Monday, August 28, 2017

29.08.2017 : அனுஷ நன்னாள் : என் நெஞ்சை அஞ்சுவேனே

29.08.2017 : அனுஷ நன்னாள்

இன்று, அனுஷ நன்னாள்.

நேற்று, திருவாசகத்தில் “அச்சப்பத்து” பதிகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன்.

மாணிக்கவாசகப் பெருமான் இறைவனிடம் ஊறியவர். இறைவனாலேயே ஆட்கொள்ளப்பட்டவர். இறையிலே தோய்ந்து, நமக்குத் திருவாசகத் தேனை அளித்தவர். அப்படிப்பட்டவர், தான் எதனைப் பற்றி அச்சப்படுகிறார் என்று ஒரு பட்டியல் போடுகிறார்.

அச்சப்பட எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றை எல்லாம் விடவும், சிவபெருமானைத் தெய்வம் என்று நினையாதவரிடம், திருநீறு அணியாதவரிடம் பெரும் அச்சம் கொள்ளுகிறார் மாணிக்கவாசகப் பெருமான்!

உதாரணத்திற்கு, இந்தப் பாடல் :

அச்சப் பத்து

புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்;
கற்றை வார் சடை எம் அண்ணல், கண் நுதல், பாதம் நண்ணி,
மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து, எம் பெம்மாற்கு
அற்றிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

“பாம்பைப் பற்றி நான் அஞ்சவில்லை. பொய்யர்களைப் பற்றியும் நான் அஞ்சவில்லை. ஆனால், சடையுடை அண்ணல், எம்பெருமானாம் ஈசனைத் தவிரவும் ஓர் தெய்வம் உண்டு என்று நினைத்திருப்பவர்களைக் கண்டால், நான் அஞ்சுகிறேன்” என்று சொல்லுகிறார்.

(மிக ஆச்சர்யமான அந்தப் பத்துப் பாடல்களையும் படிக்க ஆவல் இருப்பின், இங்கே காணலாம் :  http://www.tamilvu.org/slet/l4180/l4180son.jsp?subid=2353)

என்னைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். 

எனக்கு, என்ன பயம்? எவைகளிடத்தில் மிகவும் பயம்? நினைத்துப் பார்த்ததில், நான் மிகவும் பயப்படுவது என் நெஞ்சை நினைத்தேதான் என்று தோன்றியது. 

ஏதோ ஒரு நாள், எப்போதோ ஒரு முறை அந்தப் பெரியவாளை நினைக்கும் இந்த நெஞ்சு, அப்படி ஏதோ ஒரு முறை நினைப்பதையும் மறந்து விட்டால்? என்றோ ஒரு முறையாவது அவர் திருநாமம் நினைக்கும் இந்த நெஞ்சு, திருநாமம் நினைப்பதையே சுத்தமாய் நிறுத்திவிட்டால்? இதைவிடவும் பெரும் பயம் வேறென்ன இருக்க முடியும்?


என் நெஞ்சை அஞ்சுவேனே

கூற்றுவன் வரினும் அஞ்சேன்; கொடுந்துயர் தரினும் அஞ்சேன்
ஆற்றுநீர்ச் சடையன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (1)

உறு பிணி அதுவும் அஞ்சேன்; மூப்பினோடயர்வும் அஞ்சேன்
அறுமுகன் அத்தன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (2)

வறுமையின் கோரம் அஞ்சேன்; தளர்ச்சியின் தாக்கம் அஞ்சேன்
கருமிடற்றத்தன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (3)

மதியிலா மடமை அஞ்சேன்; விதியினோர் கொடுமை அஞ்சேன்
மதியணி தேவன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (4)

நஞ்சினை ஊட்டில் அஞ்சேன் ; அஞ்சுவதேதும் அஞ்சேன்
அஞ்செழுத்தறியா எந்தன் நெஞ்சையே அஞ்சுவேனே (5)

சிலைசிந்து வாளி அஞ்சேன்; நிலையிலா யாக்கை அஞ்சேன்
மலைமகள் கொழுனன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (6)

வஞ்சகர் நெஞ்சம் அஞ்சேன்; தீயவர் செயலும் அஞ்சேன்
தஞ்சமே தருமப் பாதம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (7)

கயவர்தம் தீமை அஞ்சேன்; சயமிலா வாழ்க்கை அஞ்சேன்
மயர்வறு நாமம் நினையா என் நெஞ்சு அஞ்சுவேனே (8)

மாதர்தம் முறுவல் அஞ்சேன்; வேலெறி விழிகள் அஞ்சேன்
நாதனைச் சிந்தை செய்யா என் நெஞ்சு அஞ்சுவேனே (9)

துன்பமும் துயரும் அஞ்சேன்; இல்லையென்றிரத்தல் அஞ்சேன்
இன்பமாம் எந்தை நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (10)

இகழ்வதே வரினும் அஞ்சேன்; சதியொடு சாபம் அஞ்சேன்
சுகமதாம் எந்தை நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (11)

பஞ்சமும் பசியும் அஞ்சேன்; நஞ்சுமிழ் அரவும் அஞ்சேன்
நஞ்சுண்ட கண்டத்தானை மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (12)

பிறப்புடன் இறப்புமஞ்சேன்; சிறப்பில்லா இருப்பும் அஞ்சேன்
துறவிகள் வேந்தன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (13)

மதம் கொண்ட பிளிற்றையஞ்சேன்; பசி கொண்ட புலியும் அஞ்சேன்
சதமவன் நாமம் நினையா என் நெஞ்சு அஞ்சுவேனே (14)

அவப்பெயர் வரினும் அஞ்சேன்; சவமாகிப் போதல் அஞ்சேன்
தவத்திருப் பெரியோன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (15)

பெரு நெருப்பதையும் அஞ்சேன்; கடல் விழுங்கிடினும் அஞ்சேன்
தருமத்தின் தலைவன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (16)

மலை புரண்டிடினும் அஞ்சேன்; நிலம் பெயர்ந்திடினும் அஞ்சேன்
கலைமதி அணிந்தோன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (17)

வான் இங்கு வீழின் அஞ்சேன்; கோனவன் சீற்றம் அஞ்சேன்
வானவர் தலைவன் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (18)

நரகினோர் துயரும் அஞ்சேன்; சிறையினில் தனிமை அஞ்சேன்
நரவேட சிவனின் நாமம் மறக்கும் நெஞ்சஞ்சுவேனே (19)

நவகோள்கள் அவையும் அஞ்சேன்; காலமும் கணக்கும் அஞ்சேன்
தவராஜன் நாமம் நினையா என் நெஞ்சு அஞ்சுவேனே (20)

அந்த பயத்தை, அப்படி பயப்பட வைத்த இந்த என் நெஞ்சகத்தை, பெரியவாளுக்கு, இந்த அனுஷத்தில் சமர்ப்பணம் செய்கிறேன்.




பெரியவா சரணம். 

Monday, August 14, 2017

கிருத்திகை : 15.08.2017 : மதியொடு மடந்தை சூடி

இன்று கிருத்திகை. கிருத்திகை தோறும், அந்த குருபரனேயான பெரியவாள் 

மேலே அந்தக் குருபரன் மேல் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழின் ஒரு

சந்தத்திலே ஒரு பாடல் புனைவது, இன்றும், அவர் அருளாலே 

நிகழ்ந்திருக்கிறது.


இன்றைய பாடல்,

“இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி

     னிருவினை யிடைந்து போக ...... மலமூட


என்னும் திருப்புகழின் சந்தத்திலே அமைந்திருக்கிறது. 


“தனதன தனந்த தான தனதன தனந்த தான
     தனதன தனந்த தான ...... தனதான”             என்னும் சந்தம்.




பெரியவா சரணம். 


......... இன்றைய பாடல் .........



மதியொடு மடந்தை சூடி, விதியரி அயன்று போக

   தழலுரு விரித்த  தேவர்…..பெருமானே

கடலதைக் கடைந்த போது, பெருகிய விடத்தை வாரி

   அமுதென விழுங்கி  க்ஷேமம் அருள்வோனே

கதியென சிறந்த தூய பதமதை அடைந்த பாலன்

     நலமுடன் உவந்து வாழ……..அருள்தேவே

மலையினை எடுத்து கோப ரனைவரும்  வியக்க வான

     மழையினைத் தடுத்த வேதப் …..பொருளோனே

கொடுவினை தொடர்ந்து ஏக, மதியது மயங்கி மோக

   மயலிடை உழன்று வாட….…அதிமூட

இருளது கிடந்து பாடு படுமொரு சிதைந்த ஆவி

   அடுதுய ரடர்ந்து வீழ….விடலாமோ?

முகமல ரமிழ்தை வாரிப், பருகிட உயர்ந்த சீல

     அருகதை அளித்து சேவை ……தருவாயே

பதமல ரடைந்து ஞான ஒளியது விரிக்கு மோன


    சுகமதி லமிழ்ந்து வாழ…அருள்வாயே

Tuesday, August 1, 2017

02.08.2017 : அனுஷ நன்னாள்

02.08.2017 : அனுஷ நன்னாள்

இன்று, அனுஷ நன்னாள். அந்த அனுஷத் தேவின் பதமலரைத் தாங்கி நிற்கும் பாத ரக்ஷையைப் பற்றிப் பாடவேண்டுமென்று தோன்றியது.

பெரியவா சரணம்.




திருக்குறடுப் போற்றிப் பாமாலை 

ஒரு நொடியும் ஒழியாது நாடெங்கும் நடை நடந்த
திருப்பாதம் தாங்கி நிற்கும் திருக்குறடே உனைப் பணிந்தேன் (1)

இருமையெனும் மயக்கறுத்து ஒருமையினை நிலை நாட்டும்
உருவமதைத் தாங்கி நிற்கும் திருக்குறடே உனைப் பணிந்தேன் (2)

மும்மலமும் போக்க வந்த முதல்வந்தன் திருப்பாதம்
செம்மையுறத் தாங்கி நிற்கும் திருக்குறடே உனைப் பணிந்தேன் (3)

சதுர்வேதம் தினம் ஓதும் மலர்ப்பாதம் தனை நித்தம்
பதமாகத் தாங்கி நிற்கும் திருக்குறடே உனைப் பணிந்தேன் (4)

ஐம்பூதம் அவை பணியும்  திருப்பாதம் தனைத் தாங்கி
இம்மையிருள் போக்க வந்த திருக்குறடே உனைப் பணிந்தேன் (5)

அறுமுகனின் பெயர் தாங்கி வந்த சிவன் மலர்ப் பாதம்
பெருமையுடன் தான் சுமக்கும் திருக்குறடே உனைப் பணிந்தேன் (6)

ஏழுலகம் போற்றுமந்த திருப்பாதம் தனைத் தாங்கி
வாழுகின்ற அருளாழி, திருக்குறடே உனைப் பணிந்தேன் (7)

எண்குணத்தான் திருப்பாதம் தன் குணத்தால் நிதம் தாங்கும்
விண்ணுமண்ணும் போற்றுமுயர் திருக்குறடே உனைப் பணிந்தேன் (8)

நவகோளும் சுற்றிவரும் நாயகனின் திருப்பாதம்
தவத்தாலே தாங்குமுயர் திருக்குறடே உனைப் பணிந்தேன் (9)

பித்தனவன் உருவாமச் சித்தனவன் பதம் தாங்கும்

வித்தகமே, திருக்குறடே, நித்தமுந்தன் பதம் பணிந்தேன் (10)