Sunday, August 23, 2015

ருசியிலாப் பாடலை ரசிக்காதிருப்பையோ??

22.08.2015 அன்று எழுதியது

நாளை, அனுஷம். பெரியவா வைபவம்.
நேற்று, ப்ரதோஷ மாமாவின் தகப்பனார், "கவிச்சக்கரவர்த்தி" - அகத்தியான்பள்ளி இராம வைத்தியநாத சர்மா மற்றும் அகத்தியான்பள்ளி சுப்ரமணிய கிருட்டிணமூர்த்தி அவர்களது "அருட்பாமாலை பொக்கிஷங்கள்" எனும் புத்தகம், திரு. கிருட்டிணமூர்த்தி அவர்களது தம்பி, திரு.கார்த்திகேயன் அவர்களது ஆசீர்வாதத்துடன் கிடைக்கப் பெற்றேன்.
என்னவென்று சொல்வது? எத்தனை அழகான பாடல்கள்? பெரியவா முன்னிலையிலேயே பாடப்பெறும் பாக்கியம் பெற்றவை. பெரியவாளால் பாராட்டப் பெற்றவை.
அந்தாதின்னா, இவா பாடினதுதான் அந்தாதி! பெரியவா, பெரியவான்னு, எத்தனை உருக்கம்! இது இல்லையோ பக்தி!
பாடல்கள்னா, இவை இல்லையோ பாடல்கள்!
இந்த பாடல்களில் இருக்கும் பக்தி எனக்கும் வரட்டும். இந்தப் பாடல்களில் இருக்கும் இனிமை, எனக்குள்ளும் தோயட்டும்.
ஆனாலும், எல்லாப் பாடல்களுமே இனிமையாய் இருந்துவிட்டால், பெரியவாளுக்கு, ரொம்ப 'bore' அடித்து விடும் இல்லையா! கொஞ்சம் கசப்பாகவும், புளிப்பாகவும்கூட, பாடல்கள் இருந்தால்தானே சுவாரஸ்யமாக இருக்கும் என்று தோன்றியது...அதனால்தானே, வருஷப் பிறப்பன்று, பாயசத்துடன், வேப்பம்பூப் பச்சடியையும் சாப்பிடுகிறோம்!
என் பாடல்களும், இந்த வகை தானே!
ஆனால், இனிமையான பாடல்களை மட்டுமே பெரியவா ரசித்தால், ருசித்தால்...? 'நானும் பாடினேன்' என்று பேர் பண்ணிக் கொண்டிருக்கும் என் பாடல்களுக்கு என்ன கதி?
கொஞ்சம் பெரியவாளிடம் சண்டை போட வேண்டும் என்று தோன்றியது. அதன் விளைவாகத் தோன்றிய, இந்தப் பாடல்களை, அந்தப் பெரியவா சரணத்திற்கே காணிக்கையாக்குகிறேன்.
ருசியிலாப் பாடலை ரசிக்காதிருப்பையோ??
அந்தமும் ஆதியும் இல்லாத உனக்கிங்கு
அந்தாதி பாடுவார் அன்பரெல்லாம் வந்து
சந்ததம் நீயுமப் பாடலைக் கேட்டிருப்பாய்
அந்தவோர் இன்சுவை திகட்டாதிருக்கவே
வந்துநான் பாடினேன், சுவையிலாப் பாடலே (1)
உன்னிரு பதமலர் கதியெனத் துணையென,
நன்னலம் மிக்கவுன் அன்பர்கள் பாடுமவ்
வின்னரும் பாடல்கள் கேட்டருள் முனிவனே!
தன்னலம் அன்றி ஒன்றறிந்திலா நானுமுன்
கன்னலாம் பெயரிலோர் பாடலே சூட்டினேன் (2)
அழகுடை நறுமலர் அணிசெயும் மாலைபோல்
கழல்பணிந்தன்பர்கள் பாக்களும் பாடிட,
பழகிடும் தமிழையே பருகுவாய் அருளுவாய்!
அழகனே! மணமிலா வனமலர் மாலையாய்
தொழவறும் பாதமே சூடினேன் பாடலே! (3)
நான்மறைப் பாலையும், நாலாயிரம் பாகையும்
தேனென இனித்திடும் பன்னிரு முறையையும்
வானுறை அமுதே நீ அருந்துவாய் நித்தமும்
கோனுனக்குச் சுவை மாற்றித் தருவதற்காகவே
நானிங்கு படித்தேன் புளித்திடும் இப்பாடல் (4)
திருவாசகச் சுவையும், திருப்புகழ் தனிச் சுவையும்
திருஅருட்பாச் சுவையும், பாகவதப் பெரும்சுவையும்
விருப்பொடு கொள்ளுவாய் தேவே நீ நித்தமும்
இருப்பினும் உனக்குமே சுவை மாற்றித் தரவென்றே
சிறுவன் நான் படித்திட்டேன் கசந்திடும் இப்பாடல் (5)
அருளது தரவரும் தருவென உன்னையே
முருகொடு சுவையொடு அடியவர் பாடிட
விருப்பொடு கேட்டுக் களித்திடுவாய் நீயே
அருந்திய அத்தீந்சுவையெலாம் மாறவே
மருந்தெனப் பாடினேன், உன்மேலே பலபாடல் (6)
இனித்திடும் பாடல்கள் அடியவர் பாடினும்,
கனியுடைத் தேனென அவை சுவை தருகினும்,
பனிச்சடை வள்ளல்நீ விரும்பியே பருகினும்,
இனிப்பது அளவுக்கதிகமாய்ப் போய்விடின்,
தனிச்சுவை எதுமதில் தெரிந்திடாதென்பதால், (7)
விருந்தென அருந்திய பாடல்கள் செரித்திட,
மருந்தென கசந்திடும் பாடல்கள் தொடுத்தனன்!
அருந்தவமுடையோய்! உன் அருளெலாம் இங்கு அவ்
வருட்சுவைப் பாடகர் அவர்கட்கு மட்டுமோ?
மருட்சுவை பாடகன் எனக்கிங்கில்லையோ? (8)
குழந்தையும் தெய்வமும், குணத்திலே ஒன்றுதான்!
பழகிடும் மேன்மையில், பெரியவா குழந்தைதான்!
குழந்தைகள் இனிப்பையே ருசிப்பதும் உண்மைதான்!
கழறிய பாடல்கள் கசப்பதும் உண்மைதான்!
அழஅழ, அதற்கென, எனையும் நீ விடுவையோ? (9)
பாடினேன் உன்னையே, நாடினேன் உன்னையே
வாடினேன் இங்குநான், உன்னருள் இன்றியே
மூடியே வைப்பையோ, உன்னருள் விழியையே?
தேடினும் கிடைக்கிலாய்! ஊடினும் கிடைக்கிலாய்!
ஓடிவந்தருளிடாய்! நன்றாய் இரும் நீரே! (10)
பெரியவா சரணம். பெரியவா சரணம். பெரியவா சரணம்.

Friday, August 7, 2015

Periyava : Periyava Ashtothara Sadha Namavali : 108

Today is the final namavali on Periyava. For 108 days, to be thinking of Periyava through His Namas has been a blessing. 

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi Venkatraman

"ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸ்ரீ சரஸ்வத்யை நமோ நமஹ:" (108)

"ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸ்ரீ சரஸ்வதிக்கு நமஸ்காரம்" (108)

"Obeisance to Sri Chandrashekarendra Saraswathi" (108)  

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

சந்ததம் உனைப் பணிந்தோம் உன்னையே தொழுது நின்றோம்
வந்தனம் செய்தோம், வந்தோம் உன்பதம் சரணடைந்தோம்
சொந்தமாய்,  தாயாய், எந்தாய், உன்னையே கொண்டு நின்றோம், 
சந்திர சேகரேந்த்ர குருமுனி போற்றி போற்றி (108)

                                                     Photo : Courtesy Sri.Sanuputhran's Facebook Page

பாமாலை ஏற்றாய் போற்றி! எந்நாளும் காப்பாய் போற்றி!
மாமாயன் உருவே போற்றி! மாமாயை களைவாய் போற்றி!
ஓமாதி மந்த்ர குல கூடஸ்வரூபா  போற்றி !
காமாக்ஷி மைந்தா போற்றி! கருணையாம் கடலே போற்றி!

சரணமே தந்தாய் போற்றி! அரணதாய் நின்றாய் போற்றி!
நரவடிவாகி வந்த சிவனருட்செல்வா போற்றி!
பரமருள் பரமே போற்றி! அறம்வளர் தேவா போற்றி!
வரமருள் தருவே சந்திர சேகரா போற்றி போற்றி!  

Thursday, August 6, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 107

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi Venkatraman

"ஸ்ரீ ஷோதசாந்த கமல சுஸ்திதாய நமோ நமஹ:" (107)

"குண்டலினியின் கமலபீடங்களுக்கு மேல் பதினாறாவது கமலபீடத்தின் உச்சியில் நன்கு அமர்ந்திருப்பவருக்கு நமஸ்காரம்" (107)

Obeisance to Him who is securely seated on the top of the 16th lotus seat above the Kundalini lotus seats (107)  

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

யோக பீடத்தின்மேலே, ஷோதசாந்தப் பீடந்தன்னில்,
வேகமே கெடுத்து ஆளும் வேந்தனே அமர்ந்திருக்க, 
போகமோக்ஷங்கள் எல்லாம் தந்திடும் எந்தைதாளை
தேகமே இற்றுவீழும் முன்னரே பற்றிக் கொள்மின்! (107)

Wednesday, August 5, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 106

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi Venkatraman

"நிர்லக்ஷ்ய லக்ஷ்ய சம்லக்ஷ்ய நிர்லேபாய நமோ நமஹ:" (106)

"ஊஹிக்கமுடியாத நிலை, ஊஹிக்கக்கூடிய நிலை, நன்கு ஊஹிக்கக்கூடிய நிலை முதலியவைகளில் எதிலும் ஒட்டாதவருக்கு நமஸ்காரம்" (106)

Obeisance to Him who is not touched by things that cannot be inferred, things that can be inferred and things that can be well inferred (106)  

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

உளனெனில் உளனவன்; எனினுமாங்கே இலனெனில் இலனவன்
அளவிலாப் பெரியோன் பின்னும் அணுவிலும் சிறியோன் என்றும்
இளமையே கொண்டோன் யாரும் வணங்கிடும் முதியோனென்று 

வளமுறு நிலைகள் கொண்டு விளங்கிடும் முனியே போற்றி! (106)

Tuesday, August 4, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 105

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi Venkatraman

"நிர்மாண சாந்தி மஹித நிச்சலாய நமோ நமஹ:" (105)

"அளவில்லா சாந்தியின் பெருமையின் காரணத்தால் சலனமற்றவருக்கு நமஸ்காரம்" (105)

Obeisance to Him who is motionless from the greatness of immeasurable peace (105)

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

வாழ்விலே சாந்தி வேண்டின், ஊழையே வெல்ல வேண்டின்
ஆழ்கடலாக உள்ளே சாந்தியே நிறைந்த நாதன்
பாழ்மனம் அழித்து மாயை நீக்கியே நின்ற நாதன்
தாழ்பணிந்தவந்தன் சொல்லே, கீழ்பணிந்தேத்தி நிற்போம்! (105)

Monday, August 3, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 104

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi Venkatraman

"தேசகால பரிச்சின்ன த்ருக்ருபாய நமோ நமஹ:"(104)

"தேசத்தாலும் காலத்தாலும் மாறுபடாத காட்சி கொடுப்பவருக்கு நமஸ்காரம்" (104)

"Obeisance to Him who gives a vision which is not differentiated by place and time" (104)  

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

காலனை உதைத்த காலன் உருவாக வந்தோன் காட்சி
ஞாலமே உண்ட மாயன் உருவாக வந்தோன் காட்சி
கால தேச வர்த்தமாதி மாற்றத்தால் மாறிடாது
கோலமாமேனி கண்டார், கொடுவினை காணாதாரே! (104) 

Sunday, August 2, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 103

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi Venkatraman

"த்வா தசாந்த மஹா பீட நிஷண்ணாய நமோ நமஹ:" (103)

"குண்டலியின் பீடங்களுக்கு மேல் பன்னிரண்டு மஹா பீடத்தின் உச்சியில் நன்கு அமர்ந்திருப்பவருக்கு நமஸ்காரம்" (103)

"Obeisance to Him who is securely seated on the top of the 12 seats above the Kundalini pitas" (103) 

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

தொண்டர்கள் கை குவித்து நிற்க விண்ணவர்கள் வாழ்த்தி நிற்க
குண்டலினியின் பீடம் மேலே த்வாதசாந்த பீடந்தன்னில்
தண்டமுடன் வீற்றிருந்து கருணையினால் என்றுமிந்த
அண்டமெல்லாம் ஆண்டு வரும் அருந்தவமே போற்றி போற்றி (103)

Saturday, August 1, 2015

Periyava : Ashtothara Sadha Namavali : 102

பெரியவா அஷ்டோத்தர சத  நாமாவளி ஸ்தோத்ரம்

The Namavali, its translation into Tamil and English – are all taken from the publication “Parabramha swarupi sri kanchi kamakoti peeta Jagadguru, Sri Chandrasekarendra Saraswathi Sagunopasana”, published in Oct 2008 by  Sri. Ravi Venkatraman

"வாதபேத விஹீனாத்ம போதகாய நமோ நமஹ:" (102)

"வாத பேதங்கள் இல்லாத ஆத்மாவின் ஞானத்தை அறிய வைப்பவருக்கு நமஸ்காரம்" (102)

"Obeisance to Him who gives the knowledge of the Atma in which there can be no difference created by argument and counter - argument" (102)

Tamil poems by Visvanathan

பெரியவா என்னும் மஹா சமுத்ரத்திற்குஇந்த சிறியேனின் ஒரு துளி தீர்த்தம் அர்ப்பணம்

வாய்வார்த்தையாலே பேசி விளங்குமோ ஆத்மஞானம்?
தேய்வதும் வளர்வும் இல்லாத் தன்மையத்தான ஒன்றாம்
ஆய்வாலே விளங்கா அஃதை, அறியவைப்பவனாம் அந்த
மாய்வதும் பிறப்புமில்லா மாதவன் சரணம் போற்றி  (102)