பிறை சூடிப் பெரியவா அஷ்டகம்:
வெண்ணிலா சடையில் வைத்தான்
பெண்ணிலா உடலில் வைத்தான்
எண்ணிலா இன்பம் வைத்தான்
பெரியவா என்னும் பேரான் (1)
பிறை நிலாப் பெயரான் சற்றும்
குறை நிலாப் பெயரான் உமையாள்
பிறை நிலா நுதலாள் பாகன்
பெரியவா என்னும் பேரான் (2)
திரை நிலா உடலான் என்றும்
நரை நிலாச் சடையான் பாதம்
தரை நிலா அமரர் போற்றும்
பெரியவா என்னும் பேரான் (3)
ஆணிலான் பெண்ணிலான் காண்
தூணிலா அரியும் அயனும்
காணிலாச் சோதியான் காண்
பெரியவா என்னும் பேரான் (4)
ஊணிலான் பிச்சை கொள்வான்
நாணிலான் ஆடை ஏதும்
பூணிலான் பித்தனாம் காண்
பெரியவா என்னும் பேரான் (5)
வானிலாச் சடையான் கங்கை
தானிலாச் சடையான் மங்கை
தேனிலா முகத்தாள் பாகன்
பெரியவா என்னும் பேரான் (6)
துண்ணிலா அணியான் நித்தம்
தண்ணிலாச் சொல்லான் தீதே
பண்ணிலான் தூயான் சீலன்
பெரியவா என்னும் பேரான் (7)
மாணிலா எந்தன் தீமை
பேணிலான் செய்த குற்றம்
காணிலான் நன்றே கொள்வான்
பெரியவா என்னும் பேரான் (8)
குறை நிலாப் பெயரான் : குறை நிலா = குறையேதும் நிற்க முடியாத
பிறை நிலா நுதலாள் பாகன் : நுதலாள் = பிறை நிலா போல் நெற்றி உடையவள்
திரை நிலா உடலான் (திரை = உடல் சுருக்கம்; உடல் சுருக்கம் விழா இளமை)
நரை நிலாச் சடையான் (நரை = முதுமை, வெளுத்த முடி; நிலா = நில்லாத)
தரை நிலா அமரர் போற்றும் (தரை நிலா = தேவர்களுக்கு, பாதம் தரை தொடாது)
ஆணிலான் பெண்ணிலான் காண் (ஆணுமில்ல; பெண்ணுமில்லை)
தூணிலா அரியும் அயனும் (தூணிலா = தூணில் நில்லாத அரி - நரசிம்மம்)
ஊணிலான் பிச்சை கொள்வான் (ஊண் = உண்பது)
நாணிலான் ஆடை ஏதும் நாண் இலான் = வெட்கம் இல்லாதவன்)
தானிலாச் சடையான் (தானிலாச் சடையான் = கங்கை தங்காத சடையான்)
துண்ணிலா அணியான் (துண்ணிலா = துண்டான நிலா; பிறை நிலா)
தண்ணிலாச் சொல்லான் (தண்ணிலா = குளுமையான நிலா)
மாணிலா எந்தன் தீமை (மாணிலா = மாண் + இலாத = நாகரீகம் இல்லாத)
பேணிலான் செய்த குற்றம் (பேணிலான் = கருத மாட்டான்)
No comments:
Post a Comment