02.08.2017 : அனுஷ
நன்னாள்
இன்று, அனுஷ நன்னாள்.
அந்த அனுஷத் தேவின் பதமலரைத் தாங்கி நிற்கும் பாத ரக்ஷையைப் பற்றிப் பாடவேண்டுமென்று
தோன்றியது.
பெரியவா சரணம்.
திருக்குறடுப் போற்றிப் பாமாலை
ஒரு நொடியும் ஒழியாது
நாடெங்கும் நடை நடந்த
திருப்பாதம் தாங்கி
நிற்கும் திருக்குறடே உனைப் பணிந்தேன் (1)
இருமையெனும் மயக்கறுத்து
ஒருமையினை நிலை நாட்டும்
உருவமதைத் தாங்கி
நிற்கும் திருக்குறடே உனைப் பணிந்தேன் (2)
மும்மலமும் போக்க
வந்த முதல்வந்தன் திருப்பாதம்
செம்மையுறத் தாங்கி
நிற்கும் திருக்குறடே உனைப் பணிந்தேன் (3)
சதுர்வேதம் தினம்
ஓதும் மலர்ப்பாதம் தனை நித்தம்
பதமாகத் தாங்கி
நிற்கும் திருக்குறடே உனைப் பணிந்தேன் (4)
ஐம்பூதம் அவை பணியும்
திருப்பாதம் தனைத் தாங்கி
இம்மையிருள் போக்க
வந்த திருக்குறடே உனைப் பணிந்தேன் (5)
அறுமுகனின் பெயர்
தாங்கி வந்த சிவன் மலர்ப் பாதம்
பெருமையுடன் தான்
சுமக்கும் திருக்குறடே உனைப் பணிந்தேன் (6)
ஏழுலகம் போற்றுமந்த
திருப்பாதம் தனைத் தாங்கி
வாழுகின்ற அருளாழி,
திருக்குறடே உனைப் பணிந்தேன் (7)
எண்குணத்தான் திருப்பாதம்
தன் குணத்தால் நிதம் தாங்கும்
விண்ணுமண்ணும்
போற்றுமுயர் திருக்குறடே உனைப் பணிந்தேன் (8)
நவகோளும் சுற்றிவரும்
நாயகனின் திருப்பாதம்
தவத்தாலே தாங்குமுயர்
திருக்குறடே உனைப் பணிந்தேன் (9)
பித்தனவன் உருவாமச்
சித்தனவன் பதம் தாங்கும்
வித்தகமே, திருக்குறடே,
நித்தமுந்தன் பதம் பணிந்தேன் (10)
No comments:
Post a Comment