மணிவாசக பஞ்சகம் (தலைப்பு : நன்றி : கார்த்தி நாகரத்தினம் அண்ணா, பெங்களூரு)
மாணிக்கவாசக நின் பக்தியெனும் மாற்றில்லா
ஆணிப்பொன் மாளிகையின் ஓர் துரும்பை பக்தன்போல்
நாணின்றி நடித்திடுமிப் பதருக்கும் தந்திடுவாய்
வேணிச்சந்திரன் சூடி பதம்காணும் வழி சொல்வாய் (1)
திருவாசகம் தந்து உலகோரை உய்விக்கும்
குருவாசக! இந்தக் கல் நெஞ்சுக் கடையேனுக்கு
ஒருவாசகம் தாராய்! உருகாத குறை தீராய்!
கருவாசம் தீர்த்தாளும் கழல் சேரும் வழி கூறாய் (2)
சதுரனார் எனக்கேட்டு சங்கரர்க்குத் தனையீந்த
மதுரவாசக! உந்தன் அனுபூதிப் பெருநிலையின்
மதுவெள்ளத்தோர் சொட்டை நாயேனுக்கருளிடுவாய்
நதிசூடி அவன் தாள்சேர் ஆறதுவும் அருளிடுவாய் (3)
முந்தை வினைமுழுதும் ஓயும் உரைசெய்திங்கு
எந்தை சிற்றம்பலவன் இணயடிவாழ் வாசக! நின்
சிந்தையிலே ஓர் நொடியித் தீயவனை நினைத்திடுவாய்!
விந்தையருள் வித்தகனின் தாள்சேரும் வழி சொல்வாய் (4)
திருவாதவூர் தோன்றி, திருவாசகம் சொல்லி
திருச்சிற்றம்பல வாணன் தாள்வாழும் மறையோனே
ஒருபோதும் உனைக்கல்லா வினைதீர்ந்து அடியேனும்
ஒருபோதும் பிறவாதான் பதம்சேரும் வழி சொல்வாய் (5)
No comments:
Post a Comment