Thursday, November 12, 2015

அனுஷப் பாடல் : 13.11.2015 : அக்ஷரப் பாமாலை

இன்று, அனுஷம். பெரியவாளின் பக்தர்களுக்கெல்லம், கோலாகலமான நாள். அந்தத் தவவேந்தரையே நினைத்துருகி இருக்கும் நாள். பெரியவா மீது, அக்ஷரங்களைக் கோர்த்து, அழகான பாமாலைகள் இருக்கின்றன. நாமும் பெரியவா மீது, அப்படிச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அந்த சிவரூபனை நினைத்து, முடிந்தவரை, ஒவ்வொரு அக்ஷரத்திலும் ஒரு நாமப் பூவைக் கோர்த்திருக்கிறேன். சில அக்ஷரங்களுக்கு, நாமப் பூவேதும் கிடைக்கவில்லை....சில அக்ஷரங்களுக்கான நாமப்பூ, அவ்வளவு ஜோராக இல்லையோ என்றும் தோன்றுகிறது..

ஆயினும், எல்லாப் பூக்களும், அவன் படைப்பு. எல்லா அக்ஷரங்களும், நாமங்களும், அவன் பெயர் சொல்பவையே என்று மனம் தேற்றிக் கொள்ளுகிறேன்... பெரியவா சரணம்.



அகத்துளானை, ஆலங்குடியானை, இன்னமுதானை, ஈச்சங்குடியானை, 
உகந்தேறிங்கு ஊர்ந்தானை, என்னுயிரைக்கச்சி ஏகம்பனை, 

ஐயனையப்பனை,  ஒப்பாரில்லானை, ஓங்குபெருஞ்சுடரை, ஔவ்வியம் தீர்த்தானை
கயமுகனப்பனை, காசினி புறந்தானை,கிருபாகரனை , கீர்த்தியோனை,

குலாலனை,  கூடல் நாயகனை, கெழுதகை நண்பனை, கேசவனன்பனை
கைலாசனை, கொன்றைசூடியை, கோமகனை, கௌரீநாயகனை,

சந்திரசேகரனை, சாமவேதனை, சிவஸ்வரூபனை, சீலனை, 
சுந்தரனை, சூலங்கொண்டோனை, செஞ்சடைத் தேவனை, சேவடிதந்தோனை,

சைவப் பெருந்தேவை, சொக்கனை, சோதிவானவனை, சௌம்யனை
தவப்பெருமானை, தாயுமானவனை, திகம்பரனை, தீரனை,

துயரம் களைவோனை,   தூயவனை, தென்னாடுடையோனை, தேவர்கோனை,
தையல்நாயகனை, தொண்டர்பிரானை,  தோடுடை செவியனை, தௌரீதகமாடுவோனை

நண்ணமுதினை, நால்மறை வேதியனை, நிமலனை,  நீர்மலிவேணியனை
நுண்ணியனையென்றும், நூதனனை, நெஞ்சுறைந்தானை, நேரிழை நேசனை,

நைவேத்யப்ரியனை, நொந்தோர்க்கிறையை, நோவிலானை, நோற்றோர்க்கருள்வானை, 
பவனை, பாவனனை, பித்தனை, பீதாம்பரனை,

புரமூன்றெரித்தோனை, பூதநாதனை, பெம்மானை, பேருயிரை,
பைரவனை, பொன்னம்பலத்தானை, போகசிவனைசார்வ  பௌமனை, 

மகாதேவனை, மாசிலாமணியை, மிருத்தியுஞ்சயனை, மீனாள் மணாளனை
முகாரவிந்தனை, மூர்த்தியை, மெய்யன்பனை, மேலோனை,

மையல் களைவோனை, மொய்ம்பினானை, மோகனனை, மௌனியை,
லயவின்யாசனை, லாவண்யனை, லிங்கோத்பவனை, லீலாவிநோதனை,


வஞ்சம்கெடுத்தானை,   வாகீசனை, விமலனை, வீணாகானனை,
வெஞ்சினம் களைவோனை, வேதவேத்யனை, வைத்தீஸ்வரனை, வௌவுவார் தலைவனை                      


அடிபணிந்து, பதமலர் தூவித்தொழுது, பாடிப் பரவுவோமே!


* சில வழக்கில் இல்லாத வார்த்தைகளுக்குப் பொருள் : 

ஔவ்வியம் தீர்த்தானை : பொறாமையை நீக்குபவன்
குலாலன் : குயவன் ("குலாலேப்யோ" என்ற் ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது)
தௌரீதகம் : துரித நடை
போகசிவன் : சதாசிவன்
சார்வ பௌமன் : சக்ரவர்த்தி
மொய்ம்பினானை : வலிமையுடையவனை
லயவின்யாசன் : நல்ல கற்பனையுடன், ராகத்தையும், லயக் கணக்குகளையும் வெளிப்படுத்துபவன்
வௌவுவார் தலைவன்: திருடுபவர்களின் தலைவன் ("தஸ்கராணாம் பதயே" என்று ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது)
              
            
            


           

No comments:

Post a Comment