Sunday, April 24, 2016

அனுஷம் : 25.04. 2016 : ராமனோ? கண்ணனோ? காமாக்ஷித் தாயோ? சம்புவோ? சங்கரரோ? நீர் இவர் யாரும் இல்லை!!

25.04.2016: அனுஷ தினம்:

பெரியவாளைப் பற்றி, இன்றைய அனுஷ தினத்திலே சிந்தனை செய்யும்போது, ஒன்று தோன்றியது.

பெரியவாளை, 'தருமத்தின் மூர்த்தி'; ராமனின் அவதாரமே பெரியவா என்று பக்தர்கள், அணுக்கத் தொண்டர்கள் எல்லாரும் சொல்கிறார்கள். அடியேனும் அப்படியேதான் இதுகாறும் நினைத்திருந்தேன். ஆனால், சற்றே யோசித்துப் பார்க்கும்போது, அப்படி நினைப்பது தவறென்று தோன்றுகிறது.

பெரியவாளை, "கண்ணன் கீதை சொன்னது போல், நமக்கெல்லாம் நல்வழி சொன்னவர்" என்றும், "ஜகத்குருவான அந்தக் கண்ணனைப் போலவே, நம் ஜகத்குருவான பெரியவாளும்" என்றும் சொல்வார்கள். அடியேனும் நேற்று வரை, அப்படித்தான் நினைத்து வந்தேன். ஆனால், இதுவும் தவறென்றுதான் தோன்றுகிறது.

"அந்தக் காஞ்சியில் உறையும் காமாக்ஷித் தாயேதான் பெரியவா, பெரியவா வேறு, காமாக்ஷித் தாய் வேறு என்று இல்லை" என்று சொல்வார்கள்.  அடியேனும் நேற்று வரை, அப்படித்தான் நினைத்து வந்தேன். ஆனால், இதுவும் தவறென்றுதான் தோன்றுகிறது.

அந்த சம்புவே கீழிறங்கி, இந்தப் "பெரியவா" அவதாரம் செய்திருக்கிறார் என்பார்கள். இதுகூட சரியில்லை என்று இப்போது தோன்றுகிறது.

"அந்த சங்கரரே மறுபடி இந்தப் பீடத்தில் வந்து அமர்ந்து தான் சொன்ன அனைத்து உபதேசங்களையும், அழகுத் தமிழிலே, மிக எளியவர்களும் புரிந்துகொள்ளுமாறு சொல்வதர்க்காக வந்திருக்கிறார்" என்று சொல்வார்கள். இதுகூட சரியில்லையோ என்று இப்போது தோன்றுகிறது.

பக்தர்கள் அனைவரும் கூடி இந்த அனுஷ தினத்திலே அடியேனை அடிக்கப் புகுமுன், காரணத்தையும் சொல்லி விடுகிறேன்!!

பெரியவா சரணம்.


1. ராமனோ நீர்? இல்லை!!

தருமத்தின் மூர்த்தி என்பார்; ராமனே தருமம் என்பார்
ஓரம்பு, ஓர் சொல் என்பார்; மனையாளும் ஒன்றே என்பார்

தருமத்தை நாட்டவென்று நீர் மீண்டும் பிறந்தீரென்றும்,
தருமத்தின் மூர்த்தி ராமன் உருவமாய் வந்தீர் என்றும்

பெருமையாய் நினைத்திருந்தேன்; இதுகாறும் எண்ணி நின்றேன்
உருவகம் செய்ததெல்லாம், தவறென்று புரிந்து கொண்டேன்!!


2. கண்ணனோ நீர்? இல்லை!!

ஜகத்குருவாக வந்தான்; கீதையே சொல்லி நின்றான்
அகப்பொருளாக நின்றான்; மாயமே செய்து நின்றான்

உளம்கவர் கள்வன் அவனும் வெண்ணையே திருடி நின்றான்
களம்துணை சென்று பார்த்தன் ரதமுமே ஓட்டிச் சென்றான்

மாயனாம் கண்ணன் சொன்ன உபதேசம் எல்லாம் மீண்டும்
சேயர்கள் எமக்குச் சொல்ல வந்தவர் நீரே என்று

அனத்துமே அறிந்த கண்ணன் அவன்போல் வந்தீர் நீரென்று
நினைத்தது எல்லாம் தவறே என்று நான் புரிந்து கொண்டேன்


3. காமக்ஷியோ நீர்? இல்லை!!

அன்னை காமாக்ஷித் தாயும் காஞ்சியில் வந்தமர்ந்தாள்
மன்னுயிர் எல்லாம் வாழ இன்னருள் தந்தமர்ந்தாள்

கரும்புவில் பஞ்ச பாணம் கொண்டிங்குயிர்கட்கெல்லாம்
விரும்புமனைத்தும்  தந்து தன்னையும் தரும்தாய் போல

பதமலர் பணிந்தோர்க்கெல்லாம் இதமுடன் இனிமை தந்து
நிதமருள் நிமல மூர்த்தி நீரென்று நினைத்தேன் ஐயா!

கதியருள் காமாக்ஷித் தாயாய் வந்தவர் நீரே என்னும்
இதுவுமே தவறு என்று இன்று நான் அறிந்தேன் ஐயா!


4. சிவனோ நீர்? இல்லை!

சிவனவன் அன்பின் தெய்வம்; மலரடி பணிந்தார் யார்க்கும்
பவமறுத்தாளும் தெய்வம்; நன்மையே செய்யும் தெய்வம்!

தவமதைச் செய்து பாதம் பணிந்த அவ்வசுரர்க்கெல்லாம்
நவநவ வரங்கள் தந்து அருள் பொழிந்துய்க்கும் தெய்வம்

நன்னலம் ஒன்றே தருமச் சம்புவின் வடிவாய் வந்து
இன்னலம் ஒன்றே தருமச் சிவனுமாய் நீரும் நின்றீர்

என்றிங்கு நினைத்தேன் நானும், தவறேனப் புரிந்து கொண்டேன்
இன்றிதன் உண்மையெல்லாம் நானுமே சொல்ல வந்தேன்!


5. சங்கரரோ நீர்? இல்லை!!

சம்கர மூர்த்தி வந்து நல்லுபதேசம் செய்து
அம்புவி வாழ என்று அத்வைதம் சொல்லி நின்றார்

அத்வைத தத்வம் எல்லாம் அறியாத மக்கள் தாமும்
சித்தத்தை சிவனில் வைக்கப் பக்தியும் சொல்லி நின்றார்!

சங்கரர் நிர்ணயித்த பீடத்தின் தலையாய் வந்தீர்!
சங்கரர் சொன்ன எல்லாம் நீருமே சொல்லி நின்றீர்!

சங்கர மூர்த்தி நீரே, இங்கென நினைத்திருந்தேன்!
இங்கதும் தவறே என்று இன்று நான் புரிந்து கொண்டேன்!


காரணம் சொன்னேன்......

ராமன், கண்ணன், காமாக்ஷித் தாய், சம்பு, சங்கரர் - எப்படி?

ராமனே எதிரில் வந்தும், தாடகை மாறவில்லை!
ராமனே எதிரில் நின்றும், அசுரர்கள் மாறவில்லை!

தருமத்தின் தலைவன் ராமன், தருமமே உருவாய் வந்தோன்
ஒருபத்துத் தலைக் கொண்டோனின் எதிரிலே நின்றானன்று

ராமனே எதிரில் நின்றும், தருமமே வடிவாய் வந்தும்,
காமமே கொண்டலைந்த ராவணன் மாறவில்லை!

பூவையைக் கவர்ந்தானங்கே தானுமே திருந்தியன்று
ஆவன செய்யும் ராமன் சேவடி பற்றவில்லை!

அம்பெடுத்தவனை மாய்த்தான் அண்ணலும் இறுதியாக!
வம்பெடுத்தலைந்த நெஞ்சம் வீழ்ந்தது, கனியவில்லை!

கீதையே சொன்ன கண்ணன் தூதையே மதித்து அன்று
பாதையை மாற்ற அந்த கௌரவர் முனையவில்லை!

சாரதியாக அந்தக் கண்ணனே வந்தும் கூட
தேரதில் நின்ற பார்த்தன் கண்ணனை உணரவில்லை!

போரதில் கண்ணன் செய்த ஜாலங்கள் அதனால் வென்றும்
பேரளவுக்கே பஞ்ச பாண்டவர் பின்னர் வாழ்ந்தார்!

காமாஷித் தாயே வந்தும், அன்பதன் வடிவே வந்தும்
ஏமாற்றி நின்ற பண்டாசுரன் மனம் மாறவில்லை!

சண்டமாருதமாய் மாறி, பண்டனை அழித்தாள் தாயும்!
அண்டமும் அதிர நின்றாள்! அன்புறு மாறி நின்றாள்!

சிவனவன் பதம் பணிந்து வரம் பெற்ற அசுரர் கோடி!
தவம் செய்து வரங்கள் வந்தும், அசுரர்கள் மாறவில்லை!

சம்புவைப் பணிந்து நின்றான்; தசமுகன் வரங்கள் பெற்றான்
அன்பதே வடிவாய் வந்த ராமனை எதிர்த்து நின்றான்!

வரம் தந்த சிவனைத் தலையில் கைவைத்து எரிக்கப் பார்த்தான்
சிரமது எரிந்து மாண்ட பஸ்மாசுரனும் ஓர்நாள்!

சம்புவின் வடிவாய் வந்த சௌம்யத்தின் மூர்த்தி கூட
நம்பறுந்திறலோடன்று வாதங்கள் புரிந்தே வென்றார்!

அன்புருவாக வந்தும், அருளையே பொழிந்து நின்றும்
தன் தலை கொய்ய வந்தான் அவன் மனம் மாறவில்லை!

சிரசதைத் தந்து நின்றார், அவரையே காக்க என்று
நரசிம்ம மூர்த்தி வந்தார்! கயவனைக் கொன்று நின்றார்!

எங்கள் பெரியவா எப்படி?

உம்மெதிர் வந்தாரவரில், உருகாமல் நின்றார் யாரே?
நம்பிக்கையின்றி வந்தோர், அவருமே மாறிப் போனார்!

உம்முடைக் குரலைக் கேட்டு, உளம் மாறாதிருந்தார் யாரே?
நிம்மதி அடைந்தார் தெய்வக் குரலையே உணர்ந்தார் அவரே!

கருணையின் உருவாம் உம்மை, அன்பதன் வடிவாம் உம்மை
குருவெனக் கொண்டார் யார்தான் அபஜயம் அடைந்தாரிங்கே?

சிவ ராமன், கண்ணன், தாயும், சங்கர மூர்த்தியாரும்
சுபமாக அசுரர் தம்மை அழித்தருள் புரிந்திருந்தார்!

ஆனாலும் உங்கள் முன்னால் வந்திங்கு அழிந்தவர் யார்?
வானாளும் செல்வம் அன்றோ வந்தவர் அடைந்திருப்பார்!

அருந்தவம் செய்து தேவர் பதமலர் பணிந்து தந்த
பெருவரம் எல்லாம் பெற்றும் கனியாத மனங்களுண்டு!

பெரியவா என்ற அந்த ஒருமந்திரத்தைச் சொல்ல
எரிந்திடும் மனமும்கூட குளிர்ந்திங்குக் குழைந்து போகும்!

தேவர்கள் வரங்களெல்லாம், மனமாற்றம் செய்ததில்லை!
தேவா, உன் பார்வை ஒன்றோ, மனமெல்லாம் உருகச் செய்யும்!

உலகத்தில் அற்புதங்கள் மிகப்பல உண்டு ஐயா!
பல உண்டு எனினும் இங்கே, இரும்பென இருக்கும் கல்லாய்

இருந்திடும் மனத்தைக் கனியாய் ஆக்கி நல் வழியில் மாற்றும்
அரும்செயல் ஒன்றுதானே பெரும் அற்புதமாய் நிற்கும்!!

ராமனின் தருமம் அதுவும், கண்ணனின் இனிமை மொழியும்
காமாக்ஷித் தாயாமவளின் கருணையும் சிவனார் அருளும்

சங்கர குருவாமந்த சம்புவின் தபஸும், வாக்கும்
இங்கொரு வடிவாய் வந்தீர்! எங்களின் துணையாய் வந்தீர்!

அத்தனை அவதாரங்கள் செய்திடா மனமாற்றத்தை
எத்தனை லகுவாய்ச் செய்தீர்! இன்னமும் நடத்துகின்றீர்!

உடலிங்கு இல்லாவிடினும், நிழற்படம், சிலை, கனவென்று
படர்ந்திந்த வையம் எல்லாம் பக்தரைக் காத்து நின்று,

அவர் மனமாயை மாற்றி,  அற்புதம் செய்யும் உம் போல்
எவரிங்கு உண்டு ஐயா? யாரை நான் சொல்வேன் ஐயா?

பெரியவா சரணம்.
பெரியவா சரணம்.


























No comments:

Post a Comment