Saturday, April 15, 2017

15.04.2017 : அனுஷ தினம்

15.04.2017 : அனுஷ தினம்
****************************************

இன்றைய அனுஷ தினத்திலிருந்து, மும்பை வாசம். Transfer ஆகி, குடும்பத்துடன், முதன்முதல் மும்பை வந்து சேரும் நாள், அனுஷமாயிருப்பதும், ஒரு சந்தோஷம்தான்.

பெரியவாளை, கடவுளாய், குருவாய், தாயாய், தந்தையாய் நினைத்துப் பார்ப்பது ஒரு சந்தோஷம்.

உம்மாச்சித் தாத்தாவை, தாத்தாவாகவே நினைத்து, நம்மை அவரது ப்ரியத்துக்குரிய பேரனாக நினத்துப் பார்ப்பது இன்னும் சந்தோஷம்.

அவர் சொல்லியிருப்பதில் எதையுமே நான் செய்வது இல்லை என்பதால், பெரியவாளை, குருவாக பக்தி பண்ணுவதென்பது, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். குருவாக எண்ணினால், குரு சொல்வதை, சொல்லி இருப்பதை, செய்ய வேண்டும். அதுதான் சிஷ்ய லக்ஷணம். அடியேனிடம் அந்த லக்ஷணம் ஏதும் இல்லை. ஆகையால், அவரை, குருவாக வைத்து பக்தி பண்ணுவது, என்னைப் பொறுத்த வரையில், கடினமான ஒன்றுதான்.

அதே சமயம், பெரியவாள், அந்த உம்மாச்சித் தாத்தாவை, தாத்தாவாக வைத்து பக்தி பண்ணுவது சுலபமானதாகத் தோன்றுகிறது.

ஒரு தாத்தாவை, ஒரு பேரன், எப்படி பக்தி செய்வான்? இந்தக் கேள்வியே சற்றே வேடிக்கையாகத் தோன்றுகிறது. தாத்தாவுக்கும், பேரனுக்கும், நடுவில், பக்தியா இருக்கும்? இல்லை! ப்ரேமையன்றோ இருக்கும்!!

தாத்தாவிற்கும், பேரனுக்கும் ஏதேனும் ஒற்றுமை இருக்கிறதோ - என்று, மனது அடுத்த கேள்வி கேட்டது.

ஒரு மஹா சமுத்திரத்திற்கும், அடுத்த க்ஷணம் ஆவியாகப் போய்விடக்கூடிய ஒரே ஒரு சிறிய நீர்க்குமிழிக்கும் என்ன ஒற்றுமை இருந்து விட முடியும்?

இருந்தாலும்கூட, இந்த உம்மாச்சித் தாத்தாவிற்கும், அடியேனுக்கும் இடையில் நிறைய ஒற்றுமை இருப்பதாகத் தோன்றியது!!

"தாத்தா" என்னும் உரிமையோடு, பேரன், அவரின் தோள் மீதமர்ந்து, "தாத்தா, நானும் உன்னளவு உயரம் ஆகிவிட்டேன்" என்று சொல்வது போல, என்னுடைய உம்மாச்சித் தாத்தாவையும், என்னையும் "compare" செய்து பார்க்கத் தோன்றியதில், பிறந்த இந்தப் பாடலை, உம்மாச்சித் தாத்தாவின் பத கமலங்களுக்கே அர்ப்பணம் செய்கிறேன்.




***************************************************************************
பெரியதில் பெரியதான பெயர் பெற்றோய்! உன்னிடத்தில்,
சிறிதிலும் சிறியன் உன்சேய், பேசவே வந்து நின்றேன்! (1)

சிந்தையில் உன்னைவைத்து எண்ணியே இருந்தபோது,
எந்தையே உண்மை பலவும் நானுமே கண்டு நின்றேன்! (2)

பெரியவா உனக்கும் இந்தச் சிறியவன் எனக்கும் நடுவில்,
அரியவோர் பந்தம் உண்டு! ஒற்றுமை சிலவும் உண்டு! (3)


முற்றுமே துறந்தாய் நீதான்! பற்றினேன் உன்னை, நான்தான்!
ஒற்றுமை நம்மில் என்ன என்றிங்கே சொல்ல வந்தேன்! (4)

உலகெலாம் வாழவென்று, முழுதுமாய் நஞ்சை உண்ட
நிலவுலாவியனாமந்தக் கறைக்கண்டன் நீயே என்பார்! (5)

கறையதே மனமாய் நீங்கா அழுக்கதே உடம்பாய் வந்தேன்!
இறைவ, நின் கறையை விடவும், என் கறை பெரிதே அன்றோ! (6)

அறத்தினோர் வடிவமாக, அவனியில் வந்த நீயோ,
துறவினோர் வடிவமாகக் கையிலே தண்டம் கொண்டாய்! (7)

பாழ்நரகுற்ற பாவம் மானுட வடிவாய் வந்தேன்,
வாழ்வதே தண்டமன்றோ? இருப்பதும் வீணேயன்றோ? (8)

நானிலம் உய்ய வந்தோய்! தாயவள் வடிவாய் வந்தோய்!
ஞானியாம் உனக்கு ஏதும் ‘மனம்’ என்பதில்லையென்பார்! (9)

தன்வசம் இல்லா ஏதும், தன்பொருள் இல்லைதானே?
என்வசம் இல்லா மனதால், மனமென்பதெனக்கும் இல்லை! (10)

உன்னையே மனதில் கொண்டு, ஒற்றுமை கண்டு நானும்
சொன்னவை ஏதும் வைத்து கோபம் நீ கொள்ளல் வேண்டா! (11)

பெயரனும் உரிமையோடு, தாத்தனின் மடிமீதேறி
“உயரமே உன்னில் நான்தான்” என்னுமாறிங்கு நானும் (12)

உம்மாச்சித் தாத்தா உந்தன் மடிமீது ஏறி உன்னை
வம்புக்கிழுத்த பேச்சு – பெரிதாக எண்ணல் வேண்டா! (13)

தெய்வமாய், குருவாய் உன்னைக் கண்டு நான் தொழுதபோதும்
செய்தவம் ஏதுமில்லேன் – உன்னை நான் அடையவில்லை! (14)

அன்னையாய்த் தந்தையாய் என் ஆருயிர் தாத்தனாய் நான்
உன்னையே கண்டு நின்றேன்; கண்ணில் நீர் தேக்கி நின்றேன் (15)

குழந்தையாய் உந்தன் மடிமேல் ஆடிடக் கேட்டு நின்றேன்


வழங்குவாய் நீயும் இந்த வரத்தையே; அருள்வாயய்யா! (16)

No comments:

Post a Comment