Wednesday, April 27, 2016

மலர் மாலைப் பாமாலை : 27.04.2016

மலர்களிலே ஒரு மலராய் நானும்தான் மலர்ந்திருந்தேன்
       மணம் வீ சி சுகம் பரப்பி நாளெல்லாம் மகிழ்ந்திருந்தேன்
மலராய் நான் மலர்ந்தென்ன? மணம்வீசி மகிழ்ந்தென்ன?
        மலர்மாலை அதில்சேர்ந்து உன் தோளில் விழவில்லை....


காடதனில் பொய்கையதில் தாமரையாய் மலர்ந்திருந்தேன்
         வண்டுலவ தென்றலது வீசிடவே மகிழ்ந்திருந்தேன்
காடதனில் பூவிதனைப் பறித்துடனே உன்பதத்தில்
          சேர்த்திடவே யாருமிலை, பூவிதுவும் வாடுதப்பா!

கோவிலிலே தோட்டத்தில் ஒருமலராய் நானிருந்தேன்
        ஸ்ரீசரண பதமலரில் சேர்ந்திடுவேன் எனநினைத்தேன்
பாவியென நீ நினைத்தால் ஆவியதும் விட்டிடுவேன்
         மேவியுனை அடைந்திடவே வரம் நீயும் தந்திடப்பா!


மல்லிகை ரோஜா முல்லை மனங்கவர் சம்பங்கியும்
அல்லியோடரளிப் பூவும், அருமையாய்த் தும்பைப்பூவும்
கொல்லெனப் பூத்த சாதி மல்லியோடிதயம் என்னும்
கல்லையும் உன்மேலிட்டேன் உளம்கனிந்தருள்வாயோ நீ?


தாமரை மலரைப்போல இருக்கும் உன் வதனம் பார்த்தும்
தாமரை இதழ்கள் போல இருக்கும் உன் பாதம் பார்த்தும்
மாமறை காக்க வந்த வடிவத்தை நிதமும் பார்த்தும்
காமம் கொண்டலையும் நெஞ்சைக் கனிந்துடன் ஏற்பாயோ நீ?


மனம் கவர் மலர்கள் சேர்த்து, மணம்கமழ் மாலை கோர்த்து
தினம் உனை அலங்காரித்து, குளிர்முகம் சிங்காரித்து
கனங்குழைக் கஞ்சித் தாயாம் உன்பாதம் அணைந்து நிற்கும்
இனம் என்றும் தருவாயப்பா! இசை வாழ்வு தருவாயப்பா!

No comments:

Post a Comment