நாளை, தீபாவளி.
காலை எழுந்து, கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபம் ஏற்றி, இனிப்பெலாம் உண்டு, மத்தாப்பு கொளுத்தி, பட்டாசு வெடித்து, உறவினர் எல்லாருடனும் கலந்து பேசி மகிழ்ந்து, கோவிலுக்குச் சென்று, இறைவனை வழிபட்டு வந்து, விருந்துண்டு மகிழ்ந்து....எத்தனை மகிழ்ச்சியான நாள்!
அத்தனை மகிழ்ச்சியும், உலகம் முழுக்க இருக்கும் அத்தனை பேருக்கும் கிடைக்க, பெரியவாளிடம் ப்ரார்த்தனை செய்து கொள்கிறேன்.
நாளை, நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் பெரியவாளின் நினைவு நீங்காமல் இருக்க, அவரிடமே வேண்டிக் கொள்கிறேன். அவர் அருள் இருந்தால்தானே அவர் தாள் பற்ற முடியும்!
நாளை மட்டுமல்ல, எந்த நாளும், எந்த நேரமும், நான் செய்யும் செயலெல்லாம், சொல்லும் சொல்லெல்லாம், நினைக்கும் நினைவெல்லாம், நீங்காமல் பெரியவாளே இருக்க வேண்டும் என்ற ப்ரார்த்தனையையும் அவரே நிறைவேற்றி வைக்க வேண்டும் என்றும் அவரையே கேட்டுக் கொண்டு, இந்தப் பாமாலையை, பெரியவா சரணங்களுக்கு, சமர்ப்பிக்கிறேன்.
தீபாவளிப் பாமாலை:
அதிகாலை எழுந்து கங்கா ஸ்னானமே செய்யும்போது,
நதியினை சடையில் கொண்டோய்! உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (1)
கதியிங்கு நீயே, பெரியோய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
விதியிங்கு மாற்றிக் காப்பாய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
புத்தாடை புனைந்து சிற்றார் அவரோடு மகிழும்போது,
பித்தனாய்ப் பிறையைச் சூடும் உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (2)
வித்தகா, பெரியோய், ஐயா, உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
சித்தனே, வேதா, இங்கு, உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
தீபத்தில் ஒளியை ஏற்றி, இருளெல்லாம் விலகும்போது,
பாபத்தை விலக்கும் ஈசா, உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (3)
ஆபத்தை அழிக்கும் பெரியோய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
தாபத்தை அணைத்துக் காப்பாய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
இனிப்பெலாம் உண்டு எங்கள், மனமெலாம் இனிக்கும்போது,
இனிமையே வடிவாய் வந்தாய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (4)
பனிமலைப் புதல்வி நேசா, உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
மனிதனாய் நடித்தோய் நீயே, உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
மத்தாப்பு கொளுத்தி வண்ண ஒளியெலாம் விரியும்போது,
அத்தனே, ஜோதி வடிவே, உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (5)
நித்தமும் எம்மைக் காக்கும், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
உத்தமா! சத்ய சீலா, உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
பட்டாசு வெடித்துச் சத்தம் உடலெலாம் அதிரும்போது,
எட்டாமல் நிற்கும் தேவே, உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (6)
மட்டுவார்குழலி பாகா, உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
மட்டிலா இன்பப் பெரியோய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
உறவினர் எல்லாம் வந்து வாழ்த்தெலாம் சொல்லும்போது,
உறவென்று வந்தோய் நீயே, உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (7)
பிறப்பில்லாய், இறப்புமில்லாய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
சிறப்பொன்று மிச்சம் இல்லாய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
குடும்பத்தில் எல்லாம் சேர்ந்து, கோவிலே செல்லும்போது,
இடுகாட்டில் வாழும் ஈசா, உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (8)
படுதுன்பம் யாவும் போக்கும், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
தடுத்தெமை ஆளும் பெரியோய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
விருந்துண்டு, பசியே ஆறி, நல்விருந்தென்னும்போது
மருந்தென்று வந்த ஈசா, உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (9)
கரும்பினுள் இனிப்பாய் நின்றாய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
பெருந்தவப் பெரியோய், குருவே! உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
உண்ட அம்மயக்கம் தன்னில், கண் கொஞ்சம் அயரும்போது,
கண்கண்ட தெய்வம் நீயே, உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (10)
பண்வளர்ப் பதிகம் கொண்டோய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
தண்துழாய் தலையில் கொண்டோய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
மாலையில் நண்பர் எல்லாம், மகிழ்ச்சியாய்ப் பேசும்போது,
சூலைநோய் தந்து ஆண்டாய், உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (11)
மாலைபாமாலை கொண்டோய்! உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
வேலை இங்குன்னைப் பாடல்! உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
இரவிலே படுக்கும் போது, உறக்கமே தழுவும்போது,
அரனே, சங்கரனே என்று, உன்னையே நெஞ்சில் கொண்டோம்! (12)
பரனே, எம் சிவனே என்று, உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
நரனாக நடித்துப் போந்தாய்! உன்னையே நெஞ்சில் கொண்டோம்!
நெஞ்சிலே கொண்டோம் உன்னை! எங்கிலும் கண்டோம் உன்னை!
கஞ்சியின் தேவன் நீயே! காத்திடும் தேவன் நீயே!
அஞ்சுதல் அகற்றிக் காத்து, ஆறுதல் தருவோய் நீயே!
தஞ்சமாய் வந்தோம் இங்கே, சரணமே தருவாய் ஐயா!