இன்று (15.04.2016), ராம நவமி. அந்தத் தாரக மந்த்ரனின் ஜன்ம தினம். 'ராம' என்னும் அந்த இரண்டு எழுத்தினால் என்னதான் நடக்காது?
கம்பன், அந்த நாமத்தின் பெருமையைப் பேசும்போது, இப்படிச் சொல்லுகிறான்:
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை "ராம" என்னும்
செம்மைசேர் நாமம்
நாடிய பொருள் கைகூடும், ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியது ஆக்கும் வேரிஅம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவோர்க்கே.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இன்மையே 'ராம' என்ற இரண்டு எழுத்தினால்
"காமகோடி - ராமகோடி" என்ற அற்புதமான புத்தகத்திலே ரா.கணபதி அண்ணா, ராமநாம மகிமையை, பகவன் நாம போதேந்த்ராள் காதை மூலமாக அற்புதமாக எடுத்துச் சொல்லுகிறார் :
ஸ்ரீ போதேந்திரரைத் தென்திசைக்கு அனுப்பி நாமப் பிரசாரத்தில் ஈடுபடுத்த திருவுள்ளம் கொண்டார் அவரது குருநாதர். காஞ்சிபுரம் செல்லும் வழியில் பூரியில் வசிக்கும் ஸ்ரீ லக்ஷ்மீதரர் என்னும் மகான் அருளிச் செய்த பகவன்நாம கௌமுதி என்னும் நாம சித்தாந்த கிரந்தத்தையும் பெற்றுக் கொள்ளும்படி கூறினார். குருவின் ஆணையைச் சிரமேற்கொண்டு, பூரி நோக்கி விரைந்தார் ஸ்ரீ போதர். பூரியில் ஸ்ரீ ஜகன்னாதரை சேவித்து, ஸ்ரீ லக்ஷ்மீதரரின் இல்லத்திற்கு சென்றார். ஆயின், அச்சமயம் லக்ஷ்மீதரர் இறைவனடி சேர்ந்திருந்தார். அவரது புதல்வரான ஸ்ரீ ஜகந்நாத பண்டிட் என்பவரிடம் குருநாதர் சொன்ன நாம சித்தாந்த கிரந்தத்தை பெறுவதற்காக இல்லத்திற்கு வெளியே காத்திருந்தார். உள்ளே சென்று அவர்களை தொந்தரவு செய்ய மனமின்றி, வாயிலில் அமர்ந்து நாம ஜபம் செய்யத் துவங்கினார்.
இதற்குச் சில நாட்கள் முன்னர், ஒரு இளம் தம்பதியர் தீர்த்த யாத்திரையாகக் காசிக்குச் சென்று கொண்டிருந்தனர். மாலைப் பொழுது என்பதால் இரவு அந்த ஊரிலேயே தங்கலாம் என்று முடிவு செய்தனர். மறுநாள் காலையில், தீர்த்தயாத்திரை வந்தவரின் மனைவியைக் காணவில்லை. சுற்றும் முற்றும் நன்கு தேடினார், இருந்தும் பயனில்லை. ஊர் மக்களிடம் தெரிவித்தபோது, முகலாயர்கள் யாரேனும் உமது மனைவியை கடத்திச் சென்றிருக்கக் கூடும் என்றனர். இதைக் கேட்டு மனம் நொந்தார், ஆயினும் காசி யாத்திரையை நிறுத்த விரும்பாமல் காசி நோக்கிப் பயணித்தார். இறை அருளால் காசி யாத்திரை முடித்து அவ்வூர் வழியே வந்து கொண்டிருந்தார். மாலை வேளையில் தனது அநுஷ்டானங்களை ஆற்றுப் படுக்கையில் செய்து கொண்டிருந்தார், அப்போது அவரிடம் ஒரு இஸ்லாமியப் பெண்மணி வந்து நின்று 'ஓ' வென்று அழுதார். வந்திருப்பது தன் மனைவி என்பதை உணர்ந்தார், எங்குற்றாய்? என்ன நேர்ந்தது என்றார்? அதற்கெல்லாம் நேரம் இல்லை, முதலில் இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்றார் அந்தப் பெண். உடனே இருவருமாக ஊரை விட்டு வெகு தூரம் வந்தனர். பாதுகாப்பான இடத்தை அடைந்ததும், சிலர் தன்னைக் கடத்திச் சென்றது பற்றியும், அவருக்கு அங்கு நடந்த கொடுமைகள் பற்றியும் கண்ணீர் மல்க விவரித்தார். பின்னர், தன்னை மனைவியாக ஏற்காவிடினும், இல்லத்தில் இருந்து தொண்டு புரியும் பாக்யமாவது தர வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார். கணவனும், சாஸ்த்ரங்கள் சம்மதித்தால் அவளை ஏற்பதாகவும் உறுதி பகன்றார். அவர்கள் இருவரும் இது பற்றி ஜகந்நாத பண்டிட் என்பவரிடம் கேட்க அவரது இல்லத்திற்கு விரைந்தனர். (அந்த இல்லத்து வாசலில் தான் நம்ம சுவாமிகளும் நாம ஜபம் பண்ணிட்டு இருக்கார்).
இல்லத்திற்கு வந்த இருவரும், கதவைத் தட்டி, ஜகந்நாதரிடம் நடந்தவற்றைக் கூறினர். தங்களுக்கு ஒரு நல்ல வழி காட்ட வேண்டும் என்றும் வேண்டினர்.இதைக் கேட்ட மாத்திரத்தில், நீங்கள் இருவரும் மூன்று முறை ஸ்ரீ ராம நாமத்தை நீங்கள் மனமாரச் சொன்ன பிறகு முன்பு போல் சேர்ந்து வாழலாம் என்று கூறினார். இதைக்கண்டு வியந்த ஸ்ரீ போதர், இதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? என்று கேட்டார். தனது தந்தை எழுதிய பகவன் நாம கௌமுதியே இதற்கு ப்ரமாணம் என்றார் ஜகந்நாத பண்டிட். உடனே அந்த அற்புத நூலையும் ஸ்ரீ போதரிடம் குடுத்தார். ஸ்ரீ பெரியவாளும், அன்று இரவே அந்த நாம சித்தாந்த க்ரந்தம் முழுவதையும் படித்தார். காலையில் அந்த தம்பதிகள் இருவரையும் அழைத்து, ஆம்! சாஸ்தரங்கள் சொல்வது உண்மையே, நீங்கள் இருவரும் சேர்ந்து வாழலாம். ஆனால் மற்ற மக்கள் இதை ஏற்க மறுப்பார்கள். ஆகவே நீங்கள் இருவரும் என்னுடன் நதிக் கரைக்கு வாருங்கள் என்றார். நதியில், ராம நாமம் ஜபித்து மூழ்கி எழும்படி சொன்னார். மூழ்கி எழுந்ததும், இஸ்லாமிய ஆடை அணிந்து இஸ்லாமியர் கோலத்தில் இருந்த அந்தப் பெண் பழைய உருவமும் புனிதமும் பெற்று மலர் மாலை, குங்குமத்துடன் மீண்டு எழுந்தாள். புதுமணத் தம்பதியர் இருவரும் ஸ்ரீ சுவாமிகளை சேவித்து விடை பெற்றனர்.
ஜகன்னாதரின் அன்னையோ, தன் மகன் செய்தது சிறிதும் சரியில்லை என்று கூறினாள். ஸ்ரீ.ஸ்வாமிகள் வியப்புடன் 'ஏன்' என்று கேட்க, ராம நாமத்தை ஒரு முறை சொன்னாலே போதுமே, எதற்கு மூன்று முறை சொல்லச் சொன்னான் தன் மகன்; ராம நாமம் எப்படிச் சொன்னாலும் பயன் கொடுக்கும் - மனமாரச் சொன்னாலும் சரி; புரியாமல், மனமின்றிச் சொன்னாலும் சரி - அப்படி இருக்கத் தன் மகன் அவர்களை, 'மனமாரச் சொல்லுங்கள்' என்று சொல்லிவிட்டானே என்றும் வருத்தப்பட்டார் அந்தத் தாய்!!
பகவன் நாம போதேந்த்ரரோ ஆச்சரியத்தில் அமிழ்ந்து போனார்! ராம நாம மகிமையை முழுவதுமாக உணர்ந்தார்!
நமது பெரிய பெரியவாளும், ராம் சூரத்குமாரரை "போதேந்த்ராள் சமாதிக்கருகில் வசிக்கிறாயா" என்று கேட்க அழைத்து வரச் சொன்னதும் அடியாரெல்லாம் அறிந்த ஓர் அற்புதம்தான்.
இத்தகைய பெருமை பெற்ற ராம நாமத்தை இந்த ராம நவமியிலே ஸ்மரித்து ஆனந்தம் பெறுவோம்.
அந்த ராமபிரானின் திருவடியிலே இந்தப் பாடல்கள் சமர்ப்பணம்.
சிவனனவன் உள்ளம் நின்ற அண்ணலைச் சிவனும் அன்று
துவளிடைக் கொடியாளுக்கு சொன்னவோர் நாமம்தன்னை
பவவினைக் கடலைத் தாண்ட உதவிடும் நாவாய்தன்னை
தவமுறை தியானம் வைக்க, வாழ்க்கையும் இனிக்கும் அம்மா!
ராமனை, அனுமன் நாளும் சொன்ன மந்திரத்தை, சீதை
காமனை, இலங்கை வேந்தன் கூற்றினை, கம்பன் கண்ட
நாமனை, என்றும் காக்கும் இரண்டெழுத்தைச் சொல்ல
தேமதுரம் பிறக்கும், நாமினிப் பிறவோம் அம்மா!
No comments:
Post a Comment