Thursday, August 11, 2016

12.08.2016 : அனுஷ தினம் : பெரியவா பாத தசகம்:

12.08.2016 : அனுஷ தினம்

இன்றைய அனுஷ தினத்திலே, பெரியவாளை, அகில லோக ரக்ஷகனை, தீன சரண்யனை, ஜகத் குருவை, அவரது கருணையை, அருளை, சிந்திக்கும்போது, திருமூலரின் இந்தப் பாடல்தான் நினவுக்கு வருகிறது :

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே   (திருமந்திரம் 139)

அப்படி சிந்திக்கும்போது, பெரியவாளின் பாதாரவிந்தமும், அந்தப் பாதமலர்களின் வழியே பெருகி ஓடும் அருட்தேனும் கண்முன் வருகிறது. 

திருமூலரின் மற்றொரு பாடலும் நினைவுக்கு வருகிறது : 

திருவடியே சிவமாவது தேறில்
திருவடியே சிவலோகம் சிந்திக்கில்
திருவடியே செல்கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள் தெளிவார்க்கே  (திருமந்திரம் 138)


அனுஷத்தன்று, அகத்தில் இல்லாமல் அலுவலக வேலையாய் டெல்லியில் இன்றைய தினம் இருக்கும்போது, என்ன செய்வது? அனுஷ பூஜை எப்படிச் செய்வது?

அந்தத் திருவடி மலர்களை சிந்திப்பதே இன்றைய அனுஷ பூஜை என்றும் தோன்றியது.

அந்தப் பதமலர்களுக்கு, திருவடிகளுக்கு, இந்தப் பாடல் அர்ப்பணம். 

பெரியவா பாத தசகம்: 

எங்குலம் வாழ வந்த, பங்கயப் பாதம் போற்றி!
மங்கலம் சேர்க்கும் பைம்பூண் பதமலர்க் கமலம் போற்றி
பொங்குமாக் கடலாய்க் கருணை பொழிமலர்ப் பதமே போற்றி
சங்கர மூர்த்தி பாதம் பணிந்தனம் போற்றி போற்றி! (1)

மும்மலம் நீக்க வந்த முகிழ்மலர்ப் பதமே போற்றி
இம்மையும் மறுமை நோயும் தீர்த்திடும் மருந்தே போற்றி
அம்மையாய் அப்பனாய் வந்தருள்தரும் சரணம் போற்றி!
எம்மையே காக்கவந்த சேவடி போற்றி! போற்றி (2)

நாடெலாம் நடந்து எங்கள் குறை களை கழலே போற்றி
காடெலாம் திரிந்து எம்மைக் காத்திடும் நிழலே போற்றி
வீடுபேறதற்கும் மேலாம் பதம் தரும் பதமே போற்றி
தேடிவந்தபயம் நல்கும் தீம்பதம் போற்றி போற்றி! (3)

அன்று இவ்வுலகம் மூன்றும் அளந்த இவ்வடிகள் போற்றி
கன்றையும் சகடம் தானும் உதைத்த அக்கழல்கள் போற்றி
ஒன்றதாம் பொருளைச் சொல்ல உலவிய பதங்கள் போற்றி
நின்றெமதிதயம் வாழும் சீரடி போற்றி போற்றி! (4)

கல்லையும் பெண்ணாய்ப் பாவம் தீர்த்த சேவடிகள் போற்றி
தில்லையில் நித்தம் நடனம் ஆடும் நல்லடிகள் போற்றி
ஒல்லை வந்தடியார் துன்பம் நீக்கும் சீரடிகள் போற்றி
நல்லவர் நெஞ்சில் வாழும் பொற்பதம் போற்றி போற்றி (5)

பாண்டவர்க்காகத் தூது நடந்த சேவடிகள்  போற்றி
தாண்டவம் ஆடிக் காளி செறுக்கழி பதமே போற்றி
ஆண்டவன் அவனாய் வந்து ஆண்டருள் பதமே போற்றி
வேண்டினோர்க்கருளும் நாதன் குரைகழல் போற்றி போற்றி! (6)

பஞ்சினும் மென்மையாமச் செம்மலர்ப் பதங்கள் போற்றி
அஞ்சிடும் அடியார்க்கெல்லாம் அடைக்கலம் ஆனாய் போற்றி
தஞ்சமென்றலருவோர்க்கு அபயமாம் அடிகள் போற்றி
நஞ்சுடைக் கண்டன் ரூபன் பொற்பதம் போற்றி போற்றி (7)

அரியாசனத்திருந்து அகிலமே ஆண்டாய் போற்றி!
அரி அயன் தேடிக் காணா திருவடி மலர்கள் போற்றி
பரிந்தெனக்கபயம் நல்கும் பங்கய மலர்கள் போற்றி
திரிபுரம் செற்ற தேவே நின்னடி போற்றி போற்றி! (8)

வேதமே வாழவென்று திரிந்த அவ்வடிகள் போற்றி
ஆதவன் இயக்கம் போன்று ஓய்விலாப் பதங்கள் போற்றி
மாதவம் செய்வோருக்கும் கிட்டறும் பதமே போற்றி
நாதனே தானாயான நற்பதம் போற்றி போற்றி! (9)

குலம், கல்வி செல்வம் யாவும் அருளும் சீரடிகள் போற்றி
புலருமோர்க் காலைப் போதில் தொழுதனன் அடிகள் போற்றி
அலர்கதிர் ஞாயிறென்ன ஒளிரும் சேவடிகள் போற்றி
மலருமே தோற்கும் நாதன் மெல்லடி போற்றி! போற்றி! (10)


2 comments:

  1. I am so happy to your post in a critical situation, Maha Periyava potri.

    ReplyDelete
  2. மகா பெரியவா சரணம்

    ReplyDelete