Thursday, October 8, 2015

மஹா பெரியவா புராணம் : மஹா பெரியவாளின் வரலாறு - தமிழ் பாக்களில் : 1.அவதாரக் காண்டம் : பாக்கள் : 1-321

மஹா பெரியவா புராணம் 
1. அவதாரக் காண்டம்



மஹா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை தமிழ்ப் பாக்களில் எழுத வேண்டுமென்று ஒரு ஆசை தோன்றியது. 

தமிழில் புலமை ஏதும் எனக்குக் கிடையாது. பெரியவாளைப் பற்றி நான் அறிந்ததெல்லாம், ஏதோ புத்தகங்களில் படித்தவையும், பெரியவா கூட இருந்த பெரியோர்கள் சொல்லியும்தான். 

இருந்தாலும், பெரியவா காதையை, பெரியவா புராணத்தைப் பாட வேண்டுமென்ற அவா எழுந்ததும்கூட, பெரியவாளின் அனுக்ரஹமாகவே கொண்டு, எனக்குத் தெரிந்த தமிழில், பாடத் தொடங்குகின்றேன்.

பெரியவாளின் அனுக்ரஹமும், என் சத்குருனாதர், முரளிதர ஸ்வாமிஜியின் அனுக்ரஹமும், என் பெற்றோர்களின் ஆசியின் துணையும் கொண்டு, அந்தக் காமகோடி பீடனாயகனைப் பற்றிப் பாடப்புகுகிறேன். 

பெரியவாளின் கதையான, "பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு" என்ற அல்லயன்ஸ் பதிப்பகத்தாரினரால் வெளியிடப்பட்ட, "ஸ்ரீ சாம்பமூர்த்தி சாஸ்த்ரிகள், ஸ்ரீ குப்புஸ்வாமி ஐயர், 'சொல்லின் செல்வன்' பி.என்.பரசுமராமன்"  அவர்களால் எழுதப்பட்ட புத்தகத்தின் துணையையும், ஸ்ரீ. கணேச சர்மா அவர்களின் "பெரியவா சப்தாஹத்தின்" துணையையும், ஸ்ரீ. ரா. கணபதி அண்ணாவின் புத்தகங்களையும்,  இந்த முயற்சிக்குத் துணையாகக் கொள்ளுகிறேன்.

ஸ்ரீ சாம்பமூர்த்தி சாஸ்த்ரிகள், ஸ்ரீ குப்புஸ்வாமி ஐயர், 'சொல்லின் செல்வன்' பி.என்.பரசுமராமன், ரா.கணபதி அண்ணா மற்றும் ஸ்ரீ. கணேச சர்மா அவர்களுக்கு, என் பணிவார்ந்த நமஸ்காரங்கள். 

ஒரு பெரிய பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், பிள்ளையாரையும்,  குருமார்களையும், பெற்றோர்களையும் நமஸ்கரித்துத் துவங்குவதே சாலச் சிறந்தது. 

"மஹா பெரியவா புராணம்" எங்கிற, இந்த முக்கியமான பயணம் நன்றாக அமைய வேண்டும் என்ற ப்ரார்த்தனையை மனதில் கொண்டு, பிள்ளையார் துதியுடனும், குருமார்கள் துதியுடனும், பெற்றோர்கள் துதியுடனும் இந்த பயணத்தைத் துவங்குகிறேன்.

கம்பன், இராமாயண காவியம் பாடப்புகு முன்னர், "இந்த முயற்சியானது, ஒரு பூனை,  ஒரு பெரிய மகா சமுத்திரத்தை நக்கிக் குடிக்க முயற்சி செய்வது போல" என்று கூறிக்கொண்டான்.

கம்பனாடனோ, தமிழ்க்கடல். நாடறிந்த மாகவிஞன். இராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவன். 

எனக்கோ, எந்தவிதமான தகுதிகளும் இல்லை. பெரியவாளைப் பற்றிப் பாடவேண்டும், பாடிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற அவா இருப்பது ஒன்றே என் தகுதியாகக் கொண்டு இந்த முயற்சியில் இறங்குகிறேன். 

சட - கசட - மூட - மட்டியான எந்தன் எழுத்திலே இருக்கும் குறைகளைப் பொறுத்து, ஏற்றருளுமாறு, அந்தப் பெரியவாளைப் ப்ரார்த்தித்துக் கொள்கிறேன். 

காப்புச் செய்யுள் - பிள்ளையார் காப்பு  
வினாயகனை, விகடனை, சுமுகனை, ஓம்கார
ஸுனாதனை, பெரும் வயிறனை, மூஷிக வாகன
வினோதனை, வேத முதல்வனை, ஆதி மூல
கண நாதனைத் தொழுது செய்தேன் இத்துதியே (1)


சங்கர ஸ்துதி:
வேதம் வாழவந்த வேதியப் பெம்மானை,
ஓதம் தீர்க்க வந்த சற்குருனாதனை
நாதன் நயந்தளித்த நற்றவ சீலனை
பாதம் தொழுதே தொடங்கினேன் இத்துதியே (2)


குருஸ்லோகம் 
ஸதாசிவ சமாரம்பாம் சங்கராச்சர்ய மத்யமாம் அஸ்மத் ஆசார்ய  பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் 

 ஸதாசிவன் முதற்தொடங்கி, ஸங்கரன் நடுவாயிங்கே
 ஸதாவந்திடும் குரு பரம்பரை வந்துதித்த
 சிதானந்த மூர்த்தி குருநாதனாம் பெரியவா
 பதாம்புயம் பணிந்து செய்தனன் இத்துதியே (3)

குருநாதர் ஸ்துதி 
சரண கமலங்கள் கொடுத்து குருவருள் பூர்ணமென்றாய்
அரணதாயிருந்து எந்தன் துயரெலாம் துடைத்து நின்றாய்
பரமென உனை அடைந்தேன், உன்னடி பணிந்து நின்றேன்
அரனவன் உருவாய் வந்தோன் கதை சொல அருளும் செய்வாய் (4)

காமாக்ஷி ஸ்துதி
கரும்புவில் ஏந்தும் எங்கள் சங்கரன் இன்னுயிரை,
அரும்பு மலர்கொண்டு ஈசனை வென்றாளை,
விரும்பும் பொருளருளும் தாயை மனதினில்
இருத்தித் தொடங்கினேன் அவள்சேய் துதியையே (5)



காமகோடி பீட ஸ்துதி:
ஐங்கரன் வாழ்த்தும் பீடம், அறுமுகன் போற்றும் பீடம்
சங்கரி மலரம்பேந்தி வந்தமர்ந்தருளும் பீடம்
சங்கரன் நின்ற பீடம், அறிஞர்கள் ஏத்தும் பீடம்
மங்களம் சேர்க்கும் பீடம், வணங்கியே தொடர்ந்தேன் துதியே (6)


குருவாழ்த்து  
ஜெயேந்திர பெரியவா ஸ்துதி
பெரியவா கண்டெடுத்த அருந்தவச் செல்வனை,
அரியதோர் தவ வாழ்வு வாழும் எம் ஐயனை
வறியவர் குறை தீர வகை செய்த மெய்யனை
சிறியவன் பணிந்து தொடங்கினன் இத்துதியே (7)

பால பெரியவா ஸ்துதி  
பாலனாய் வந்து இங்கே பெரும்பீடம் நின்றானை
காலம் நமக்களித்த தவயோக முனிவனை
'பால பெரியவா' என்றழைக்க அருள்வோனை,
சாலச் சிறந்தானைப் பணிந்தனன் இத்துதிக்கே (8) 

பெற்றோர் ஸ்துதி
இரு ஐந்து மாதம் தாங்கி பாலுட்டி வளர்த்து எந்தன்
ஒரு ஐந்து புலனும் பொலிவாய் விளங்கவே செய்து பின்னும்
ஒரு ஐந்து எழுத்தைக் கொண்ட நாமமும் ஊட்டி என்னை
குரு பதம் சேர்த்த அன்னை பதமலர் பணிந்து சொன்னேன் (9) 

குலப்பெருமையெல்லாம் சொல்லி, குணமுமே ஊட்டி இன்னும்
நலமென்றும் சேர்க்கும் அந்த இறைவழி இனிது ஊட்டி
பலமூட்டித் தமிழுமூட்டி நன்னெறி தந்த தந்தை
வலம்வந்து தொழுது நின்று தொடங்கினேன் இத்துதியே (10)


காண்டம் 1: அவதாரக் காண்டம்:

ஒரு அவதாரம் நடைபெற வேண்டுமானால்,தேவர்களும்,முனிவர்களும்,    மறையோரும் சேர்ந்து அந்த நான்முகனையோ,நாராயணனையோ, சங்கரனையோ  நாடி, விண்ணப்பம் செய்வார்கள் என்பதே,  புராணங்களி லிருந்து   நாம் தெரிந்து கொள்ளும் செய்தி.  

அப்படி இருக்க, மஹா பெரியவா" என்ற அவதாரம் மட்டும், சாதாரணமாக   நிகழ்ந்து விட்டிருக்குமா என்ன? 

அதனால், பெரியவாளின் அவதாரத்தைப் பற்றி பேசும் இந்தக்காண்டத்தில் தொடங்குமுகமாக, தேவர்களும், முனிவர்களும், மறையோரும்  என்ன   விண்ணப்பம் செய்திருப்பார்கள் என்பதிலிருந்து தொடங்குவோம். 

படலம் : 1 விண்ணப்பப் படலம்
தேவர்கள் - முனிவர்கள் - மறையோர்கள் விண்ணப்பம் செய்தல் 
பாரத தேசம் தன்னை, புண்ணிய பூமி தன்னை
பாரது போற்றும் ஞான பூமியாய் மாற்றி வைக்க
மாரதன் ஒருவன் வேண்டும்; ஞானியர் போற்றும் பார்த்த
சாரதி சொன்ன கீதை மீண்டுமே சொல்ல வேண்டும் (1)

ஆதியில் வந்து அந்த சங்கரன் சொன்ன வார்த்தை
பாதியில் விட்ட மக்கள் மனமது மாற வேண்டும
வேதியர் ஓத வேள்வித் தீயுமே ஓங்க அந்த
சோதியில் பொய்மை எல்லாம் விலகியே ஓட வேண்டும் (2)

என்றந்த தேவர், முனிவர், மறையோரும் தாம் நினைத்தார்
சென்றங்கு முறையிடுவோம், ஹரியையே வேண்டி நிற்போம்,
மன்றினில் ஆடி நிற்கும் சிவனையே கேட்டு நிற்போம்,
அன்றங்கு சிவனை வென்றாள், தேவியைத் துதித்து நிற்போம்,(3)

மங்கல நாதம், வேதம், எங்குமே ஒலிக்க அந்த
சங்கரன் உருவாய் வந்து அத்வைத நெறியைச் சொன்னான்
பங்கயத் தாள் பணிந்து வந்தனம் செய்வோம் என்று,
அங்கவர் தொழுது நின்றார் இறையையே பற்றி நின்றார் (4)

வேதமே  தழைக்க  எங்கும்  இன்பமே  பெருகி  நிற்க
நாதனே  அருள்க  என்றார்; மோனத் தவஞ்செய் மலர்ப் 
பாதனும் கண்  மலர்ந்தான்; மென்மையாய் முறுவலித்தான்
ஓதமே  தீருமென்றான் , மாயமாய் மறைந்து  போனான் (5)

கலியதன் கொடுமையெல்லாம்  நீங்கியே  உலகமெல்லாம்
நலிவின்றி  வாழதேவி, அருளுக என்றார்  முனிவர்
வலிவின்றிப்  போன  தர்மம்  வலிவு  கொண்டேழுமே இங்கே
பொலிவுடன்  திகழும்  என்றாள்;  தாயவள் மறைந்து போனாள் (6)

துன்பங்கள்  வரும்போதெல்லாம்  உனைச்சரண்  என்றடைந்தோம்
அன்பருக்கருளும் ஹரியே ! காத்தருள் என்றார் மறையோர்
இன்பமாய்த் துயில்தான் கொண்ட மாதவன் முறுவலித்தான்
புன்னகை சிந்தி அங்கே மாயமாய் மறைந்து போனான் (7)

சங்கர  மூர்த்தே ! நீங்கள்  புதுப்பித்த  சமயம்  இங்கே
சங்கடம்  மிகவும்  பட்டு, சீரதும் மிகவே கெட்டு
மங்கியே தேய்ந்திடாமல் குலைந்தலைந்தழிந்திடாமல்
பொங்கிட வேண்டும் என்று பணிந்தனர் பெரியோர், அவரை(8)

கனிவுடன்  நோக்கி  அந்த  சங்கர  மூர்த்தி  சொன்னான்
பனித்த ஓர் சடையே கொண்ட வள்ளலும் தாயும் மற்றும்
புனிதனாம் மாயன்தானும்  ஞானத்தோர் வடிவாய் வந்து  
தனிப் பெரும் சக்தியாக, அவனியை மாற்றி வைப்பார் (9)

மறையது ஓங்கும் நாட்டில், கலையது வாழும் நாட்டில்,
கறையறு வாழ்வு வாழும் அறிஞர்கள் போற்றும் நாட்டில்,
முறையொடு மாந்தர் வேதம் அமிழ்தென ஓதும் ஊரில்,
குறையெதும் இல்லா அந்த விழுப்பொருள் தோன்றும், உறுதி! (10)

நான் போன பாதையெல்லாம், அவனுமே நடந்து செல்வான்
நான் செய்த மாற்றமெல்லாம், அவனுமே செய்து நிற்பான்
தான் இங்கு ஒருநூறாண்டு, வாழ்ந்து ஓர்வகையும் செய்வான்
ஏன் இந்த கலக்கம்? விடுக, என்றந்த மூர்த்தி சொன்னான் (11)

சீர்திரு மறையோர், தேவர் முனிவரும் அகம்குளிர்ந்தார்
ஊர்தியாய் விடையே கொண்டோன் உறுதியாய் வருவான் என்றே, 
கீர்த்தியே கொண்ட நாதன் பிறப்பது உறுதி என்றே, 
மூர்த்தியே சொன்ன வார்த்தை, சதமெனக் கொண்டார், சென்றார் (12)

படலம்     : 2.  பெரியவா பிறந்த இடத்தின் சிறப்பு
தமிழ்நாடு:
கல்வியிற் சிறந்த நாடு; கம்பனும் பிறந்த நாடு
பல்கலை வாணரெல்லாம் பிறந்தணி செய்த நாடு
நல்வழி என்றும் யார்க்கும் காட்டிய பெரியோரெல்லாம்
பல்லுயிர் ஓம்பியிங்கே பாருளே உயர்ந்த நாடு (13)


ஆழ்வாரும் நாயன்மாரும் பக்தியே செய்த நாடு
தாழ்ச்சி உயற்சி ஒன்றின்றி சிந்தனை சிறந்த நாடு
காழ்ப்புணர்வேதுமின்றி வந்தாரை வருகவென்றே
வாழ்த்தியே உபசரிக்கும் விருந்திலே விளங்கும் நாடு (14)

கங்கையிற் புனிதமாய காவிரி பாயும் நாடு
தெங்கிள நீரும் பாலும் ஆறென ஓடும் நாடு
பொங்குநல் பரணியாறும், ஐயாறாய்ப் பாயுமாறும்
இங்கு நீர் வளமையெல்லாம் சேர்த்திடும் இனிய நாடு (15)

கோவில்கள் சிறந்த நாடு, பக்தர்கள் பெருத்த நாடு
ஆவியாய் அரங்கத்தானை அனைவரும் பார்க்கும் நாடு
தேவிவந்தமர்ந்து பூசை செய்ததால் உயர்ந்த நாடு
சாவிலும் சிவனை நெஞ்சில் நினைப்பவர் நிறைந்த நாடு (16)

பாவையர் நோன்பு நோற்று, கண்ணனைப் பாடும் நாடு
பாவையாம் ஆண்டாள் பாடும் பாவையால் சிறந்த நாடு
சேவையால் உயர்ந்த சீலர் பக்தியே செய்த நாடு
தேவையென்றேந்தும் கைக்கு, அன்பினால் அளிக்கும் நாடு (17)

அரி – அரன் ஒன்றேயென்று, அனைவரும் ஏற்கும் நாடு
வரிசிலை ராமன் சிவனை பூஜையே செய்த நாடு
கரிமுகன் கோவில் மூலை முடுக்கெலாம் நிறைந்த நாடு
பரிவுடன் கந்தன் ஆறு படைவீடு கொண்ட நாடு (18)

சீர்காழிச் செல்வன் வந்துத் தமிழ்வேதம் சொன்ன நாடு
பார்போற்றும் சந்தத்தோடு, திருப்புகழ் ஒலிக்கும் நாடு
யார்வாயும் மணக்குமந்த தேவாரம் பிறந்த நாடு
பேர்பெற்ற நாடு! எங்கள் பெரியவா பிறந்த நாடு! (19)

சங்கரன் பீடமேறி, மங்கலம் பெற்ற நாடு
சங்கரன் முக்தி கண்ட, காஞ்சியால் சிறந்த நாடு
பொங்கிடும் ஞான வெள்ளம், தங்கிடும் நாடு இந்த
தங்கமாம் நாடு எங்கள் தமிழ்நாடு தானே அன்றோ! (20)

விழுப்புரம்:
'விழுந்து போன ஊர்’ என்ற எண்ணம் தப்பு. சரித்திர முக்யத்வம் பெற்ற ஒரு   சமூஹத்தின் ஊர் என்று தெரிந்த போது என் குறை ஓரளவுக்கு நிவிருத்தி   ஆயிற்று. நீயானால்,ஸ்ரீ சரணாள் குறிப்பிடும் அந்த ‘நீ’ இக்கட்டுரையாசிரியன்   தான்!) ‘விழுமிய சிறப்பு கொண்ட ஊர் விழுப்புரம்’;'புரம்’ என்கிற ‘சரீர’த்தின்    எண்ணம்  விழுந்து ஆத்மாவை வெளிப்படுத்துகிற ஞானபுரி’ என்றெல்லாம்  ஒரே தூக்காக   தூக்கி ஸ்தோத்திரம் பண்ணி என் குறையை அடியோடு போக்கிட்டே!’ என்று மலர் வெள்ளமாக சிரித்தார் மஹா      குருநாதர்.

 காஞ்சி முனிவர் நினைவு கதம்பம் அண்ணா ஸ்ரீ. ரா.கணபதி அவர்கள்.

"ஐயன் பிறந்தது விழுப்புரம் என்கிற வில்வபுரி க்ஷேத்ரம். இதனை விழிப்பை  தந்த புரம் என்றும் சொல்வார்கள்.'விண்ணகத் தேவரும் நண்ணவுமாட்டா  விழுப்பொருளே வளைந்தது வில்லு; விளைந்தது பூசல்; உளைந்தன முப்பும்"  -
மணிவாசகர்;  வில்லுப்புரம் தான் விழுப்புரம். ஆங்கிலத்தில் இன்றும்   VILLUPPURAM தான்."
               - ஸ்ரீ ரா கணபதி . ‘காஞ்சி முனிவர் நினைவு கதம்பம்’ 

அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா
தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார்.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஸ்ரீமகாபெரியவா தான் பிறந்த இடம் விழுப்புரம் என்றும் சொல்கிறார்கள்ஈச்சங்குடி என்றும் சொல்கிறார்கள்எனக்கு சந்தேகமாக இருக்குஈச்சங்குடியில் ஸ்ரீமகாபெரியவாளின் தாத்தா இருந்தார்அம்மாவின் அப்பாஅவருக்கு இரண்டு பெண்கள்ஒரு பெண்ணுடைய பிள்ளை ஸ்ரீமகாபெரியவாளின் குரு ஸ்ரீ லக்ஷ்மிகாந்தன் என்று பெயர்.   அம்மாவின் தங்கையின் பிள்ளைஸ்ரீ மகாபெரியவாளின் பெயர் சுவாமிநாதன்ஸ்ரீமகாபெரியவா ஈச்சங்குடியில் பிறந்தார் என்று ஸ்ரீமகாபெரியவாளின் சகோதரர்கள் சொல்கிறார்கள்.ஆனால் புத்தகங்களில் திரு சாம்பமூர்த்தி  சாஸ்திரிகள்,“தம்பி ஸ்ரீமகாபெரியவா விழுப்புரத்தில் பிறந்தார்”, என்று எழுதிவிட்டார்.  நான் (பாலுஸ்ரீமகாபெரியவாளிடம் இதை பற்றி கேட்டபோது ஸ்ரீமகா பெரியவர் சொன்னார்-,
 “நான் பொய் சொல்லமாட்டேன் சத்தியத்திற்கு பேசுபவன்எனக்கு எங்கு பிறந்தேன் என்று தெரியாதுஒரு தம்பி நான் விழுப்புரத்தில் பிறந்தேன்  என்று ஒரு புத்தகத்தில் எழுதியிருக்கான்.சாம்பமூர்த்தி சாஸ்திரிமற்றொரு தம்பி சிவன் சாஸ்திரிகள் என்பார்கள்என் தங்கை லலிதாம்மா அவர்கள் நான்  இரண்டாவது குழந்தையாக இருப்பதால் ஈச்சங்குடியில் பிறந்ததாகச் சொல்கிறார்கள்.அதனால் நான் பிறந்த இடம் எனக்கு தெரியாதாதலால் நான் பொய்  சொல்லமாட்டேன்” என்று சொல்லிவிட்டார்.அதனால் ஸ்ரீமகாபெரியவாளுக்கு ஈச்சங்குடி,விழுப்புரம் இரண்டு இடங்களிலும்  அவதார ஸ்தலம்   கட்டப்பட்டுள்ளது
  
விழுப்புரம் என்றாங்கே மாந்தர் அழைத்திடும் இடமாம் அந்த 
விழுமிய புரத்தைச் சொல்ல வார்த்தைகள் ஏதுமுண்டோ?
வழுவறு சிந்தை கொண்டார் நிறைந்த ஓர்ஊராம் என்றும்
கெழுதகைப் பெரியோர் வாழும் மேன்மையால் சிறந்த ஊராம் (21)

கெடிலகோமுகியும்செஞ்சிசங்கராபரணிபெண்ணை 
வடிவுடன் ஓடும் ஊராம்விழுப்புரம் என்னும் பேராம் 
அடியவர் வாழும் ஊராம்மறையவர் வாழும் ஊராம் 
கடிதுயர் போக்கி யார்க்கும்நன்மையே செய்யும் ஊராம் (22)

விழுந்தவோர் ஊரதில்லைநலிந்தவோர் ஊரதில்லை
பழுதொன்றும் இல்லா ஊராம்;புரம்எனும் மேனி இங்கு
விழுந்திடும் தன்மை காட்டி உள்ளிரு ஆன்மா காட்டி
எழுச்சியே தருமாம் அந்த ஊர்க்கு ஓர் நிகருமுண்டோ (23)

வளைந்தது வில்லு அங்கே விளைந்தது பூசல் என்றும், 
உளைந்தன புரமூன்றென்றும், உந்தீ பறக்கக் கன்மம் 
களைந்த மாணிக்கன் செப்பும் திருமுறை பாடும் இன்பம் 
திளைத்திடும் ஊரும் இதுவோ? ஐயனும் பிறந்த ஊரே! (24)

காண்டம் : 1. அவதாரக் காண்டம்: 
படலம்: 3.பேரொளி பிறந்தது - பெரியவா பிறப்பு
பிறந்தது பேரொளி, பிறந்தது பேரொளி, 
அறம்துயர் அகன்றிட, தவமது உயர்ந்திட,
திறலொடு நான்மறை, வையத்தொளிர்ந்திட,
விறலொடு வேள்வியும், ஞாலத்தெழுந்திட (25)


உதித்தது செங்கதிர், உய்ந்தது உலகெலாம்
துதித்தனர் மானுடர், மகிழ்ந்தனர்  முனிவர்கள்
குதித்தனர், ஆடினர், பாடினர் தேவர்கள், 
பதித்தனர் நெஞ்சினில், பாலனின் இன்முகம் (26)

"ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்தாபித்தருளிய ஸ்ரீ காமகோடி பீடத்தின் பரம்பரையில் 68 - ஆவது ஆசார்ய ஸ்வாமிகளாக எழுத்தருளிய ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யார் ஜய வருடம், வைகாசி மாதம், 8-ஆம் தேதி (1894 - ஆம் வருடம், மே மாதம் 20-ஆம் தேதி) ஞாயிற்றுக் கிழமை, அனுஷ நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தில், பகல் நாழிகை 19-க்குத் திரு அவதாரம் செய்தருளினார்கள். தென்னாற்காடு மாவட்டம், விழுப்புரம் நகரத்தில், நவ்வப் தோப்புக்கு அருகில் உள்ள அக்ரஹாரத்தின் கீழ்ப் பகுதியில், அக்காலத்தில் கோவிந்தராயர் வீடு என்னும் பெயருடன் விளங்கி வந்த இல்லத்தில் அந்த மங்கல நிகழ்ச்சி ஏற்பட்டது"
   - "பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு" 

ஓராயிரத்தெண்ணூற்று தொண்ணூற்று நான்கினிலே
பேராயிரம் கொண்டோன் புவிதனில் அவதரித்தான்
நாராயணனோ, அயனோ, அரனோ, இவனென்று
பாரோர் புகழ பாரதத்தில் பிறந்திட்டான் (27)

ஜயஜய ஜயவென்று உலகெலாம் போற்றிநிற்க
ஜயநாம வருடத்தில் வைகாசி அனுஷத்தில்
தயையே உருவாக ஞாயிற்றுக் கிழமைதினம்
மயற்வெலாம் நீங்கிட பிறந்திட்டான் பாலனுமே  (28)

விழுமிய புரத்தினில், உதித்தது விழுப்பொருள்
பழுதுற்ற பண்பாடு, மலர்ந்து நிமிர்ந்திட
கெழுதகை மறையோர்கள் மகிழ்ந்து வாழ்த்திட
தொழுதனர் வானவர்; அழுதது கலியுமே (29)

விரிசடைப் புனிதனும், உலகெலாம் பூத்தாளும்,
கிரிதரனுமாயிங்கே ஓருருவில் வந்துதித்தார்
கரிமுகன் மகிழ்ந்தனன், தம்பியும் அகமகிழ்ந்தான்
விரிஞனும் மகிழ்ந்தனன், திசையெலாம் மகிழ்ந்தது (30)

வேதம் மகிழ்ந்தது, வேதியன் வந்ததற்கு
நாதம் மகிழ்ந்தது, நாதன் வந்துற்றதற்கு
கீதம் மகிழ்ந்தது, வைகாசி என்னுமந்த
மாதம் மகிழ்ந்தது, மாதவன் வந்ததற்கே (31)

ஹோமம் மகிழ்ந்தது, புகையும் மகிழ்ந்தது
சாமம் மகிழ்ந்தது, கானம் மகிழ்ந்தது, 
நாமம் மகிழ்ந்தது, ஜபமும் மகிழ்ந்தது
நேமம் மகிழ்ந்தது, நிஷ்டை மகிழ்ந்தது (32)

திதிகள் மகிழ்ந்தன, நாட்கள் மகிழ்ந்தன,
பதிகள் மகிழ்ந்தன, பாடல் மகிழ்ந்தது,
நதிகள் மகிழ்ந்தன, கடலும் மகிழ்ந்தது,
விதியும் மகிழ்ந்தது, வேளை வந்துற்றதென்று! (33)

யதிகள் மகிழ்ந்தனர், பூஜை மகிழ்ந்தது
சுதி மகிழ்ந்தது, ஸ்வரம் மகிழ்ந்தது
மதி மகிழ்ந்தது, மலர் மகிழ்ந்தது,
கதி மகிழ்ந்தது, கோள்கள் மகிழ்ந்தன (34)


காலம் மகிழ்ந்தது, ஞானம் மகிழ்ந்தது
சீலம் மகிழ்ந்தது, சத்யம் மகிழ்ந்தது
ஞாலம் மகிழ்ந்தது, 'துறவு' என்னுமாக்
கோலம் மகிழ்ந்தது, மாமுனி வந்ததற்கே! (35)

தண்டம் மகிழ்ந்தது, காவி மகிழ்ந்தது
முண்டனம் மகிழ்ந்தது, கமண்டலம் மகிழ்ந்தது
அண்டம் மகிழ்ந்தது, அவனி மகிழ்ந்தது
வண்டமர்மலர்ப் பாத ரட்சையும் மகிழ்ந்ததே! (36)

மகிழ்ந்தது நவமியும்,  ராமன் பிறந்த அன்று!
மகிழ்ந்தது அஷ்டமி, க்ருஷ்ணன் பிறந்த அன்று!
மகிழ்ந்தது ப்ரதமையும், பாலன் பிறப்பில் இன்று!
மகிழுமே மீண்டும் பாலன் பீடமேறும்போது! (37)

ஆவினம் மகிழ்ந்தது; அவனைப் பாடிடும்
பாவினம் மகிழ்ந்தது; தேவன் வந்ததற்கு
கோவில்கள் மகிழ்ந்தன; தேவனைப் போற்றுமிக்
காவியம் மகிழ்ந்தின்பத்தின் ஓவியம் ஆனதே! (38)


காண்டம் : 1. அவதாரக் காண்டம்: 
படலம்: 4. பெரியவாளின் முன்னோர்களும், வம்சச் சிறப்பும் 

கணபதி என்று அங்கோர் உத்தமர் வாழ்ந்து வந்தார்
குணமுயர் சீலர் நல்ல திறமுடை சொல்லின் செல்வர்
கணமதும் இறையை நெஞ்சில் மறவாத பக்தி வேந்தர்
மணமுடை மரபு வந்தார்; திருவிடை மருதூர் வாழ்ந்தார் (39)

கும்பகோணத்தை அன்று, தலையாகக் கொண்டிருந்த
உம்பரும் போற்றும் காஞ்சி பீடத்தைக் காத்து நின்றார்
ஐம்பது வருடம் சர்வ அதிகாரி பொறுப்பை ஏற்றார்
கும்பாபிஷேகம் கண்டார், காஞ்சி காமாக்ஷித் தாய்க்கே! (40)

அறுபத்து நான்காம் பீட அதிபதியின்  ஆணை கொண்டு, 
திருவானைக்காவின் தேவி தாடங்கப் பிரதிஷ்டை செய்தார் 
அறுபத்து ஐந்தாம் பீட அதிபதியின் ஆட்சி அதிலும்
குருமுனி போற்றுமாறு மடத்தின் நிர்வாகம் செய்தார் (41)

குமரர்கள் மூவருண்டு, கணபதி அவர்க்கும் ஆங்கே,
குமரனாம் சுப்ரமண்யன் பெயரதே  தாங்கிவந்த
குமரனே மூத்தோன்; மெத்தக் கல்வியில் உயர்ந்தோன் சுத்த
விமலனாம், கீர்த்தி மிக்கோன், சீலனாம் அவனே கல்வித் (42)

துறையிலே பணியே செய்தான், ஆசிரியன் எனத் திகழ்ந்தான்
நிறைவுடன் தொண்டு செய்து, கனிவுடன் பாடம் சொல்லி
குறையறு அன்பர் கூட்டம், அதனையே நாடிச் சேர்ந்து, 
கறையறு வாழ்வு வாழ்ந்தான், அரசுயர் பதவி கொண்டான் (43)

"கோவிந்த தீக்ஷிதர்" என்றோர் ஐயனும் வாழ்ந்து வந்தார்
கோவில்கள் மிகுந்த தஞ்சை மண்ணிலே வாசம் செய்தார்
ஆவியாய், அமைச்சாய்த் தஞ்சை மன்னர்க்கே அமைந்து தம்மை
மேவியே வாழும் மக்கள், நெஞ்சிலே வாழ்ந்திருந்தார் (44)

பெயரிலே பணி விளங்க, இன்பமாய் மக்கள் வாழ,
ஐயன் வாய்க்காலென்றும், ஐயன் குளம், தெரு என்றும்
ஐயன் கடைகளென்றும், சிறப்புறு சிந்தை கொண்டு,   
செயல்பல செய்து நின்றார், வம்சமே சிறக்கக் கண்டார்! (45)

சங்கீத மேதை, இந்த உலகமே புகழும் ராக
சங்கதியெல்லாம் சீராய், எழுபத்திரண்டு மேள
அங்கமாய்ச் செய்தான், அந்த, 'வேங்கடமகி' என்னும்  
மங்காத புகழே கொண்டோன், ஐயனின் புதல்வன் அன்றோ! (46)

புகழ்பல கொண்டவராம், "குட்டிக்கவி" என்றாங்கே, 
மிகப்பெயர் கொண்டவராம், 'வாஞ்சீஸ்வரர்' என்றே,
உகப்பெயர் கொண்டவராம், கோவிந்த தீக்ஷிதர்தம்
அகம்குளிர் பெயரனன்றோ! சிறந்த ஓர் வம்சமன்றோ! (47)

சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்று முன்னர்,
வந்தெமைக் காத்த அந்த, அறுபத்திரண்டாம் குருவும்,
மந்திரம் போல அந்தப் பெயரதே கொண்டு இங்கு
பந்தமே அறுக்க வந்த அறுபத்து நான்காம் குருவும், (48)

அறுபத்து ஏழாம் குருவாய், மஹா தேவேந்திரரென்று, 
அருமையாய்ப் பீடம்நின்ற அந்த ஓர் குருவும், இன்று,
அறுபத்து எட்டாம் குருவாய், இருளெலாம் நீங்க வந்த
திருவுடை நாதன் எங்கள் பெரியவா வரையும் ஈன்ற (49)

மரபதன் சிறப்பைச் சொல்ல, வார்த்தைகள் ஏதும் உண்டோ? 
அறம் வளர் மரபாம், இந்த உலகெலாம் வாழத்தன்னை
துறந்திடும் மரபாம், தன்னுள், நால்வரைப் பீடம் ஏற்றி 
சிறந்திடும் மரபாம், புகழே பரந்திடும் மரபாம் அம்மா! (50)

வாடிடும் மக்கள் துன்பம், துயரெலாம் போக்கும் இந்த 
ஈடிணையில்லா இன்பப் பரம்பரை தனிலே வந்தார், 
தேடினும் கிடைக்கவொண்ணா அரியநற் குணமே கொண்ட 
கோடியில் ஒருவர், நல்லார்,  நாகேஸ்வர சாஸ்திரி என்பார் (51)

பெயரது சொல்வதற்கே, 'பெயரனே' வேண்டும் என்பார்
பெயரது சொல்லும் பேரர் ஒன்றல்ல இரண்டு பெற்றார்!
அயராது குருத் தொண்டாற்றி, மறைந்திட்ட பிள்ளை ஒன்று,
மயர்வெலாம் நீக்கவென்றே பிறந்திட்ட பிள்ளை ஒன்று! (52)

அந்தணர் அவர்க்கே மகளாய், திரு அவள் தான் வந்தாளோ?
வந்தவள் உமையே தானோ? வாணிதான் வந்திட்டாளோ?
அந்தமில் ஆதிரூபம் தங்கிய வயிற்றாள், பெண்ணாய், 
வந்தனள், பிறந்தாள் அன்று, பூமழை பொழிந்ததெங்கும்! (53)

விண்ணவர் ஏத்தும் தாயை, 'மஹாலஷ்மி' என்றே சொல்லி
பெண்ணவள் தமக்கே பேரும் இட்டனர் பெற்றோர் அன்று,
கண்ணென வந்தாள், எங்கள் அமுதென வந்தாள், இன்பப் 
பண்ணென வந்தாள், வையம் இன்புற, இனிதே வந்தாள்! (54)

காவிரிக் கரையமைந்த, "ஈச்சங்குடி" என்னும் அழகுப்
பாவிரித்தாற்போல நிற்கும் கிராமமாம் அதனில் வந்தப்
பூவிரும்வல்லிக்கிங்கு, கணபதி அவரின் மகனை  
ஆவியாய்க் கொள்ளவென்றே,  மணமுமே பேசி நின்றார்!  (55)

நாகேஸ்வரரின் மகளாம், மஹாலஷ்மி அவளை, நல்ல
பாகேஸ்வரியாம் தாயை, கணபதி அவரின் குமரன்
யோகேஸ்வரனாம் அந்த சுப்ரமண்யன் அவர்க்கே
த்யாகேஸ்வரனைப் பெறவே மணமுமே முடித்து விட்டார்! (56)

நல்லதோர் நாளில் அழகாய் மகவொன்றை ஈன்றெடுக்க,
வல்லபம் மிக்க அந்த 'கணபதி' பெயரும் வைத்தார்
செல்லமாய்க் கொஞ்சி நாளும் இன்பமாய் வளர்த்து வந்தார்
மெல்லவே இன்னோர் மகவை உள்ளமே கேட்கக் கண்டார் (57)

குமரனே பிறக்கவென்று, குறைகளே தீரவென்று, 
அமரரும் தவமிருந்தார் அன்றொருநாளில்! இன்றோ,
நமது நாயகனின் பெற்றோரும் தமக்கிங்கேநற்
குமரனே பிறக்கவென்று, பத்தாண்டு தவமிருந்தார்! (58)

அருந்தவப் பயனாய் புத்ர காமேஷ்டி அதனின் பயனாய்,
தருமத்தின் மூர்த்தி வந்தான், தசரதன் மனம் மகிழ்ந்தான்
பெருந்தவம் ஈரைந்தாண்டு புரிந்ததன் பலனேபோல, 
தருமமே வந்ததிங்கு! பெற்றோரும் மனம் மகிழ்ந்தார்! (59)

அருணகிரியும் அன்று, அழகாகச் சொன்னாற்போல,
முருகனே வந்திட்டானோ? பாற்கடல் உறங்கும் அம்மால்
மருகந்தான் வந்திட்டானோ? லஷ்மியின் மகனாயிங்கே,
அருணனாய் வந்திட்டானே, இருளெலாம் நீங்கவென்றே! (60)

தந்தையிலி தாயுமிலி தாந்தோன்றித் தத்துவனித்
தந்தையையும் தாயையுமே கொண்டிங்குப் பிறந்தனனே
முந்தைவினை அத்தனையும் முற்றிலுமாய் அழித்துவிடும்
சிந்தைநிறை மூர்த்தியுமே வந்திங்குப் பிறந்தனனே! (61)


காண்டம் : 1. அவதாரக் காண்டம்: 
படலம் 5 : பாலன் அழுதலும் பெற்றோரின் தாலாட்டும்


பிறந்த அப்பாலகன் அழுகையைக் கேட்டனர்
சிறந்த நான்மறை ஓதுதல் போன்றதோ?
கிறங்க வைத்திடும் வேய்ங்குழல் போன்றதோ?
உறக்கத்தெழுப்பிடும் பூபாளம் ஒத்ததோ? (62)

சிவனார் மனமகிழ் சாமகானம் அதோ?
பவவினை தீர்த்திடும் மந்திரமும் அதோ?
தவப்பெரு முனிவர்கள் வாழ்த்திடும் ஓசையோ?
உவப்புடன் நாரதன் மீட்டிடும் வீணையோ? (63)

வாணிதன் வீணையில் வந்திடும் இசையதோ?
வேணியந்தோளினான் பாடிடும் இசையதோ?
தூணிலும் துரும்பிலும் இருந்திடும் சாரங்க
பாணியே இங்குவந்து இசைத்திடும் கீதமோ? (64)

பாலனின் அழுகை கண்டு, பெற்றோரும் மனமகிழ்ந்தார்!
சாலப் பெரியோனைத் தாலாட்டுப் பாடினின்றார்!
காலமே கனிந்துவந்த முக்கனியே தாலேலோ!
காலனை உதைத்த காலா! கோவலனே! தாலேலோ! (65)

காலமிது கண்ணே நீயும் கண்ணுறங்கு தாலேலோ!
கோலமிது மாறிவிட்டால், தூக்கமில்லை பொன்மணியே!
ஆலமது உண்ட வாயில் அழுகையுமோ? தாலேலோ!
வேலவனாய், மாலவனாய், வந்தவனே, தாலேலோ! (66)

கண்ணேயென் கண்மணியே, மன்னவனே தாலேலோ!
விண்ணவர் அமுதேயென், வித்தகனே தாலேலோ!
மண்ணிடை வந்துதித்த, மாதவனே தாலேலோ!
தண்ணொளி வீசவந்த, சந்திரனே தாலேலோ! (67)

எங்குலத்தில் வந்துதித்த, சங்கரனே தாலேலோ!
பொங்குபுகழ் கொண்டுவந்த, சுந்தரனே  தாலேலோ!
பங்கம்உமை கொண்டமதி சேகரனே தாலேலோ!
தங்கமென அங்கமின்ன வந்தபொன்னே தாலேலோ! (68)

முத்துநகை சிந்தவந்த, செங்கதிரே தாலேலோ!
ரத்தினமாய் இங்குவந்த, செந்தமிழே தாலேலோ!
முத்தமெலாம் அள்ளித்தரும், அஞ்சுகமே தாலேலோ!
சுத்தசிவ சக்தியதாய், வந்தவனே தாலேலோ! (69)


மன்னுபுகழ் திருமகள்தன் மணிவயிறு வாய்த்தவனே!
கன்னலெனக் கொஞ்சிவரும் மாதவனே! கேசவனே!
தன்னிகரில்லா ஓர் மன்மதனே தாலேலோ!
என்னுடைய இன்னமுதே! இந்திரனே தாலேலோ! (70)

அள்ளிவரும் புன்னகையால் சொக்கவைப்பாய், தாலேலோ!
துள்ளிவரும் மானினமே, தூயவனே, தாலேலோ!!
வள்ளியவள் கொஞ்சவந்த வானமுதே தாலேலோ!
புள்ளிமயில் வாகனனே! மால்மருகா தாலேலோ!! (71)

ஓங்காரம்  அதில்  லயித்து  தானென்பதை அறுத்துத் 
தூங்காமல் தூங்கி நிதம் சுகம் பெருமச் சம்புவையே 
பாங்காகத் தாலாட்டு பாடி துயில் கொள்ள வைப்பார் 
நீங்காமல் நின்றவனின் நித்திரையை ரசித்திருப்பார் ! (72)



காண்டம் : 1. அவதாரக் காண்டம்:

படலம் 6 : பெயர் சூட்டல்


பேரொன்று இல்லா ஆதி சோதியை, என்றும் எங்கும்
சீரொடு விரிந்து நிற்கும் வேதத்தின் மூல வித்தை, 
நீரொடு நெருப்பும் காற்றும் வானுமாய், மண்ணாயெங்கும்
பாரொடு அகண்டம் யாவும்  நீக்கமில் நிறைந்த சத்தை,  (73)

ஆயிரம் நாமம் கொண்டு, அழைப்பவர் யார்க்கும் வந்து
தாயினும் மிகப் பரிந்து, தானுவந்தளிக்கும் அன்பை,
நாயினும் கடையவர்க்கும் நன்னலம் ஒன்றேதந்து
பாயிரம் பாடும் அன்பர் மனம் வளர் அமுதை ஞானக் (74)

கதிரென வந்தோன் தன்னை, அமரர்கள் அரசன் தன்னை, 
நதியவள் முடிமேல் நிற்க, தண்ணொளி வீசும் அந்த
மதியையே தலைமேல் சூடி, நடனமே ஆடும் தில்லை
அதிபதி தன்னைப் பெயரிட்டழைக்கவே முடிவும் செய்தார் (75)

எப்பெயர் இட்டழைக்கலாகும்? என்றவர் சிந்தை செய்தார்
முப்புரம் எரித்தான் அந்த ஈசன் பேரிடுதல் நன்றோ?
இப்பெரும் குலத்தின் ஸ்வாமி, நாதன் பேரிடுதல் நன்றோ?
செப்பிடும் பெயரே வைக்க, பெரியோரைக் கலந்து நின்றார் (76)

கணபதி பின்னே வந்தான் அவனுக்கே அந்த மூல
கணபதி பின்னே வந்தோன் நாமமே சூட்டி நின்றார்!
கணபதிக் கையால் தெய்வக் குரலையே தந்தோனுக்கு,
கணபதித் தம்பி நாமம் சூட்டியே மகிழ்ந்து நின்றார்! (77)

இறையாய்  இருந்தும்  பிரணவப் பொருளதும் அறியா அந்தக்
கறையது நீங்க  அன்று விதியையே  தலையில் குட்டி, 
சிறையிலே இட்ட நாதன், அறுமுகம் கொண்டு தந்தை 
பிறையணி மூர்த்திக்கன்று  பிரணவத்தின்  பொருளே  சொன்ன  (78)

மறையாதி  மூர்த்தி பெயரை, ஸ்வாமியாம் நாதன் பெயரை, 
குறையேதும் இல்லா அந்த, மயிலேறும் முருகன் பெயரை,
உரைத்திடும் நாவில் தமிழை உணர்த்திடும் அழகன் பெயரை
திரைக்கடல் ஓரம் அவுணர் கூட்டமே மாய்த்தோன் பெயரை, (79)


"சொல் அற" என்று சொல்லித் திருப்புகழ் கொண்டோன் பெயரை,
நல் அறவாணர் நெஞ்சில் நடமிடும் நாதன் பெயரை,
மெல்லிடை மேனி வள்ளிக் கணவனாம் வள்ளல் பெயரை,
வில்லெனும் புருவம் கொண்டாள் தேவானைக் கரம் பிடித்தோன், (80)

பெயருமே எடுத்து இங்கே, குழந்தைக்கு சூட்டி நின்றார்!
அயருமே வினையும் அந்த நாமமே கேட்கில் என்றும்!
துயருமே போகும் அந்த நாமமே உரைக்கில் என்றும்!
உயர்வுமே சேரும் அந்த நாமமே நினைக்கில் என்றும்! (81)


சுவாமிநாதன் என்ன ஓயுமே பவவினை,
சுவாமிநாதன் என்னத் தீருமே பிணியெலாம்,
சுவாமிநாதன் என்ன சேருமே நற்கதி,
சுவாமிநாதன் என்ன நிகழுமே நன்மையே! (82)

அவனது நாமம் சொல்ல, ஆயிரம் நாவு வேண்டும்
அவனது நாமம் சொல்ல புண்ணியம் கோடி வேண்டும்
அவனது நாமம் சொல்ல அவன்கழல் கிடைக்குமிங்கே
அவனது நாமம் சொல்ல, மரணமும் இறக்குமிங்கே! (83)


காண்டம் : 1. அவதாரக் காண்டம்:
படலம் 7 : குழந்தை சுவாமிநாதன் வளர்தல் :


பிள்ளையும் பொழுதொரு வண்ணமாய் வளர்ந்திட்டான் 
கிள்ளை மொழி பேசி இல்லம் இனிக்கவே செய்திட்டான் 
அள்ளக் குறையாத அமுதமொழி தரும் முனிவன் 
மெல்லத் தவழ்ந்திட்டான் தளர் நடையே நடந்திட்டான் (84)

கொஞ்சுவார், குதூகலிப்பார், விளையாட்டு காட்டி நிற்பார்
அஞ்சுவார்போல் நடித்து பாலனை சிரிக்க வைப்பார்
பஞ்சினும் மெல்லடி தீண்டியே களித்திருப்பார் 
கெஞ்சுவார் உணவு உண்ண, தோளிலே தூக்கி நிற்பார் (85)


ஒருவாய் சோறுமட்டும் உண்டுவிடு என்றுநித்தம்
குருவாய் வந்தவனை கெஞ்சியே கொஞ்சி நிற்பார்
தருவேன் உனக்கு அந்த வெண்ணிலா நீயுமுந்தன்
சிறுவாய் திறந்துவிடு என்றே இறைஞ்சி நிற்பார்! (86)

அம்புலியைக் காட்டிநிதம் அழகாக சோறூட்டி,
வெம்பவவினை களைய வந்தானைக் கொஞ்சிடுவார்
உம்பரவர் நாயகனை, இம்பரவர் தலைமகனை
சம்புஎனும் சங்கரனை, கண்ணிமைபோல் காத்திடுவார் (87)

கோவிலுக்குச் சென்றிடுவார், அன்னையையே காட்டிடுவார்,
"தேவி, அருள் குழந்தைக்கு", என்றவளை வேண்டிடுவார்,
கூவியழைத்தால் வருவாள் தாயுடனே என்றிடுவார்
தாவிவரும் பாலனையே அணைத்திறையை ஊட்டிடுவார் (88)

ஈசனையே காட்டிடுவார், நெற்றியில் நீறிட்டிடுவார்
பூசனையே செய்திடுவார், பூவிதழால் அருச்சிப்பார்
"நேசமுடன் வணங்கிடுவாய்" என்றவனுக்குரைத்திடுவார்
பாசமகன் கரங்குவித்துப் பணிவதிலே உருகிடுவார் (89)

வாசமலர் தாமெடுத்து, மாலையிலே கோர்த்துவந்து
'தேசமுடையாய், வாழி' யென்றாசையுடன் அடிநாடி,
கேசவனைப் பணிந்திடுவார், கண்ணனையே காட்டிடுவார்
மாசறுக்க வந்தவனை, மாலடியே பணித்திடுவார் (90)

ஆலயங்கள் காட்டி, இறைபக்தியையே ஊட்டியவன்
சீலமெருகேற்றி அருள் சிந்தையையும் ஊட்டி, நிதம்
பாலனுக்காய் வேண்டி, அன்னை கழலிணைகள் நாடியாதி,
மூலமென வந்த அந்த மூர்த்தியையே வளர்த்துவந்தார் (91)

ஜகமெலாம் போற்றுமப் புண்ணியனை மடியிலிட்டு,
அகங்குளிர, உடல் குளிர, மேனியெலாம் தைலமிட்டு,
தகதகவென மின்னுமப் பொன்னுடலை நீவிவிட்டு,
முகம்பார்த்து ரசித்திடுவார்; குளிப்பாட்டி வைத்திடுவார்! (92)


குளித்துமே நீர்விட்டகல அவன் மறுப்பதை ரசித்தவன்
களிப்பினை ரசித்து, தலை துவட்டி, ஆடை அணிவித்து
ஒளிந்தவன் ஆடிடும் ஆடலை ரசித்தவனை ஒவ்வோர் நொடியும்
விளித்தின்புறுமப்பெற்றோர் பெருமை, பேசவும் கூடுமோ? (93)

காண்டம் : 1. அவதாரக் காண்டம்:

படலம் 8 : குழந்தைக்கு அம்மா கதை சொல்லுதல்: 



குழந்தையைத் தூங்கவைக்க, அம்மாவும் கதைகள் சொல்வாள்
அழகான துருவன் கதையும், பக்தப் ப்ரஹலாதன் கதையும்
வழங்கிடும் ராமன் கதையும், விளையாட்டுக் கண்ணன் கதையும்,
குழந்தையும் முழுதும் கேட்பான்! தாயுமே தூங்கிப் போவாள்! (94)

பக்தப் ப்ரஹலாதன் கதையில், நாமத்தின் பெருமை சொல்வாள்
மக்களை அடித்துதைத்து, தன்னையே வணங்கச் சொன்ன
திக்கெலாம் அதிர நின்ற ஹிரண்யகசிபு என்னும்
பக்குவம் இல்லா மன்னன் வீழ்ந்த அக்கதையே சொல்வாள் (95)

தந்தையாய் அரக்கன் வந்தும், நாரணன் நாமம் ஒன்றே
சந்ததம் சொல்லி நின்ற ப்ரஹலாதன் பெருமை சொல்வாள்
நிந்தையே சொல்லி நின்ற அரசனால் வந்த துன்பம்
சிந்தையே கொள்ளா நின்ற குழந்தையின் பெருமை சொல்வாள் (96)

எத்தனை துன்புறுத்தி, கொடுமைகள் இழைத்த போதும், 
அத்தனை பேரும் வாழ, அன்புடன் வேண்டி நின்றான்
உத்தமப் பிள்ளை காதை, உத்தமி சொல்லி நிற்பாள்
நித்தமும் கேட்பான் அன்பே உருவென வந்த செல்வன்! (97)

துருவனின் சரிதம் சொல்வாள், தந்தையின் மடியில் ஏற
அருகதை வேண்டி ஐந்தே வயதுடைச் சிறுவன் அன்று
பெருந்தவம் செய்தான் பலனாய், வானிலே மின்னும் மீனாய்,
திருமகள் மார்பன் வாழ்த்த, நிகரிலாக் கீர்த்தி கொண்டான் (98)


வாமனன் காதை சொல்வாள், மாபலி பெருமை சொல்வாள்
ராமனின் கீர்த்தி சொல்வாள், ராவணன் அழிவும் சொல்வாள்
சாமள வர்ணன் வெண்ணெய் உண்டஅக் கதையும் சொல்வாள்
மாமலை தூக்கி நின்றான், மாயனின் மேன்மை சொல்வாள் (99)

காமனை எரித்த நெற்றிக் கண்ணனின் கதையும் சொல்வாள்
காமனை உயிர்த்த காஞ்சி காமாக்ஷி கதையும் சொல்வாள்
மாமனே மகிழ சூர பதுமனை வென்றக் குமரக் 
கோமகன் கதையும் சொல்வாள், அவனேநீ என்றும் சொல்வாள்! (100)

நேர்மையே நிலைக்கும் என்பாள், சத்தியம் ஜயிக்கும் என்பாள்
சோர்வது வந்திட்டாலும், பொய்யது சொல்லேல் என்பாள்
கார்முகில் வண்ணக் கண்ணன் கீதைசொல் காதையெல்லாம், 
பார்புகழ் போற்றவந்தான் கேட்கவே சொல்லி நின்றாள் (101)

நாளெலாம் கதைகள் சொல்லி, தர்மத்தை எடுத்துச் சொல்லி,
கோளெலாம் வணமங்குமந்தக் கோனுக்கே அன்பைச் சொல்லி
தூளெனத் துன்பம் போகும் சூட்சுமம் அதையும் சொல்லி
கேளெனச் சொல்லி நன்மை யாவுமே சொல்லி நிற்பாள்! (102)

கதையையே கேட்பான் ஸ்வாமிநாதனும், கேட்டுத் தன்னுள்
விதைத்தனன் அன்பு, பக்தி விருட்சமே வளரக் கண்டான்
வதைத்திடும் ஆசை என்றும், வளர்த்திடும் அன்பு என்றும்
சிதைத்திடும் கோபம் என்றும் வாழ்வதும் விளங்கக் கண்டான் (103)


காண்டம் : 1. அவதாரக் காண்டம்:
படலம் 9 : இளவயது நிகழ்வுகள்:

மரனாய் பட்ட பாடு:

'Teddy cat' என்று, ஆங்கிலத்தில் சொல்லப்படும் மரநாய் (அது, மரங்களிலே மேலேறி, பழங்களை இரவு வேளைகளில் தின்று அழித்துவிடும்) ஒன்று, எப்படியோ வீட்டுக்குள் வந்துவிட்டது. ஒரு அறையில், வெல்லம் வைத்திருந்த ஒரு தாமிரச் சொம்பினுள் தலையைவிட்டு, வெல்லத்தை சாபிட ஆரம்பித்தது. ஆனால், தலையை வெளியே எடுக்க வரவில்லை. பாத்திரத்துள் தலையுடன், அது வீடெங்கும் ஓட ஆரம்பித்தது. வீட்டிலுள்ள அனைவரும், ஏதோ திருடந்தான் வந்துவிட்டான் என்று நினைத்து விட்டனர். காலை வேளையில், அனைவரும் சேர்ந்து பார்த்த்போதுதான் அது மரநாய் என்று தெரிந்தது. அனைவருமாகச் சேர்ந்து, அதனைப் பிடித்து, ஒரு மரத்தில் கட்டி வைத்து, அந்தப் பாத்திரத்தை வெளியில் இழுத்தனர். அதுவரை, அந்த மரநாய், உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தது. பேராசை என்பது, தனக்கும், பிறருக்கும் எத்தகைய துன்பத்தை விளைவிக்கும் என்பதற்கு இது ஒரு பாடமாக அமைந்தது. 

         -  ‘பாரதீய வித்யா பவன் அளிக்கும்  ‘பவன்ஸ் ஜர்னல்‘ ல், காஞ்சி பரமாச்சார்யாள் அருளிய ‘வாழ்க்கை எனக்குப் போதித்தது என்ன?‘ என்ற கட்டுரையிலிருந்து.

அன்றொருநாள், நள்ளிரவில், அகத்துளோரெலாம் உறங்க, 
தின்பண்டம் ஏதேனும் கிட்டிடுமோ எனப் பார்த்து, 
நன்றிந்த வேளையென, நல்லகமும் இதுவென்று, 
வந்ததுவே பசியுடனே மரநாயொன்றடுக்களைக்குள்! (104)

வெல்லத்தை வைத்திருந்த பாத்திரத்துள் தலைநீட்டி, 
மெல்லத் தின்றுவிட்டு, தலையும் வெளி வாராமல், 
எல்லாமும் முயன்றேதும் முடியாமல் மிக பயந்து 
நில்லாமல் வீடுமுற்றும் ஓடிடவே தொடங்கியது! (105)


பெற்றோரும் விழித்திட்டார், திருடனென நினைத்திட்டார்,
மற்றாரையும் அழைத்து, "சத்தமென்ன"  என்றுள்ளே
முற்றாகத் தேடியதில், பாத்திரத்துள் தலை நுழைத்துக் 
குற்றுயிராய் அலைந்த அம்மரநாயால் என்றறிந்தார்! (106)

மரநாயைப் பிடித்ததனைக் கட்டிவைத்து அதனுடைய, 
சிரம் மூடியிருந்த அப்பாத்திரத்தை இழுத்திட்டார்!
கரத்தோடு பாத்திரமும் வந்தபின்னர் உயிர்திரும்பி
மரநாயும் ஓடியது! வந்தவரெல்லாம் சிரித்தார்! (107)

புலனைந்தும் செயும்பாடு பெரும்பாடு என்பதுவும்
பலநேரம் புலனின்பம் பெருந்துன்பம் என்பதுவும்
நலம்வேண்டின் புலன்வெல்லல் மிகமுக்யம் என்பதுவும்
விலகாமல் குழந்தையவன் மனம்தன்னில் பதிந்ததுவே (108)

அடுத்த சம்பவம் அவரது தங்க வளையலைப் பற்றியது. தனியாக இருந்த குழந்தையைப் பார்த்த திருடன் ஒருவன் தங்க வளையலைக் குறி வைத்து வீட்டின் உள்ளே வர, அவரே அதைக் கழட்டும் விதத்தைச் சொல்லி அதை ரிப்பேர் செய்து எடுத்து வரக் கூறுகிறார். மிக்க மகிழ்ச்சியுடன் பொன்னுசாமி (அப்படித்தான் வந்தவன் தன் பெயரைக் கூறி இருந்தான் – தங்கத்திற்குச் சாமி!) தன் வளையலை ரிப்பேர் செய்து எடுத்து வரப்போகும் செய்தியைத் தன் வீட்டாருக்குக் குழந்தை கூறியது.

அவசரம் அவசரமாக வெளியில் வந்த குழந்தையின் வீட்டாருக்குப் பொன்னுசாமி தென்படவே இல்லை. கவர்ச்சி, திருடு, பேராசை, ஏமாற்றுதல், புலம்பல் ஆகிய அனைத்தையும் இந்த இரு சம்பவங்களும் ஆச்சார்யாளுக்கு விளக்கி விட்டன! ஆனால் வயதாக ஆக, சில ஆத்மாக்கள் பிறருக்காகவே அறநெறியின் அடிப்படையில் வேரூன்றி வாழ்கின்றனர் என்ற பேருண்மையை அவர் உணர்ந்தார்.

 - "What life has taught me" by Periyava in Bhavan's Journal



பொன்னுசாமி: 


காண்டம் : 1. அவதாரக் காண்டம்:
படலம் 9 : இளவயது நிகழ்வுகள்

ஒருநாள் அகத்தில் செல்வக் குழந்தையும் தனித்திருந்தான்
திருநாள் அன்றகத்தார் தத்தம் வேலையில் லயித்திருந்தார் 
தெருவிலே நின்றோர் கள்வன் வீட்டையே நோட்டமிட்டான்
திருவுடை வீடிதென்று, நினைத்ததைப் பார்த்திருந்தான் (109)

பொற்கழல் ஜல்ஜலென்ன, குழந்தையும் வாசல் வந்தான்
பொற்கரம் அணிந்திருந்த பொன்வளை கழலக் கண்டான்
தற்செயலாக அங்கே நின்ற அக் கள்வன் தன்னை
அற்பனை, நல்லோன் என்று நினைத்தொரு ஆணை இட்டான்! (110)


இந்தவோர் வளையைச் சற்றே சரிசெய்து தருவாய் நீயே

குந்தகம் ஏதுமின்றி சரியாகச் செய்வாய் நீயே
மந்தமாய் அன்றிச் சற்றே, விரைவுடன் செய்வாய் நீயே

உந்தன் பேரென்னவென்றும் சொல்லியே செல்வாய் என்றான் (111)



கள்வனும் மகிழ்ந்தான் அந்தக் குழந்தையை நோக்கிச் சொன்னான்

பள்ளியில் பயில்கின்றாயோ? சரியாகச் சொன்னாய்! சற்றே

தள்ளி, என் வீடும் உண்டு, வளையலை சரிசெய்திங்கே

துள்ளியே வருவேன் நானும், உனக்குமே கவலை வேண்டாம் (112)



இன்று ஓர் நல்ல நாளே! சரியான இடமே வந்தேன்!

உன்னையும் கண்டேன்! கண்டு, பொன்னையும் கொண்டேன் நானும்!
என் பெயர் பொன்னுசாமி, நினைவிலே கொள்வாய் என்றான்!
சொன்னவன் வளையலோடு ஓடினான், மறைந்து போனான்! (113)

நிகழ்ந்தவை அனைத்தும் பெற்றோர் தம்மிடம் சொல்லவென்றே
உகப்புடன் ஸ்வாமினாதன் ஓடினான் அகத்தினுள்ளே
மகனவன் வார்த்தை கேட்ட பெற்றோரும் பயந்து போனார்
மிகப்பெரும் கவலைகொண்டார், வெளியிலே வந்து பார்த்தார் (114)

சேதிகேட்டங்கே வந்தார் சுற்றத்தில் வசிப்போரெல்லாம்
வீதியில் பொன்னுசாமி என்றாரும் இருக்கக் காணார்!
"நீதியோ இது" என்றங்கே வந்தவர் எல்லாம் நொந்தார்
பாதிப்பு ஏதுமின்றி பிள்ளையும் பிழைத்தான் என்றார்! (115)

திருடந்தான் வந்தானென்று, உலகெலாம் நினைத்ததன்று!
தருவதற்கென்றே வந்த திரு அவன் முன்னே இங்கே
திருடந்தான் வந்திடுவானோ? வளையைத்தான் திருடிடுவானோ?
குரு அவன் நடத்தும் லீலா வினோதத்துள் இதுவும் ஒன்றோ ? (116)

ஆதிநாதன் கை தீட்சையைப் பெறவே அங்கே

மேதினி படைக்குமந்த விதியவன் தான் வந்தானோ? 

சோதியாய் வந்த கந்தன் தானுமே வந்திட்டானோ?
வேதியர் தலைவன் அந்த வ்யாஸனே வந்திட்டானோ? (117)

எப்படி நடந்ததென்று, பெற்றோரும் திகைத்து நின்றார்
தப்பதும் நடக்குமென்றும், கள்வரும் உளரே என்றும்
அப்படி நன்றும் தீதும் கலந்ததே உலகம் என்றும்
இப்பொழுதறிந்தான் பாலன்; மனதினில் பதித்திட்டானே! (118)

தில்லைத் திருவிழா:


ஸ்வாமிகளுக்கு 5 வயதிருக்கும். பரங்கிப் பேட்டையில் வசித்து வந்தார்கள். ஸ்வாமினாதனுக்கு, சிதம்பரத்தில் நடைபெற்ற திருவிழாவுக்குப் போக வேண்டும் என்று தோன்றியது. அழுதார். அடம் பிடித்தார். தகமப்பனார், குழந்தையைத் தூக்கிக் கொண்டு சிதம்பரம் சென்று விட்டார். தாயர் வரவில்லை. 

சிதம்பரம் வந்தாலும், குழந்தை, திருவிழா பார்க்கவில்லை. குழந்தை, ஒரு அறையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். தந்தை, குழந்தையை எழுப்ப மனம் இல்லாமல், சிதம்பரம் சென்று விட்டார். 

அன்று, சிதம்பரத்தில் வரலாறு காணாத ஒரு தீ விபத்து ஏற்பட்டது. 500 க்கும் மேற்பட்டோர், உயிர் இழந்தார்கள். தந்தை ஸ்வாமினாதனுக்கு விளக்கம்மாகச் சொல்லியவாறு வந்தார். 

தாயார் கனவு கண்டார். அதில், நிறைய பேர் அலறுவது போலவும், ஊரே எரிவது போலவும், கனவு. 

குழந்தையும், கணவரும் பத்திரமாக வந்த பின்னர் தான் பெருமூச்சு விட்டர் தாயார்


                         - "கருணைக் கடலே"  - பரணிதரன் 


சிதம்பரத் தலத்தில் நாளை திருவிழா நடக்குதங்கே
விதம்விதமாக வண்ண வேடிக்கைக் கூத்துமுண்டு
நிதம் அருள் தந்து நிற்கும் தலமது செல்வோமா நாம்?
இதமாகத் கேட்டார் தந்தை; சரியென்று சொன்னான் பிள்ளை! (119)

மறுநாள் காலை முதலே, பிள்ளையும் தொணதொணத்தான்!
சிறுவாய் திறந்து "வா நாம் சிதம்பரம் போவோம்" என்றான்
"பொறு நாம் பிறகு போவோம், அலுவலொன்றுண்டு" என்று
உறுதியாய் சொன்னார் தந்தை, அழுதங்கு நின்றான் பிள்ளை! (120)

"இப்போதே செல்ல வேண்டும், சிதம்பரத் தலத்தைப் பார்க்க
எப்போதும் நீங்கள் மோசம்! உங்கள் பேச்செல்லாம் வேஷம்!
செப்பியதொன்று நேற்று, செய்வது வேறு இன்று!"
அப்பதும் பெருகக் கண்ணில், அழுகையும் வெடிக்க நெஞ்சில் (121)

நிலம் புரண்டழுதான் பிள்ளை, தாயுமே துணைக்கு வந்தாள்
பலருமே உன்னைப் பார்த்து, கைகொட்டிச் சிரிப்பாரன்றோ?
குலக்கொழுந்தன்றோ நீயும்? எழுந்திரு என்று சொன்னாள்
சிலநேரம் அப்பா பேசும் வேடிக்கைப் பேச்சையெல்லாம் (122)

இறுதியென்றெண்ண வேண்டாம், நிச்சயம் அழைத்துப் போவார்,
வருத்தமே நீங்கி நீயும், சொக்காயைப் போட்டுக் கொள்வாய்,
உறுதியாய் கூட்டிப் போவார், சிரித்திடு என்று சொன்னாள்
திருமுகம் மலர்ந்து பிள்ளை, சிரித்துடன் கிளம்பி நின்றான் (123)

உள்ளமே உருகித் தாயும் விடைகொடுத்தனுப்பி வைக்க, 
பிள்ளையைத் தூக்கிக் கொண்டு சிதம்பரம் சென்றார் தந்தை
கிள்ளையைப் போலே கொஞ்சிப் பேசியே வந்த பிள்ளை, 
மெள்ளவே தூங்கிப் போனான், சிதம்பரம் வந்த வேளை! (124)

மகனவன் தூங்கக் கண்டு, எழுப்பவும் மனமும் இன்றி
தகப்பனும் உறவோர் வீட்டில், அவனையே விட்டுச் சென்றார்
உகப்புடன் திருவிழாவைப் பார்க்கவே வந்த பிள்ளை, 
சுகமாகத் தூங்கத் தந்தை திருவிழா பார்க்கச் சென்றார் (125)

திருவிழா பார்க்கச் சென்ற தந்தையோ கவலை கொண்டார்
திருமகன் தனித்திருப்பான், விழித்ததும் தன்னைத் தேடி
வருத்ததிலாழ்ந்து மீண்டும் அழுதே நின்றிடுவானென்று
கருத்திலே குழந்தை நிற்க, சுருக்கவே திரும்பி வந்தார் ! (126)

வந்தபின் சேதி கேட்டார், திருவிழா நடந்த வேளை
செந்தணல் வீசி நின்ற விபத்தையும் கேள்வியுற்றார்
வெந்தனர் பலபேர் என்று, செவிமடுத்துடல் பதைத்து,
நொந்தவர் பதறித் தாமும் பிழைத்தது சிவனால் என்றார் (127)

மாலையில் தூங்கப் போன பிள்ளையும் நன்றாய்த் தூங்கிக்
காலையில் விழித்தெழுந்தான், திருவிழா எப்போதென்றான் 
மாலையே முடிந்ததென்று, தந்தையும் சொல்லக் கேட்டு, 
சாலையில் புரண்டழுதான், "ஏனெனைத் தூங்க விட்டீர்? (128)

மறுபடி அங்கு சென்று திருவிழா பார்ப்போம்" என்றான்!

அறுமுகன் அவன் அருளால், ஈஸ்வரன் திருவருளால், 
மறு உயிர் பெற்றோம் நாமும் என்றவர் எடுத்துரைத்தார்
பெரும் உயிர்ச் சேதம் அங்கே வந்தது என்றும் சொன்னார் (129)

நம்பிக்கையின்றிப் பிள்ளை தந்தை சொல் யாவும் கேட்டான்
அம்பலம் சென்று அங்கே திருவிழா பார்ப்பதெட்டாக் 
கொம்பாகிப் போனதெண்ணி வருந்தினான் அழுகையோடு 
வெம்பினான், தந்தையோடு, ஊருக்குத் திரும்பி வந்தான் (130)

கணவனை, மகனைத் தானும் அனுப்பிய இரவில் அன்று
பிணங்களே குவிதல் போலும், ஊரெலாம் எரிதல் போலும்
நிணமது எரிந்து யாரும் ரணமுடன் அழுதல் போலும் 
குணவதி கனவு ஒன்று கண்டுயிர் குலைந்தெழுந்தாள் (131)

அறுமுகன் தோளில் துஞ்ச, பரமனே வந்தாற்போல
குருஅவன் தன்னைத் தாங்கி, தந்தையும் அகத்துள் வந்தார்!
இருவரும் காலை மீண்டும் அகத்துளே வந்தபின்னரே
மறுபடி உயிர்த்தாள் அவளும், பெருமூச்சு விட்டு நின்றாள்! (132)


தூங்கவைத்தவனைக் காத்துத் தந்ததோ இறையும் அன்று?
ஓங்கிடும் தீயும் சுடுமோ, அக்னியின் ரூபம் தன்னை?
பாங்குடன் கதையில் காட்சி வைத்திடும் இறைவன் லீலை,
நாங்களோ அறிவோம் இங்கே? யார்க்கிது புரியும் அம்மா? (133)

காண்டம் : 1  : அவதாரக் காண்டம்:

படலம்        : 10    :  பள்ளிப் படிப்பு


ஸ்வாமினாதரின் மேதாவிலாசத்தை இளமைப் பருவத்திலேயே கண்ட சாஸ்திரிகள், பாலகரின் எட்டாவது வயது வரையில் அவரை பள்ளிக்கு அனுப்பாமல், தாமாகவே அவருக்குக் கல்வி கற்றுக் கொடுத்து வந்தார். மேலும், தம் மைந்தருக்கு வெகு இளமைப் பருவத்திலேயே சங்கீதத்தில் பயிற்சியும் அளித்து வந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்னும் முதுமொழிப்படி ஒரு முறை கண்டதையும், ஒரு முறை கேட்டதையும் சிறிதும் மறவாத நுண்ணறிவு படைத்த தன்மையுடன் ஸ்வாமினாதர் விளங்கினார். மஹாலஷ்மி அம்மாள், தம் குழந்தைகளுக்குத் தாம் அறிந்த தோத்திரச் செய்யுட்களையெல்லாம் சொல்லி வைப்பார். இளம் ஸ்வாமினாதருக்கு அவற்றை மனப்பாடம் செய்வதில் விருப்பம் அதிகம். ஸமஸ்க்ருதம் கற்க அப்போது, ஸ்வாமிகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 


தந்தையார் திண்டிவனத்தில் இருந்தபொழுது, அவர் அவ்வூர் ஆற்காடு அமெரிக்கன் மிஷன் ஹைஸ்சூலில், இரண்டாவது ஃபாரத்தில் தம் மைந்தரை, முதன் முதலாகப் பள்ளிப் படிப்புக்குச் சேர்த்தார். 



- பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

ஊர்விட்டு ஊர்மாறும் வேலையிலே இருப்பதனால், 
பேர்சொல்லும் பிள்ளையினை அப்பாவே படிப்பித்தார்
நீர்விட்டு உரமும் இட்டு பயிரதுவே வளர்வதுபோல், 
வேர்விட்டு ஞானவிதை அழகுடனே வளர்ந்ததம்மா! (134)


சரஸ்வதியாய்ப் பின்னால் விளங்கிடும் பிள்ளைக்கு,
நரரூப சிவனுக்கு, சங்கீதம் கற்பித்தார் 
அரனவன் தாயாரும் ஸ்லோகமே படிப்பித்தாள்
அறம்வளர்க்கும் சங்கரனும் அத்தனையும் கற்றிட்டான் (135)


திண்டிவனம் எனுமூர்க்கு உத்யோகம் மாறியதும்
அண்மையிலே இருந்த 'அமெரிக்கன் மிஷனெனு'மோர்
பண்புடனே கிறித்துவர்கள் நடத்திவந்த பள்ளியிலே
கண்மணியை சேர்த்தவனின் கல்வியையே கவனித்தார் (136)

எட்டாம் வயதினிலே, இரண்டாம் வகுப்பினிலே
சிட்டாய்ச் சேர்ந்தவனும் கல்வியிலே சிறந்திட்டான்
"சட்"டெனப் பாடங்கள் மனதினிலே பதித்திட்டான்
"பட்"டென கேள்விக்கு பதிலெல்லாம் தந்திட்டான் (137)


ஸ்வாமிநாதர், ஒவ்வொரு வகுப்பிலும் முதன்மையாக விளங்கி, பரிட்சைகளிலும் முதன்மையாகவே தேறி, வருட இறுதிப் பரிசளிப்பு விழாக்களில், எல்லா முதல் பரிசுகளையும் பெற்று வந்தார். பைபிள் என்னும் கிறித்துவ மத நூலில் தேர்ச்சி பெற்றதற்கு முதல் பரிசும் அவருக்கே கிடைத்தது.
      - "பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு"

படிப்பிலே முதல்வன், வைக்கும் பரிட்சையில் முதல்வன் செய்து
முடிப்பதில் முதல்வன், பள்ளி வைத்திடும் போட்டி எல்லாம்
துடிப்புடன் கலந்து வென்று பரிசெலாம் வாங்கி நின்றான்
வடிவுடை பிள்ளை வெற்றிக் கொடியுடைப் பிள்ளை அம்மா! (138)

மதமெலாம் கடந்து நின்ற முதற்பொருள் என்று அன்றே
மதமெலாம் கடந்த அந்த முதற்பொருள் காட்டிட்டன்றே!
பதமுடன் பைபிளென்னும் கிறித்துவ மதநூலதையும்
இதமுடன் எடுத்துரைத்தான்,பரிசதும் வென்றானம்மா! (139) 


"நான், திண்டிவனம் பள்ளிக்குச் சென்று, பெரியவா படித்ததற்கு அடையாளமாக ஏதாவது கிடைக்குமா என்ற ஆர்வத்தில் தலைமை ஆசிரியர் அனுமதியுடன் பழைய ரிக்கர்டுகள் வைக்கப்பட்டிருந்த அறையைத் துழாவினேன். அதிசயத்திலும் அதிசயமாக ஒரு வருகைப் பதிவேட்டின் ஒரே ஒரு காகிதம்ட்டும் கிடைத்தது. அது 1904-ம் வருஷம் பெரியவா இரண்டாம் பாரம் படித்தபோது, அந்த வருகைப்பதிவேட்டின் ஒரு ஷீட். அதில் ‘சுவாமிநாதன்’ என்ற பெயரைக் கண்டபோது எனக்கு மகிழ்ச்சி நிலை கொள்ளவில்லை. மறுநாளே, ஆந்திராவிலிருந்து பெரியவாளைத் தரிசிக்கச் சென்றேன்…….

“என் பெயர் எல்லாருக்கும் கடைசியில இருக்கே,  பெரியவா படிப்பிலே மக்குன்னு நினைச்சியோ?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

"பேர் கடைசில வரதே...ன்னு நினைச்சிண்டேந்தான்"..என்று ஒப்புக்கொண்டேன்!

“என் பூர்வாசிரம தகப்பனாருக்கு, ஸ்கூல் இன்ஸ்பெக்டர் உத்யோகம். அடிக்கடி அவரை ஊர் மாத்திடுவா.  சிதம்பரத்திலே இருந்து திண்டிவனத்துக்கு செப்டம்பர் மாதம் மாத்தலாகி வந்தார். பாதியிலே வந்து இந்த ஸ்கூல்லே சேர்ந்தேன். அதனால்தான் என் பேரு கடைசியிலே இருக்கு"  என்று விளக்கம் தந்தார்.

 - "அன்பே அருளே" – பரணிதரன்


பாலனின் பெயருமாங்கே பள்ளியின் பதிவு ஏட்டில்
கோலமாய் யாவருக்கும் முடிவிலே இருந்ததம்மா!
சீலமே நிறைந்த இந்தப் பெயருமே இறுதியான
கோலமே ஏனிதென்று கேள்வியும் எழுந்ததம்மா! (140)

தந்தையின் வேலை மாற்றம், புதியதோர் ஊரே ஏக,
தந்தையும் பாதியாண்டில் புதியதோர் பள்ளி சேர்க்க,
விந்தையாய்ப் பெயருமங்கே இறுதியில் சேர்ந்ததென்று,
எந்தையே சொன்ன வார்த்தை சிந்தையில் வந்ததம்மா!  (141)

முதற்பொருள் அதுவே இங்கே முடிவுமாய் ஆனதென்று
முதல்வனும் நமக்கு அன்றே காட்டிய காட்சி ஈதோ?
முதலென்றும் முடிவுமென்றும் இவர்க்கொரு வரையுமுண்டோ?
எதனிலும் உறையுமந்த சக்தியின் விளையாட்டன்றோ? (142)


ஸ்வாமிநாதர் மூன்றாவது ஃபாரத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, அக்காலத்தில் பள்ளிக்கூட உதவி ஆய்வாளராக இருந்த சிங்காரவேலு முதலியார் என்பவர்  பள்ளியின் மேற்பார்வையின் பொருட்டு ஒரு முறை அங்கே வந்திருந்தார். அவர், ஸ்வாமிநாதரை சில கேள்விகள் கேட்க, ஸ்வாமிநாதரும் அவற்றுக்குத் தங்கு தடையின்றி பதிலளித்ததைக் கண்டு வியப்படைந்தார். அவர், ஸ்வாமிநாதரை பிற மேல் வகுப்புகளுக்கும் அழைத்துச் சென்று, அங்குள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அச்சிறுவரை அறிமுகப் படுத்தி, அவர்களின் வகுப்புக்குரிய பாடங்களிலிருந்தும்  கேள்விகளை அம் மாணவரிடம் கேட்கச் சொல்ல, சிறுவர் ஸ்வாமிநாதர் தயங்காமல் அவைகளுக்கும் விடையளித்தார்.
அப்போது, அந்த மேலதிகாரி, தமக்குக் கீழே வேலை செய்து வந்த சுப்ரமண்ய சாஸ்திரிகளின் புதல்வரே அச்சிறுவர் என்பதை ஆசிரியகர்கள் மூலமாக உணர்ந்து, சாஸ்திரிகளை அழைத்து, “உங்கள் மகன் பெரிய மேதாவியாக விளங்கப் போகிறான்” என்று கூறினார்தைக் கேட்ட சாஸ்திரிகள், மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனாலும், தனது புதல்வன், உலகம் போற்றும் ஒரு ஞானகுருவாக விளங்கப் போகிறார் என்ற எண்ணம் சாஸ்திரிகளின் உள்ளத்தில் அப்போது உருவாகவில்லை. அரசாங்கத்தில் பெரியதொரு உத்தியோகத்தை வகித்துச் சீறும் சிறப்புமாக தம் தனயர் விளங்குவார் என்ற எண்ணம் மட்டிலும் அப்போது சாஸ்திரிகளுக்கு உதித்தது.

                       - "பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு"

உயர் அதிகாரி ஓர்நாள் வகுப்பையே பார்வையிட்டார்
தயக்கமே இன்றி எந்தன் கேள்விக்கு விடைகள் தந்து
வியக்கவைத்திடுவார் யாரும் உளரோயிங்கென்று கேட்டார்
மயக்கிடும் வதனம் கண்டார்; குறுநகை தவழக் கண்டார் (143)

பாலனாம் ஸ்வாமிநாதன் கையையே உயர்த்தக் கண்டார்
வேலன்போல் திருமுகத்தில் ஒளிவீசி நிற்கக் கண்டார்
சூலமே இன்றி நிற்கும் சிவனென உருவைக் கண்டார்
சாலவும் நன்று என்றார்; கேள்வியே கேட்கலானார் (144)

கேட்டிடும் கேள்விக்கெல்லாம் பதிலுமே வருதல் கண்டார்
கேட்டவர் வியந்து நின்றார்; இவனையே விஞ்ச இங்கே   
போட்டியாய் யாருமில்லை என்பதும் அறிந்து கொண்டார்
காட்டுவோம் இவனை இங்கே அனைவர்க்கும் என்று சொல்லி (145)

அவனையும் கூட்டிக் கொண்டு, மேல்வகுப்பெல்லம் சென்றார்
"இவனையே பாரும் இங்கே! கேட்டிடும் கேள்விக்கெல்லாம்
தவறேதும் இன்றி ஏதும் தயக்கமும் இன்றி மிக்க
கவனமாய் பதிலே சொல்வான்! பரிட்சித்துப் பாரும்" என்றார்! (146)

அங்குளோரெல்லாம் பார்த்தார், நிறையவே கேள்வி கேட்டார்!
பொங்கிடும் அமுதம் ஒத்த பாலகன் பதில்கள் கேட்டார்
மங்கிடாப் புகழே கொண்டு இவனுமே உயர்ந்து நிற்பான்
சங்கையே இல்லை என்றார்; தந்தைக்கும் சொல்லி நின்றார் (147)  

நடந்தது எல்லாம் கேட்ட தந்தையும் மகிழ்ந்தார், "அந்த
இடப்புறம் மங்கை கொண்டோன் செயலன்றி யாது" என்றார்
சுடர்மிகும் சிந்தை கொண்டு, தனயனும் சிறப்பான் என்றும்
நடந்திடும் அரசில் நல்ல உத்யோகம் பார்ப்பான் என்றும் (148)

மகனவன் வாழ்வு பற்றி, மனதிலே எண்ணம் கொண்டார்! 
ககனமும் வானும் காண, தனிப்பெரும் வாழ்வு கொண்டு,
சுகரவர் போல அந்த முனியெலாம் வாழ்ந்தார்போல
மிகப்பெரும் வாழ்வே வாழ்வான் என்றவர் நினைத்தாரில்லை! (149)

ஸ்கூல் முடிஞ்சு நான் ஆத்துக்கு திரும்பச்சே மணி ஏழு கூட ஆயிடறதுண்டு. ஏன்னா வெளயாட்டு ஆசைதான். அப்போ கிரிக்கெட், ஸ்கூல் பசங்களோட வெளயாட்டு ஆகலே. கிட்டி புள்தான் உண்டு. இதை டெவலப் பண்ணித்தான் வெள்ளைக்காரா கிரிக்கெட் ஆக்கியிருக்கா. எனக்கு கிட்டி புள்ளுலே இண்டரஸ்ட் இல்லே. புட் பால்..ல கொஞ்சம் இஷ்டம். ரொம்ப இஷ்டம் பாட்மிண்டன் தான். ஆக்ருதி போறாததால (தமது உருவம் சிறுத்து இருந்ததை குறிப்பிடுகிறார்) ஒதைச்சு கிதைச்சு ஓடியாடி வெளையாடுற புட் பாலுக்கு திராணி போறலே. அதனால கால்பந்துக்கு பதில் பூ மாதிரி கைப்பந்து வெளையாட்டுலே போனது...பாட்மிண்டன் கூட நம்மூர் ல இருந்து தான் சீமைக்கு போய் அந்த பேர் வாங்கித்துன்னுவா. தெரியுமோல்லியோ...ஸ்கூல் முடிஞ்ச விட்டு பாட்மிண்டன் ஆடிட்டு தான் ஆத்துக்கு வரத்து. நேரம் போறது தெரியாம உத்சாஹம் இழுத்துண்டு போய்டும். "
பெயர் BADMINTON ஆயினும் அது GOODMINTON தான் என்று பெரியவாள் தமாஷ் செய்வதுண்டு.
காஞ்சி முனிவர் நினைவு கதம்பம் - அண்ணா ஸ்ரீ. ரா.கணபதி அவர்கள்.

பால்வண்ண ஆழிதன்னில் படுக்கைகொண்டான் அந்த
மால்வந்து வெண்ணெய் உண்ட பருவம் ஒத்தான் ஆட,
கால்பந்தும் கொஞ்சமுண்டு, பூப்பந்து நிறையவுண்டு
கோல்கொண்டு ஆடுமந்த கிட்டிப்புள் அதுவுமுண்டு! (150)

அலகிலா விளையாட்டுடையான் அனைத்தையும் ஆட்டுவிப்பான்,
பலருமே போற்ற நின்றான், படிப்பிலே சிறந்து நின்றான்,
கலந்துதம் தோழரோடு, விளையாட்டும் ஆடி நின்றான்
மலர்முகம் ஒளிர ஓடி ஆடியின்புற்று நின்றான் (151)


படிப்பெல்லாம் சேர்ந்தெந்தப் பாதமதைத் தேடிடுமோ
விடிவெங்கே என்றெதனை  தோத்திரமும் நாடிடுமோ
கடிதுயரே தீர்த்திடும் சங்கீதமெதைக் காட்டிடுமோ
முடிவான முடிவென்றெம் மூலமதைப் பற்றிடுமோ, (152)


அம்மூல முதல்வனுமே கவனமுடன் கற்றிட்டான்!
அம்மையுடன் அப்பனுமே ஆனந்தம் அடைந்திடவே
மும்மலமும் அறுப்பவனும் சங்கீதம் பயின்றிட்டான்!
இம்மியுமே பிசகாமல் தோத்திரங்கள் சொல்லிட்டான் (153)

வேள்வியதை செம்மையுடன் செய்திடுவார் பலன்பெறுவார்,
வேள்வியதைச் செய்திடுமோ பலனதுவும் தானுவந்து?
நாள்முழுதும் பக்திசெய்வார், ஆனந்தம் அடைத்திடுவார்,
நாள்முழுதும் பக்திசெய்மோ ஆனந்தம் தானுவந்து? (154)

வெண்தாமரை மலராள், கல்வியெலாம் தந்திடுவாள்
பெண்ணவளும் தானிறங்கி, கல்விகற்க வருவாளோ?
எண்ணிடவே எந்நலமும் அருளுமந்த திருமகளும்
நண்ணியந்த நலமதையே நாடியிங்கு வருவாளோ? (155)

பலனதுவும் தானுவந்து வேள்வியினைச் செய்தாற்போல்,
புலனடங்கும் ஆனந்தம் பக்தியிங்கு செய்தாற்போல்,
மலரமறும் வெண்துகிலாள் கல்விகற்க வந்தாற்போல்,
இலக்குமியாம் திருமகளும் நலம்வேண்டி வந்தாற்போல் (156)

ஞானத்தின் திருவுருவம் பள்ளியிலே சேர்ந்ததன்று!
மோனத்தின் வடிவதுவும் பாடமே படித்ததன்று!
வானத்தின் அமுததுவும் கல்வியே கற்றதன்று!
கானத்தின் இறையதுவும் சங்கீதம் பயின்றதன்று! (157)

காண்டம் : 1  : அவதாரக் காண்டம்:

படலம்        : 11    :  பள்ளி நாடகம்:

ஸ்வாமிநாதர், பள்ளியில் 1906வது ஆண்டில் நாங்காவது ஃபாரத்தில் பயின்று வந்தபோது, மாணவர்கள் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கென ஷேக்ஸ்பியர் என்னும் ஆங்கில மகாகவி எழுதிய "ஜான் மன்னர்"  என்னும் நாடகத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நாடகத்தில் ஆர்தர் இளவரசன் என்னும் முக்கிய பாத்திரத்தைத் தாங்கி நடிக்கத் தகுதியான மாணவன் கிடைக்கவில்லை. அப்போது, பன்னிரண்டு வயதே நிரம்பிய ஸ்வாமிநாதரின் நினைவு தலைமை ஆசிரியருக்கு வந்தது. உடனே அவர், ஸ்வாமிநாதரை அழைத்து, அந்தக் கதாபாத்திரத்தை அவரே நடிக்க வேண்டுமென்று கூறினார். 

இந்தச் செய்தியை பெற்றோறிடம் ஸ்வாமிநாதர் கூறி, அந்த நாடகத்தில் நடிப்பதற்குத் தேவையான உடைகளைத் தைத்துத் தரவேண்டுமென்று கேட்டிக் கொண்டார். பழமையில் ஊறிய அந்தப் பெற்றோர், தங்கள் புதல்வன் நாடகத்தில் நடிப்பதை விரும்பவில்லை. ஆனால், அருமைப் புதல்வனின் ஆசையைப் புறக்கணிக்கவும் அவர்கள் மனம் கொள்ளவில்லை. இந்த நிலையில், அவர்கள் ஸ்வாமிநாதருக்குத் தேவையான உடைகளைத் தைத்துக் கொடுத்து, நாடகத்தில் நடிப்பதற்கும் ஒருவாறு அனுமதி அளித்தார்கள். 

இரண்டே நாட்களில், ஸ்வாமிநாதர், அந்த நாடகத்தில் வரும் உரையாடல்களையெல்லாம் மனப்பாடம் செய்து கொண்டார். சொல்வன்மை படைத்த அச்சிறுவர், யாவரும் வியக்கும் வண்ணம் மிகத் திறமையுடன், அந்த நாடகத்தில் நடித்து, எல்லோரின் நன்மதிப்பையும் பெற்றார். அவரது ஒவ்வொரு பேச்சிற்கும், ஒவ்வொரு நடிப்ப்பிற்கும், எல்லோரும் கைகளைத் தட்டி, அவரை மென்மேலும் உற்சாகப் படுத்தினார்கள். அந்த நாடகத்தில் ஸ்வாமிநாதருக்கே முதல் பரிசு கிடைத்தது. ஆசிரியர்கள் எல்லோரும் மறுநாள் சாஸ்திரிகளது இல்லத்திற்கு வந்து, ஸ்வாமிநாதரது திறனைப் பற்றி அவரிடம் கூறித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். 

                - "பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு"


உலகம் என்னுமோர் மேடையிட்டு, உயிர்களை எல்லாம் ஆடவிட்டு
கலகம் செய்யுமம்மாயனிங்கே, நாடகம் ஒன்றும் நடித்துவைத்தான்!
அலகிலா விளையாட்டுடைத் தலைவன், ஜகமெலாம் போற்றும் துறவரசன்
பலருமே போற்றிடப் பள்ளியிலே, இளவரசாக நடித்து நின்றான்! (158)

ஆங்கில மாகவி  ஷேக்ஸ்ப்பியரின், "ஜான் மன்னர்" என்னுமோர் நாடகத்தை
ஆங்கந்தப் பள்ளியில் மேடையிலே, யாவரும் பார்க்கவே  நடத்திடவே
தாங்கரும் ஆவலும் கொண்டுவிட்டார் மாணவரவர்  அனைவருமே
பாங்குற "ஆர்தர்" இளவரசாய், நடித்திடும் மாணவன் யாரெனவே (159)

கேள்வி ஒன்றங்கு பிறந்தவுடன், ஸ்வாமிநாதனைத் தேர்ந்தெடுத்தார்!
ஆள்வேறில்லை, நீதானிப் பாத்திரம் நடிக்க வேண்டுமென்றார்
நாள்மிக இல்லை இரண்டு தினம் அதற்குள் வசனமே படியென்றார்
கேள் நீ, நாடகம் நடித்திடவே, கோட்டுடன் பூட்ஸுமே வாங்கென்றார்! (160)


"நாலாம் ஃபாரத்திலே படிக்கறச்சே, ஷேக்ஸ்ப்பியரின் 'கிங் ஜான்' நாடகத்தில் ஆர்தர் இளவரசராக பேசி சிறப்பாக நடிச்சதுக்கு 'ஒல்ட் இங்கிலீஷ்' புத்தகம் ஒண்ணு பரிசாகத் தந்தா. வேஷமெல்லாம் கிடையாது. வசனங்களை மனப்பாடம் பண்ணி, பேசி நடிக்கணும். அப்ப ஒரு குரூப் ஃபோட்டோ எடுத்தா. அதான் இது. இந்தப் ஃபோட்டோல நான் கைல வைச்சுன்டிருக்கறது, எனக்குப் ப்ரைஸ் வந்த புத்தகம் தான். இந்தத் தொப்பி, கோட்டு, பூட்ஸெல்லாம் என்னுது இல்லே. எங்கூட படிச்ச கிருஷ்ணஸ்வாமிகிட்ட இரவல் வாங்கிப் போட்டுண்டது" என்று கூறிச் சிரித்தார்...

                       -  "அன்பே அருளே" - பரணீதரன்


பெற்றோரிடமிச் சேதியினை ஸ்வாமிநாதனும் சொல்லி நின்றான்
சற்றேனும் மனம் ஒவ்வாமல் பெற்றோருமதை மறுத்து நின்றார்!
முற்றாயனுமதி மறுத்திடவே, மனமுமேயின்றி தவித்திருந்தார்
உற்றங்கவனும் கெஞ்சிடவே, கரைந்துருகியே, "சரி" என்றார்!  (161)

வரும் நாளில் எழுதி வைத்து எதையும் பேசா முனிவனவன்
இரு நாளில் வசனமெலாம் மனனம் செய்தே முடித்திட்டான்
அரும்காவி அன்றேதும் அணிந்தறியா அவனுமன்று,
பெரும்கோட்டு, பூட்ஸெல்லாம்  நண்பன்தரவே உடுத்திட்டான்  (162)

ஆடல் வல்லானவன், கூத்தனும் அவனே அன்றோ?
வேடமே பூண்டு தானும், மனிதனாய் நடித்த மாயன்
நாடக மேடை ஏறி, நண்பரும் வியந்து நிற்க, 
பாடமே செய்த யாவும், பாங்குடன் பேசி நின்றான் (163)

ஆர்தர் இளவரசன் தன்னை, நேரிலே கொண்டு வந்தான்
ஆர் இந்தப் பையன் ? இவ்வளவழகாக  நடிக்கும் இவனே
ஆர் என்றெல்லாரும் கேட்க, அற்புதம் செய்து நின்றான்
மார்தட்டி மகிழ்ந்தார் அந்த தலைமை ஆசிரியரும் அங்கே!  (164)

அகிலத்தை மாயை கொண்டு கட்டியே வைக்கும் தேவன்
உகிர்ந்திட்ட வார்த்தைக்கெல்லாம், நடித்திட்ட நடிப்பிற்கெல்லாம்
மகிழ்ந்தனர் நண்பரெல்லாம்; ஆசிரியரெல்லாம் மகிழ்ந்தார்
பகிர்ந்தனர் மகிழ்ச்சியெல்லாம் கைதட்டி அனைவரோடும் (165)

ஆசிரியரெல்லாரும் சேர்ந்து, சாஸ்திரியின் அகமே வந்தார்
"காசினி போற்றுமாறு, வருவான் உன் பிள்ளை" என்றார்
"வாசித்த வசனம் எல்லாம் அழகாகச் சொன்னான் பிள்ளை!
பேசிய அழகில் எங்கள் உள்ளங்கள் எல்லாம் கொள்ளை  (166)

எப்போதும் படிப்பில் வெல்வான்! பரிசெலாம் அள்ளிக் கொள்வான்
இப்போதும் படிப்பில் வென்றான், நடிப்பிலும் முதலாய் வந்தான்!
அப்பாவின் பெயர் விளங்க வைத்திடும் இவனைப் போல, 
எப்போது பார்ப்போம் இங்கே இன்னொரு பிள்ளை" என்றார்! (167)

பூரித்து நின்றார் தந்தை! மிகவுமே பெருமை கொண்டார்!
வாரியணைத்தே மகனை, தாயுமே உச்சி மோந்தாள்
ஊரினில் யாரும் போற்ற, இவனுமே வாழ்வான் என்றார்! 
பாரினில் நம்பேர் சொல்ல வந்தனன் இவனே என்றார்! (168)


காண்டம் : 1  : அவதாரக் காண்டம்:
படலம்        : 12    :  உடன்பிறந்தோர்

மஹா பெரியவா அவதரித்த பிறகு அந்தக் குடும்பத்தில் அடுத்தடுத்து நாங்கு குழந்தைகள் பிறந்தன. பெரியவாளை அடுத்து ஒரு பெண் குழந்தை - லலிதாம்பா. பின்னர், சாம்பமூர்த்தி, சதாசிவம், கிருஷ்ணமூர்த்தி என்று மூன்று தம்பிகள். இப்படி ஆறு குழந்தைகள் பிறந்து ஷண்மதம் போல் அமைந்துவிட்டன. இதில் அதிசயம் என்னவென்றால், அவர்களுக்கு வைத்த பெயர்களும் ஷண்மதத்துக்கு ஏற்ப தானாகவே மிகப் பொருத்தமாக அமைந்து கிடப்பதுதான். 

காணாபத்யத்துக்கு கணபதி, கௌமாரம் - ஸ்வாமிநாதன், சாக்தம் - லலிதா, சௌரம் - சாம்பமூர்த்தி (சூரியன்), சைவம் - சதாசிவம், வைஷ்ணவம் - கிருஷ்ணமூர்த்தி. 

                         - "கருணை தெய்வம் காஞ்சி முனிவர்" - கணேச சர்மா

ஷண்மதம் புதுப்பிக்க வந்திட்ட சங்கரன்
எண்ணிட வந்திங்கருள்புரி சங்கரன்
தண்ணருள் தந்திட வந்திடும் சங்கரன்
மண்ணினில் இவ்வகம் வந்துதித்தானே! (169)

முதலில் கணபதிவர, நாதனும் பின்வர,
இதமுடன் லலிதையும் ஆங்கே உடன்வர,
பதமருள் சாம்ப சதாசிவ மூர்த்தியும்
நிதமொளிர் கிருஷ்ண மூர்த்தியும் வந்தனர்! (170)

தும்பிக்கையானுடன் காணாபத்யமும்
தம்பியுடன் புகழ் ஓங்கு கௌமாரமும்
அம்பிகை அவள் வர அழகாய் சாக்தமும்
நம்பியாம் சாம்பமூர்த்தியால் சௌரமும் (171)

'சிவன் சார்' சதாசிவ மூர்த்தியால் சைவமும்
நவகிருஷ்ண மூர்த்தியால் வைணவமதுவும்
பவரோகம் அறுக்கும் அறுமதம் என்று
தவம்நிறை அகத்திலே மலர்ந்தது அம்மா! (172)

அறுமதம் ஸ்தாபனம் செய்தனன் சங்கரன்!
அறுமுகன் வடிவென வந்தனன் சங்கரன்!
அறுமதம் பெயரிலே விளங்கிடும் அகத்திலே
அறுதியிட்டிறையது நிலைத்திட வந்தனன்! (173)

குமரனின் வடிவென வந்ததோர் பிள்ளை
இமயவன் மகளது பிள்ளையப் பிள்ளை,
குமரனின் பெயருடன் உதித்திட்ட பிள்ளை,
நமக்கருள் செய்திட வந்ததப் பிள்ளை! (174)


"சாச்சு பிறவியிலியே ப்ரம்மம்தான் தெரியுமோ?" - சிவன் சார் பற்றி, பரமாச்சார்யாள்

சிவனவன் வடிவென வந்ததோர் பிள்ளை,
'சிவன்' எனப் பெயருடன் திரிந்ததப் பிள்ளை!
தவமுடைத் தமயனின் வாயினால் தம்மின்
தவமுடை சீலனாய்ப் பேர்பெற்ற பிள்ளை! (175)


"எங்கள்ள ஒத்தராவேதான் அண்ணா இருந்தார். நான், ஆத்துக்கே செல்லம்னு பேரு. அதைவிட்டா, அண்ணாக்குதான் ஜாஸ்தி அட்டென்ஷன்" என்றார், ஸ்ரீசரணர்

“நாங்கள்ளாம் கொட்டம் அடிப்போம். அண்ணா ஸாதுவா இருந்துண்டு இருப்பார். அவர் மௌன பார்க்கவ கோத்ரம். அதைச் சொல்லி, ‘அதுக்கேத்த மாதிரி மௌனி, மௌனி’ன்னு தமாஷ் பண்றது” என்றார். 

மாதாமஹர் வேதவித்வான் என்பது மட்டுமன்றி கந்தனின் பிதா நரஸிம்ஹ சாஸ்திரியும் அத்யயனம் செய்து வைதிக வாழ்க்கை நடத்தியவர். அதனால் அவர் எட்டு வயஸிலேயே பிள்ளைக்கு உபநயனம் செய்து வேதப் பயிற்சி தொடங்கிவிட்டார்.

 “அவருக்கு முழு வித்யாஸமா, இங்கே எங்காத்திலேயானா அப்பா ஸர்க்கார் உத்யோகம். அதுபோக பாக்கி வேளையெல்லாம் ஆத்துல ஸங்கீதக் கச்சேரிதான். நானா ஸ்கூல், ஸ்கூலாத் திண்டாடிட்டு, கடைசில அமெரிக்கன் மிஷன் ஸ்கூல்ல படிச்சிண்டிருந்தேன். அண்ணாதான் பூர்ண வைதிகம், அண்ணாதான் பூர்ணவைதிகம்” என்று நெஞ்சார்ந்த மரியாதைத் தழதழப்புடன் கூறினார், உணர்ச்சிகளை வெகுவாகக் கட்டுப்படுத்தும் ஸ்ரீசரணர். 

“அவர் இங்க்லீஷ் படிப்பே படிச்சதில்லே. நாங்கள்ளாம் போட்டுப் பொளப்போம். அவருக்கு இங்க்லீஷ் தெரியலைனு சிரிச்சுக்கிண்டு சாந்தமாகவே இருந்துடுவார். “நாங்க ட்ராயர், ஷர்ட், கோட்டுக்கூட, காப் எல்லாம் போட்டுக்கொண்டு அமக்களப்படுத்தினாலும் அவருக்குக் கொஞ்சங்கூட அந்த ட்ரெஸ்ல சபலம் கெடயாது. பால்யத்திலேயே அப்டியொரு மனஸுக் கட்டுப்பாடு. சாந்தி, தாந்தி  ரெண்டுமே ஸ்வாபாவிகமா அவருக்கு இருந்தது. 

பரங்கிப்பேட்டை ஸாயபுமார்கள்ளேருந்து நம்மாத்துல அப்பாவுக்கு ஸகல விதமான ஜனங்களும் ஃப்ரெண்ட்ஸ். இந்த நாள் ஃபாஷனுக்கு நாங்க இருந்த தினுஸு ரொம்ப தூரந்தான்; அதுவும் அம்மா வெறும் நாள்லயே ஏறக்கொறய தெவச மடி பார்க்கரவதான்-னாலும் அந்தக் கால தசைக்கு அப்பா இந்த மாதிரி விஷயத்துல கொஞ்சம் கொஞ்சம் ‘முற்போக்கு’ன்னு சொல்றேளே, அந்த மாதிரி. இப்டி இருக்கற எடங்கள்-ல நெருப்பாட்டம் ஆசாரமாயிருக்கறவாளுக்கு ரொம்ப ச்ரமமும் எரிச்சலுமாத்தானே இருக்கும்? அண்ணா செறு வயஸானாலும் நெருப்பாட்டம் மடி! ஆனாலும் எங்காத்துல எல்லாத்துக்கும் சாந்தமா நெகிழ்ந்து குடுத்துண்டு அவர் பாட்டுக்கு ஒதுங்கியிருப்பார்.” 

பிறிதொரு ஸமயம் சொன்னார். ” ஆசார்யளோட பீடத்துல ஒக்காரணும்னா எவ்வளவு வைதிக பரிசுத்தி வேணுமோ அவ்வளவும் எனக்கு முன்னாடி இருந்தாரே அவருக்குத்தான் இருந்தது. ஏன் பின்னே அத்தனை சுருக்க அவரை ஆசார்யாள் தங்கிட்டயே எடுத்துண்டுட்டார்னு யோஜிச்சு, யோசிச்சுப் பாத்திருக்கேன். முடிவா, என்ன தோணித்துன்னா, வரப்போற அவைதிக ப்ரளய ஸமுதாயத்துக்கு அத்தனை சுத்தரை ஆசார்யராப் பெற லாயக்கில்லை-னுதான் அவரை எடுத்துண்டு, என்னை அங்கே இழுத்து ஒக்காத்தி வெச்சிருக்கார் போலேயிருக்குன்னு!” அவர் சிரித்துக்கொண்டுதான் சொன்னார். கேட்டவர்களுக்குத்தான் நெஞ்சு தழுதழுத்தது. 

   - "கருணைக் காஞ்சி கனக தாரை" - ஸ்ரீ. ரா. கணபதி அண்ணா


அறுவராம் இவரையும் தவிர ஆங்கே
திருவுடைச் செல்வனாய் இருந்ததோர் பிள்ளை!
அறுவரைப் பெற்றநற் தாயவள் அக்காள்
திருவயிறுதித்த சீர்த்தவமுடைப் பிள்ளை!  (176)

ஆங்கிலம் தெரியாப் பிள்ளை நீ என்றும்
பாங்குடன் பேசா மௌனி நீ என்றும்
ஓங்கிடும் கேலிப் பேச்சுக்கு எல்லாம்
தீங்கிலா புன்சிரிப் பொன்றையே உதிர்த்து (177)

சிறந்திட்ட லஷ்மி காந்தனாம் பிள்ளை!
அறம்வளர் காஞ்சிப் பீடமே ஏறி
திறமுடன் நின்று நான்கிரு நாளில்
பரனவன் பாதம் கலந்ததப் பிள்ளை! (178)


காண்டம் : 1  : அவதாரக் காண்டம்:
படலம்        : 13    :  உபநயனம்

வேத வேத்யனான நடராஜனின் திருத்தலமான சிதம்பரத்தில் இருந்த நாட்களில், காந்தன் வேதஸுக்தங்கள் சொல்வான். அந்தப் பத்து வயது சுத்தப் ப்ரம்மச்சாரி ஓத, ஆறு வயது "கிணி", அமரிக்கையாக அமர்ந்து அவற்றைக் கேட்ட நாட்களுண்டு. அந்தக் "கிணி" (கன்னடத்தில், 'கிணி' என்றால், 'கிளி'!!) வேறு யாரும் இல்லை, உத்தர ஆஸ்ரமத்தில் நமது பெரியவாதான். அந்தக் கிணிக்கு, வேத சப்தத்தில் ஏதோ ஈர்ர்ப்பு இருக்கவேதான் அப்படி அமர்ந்த்து கேட்டிருக்கவேண்டும்.



வேதத்துக்குப் புது வாழ்வு தரவென்றே வந்த அவதாரத்துக்கு, அந்தப் பொறி அன்றே கனன்றிருக்கிறது!



கேட்டதை அப்படியே பிடித்து ஜ்வலிக்கச் செய்யும் கர்ப்பூர மூளையாதலால், புரியாத அந்த வேதபாஷையின் வேத மந்திரம் சிலவும் கிணிக்கு மனப்பாடமாகிவிட்டது! 



உத்ஸாஹமாக கோஷிப்பான். 



ஆனால், பாவம்!

அகத்தார் உபநயனமாகதவன் வேதம் சொல்லக்கூடாதென்று தடுத்துவிட்டார்கள். இவன் செல்லந்தான், அவர்களும் துளி ‘முற்போக்கு’ எனப்படுவதுதான் – என்றாலும் வைதிகாசார முறைக்குப் பெரும்பாலும் கட்டுபட்டவர்களே ஆதலால் கண்மணிக்கும் இந்தக் கட்டுபாடு"

  - "கருணைக் காஞ்சி கனகதாரை" - ஸ்ரீ. ரா.கணபதி அண்ணா

சின்னஞ்சிறு கிளியொன்றங்கே, மற்றொரு கிளி சொல்கேட்டு,
பென்னம்பெரு மறைவாக்கோத, பெற்றவர் அகமகிழ்ந்தார்!
என்னதான் சுவையென்றாலும், உபனயனமாகிடாமல்
தன்னாலே சொல்வதொவ்வாதவருமே தவித்திருந்தார்! (179)

"தந்தையார் தம் குலத்துக்குரிய சம்ஸ்காரங்களையெல்லாம் அந்தந்தக் காலங்களில் ஸ்வாமினாதருக்குச் செய்வித்து, உரிய காலத்தில் (1905 வது வருடம், திண்டிவனத்தில்) உபனயனத்தையும் நடத்தி வைத்தார். உபனயன காலத்தில் பீடத்தின் 66வது ஆசார்ய ஸ்வாமிகள் ஸ்வாமிநாதரை ஆஸீர்வதித்துப் பிரசாதம் அனுப்பியிருந்தார்கள்."

- பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

அகவையும் பதினொன்றாக, தந்தையைக் கேட்டாள் அன்னை,
"மகனுக்குப் பூணல் போடும் வயதும் வந்துற்றதிங்கே,
பகலவன் போல பிள்ளை முகமலர் ஒளிர வேண்டும்,
அகமுமே சிறக்க வேண்டும், ஆவன செய்வீர்" என்றாள்! (180)
"நிச்சயம் செய்ய வேண்டும், இதிலென்ன சங்கை" என்றார்
அச்சிவன் மனமே போல, யாவையும் நடக்கும், பிள்ளை,
பச்சிளம் பாலனில்லை; அவனுமே வளர்ந்துவிட்டான்,
கச்சிதமாக பெரியோர் ஆசியால் நடக்கும்" என்றார் (181)

பெரியோரைக் கலந்து ஆங்கோர் தேதியும் உடன் குறித்தார்
எரிதழல் ஓம்பிப் பூசை செய்யவே வகையும் செய்தார்
கரிமுகன் பெயரைச் சொல்லி, அரிஅரன் பெயரைச் சொல்லி,  
விரிஞ்ஞனும் போற்றும் அந்தப் பொருளையே எடுத்துச் சொல்ல,  (182)

ஆயத்தம் செய்து நின்றார், பாலனும் மகிழ்ந்து நின்றான்
தாயவள் வீட்டை நன்கு அணிசெய்து, புனிதம் செய்தாள்
தூயவன் பூணல்காண, உறவினர் எல்லாம் வந்தார்
மாயவன், மருகன், அண்ணன், அமரரெல்லாரும் வந்தார் (183)

"இப்போ மடத்துக்கு பேரும் புகழும் வந்திருக்குன்னா....அது என்னாலதான்..ன்னு நெனைச்சிண்டு இருக்கா. அது அப்டி இல்லே! எல்லாம் கலவைப் பெரியவா குடுத்த பாக்யம்" 
 - பெரியவா, கலவைப் பெரியவா பற்றிச் சொல்லும்போது....

கலவையின் பெரியவாளும், குழந்தையை வாழ்த்தி அந்த
நிலவணி நாதனுக்கு, பரிசெலாம் அனுப்பி வைத்தார்!
நலமுமே குழந்தை வாழ, பூணலாம் விழாச் சிறக்க
உலகுமே சிறந்து வாழ ஆசியும் வழங்கி நின்றார் (184)

மந்திரப் பொருளாம் அந்த மாமறைமூர்த்திக்கிங்கே
மந்திரோபதேசம் செய்யப் பெற்றவர் முனைந்துவிட்டார்
மந்திரம் தேடும் நாதன் மந்திரம் சொல்லத் தந்தை 
மந்திரம் ஓதிப்பூணல் எடுத்தணிவித்து நின்றார் (185)

மயர்வெலாம் நீக்குமந்த பரப்ரம்மரூப நாதன் 
அயர்வழித்தறிவை நல்கும் உயர் சிவ ஞான போதன் 
நயனங்கள் மூன்றுகொண்ட நாதனுக்கு நன்கு உப 
நயனமே செய்து உள்ளம் மகிழ்ந்தனர் பெற்றோர் தாமும்! (186)

காலையில், மதியம், மாலை ஜபமெலாம் செய்துக் கல்விச் சாலையும் இதற்கிடையில் அவனுமே சென்று வந்தான்! வேலையே வேதமென்று ஆகிடாபோதும்கூட சோலையாய், தென்றல் காற்றாய், வேதமே இருக்கக் கண்டான்! (187) மறையதன் திலகமன்ன காயத்ரி மந்த்ரம் தன்னை மறையது தேடும் பாதன் மனதிலே பதித்து வைத்தான்! மறையதும் ஓதி வேத உபனிடதமதுவும் ஓதி மறையதே வடிவாய் வந்த மூர்த்தியும் மகிழ்ந்திருந்தான்! (188)

காண்டம் : 1 : அவதாரக் காண்டம்:
படலம் : 14 : குரு தரிசனம்

பூணல் விழா முடித்து, மகனுடன் பெற்றோர் சென்று
ஆணவம் கன்மம் மாயை அனைத்தையும் வென்ற அந்தக்
காணரும் குருவின் ஆசி வேண்டியே நமஸ்கரித்தார்
மாணவன் வருகைக்காக குருவுமே காத்திருந்தார்! (189)

ஒளிர்ந்திடும் விழிகள் கண்டார்; கூரிய நாசி கண்டார்
மிளிர்ந்திடும் வதனம் கண்டார்; சாந்தமாம் ரூபம் கண்டார்
களிதரு நடையைக் கண்டார்; மார்பிலே நூலும் கண்டார்
விளிப்பறு எழிலைக் கண்டார்; சங்கரன் என்றும் கண்டார்! (190)

ஸ்ரீ காமகோடி பீடத்தின் 66ஆவது பீடாதிபதிகள், ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதீ என்ற பெயருள்ள அப்போதைய ஆசார்ய ஸ்வாமிகள் தென்னாற்காடு மாவட்டம், திண்டிவனம் தாலுக்கா, பெருமுக்கல் என்னும் சிற்றூரில் விஸ்வாவஸு வருடம் (1906) சாதுர்மாஸ்ய ஸங்கல்பத்தில் இருந்தபோது, சிறுவர் ஸ்வாமினாதரது தந்தையார், குடும்பத்துடன் ஸ்வாமிகளைத் தரிசிக்கச் சென்றார். அப்போது, நித்திய பூஜையில் வீற்றிருந்த ஸ்வாமிகளின் கருணா கடாட்சம் பாலகர் ஸ்வாமினாதர் மீது விழுந்தது. 

ஸ்வாமிகள், இளைஞர் ஸ்வாமினாதரை அடிக்கடி சந்தித்து, பல கேள்விகளையெல்லாம் கேட்டு, அதிசயிக்கத் தக்க அப் பாலரது மறுமொழிகளாலும், அவரது வசீகர முகத் தோற்றத்தினாலும் மேதைமையாலும் மகிழ்ச்சி பெற்று, "இவன் ஒரு மஹா புருஷனாக விளங்கப் போகிறான்" என்று அங்கு கூடியிருந்தோர்களிடம் தெரிவித்தார்கள். 


ஸ்வாமிகள், ஸ்வாமினாதரை அடிக்கடி மடத்தின் முகாமிற்கு அழைத்து வருமாறு கட்டளையிட்டு  வந்தார்கள். அவ்விதமே, சாஸ்திரிகளும் பிறகு, பல முறை தம் குமாரரை ஸ்வாமிகளிடம் அழைத்துச் சென்றார். குருனாதரின் அருளும் சிறுவருக்குப் பெருகத் தொடங்கியது. 

                      - பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

குருவவர் நோக்கக் கண்டான்வாழ்க்கையின் நோக்கம் கண்டான்
இருவிழி தீட்சை தன்னில்பிறவியின் பயனைக் கண்டான் 
திருவுடை ரூபம் தன்னில் கனிவுடைக் கடவுள் கண்டான்
அருள்தருவாயென் ஐயா என்றவர் அடியில் வீழ்ந்தான் (191) 

அடியினைப் பணிந்த கன்றை ஆசியால் அணைத்துவந்தோர்
குடிநலம் கேட்டு அன்பாய்குருவுமே அருளும் செய்தார்
வடிவுடைச் சிறுவன் தன்னைபரிவுடன் நோக்கி “நீயும்
விடியலில் எழுந்து நித்தம் செய்திடும் கடமையெல்லாம் (192) 

ஸ்ரத்தையாய்ச் செய்கின்றாயோ? காயத்ரி சொல்கின்றாயோ?
பரமனின் பாதம் பற்ற, நாமமே வழியாம் கலியில்!
அரனவன் நாமம் தன்னை, அரியவன் நாமம் தன்னை
வரமெலாம் தருமாமந்த தேவியின் நாமம் தன்னை (193) 

கனம்தரும் குழலாள் காஞ்சிக் காமாக்ஷி நாமம் தன்னை,
மனமொன்றி நிதமும் நீயும் ஜபமுமே செய்கின்றாயோ?”
வினவிய குருவின் முன்னே, பணிந்து வாய்பொத்தி நின்று
“தினமுமே உங்கள் அருளால், நடக்கின்றதென்று” சொன்னான் (194) 

பதிலையே கேட்டு நெஞ்சம் பூரித்து குருவும் சொன்னார்,
“எதிலுமே சிறப்பான் உங்கள் மதிநலம் கொண்ட பிள்ளை!
அதிவிரைவாக மேன்மை அடைந்திவன் உயர்ந்து நிற்பான்
கதிரவன் ஒத்தான் இவனை அடிக்கடிக் கொணர்ந்து இங்கு  (195) 

வாருங்கள், உலகமெல்லாம் உய்யவே” என்றும் சொன்னார்
சீருடைக் குருவும் சொன்ன வாக்கிலே மகிழ்ந்த பெற்றோர்
கோரும் வரம் அளிக்கும் குருவவர் முன்னர் தங்கள்
பேறுடைப் பிள்ளையவனை அடிக்கடி அழைத்து வந்தார்! (196) 

பாலனின் வருகை கண்டு குருவுமே மகிழ்ந்திருந்தார்!
காலமும் கணக்கும் நீத்த காரணன் இவனே என்று
தூலமாம் உருவில் வந்த சங்கரன் இவனே என்று
சூலமும் மழுவும் நீத்து வந்துளன் இவனே என்று  (197) 

கண்டுளம் நெகிழ்ந்து கலவைப் பெரியவா மகிழ்ந்திருந்தார்!
கண்டபோதெல்லாம் நிறைய கேள்வியும் கேட்டிருந்தார்!
விண்டவன் பதிலைச் சொல்ல, உளமுமே நிறைந்திந்தார்!
தொண்டவன் செய்யத் தாமும் நிறைவுடன் ஏற்றிருந்தார்! (198) 


காண்டம் : 1 : அவதாரக் காண்டம்: படலம் : 15 : குருவைத் தேடிப் பயணம்

இவ்வாறு நிகழ்ந்து வந்த காலத்தில் ஒரு நாள், திண்டிவனத்தில் ஸ்வாமினாதரைக் காணவில்லை. பெற்றோர்கள், எல்ல இடத்திலும் தேடிப்பார்த்து விட்டார்கள். அகப்படவில்லை. இவ்விதம் இரண்டு நாட்கள் தவித்த பின்னர், ஐந்து மைல் தூரத்திலுள்ள ஸ்வாமிகளின் முகாமிலிருந்து ஒருவர் திண்டிவனத்திற்கு வந்து, ஸ்வாமினாதர், ஸ்வாமிகளைக் காண அவ்விடம் வந்திருப்பதாகவும், சௌக்கியமாயிருப்பதாகவும் கூறி, இச்செய்தியைச் சொல்லி வரும்படி ஸ்வாமிகள் கட்டளையிட்டார்களென்றும் தெரிவித்தார். 
          
                                 - பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

பாலனும் ஒருநாள் குருவைக் காணவே எண்ணி விட்டான்
காலமும் கருதாதுடனே தோழனை அழைத்துக் கொண்டான்
"சாலவும் நன்றாம் குருவின் சன்னதி, போவோம்" என்றான்,
மூலமாம் முதல்வன், தோழன் இருவரும் கிளம்பி விட்டார்! (199)

"தாயிடம் சொல்லிப்போவோம்" என்றந்தத் தோழன் சொல்ல,
"தாயிடம் சொன்னால், தந்தை வந்தபின் செல்லென்பாரே!
ஆயினும் தந்தை வரவோ, மாலையும் ஆகும், அதனால்,
தாயிடம் வந்த பின்னர் சொல்லலாம்" என்று சொன்னான்!  (200)

இருவரும் காலை வேளை, பயணமே புகுந்து விட்டார்!
குருஅவர் தொலைவிலில்லை; நடந்திடும் தூரத்தில்தான்,
அருகிலே இருக்கும் அந்த மடத்திலே உள்ளாரென்று
ஒருவித சேதி கேட்டு, இருவரும் செல்லலானார்!  (201)

நடந்திளைத்தவரும் சென்று அடைந்தனர் மடத்தின் ஜாகை!
மடத்திலே குருவும் இல்லை, யாத்திரை சென்றார் என்றும்
இடமது இன்னும் தூரம் என்றுமே கேள்வியுற்றார்!
உடனவர் மீண்டும் குருவைப் பார்க்கவே கிளம்பி விட்டார்!  (202)

சிறுவர்கள் அவரும் சேர்ந்து, மீண்டுமே நடந்து சென்று,
உறுபதம் அளிக்கும் அந்த குருபதம் சேர்ந்து விட்டார்!
பெருந்தொலைவதைக் கடந்து, குருவிடம் சேரும்போது,
ஒருபகல் கடந்து மாலை வேளை வந்துற்றதங்கே! (203)

அங்குளோரெல்லாம் வந்த சிறுவர் கண்டதிசயித்தார்!
"எங்கு நீர் வந்தீரென்றே", இவரையே வினவலானார்
"சங்கர குருவைப் பார்க்க, ஓடியே வந்தோம்" என்றும்
"பங்கயத் திருப்பாதத்தில் பணிந்திட வந்தோம்" என்றும் (204)

குழந்தைகள் சொல்லக் கேட்டு, குருவிடம் கூட்டிச் சென்றார்
கழல் பணிந்தெழுந்த சிறுவர் தம்மையே கண்டார் குருவும்!
அழகிய வதனம் சோர்ந்து வாடியே இருக்கக் கண்டார்!
"வழங்குக உணவை முதலில், வாருங்கள் பின்னர்", என்றார்! (205)


"ஆச்சார்யரோ, 'முதலில், ஆத்திலே சொல்லிட்டு வந்தாயா?' என்று கேட்டார். 'இல்லை ஸ்வாமி! உங்களைப் பார்க்கணும்னு தோணித்து; உடனே கிளம்பி வந்துட்டேன்" எங்கிறான் குழந்தை. இதற்காக குரு சந்தோஷப்பட்டாராம். ஏனெனில், இப்படி வீட்டையும் வாசலையும் விட்டு வரவாதானே அவருக்கு வேணும்!"
 - கருணை தெய்வம் காஞ்சி முனிவர்" - எஸ்.கணேச சர்மா

கிங்கரர் கொடுத்த உண்டி, உண்டபின் களைப்பும் நீங்கி,
மங்கல குருவின் பாதம் நாடியே வந்த பேரை,
அங்கவர், "அகத்தில் சொல்லி வந்தீரோ?" என்று கேட்டார்!
சங்கடம் கொண்டு சிறுவர் மறுக்கவும் வியந்து நின்றார்!  (206)

"எப்போது அகத்தைவிட்டுக் கிளம்பினீர்" என்று கேட்க,
"முப்போதும் குருவின் அருகில், இருந்திடக் கனன்ற காதல்
இப்போது காலை வேளை, கனிந்திட வந்தோம்" என்று
அப்போது அவனும் சொன்ன வார்த்தையில் மகிழ்ந்தார் குருவும்! (207)

"யாருடைத் திட்டம் இதுவோ?" என்றவர் கேட்க, உடனே
சீருடைச் செல்வன் ஸ்வாமி நாதனும் சிரித்தான் மெல்ல!
"வேறு ஓர் எண்ணமில்லை; உங்களைக் காணலன்றித்
தேறுமோர் வழியுமுண்டோ? காணவே வந்தோம்" என்றான் (208)

ஆறினைக் கடலில் கொண்டு செலுத்துவார் யாரும் உண்டோ?
வேரினை நீரைத் தேட, வைப்பவர் யாரும் உண்டோ?
சூரிய திசையைப் பார்க்க, தாமரைக்குதவி யுண்டோ?
சேரிடம் சேரத் தானே சென்றிடும் இயற்கை போலே (209)

அருட்கடல் தேடி வந்த ஆறென ஐயன் வந்தான்!
அருட்சுனை தேடி வந்த வேரென ஐயன் வந்தான்!
அருளொளி தேடி வந்த மலரென ஐயன் வந்தான்!
அருள்நதி தேடி வந்த மீனென ஐயன் வந்தான்! (210)


பெற்றோரை விட்டு குருவை அண்டியே வந்த சீடன்
நற்றவச் செல்வன் அவனை எண்ணியே பெருமை கொண்டார்
பெற்றமே ஏறி வந்தோன் இவனெனக் கண்டார்! ஒருநாள்
பெற்றம் மேய்த்துண்டு  கீதை உரைத்தவன் என்றும் கண்டார் (211)


"உண்மை இதுதான். ஒரு நாள் ஸ்வாமினாதன், ஜகத்குருவாக மலர்ந்து காமகோடி பீடத்தை அலங்கரிக்கப் போகிறான், தன்னுடைய முடிவும் நெருங்கி விட்டது. பின்னால் இவனுடன் சில நாட்கள் சேர்ந்து இருக்கும் வாய்ப்பு கிடக்கப் போவதில்லயே? அந்த ஆசையை நாலு நாளாவது வைத்துக்கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் என்று பரம குருவானவர் தீர்க்க திருஷ்டியுடன் முடிவு செய்திருக்க வேண்டும்"

- கருணை தெய்வம் காஞ்சி முனிவர்" - எஸ்.கணேச சர்மா

நற்றவச் செல்வி கஞ்சிக் காமாக்ஷித் தாயே வந்து
உற்றனள் இங்கு, அன்பு ஆழியாய்ப் பெருக, உலகைப்
பெற்றவள் காக்க வந்தாள், அருளவே வந்தாளென்றும்
முற்றிலும் உணர்ந்தார் உவகை உள்ளமே நிறையக் கண்டார் (212)

சிந்தனை தன்னில் தேவி திருவுளம் புரிந்து கொண்டார்!
விந்தையே தேவி உந்தன் திருவுளம், அதனை மாற்ற,
எந்தையால்தானாகும்மோ? எல்லாமுன் உளம்போல் என்றார்,
வந்தவன் கூட சில நாள் இருந்திட எண்ணம் கொண்டார்! (213)


அகத்துளோருக்கெல்லாம் செய்தியே தருக என்று
தகவலொன்றனுப்பி வைத்தார், குழந்தைகள் நலமே என்று!
சுகமுடன் பாலர் இங்கு நான்கு நாள் இருந்த பின்னர்
அகமனுப்பி வைப்போமென்றும் சொல்லிடச் சொன்னார் அவரும் (214)

காண்டம் : 1 : அவதாரக் காண்டம்:
படலம் : 16 : பெற்றோர் கலக்கம்


செல்வக்குழந்தை  ஸ்வாமி நாதனைக் காணோமென்று

மெல்லப் புரிந்ததங்கே அகத்திலே அனைவருக்கும்

எல்லாப் பக்கமும் நன்கு தேடியே பார்த்துவிட்டு

இல்லை என்றறிந்து துயர் கொண்டனர் எல்லாருமங்கே  (215)



விளையாடவென்று எங்கும் சென்றுவிட்டானோ என்றும்

களைத்துடன் நண்பர் வீட்டில் உறங்கிவிட்டானோ என்றும்

இளைத்துடல் வாடி எங்கும் விழுந்துவிட்டானோ என்றும்

உளைந்துளம் நொந்து வாடி, அழுது நின்றார் பெற்றோரும்  (216)


"அறிந்தாரா தமையருமை ஆதிசிவன் தானென்று
அறிந்தாலே கொடுப்பாரா அன்றொருநாள் அடி ஒன்று
அறிந்திடத்தான் கேட்டீராம் தண்டித்தீர் ஏன் என்று,
மறந்திட்டாய் அனுட்டானம் அடித்திட்டேன் அதற்கென்றார்

அதற்கென்றா அடித்திட்டீர் ஆய்ந்துநீர் பாராமல்
அனுட்டானம் முடித்திட்டேன் ஆற்றினிலே என்றிடவே
அருந்தமயர் கண்டாராம் நெற்றியிலே திருநீற்றை
அன்புருவாய் அணைத்தாராம் புரிந்திட்டேன் தவறென்றே"

- ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாள் நூற்றெட்டு அந்தாதி, அகத்தியான்பள்ளி சுப்ரமணிய கிருட்டிணமூர்த்தி அவர்கள்

முன்னொருநாள் மாலைநேரம், சந்தி வேளையுமே தப்ப,
தன் தரப்பு ஞாயம் ஏதும் புரிந்துகொள்ளாமல் அன்று
கன்னத்தில் அடித்து "ஏன் நீ சந்தி செய்யாமல் நின்றாய்?
என்னமாய் தவறு செய்தாய்?" எனத்திட்டி அண்ணன் சொன்ன   (217)

ஏச்சுச்சகிக்காமல் அவனும் எங்கேனும் சென்றிட்டானோ?
நீச்சலே பழகவென்று, குளம்குட்டை விழுந்திட்டானோ?
பேச்சிலே வார்த்தை முற்றி, சண்டையில் அடிபட்டானோ?
தீச்சுட்டு விழுந்திட்டானோ? உடல் நொந்து படுத்திட்டானோ?  (218)

கவலையோ மனமெரிக்க, அழுகையால் முகம் துடிக்க,
தவமே செய்து பெற்ற புதல்வனைத் தேடி நின்றார்
"சிவனே, உமையாளே, கோவிந்தா, வந்தருள்வாய்,
புவனமெலாம் காத்திடுவாய், பிள்ளையையும் கா"வென்றார் (219)


நண்பர்கள் வீட்டிலெல்லாம், "உள்ளானோ?" எனக் கேட்டார்
"நண்பகல் நேரம் முதல் காணவில்லை" என்றழுதார்
"உண்ணவும் இல்லையவன் பசி தாங்கான்" எனத்துடித்தார்
"எண்ணவேயில்லை ஏனித்துன்பம்" என்றலறி நின்றார்  (220)


பிள்ளையவன் நண்பனவன் பெற்றோரும் இங்குவந்து
கிள்ளையவன் காலைமுதல் காணவில்லை எனச்சொல்ல,
பள்ளிமுதல் ஊரெங்கும் பாலகரைத் தேடி நின்றார்
துள்ளியவன் வாரானோ என்றெங்கும் பார்த்திருந்தார் (221)


பகற்போது நீங்கியந்த மாலையதும் மயங்கி வந்த
உகப்பில்லா இரவுப்போதில், கண்விழித்துக் காத்திருந்தார்
தகவலே ஏதுமில்லை பாலகர் இருவர் பற்றி
அகம்வாடி முகமும் வாடி, சிறுவரையே நினைத்திருந்தார் (222)


மறுநாள் காலைப்போதில், நற்செய்தி வந்ததங்கே!
"குருநாதர் அனுப்பி வைத்தார்" என்றொருவர் வந்தாரங்கே!
திருமகனும் தோழன்கூட, நலமிங்கு, கவலை விடுமின்!
இருநாளில் திரும்பிடுவார், குருநாதர் சொன்ன செய்தி (223)

என்றவர் சொல்லிச் சென்றார்; பெற்றோரும் அகமகிழ்ந்தார்
தென்றலாய்ச் சேதிவந்து வீசிட உளம் குளிர்ந்தார்
நன்றவனும் குருவினையே நண்ணினனே எனக் களித்தார்
கன்றவனும் பத்திரமாய் உள்ளானென்றழுது விட்டார் (224)


ராமனும் வசிஷ்டர் தம்மை நாடியே கற்றாற்போல,
சேமமாய் குருவை அண்டி, கண்ணனே பயின்றார்போல,
நேமமாய் குருவைத் தேடி, சங்கரன் உற்றாற்போல,
தாமுமே குருவை நாடிச் சென்றானோ ஸ்வாமிநாதன்? (225)

குருமுகம் கற்றல் ஒன்றே இறைவழி சேர்க்கும் என்று
அறுமுக அண்ணல் வந்திங்கோதிய வழியோ ஈதும்?
திருமகன் குருவை நாடி நான்கு நாள் இருந்ததெல்லாம்
குரு அவர் ஆசி இன்றே பெற என விழைந்த வேட்போ? (226)  



காண்டம் : 1 : அவதாரக் காண்டம்:
படலம் : 17 : பிள்ளையின் எதிர்காலம் பற்றி பெற்றோர் கவலை


"எல்லாத் தகப்பனாரைப் போல், தன் பிள்ளை, டாக்டராகவோ, எஞ்சினியராகவோ வர வேண்டுமென்றே தந்தை சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஆசைப்பட்டார். இத்தனை சின்ன வயதில் இப்படி மடத்தை நோக்கி ஓடினால், எந்தத் தந்தைதான் கவலைப்பட மாட்டார்? 'இது என்ன தேறுமா...தேறாதா? படிப்பு கிடிப்பு வருமா?" என்ற பயம் அவரை உலுக்கியது. உடனே சிநேகிதன் கிருஷ்ணஸ்வாமியின் அப்பா வெங்கடராமனைத் தேடிப் போனார். அவர் ஒரு சிறந்த ஜோதிடர். மேலும், சுப்ரமண்ய ஐயருக்கு நெருங்கிய நண்பர். 

 கருணை தெய்வம் காஞ்சி முனிவர்" - எஸ்.கணேச சர்மா

சென்றவன் திரும்பிவிட்டான்; பெற்றோரும் மகிழ்ந்து விட்டார்
என்றாலும் தந்தையுள்ளம் தவித்தது கவலை கொண்டு
நன்றாய்ப் படித்துப் பட்டம் பெற்றிவன் புகழே கொள்வான்
சென்றெங்கும் வெற்றி கொள்வான் என்றவர் நினத்தாரானால் (227)

தேடியே செல்லுகின்றான் குருநாதர் பதமே காண
நாடியே செல்லுகின்றான் இறை தாகம் மிகவே கொண்டு
வாடியே நிற்பார் வீட்டில் என்றேதும் யோசியாமல்,
ஓடியே செல்லுகின்றான், ஏதும் சொல்லாமல் வீட்டில்  ! (228)


என்ன ஆவானோ இவனும்? எதிர்காலம் என்னவாகும்?
முன்னமே அறிந்து கொள்ள, யாரிடம் செல்லலாகும்?
உன்னதமாக இங்கு வருங்காலம் அறிந்து சொல்ல, 
இன்னருள் பெற்றார் உண்டோ? சோதிடர் யாரும் உண்டோ? (229)

யோசித்துப் பார்த்தார் தந்தை; நண்பனின் நினைவே தோன்ற
பூசிக்கச் சென்ற தெய்வம், நண்பனாய் வந்ததென்றார்!
மாசிலா நண்பன் நன்றாய்  ஜாதகம் பார்க்க வல்லான்
தூசிலா குணத்தோன் நன்றாய், சோதிடம் பார்க்க வல்லான் (230)


வெங்கடராமன் உள்ளான்! எப்படி மறந்தேன் அவனை?
சங்கடம் தீர்த்து வைப்பான்; உள்ளதைச் சொல்லி நிற்பான்
இங்கிவன் இருக்க வேறு யாரிடம் செல்ல வேண்டும்?
"அங்கவன் அகமே செல்வோம், வா" எனப் பிள்ளையோடு (231)


நண்பனின் வீடு சென்றார்; பிள்ளையும் கூட வந்தான்!
"கண்மணி போன்ற பிள்ளை, ஜாதகம் பார்த்துச் சொல்வாய்!
உண்மையைச் சொல்வாய் அதிலே, உள்ளதைச் சொல்வாய் நீயே!
திண்ணமாய்ச் சொல்வாய் உன்னை நம்பியே வந்தேன்" என்றார் (232)

"வெங்கடராமா! ஸ்வாமிநாதன் ஜாதகத்தைக் கொஞ்சம் பாரு. இவனுக்கு ஜாதகம் எப்படி இருக்கு?" என்று காட்டினார். அதைப் பார்த்ததும் ஜோசியருக்குப் பேச்சே வரவில்லை. சுவாமிநாதன் சாட்சாத் ஈசுவரன் என்று தெரிந்தது. ஆனால், ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் நண்பனுக்கு ஏதாவது சொல்ல வேண்டும். அதனால், "சுப்ரமண்யா! நீ உன் பிள்ளையைப் பற்றிக் கவலையே படாதே. நம்மைப் போன்றவர்கள் வீட்டில் பிறக்கும் குழந்தையாகத் தெரியவில்லை. இவன் ஜாதகத்தில் பெரிய ராஜாக்களுக்கு உண்டான யோகமெல்லாம் இருக்கு. சக்ரவர்த்தியாக, உலகமே கொண்டாட வாழப் போகிறான்" என்று உற்சாகமாகப் பேசினார். 

 கருணை தெய்வம் காஞ்சி முனிவர்" - எஸ்.கணேச சர்மா


ஜாதகம் எடுத்து நண்பர், கோள்களின் நிலையைப் பார்த்தார்,
நாதனாம் ஈசன் அந்த கைலாயம் விட்டு இங்கே
வேதமே வாழ வந்தான் என்றுமே உணர்ந்து கொண்டார்
போதமே தீர்க்க வந்த புண்ணியன் அவனைப் பெற்றான்  (233)

தன்னையே நோக்கிச் சொன்னார், "கவலையை விடுவாய் அப்பா!
என்னுளம் சொன்ன வார்த்தை, உன்னிடம் சொல்வேன், கேளாய்,
இன்னுயிர் போன்ற உன்தன் மைந்தன் இவ்வுலகை ஆள்வான்
சொன்ன சொல் பலிக்கும்! அவனின் சொல்லது வேதமாகும்!  (234)

யாவரும் வந்து உந்தன் பிள்ளையின் பாதம் வீழ்வார்!
மூவரும் போற்ற வாழ்வான்! மனிதருள் சிறந்து வாழ்வான்!
தேவரும் வியக்கும் வண்ணம், பாரத தேசம் எங்கும்
சேவடி பதிப்பான் சென்ற இடமெலாம் சிறப்பான் அப்பா!  (235)

கவலையே கொள்ள வேண்டாம், இதுவரை எந்தன் வாழ்வில், 
கவனமாய் நானும் பார்த்த ஜாதகம்  எதிலும் இல்லா
புவனமே போற்றும் மேன்மை வியப்பினை இன்று பார்த்தேன்!
தவப்பெரும் புதல்வன் பெற்றாய்! கவலையை விடுவாய் நீயும்! (236)


"அங்கிருந்த சுவாமினாதனிடம், "போய் கால் அலம்பிண்டு வா" என்று கட்டளையிட்டார். வந்தவனை, நாற்காலியில் உட்கார வைத்து, காலில் தண்ணீர் விட்டுத் தன் கையாலேயே லம்பினார். துடைத்தார். சற்றுத் தூக்கிப் பார்த்தார். அப்படியே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அழுதார். காலை விடவேயில்லை. "விடுங்கோ மாமா" என்ற சிறுவனின் குரலோ, "என்ன இது, குழந்தை காலபி பிடிச்சுண்டு..விடு" என்ற சுப்ரமண்ய சாஸ்திரிகளின் குரலோ அவர் காதில் விழவே இல்லை......

காலில் உள்ள சங்கு சக்கர ரேகைகள், மகர ரேகை, தனுர் ரேகை, பத்ம ரேகை..எத்தனி உண்டோ அத்தனையும் ஒரு அவதார புஷன் என்று கட்டியம் கூறின...

முதன் முதலில் பெரியவாளுக்குப் பாத பூஜை செய்யும் பாக்கியம் இவருக்குத்தான் கிடைத்தது..."

 கருணை தெய்வம் காஞ்சி முனிவர்" - எஸ்.கணேச சர்மா

சொன்னவர் திரும்பி ஸ்வாமி நாதனை நோக்கி, "கண்ணா,
உன்கையில், காலில் ஓடும் ரேகைகள் பார்க்கலாமா?
என்பக்கம் வந்து உட்கார், கைகால்கள் அலம்பி" என்றார்
மன்னனும் அருகில் வந்தான், உலகிற்கு அருளும் அன்பும் (237)

ஈகையால் சிவந்த கைகள் இரண்டையும் கையில் ஏந்தி
ரேகைகள் கண்டார் அதிலே, ஜகத்குரு என்றும் கண்டார்!
ஆகையால் காலின் ரேகை காணவும் ஆவல் உற்றார்!
வாகையே சூடியெங்கும் நடந்ததாம் பாதம் தம்மை (238)

நீர்விட்டலம்பிப் பட்டால் துடைத்திரு கையில் ஏந்தி,
சீர்பெறும் பாத ரேகை தரிசனம் தெரியக் கண்டார்!
கார்முகில் வண்ணத்தானின் சங்குசக்கரமும் ஆங்கே
நேர் எதிர் தெரியக் கண்டார், இறையிது என்றும் கண்டார் (239)

விண்ணவர் அமுதை ஏழேழ் பிறப்பிலும் அரும்பதத்தை,
எண்ணிய யாவும் நல்கும் கற்பகப் பாதம் தன்னை 
மண்ணினில் வேதம் வாழ நடந்தபொற் பாதம் தன்னை
கண்ணினில் கண்டார் அதிலே முகம்புதைத்தழுது நின்றார்! (240)

அழுதவர் பாதம்தன்னை சிரசினில் வைத்துக் கொண்டார்
தொழுதவர் வணங்கிப் பிறவிப் பிணியது நீங்கிற்றென்றார்
கெழுதகை நண்பர் செய்கை புரியாமல் அங்கு நின்ற
வழுவிலா சுப்ரமண்ய ஐயரும் உறைந்து போனார் (241)

சிறுவனாம் ஸ்வாமிநாதன், அதிர்ச்சியில் திகைத்துப் போனான்
உறுபதம் நல்கும் பாதம் சுருக்கென மடித்துக் கொண்டான்
"தருமமோ மாமா இதுவும்? பெரியவர் நீங்கள் என்னை
குருபதம் தொழுமாப்போல வணங்குதல் முறையோ?" என்றான் (242)


"இப்பதம் கிடைக்கும் பேறு பெற்றிடப் பிறவி தோறும்
அப்படிப் புண்யம் என்ன செய்தெனோ? அறியேன் அப்பா!
தப்பெதும் இல்லை இதிலே; ஜாதகம் மட்டும் இல்லை, 
சுப்பிரமண்யா, உந்தன் மைந்தனே யோகம்" என்றார்!  (243)

கரமலர் குவித்த நண்பர், சிந்தையில் எண்ணி நின்றார், 
"பிறவியின் பயனைப் பெற்றேன், கடவுளைக் கையால் தொட்டேன்!
மறலியே வரட்டும் இங்கே, பயமதை நானும் விட்டேன்!
சிரத்தினில் இந்தப் பாதம் பட்டிட, பிறப்பும் விட்டேன்! (244)

மன்னுயிர் எல்லாம் வாழ வந்தவன் இந்தப் பிள்ளை!
இன்னுயிர் போகுமுன்னர் தரிசனம் தந்து விட்டான்!
இன்னருள் ஈந்து விட்டான்; பதமலர் தந்து விட்டான்!
இன்பதம் கிடைத்ததிங்கே! வேறென்ன வேண்டும்? என்றார்!  (245)


அதிர்ச்சியில் இருந்து மீளாத் தந்தையோ குழம்பிப் போனார்!
கதி தரும் காலகாலன் மகனென்று உணரா நின்றார்!
புதிர் இதென்னவென்று புரியாமல் மகனோடன்று
"விதிப்படி எல்லாம் ஏகும்" என்றுதம் அகமே வந்தார் (246)


காண்டம் : 1 : அவதாரக் காண்டம்:
படலம் : 18 : கலவைப் பெரியவா : பரம குருநாதர்



"தாத்தா  பெயர் பெற்றவனே பேரன் என்பவர். குரு பரம்பரையில் ஸ்ரீசரணாளின் தாத்தா ஸ்தானத்தில் இருந்தவர், பூர்வாஸ்ரமத்தில், ஸ்வாமினாதன் என்ற பேர்க்காரர். ஸ்ரீசரணாளுக்கும் அதுதானே பூர்வாஸ்ரம நாமம்?"

- "கருணைக் காஞ்சி கனகதாரை" - ரா.கணபதி அண்ணா

பரமகுரு நாதர்  பெயரும், சந்திர சேகரேந்திரர் என்றே
பரம பொருத்தமாயமைந்து பெருன்சுவை அளிக்குதம்மா!
பரமகுரு அவரின் பூர்வ ஆஸ்ரமப் பெயரும்கூட, 
பரமனாம் ஸ்வாமிநாதன் பெயரதாய் அமைந்ததம்மா! (247)

பதினெட்டுப் ப்ராயம் தன்னில் குருபீடம் ஏறி நின்றார்
அதிவேகமாகக் கல்வி கற்பதே குறியாய்க் கற்றார்
துதிசெய்து பக்தர் வேண்ட, நிர்வாகம் அதையும் ஏற்றார்
மதிசூடி நின்ற ஈசன் பதமதே துணையாய்க் கொண்டார்  (248)


ஆறாண்டுக் கல்வி கற்று, அத்வைதம் முழுக்கக் கற்று
நூறாண்டுக் கற்றும் முற்றா சாஸ்த்திரங்களவையும் கற்று
மாறாத உண்மை கற்று, வற்றாத அன்பால் வையம்
பேறான பெரும்பேறெய்த விஜயமும் செய்தாரம்மா! (249)

"அத்வைத சபா நிறுவப்பட்டதைப் பலபடப் போற்றிக் கூறிய ஸ்ரீ மஹாபெரியவாள், "ஆசார்யாள் மடம்னா, அது முக்யமா, வித்வாங்களுக்கு ஆஸ்ரயமாயிருக்கணும்-கிற லஷ்யத்தைப் பூர்ணமாப் புரிஞ்சுண்டு அப்படிப் பண்ணினார் பரமகுரு ஸ்வாமிகள்" என்று முடித்தார். 

- "கருணைக் காஞ்சி கனகதாரை" - ரா.கணபதி அண்ணா

அத்வைத சபையாம் ஒன்றை அழகுறத் தொடங்கி வைத்தார்
வித்வான்கள், விற்பன்னர்கள், பெரியோரைக் கூட்டி அங்கே
சத்யமாம் வேதாந்தத்தை ஆராய ஆவல் கொண்டார்
நித்யமும் வேத வித்து வளரவும் வழிகள் செய்தார்  (250)


மன்னார்குடிப் பெரியவாளும், சான்றோர்கள் பலரும் அங்கே
முன்னின்று வளர்த்த அந்த அத்வைத சபையாம் அதிலே,
தன்னிகரில்லாதோர் தலைவனாய் நின்று ஞான
இன்னமுதனைவருக்கும் ஈந்தருள் குருவாய் வந்தார்! (251)

கலியுகமையாயிரத்தில் யாத்திரை தொடங்கி மேன்மை
பொலிந்திடத் தமிழ்நாடெங்கும் பாதமே பதித்து வந்தார்
நலிந்தவர் குறைகள் யாவும், புன்னகையாலே நீக்கி, 
வலியவர் அவர்க்கும் அன்பாய் அறிவுரை கூறி வந்தார்  (252)


ஊரெலாம் சென்றார்; கிராமம் கிராமமாய் அவரும் சென்றார்
ஏரெடுத்தாளும் உழவர் மக்களும் வணங்க நின்றார்
சீரெலாம் கொண்ட மக்கள் விரும்பியே தந்த மான்யம்
பாரெலாம் போற்றும் வண்ணம் நிரந்தரமாக்கி வைத்தார் (253)

ஆயிரம் கிராமம் சென்று, பூஜைகள் செய்து நின்றார்
"ஆயிரம்  கிராமம் ஸ்வாமி" என்றவர் பெயர் எடுத்தார்
சேயினைப் பரிந்து நாளும் கண்ணிமையென்று காக்கும்
தாயினும் பரிவு கொண்டார்; உலகமே உய்ய வந்தார்  (254)


மடத்திலே தன்னைத் தேடி, கன்றொன்று வரவும் கண்டார்
இடமளித்தன்பும் பெய்து, அருளினால் அணைத்து ஆங்கே
திடமுடன் காந்தன் என்னும் கன்றதும் வளரக் கண்டார்
புடம்போட்டத் தங்கம் என்ன, அவனுமே மிளிரக் கண்டார் (255)
தமிழ்நாடு சுற்றி திண்டிவனமதும் வந்தநாளில்
அமிழ்தினும் இனிய ஒன்றைக் கண்டுளம் மகிழ்ந்து நின்றார்
குமிழ்சிரிப்புடனே கொவ்வைச் செவ்வாயும் கொண்டசிவச்
சிமிழென்று கண்டார், பின்னாள், குருவென சிறக்கக் கண்டார் (256)

காண்டம் : 1 : அவதாரக் காண்டம்:
படலம் : 19 : காந்தனின் குரு சேவை
இன்று முதல், பெரியவாளின் குருஸ்தானத்தில் இருந்த, 67ஆவது பெரியவாளான, "லஷ்மீகாந்தன்" என்ற பூர்வாஸ்ரமப் பெயருடைய, பெரியவாளின் பூர்வாஸ்ரமத்தில் அவரது ஒன்றுவிட்ட ஸ்கோதரராய், 'காந்தன் அண்ணா" என்றே ஸ்ரீசரணர்களால் சொல்லப்பட்ட அவரின் சரிதமும், குரு சேவைச் சிறப்பையும் பார்க்கலாம்.
காந்தன் அத்யயனம் ஆரம்பித்த சில காலத்திலேயே, அவருடைய பிதா பித்ரு லோகம் ஏகி விட்டார்.
துர்பாக்யவதியான லஷ்மியம்மாள் - அதி துர்பாக்யவதியாகப் போகிறோம் என்று அறியாதவள் - ஏக புத்திரனுக்குக் காப்பு, அன்றைய காமகோடி பீடாதிபர்களே என்ற நல்லறிவுடன், அக் காலங்களில் ஸ்ரீ மடத்தின் ராஆஜதானியாயிருந்த கும்பகோணத்திற்கு, அவனை அனுப்பிவிட்டார்.
ஆசார்ய ஸ்வாமிகள் - கலவை பெரிய பெரியவா என்கிறோமே அவர் - பாலனிடம், பேரன்பும், பெருங்கருணையும் பூண்டார். அக் காலத்தில் வெகு சிறப்பாக வேத அப்யாஸம் அளித்து வந்த சிதம்பரம் பாட சாலையில் பாலன் அத்யயனம் தொடர ஏற்பாடு செய்து அங்கு அனுப்பி வைத்தார்.
- "கருணைக் காஞ்சி கனகதாரை" - ரா.கணபதி
காந்தனும் கல்விகற்கத் தொடங்கிய கொஞ்ச நாளில்
பாந்தமாய் குடும்பம் காத்தத் தந்தையும் மறைந்து போனார்
ஏந்திழை, மைந்தன் அவனை, குருவிடம் அனுப்பி வைத்தாள்
சாந்தனும் கும்பகோணம் பீடமே நாடி வந்தான் (257)
கலவையின் நாதன் அந்தப் பெரியவா கருணைப் பார்வை
பலமாகச் சிறுவன்மீது விழுந்ததும் அவனைத் தில்லைத்
தலம் செல்லப் பணித்தார்; சென்று வேதமே அங்குகற்க
நலமாகும் என்றும் சொல்ல, காந்தனும் சென்றானங்கே (258)

"ஆசார அனுஷ்டானத்தோட, ப்ரம்மச்சர்யம், சுஸ்ருஷை ரெண்டுமே, அவருக்கு ஜீவனாயிருந்தது. பரமகுரு ஸ்வாமிகள்கிட்ட முதல்லபோய், அவர்தானே, இவரை சிதம்பரம் அனுப்பினது? சிதம்பரத்துல வேதம் நன்னாக் கத்துண்டுருந்தார்னாலும், ஸ்வாமிகள்கிட்ட எப்ப திரும்பிப் போவோம்? போய் சேவை பண்ணுவோம்?" - நேதான் உள்ளுக்குள்ள ஆசைப் பட்டுண்டு இருந்தார்.

ஸ்வாமிகளுக்கும் இவர் நெனப்பு உண்டு. கொஞ்ச காலத்துக்கப்பறம், கும்மோணத்துக்கே அவரைக் கூப்பிட்டு, மடத்துப் பாடசாலையிலேயே , அத்யயனத்தைக் கன்டின்யூ பண்ணி, கம்ப்ளீட் பண்ண வைச்சார். சாதாரணமா ஏழு வருஷம் படிக்கற கோர்ஸை, அண்ணா ரொம்ப முந்தியே முடிச்சுட்டார்னு சொல்லுவா. அப்புறம் பரமகுரு ஸ்வாமிகள் அவரைத் தம் பக்கத்திலேயே, 'பெர்ஸனல்' சுஸ்ருஷை, பூஜா கைங்கர்யங்களுக்காக வைச்சுண்டார். 



 "கருணைக் காஞ்சி கனகதாரை" - ரா.கணபதி அண்ணா எழுதிய புத்தகத்தில், பெரியவா, தனது குரு ஸ்தானத்தில் எட்டே நாள் இருந்து மறைந்த 'மஹாதேவ சரஸ்வதி' ஸ்வாமிகள் என்னும், 'லஷ்மீகாந்தன்' என்ற பூர்வாஸ்ரமப் பெரியவரை பற்றிக் கூறியது.

சிதம்பரம் சென்ற செல்வன் வேதமே பயின்று வந்தான்
சதம் குரு பாதம் தன்னை த்யானமே செய்து வந்தான்
நிதம் குரு பாத சேவை செய்யவே ஆசை கொண்டான்
பதம் அதைப் பற்றி என்றும் இருக்கவே ஆவல் கொண்டான்  (259)

சீடனின் உளம் புரிந்த குருவுமே ஆசி தந்தார்
பாடமே இங்கு வந்து படியென்று அருளிச் செய்து
ஆடலன் தலத்தை விட்டுக் கிளம்பியே சான்றோர் மேவும்
நாடதும் போற்றும் கும்பகோணமே வரவும் செய்தார்  (260)

அண்ணாவும் பூர்ண மனஸோட, ரொம்ப ஸின்ஸியரா, ரெண்டும் பண்ணினார். அவருக்கும் ஸ்வாமிகள்கிட்ட பூர்ண பக்தி; ஸ்வாமிகளுக்கும் அவர்கிட்ட பூர்ண அனுக்ரஹம், அன்புன்னு, அழகா ('அழஹ்ஹா என்று அன்புறவை ரஸித்துச் சொன்னார்) இருந்தது.வேங்கடேசம் பந்துலு பொஸ்தகம் பார்த்துருப்பே. அதுலே, ஸ்வாமிகளுக்கு அவர் 'favorite disciple'னே எழுதி இருக்கார்"

பத்ரம், புஷ்பம் பறிச்சுண்டு வரதுலேர்ந்து, பாத்ரம் பண்டம் தேய்க்கறவரை சந்த்ரமௌலீஸ்வரருக்கு ஸகலமும் உத்ஸாஹமாகப் பண்ணினார். 

நெறறைய்ய சந்தனம் அரச்சுக் குடுப்பார். அம்பாள் மேருவுக்குப் பந்தளவு அரைக்கணும் தெரியுமோல்லியோ?வாஸனை சந்தனத்தைக் 'களபம்', 'கலவைங்கறது. இந்தக் கலவைக் கைங்கர்யப் புண்யத்துக்காகத்தான் அவரை அம்பாள் அத்தனை சுருக்க கலவை ஷேத்த்ரத்துல தன்னோட கலந்துண்டுட்டா போலேருக்கு" - புன்னகை முகத்துடன் பெரியவா கூறினாலும், குரலிலும், கண்ணிலும் கண்ட கனம் உள் நெகிழ்ச்சியைக் காட்டிற்று. 


- "கருணைக் காஞ்சி கனகதாரை" - ரா.கணபதி அண்ணா எழுதிய புத்தகத்தில், பெரியவா, தனது குரு ஸ்தானத்தில் எட்டே நாள் இருந்து மறைந்த 'மஹாதேவ சரஸ்வதி' ஸ்வாமிகள் என்னும், 'லஷ்மீகாந்தன்' என்ற பூர்வாஸ்ரமப் பெரியவரை பற்றிக் கூறியது.

முன்னான்கு வருடப் படிப்பை முன்னரே முடித்து வந்து
பின்னர்தம் குருவின் சேவை ஒன்றேதன் மூச்சாய்க் கொண்டு
இன்னறு மலர் பறித்து, பூஜைக்குப் பண்டம் சேர்த்து, 
தன்னலம் ஏதுமின்றிப் பத்தெலாம் தேய்த்து வைத்து  (261)

சந்தனம் அரைத்து அம்பாள் மேருவிற்காக என்று
பந்தளவரைத்து கைகால் தேய்ந்தலுத்தோய்ந்திட்டாலும்
சிந்தனை முழுதும் பக்தி நிறைந்திட சேவை செய்தான்
குந்தகம் அற்ற சேவை குருவும் கண்டுளம் மகிழ்ந்தார்! (262)

"பரமகுரு ஸ்வாமிகளோடேயே ஸதாகாலமும் விட்டுப் பிரியாம இருக்கணும்னுதான் காந்தண்ணாவுக்கு (ஆசை). இருந்தாலும் ஸ்வாமிகளேதான், 'கொழந்தை, ஆபீஸ் மாதிரியான மடத்து செட் அப்லயே கட்டிப் போட்டாப்ல இருக்க வேண்டாம்; கொஞ்சம் ஃப்ரீயா, ஆத்து சூழ்னிலைல, தன்னொத்த கொழந்தேளோட இருக்கட்டும்னு அப்பப்ப அண்ணாவை எங்காத்துக்கு அனுப்பி வைப்பார்" என்று ஸ்ரீசரணர் கூறியதுண்டு. 

 "கருணைக் காஞ்சி கனகதாரை" - ரா.கணபதி அண்ணா

அவனொத்த சிறுவரோடு இருந்தவன் வரட்டுமென்று
அவனையும் அவ்வப்போது அகத்திற்கு அனுப்பி வைப்பார்
கவனமாய் செய்யும் சேவை குறைந்திடலாகாதென்று, 
தவசீலர் அனுப்பினாலும், காந்தனும் மறுத்து நிற்பான்!  (263)

சித்தியின் அகமே வந்து கொஞ்சநாள் தங்கினாலும், 
சத்தமே இன்றித் தானும் மௌனமாய் இருந்திடுவான்
மெத்தவும் படித்து வேதம் முற்றுமே ஓதி நெஞ்சில் 
உத்தம குருவை வைத்து சேவையை நினைத்திருப்பான் (264)

அவர் செல்லும் இடங்களெல்லாம் தானுமே சென்றிருப்பான்
அவர் சொல்லும் வேலை எல்லாம் உடனங்கு செய்து நிற்பான்
அவர் நினைத்த கார்யம் யாவும் செய்தற்கே பிறவி என்பான்
அவர் சேவை ஒன்றே இங்கு வேலை என்றிருந்திருப்பான் (265)

குருபாதம் தொழுதிருப்பான், குரு நாமம் சொல்லி நிற்பான்
குரு அவர் சொல்லும் வார்த்தை வேதமென்றோதி நிற்பான்!
குரு ஒன்றைச் சொல்லி அங்கே முடிக்குமுன் முடித்து நிற்பான்
குரு அவர் சேவைக்கென்றே, பிறப்பிது என்றும் சொல்வான்! (266)




காண்டம் : 1 : அவதாரக் காண்டம்:

படலம் : 20 : குரு, சிஷ்யனின் இறுதிப் பயணம்

இன்று முதல், காமகோடிப் பீடத்தின் 66ஆவது குருவும், அவரது பிரதம சிஷ்யனாயிருந்த லஷ்மீகாந்தன் என்னும் பின்னர் 67ஆவது குருவாய் ஆனவரும் ஒரே வார இடைவெளியில் அடுத்தடுத்து மறைந்த காதையைக் காண்போம்...

இந்தப் படலம் எழுதுவதற்கே மனம் நடுங்குகின்றது. எழுதத்தான் வேண்டுமா என்றும் தோன்றுகின்றது. ஆனாலும், நடந்தவைகளைப் பற்றிச் சொல்லித்தானே ஆக வேண்டும்...அந்த காமாக்ஷித் தாய் ஏன் இப்படிச் செய்தாள் என்று அவளைத்தான் கேட்க வேண்டும்.


கலவைக்கு ஒருநாள் அந்த குருவுமே பயணம் சென்றார்
பலருமே கூடச் சென்றார்; காந்தனும் நிழலாய்ச் சென்றான் 
தலமங்கு மாரித் தாயும் கூடவே வந்தாள்! வந்து
மலர்ந்தவள் இருவரையுமே கலந்துதன்னுள்ளே கொள்ள, (267)

எண்ணமே கொண்டாள்! அங்கே, காலம்தன் கடமையாற்ற,
நண்ணியே  குருவின் மேலே வந்தமர்ந்தொளிரும் முத்தின்
வண்ணமாய் நின்றாள்! அம்மை, அணைத்திட வந்தாளென்று
திண்ணமாய் அறிந்தாரவரும்! உடலிது முடியப் போகும்  (268)


"பரமகுரு ஸ்வாமிகள் கலவைக் கிராமத்தில் முகாமிட்டிருந்தபோது அவருக்கு வைசூரி கண்டது. தமது ஜீவ யாத்திரை முடிகிறதென பரமகுரு ஸ்வாமிகள் உணர்ந்தார். ஸ்வாமிநாதனாய் இருந்த நம் ஸ்ரீசரணரை ஐந்தாறு மாதம் முன் அவர் கண்டபோதே அவன்தான் பீடத்தின் அடுத்த வாரிசு என்று முடிவு செய்து விட்டார் - அல்லது அந்த 'மேலிடத்து' முடிவைத் தெரிந்து கொண்டு விட்டார். அதை மடத்தின் நிர்வாகத் துறையில் முக்யஸ்தராயிருந்த மணக்கால் கந்தஸ்வாமி ஐயர், வித்வத் கோஷ்டியில் முக்யஸ்தராயிருந்த வேங்கடசுப்பா சாஸ்திரிகள் போன்றொருக்குத் தெரிவிக்கவும் செய்தார்.....அப்பெரியோர்களும் ஏனையோரும் சம்மதாகவே இருந்தார்கள். 



ஆயினும், இப்போது சந்தர்ப்பம் நெருங்கி வந்தே விட்டபோது, மஹா மாயா விலாஸத்தில், ஸ்ரீமடத்தின் ஊழியர்கள், வித்வாங்கள், விச்வாஸிகள், ஆகியவர்களுக்குள்ளே, வலுவான மாற்றுக் கட்சியொன்றும் பிறந்தது. வேத சாஸ்திரப் பரிச்சயமா, ஸ்ரீமடத்து சேவையா, இரண்டும் இல்லாத ஒரு கிறித்துவப் பள்ளி மாணவனை, மாபெரும் ஜகதாசார்ய ஸ்தானத்தில் சங்கராசார்யராகப் பட்டாபிஷேகம் செய்வதா என்று  அக்கோஷ்டி ஆக்ஷேபம் எழுப்பியது.

- "கருணைக் காஞ்சி கனக தாரை" - ரா. கணபதி அண்ணா

காலம் வந்துற்றதென்று உணர்ந்துடன் பீடம் ஏற
காலனை உதைத்த காலன் ரூபமாய் வந்தோன் தன்னை,
வேலனை, அந்த ஸ்வாமி நாதனை, அழைக்கச் சொன்னார்
பாலனை பீடம் ஏற்றத் தயங்கினர் மற்றோரெல்லாம் (269)

வேதமே அறியாப் பிள்ளை; ஆங்கிலம் பயின்ற பிள்ளை
நாதமாம் இறைக்கு அந்த மொழியுமே  அறியாப் பிள்ளை
பாதமே வைக்கலாமோ? குருபீடம் ஏறலாமோ?
பாதகம் ஆகுமன்றோ? நாமுமே செய்யலாமோ? (270)


"அவர்கள் பார்வையில், அவர்கள் கூறியது, நியாயமாகவே தோன்றலாம். ஆயினும், தங்களுக்கு உறுத்திக் கொண்டு தெரிந்த அந்தத் தகுதியின்மைகள் ஆசார்ய ஸ்வாமிக்கு மட்டும் தெரியாதிருக்குமா? தெரிந்துதானே இப்படி முடிவு கூறியிருக்கிறார்? தகுதி முழுதும் வாய்ந்த காந்தனைப் ப்ரிய சிஷ்யனாகப் பக்கத்தில் வைத்துக் கொண்டேயல்லவா வேறு பிள்ளையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்? அதிலிருந்தே அதற்கு உட்பொருள் உள்ளதென்று ஆகிறதே!" என்று காண அவர்கள் தவறிவிட்டார்கள்.

எதனாலோ, அந்த உட்பொருளை எந்தத் தீவிர கட்டத்திலும் ஆச்சார்யஸ்வாமி தெரிவித்ததாகத் தெரியவில்லை. அல்லது அவர் தெரிவித்தும்தான் மாற்றுக் கருத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லையோ?

"கருணைக் காஞ்சி கனகதாரை" - ரா.கணபதி அண்ணா


காந்தனாம் சிஷ்யன் இங்கே இருந்திட வேறு யாரும்
பாந்தமாய் இருக்க மாட்டார்; குருவாக விளங்க இங்கே
சாந்தமாய், குருவும் போற்ற, யாரையும் அன்பால் ஈர்க்கும் 
காந்தமாய், வேதம் முற்றும் ஓதியே சிறந்த வித்தாய்  (271)

விளங்கிடும் இந்தப் பிள்ளை குருபீடம் ஏற வேண்டும்
தளராமல் குருவின் பாதம் நெஞ்சினில் வைத்து வேதம்
வளரவே வகையும் செய்து மடத்தையும் காக்க வேண்டும்
உளத்தினில் கொண்டோம் இஃதே; என்றுமே கூறி நின்றார்  (272)


"ஒரு வேளை, 'மேலிடத்துத் திட்டம்' மேலும் தெளிவாக அவர் கண்முன் விரிய, மாற்றார் கருத்துப்படியே செய்தாலும், அடுத்த வாரிசாக இன்றி, அதற்கடுத்த வாரிசாக ஸ்வாமிநாதனேதான் பீடத்துக்கு அரசாகப் போகிறான், இடை வாரிசு, அதற்கும் மேற்பட்ட பதவியைத் தம்மோடேயே பகிர்ந்து கொள்ளப் போகிறான் அன்பதையும் அவர் கண்டே அவர்களுக்கு ஒப்புதல் சொல்லியுமிருக்கலாம்!


எவ்வாறாயினும், ஸ்வாமிநாதனைத் தேர்வு செய்திருந்ததாக முன்பு பலரறிய முடிவு செய்திருந்த பரமகுரு இப்போது அதை மாற்றிக் கொண்டார். வேறு வாரிசை சாஸ்திர பூர்வமாக ஸன்னியாஸ ஆஸ்ரமம் தந்து பீடாதிபதியாக நியமித்தார்.

பரமகுரு ஸ்வாமிகள் என்கப்பட்ட ஆறாவது சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், லஷ்மீகாந்தன் என்கப்பட்ட பதினெட்டுப் பிராய பிரம்மச்சாரியை, ஆறாவது மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளாக்கினார்."

"கருணைக் காஞ்சி கனகதாரை" - ரா.கணபதி அண்ணா


மென்மையாய் நகைத்தார் குருவும்; மேனியே அழியும் நாளில்
இன்னுயிர் கூடு விட்டு நீங்கிடும் இந்த நாளில்,
என்னதான் சொல்வதிங்கே? காந்தனின் பயணம் கூடத்
தன்னுடன் தொடரும் என்றே புரியத்தான் வைப்பதெங்கே? (273)

மாயையாய் மூடி மற்றார் மனமெலாம் மறைத்த மாரித்
தாயையே வேண்டி நின்றார்; அவள் காட்டும் வழியீதென்றும்
காயையே நகர்த்தி ஆடும் அவளிங்கே காந்தனுக்கும்
நோயையே தருவாளென்றும் அறிந்தவர் காந்தன் பீடம் (274)

அமரட்டும் என்று சொன்னார்; சாத்திரம் சொன்னவாறு
நமச்சிவாயன் சந்திரசேகரன் தாளைப் பற்றி,
இமயத்துப் பெண்ணாம் அந்த உமையவள் தாளைப் பற்றி,
நிமலனின் தமயன், காந்தன், குருவாகச் சிறந்தாரம்மா!  (275)

"ஆனால், அந்த 'மஹா' பட்டமும், 'தேவ'ப் பட்டமும், ஒட்டாமல், வாரிசு ஸ்ரீகுருவின் கிங்கரராகவே பணிபுரிய, துடிதுடித்து நின்றார்.

ஏன் 'துடிதுடித்து' என்றால், அந்த குருநாதரின் தீவிர நோய்ப்பிணியால்தான். 

குருநாதரும் துடிதுடித்து, பிரிய சிஷ்யரை ஒதுங்கி இருக்கச் சொன்னார். தொற்றக் கூடிய பயங்கர நோய் என்று எச்சரித்தார். 

ஏனைய பரிவாரமும் தடுத்தது"

"கருணைக் காஞ்சி கனகதாரை" - ரா.கணபதி அண்ணா


இளையவர் துடித்து நின்றார்; மற்றவர் சொல் கேளாமல், 
விளைவது எதுவாயினுமே, விளையட்டும் என்று சொல்லி
தளையெலாம் மீறி குருவின் சேவையே பெரிதாய்க் கொண்டார்
திளைத்தவர் பக்தி பொங்க, குருவவர் உடலைத் தொட்டு (276)

சேவையே செய்யலானார்; எல்லோரும் எச்சரித்தும்
"தேவையீதொன்றே வேறு எண்ணமும் எனக்கு இல்லை
சாவையும் வாயென்றிங்கே வரவேற்பேன் நானும் அந்தப்
பூவையாம் மாரித் தாயும் அன்புடன் அளித்த இந்த (277)


"பால ஸ்வாமியோ, "உபாதை என்னைப் தொற்றிக் கொண்டு, பெரியவாளை விடட்டுமே" என்று சொல்லிக் கொண்டு, குருவுக்கு வெகு நெருக்கத்திலேயே இருந்து கொண்டு, அவரைத் தொட்டும், துடைத்துக் கொடுத்தும் பிடிவாதமாகப் பணிவிடை தொடர்ந்தார். 

பெரிய ஸ்வாமிகள், மடத்து முகாமிலிருந்து தம்மைப் பிரித்துத் தனியிடத்தே வைக்கச் சொல்ல, சின்ன ஸ்வாமிகள், "பெரியவா இருக்கற இடம்தான் மடம்; அவருக்கு செய்யற சுச்ருஷைதான் சந்திரமௌளிஸ்வர பூஜை" என்று - தாமும் அவருடனேயேதான் இருப்பேன் என்று உறுதியாக - மட அதிபதியாகவே  அதிகாரபூர்வமாகக் கூறினார்.

சாந்தமான அன்னப் பேடு இங்கே மட்டும் சிம்ம ராஜனாக இருந்ததால் யாராலும் தடுக்க இயலவில்லை" 

"கருணைக் காஞ்சி கனகதாரை" - ரா.கணபதி அண்ணா

நோயிது எனைப் பிடித்து, குருவினை விட்டோடட்டும்
சேயெனைப் பிடித்து எந்தன் தாயினை விட்டோடட்டும்
தாயினும் பரிந்தெனக்கு வாழ்விலே வழியும் காட்டி
நாயினும் கடையன் என்மேல் கருணையே காட்டி என்னை (278)

நல்வழிப்படுத்தி எந்தன் எண்ணத்தைச் செதுக்கி நாளும்
அல்லும்பகலும் எந்தன் அருகிருந்தரவணைத்து
சொல்லும் பொருளுமென நடமாடும் உமைபங்கன்
பொல்லாப் பிணியெல்லாம் களையுமம்மருந்தீசன் (279)

செம்பொற்கழலடியே காட்டுவித்தறிவுறுத்தி
அம்மாபொருளாகும் அத்வைதம் அதைச் சொல்லி
சும்மாயிருத்தலிலோர் சுகமதையும் தான் சொன்ன
பெம்மானவரன்றோ? குரு அவரென் உயிரன்றோ?  (280)

அவரிருக்கும் இடம்தானே மடமிருக்கும் இடமாகும்?
தவராஜர் இல்லாமல் மடமிங்கே மடமாமோ?
அவருள்ள இடத்தினில் நான், இருப்பதுவே முறையன்றோ?
அவருக்கு நான் செய்யும் பணிவிடையே அவ்வீசன் (281)

தானுவந்து ஏற்றிடுமோர் பூசையுமாய் ஆமன்றோ?
ஊனுடலைப் பெரிதாகப் போற்றியவர் தனைவிட்டு
நானுவந்து தனியாக இருத்தலுமே முறையாமோ?
வானுடைந்து வீழ்ந்தாலும் அவரோடே இருந்திடுவேன் (282)

என்றங்கே சொல்லிடவும், எல்லோரும் கை பிசைந்தார்
கன்றுக்கும் இங்கே அந்தப் பசுவுக்கு வந்தாற்போல
இன்னலே வந்தால் நாங்கள் என்செய்வோம் என்றே அழுது
"நன்மையே செய்வாயம்மா" என்றவள் பதம் பணிந்தார் (283)


விதியை - அம்பாள் சங்கற்பத்தை - யாரே தடுக்க முடியும்?

பராபவ வருஷம் - பால்குன மாதம் - கிருஷ்ண பக்ஷ அஷ்டமியன்று பரமகுரு ஸ்வாமிகள் பவ ஸாகரம் கடந்து பர நிலையில் நிறைந்தார். அது, தமிழகப் பஞ்சாங்கப்படி, தை மாதம் 24ஆம் தேதி, ஆங்கிலக் கணக்கில் 1907ல், பிப்ரவரி 6ஆம் தேதி.

பெரியவாளின் உபாதி தம்மைத் தொற்றிக் கொண்டு அவரை விடட்டும் என்று அருமந்த சீடர் கூறியதில் கொடுமையாக முன் பாதி மட்டும் நடந்தது!

தடுத்தும் கேளாது, அருகிருந்து அணைத்துப் பணி புரிந்தவரை, அம்மா அணைத்து, முத்துப் பூட்டி அலங்கரித்தாள்!

எட்டே நாள்தான்!

சாந்தர், தாந்தர், சுத்தப் ப்ரஹ்மச்சாரி, சபலமே இல்லாதவர், குரு சேவைக்கே அர்ப்பணம் ஆனவர் என்றெல்லாம் ஸ்ரீ சரணாள் இதயமாரப் போற்றிய பாவன யௌவரை, புண்ணிய புருஷரை, அணைத்த அம்பாள், தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு விட்டாள்!

அது பிப்ரவரி 13, பால்குன மாத சுக்ல பக்ஷப் ப்ரதமை. நமது மாசி மாதம் 2ஆம் தேதி.

"கருணைக் காஞ்சி கனகதாரை" - ரா.கணபதி அண்ணா

மாரித்தாய் சிரித்தாள்; கதறும் குழந்தைகள் அழுகை கண்டும்
சீரிப்பாய்ந்தங்கே வந்து குருவையே அணைத்தெடுத்து
பீரிட்டு வந்த கருணை வெள்ளத்தில் மேனியெங்கும்
பாரித்துக்கொண்டாள்; அவரைத் தன்னுளே வைத்துக் கொண்டாள் (284)

விருப்பெதும் இன்றி குருவின் பதமதே மனதில் கொண்டார்
குருவவர் சேவையொன்றே வாழ்வென்று வாழ்ந்த சீடர்
திருவளர் மஹாதேவர் அவரையும் அணைத்தாள் அன்னை!
அரும்பதம் எய்தி குருவின் அண்மையே கொண்டார் அவரும்! (285)

கருணையின் உருவம் என்பார்; காஞ்சியின் தாயாம் என்பார்
உருகிடும் உள்ளம் காக்கும் அருட்கடல் அவளே என்பார்
குருவடிவாக இந்தக் குவலயம் காப்பாள் என்பார்
தருணமே வந்தபோது காக்கவே மறந்திட்டாளோ? (286)

அன்பதே வடிவம் என்பார்; தயையதே வேலை என்பார்;
துன்பமே செய்யா இன்ப நிறைவதின் பெருக்காம் என்பார்
தன்னையே நினையாவிடினும் அருளதே பணியாம் என்பார்
தன்னையே நினைத்து வாழ்ந்த உயிர்களை மறந்திட்டாளோ? (287)

அதிகாரமாக மறலி வந்திளம் உயிரே கவ்வ
பதியிலே பாதி கொண்டாள், இடதுகால் தூக்கி அந்த
விதிவழி கேட்டுவந்த எமனையும் உதைத்தாளன்றோ?
கதிதர மறந்திட்டாளோ? உயிர்தர மறுத்திட்டாளோ? (288)

தவமது கலைந்ததென்று கோபமாய் சிவனார் அன்று
எவரையும் மயக்கும் காமன் அவனையே எரித்திட்டாலும்
புவனமே போற்றும் வண்ணம் உயிர்ப்பிச்சை தந்தாள் அன்னை
கவனியாதிருவர் உயிரைக் காக்கவே தவறிட்டாளோ? (289)

இறுதியே வந்த வேளை, உயிர்போகும் நிலையில் அன்று 
உறுதியாய் அவளைப் பற்றி, அபிராமி பட்டர் பாட
மறுகணம் வந்தாள் தாயும்; குழையையே நிலவாய்த் தந்தாள்
செறுதீயாய் மாறிட்டாளோ? உறுபசியால் உண்டிட்டாளோ? (290)

அருணகிரிநாதர் அன்று, பெரும்பிணி உழந்து வாடி,
கருத்தினில் நினைத்தார் தன்னை முடித்திட எண்ணம் கொண்டார்
முருகனாய்க் காத்தன்றவரை ஆட்கொண்டாள் தாயும் சென்று
உருகிடும் உயிர்கள் தம்மைப் பருகியே நின்றாள் இன்று!  (291)


களிறொன்று கதறி அன்று, ஆதிமூலமே வா என்ன,
பளிச்சென மின்னல்வெட்டும் நேரத்தில் ஹரியாய் வந்தாள்
எளியவர் குரலுக்கெல்லாம் இரங்கிடும் தாயோ இன்று
துளியுமே கருணை இன்றி இவர் உயிர் பறித்துச் சென்றாள்?  (292)


பிரஹலாதக் குழந்தை அன்று விஷத்தையே அருந்தும்போதும்
அரன் பேரை சொல்லி வாகீசர் கடலிலே விழுந்தபோதும்
பரனை சாவித்ரியழைத்துக் கணவனை மீட்ட போதும்
வரமென வந்த தாயே! இந்நேரம் வரமறுத் தாயோ?  (293)


சேயவர் இருவர்கொண்டு தன்னுடை உலகில் செய்ய
ஆயவும் பணிகள் உண்டோ? உடனவள் அழைத்திட்டாளோ?
மாயமாய் உயிரையிங்கு கவர்வதுபோல் நடித்து
தாயவள் மடியில் வைத்துக் கொஞ்சியங்கணைத்திட்டாளோ? (294)

ஏதென்று அறியோமம்மா! தாயவள் செய்யும் லீலை
ஈதென்று புரியோமம்மா! பிறப்பிறப்பென்பதெல்லாம்
வாதென்று உணரோமம்மா! மரணமும் அருளாய்வருமொரு
போதென்றும் தெரியோமம்மா! எல்லாமுன் அருளேயம்மா! (295)


காண்டம் : 1 : அவதாரக் காண்டம்:
படலம் : 21 : ஜகத்குரு

இன்று முதல், செல்வன் ஸ்வாமிநாதன், ஜகத்குருவாய் காமகோடி பீடம் அமர்ந்த சரிதம் பார்ப்போம்.


குழந்தையை அழைத்தார் என்று குருவவர் விடுத்த செய்தி
குழப்பத்தில் குடும்பத்தவரை ஆழ்த்திற்று; அவரும் உடனே
அழகிளம் செல்வனோடு  குருவினைப் பணிந்து அன்னார்
கழலிணை பணிவோம் என்று கருதினார்; ஆனால் அன்று  (296)

தந்தையோ ஊரில் இல்லை; ஸ்வாமிநாதனை அழைத்து
அன்புத்தாய் உடனே சென்றாள்; "காஞ்சிக்கு சென்று பின்னர்
துன்பமே அகற்றும் குருவும் தங்கிடும் கலவை செல்வோம்"
என்றவர் நினைத்துச் சென்றார்; காஞ்சியே சென்று சேர்ந்தார்  (297)


மடத்துளோர் சிலரும் அங்கே காஞ்சிக்கு வந்திருந்தார்
உடனவர் செல்வனை "நீ, கலவை செல்" எனப் பணித்தார்
திடமுடன் குழந்தை தனியே வண்டியில் ஏறிச் சென்றான்
கடவுளாய்ப் போற்றும் அந்த குருவவர் தனை அழைத்த   (298)

காரணம் என்னவென்று மனதினில் வந்த கேள்வித் 
தோரணத்திற்கெல்லாம் பதிலைத் தேடியே அவனும் சென்றான்
தாரணி போற்ற வாழ்ந்த குருவுமே மறைந்தார் என்றும்
பாரது போற்றும் சீடன் குருவையே தொடர்ந்தார் என்றும் (299)


வண்டியை ஓட்டிச் சென்றோன் சொல்லிடக் கேட்டான் அச்சம்
மண்டியே வளர, வண்டி ஓட்டியோன் மேலும் சொன்னான்
"உண்மையைச் சொல்வேன் கண்ணா! குழந்தையாம் உன்னை இங்கே (300)
கண்டது முதலே எந்தன் உள்ளமே குழைந்ததப்பா!

"அடுத்த நற்குருவாயுனையே  அறிவிப்பார் என்றெனக்குப்
படுகின்றதெ"ன்றான்; கேட்ட பாலனோ அதிர்ந்து போனான்!
நடுங்கினான்; "குருவாய் நானா?" மனமுமே கேட்கமேனி
ஒடுங்கினான்; சிந்தை நொந்து, நாமமே ஜபித்து நின்றான்  (301)

"எங்களது பயணத்தின்போது, வண்டியை ஓட்டியவர், நான் அனேகமாக வீடு திரும்ப மாட்டேன் என்றும், மிச்ச நாட்களை, மடத்திலேயே கழிக்க வேண்டி வரும் என்றும் கோடிட்டுக் காட்டினார். முதலில், நான், என்னுடைய ஒன்றுவிட்ட அண்ணா மடத்தின் பீடாதிபதியாகிவிட்டதால், நான் அவருடன் இருப்பது அவருடைய விருப்பம் போலிருக்கிறது என்று எண்ணினேன். ஆனால், என்னால், அவருக்கு என்ன பிரயோஜனம் இருக்கக் கூடும் என்றும் யோசனை செய்தேன். 

ஆனால், அவர், மெதுவாக, எனக்குப் புரிய வைக்கத் தொடங்கினார். என்னுடைய பூர்வாஸ்ரம தமையனாருக்கும் ஜுரம் வந்து முற்றிவிட்டதென்றும், அதனால்தான், என்னைத் தனியாக ஒரு வண்டியிலே வைத்து அழைத்துச் செல்கிறார்கள் என்றும் புரிந்து கொண்டேன். அதிர்ந்து போன நான், வண்டியில், மண்டியிட்டமர்ந்து, எனக்குத் தெரிந்த ஒரே மந்திரமான, ராம நாமத்தை "ராம, ராம" என்று அந்தப் பயணம் முழுதும் ஜபித்தவாறு இருந்தேன். 

"எனக்கு, வாழ்க்கைக் கற்றுக் கொடுத்தது என்ன" என்ற கட்டுரையில், பவன்'ஸ் ஜர்னல்-இல், காஞ்சி மஹா பெரியவா சொன்னது.  


"நானா? சங்கராச்சார்யார் ஆறதா?ந்னு அப்படியே ஆடிப் போயிட்டேன். ஆத்துல வழி வழியா மடத்து சம்பந்தம் இருந்தத்துனால, விவரம் தெரிஞ்ச நாளா ஆச்சார்யாளையும் ஒரு ஸ்வாமியாதான் நினைச்சுப் பார்த்தது. விசேஷமா எந்த ஸ்வாமிட்டயும் பக்தின்னு இல்லாட்டாலும், "அனேக ஸ்வாமி, அதுல ஒரு ஸ்வாமி ஆச்சார்யாள்- ங்கற நினைப்பு மட்டும் இருந்தது. அந்த க்ஷணம் வரைக்கும் அப்படி ஒரு ஸ்வாமியா எங்கயோ உச்சியில இருக்கறவர்னு நினச்சுண்டு இருந்த்துட்டு, இப்ப, திடீர்னு, அவர் பேர் உனக்கு, அவர் பண்ணின கார்யம் நீ பண்ணியாகணும், வழி சொல்லித் தரத்துக்கும் குரு இல்லேன்னா...ஒண்ணுமே புரியாம முதல்ல புத்தி ஸ்தம்பிச்சுப் போயிடுத்து. அப்புறம் ஒரே திகில் பிடிச்சுண்டுடுத்து. வழி நெடுக, நடுங்கிண்டு, அழுதுண்டு, "ராமா! ராமா!ன்னு சொல்லிண்டே கலவைக்குப் போய் சேர்ந்தேன். 

- காஞ்சி முனிவர் நினவுக் கதம்பம் - ரா.கணபதி



அகலிகை சாபம் தீர்த்து, அரக்கியைக் கொன்ற நாமம்
குகனையும் ராமனோடு, தம்பியாய் சேர்த்த நாமம்
அகத்துளே நின்று என்றும் அச்சமே நீக்கும் நாமம்
இகபர சுகத்தை எல்லாம் கேட்டதும் கொடுக்கும் நாமம் (302)

பறவைக்கும் மோக்ஷம் தந்து, குரங்குக்கும் வாழ்வு தந்து
அரக்கனும் சரணம் என்ன, அரசனாய் உயர்த்தும் நாமம்!
தரமுளான் இல்லான் என்று ஏதுமே பாரா நாமம்!
சிரத்தையாய்ச் சொன்ன பேரை, நித்தமே காக்கும் நாமம்! (303)

கவலையைப் போக்கும் நாமம், இனிமையை சேர்க்கும் நாமம்
தவம் செய்த தவமாம் தையல் உயிரையே காத்த நாமம்
சிவனுமே சொல்லும் நாமம்; அனுமனும் போற்றும் நாமம்
பவவினை தீர்க்கும் ராம நாமமே சொல்லி நின்றான்  (304)


"அவருங்கூட சற்றும் எதிர்பாராமல், தனக்கு மடாதிபதியாக நியமனமாயிருக்கிறது என்ற செய்தி கேட்டவுடன் அலமாந்துதான் போனார். ஆயினும், அவரே தெரிவித்தபடி, 'கலவை' என்னும் வடார்க்காட்டு கிராமத்தில் அப்போது முகாமிட்டிருந்த ஸ்ரீ மடத்தில் அவர் பிரவேசித்தவுடனேயே, அந்தக் கலவரப் பதற்றம் தணிந்தது. 

அவரது வார்த்தையிலேயே, "ஆச்சர்யமா, என்னமாவோ, முன்னே இருந்த திகில் போயிடுத்து. பயம் இருக்கத்தான் இருந்துதுன்னாலும் - அந்த நெலமையில யாருக்கா இருந்தாலும் ஒரு நியாயமான பயம் இருக்கத்தானே இருக்கும்? அப்படி இருந்தாலும் - நடுநடுங்கிண்டு திகில்னு இருந்தது போயிடுத்து"

- கருணைக் காஞ்சி கனகதாரை - ஸ்ரீ. ரா.கணபதி அண்ணா


அங்கே, மடம் காம்பவுண்டுக்குள்ள நுழையணும் ங்கறப்ப, ஒரே திக் திக் தான்! ரெண்டு ஸ்வாமிகளும், எவ்வளவோ பிரியமா இருந்த பரமகுரு ஸ்வாமிகளும், அப்பறம் பட்டத்துக்கு வந்த அண்ணாவும், அடுத்தடுத்து சித்தியாயி, எல்லாம் சூன்யமாயிட்டாப்பல இருக்கற ஸ்திதில பின்னே எப்படி இருக்கும்? 

ஆனா, அங்க கால் வச்சேனோ இல்லியோ, ஆச்சர்யமா, என்னமாவோ, முன்ன இருந்த திகில் போயிடுத்து". 

"அவர் எங்கயும் போயிடலை, நமக்குக் கண்ணுக்குத் தெரிஞ்சாலும் தெரியாட்டாலும், அவர் இங்கே நித்தியவாஸம்! இங்கே நடக்க வேண்டிய எல்லாத்தையும் அவரே பார்த்துப்பார்ங்கற நிச்சய புத்தி வந்துடுத்து. ஃபீலிங்கா வந்துடுத்து. 

- காஞ்சி முனிவர் நினவுக் கதம்பம் - ரா.கணபதி

மனதினைப் பிடித்த பீதி, மடத்தினுள் நுழைந்த நேரம்
தனைவிட்டு நீங்கக் கண்டான்; குருவவர் இடமே இதுவும்
என அவன் உள்ளம்தன்னில் எண்ணமே உதித்த நேரம்,
இனம்புரியாது நெஞ்சில், உறுதியும் ஊறக் கண்டான்  (305)

தனை எதிர் பார்த்து அங்கே மடத்திலே கவலையோடு
வினைப்பயன் இழைத்த சோகம் கப்பிய முகங்களோடு
அனைவரும் நிற்கக் கண்டான்; நெஞ்சமே கனத்து நின்றான்
நினைத்தனன் குருவை நெஞ்சில்; தெளிவுடன் உள்ளே வந்தான் (306)


"பிள்ளை சன்னியாசத்துலேயே, அக்கா, "ஏக புத்ரனும் ஆத்துக்கு ஆகாம ஆகிட்டானே" ந்னு தவிச்சுண்டு இருப்பா; அவளை நாம போய் ஆத்திக் குடுக்கணும்' நுதான் முக்யமா அம்மா என்னோட கலவைக்குப் பொறப்பட்டது".........அம்மா நினைச்சதைவிட பயங்கரமா யதார்த்தத்துல ஆயிடுத்து. வீட்டை விட்டுதான் பிள்ளை போனான்-ங்கறதோட நிக்காம, லோகத்தைவிட்டே போய்ட்டதா ஆச்சு! அப்ப அம்மா பெரியம்மாவைக் கட்டிண்டு அழறச்ச, பெரியம்மா, ஒரே ஆவேசமா, "பகவத் பாதாள், அம்மாவுக்கு முன்னாடி தான் சாகப்படாது-ந்னு வரம் வாங்கிண்டு (அடுவே அடுத்த பிறவி என்பதால்), சாவைத் தடுத்துண்டார்-நு சொல்றாளே! அவரே என் பிள்ளைக்கு சன்னியாஸத்தையும் குடுத்து என் வயத்தை எரிய வைச்சுட்டாரே! போறாத்துக்கு உன் பிள்ளையையும் ஆண்டியா நிறுத்தி வைச்சுட்டாரே! அவனை காந்தன் வயசையும் போட்டுக்கிண்டு தீர்க்காயுஸாவாவது வைக்கட்டும்!"னு பிரலாபிச்சாளாம். அவ ஆசைதான் பலிச்சுடுத்து போலிருக்கு!"  - விசேஷமாக உணர்ச்சி எதுவுமின்றி ஸ்ரீசரணர் கூறியது அவரொருவருக்கே உரிய பாங்கு!

 - கருணைக் காஞ்சி கனக தாரை -ஸ்ரீ.ரா.கணபதி அண்ணா


தாயவள் தமக்கை சோகம் ஆற்றிடக் கலவை வந்தாள்
சேயவன் உலகை விட்டே சென்றதை நினைத்தழுது நொந்து
ஓயவே இல்லா அவளை கண்டிவள் அழுது நின்றாள்
காயமே பொய்யாய்ப் போகும் கனவினை நொந்து நின்றாள்  (307)

தவம் செய்து பிறந்தபிள்ளை; குலத்திற்கோர் கொழுந்தாய் வந்தான்
தவமுனியாகச் சென்றான் என்று நான் இருந்தேன் ஆனால், 
அவனுமே இறந்து போனான்; என்னையும் கொன்று போனான்
அவன் வயதும் சேர்த்து இங்கு உன்பிள்ளை வாழ வேண்டும்  (308)

சாந்தமே உருவாய் வந்தான் அவனையே தொலைத்தேன் நானும்
சாந்தியே தொலைத்தேன் இனியும் வாழ்ந்திங்கு என்ன செய்வேன்?
ஈந்தவள் எந்தன் சோகம் ஆறுமோ? உந்தன் பிள்ளை,   
காந்தனின் வயதும் சேர்த்து, நூறாண்டு வாழ வேண்டும்!  (309)




"சில நாட்களுக்கு முன் இந்த அதிசயக் குழந்தைக்கு ஒரு யானை வந்து மாலை போடுவதுபோல் சொப்பனம். யானை பெரிய சக்ரவர்த்திகளுக்குத்தானே மாலை போடும்? பிள்ளையின் கனவைப் பற்றிக் கேள்விப்பட்ட அன்னை அப்படித்தான் நினைத்துப் பூரித்தாள். "என் கண்ணே.." என்று சுற்றிப் போட்டாள். குழந்தை அம்மாவுக்கு அந்தக் கனவை நினைவூட்டினான் : "அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன் என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதுதான் என்று வைத்துக் கொள்ளேன்!" என்றான்.

- கருணை தெய்வம் காஞ்சி முனிவர் - ஸ்ரீ.கணேச சர்மா

என்றவள் சொல்லக்கேட்டுத் தாயவள் நொந்தாள், வெந்தாள்
குன்று போலிருந்த பிள்ளை, மலையுடன் சாய்ந்ததெண்ணி,
கன்றுபோல் இருக்கும் பிள்ளை, துறவியாய் ஆவதெண்ணி
"நன்று நம் வாழ்வும்! அந்தோ!" எனச் சொல்லி விதியை நொந்தாள் (310)

அழுதிடும் தாயைப் பார்த்து செல்வனும் கைகள்கூப்பி
தொழுதவாறுரைத்தான், "அம்மா, கனவொன்று கண்டேன் நானும்!
பழுதிலாக் களிறு மாலைய சூட்டிடக் கண்டேன், "வையம்
முழுதுமே உன்னை வாழ்த்தும்; அரசனாய் ஆவாய்" என்றாய்! (311)

உலகெலாம் வாழ்த்தும் பேறு அரசனை விடவும் மேலாய்
புலன் வென்று, இன்பதுன்பம் தனை விட்டு தனதென்றேதும்
இலன் என்று விட்டு, அண்டம் வாழ்ந்திடும் உயிர்கள் தம்மின்
நலனொன்றே நோக்கம் கொண்டு வாழ்ந்திடும் துறவிக்கன்றோ? (312)


உன்பிள்ளை என்று நீயும் சொல்பவன் இன்று யார்க்கும்
தன்பிள்ளை ஆனானன்றோ? அணங்கெலாம் என்தாய் அன்றோ?
என்சுற்றம் மட்டுமின்றி, உலகே என் சுற்றம் அன்றோ? 
மன்னுயிரெல்லாம் இங்கே என்னுயிர் ஆகுமன்றோ? (313)

கவலை நீ கொள்ளவேண்டாம்! குருவருள் துணையிருக்கும்!
தவவாழ்க்கை வாழ இங்கே குருபீடம் அழைக்கும் பேறு,
பவவினை அறுத்தெல்லோர்க்கும் நலமிங்குப் புரியும் பேறு
எவருக்குக் கிடைக்கும் அம்மா? நீ இனிக் கலங்க வேண்டாம்! (314)


எனச்சொன்ன பிள்ளை சென்றான்; காலடி மடத்துள் வைத்தான்
மனம் வாடி அவளும் பிள்ளை செல்வதைப் பார்த்து நின்றாள் 
தினம் தினம் பார்த்துப் பார்த்துச் செல்லமாய் வளர்த்த பிள்ளை
இனி என்று பார்ப்போமென்று அழுதவள் கலங்கி நின்றாள்  (315)


"ஸ்ரீ சரணாளின் சன்யாச தீக்ஷை.....சுப மங்கள வைபவமாகவா அது இருந்தது ? இரு ஆச்சார்யர்களை எட்டு நாட்களில் வாரிக் கொடுத்த சோகம், இன்னும் என்ன நேருமோ, 'அம்மா' இன்னும் என்ன பலி வாங்குவாளோ, என்ற பீதி, இவை கவ்விக் கிடந்த சூழலில்தான் அது நடந்தது"

"அவரது இறுதி, உறுதியானபோது, முன்பு, 'இவரே வாரிசாக வேண்டும்' என்று போராடியவர்கள் பச்சாதாபத்தில் குமைந்தனர். ஸ்வாமினாதனுக்கே வாரிசு என்பதுதான் கட்டளையென்று, சகலரும் புரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.

கருணைக் காஞ்சி கனக தாரை

பெரியோர்கள் வந்தங்கவனைக் கைப்பிடித்தழைத்துச் சென்றார்
"பிரிந்தோமே எங்கள் குருவை, பின்னவரைச் சேர்த்து இங்கு"
"தெரியோமே நாங்கள் இங்கு நடந்தவை ஏனென்" றழுதார்
"புரியாத புதிரே இங்கு நடந்தவை யாவும்" என்றார்  (316)


உன்னையே அடுத்து இந்தப் பீடத்தின் குருவாய் வைக்க
முன்னவர் நினைத்தார்; அவர்க்கு முன்னவர், குருவாய் நின்ற
அன்னவர் விருப்பும் அஃதே; பீடத்தைக் காத்து நிற்கும்
அன்னையின் விருப்பும் அஃதே; உறுதியும் கொள்நீ என்றார்  (317)


மனதிலே உறுதி கொண்டான்; விருப்புமெவ்வெறுப்பும் விட்டான்
தனதென இருந்த யாவும் தரணிக்கே என்று விட்டான்
சினம், தனம், இனம் என்றெல்லாம் முற்றுமே விட்டு விட்டான்
கனம் கொண்ட குருவின் பாதம் சரணென்று அடைந்து விட்டான் (318)



"பரமகுரு ஸ்வாமி ஹீனமான உடல்னிலையில், ஸ்வாமினாதனுக்கு வாரிசு நியமனம் தர எண்ணியபோது, அவன் வருமுன்பே தன் முடிவு ஏற்பட்டு விடலாம் என்பதனால், இவ்விஷயமாக மஹா பண்டிதர்களைக் கலந்து ஆலோசித்தார். ஸ்தூலமாக குரு இல்லாவிடினும், அவரிடமிருந்தே தீக்ஷையும் ஆசார்ய பீட ஸ்தானமும் பெற்றதாக சாஸ்திரபூர்வமாக ஆக்குவதற்கும் அச் சாஸ்திரத்திலேயே வழி உள்ளது என்பது ஆலோசனையில் தெளிவாயிற்று. எனவே, அதற்கான சில சாங்கியங்களை அவர் செய்து வைத்தார். என்றாலும் , பின்னர் மாற்றுக் கருத்துக்கு அவர் இடம் கொடுத்து வாரிசு நியமிக்க வேண்டி வந்ததால், காந்தனுக்கு, நேர்முகமாகவே உபதேசாதிகள் செய்து விட்டார். ஆயினும், அவர் முன்பு செய்து வைத்த சாங்கியங்கள் வீண் போகாது, வேறொவரது துறவற தீக்ஷைக்கேனும் பயனாகட்டும் என்ற கருத்தில் ரக்ஷிக்கபட்டு வந்தன. அதுவே இப்போது, அடுத்த பட்டமான குருஸ்வாமியும் நேர்முகமாக ஸ்வாமினாதனுக்கு உபதேசிப்பதற்கில்லை என்று ஏற்பட்டபோது கை கொடுத்தது. 

வேத மந்திரங்கள் கோஷிக்க, ஸ்வாமினாதனை உத்தேசித்து, ஒரு பீடம் போடப்பட்டது. 

இரு குரவர் ஆசிபெற்ற காஷாய, தண்ட, கமண்டலு, ஜபமாலாதிகளையும் இவற்றைவிட முக்யமான மஹாவாக்ய உபதேசத்திற்கான அனுக்ரஹ ப்ரசாதத்தையும் பிந்தைய குருவிடமிருந்து விருத்தரும் சத்தருமான அத்வைத சன்னியாஸி ஒருவர் பெற்றுக்கொண்டு அப்பீடத்தில் மந்திரவத்தாகச் சேர்த்தார்.

இவ்வாராக, ஸ்ரீ சரணாளின் சன்னியாஸ தீக்ஷையும் பீடத்தின் ஆதிபத்யமும் சாஸ்திரம் சட்டம் இரண்டாலும் செல்லத்தக்கதாக்கப்பட்டது. 

- கருணைக் காஞ்சி கனக தாரை - ஸ்ரீ. கணபதி அண்ணா


"பராபவ வருடம் மாசி மாதம் 2ஆம் தேதி அதாவது 1907வது வருடம் பிப்ரவரி மாதம் 13ம் தேதி ஸ்ரீமத்  சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற திருநாமத்துடன் அவருக்கு சன்னியாச ஆசிரமம் கொடுக்கப்பட்டது. பிறகு, தன் குரு, பரமகுரு இருவருக்கும் செய்ய வேண்டிய காரியமெல்லாம் கிரமமாகச் செய்து முடித்த பின் கும்பகோணம் சென்றார். அங்கு இவருக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதியாகப் பிலவங்க வருடம் சித்திரை மாதம், 27ம் தேதி, குருவாரம் பட்டாபிஷேகம் செய்யப்பட்டது" 

- கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் - எஸ். கணேச சர்மா 

தவச்செல்வன் அவனுக்கென்று குரு அவர் உவந்தளித்து
நவச்செல்வமாக வந்த தீக்ஷைகள் எல்லாம் சேர்த்து
கவனமாய் பீடம் இட்டு, மறையுமே முழங்கி வாழ்த்த
புவனமே வணங்கிப் போற்ற, செல்வனும் துறவி ஆனார் (319)

தன்பெயர் விட்டுப் பெரியோர் தந்ததோர் பெயரைக் கொண்டார்
சந்திரசேகரன் பேர் தனதெனத் தானும் கொண்டார்
இந்திர சரஸ்வதியாய் இன்புறப் பெயரும் கொண்டார்
அன்பெனும் பெயரும் கொண்டார்; அருளெனப் பெயரும் கொண்டார் (320)

அறுமுகன் ஈந்த அண்ணல், சங்கரன் வடிவில் வந்து
திருவடி வைத்து நின்ற பீடமாம் அதனில் ஏறி
அருமறை முழங்கி நிற்க, குருபரம்பரையும் வாழ்த்த, 
குருவென அமர்ந்தார் ஈசன் உருவென மலர்ந்தாரம்மா! (321)


இத்துடன், மஹா பெரியவா புராணத்தில், "அவதாரக் காண்டம்" நிறைவுற்றது.


இந்த தெய்வக் குழந்தை பிறந்து, வளர்ந்து, விளையாடி, படித்து, மிகவும் இக்கட்டான ஒரு சமயத்தில் காமகோடி பீடத்தின் குருவாக மலர்ந்த இந்தக் காதையைச் சொல்ல அனுக்ரஹம் செய்த அந்தப் பெரியவாளின் மலர்ப் பாதங்களை வணங்கி, இனி வரும் நாட்களில், அவரின் யாத்திரைகள் பற்றியும், அவரது கருணை மழை பற்றியும், அந்தக் கருணாமுர்த்தியின் பல்வேறு திருவிளையாடல்கள் பற்றியும் பேசுவதற்கு அனுக்ரஹம் செய்ய வேணுமாய் மனதார ப்ரார்த்தனை செய்து கொள்ளுகிறேன்.













No comments:

Post a Comment