Saturday, February 18, 2017

18.02.2017 நாளை (19.2.17) அனுஷ நன்னாள்....

18.02.17 அனுஷப் பாடல்:

நாளை (19.2.2017) , அனுஷ நன்னாள். சென்னையில், சேத்துப்பட்டில், மேயர் ராமனாதன் ரோட்டில், சங்கராலயாவில் மஹாபெரியவாளுக்குப் புஷ்பாஞ்சலி நடை பெறுகிறது. 121 பக்தர்கள் ஒருசேர ஸ்ரீருத்ர ஜபம் செய்து, சமஷ்டியாய் அர்ச்சனை செய்து அந்த மஹாபுஷ்பங்களாலே சதுர்வேத பாராயணங்களுடன், ஸ்ரீசரணாளுக்கு, புஷ்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

இந்த புஷ்பாஞ்சலி நடைபெறும் சமயத்தில் அடியேன் மனதிலே இன்றே ஒரு சிறிய புஷ்பாஞ்சலி செய்து பார்த்தேன்.

அழகிய மலர்கள் கொண்டு அந்த அழகிய தாளிணைகளுக்கும், புஷ்பம் போன்ற மேனிக்கும், பூஜை செய்து மனதிலே கண்ட தரிசனத்தை, இங்கே பாடலாய் வடிக்கப் பார்க்கிறேன்.

பெரியவா சரணம்.

****************************************************************************

தாமரை புஷ்பம் கொண்டு தாமரை மலர்த்தாள் தன்னை
சாமமும் போற்றி நிற்பேன் சரணமே தருவாயென்பேன் (1)

மல்லிகை மாலை உந்தன் தோளிலே சாற்றி சித்தம்
சில்லெனக் குளிர உந்தன் கண்களே கண்டு நிற்பேன் (2)

ரோஜாவால் மாலை செய்து துறவிகள் அரசனாம் என்
ராஜாவாம் உனக்குச் சூடி அழகினைப் பருகி நிற்பேன் (3)

முல்லையால் செய்த மாலை கழுத்தினில் சாற்றி இன்பத்
தெல்லையும் இதுவேயென்று உன்னையே பார்த்திருப்பேன் (4)

அரளியால் பந்தலிட்டு அரனுனை ஏற்றி வைத்தென்
சிரமதை உந்தன் தாளில் வைத்து நான் வாழ்ந்திருப்பேன் (5)

சண்பகப் பூவால் உந்தன் மார்பினில் மாலையிட்டுக்
கண்களும் குளிர உன்னை இன்புறக் கண்டு நிற்பேன் (6)

நந்தியாவட்டை மாலை நந்தீசன் உனக்கு சாற்றி
மந்திரம் உந்தன் நாமம் சொல்லியே வாழ்ந்திருப்பேன் (7)

குவளையால் மாலை செய்து மதிமுகம் ஒளிரச் சாற்றி
கவலையாம் நோயும் தீர்ந்துன் தாளிணை சேர்ந்திருப்பேன் (8)

நறுமலர் யாவும் தோற்கும் வாசனை மலர்த்தாளுக்கு
சிறுமலர் தொடுத்த மாலை சூட்டியென் மனம் களிப்பேன் (9)

மலர்களெல்லாமும் தோற்கும் மென்மையே வடிவாம் பாதம்
சிலமலர் கொண்டு பூஜை செய்து நான் களித்திருப்பேன் (10)

வாசனை மலர்கள் கோடி மாலையாய்த் தொடுத்தெடுத்தென்
ஈசனாம் உந்தன் பூஜை செய்வதே வாழ்வாய்க் கொள்வேன் (11)

பூவினால் கோர்த்த மாலை, மாலையில் வாடுமென்று
பாவினால் மாலை கோர்த்து, மேனியில் சாற்றி நிற்பேன் (12)

நாவினால் பாடி உன்னை மனதிலே எண்ணி உந்தன்
ஏவலே நாடி நிற்பேன்; பேரருள் தேடி நிற்பேன் (13)

காவலா காப்பாயென்றுன் தாளதே சிரமேற் கொண்டு
ஆவலாய் ஓடி வந்துன் சரணமே நாடி நிற்பேன் (14)

No comments:

Post a Comment