25.08.2016 : கண்ணன் மீண்டும் வந்தனன்
********************************************************************
இன்று, கிருஷ்ண ஜயந்தி. எல்லார் இல்லங்களிலும் குழந்தைக் கண்ணன் தன் குஞ்சுக் கால்கள் வைத்து வரும் நாள்.
எங்கள் இல்லத்திலும் இன்று கண்ணன் வந்தான். வெண்ணெய் உண்டு மகிழ்ந்தான்.
கண்ணன் வரும் இந்த நாளில், கீதை சொல்லி ஜகத்குருவாய் நின்ற அந்த மாயன், தனது ஸ்வரூபம் ஒளித்து, அப்படியே opposite ஆக வந்து, தான் சொன்ன கீதை வழியே தானே வாழ்ந்து காட்டியதைப் பாட வேண்டும்போல் தோன்றியது.
வெண்ணெய் திருடி உண்டவன், உணவும் உட்கொள்ளாது பட்டினி கிடந்து, விரதம் இருந்து இந்த உலகு இன்புறச் செய்ததைச் சொல்லவேண்டும் என்று தோன்றியது.
பார்த்தனுக்குத் தேரோட்டியவன் கால் கடுக்க நடந்ததையும் சொல்ல வேண்டாமா?
கோபிகைகள் சூழ நின்றவன், பதினாறாயிரம் மனைவியர் கொண்டவன், துறவு பூண்டு வந்ததைச் சொல்ல வேண்டாமா?
"பொய்யன்" என்றே பெயர் பெற்றோன், மெய்யொன்றே புகலும் ஞானியாய் வந்ததைச் சொல்லவேண்டாமா?
தீயவர்களைக் குழந்தையாயிருக்கும்போதே மாய்த்தவன், இந்த ஓர் ஜகத்குரு அவதாரத்தில், தீயவர்கள் மனதையும் தனது அன்பு வெள்ளத்தால் மாற்றி அந்தத் தீமையை மட்டும் அழித்ததைப் பேச வேண்டாமா?
இதையெல்லாம் சொல்லும் விதத்தில் ஒரு சிறிய பாடல்.
அந்தக் கிருஷ்ண ஜகத்குருவுக்கும், அந்த கோவிந்தனின் நாமத்தைப் போற்றிய சங்கர குருவெனவே வந்த எங்கள் சங்கரனாம் பெரியவாளின் பாதாரவிந்தங்களுக்கும், இப்பாடல், சமர்ப்பணம்.
*************
கீதை சொன்னக் கண்ணன் தானும் வாழ்ந்து காட்ட வந்தனன்
பாதை காட்ட காவி பூண்டு தானும் பூமி வந்தனன்
வெண்ணெய் திருடி உண்ட கண்ணன் உணவொழித்து நின்றனன்
வண்ணத் தேரை ஓட்டி வந்தோன், கால் கடுக்க வந்தனன்
பெண்கள் சூழ நின்ற கண்ணன் துறவு பூண்டு வந்தனன்
எண்ணிலாத பொய்யன் மெய்யை மட்டும் சொல்லி நின்றனன்!
தீயர் மாயச் செய்த மாயன் கருணை ரூபம் கொண்டனன்
தீயர் மனமும் மாறும் அன்பு காட்டித் தீமை கொன்றனன்
***********************
பெரியவா சரணம், சரணம்