Friday, October 16, 2015

Periyavaa Raagamaalai : பெரியவா ராகமாலை : On Anusham Day 17.10.15

இன்று அனுஷம். கோடானுகோடி பக்தர்கள் பெரியவாளுக்கு அபிஷேகமும் ஆராதனையும் செய்து கொண்டிருப்பார்கள். ஹோமங்களும் யாகங்களும் செய்து மகிழ்வார்கள்.

இன்றைய புண்ய தினத்திலே, பெரியவா மேல், பலப்பல ராகங்களில் பாடிக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது. பெரியவாளுக்கு சூட்டி அழகு பார்க்கவென்று,  எனக்குப் பெயர் தெரிந்த ராகங்களை வைத்து இந்த ராகமாலை, தொடுத்திருக்கிறேன்.

பெரியவா கருணை. பெரியவா சரணம்.




மோகன ரூபனே! சிவ சங்கரனே! 
சோகமெலாம் அகற்றும், சத்குரு நாதனே! (1)

ரஞ்சனி மைந்தனே! கஞ்சி மாமுனியே!
தஞ்சமென வந்தோர், துஞ்சும்பொற் பாதனே! (2)

அன்பர் உள்ளமெல்லாம், ஆளும் பூபாலனே!
இன்பமே தந்திடும், எம்குரு நாதனே! (3)

ஹரிஹரப்ரியனே, அருளமுதம் தருவாய்!
துரிதநிவாரணம் தந்தெமைக் காப்பாய், (4)

பைரவி சுதனே, பரம தயாளனே,
நிரந்தரம் தொழுதோம், நீ வந்தருள்வாய் (5)

ஷண்முகப்ரியனே, இன்முக வடிவே!
எண்ணருட் சுடரே, எமக்கருள்வாயே! (6)

நளினகாந்தியுடை திவ்யஸ்வரூபனே! 
களிதரும் உருவே, வந்தருள்வாயே! (7)

பாத தரிசனமே, கதன குதூகலமே
வேதனைகள் எல்லாம் விலகி ஓடிடுமே (8)

கல்யாண குண சாகரனே, கற்பகமே
எல்லோர்க்கும் அருளும் எம் அற்புதனே (9)

கருணையாம் மழைபொழி காருண்யன் நீயே
அருளாம்ருத வர்ஷிணியும் நீயே (10)

கசந்திடும் வாழ்வில், அழுதிடும் போதில், 
வசந்தான் வந்தருள் தாராயோ நீயே (11)

சிவஸ்வரூபனே, உமையவள் வடிவே, 
நவநவ எழிலுடை சாரங்கனும் நீயே (12)

யோகேஸ்வரன் நீயே, த்யாகேஸ்வரன் நீயே
பாகேஸ்வரி நீயே, வந்திங்கெமைக் காப்பாய் (13)

பரம ஹம்ஸ, நந்தி வாகனனே,
பரமனே ஹரனே, சாந்தஸ்வரூபனே (14)

லலிதமாய்ப் பார்த்தெம்மைப் பாவனம் செய்திடுவாய்
சலித்திடும் மனம் வந்து துயரது தீர்த்திடுவாய் (15)

உலகெலாம் உன் ஆட்சி, உன் தர்பார் தானே!
நலமுமே யாம் வாழ, வேறென்ன வேண்டுமிங்கே! (16)

உனைநினையாப் பிழையும், மனமுருகா பிழையும்
அனைத்தையும் பொறுத்திங்கு ஆண்டருள்வாய் நீயே (17)

சிவசங்கர குருவே! கௌரி மனோஹரனே! 
பவவினை தீர்த்தருள் புண்ணியனே அருளே! (18)

தென்னாடுடைய சிவன் நீ தானே!
எந்நாட்டையும் காக்கும் இறை நீ தானே! (19)

மோனமுதல்வனே, எம் இன்னுயிரே!
கானமூர்த்தியே! வந்தருளாயே! (20)

ஊமனும் பாடிடும் காமாக்ஷித் தாயே!
சாம கானம் பயில் சந்திரசேகரனே! (21)

ஜயசங்கரனே! ஜகன்மோஹனனே! 
ஜயசற்குருவே! ஜகத்காரணனே! (22)

கமலா மனோஹரனே! விஷ்ணுப்ரியனே!
விமலனே, குஹனே, தயாசாகரனே (23,24)

ரவிச்சந்திரிகையாய் நயனம் கொண்டிங்கு
புவியாள்பவனே! புகலிடம் நீயே! (25)

கீரவாணியும் நீயே, சரஸ்வதியும் நீயே!
தாரணி தன்னிலே, துணையென்றும் நீயே! (26,27)

திருவுடை ஸ்ரீதாயே! ஸ்ரீரஞ்சனியே!
இருவினை தீர்த்தருள் சிந்தாமணி நீயே! (28,29,30)

பாபமெலாம் அகற்றும் சங்கராபரணனே!
கோபமெலாம் விடுத்தோடி வந்தருளாயே! (31,32)





No comments:

Post a Comment