ர மங்கலன் (10)

பலஸ்ருதி:
*************

நீ இனிக்க, பா இனிக்க, நெஞ்சினிக்க உன்னையே
நாவினிக்க பாடல் சொல்ல நன்மை யாவும் சேருமே