Saturday, June 18, 2016

அபிராமி அந்தாதி : 1 - 6

17.06.2016 : அபிராமி அந்தாதி : கணபதி வாழ்த்து
*********************************************************************************
சில வருடங்களுக்கு முன்னர் அடியேன் blog -ல் பதிவு செய்த அபிராமி அந்தாதி பற்றிய தொடரை இங்கே மறுபதிவு பண்ணலாம் என்று தோன்றியது.
பெரும் புலவர்களெல்லாம், பெரும் சக்தி உபாசகர்களெல்லாம் படித்து, மனனம் செய்து மகிழும் நூல், அபிராமி அந்தாதி.
பெரும் பெரும் அறிஞர்களெல்லாம் - கி.வா.ஜ. போன்றவர்களெல்லாம் அபிராமி அந்தாதிக்கு உரை எழுதியிருக்கிறார்கள்.
அடியேன் மனதில் பட்டு சில வருடங்களுக்கு முன்னால் எழுதியதையும் சில திருத்தங்களோடு, இங்கே, நமது பக்த சமூஹத்துடன் பகிர்ந்து கொள்ளும் ஆசையில், மறுபடியும் பகிர்விடுகிறேன்.
பெரியவா சரணம்.

அபிராமி அந்தாதி : கணபதி வாழ்த்து
********************************************************************

அபிராமி அந்தாதி, மிக அற்புதமான நூல். இலக்கிய நயமும் தமிழ் அழகும் செறிந்த ஓர் காவியம். .
"தாரமர் கொன்றையும் ஷண்பக மாலையும் சார்த்தும் தில்லை
ஊரர் தம் பாகத்து உமை மைந்தனே! உலகேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனி கணபதியே நிற்கக் கட்டுரையே"
அபிராமி அந்தாதி பாடத் தொடங்குமுன் அபிராமி பட்டர் விக்னேஸ்வரனை வணங்கி விட்டுத்தான் ஆரம்பிக்கிறார். எந்தக் கார்யம் ஆரம்பிக்கிற போதும் விநாயகனை வணங்கி விட்டு தானே தொடங்குகிறோம்? பிள்ளையார் சுழி போட்டு விட்டு தானே தொடங்குகிறோம்? அதே போல, அபிராமி அன்னையைப் பற்றி அந்தாதி பட ஆரம்பிக்கிற போதும் அப்படியே செய்கிறார் பட்டர்.
பெரிய பெரியவா, பிள்ளையாரைப் பற்றிச் சொல்லும்போது, ஒரு இடத்தில் (தெய்வத்தின் குரல் - நான்காம் பாகம்) அவருக்கே உரிய நகைச்சுவையோடும் அழகோடும், சொல்லுகிறார்:
"ஒரு சின்னக் குழந்தையானால் கூட, அது ரொம்பவும் பெரிய மநுஷ்யாள் விட்டுக் குழந்தையாயிருந்து விட்டால் அதனிடம் எல்லோரும் அன்பு காட்டிக் கொஞ்சுவார்கள். அதற்குப் பயப்படக்கூடச் செய்வார்கள். பழைய நாளில் 'ராஜாப்பயல்'என்று அன்போடும் பயத்தோடும் சொன்னார்கள் . அப்புறம் 'கலெக்டர் அகத்துப் பிள்ளையாக்கும்'என்று சொல்லி வந்தார்கள். இப்போது 'மந்திரி-எம். எல். ஏ. வீட்டுப் பிள்ளை'என்று சொல்கிறார்களோ என்னவோ? பெரிய மநுஷ்யாள் குழந்தை என்றால் அது ஏதாவது சண்டித்தனம் பண்ணினால்கூட, மற்ற குழந்தைகளை அதட்டுகிற மாதிரி அதட்டாமல் அது கேட்பதைக் கொடுத்து விடுவார்கள். ஏன் என்றால், இந்தக் குழந்தை போய், ரொம்பவும் செல்வாக்குள்ள அதன் தகப்பனாரிடம் ஒருத்தரைப் பற்றி ஏதாவது புகார் பண்ணிவிட்டால், அவ்வளவுதான், அந்த ஆசாமிக்கு இந்தத் தகப்பனர்காரரிடமிருந்து பெரிய உபத்ரவங்கள் வந்து சேரும் எவரும் தங்களையே திட்டினால் கூடப் பொறுத்துக் கொள்ள கூடும் போனால் போகிறதென்று விட்டுவிடலாம். ஆனால், காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்கிறார்களே, அப்படி ரொம்பவும் அருமையாக இருக்கப்பட்ட தங்கள் குழந்தையை யாராவது ஏதாவது சொல்லிவிட்டார்களானால் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். இப்படி ஒரு பெரிய மநுஷ்யர் கோபித்துக்கொண்டு கிளம்பினால் ரொம்ப ஆபத்து அல்லவா?
அதனால்தான் " இது பெரிய இடத்துப் பிள்ளை அப்பா இதனிடம் வம்புக்குப் போகப்படாது" என்று சொல்வது.
இதற்கு நேர் எதிராக, ஒரு குழந்தையை மெச்சி விட்டால் அதன் தகப்பனாருக்கு அவரையே மெச்சுவதைவிட ஸந்தோஷமாய்விடும் உச்சி குளிர்ந்துவிடும். இப்படி ஒரு பெரிய மநுஷ்யரை ப்ரீதி செய்து விட்டால் ஸுலபமாக அவரிடமிருந்து பெரிய பெரிய லாபங்களைப் பெற்றுவிடலாம். பெரியவர்களை நேராக த்ருப்தி செய்வது கஷ்டம். குழந்தைகளையோ ரொம்பவும் எளிதில் த்ருப்தி படுத்தி விடலாம். ஓரு சின்னச் சொப்பையோ சாக்லேட்டையோ காட்டிவிட்டால் போதும். இல்லாவிட்டால் ஏதோ கொஞ்சம் கோணங்கி விளையாட்டுக் காட்டினால் அதிலேயே ஒரு குழந்தைக்குக் குஷி பிறந்துவிடும். அந்தக் குழந்தையின் ஸந்தோத்தில் அதன் அப்பாவுக்கும் ஏக ஸந்தோஷம் உண்டாகிவிடும். தன் குழந்தையை ஸந்தோஷப்படுத்தினவருக்குத் தன்னாலன எல்லா நன்மையும் பண்ணிவிடுவார். அதாவது, ஸுலபத்தில் திருப்திப்படுத்த முடியாத ஓரு பெரியவரால் நமக்கு ஓரு காரியம் ஆகவேண்டுமானால் அதற்கு வழி ஈஸியாக த்ருப்தியாகிவிடும். அவருடைய குழந்தையை ஸந்தோஷப்படுத்துவதுதான்.
இதனால் என்ன ஏற்படுகிறது? நமக்கு எல்லாவிதமான நன்மைகளையும் ஒன்றுகூடப் பாக்கியில்லாமல் செய்வதற்கு சக்தி படைத்த பெரிய மநுஷ்யராக ஒருத்தர் இருந்து, அவருக்கு ஒரு குழந்தையும் இருந்து விட்டதானல் போதும், நமக்கு ஒரு கஷ்டமே இல்லை. அந்த குழந்தையைப் பிடித்து நாம் ஸுலபத்திலே குஷிப்படுத்தி விட்டாலே போதும், அந்த மஹா பெரிய மநுஷ்யரிடமிருந்து நாம் கொஞ்சங்கூட ச்ரமமேயில்லாமல் பெரிய பெரிய லாபங்களைப் பெற்றுவிடலாமென்று ஏற்படுகிறது.
இப்படியிருக்கூடிய மஹா பெரிய இடத்துப் பிள்ளையார் என்று பார்த்துக் கொண்டே போனால் ஊர்ப் பெரிய மநுஷ்யருக்கு மேலே ஜில்லாவின் பெரிய மநுஷ்யர், அவருக்கு மேலே மாகாணத்தின் (மாநிலத்தின்) பெரிய மநுஷ்யர் என்று போய்க் கொண்டேயிருக்கும். முடிவாக ஸமஸ்த லோகத்துக்கும் எவன் ராஜாவோ அந்தப் பரமேச்வரனிடம் போய் நிற்கும். ராஜராஜேச்வரி என்றே பெயரிருக்கிற அம்பாள் - ஈஸ்வரன் என்ற தம்பதிதான் எல்லாருக்கும் உச்சியில் இருப்பார்கள். அப்போது நாம் முடிவாக நிற்கும் " பெரிய இடத்துப் பிள்ளை " யார் என்று பார்த்தால், பிள்ளையார்தான் என்று தெரியும்"
எவ்வளவு அழகான முறையில் நாமெல்லாம் ஏன் அந்தப் பிள்ளையாரை முதலில் வணங்கிவிட்டு ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டா நம் பெரியவா!!
அதே மரபில்தான், அபிராமி பட்டரும், பிள்ளையாரை ஸ்தோத்ரம் செய்துவிட்டு ஆரம்பிக்கிறார்.
எப்படிப்பட்ட பிள்ளையாரை ஸ்தோத்ரம் செய்கிறார்? உமை மைந்தனை. கண நாதனாய் இருப்பவனை. கொன்றை மலரையும் செண்பக மாலையையும் சூடிக் கொண்டு தில்லை அம்பலத்திலே ஆனந்தமாய் நர்த்தனம் செய்து கொண்டு இருக்கும் அந்த நடராஜனின் சரி பாதியாய் இருக்கும் உமையின் மைந்தனை.
இங்கு முக்யமாகப் பார்க்க வேண்டிய்து "உமை மைந்தனே" என்கிற பிரயோகம். "சிவன் மைந்தனே" என்றோ "சிவா குமரன்" என்றோ சொல்லவில்லை பட்டர். "உமை மைந்தன்" என்றே பேசுகிறார். உமை அம்மை தானே விநாயகனை படைத்தாள்!
அவளும் எப்படிபட்ட உமை?
ஆனந்த நடனம் ஆடுகின்ற நடராஜனின் சரி பாதி அவள்.
அப்படிப்பட்ட உமை மைந்தனை அழைத்து, இந்த அபிராமி அந்தாதி - உலகேழும் புகழும் அபிராமி அன்னை தனை பாட வரும் இந்த அந்தாதி எப்போதும் தனது சிந்தையின் உள்ளே இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ள்கிறார்.
அதிலே, இன்னும் இரண்டு அழகான விஷயங்கள் இருக்கின்றன:
ஒன்று : கணபதியே என்று ஆரம்பிப்பது. பிள்ளையார் என்றோ விநாயகர் என்றோ சொல்லவில்லை. "கணபதியே" என்று சொல்கிறார்.
கணபதியை முக்யமாகக்கொண்ட மதம் 'காணாபத்யம்'. பாரதம் முழுக்க பரவி இருந்த அறு மதங்களில் சாக்தம் என்பது சக்தியையும், சைவம் என்பது சிவனையும், கௌமாரம் என்பது குமாரனாகிய முருகனையும், சௌரம் என்பது அக்னியையும், வைஷ்ணவம் என்பது விஷ்ணுவையும், காணாபத்யம் என்பது கணபதியையும் முழு முதல் கடவுள் எனக்கொண்டு விளங்கும்.
அதனால் தான் 'கணபதி' என்று குறிப்பிட்டாறோ?
நம் தேசம் முழுக்கவே 'கணபதி' என்றே சொல்லுகிறார்கள். 'கணபதி பாபா மோரியா' என்று மும்பை முழுக்க பிரபலம். "கம் கணபதயே நமோ நமா' என்ற மந்த்ரமும் இந்தியா முழுக்கவே பிரபலம் தான்.
'வாதாபி கணபதிம் பஜே' என்றுதானே நாம் பட ஆரம்பிக்கிறோம்!!
இப்படி, கணபதி நாமத்திற்கு பெருமைகள் இருப்பதனால் தானோ என்னவோ 'கணபதி' என்று ஆரம்பிக்கிறார் !
அடுத்த விஷயம் 'கார் அமர் மேனி கணபதியே' என்று சொன்னது.
"கார் அமர் மேனி கணபதி" என்றால் "கருமையான மேனி உடைய கணபதி" என்று பொருள். ஆனால், கணபதி பற்றிய மற்ற பாடல்கள் என்ன சொல்கின்றன?
"சுக்லாம்பரதரம்" என்று தொடங்கும் ச்லோகத்திலே, "வெள்ளை ஆடை உடுத்துபவரும், சந்திரன் போன்ற வெண்மை நிறம் உள்ளவரும்" என்றே சொல்லப்படுகிறது.
மகா கணபதி சகஸ்ரநாமமோ, அவரை "ரக்த" - சிவந்த நிறத்தவர் என்றும், "ஸ்வேத" - வெண்ணிற மேனி உடையவர் என்றும் சொல்கிறது.
மற்றொரு இடத்திலே, "மூஷிக வாகன சதநாம ஸ்தோத்ரத்தில், "மேகாய மேகவர்ணாய என்று சொல்கிறது. "மாரியாய் பொழிபவரும், மேக நிறம் உள்ளவரும்" என்று பொருள். இந்த ஸ்லோகமும் கணபதியை மேக நிறம் உள்ளவராக, கரிய நிறத்தவராக பார்கிறது.
நம் தமிழ் பாட்டி அவ்வை கூட விநாயகர் அகவலில் "நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்" என்று கணபதியை நீல நிறத்தவராக, கரிய நிறத்துக்கு சொந்தக்காரராகவே பார்க்கிறார்.
எது எப்படி இருந்தாலும், யானை கருப்பு நிறம் தானே! அந்தக் கருப்பு நிற யானைகளுக்கு எல்லாம் அரசனை, நமது அகங்காரம் என்னும் மதம் கொண்ட யானையை ஆளும் ராஜாவாய் விளங்கும் கணபதியைக் கருமை நிறம் கொண்டவராகக் குறித்தது சரிதான் என்று தோன்றுகிறது.
இப்படி, நடராஜனின் பாகமாகிய உமையின் மைந்தனாகிய, கணங்களுக்கெல்லாம் தலைவனாகிய கருமை நிற கணபதி, இந்த அபிராமி அந்தாதி நம் மனதிலே, சிந்தையிலே என்றும் நின்றிட அருள் செய்யட்டும் என்று அபிராமி பட்டர் தொடங்குகிறார்.


18. 06.2016 : அபிராமி அந்தாதி முதல் பாடல்:

" உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்குமத் தோயமென்ன,
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத் துணையே"


உதிக்கின்ற அந்தக் கதிரோனின் ஒளிக்கீற்றை உச்சித்திலகமாய் அணிந்தவளாய், உணர்ந்து தெளிந்தோர் மதிக்கின்ற மாணிக்கம் போன்று விளங்குபவளாய், மாதுளம் மொட்டு போன்று இருப்பவளாய், தாமரை மலர்களிலே வீற்றிருக்கும் லஷ்மியும் சரஸ்வதியும் துதித்து வணங்கும் மின்னல் கொடி போன்று இருப்பவளாய், மெல்லிய இடை கொண்டவளாய், குங்குமத்தால் ஆனதென்ன போல் சிவந்த மேனி கொண்டவளாய் விளங்கும் அபிராமியே! எனக்கு எப்போதும் துணையாய் நீ இருக்க வேண்டும் என்று ஆரம்பிக்கிறார் அபிராமி பட்டர்.

உதிக்கின்ற அந்தச் செங்கதிர் வெம்மை தருவதில்லை. ஒளி மட்டுமே தருகிறது. ப்ரகாசம் தந்து ஒரு நாளை ஆரம்பித்து வைக்கிறது. வைகறைப் பொழுதிற்கு அறைகூவல் விடுத்து, நம்மை எல்லாம் இருளில் இருந்து மீட்டு எழுப்புகிறது. அபிராமி அம்மை அத்தகைய செங்கதிரைத் திலகமாய் அணிந்து இருக்கிறாள்.
அவள் "சூரியனைத் திலகமாய் அணிந்திருக்கிறாள்" என்று சொல்லவில்லை. "செங்கதிரைத் திலகமாய் அணிந்திருக்கிறாள்" என்று சொல்லவில்லை."உதிக்கின்ற செங்கதிரை அணிந்திருக்கிறாள்" என்றே சொல்கிறார் அபிராமி பட்டர். செங்கதிரின் வெம்மையின்றி, நம்மை இருளில் இருந்து மீட்கும் ப்ரகாசம் மட்டுமே கொண்டவளாய் அபிராமி அம்மை இருப்பதைக் காட்டுகிறார் பட்டர்.

"உச்சித் திலகம்" என்று சொல்லும் பதம் ரொம்பவும் விஸேஷம்.
சூரியன் பொட்டாய் அணியப்படவில்லை. நெற்றிப் பொட்டாய் இல்லை. நெற்றி உச்சியிலே, மங்கலச் சின்னமாய்த்தான் அவள் சூரியனை அணிந்து இருக்கிறாள்.

"ஸீமந்த ஸிந்தூரி" என்று லலித ஸஹஸ்ரநாமம் சொல்வது போல், உச்சியிலே அணிந்து இருக்கிறாள். அலை அலையாய்ப் பரவும் கேசச் சுருள்கள் அந்த சூரியனின் கிரணங்கள் போல் இருக்கின்றன.
மாணிக்கக் கல் சிகப்பு நிறம். நவரத்னங்கள் இருந்தாலும், "மனிதருள் மாணிக்கம்" என்று யாரையாவது உயர்த்திப் பேசும்போது, மாணிக்கக் கல்லையே உதாரணம் சொல்லுகிறோம்.
அது போல், அபிராமி அம்மையும் மாணிக்கமாய் இருக்கிறாள்.
எப்படிப் பட்ட மாணிக்கம்? "உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்". "உணர்வுடையோர்" என்றால் யார்? அந்த அம்பிகையை வழிபடும் மார்கத்தை, 'ஸாக்தம்' எனப்படும் அந்த ஸக்தி மார்கத்தைக் கற்றுத் தெளிந்தோராகிய உணர்வுடையோர். அத்தகைய பெருந்தவதோர்களும் போற்றும் மாணிக்கமாய் இருக்கிறாள் நம் அன்னை அபிராமி.

'மலர்க்கமலை' என்பது யர்? பொதுவாக இது லஷ்மியைக் குறித்தாலும், ஸரஸ்வதியும் கூட தாமரையில் வீற்றிருப்பவள் தான்.
ஆனாலும்கூட, இங்கே  சிவந்த பொருட்கள் அத்தனையைஉம் சொல்லுமிடத்தில், குறிப்பாக 'மாதுளம் போது" என்று சொல்லிவிட்டு, 'மலர்க்கமலை' என்று சொல்லுவதால், செந்தாமரை மலரில் இருக்கும் லஷ்மியையே குறிக்கிறார் என்று புலனாகிறது. இப்படி, , செந்தாமரை மலரம் திருமகள் போற்றும்  தெய்வமாகத் திகழ்கிறாள் அபிராமி.

யோக நிலையில் அவளை தியானிப்பவர்களுக்கு ஒரு மின்னல் வெட்டுவது போல அவள் காட்சி தருவாள் என்பார்கள். அதையே இங்கு பட்டரும் "மின்கொடி" என்று குறிக்கிறார்!

குங்கும அர்ச்சனை ஏற்பவள் அல்லவோ அவள்? அப்படி, குங்கும அர்சனையை ஏற்று ஏற்று, குங்குமத்தால் ஆன மேனியாய் ஆகி விட்டாள் அவள். அந்தக் குங்குமம் நிலைக்கவும் மங்கலம் தங்கவும் அவளே அல்லவோ துணை? சாதாரணத் துணை இல்லை. "விழுத் துணை"!!  மிகச் சிறந்த துணை. என்றும் வரும் துணை.

சதாரணமாக, ஆண் தெய்வங்களைப் பாடும்போது பாதாதி கேசாந்தமாகவும், பெண் தெய்வங்களைப் பாடும்போது கேசாதி பாதாந்தமகவும் பாடுவது மரபு.

உதாரணத்திற்கு, பிள்ளையாரைப் பாடும் ஔவையார், "சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு" என்று பாதத்தில் இருந்து தொடங்குகிறார்.

கந்தர் சஷ்டிக் கவசமும் கூட, "சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன், பாதம் இரண்டில் பண்மணிச் சதங்கை" என்று தொடங்குகிறது.

சிவபுராணமும் "நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வழ்க!" என்றே தொடங்குகிறது.

லலிதா ஸஹஸ்ரநாமமோ, அம்பிகையின் வர்ணனையை கேசாதி பாதாந்தமாகத் தொடங்குகிறது. "ஸம்பகாஸோக புன்னாக ஸௌகந்திக லஸத் கஸா" - "ஸம்பகம், அசோகம், புன்னாகம் போன்ற புஷ்பங்களின் வாசனையை எல்லாம் இயற்கையிலேயே தன்னகத்தில் கொண்ட கூந்தல்" என்று கேசத்தில் இருந்து தொடங்குகிறது.

விஷ்ணுவிற்கு பாதாதி கேசாந்தம் மட்டுமே ஸ்தோத்ரம் செய்த ஆதி சங்கர பகவத் பாதர், சிவ பெருமானுக்கு பாதாதி கேசாந்தமும் கேசாதி பாதாந்தமும் என இரு விதமாகவும் ஸ்தோத்ரம் செய்திருப்பது சிவ பெருமானை சிவனாகவும் பார்வதியாகவும் என இரு விதமாகவும் பார்த்ததினல்தான்.

இந்த மரபை ஒட்டியே அபிராமி பட்டரும், கேசாதி பாதாந்தமாகவே தொடங்குகிறார்.

இன்னொரு குறிப்பிட வேண்டிய விஷயம், அபிராமி அந்தாதி முழுக்க முழுக்க லலிதா ஸகஸ்ரநாமத்தை ஒட்டியே செல்கிறது.
லலிதா ஸகஸ்ரநாமம் தொடங்கும் போது, "உத்யத் பானு ஸஹஸ்ரபா" - "ஆயிரம் உதிக்கின்ற சூரியர்கள் போன்று வெம்மையில்லாத ஒளி பொருந்தியவள்" என்று தொடங்குகிறது.

அபிராமி அந்ததியும், லலிதா சஹஸ்ரநாமத்தின் அடி ஒற்றி, 'உதிக்கின்ற செங்கதிர்" என்று ஆரம்பிக்கிறது. "தாடிமீ குஸுமப் ப்ரபா" என்று சஹஸ்ரநாமம் சொல்லும். "மாதுளம் போது" என்று பட்டர் சொல்லுகிறார்!

"குங்குமத் தோயமென்ன" என்ற பதமும் அழகுதான். கி.வா.ஜ. அவர்கள் இதற்கு மிக அற்புதமான பொருள் சொல்லுவார். "மூககவி ஆர்யாசதகத்தில் சொன்ன "காஸ்மீர ஸ்தபகக் கோமலாங்கதா" என்பாற்போல், அர்ச்சனை செய்து அபிஷேகம் செய்யும் நேரத்தில், குங்குமப் பூவினை கடாரத்தில் நிரப்பி, அந்த னீரினால் அன்னைக்கு அபிஷேகம் செய்யும்போது, அம்பிகையின் சென்னிறமும், அந்தக் குங்குமப் பூவினால் நிரம்பிய நீரின் வர்ணமும் ஒன்றுபோல் ஆகிவிடுவதை நினைந்து பட்டர் பாடினார்" என்று அழகாகச் சொல்லுவார்!

இந்தப் பாடல் முழுக்க, அம்பிகையின் சிவந்த நிறமே பேசப்படுகிறது. உதிக்கின்ற செங்கதிரும், மாணிக்கமும், மாதுளம் மொட்டும், குங்குமம் என்னச் சிவந்த மேனியும் என்று இப்படி அத்தனை வர்ணனையுமே அம்பிகையை சிவந்த திருமேனியளாகவே காட்டுகின்றன.

அம்பிகையோ, க்ருஷ்ண சோதரி.  நாராயணி. நீலமும் பச்சையும் கலந்த  கருமேனி கொண்டவள். அவளை ஏன் சிவந்த நிறமாக பேசுகிறார் பட்டர்?

இதற்கு விளக்கம், நமது பெரியவாளிடமிருந்து கிடைக்கிறது!!

பெரியவா அம்பிகையின் நிறத்தைப் பற்றிப் பேசுகையில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

"கறுப்பும் சிவப்புமான காமாக்ஷி
அம்பாளைப் பற்றிய பல ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. இவற்றில், ஆதி சங்கர பகவத் பாதர்கள் செய்த சௌந்தரிய லஹரியும் மூக கவி செய்த 'பஞ்ச சதீயும்' ஈடு இணை இல்லாமல் இருக்கின்றன. தேர்ந்த சைத்திரிகன் ஒருவன் அம்பாளின் ஸ்வரூபத்தை எழுதிக்காட்டுகிற மாதிரி, இவை அம்பிகையின் திவ்விய வடிவத்தை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடும்; அவளுடைய மகிமையினால் நம் மனசு மூழ்கிக் கிடக்கும்படி செய்யும்.
கண்ணுக்கும் மனசுக்கும் எட்டாத பராசக்தியைக் கண்ணால் காணவும், மனஸால் அநுபவிக்கவும் செய்கிற வாக்சக்தி 'சௌந்தரிய லஹரி'க்கும், 'மூக பஞ்ச சதீ'க்கும் உள்ளது. கம்பீரம் அத்தனையும் 'சௌந்தர்ய லஹரி'யில் அடங்கியிருக்கிறது; மார்த்தவம் (மிருதுத் தன்மை) முழுவதும் மூக பஞ்சசதீயில் உள்ளது.
'மூகன்' என்றால் ஊமை என்று அர்த்தம். ஊமையாக இருந்த ஒரு பரம பக்தர், காஞ்சீபுரத்தில் குடிகொண்டுள்ள ஜகன்மாதா காமாக்ஷியின் கிருபா கடாக்ஷத்தையும், அவளுடைய தாம்பூல உச்சிஷ்டத்தையும் பெற்று, உடனே அமிருத்த சாகரம் மாதிரி ஐந்நூறு சுலோகங்களைப் பொழிந்து தள்ளி விட்டார். அதைத்தான் மூக பஞ்ச சதீ என்கிறோம். 'பஞ்ச' என்றால் ஐந்து; 'சத' என்பது நூறு.
அதிலே காமாக்ஷியின் நிறத்தைச் சொல்லுகிறபோது செக்கச் சிவந்தவள் என்றும் பல இடங்களில் கூறியிருக்கிறார். கருநிறம் படைத்தவள் என்றும் சில ஸ்லோகங்களில் சொல்கிறார். 'காச்மீர ஸ்தபக கோமாளாங்க லதா' (குங்குமப் பூங்கொத்து போன்ற கோமளகக் கொடி) 'பந்து ஜீவகாந்தி முஷா' (செம்பருத்தியின் ஒளி படைத்தவள்) என்று சொல்கிறார். 'தாபிஞ்ச ஸதபகத்விஷா' (கருநீலக் காயாம்பூப்போல் ஒளிருகிறவள்) என்று கூறிகிறார்.
ஏன் இப்படி இரண்டு நிறங்களாகச் சொல்கிறார்? நமக்கு இப்படி ஒருத்தியையே இரண்டு நிறத்தில் சொல்வது புரியவில்லை. சரி, சங்கர பகவத் பாதர்கள் 'ஸெளந்தரிய லஹரி'யில் இதைப் பற்றி என்ன சொல்கிறார்?
"ஜயதி கருணா காசித் அருணா" என்கிறது ஸெளந்தரிய லஹரி. நல்லதெற்கெல்லாம் உற்பத்தி ஸ்தானமாக சம்பு என்று ஒன்று இருக்கிறது. அது பரப்பிரம்ம வஸ்து. பரப்பிரம்மமாகச் செயலின்றி இருந்தால் போதாது என்று அது லோகத்துக்கு நல்லது செய்வதற்காக ஒரு ஸ்வரூபம் எடுக்கிறது. அதற்குத்தான் அம்பாள் என்று பெயர். நிறமில்லாத சம்பு உலகைக் காக்கும் கருணையினால் அருண வர்ணம் கொண்டு வெற்றியோடு பிரகாசிக்கிறது - 'ஜகத் த்ராதும் சம்போ:ஜயதி கருணா காசித் அருணா' என்கிறார் ஸ்ரீ ஆச்சாரியாள். சூரியோதயத்துக்கு முன்னால் கிழக்கில் பரவுகிற பிரகாசச் சிவப்புத்தான் அருணநிறம். 'அருண நிறம்தான் கருணை நிறம்; அதுவே அம்பிகையின் நிறம்' என்கிறார் ஆசாரியாள்.
கறுப்போ அழிவின் நிறம். தமோ குணத்துக்குக் கறுப்பை அடையாளமாகச் சொல்வார்கள். தூக்கம், மரணம், சம்ஹாரம் எல்லாம் கறுப்பு.
காருண்ய மூர்த்தியாக காமாக்ஷியைச் சிவப்பானவளாக மூகர் சொல்வதுதான் நியாயமாக்கப்படுகிறது. ராஜ ராஜேசுவரி, லலிதா மஹா திரிபுரசுந்தரி, ஸ்ரீவித்யா என்றெல்லாம் சொல்லப்படுகிற அம்பாளை மந்திர சாஸ்திரங்களும் செக்கச் செவந்த ஜோதிப்பிரவாகமாகவே சொல்கின்றன. அந்த ஸ்ரீ வித்யா அதிஷ்டான தேவதையின் ஸ்வரூப லக்ஷணங்களையே பூரணமாகக் கொண்டவள் காமாக்ஷி. எனவே, பரம்பொருளின் கருணை வடிவான அவளைச் சிவப்பாகச் சொல்வதுதான் பொருத்தம்.
'ஸயன்ஸ்' படிகூட இதுவே பொருத்தமாக இருக்கிறது. VIBGYOR - ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு சிவப்பு என்று ஏழு வர்ணங்களை ஸ்பெக்ட்ராஸ்கோப்பில் பிரித்திருக்கிறார்கள். நிறமில்லாத வெறும் சூரிய ஒளிதான் இப்படி ஏழு நிறங்களாகச் சிதறுகிறது. இதில் வெள்ளை, கறுப்பு - இரண்டும் இல்லை. ஒரு கோடியில் ஊதாவைக் கடந்தால் கறுப்பு. மறுகோடியில் சிவப்பைத் தாண்டினால் வெள்ளை. அதாவது வெளுப்புக்கு ரொம்ப ரொம்ப கிட்டே இருப்பது சிவப்புதான். நம் கண்ணுக்குப் பரம ஹிதமானது வெள்ளைதான். கொஞ்சம்கூட உறுத்தாது. ஆனால் அது நிறமே இல்லை. நிறம் என்று ஏற்பட்டபின் ரொம்பவும் ஹிதமாக, மிகக் குறைவாக உறுத்துவது (least disturbing colour) சிவப்புதான். இதனால்தான் போட்டோ எடுத்த ஃபிலிமைக் கழுவும்போது, அதில் வெறெந்த நிறத்தின் கிரணம் பட்டாலும் படம் அழிந்து விடும் என்று சிவப்பு விளக்கையே போட்டுக்கொள்கிறார்கள். நாம் சிவப்பு கண்ணைக் குத்துவதாக நினைத்தாலும் அதிலிருந்தே infra red என்கிற மிருதுவான நிறத்துக்குப் போகிறார்கள். இந்த infra வுக்கு மாறாக மறு கோடியில் உக்ரமான ultra violet (ஆழ்ந்த ஊதா) இருக்கிறது. அதற்கப்புறம் கறுப்பு. அம்பாளைக் கறுப்பு என்றும் கருநீலம் என்றும் மூகர் சொல்கிறார்; சிவப்பு என்றும் சொல்கிறார். வெள்ளையான சுத்தப் பிரம்மத்துக்கு மிகமிக நெருங்கியுள்ள சக்தி என்பதாலும், 'கருணாமூர்த்தி' என்பதாலும் சிவப்பு என்பதே பொருத்தமாயிருக்கிறது.
அம்பாள் கிருபையால் அவளைப் பிரத்தியக்ஷமாக செய்த மூகர் ஏன் கறுப்பு என்றும் சொல்கிறார்?
எந்த நிறமும் இல்லாத சூரிய ஒளியிலிருந்து ஒளிச்சிதறல் (Refraction) மூலம் ஒரு நிறத்தைப் பிரித்தால், உடனே மற்ற ஆறு நிறங்களும் பிரிந்து, ‘நானும் போகிறேன், நானும் போகிறேன்’ என்று வெளிப்படத் தொடங்குகின்றன. இது ஒரு வேடிக்கை: எல்லா வர்ணங்களும் சேர்ந்தால் வர்ணமே இல்லாமற் போகிறது; அந்த வர்ணமில்லாத ஒளியிலிருந்து ஒன்று குறைந்து பிரிந்தாலும், மற்ற வர்ணங்களும், ‘நானும் போகிறேன் நானும் போகிறேன்’ என்று பிரிந்து வெளிப்படுகின்றன!
பிரம்மம் என்பது நிறமே இல்லாத சுத்த சூரிய ஒளி மாதிரி. அதில் காரியமே இல்லை. ஆனாலும் சகல காரியங்களுக்கும் ஆதாரமான சகல சக்திகளும் அதில்தான் உள்ளன. எல்லா நிறங்களும் சுத்த ஒளிக்குள் இருக்கிற மாதிரி! காரியம் இல்லாத பிரம்மம் தன்னைத்தானே உணர்ந்து கொண்டதுதான் அதன் முதல் காரியம். இதுவே சாந்தமான பிரம்மத்தில் ஒரு சலனம்தான் ஒளிச்சிதறல் மாதிரி. இந்த ஒளிச் சிதறலில் முதலில் சிவப்பு பிரிகிறது. உதய காலத்தில் சுத்த சூரிய ஒளி முதலில் சிவப்பாகத்தானே வருகிறது? அருணோதயம் என்கிறோமே, ‘அருண’ என்றாலே சிவப்புதான். இப்படிச் சுத்தப் பிரம்மம் சிவப்பாக்கி காரியத்துக்கு வருகிறபோது பிரம்மம் அம்பாளாகிறது. காரியமற்ற பிரம்மம் காரியமயமான சக்தியாகிறது. காமேசுவரி தோன்றுகிறாள். பிரம்மத்துக்குத் தன்னை அறிகிற ஆசை தோன்றியதல்லவா? இந்த ஆசையின் – காமத்தின் – வடிவமே காமேசுவரி. அவளே உலகத்தின் சிருஷ்டி, பரிபாலனம், சம்ஹாரம் எல்லாவற்றுக்கும் மூலம். உண்மையில் இந்த மூன்று தொழில்களும் மாயையில் உண்டானவைதான். மாயாசக்தியால் பிரம்மத்தை மறைத்து, அதனிடத்தில் உலகம் என்ற கற்பனையைக் காட்டுகிறாள். இம்மாதிரி மாயாசக்தியினால் பிரம்மத்தை மறைத்துப் பிரபஞ்சத்தை காட்டுவதை நாலாவது தொழிலாக, திரோதானம் அல்லது திரோபவம் என்று சொல்லுவார்கள். படைத்தல் – காத்தல் – அழித்தல் – மறைத்தல் இவற்றுக்கு மேலாக அநுக்கிரகம் (அருள்) என்கிற ஐந்தாவது தொழிலும் இருக்கிறது. பக்தர்களை மாயையிலிருந்து விடுவித்துத் தன்மயமாக்கிக் கொள்ளுகிறாளே அதுதான் அநுக்கிரகம். இப்படி ஐந்தொழிலைச் செய்வதால் அம்பாள் ‘பஞ்ச க்ருத்ய பராயணா’ எனப்படுகிறாள்.
சிருஷ்டி செய்கிற பிரம்மா, பரிபாலிக்கிற விஷ்ணு, சம்ஹார ருத்ரன், மாயையின் அதிபதியான ஈசுவரன் இவர்களை நாலு கால்களாக் கொண்ட மஞ்சத்தில், சாக்ஷாத் பரப்பிரம்ம சக்தியான காமேசுவரி வீற்றிருக்கிறாள்; பரப் பிரம்மமான காமேசுவரியின் இடப்புறத்தில் அநுக்கிரஹ மூர்த்தியாக அமர்ந்திருக்கிறாள். காமேசுவரன் பிரம்மம், காமேசுவரி பிரம்மசக்தி; இவர்கள் ஸதிபதிகள்.
காமேசுவர – காமேசுவரி என்கிற சிவப்பு பிரிந்தவுடன் மற்ற வர்ணங்களும் வெளியே ஒடிவர வேண்டுமல்லவா? இந்த நியாயப்படி செம்மஞ்சளான பிரம்மாவும் லக்ஷ்மியும் வெளிப்பட்டார்கள். நீலமான மகாவிஷ்ணுவும் பார்வதியும் ஆவிர்பவித்தார்கள். வெள்ளையான ருத்திரனும் ஸரஸ்வதியும் தோன்றிவிட்டார்கள். பிரம்ம சக்தியிலிருந்து இரட்டை இரட்டையாகத் தோன்றிய இந்த மூன்று ஜோடியில் ஒவ்வொரு ஜோடியும் சகோதர சகோதரிகள். அதாவது பிரம்மாவும் லக்ஷ்மியும் உடன் பிறப்புகள்; விஷ்ணுவும் பார்வதியும் உடன் பிறப்புகள்; ருத்திரனும் ஸரஸ்வதியும் உடன் பிறப்புகள். பிரம்மாவுக்கும் லக்ஷ்மிக்கும் தங்க நிறம்; தாமரை ஆசனம். பிரம்மம் ஜீவராசிகளைப் பெருக்கினார்; லக்ஷ்மி, அவர்களின் அநுபோகத்துக்கான ஐசுவரியத்தைப் பெருக்கினாள். நீலமேக சியாமள வர்ணம் கொண்ட விஷ்ணுவும் பார்வதியும் இப்படியே உடன் பிறந்தவர்கள். பரிபாலனமும் மாயா விலாஸமும் முக்கியமாக இருக்கிற நிலை அது. சிவன் கோவில் வடக்குப் பிரகாரத்தில் உள்ள துர்க்கையைப் பாருங்கள். அவள் பதியோடு இல்லாமல் தனித்து இருக்கிற அம்பாள். அவள் விஷ்ணு மாதிரியே சங்கு சக்கரம் வைத்துக் கொண்டிருப்பாள். நாராயணி, சியாம கிருஷ்ண சகோதரி என்றெல்லாம் இதனால்தான் பார்வதியைச் சொல்வது. சிவனும் ஸரஸ்வதியும் சகோதர சகோதரிகள். சிவன் கோயில் தெற்குப் பிரகாரத்தில் துர்க்கைக்கு எதிர்வெட்டாக, பத்தினி சம்பந்தம் இன்றி, அதாவது பார்வதியின் கலப்பில்லாமல் தனித்து ஸ்வச்சமாக இருக்கிற தக்ஷிணாமூர்த்தியைப் பார்த்தால், அவர் ஸரஸ்வதியின் உடன் பிறப்பு என்று தெரியும். ஸரஸ்வதி மாதிரியே அவர் புஸ்தகமும் ஜப மாலையும் வைத்திருப்பார். இருவரும் ஞான மூர்த்திகள். இருவரும் வெளுப்பு.
பிரம்ம சக்தியிலிருந்த மூன்று ஜோடிகள் தோன்றியதற்குக் காரணம் உண்டு. இவர்களுக்குள் ஒவ்வோர் ஆணும் ஒரு பெண்ணை மணந்தாக வேண்டும். இரண்டே ஜோடி இருந்தால் பெண் கொடுத்து பெண் வாங்கினதாகும். அது யுக்தமில்லை. அதனால்தான் மூன்று சகோதர ஜோடிகள் பராசக்தியில் தோன்றின. பிரம்மா சிவனின் சகோதரியான சரஸ்வதியை மணந்தார். சிவன் மகாவிஷ்ணுவின் சகோதரியான பார்வதியை மணந்தார். மகாவிஷ்ணு பிரம்மாவின் சகோதரியான லக்ஷ்மியை மணந்தார். வெள்ளை என்பது சத்வ குணம்; செம்மஞ்சள் ரஜோ குணம். நீலம் அல்லது கறுப்பு தமோ குணம். பிரம்மவிஷ்ணு, ருத்திரர்களை அப்படி அடியோடு தனித்தனியாக்கி முக்குணங்களாகப் பிரித்ததோடு நின்று விடாமல், சமரசத்தைக் காட்டவே அவர்களுடைய சக்திகளான ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி ஆகியோர் அவர்களது நிறங்களுக்கு மாறுபட்ட நிறமாக இருக்கிறார்கள்.
பராசக்தியேதான் இத்தனையும் ஆகி, முத்தொழிலும் செய்கிறாள். இருந்தாலும் அவளை ‘மாயை, மாயை’ என்று நாலாம் தொழிலான திரோதானத்தோடுதான் ரொம்பவும் இணைத்துப் பேசுகிறோம்.
மூக கவி சம்ஹார ருத்ரனின் சக்தியான பார்வதியின் கருநீல நிறத்தைச் சிவப்புப் பராசக்தியின் வர்ணமாககச் சொல்கிறார். மாயையாக இருப்பவளும், மாயையைப் போக்கி ஐந்தாம் தொழிலான (மோக்ஷஅநுக்கிரகத்தைச் செய்பவளுமான பராசக்தியே காமாக்ஷி என்று சொல்லி, அந்தச் சிவப்புக் காமாக்ஷியை ஓரொரு இடங்களில் கறுப்பானவளாகவும் (சியாமாவாகவும்) வர்ணிக்கிறார். சியாமள வர்ணம் கொண்ட பார்வதியைச் சக்தியாகப் பெற்றே வெள்ளைச் சிவன் சம்ஹாரத்தில் இறங்குகிறார். அம்பாளையே சம்ஹார மூர்த்தியாகச் சொல்கிற போதும், அவளைக் காளி என்கிறோம். காளி என்றாலே கருத்தவள் என்று அர்த்தம். அநுக்கிரஹ மூர்த்தியான காமாக்ஷியை ஏன் கருப்பானவளாகவும் அதாவது அழிக்கும் தொழில் செய்கிறவளாகவும் மூகர் சொன்னார்?
வேலை எல்லாம் செய்கிறோம். பிறகு அலுத்துப் போய்த் தூங்குகிறோம். தூக்கம் தமஸின் செயல். அங்கே ஒரே இருட்டு – கறுப்புதான் இருக்கிறது. ஆனாலும் இந்தத் தூக்கத்தில்தான் மநுஷ்யனுக்குக் கொஞ்சமேனும் சாந்தி இருக்கிறது. நாளெல்லாம் அலைந்து திரிந்து கஷ்டப்படுகிற ஜீவராசிகளுக்கு ஆறுதலாகப் பராசக்தி அன்றன்றும் தூக்கத்தை வைத்து கொஞ்சம் அமைதி தருகிறாள். எனவே தமஸிலேயே ரொம்பவும் அநுக்கிரகம் இருப்பதாகத் தெரிகிறது.
சம்ஹாரம் என்பது பெரிய தூக்கம். தூக்கத்தில் எப்படித் துக்கக் கலப்பே இல்லாத அமைதி நிலையில் இருக்கிறோமோ, அப்படியே சம்ஹரிக்கப்பட்ட ஜீவன் மறுபடியும் ஜன்மா எடுக்கிற வரையில் நானாவித கர்ம அநுபவங்களின் சிக்கலிலிருந்து தப்பி அமைதியில் அமிழ்ந்திருக்கிறது. நமக்குக் கர்மக் கட்டிலிருந்து தற்காலிகமாக விடுதலைதந்து விச்ராந்தி தரவே சம்ஹாரத் தொழிலைப் புரிகிறார் சிவபெருமான். ‘நான் கர்மா செய்கிறேன்’ என்ற அகங்காரத்தை இழந்துவிட்ட ஞானிகளே கர்மச் சூழலிலிருந்து நிரந்தரமாகத் தப்ப முடியும். ஆனால் பாபியும்கூடத் தற்காலிகமாகவேனும் இந்தக் கர்மாநுபவத் தொந்தரவிலிருந்து விடுபட்டு விச்ராந்தி பெறுவதற்குப் பராசக்தி மகாகருணையுடன் சம்ஹாரத்தை அமைத்திருக்கிறாள். விஷ்ணுவின் பரம பக்தரான நம்மாழ்வார், ‘முனியே நான்முகனே, முக்கண்ணப்பா’ என்று மும்மூர்த்திகளையும் அழைக்கும்போது, சம்ஹார மூர்த்தியான ருத்திரனைத்தான் ‘அப்பா’ போட்டு அருமையுடன் கூப்பிடுகிறார். பரம தயாளுவான ஒரு தகப்பனார், தப்புச் செய்கிற குழந்தையையும், ‘அடக் குழந்தே! ரொம்ப அலைந்து திரிந்து களைத்துவிட்டாயப்பா, கொஞ்சம் ஒய்வு எடுத்துக் கொள்’ என்று சொல்கிற மாதிரி, பரமேசுவரன் சம்ஹார காலத்தில் நமக்கெல்லாம் ஓய்வு தந்து ஆறுதல் அருளுகிறான். இதையே, “முக்கண்ணப்பா!” என்று வாய்விட்டுக் கூப்பிட்டுக் காட்டுகிறார் ஆழ்வார். இப்படி ஸம்ஹரிக்கிற ருத்திரனின் சக்தியான பார்வதியின் நிறம்தான் கறுப்பு.
லோகத்தை விட்டால்தான் சஞ்சலங்களிலிருந்து விடுபட்டு மோக்ஷம் என்கிற நிரந்தர சாந்தியைப் பெற முடியும். சாந்தியோடு இருக்கிறோம் என்று உணர்ந்து அமைதியில் இருப்பதே ஸமாதி நிலை. என்றும் கலையாத சாசுவத நிலை அது. இதுவே பராசக்தியின் ‘அநுக்கிரகம்’ என்கிற தொழிலால் அருளப்படும் நிலை. இதற்கடுத்த நிலை சாந்தியோடு இருக்கிறோம் என்ற பிரக்ஞையில்லாமலே அப்படியிருக்கிற தூக்க நிலை, சம்ஹார நிலை. எனவே அநுக்கிரஹத்துக்கு அடுத்தபடியாக ஜீவராசிகளுக்கு மிகவும் ஹிதமான நிலை சம்ஹாரம்தான்.
பொது வழக்கிலும் நம்மை ஏன் பிரம்மா சிருஷ்டித்தார் என்ற வருத்தத்தாலோ என்னவோ பிரம்மாவை விசேஷமாக வழிபடுவதே இல்லை. மஹாவிஷ்ணுவுக்கு நிறைய வழிபாடு இருந்தாலும் ஜகத் பரிபாலகரான அவரை மனுஷ்ய லோகத்தோடு ரொம்பவும் சம்பந்தப்படுத்தியிருக்கிறது. ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசாமிகளை, “ஸ்வாமி”, “ஸ்வாமி” என்று பரஸ்பரம் கூப்பிட்டுக்கொண்டாலும், தங்கள் ஸ்வாமியைப் பெரும் ஆள் (பெருமாள்) என்றே சொல்கிறார்கள். வேதத்தைப் பார்த்தாலும் விஷ்ணுபரமான மந்திரங்களுக்குப் “புருஷ ஸூக்தம்” என்றே பெயர் இருக்கிறது. ‘புருஷ’ என்றால் முப்புரங்களான ஸ்தூல – சூக்ஷ்ம – காரண சரீரங்களுக்கு உள்ளே இருக்கிற ஆத்மா என்பது தத்வார்த்தமானாலும், பொதுவில் ‘புருஷ’ என்றால் மநுஷ்யன், ஆசாமி என்றே பொருள் கொள்கிறோம். பராசக்தியிடமிருந்து இந்த லோகமெல்லாம் எப்படி வந்தது என்பதைத்தான் புருஷ ஸூக்தம் சொல்கிறது. லோகத்தோடு, மநுஷ்யனோடு இப்படி விஷ்ணுவுக்கு நெருக்கமான தொடர்பு காணப்படுகிறது. சம்ஹார மூர்த்தியான சிவனே லோகத்தை விட்டபின் இருக்கிற வைராக்கியத்திற்கு முக்கியமாகச் சொல்லப்படுகிறார். விஷ்ணு ஆலயத்தைப் பெருமாள் கோவில் என்றும் சிவாலயத்தையே ஈசுவரன் கோவில் என்றும் சொல்கிற வழக்கமும் இருக்கிறது. விஷ்ணு தாழ்த்தி – சிவன் உயர்த்தி என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. அப்படி சொன்னால் அது அடியோடு தப்பு. இரண்டும் முழுக்க முழுக்க ஒரே வஸ்துதான். ஆனால் அவரவர் செய்கிற கிருத்யத்தைப் பொறுத்து, லோக ரீதியில் அவர்கள் எப்படி நினைக்கப்படுகிறார்கள் என்று காட்டுவதற்காகச் சொன்னேன்.
சிவப்புக் காமாக்ஷியைக் கறுப்பானவள் என்று மூகர் ஏன் சொன்னார் என்று யோசிக்கும்போது, இத்தனை அபிப்பிராயமும் வந்தது. சாசுவத சாந்தி என்கிற மோக்ஷநிலைக்குத் தற்காலிக சாந்த நிலையான ஸம்ஹாரமே மிகவும் கிட்டத்தில் இருக்கிறது. அதனால்தான், சம்ஹார சக்தியான பார்வதியின் கறுப்பு வர்ணத்தையே மோக்ஷம் அநுக்கிரகிக்கும் காமேசுவரியின் வர்ணமாகவும், மூகர் கூறியிருக்கிறார் என்று சொல்ல வந்தேன். ‘பரம ஞானிக்கு அவர் சாசுவத சாந்தம் தருவது பெரிய கருணையில்லை; பாபாத்மாவுக்கு சம்ஹாரத்திலே தற்காலிக அனுமதி தருவதுதான் மகா கருணை’ என்று நினைத்து, சம்ஹார சக்தியின் கறுப்பு நிறத்தையே சிவப்புக் காமாக்ஷியின் இன்னொரு நிறமாக ஸ்துதி செய்தார் போலிருக்கிறது.
பராசக்தியின் ஸத்வகுணம் மகாவிஷ்ணுவாக உலகைப் பரிபாலிக்கிறது; அவளுடைய ரஜோ குணம் பிரம்மாவாக உலகைப் படைக்கிறது; அவளுடைய தமோ குணம் ருத்திரனாக லோகத்தை சம்ஹரிக்கிறது. இந்த ஸம்ஹாரத்தில் எந்த யோக்கியதையும் இல்லாத ஜீவர்களும் சாந்தி அநுபவிக்க அருள் செய்கிறாள். இதனால்தான், அவளது வர்ணத்தைச் சொல்லும்போது ஸம்ஹார சக்தியின் கறுப்பை விசேஷித்துக் சொல்கிறார் மூககவி. ஸத்வம், ரஜஸ் என்ற இரண்டைவிடத் தமஸ் தாழ்ந்தது என்று ஒரு கோணத்தில் ( angle ) தோன்றினாலும், இன்னொரு கோணத்தில் பார்த்தால் தமஸே “அநுக்கிரகம்” என்ற பரம உச்சமான ஐந்தாம் தொழிலுக்குக் கிட்டத்தில் இருப்பதால்தான், நிறமாலையில், கறுப்பும் சிவப்பும் இரு வேறு கோடிகளில் இருந்தாலும், அம்பாள் விஷயத்தில் இந்த இரண்டு வர்ணமுமே ரொம்பக் கிட்டத்தட்ட இருப்பதாக மூகர் பாடியிருக்கிறார்."
பெரியவாளின் இந்த நீண்ட அருமையான விளக்கம் நமக்கு அம்பிகையின் நிறம் பற்றிய சந்தேகத்தைப் போக்குகிறது.

சுகி சிவம் அவர்கள் அபிராமி அந்தாதி பற்றிப் பேசும்போது ஒருமுறை குறிப்பிட்டதும்  இங்கே நினைவுக்கு வருகிறது :

"அம்பிகையை இங்கே, செந்நிறமாகக் குறிப்பிடுவது எதற்காக? த்யானம் செய்பவர்கள் நெற்றிப் பொட்டின் நடுவே அம்பிகையின் திருவுருவத்தை வைத்து ஜபித்து ஜபித்து அந்த த்யான விசேஷத்தால் அங்கே செந்நிற ஒளியைக்  காண்கிறார்கள். அந்த சென்னிற ஒளியின் நடுவே காணும் மின்னல் கொடியும்கூட, சிகப்பாகத்தானே தெரியும்? அதனால்தான், அபிராமி அன்னையைத் தனது நெற்றிப் பொட்டில் வைத்து தியானம் செய்து சதா அகத்தே கண்ட அபிராமி பட்டரும், அவளை, செக்கச் சிவந்தவளாகவே பாடியிருக்கிறார்"

இதுவும்கூட மிக அழகான விளக்கம்தான்!!


அந்த ரம்யமானவளான, செக்கச்சிவந்த திருமேனி கொண்டவளான அபிராமி,  எப்போதும் நமக்குத் துணையாய் விளங்கட்டும்.


20.06.2016 : பாடல் : 2

துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனி மலர்ப் பூங்
கணையும் கருப்புச் சிலையுமென் பாசங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே"

எனக்குத் துணையாகவும், நான் தொழுகின்ற தெய்வமாகவும், பெற்ற தாயைப் போலவும் இருக்கும் இந்த அபிராமியே வேதங்களின் சாரமாகவும் இருப்பவள்.

வேதத்தின் வேராகவும் கிளைகளாகவும், விரிந்து இருப்பவளும் அவளே

கைகளில் குளிர்ந்த மலர்ப்பூங்கணையும், கரும்பால் ஆன வில்லையும் கொண்டவள் அவள். மெல்லிய பாசமும், அங்குசமும் கொண்டு விளங்கும் அந்த திரிபுர சுந்தரியே எனக்குத் துணையென அறிந்து கொண்டேன் என்று சொல்லுகிறார் பட்டர்.

துணை என்பதற்குத் தொடர்ந்து வருவது, காப்பது, இடர் துடைப்பது என்று பொருள் உண்டு. "உற்ற துணைவன்" என்று சொல்லுகிறோம் அல்லவா? அது போல. அத்தகைய துணையாய் விளங்குபவள் அபிராமி. அந்தத் துணையாய் விளங்குபவளே நான் தொழும் தெய்வமும், எனைப் பெற்ற தாயுமாகவும் இருக்கிறாள் என்று ஆரம்பிக்கிறார் பட்டர்.

தாயைப் போல அன்பு காட்டுபவர் உண்டா? லலிதா சஹஸ்ரநாமமும்ஸ்ரீ மாதாஎன்றுதானே ஆரம்பிக்கிறது! அண்டசராசரத்து உயிர்கள் எல்லாம் உருவாவது அந்தத் தாயிடத்தில்தானே!

காஞ்சி மஹாஸ்வாமிகளாம் நம் பெரியவா, அந்தத் தாயன்பைப் பற்றிச் சொல்லும்போது, மிக அழகாக இப்படி விளக்குகிறார்:

தாயன்பைப்போலக் கலப்படமே இல்லாத பூரணமான அன்பை இந்த லோகத்தில் வேறெங்குமே காண முடியவில்லை. பிள்ளை எப்படி இருந்தாலும், தன் அன்பை பிரதிபலிக்காவிட்டாலும்கூட, தாயாராகப்பட்டவள் அதைப் பொருட்படுத்தாமல் பூரணமான அன்பைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறாள். ‘பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுஎன்று இதைத்தான் சொல்லுகிறோம். ‘தேவி அபராத க்ஷமாபன ஸ்தோத்திரம்என்று அம்பாளிடமே நம் குறைகளைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிற துதி ஒன்று இருக்கிறது. அதில்துஷ்டப்பிள்ளை இருப்பதுண்டு! ஆனால் துஷ்ட அம்மா என்று ஒருத்தி கிடையவே கிடையாது என்று வருகிறது. பரிபூரணமாக அன்பையும், தன்னலமே இல்லாத உழைப்பையும், அம்மா ஒருத்தியிடம்தான் பார்க்க முடிகிறது.
குழந்தையாகப் பிறக்கிறபோதே அம்மாவிடம்தான் ஒட்டிக் கொள்கிறோம். ஆகாரம் தருவதிலிருந்து சகலத்துக்கும் அவள்தான் குழந்தைக்குக் கதியாக இருக்கிறாள். வயது ஏறுகிற சமயத்தைவிட பால்யத்தில்தான் தாயார், குழந்தை இருவருக்கும் பரஸ்பர அன்பு மிக அதிகமாக இருக்கிறது. அதிலும் மனித இனத்தைவிடப் பசுக்குலத்திடம்தான் இந்த அன்பு நிரம்பித் ததும்புகிறது. கன்றுஅம்மா!” என்று கத்துவதில் உள்ள ஆவல் மாதிரி வேறெங்கும் அன்பைப் பார்க்க முடியவில்லை. இதைப் பார்த்துதான் மநுஷ்ய ஜாதியே, “அம்மாஎன்று கூப்பிட ஆரம்பித்ததோ என்று தோன்றுகிறது. தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, மஹாராஷ்டிரம், கன்னடம் முதலிய பாஷைகளிலும்அம்மாஎன்றே தாயாரைச் சொல்கிறார்கள். மலையாளத்தில்அம்மைஎன்பார்கள். ஸம்ஸ்கிருதத்தில்மாஎன்றும்அம்பாஎன்றும் சொல்லுவதும் இதேதான். ஹிந்தியில்மா”, “மாயிஎன்கிறார்கள். இங்கிலீஷ்மம்மி”, “மம்மாஎல்லாமும் கன்று குட்டியின்அம்மாவிலிருந்து வந்தவைதான் போலிருக்கிறது.
இந்த அம்மாவின் அன்பு ஒரு பக்கம் இருக்கட்டும். இவள் இந்த சரீரத்திற்கு மட்டும்தான் அம்மா. அவளுடைய அல்லது நம்முடைய சரீரம் போன பிற்பாடு இந்த அம்மாவுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை. அப்புறம் வேறு கர்ப்பவாஸம். வேறே அம்மாள் வருவாள். இப்படிச் சரீரத்திற்கு மட்டும் அம்மாவாக இல்லாமல், உயிருக்கு அம்மாவாக இருக்கிற ஒருத்தி இருக்கிறாள். சரீரம் அழிகிற மாதிரி உயிர் அழிவதில்லை. இந்தச் சரீரம் போன பிற்பாடு அந்த உயிர் இன்னொரு சரீரத்திற்குப் போகிறது. இந்த உயிரின் அம்மாதான் நமக்கு சாசுவதமாக, நிரந்தரமாக, எந்நாளும் தாயாராக இருந்து கொண்டிருக்கிறாள். கன்றுக்குப் பசுவைப் போல எந்த ஜன்மத்திலும் எந்தக் காலத்திலும் எல்லாப் பிராணிகளுக்கும் தாயாராக இருக்கும் பரதேவதையின் பாதார விந்தத்தில் நிறைந்த அன்பு வைப்பதே ஜன்மா எடுத்ததன் பிரயோஜனம். ஜன்ம நிவிருத்திக்கும் அதுவே வழி. அதாவது, உயிர் சரீரத்தை விட்டபின் இன்னொரு சரீரத்தில் புகாமல் பேரானந்தத்தில் கரைவதற்கும் அந்த அம்மாதான் கதி.
நமக்கு இருக்கிற சக்தி எல்லாம் அவளுடையதுதான். ஒரே அகண்ட பராசக்திதான், கண்டம் கண்டமாக, துண்டு துண்டாக ஆகி இத்தனை ஜீவராசிகளிடமும் துளித்துளி சக்தியை வெளிப்படுத்துகிறது. நாம்சொந்தமுறையில் எதையும் சாதித்ததாகப் பெருமைப் பட்டுக் கொள்ளவும், அகம்பாவம் கொள்ளவும் நியாயமே இல்லை. நாம் எதைச் செய்திருந்தாலும் எல்லாம் அவள் கொடுத்த சக்தியால்தான் நடக்கிறது. இதை உணர்ந்து அகம்பாவம் சிறிதும் இல்லாமல் அவளிடம் சரணாகதி செய்தால் ஒரே அம்மாவான இவள் இகத்திலும் பரத்திலும் பரமாநுக்கிரஹம் செய்வாள். எப்படி எதுவும் கேட்கத் தெரியாத குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தானே கவனித்துக் கொள்கிறாளோ, அப்படியே ஜகன்மாதாவாகவும் கருணாமூர்த்தியாகவும் உள்ள அம்மா, உண்மையான பக்தி வைத்தவர்கள் தன்னை எதுவும் கேட்காவிட்டாலும்கூட, தானாகவே அவர்களுக்கு இகலோகத்தில் வித்தை, செல்வம், தேககாந்தி முதலிய தந்து, பின்பு ஞானத்தில் பழுத்துப் பரமானந்தத்தைபப் பெறும்படி அருள் புரிவாள். பரம ஞான அத்வைத ஆனந்தம் நமக்குக் கிடைத்து, நாம் அந்த ஆனந்தமாகவே ஆகிவிடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். அது அவள் நம் கர்மாவைத் தீர்த்து, என்றைக்கோ ஒருநாள் தரப்போகிற நிலை. அது கிடைக்கிறபோது கிடைக்கட்டும். அதுவே கிடைக்கவில்லையே என்கிற குறை இப்போது நமக்கு வேண்டாம். இப்போது நமக்குப் பரம அன்பு அம்மாவான அம்பாள் இருக்கிறாள். அவளுடைய அன்பை நினைத்து அவளிடமும் நாமும் அன்பைச் செலுத்துவதற்கு இப்போதே நமக்குச் சாத்தியமாகிறது. இதிலுள்ள ஆனந்தத்துக்கு மேல் நமக்கு எதுவும் வேண்டாம். அம்பாள் தியானத்தைவிட நமக்கும் நம் மாதிரியே அவளை அம்மாவாக்கிக் கொண்ட சகல லோகத்துக்கும் நிறைவான இன்பம் வேறில்லை. சகல லோகமும் சமஸ்த ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்க அன்பே உருவான சாக்ஷாத் அம்பிகையை எப்போதும் ஆனந்தமாக நினைத்துக் கொண்டிருப்போம்
அப்படிப்பட்ட அந்தத் தாயை, அபிராமி அன்னையை, “நீயே என் துணைஎன்று சொல்லி இந்தப் பாடலை பட்டர் தொடங்குகிறார். அவள்தான் தாய். அவள்தான் துணை. அவள்தான் தெய்வம். அவள்தான் இடர்களைந்தருளும் நட்பு.
இப்படி, கருணையே வடிவாய், தாயாய், துணையாய் இருப்பவள் இவள். இந்த அபிராமி கருணை தெய்வம். தண்டிக்கும் தெய்வம் அன்று. அன்பு செலுத்தி அரவணைக்கும் தெய்வம் என்று காட்டுகிறர் பட்டர்.
தேவியை வழிபடும் மரபாகிய சாக்தத்தில், தேவியைப் பல ரூபங்களில் வழிபடுவது உண்டு. பல கோர ரூபங்களில் வழிபடுவதும் கூட வழக்கமான ஒன்றுதான். கையில் பல ஆயுதங்கள் தரித்தவளாய், கோர ரூபம் கொண்டவளாய் தேவியை வழிபடுவதும் கூட சாக்த மரபிலே வருவதுதான்.

ஆனாலும், தேவி இங்கு கோர ரூபிணியாய் இல்லை. அன்பே வடிவினளாக, தாயாக இருக்கிறாள். துணையாய் வருகிறாள். அவள் கோர ஆயுதம் எதுவும் தரித்து இருக்கவில்லை. வாளும் வேலும் தரித்து இருக்கவில்லை. கைகளில் என்ன வைத்திருக்கிறாள்? கரும்பினால் ஆன வில்லைக் கொண்டிருக்கிறாள். மலர் அம்புகள் தரித்திருக்கிறாள். மெல்லிய பாசமும் அங்குசமும் கொண்டிருக்கிறாள்.

ஏன் அப்படி?

சாதாரணமாக, கையில் கரும்பு வில்லும், மலர் அம்புகளும் கொண்டு இருப்பது மன்மதன் மட்டும் தான். சகல உயிர்களுக்கும் காமத்தை ஊட்டும் அந்தக் காமன் ஒரு முறை தேவ கார்யமாக, தேவசேனாதிபதியை - முருகனை - குமரனை தோற்றுவிக்கும் பொருட்டு அந்த பரம சிவன் மீதே மலர்க் கணை எய்தான். முக்கண்ணன் கோபத்தால் சாம்பலும் ஆனான். தனது கணவனை இழந்த ரதி, தேவியிடம் வந்து முறை இட்டாள். தேவியும் மிகக் கருணை கொண்டு, மன்மதனை உயிர்ப்பித்து அருளினாள். அந்த அருளின் அடையாளமாக, மன்மதனின் ஆயுதங்களையும் ஏற்று அருளினாள்.

மன்மதன் கைகளில் இருக்கும்போது காம இச்சையைத் தூண்டும் கரும்பு வில்லும் மலர் அம்புகளும், தேவியின் கைகளில் இருக்கும் போது அமைதியாய் அடங்கி நமக்கு நல்வழி காட்டுகின்றன.
லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் கருத்துக்களே இவை!! லலிதா சஹஸ்ரநாமம், மிக அழகாகச் சொல்லுகிறது :

ராகஸ்வரூப பாஷாட்யா” - ராகம் என்றல்பற்று” , அம்பாள் மீது  பற்று  வரவேண்டும், அந்த்ஃஅ லோக மாதாவையே பற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த பற்று வடிவாய் அவள் கயிற்றை வைத்துள்ளாள்அதை அவள் நம் மீது கட்டினால், நமக்கு அம்பாளை தவிர வேறொன்றும் தெரியாமல் போய்விடும்!!

க்ரோதாங்காராங்குஷோஜ்வலா” – “குரோதம்என்றல்கோபம்என்று பொருள். , அதனை மற்றுவதற்காகவே அவள் அங்குசம் தரித்திருக்கிறாள்

மனோரூபேக்ஷு கோதண்டா” “மனம்என்னும் கரும்பு வில்லைக் கையில் வைத்திருக்கிறாள்.

பஞ்ச தன்மாத்ர சாயகா”  - “சப்தம், ஸ்பர்ஷம், ரூபம், ரசம், கந்தம் ஆகிய 5 உணர்வுகளாகிய மலரம்புகளைத் தரித்டிருக்கிறாள் என்று வருகிறது.

காமத்தைத் தூண்டும் வினைகளும் கூட, காமேஸ்வரியான அவளின் அருள் இருந்தால், ஒடுங்கி நல்வயப்படும் என்பதையே இது காட்டுகின்றது.

"சுருதி" என்று குறிப்பிடப்படுபவை, வேதங்கள். அந்த வேதங்களின் வேராக, கிளைகளாக, சாரமாக, அந்த வேத மாதாவாகவே இருப்பவள் இந்த அபிராமி. அவள் மெல்லிய பாச அங்குசங்களை கைகளில் கொண்டிருக்கிறாள்.

எதற்காக?

நம் பாச வினைகளை எல்லாம் அறுத்து, நம் மத மாச்சரியங்களையெல்லாம் அழித்து நம்மையெல்லாம் நல்வழிப் படுத்தத்தான்.



நம் வினைகளைக் கிள்ளிக் களையும் வினாயகப் பெருமான் கைகளிலும் வேறு ஏதும் ஆயுதங்கள் இல்லை.

"அஞ்சு கரமும், அங்குச பாசமும்" என்று அவ்வைப் பாட்டி சொல்வது போல, அந்த கணபதியும், அங்குச பாசங்களையே கைகளில் தரித்திருக்கிறார்.

அது போல, இங்கு, அபிராமித் தாயும், நம் வினைகளைக் களையவே அங்குச பாசம் தரித்து விளங்குகிறாள்.
நம் காம இசைகளை மாற்றி, அந்தக் காமேஸ்வரியின் தாளிணைகளை மட்டுமே பற்றும் இச்சையை அருளும் கரும்பு வில்லும் மலர்க் கணைகளையும் தரித்து, திரிபுர சுந்தரியாகத் திகழ்கிறாள்.

மென் பாசமும்என்னும் வார்த்தைகள் அழகானவை. தாய், குழந்தைகளான நம்மைக் கட்ட, பாசம் வைத்திருக்கிறாள். ஆனாலும். வலிக்கக்கூடாதே என்பதற்காக, அது, ‘மென் பாசமாம’. “மெல்லிய பாசம்மட்டுமே எங்கிறார் பட்டர்!

கவனிக்க வேண்டிய இன்னொன்று, திருக்கடையூரில், அபிராமித் தாயைச் சென்று சேவித்தவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் : அபிராமி அன்னை கையில், கரும்பு வில்லோ, அங்குச பாசங்களோ கிடையாது!! அப்படி இருக்க, அபிராமி பட்டர் எவ்விதம் அபிராமி அன்னையின் கையில் இவை இருப்பதாகப் பாடினார்? கரும்பு வில்லும், பஞ்ச பாணங்களும், அங்குச பாசமும் கொண்டிருக்கும் மூர்த்தி காஞ்சி காமாக்ஷி இல்லையோ?

இந்த சந்தேகம் நிச்சயம் வரும். இந்த சந்தேகத்திற்கும், காஞ்சிப் பெரியவாளிடம்தான் விடை கிடைக்கிறது!!

இதோ, ஒரு அன்பரின் நினைவுப் பதிவிலிருந்து இந்தக் கேள்விக்கான விடை!!

அபிராமி அந்தாதியும் - காமகோட்டமும்  என்ற தலைப்பில் ஒரு சிறு புத்தகம் பிரசுரிக்க ஸ்ரீ பெரியவர்கள் விரும்பினார்கள் . 

அதற்குச் சில தினங்கள் முன் ஒரு நாள் என்னை வரும்படி உத்தரவு வந்தது. நான் தர்சனம் செய்து கொண்டபோது , அவர்கள் " அபிராமிபட்டர் அநேகமாக முழுக்க, காமாக்ஷியைப் பற்றி, அவருடைய அந்தாதியில் பாடியிருக்கிறார் தெரியுமா ?", என்றார் . நான் " இல்லையே ! அபிராமி பற்றித்தான் பாடியிருக்கிறார் " என்றேன். 

ஸ்ரீ பெரியவர்கள் ,"அபிராமி அவருக்கு அபிமான தேவதை ஆனால் உபாசனா தேவதையான காமாக்ஷியைப் பற்றித்தான் பெரும்பாலும் பாடியிருக்கிறார் என்று ஊகித்துப் பார்த்தால் சில பாடல்களிலிருந்து தெரியும் . "எப்படின்னு தெரியுமா? 
என்று சொல்லியபின், அபிராமி அந்தாதியிலிருந்து ஒரு பாட்டை சொன்னார்கள் . 

துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே. 

இந்தப் பாட்டில் சொல்லியிருக்கும் ஆயுதங்கள் எல்லாம் திருக்கடையூர் அபிராமி அம்பாளின் கையில் இல்லை . 

இந்த ஆயுதங்கள் கூடிய திரிபுர சுந்தரியின் கருஞ்சிலா மூர்த்தி காஞ்சியில் உள்ள காமாக்ஷியைத் தவிர வேறு எங்குமில்லை. " 

இப்படி, காஞ்சிக் காமாக்ஷியாய், நமது துணையாய், நம் தாயாய், நாம் தொழும் தெய்வமாய் விளங்கும் அந்த அபிராமி நமக்குத் தன் கடைக்கண் பார்வையை அருளட்டும்.

அபிராமி அந்தாதி : 3 : 


" அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்து கொண்டு
செறிந்தேன் நினது திருவடிக்கே, திருவே, வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே"


"நினது பெருமையை, யாரும் அறிய முடியாத நினது பெருமையை அறிந்தேன். உனது திருவடியிலேயே கலந்து விட்டேன்.  நினது அன்பர்கள் பெருமையை எண்ணாத,  தீவினை மிக்க,  நரகத்தில் வீழ்ந்து படும் மனிதரை விட்டு விலகி விட்டேன்" என்று பாடுகிறார் பட்டர். 

இங்கே, அன்பர் கூட்டத்தின் பெருமை பேசப்படுகிறது.

"அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால்,
இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே" என்று பேசுகிறார் தாயுமானவர்.

"அங்கமெல்லாம் குறைந்தழுகும் தொழுனோயராயினும், அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே" என்று, சிவன் அடியார்கள் பற்றி பேசுவார் அப்பர் பெருமான்.

சங்கர பகவத் பாதரும், பரம் பொருளை அடையும் மார்கம் பற்றி பஜ கோவிந்தத்தில் பேசும் பொழுது,

" சத்சங்கத்வே,  நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே, நிர்மோகத்வம்
நிர்மோகத்வே நிச்சல தத்வம்
நிச்சல தத்வே ஜீவன் முக்திஹி"

என்று பேசுகிறர். ஜீவன் முக்தி பெரும் வழியின் முதல் படி, "சத்சங்கமே" , "அன்பர் கூட்டம் கலத்தலே" என்று சொல்லுகிறார்.

அன்பர் கூட்டத்திற்கு அப்படி என்ன பெருமை? அது ஏன் அவ்வளவு முக்கியமானதாகப் பேசப்படுகிறது?

இறைவனுக்கு, தனது அடி சேரும் அடியார்களை விட, தன் அன்பர்களின் அடி சேரும் அடியார்க்கும் அடியாரே மிகவும் ப்ரியமானவர்களாம். தன்னைப் பிழைத்தவர்களைக் கூட அவன் மன்னித்து விடுவான். ஆனல், தன் அடியார்களைப் பிழைத்தவர்களை அவன் ஒருபோதும் மன்னிப்பதே இல்லை.

அந்தப் பரமனின் அடியவனான அம்பரீஷனை அழிக்க ஒரு பூதத்தை ஏவி விட்ட துர்வாசருக்கு அந்த நாராயணன், அனைவருக்கும் அபயம் அளிப்பவன், அபயம் கொடுக்கவில்லை. துர்வாசரை, அந்த அம்பரீஷனிடமே திருப்பி அனுப்பி வைத்தான்.

அந்தப் பரமனும் சரி, இந்த அபிராமியும் சரி. அன்பர் கூட்டதை ஏன் அவ்வளவு உயர்வாகக் கொண்டாடவேண்டும்?

ஸ்ரீ முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார், தனது திருப்பாவை விளக்க உரையிலே, சற்று வேடிக்கையாகவே சொல்லுவார் : "ஆயர்பாடியிலே கண்ணன் குழந்தையாக இருக்கிறான். அந்தக் குழந்தையை அழித்து விட, ஒடி வருகிறது ஒரு வண்டிச் சக்கரம். சகடாசூரன் தான் வருகிறான் வண்டிச் சக்கரமாக. வந்த அந்த சக்கரத்தை எது தடுத்து நிறுத்தியது? அந்தக் கண்ணனின் பாதங்கள் தானே! அந்தப் பாதம் பட்ட உடனேயே, சகடாசூரன் தூள் தூளாகிவிட்டான். அப்படி, அந்த பகவானையே காப்பாற்றியது எது? அந்த பாதம் அல்லவா? அப்படி அவ்வளவு பெருமை பெற்ற அந்தப் பாதங்களையே பற்றி இருப்பவர்கள் அல்லவோ பெருமை வாய்ந்தவர்கள்? அதனால் தான் அந்த மாயனும், இந்த பாதத்திலே அப்படி என்ன சுவை இருக்கிறது என்று கண்டு பிடிக்கத்தானோ என்னவோ, தனது கால் கட்டை விரலை எடுத்து வாயில் வைத்து சுவைத்துக் கொண்டு இருக்கிறான்!! "

அப்படி, அந்த பகவானையும் விட உயர்ந்தது, அவனது கமலப் பாதங்கள். அந்தப் பாதங்களையே பற்றி இருக்கும் அடியார்கள் அல்லவோ மிகவும் உயர்ந்தவர்கள். அப்படி மிகவும் சிறந்தவர்களாக இருப்பதனால்தான் அந்த அன்பர் கூட்டம் கலந்து இருத்தலே அந்த இறைவனுக்கும் உகந்ததாக இருக்கிறது.

அப்படிப் பட்ட அந்த அன்பர்களின் பெருமையை எண்ணாமல் இருக்கும் மனிதர்கள் அற்பர்கள் அன்றி வேறு யார்? 

"அன்பர் கூட்டத்தோடு சேராமலும், அந்தப் பரமனை விடவும் உயர்ந்ததான பாகவதர்களைப் பற்றி நினையாமலும் இருக்கும் பாவம் செய்த மனிதர்களின் கூட்டிலிருந்து, அன்னையே, நான் பிரிந்து, கிளம்பி வந்துவிட்டேன்" என்று சொல்லுகிறார் பட்டர். 

விபீஷணன், ராவணனுக்கு, எவ்வளவோ நல்லது சொல்லிப் பார்த்தான். ராவணன் செவிகளில் அவை ஏறவே இல்லை. விபீஷணன், அந்த அற்பனாகிய, பாவியாகிய ராவணனை விட்டுப் பிரிந்து, இராமனின் தாளிணகளைச் சேர ஓடி வந்துவிட்டான். அது போல, இங்கே, பட்டரும், இப்படிப்பட்ட அற்பர்களை  விட்டுப் பிரிந்தேன் என்கிறார்! 

"மறை" என்பதற்கு, 'வேதம்' என்று பொருள். அதனை, 'மறை' என்று ஏன் குறிப்பிட்டார்கள்? ஒரு தகுதியான மாணவனுக்கு, தகுந்த உபாத்யாயரால் உபதேசம் செய்யப்பட்டு மட்டுமே அது கற்கப் பட்டதால், அது மறை பொருள். வேதத்தின் உட்பொருள் ஆய்ந்து பார்ப்போருக்கு மட்டுமே விளங்குவதால் அது மறை பொருள்.

'எவரும் அரியா மறை' என்பது எது? இங்கே அந்த அபிராமியை அடையும் நெறியையே குறிப்பிடுகிறார் பட்டர் என்று தோன்றுகிறது. அந்த சாக்த நெறியை, அந்த அபிராமியை அடையச் செய்யும் அந்த சிறந்த வழியை முழுக்க அறிந்தவர் யார்தான் இருக்க முடியும்? "இதோ நான் இருக்கிறேன்' என்கிறார் பட்டர். அந்த மறை காட்டும் முதற்பொருளான அபிராமியையே அடைந்து விட்டேன் - அந்த அம்பிகையின் பாத கமலங்களையே அடைந்து விட்டேன் - அந்த மறையின் முதலாகவும் முடிவாகவும் இருக்கும் அந்த பாத கமலங்களையே அடைந்து விட்டேன் என்று பேருவகை கொள்கிறார் பட்டர். 

அவளது  அருளினால் அல்லவோ 'எவரும் அறியா மறையை' அவரால் அறிந்து கொள்ள முடிந்தது?

இங்கே " செறிந்தேன் உனது திருவடிக்கே" என்னும் இடத்தில் வரும் ஏகாரம் மிக அழகானது! 

சில பேர் நிறையப் படிப்பார்கள். அறிந்து கொள்வார்கள். ஆனால், அறிந்து கொண்டபடி நடப்பார்களா என்றால், கிடையாது. அப்படி இருப்பவர்களது அறிவினால் என்ன பயன்? அறிந்த அறிவின்படி நடந்து கொள்ள வேண்டும். 

இங்கே, அபிராமி பட்டரும், "யாவரும் அறிய முடியாத மறையை அறிந்து கொண்டேன், அப்படி அறிந்த அறிவின் முடிவாக, நீயே கதி என்று தேர்ந்தேன், உனதடியே வந்து சேர்ந்து விட்டேன். வேறு எந்த தெய்வத்தையும் நாடிச் செல்லவில்லை. உனதடி மட்டுமே துணை என நாடி வந்துவிட்டேன்" என்று சொல்லுகிறார்.                                                                                                                                                                                                                                                                                          
திருவள்ளுவரும் அழகாகச் சொல்லுவாரே : 

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 
 நற்றாஆள் தொழார் எனின்" 

என்று!

படிப்பதனால், கற்பதனால், என்ன பயன்? அனைத்தையும் அறிந்த அந்த இறைவனின் தாள் தொழுவது அல்லவோ கற்பதன் பயன்? 

இங்கோ, பட்டர், "எவரும் அறிய மாட்டா அந்த மறையை" அல்லவா அறிந்து கொண்டிருக்கிறார்! அந்த அறிவின், பயன், அந்த அறிவைக் கொடுத்தவளின் தாளிணைகளை அடைவதே அல்லவா!

பக்தர்களுக்கு மிகச் சிறந்த செல்வமாக இருப்பவள் அந்த தேவியே அல்லவா? லலிதா சஹஸ்ரநாமமும், தேவியின் திருநாமங்களில் ஒன்றாக, "மஹாலஷ்மி" என்று குறிக்கிறது. அதனால்தான், அபிராமியை, இங்கு பட்டர், "திருவே" என்று அழைத்தார் போலும்!! 

அந்த முழு முதற் பொருள், நம் வினைகளையும் தீர்த்து, நம்மையும் ஆண்டு கொண்டு, நம்மையும் தன் பாதாரவிந்தங்களில் சேர்த்துக்கொள்ள நாம் ப்ரார்த்தனை செய்வோம்.


07.06.2016 அபிராமி அந்தாதி : 4




மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து, சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே, கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி என்னாளும் பொருந்துகவே.

மனிதர்களும் தேவர்களும், என்றும் அழியா அமரத்தன்மை படைத்த முனிவர்களும் வந்து தலை வணங்கும் சிவந்த பாதத் தாமரைகள் படைத்த அபிராமியே! தன்னுடைய நீண்ட ஜடாமுடியில் கொன்றை மலரையும், பனி போன்ற குளிர்ச்சி பொருந்திய நிலவினையும் பாம்பினையும் பகீரதி எனப்படும் கங்கையையும் கொண்டிருக்கும் சிவ பெருமானும் நீயும் என் மனதில் என்றும் இருந்து அருள வேண்டும் என்று வேண்டுகிறார் பட்டர்.
மனிதரும், தேவர்களும், முனிவர்களும் என்று வரிசைப் படுத்துவதில் ஏதேனும் உள்ளதோ? மனிதர்களை விட மேலானவர்கள் தேவர்கள். அப்படி என்றால், தேவர்களை விட மேலானவர்கள் முனிவர்களா என்ற கேள்வி எழுகிறது. அதுவும், சாதாரணமான முனிவர்கள் இல்லை. 'மாயா' முனிவர்கள். தேவர்களைக் காட்டிலும் மேலான, 'மாயாத - இறவாத தன்மை கொண்டவர்கள்' என்றுதான் பொருளாகிறது. அப்படி இறவாத தன்மை கொண்ட முனிவர் யார்? அவர்கள் எப்படி தேவர்களிலும் மேலானவர்கள்?
மார்க்கண்டேயரின் நினைவு எழுகிறது. அந்தப் பரமனின் காலைப் பற்றிய பாத்திரத்தில், அந்த ஈசனது இடது கால் எமனை உதைத்துத் தள்ளிய காட்சி நம் கண்முன் விரிகிறது. இடப்பக்கம் அமர்பவள் அந்த தேவியே அல்லவா? அதனால், தனது பதியின் காலைப் பற்றிய பக்தனைக் காத்து அருளியவள் அவளே என்றும் புலனாகிறதே!
தேவர்கள் அழிவற்றவர்கள் என்று சொல்லப்பட்டாலும், அவர்களும், மஹாப் ப்ரளய காலத்தில் அழிந்துதான் போகிறார்கள். ஆனால், மரணமே இல்லாத சிரஞ்சீவியான மார்க்கண்டேயர் போன்ற முனிவர்கள், தேவியின் சரணங்களைப் பற்றியதால், என்றும் வாழ்கிறார்கள் என்று குறிப்பிடுவதால்தானோ என்னவோ, இங்கே, மனிதர் - தேவர் - மாயா முனிவர் என்று வரிசைப் படுத்துகிறார் அபிராமி பட்டர்.
அந்த தேவியின் பக்கத்தில் இருக்கும் அந்த தேவனோ, கொன்றை மலர் சூடிய நீண்ட கூந்தலை உடையவன். அந்தக் கூந்தலின்மேல் நிலவினை அணிந்தவன். அதுவும் எப்படிப்பட்ட நிலவு ? பனிபொழியும் நிலவு. குளிர்ச்சி தரும் நிலவு. அது போதாதென்று பாம்பினையும் அணிந்து இருக்கிறான். இது இரண்டும் போதாது என்று பகீரதி எனப்படும கங்கையையும் அணிந்து இருக்கிறான்.
இப்படி, குளிர்ச்சியே உருவாக - பனி தரும் நிலவினையும், சில் என்று இருக்கும் குளிர்ச்சி பொருந்திய பாம்பினையும், சிலீர் என்று ஒடும் குளிர்விக்கும் கங்கையையும் அணிந்து, நெருப்புப் பிழம்பான அந்த ஈசன், அந்தப் புனிதன் நிற்கிறான்.
"பனிதரும் திங்களும், பாம்பும் பகீரதியும் படைத்த புனிதன்" என்று அடுக்கடுக்காக குளிர்ச்சியானவற்றைப் பற்றி, பட்டர் அடுக்கிக் கொண்டு போவதைப் பார்க்கும்போது, அப்பைய தீக்ஷிதரின் பாடலும், அதனை அற்புதமாக எடுத்துச் சொல்லும் பெரியவாளின் விளக்கமும்தான் நினைவுக்கு வருகிறது :
"மௌலௌ கங்கா சஷாங்கௌ
கர சரண தளே ஷீதளாங்கா புஜாங்கா
வாமே பாகே தயார்த்ரா ஹிமகிரி தனயா
சந்தனம் சர்வகாத்ரே
இதம் ஷீதம் ப்ரபூதம்
தவ கனகஸபா நாத சோதும் க்வ ஷக்தி
சித்தே நிர்வேத தப்தே யதி பவதி ந தே
நித்ய வாசோ மத்யே
பொருள் : "உன்னுடைய நீண்ட ஜடாமுடியினில், கங்கையையும், சந்திரனையும் கொண்டிருக்கிறாய். உனது தாளிலும், தோளிலும், குளிர்ச்சி பொருந்திய நாகங்களை ஆபரணமாய் அணிந்திருக்கிறாய்; உனது வாம பாகத்திலோ, அந்தக் குளிர் மலையாம் இமயத்தின் மகளையே வைத்துக் கொண்டிருக்கிறாய்; இதற்கும் மேலாய், குளிர்ந்த சந்தனத்தை உடல் முழுதும் தடவிக் கொண்டிருக்கிறாய்! எப்படியப்பா நீ இந்தக் குளிர்ச்சியை எல்லாம் தாங்குகிறாய்?
எனக்குப் புரிந்து விட்டது! நீ என்னுடைய மனதிலே, பாவங்களே செய்து கொதித்துப் போயிருக்கும் என் மனதிலே வந்து அமர்ந்து கொண்டிருக்கிறாயில்லையா, அதனால்தான் உனக்கு அந்த சக்தி வந்திருக்கிறது" என்று சொல்லுகிறார் அப்பைய தீக்ஷிதர்!
அந்த அப்பைய தீக்ஷிதரின் வரிகளை ஞாபகப் படுத்தும் அதே "குளிர்ச்சி பொருந்தியவற்றை அந்த ஈஸ்வரன் சூடி நிற்பதை "பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும்" என்னும் அடுக்குத் தொடர்கள் நினைவு படுத்துகின்றன!!
(பெரியவா இதை எடுத்துச் சொல்லும் அழகினைக் கேட்க ஆயிரும் செவி வேண்டும்!! (இணைக்கப்பட்டுள்ள இரண்டு youtube video clips பார்க்கவும். பெரியவாளின் தெய்வீகக் குரலில், இந்த அப்பைய தீக்ஷிதரின் ஸ்லோகத்திற்கு, குரலில் அழகான explanation!!
அந்தப் புனிதரும், நீயும், என் புத்தியிலே என்னாளும் பொருந்தி இருக்க வெண்டும் என்று பிரார்த்திக்கிறார் பட்டர்.
'பகீரதியும் படைத்த புனிதர்' என்ற வரியும் மிக அழகான ஒன்று.
பகீரதன் தவம் செய்கிறான். எதற்காகத் தவம் ? கங்கையை வரவழைப்பதற்காக. கங்கை எங்கே இருக்கிறாள்? அவள் வானுலகில் மட்டுமே ஒடும் ஒரு நதியாக இருந்தாள். விண்ணவர்க்கு மட்டுமே சொந்தமானவளாக இருந்தாள். எதற்காக கங்கை வர வேண்டும்? பகீரதனின் முன்னோர்கள் கடைத்தேறுவதற்காக. முனிவர் ஒருவரின் சாபத்தால் சாம்பலாய்ப்போன தம் முன்னோர் நல்ல கதி அடைய வேண்டும் என்பதற்காக பகீரதன் தவம் செய்கிறான். தனக்காக இல்லை. தன் சுய லாபத்திற்காக இல்லை.
ப்ரம்மனின் வரமும் கிடைத்தது. கங்கை வருவாள். ஆனால், அவள் வரும் வேகத்தைத் தாங்கிப் பிடித்து அவளை வழிமுறை செய்து விடுவது யாரால் முடியும் ? ஈசனால் மட்டுமே முடியும் என்று சொல்லுகிறார் ப்ரம்மா. இப்பொது பகீரதன் மறுபடியும் ஈசனை நோக்கி தவம் செய்கிறான். ஈசனும் மனமிரங்கி வருகிறார். கங்கை வருகிறாள். விண்ணுலகில் இருந்த தன்னை மண்ணுலகிற்கு வரவழைக்கப்படுவது யாரால் என்ற கேள்வியுடன் கோபமாய் வருகிறாள்.
வந்தவளை ஈசன் தன் தலையில் தாங்குகிறார். அந்த வேகத்தை, காட்டாற்று வெள்ளமெனப் பெருகி வந்த அந்த பகீரதன் வரவழைத்த கங்கையை, பாகீரதியை, தன் தலையில் தாங்கி இந்த பூவுலகையே காத்து அருளினவர் அந்தப் புனிதர். அதனால்தான், "பகீரதியைப் படைத்த புனிதர்" என்று சொல்கிறார் பட்டர்.
அப்படிப்பட்ட புனிதரும் நீயும் என் உள்ளத்தில் வாருங்கள் எங்கிறார். இதுவும் மிக அழகான ஒரு இடம். “அம்மா நீ வா” என்று சொல்லவில்லை!!
“அம்மா, நீ எனக்கு, என்னுடைய தந்தையான அந்தப் பரமேஸ்வரனுடன் சேர்ந்து வந்து, அருள் செய்வாயாக” என்று கேட்டுக் கொள்ளுகிறார்.
இந்தக் குழந்தைக்கு, அம்மா மட்டும் வந்தால் போதாது. அப்பாவும் சேர்ந்து வரவேண்டும்.
“ஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ” என்று காளிதாஸன் சொன்னாற்போல, தாயொடு தந்தையும் சேர்ந்து வந்து அருள்செய்யுமாறு வேண்டுகிறார் பட்டர்.
அப்படி உலகையே காத்து அருளிய அந்தப் புனிதரும், நெருப்புப் பிழம்பென நின்றாலும், நிலவினை அணிந்து, பாம்பினை அணிந்து, அந்த பகீரதியையும் அணிந்து சற்றே குளிர்ந்து இருக்கும் அந்த ஈசனும், உலகிலே அனைவரும் வந்து வணங்கும் அந்த கோமளமென தாளிணை உடைய அந்த தேவியும் நம் மனதிலும், புத்தியிலும் பொருந்தி அமர்ந்து அருள் செய்யட்டும்.


13.07.2016: அபிராமி அந்தாதி - 5

  
பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர் முலையால்,

வருந்திய வஞ்சி, மருங்குல் மனோண்மணி, வார்சடையோன்,

அருந்திய நஞ்சு, அமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல்,

திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே


எம் அன்னை, அனைத்து உயிர்களிடத்தும், முப்புரையால், நிரம்பி இருக்கிறாள். செப்பாலான உரை அணிந்த அடர்ந்த தனங்களின் பாரத்தினால், வருந்தும் வஞ்சிக் கொடி போன்ற இடையை உடைய மனொன்மணியே ! நீண்ட சடையை உடைய சிவபெருமானும் அன்றொருனாள் அருந்திய விஷத்தையும் அமுதமாக ஆக்கிய அம்பிகையே. தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் சுந்தரியே. அந்தத் தாமரை மலரினும் மெல்லிய நின் பாதங்களை என் தலை மேல் கொண்டேன் என்று சொல்கிறார் பட்டர்.


முப்புரை என்றால் என்ன ? மூன்று தொழில்கள். படைத்தல், காத்தல், அழித்தல். முத்தொழில் புரியும் தேவர்கள் என படைத்தலுக்கு பிரமனையும், காத்தலுக்கு விஷ்ணுவையும், அழித்தலுக்கு சிவ பெருமானையும் குறிப்பிடுவது வழக்கம். ஆனால், இங்கோ, முத்தொழிலும் புரிபவளாக அபிராமியையே காட்டுகிறார் பட்டர் ! பொருந்திய முப்புரை என்று இரண்டே வார்த்தைகளில் அன்னை முத்தொழிலும் புரிவதைச் சொல்லி விடுகிறார்.

திரிபுரை” என்ற, அம்பாளின் நாமத்தை இங்கே “முப்புரை” என்று குறிப்பதாகவும் கொள்ளலாம்.

‘புரை’ என்பது ‘மூத்தவள்’ என்னும் பொருளிலும் வரும். அதனால், இங்கே “முத்தேவருக்கும் மூத்தவளான அம்பிகை” என்று குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம்.

அப்படிப்பட்ட திரிபுரையான அம்பிகை, இங்கே ஒரு ‘செப்பிடு வித்தை’ செய்கிறாள்! என்ன வித்தை அது? ஞானமலைகளாய் இருக்கிற நகில்கள் இரண்டையும் மூடி மறைக்கும் வித்தையாம் அது! செப்பிடு வித்தை காட்டுபவர்கள் செப்பாலான பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்து வித்தை காட்டுவார்கள். அதே போன்று, அன்னையும், தன் இரு நகில்களையும் மூடி வைத்திருக்கிறாளாம்! ‘செப்பு போன்று அழகிய” நகில்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்!

"செப்பு உரைசெய்யும்" என்பது மிக அழகான பதப் ப்ரயோகம்!- குமிழ் போன்ற மாணிக்கச் செப்பினை அழகியரின் முலையழகிற்கு உவமையாகச் சொல்வது தமிழ் மொழியின் இலக்கிய வழக்கம்!. 

 
‘செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்’ என்ற ஆண்டாள் பாசுரமும் நாமெல்லாம் அறிந்த ஒன்றுதானே!!

அந்த நகில்களோ, அந்தக் காமேஸ்வரனுடன் ஒன்றி இருக்கின்றன. அதனால்தான் அவற்றைப் “புணர்முலை” என்று குறிப்பிட்டார்.

அந்த நகில்களின் பாரம் தாங்காமல் அன்னையின் இடுப்பு – மருங்குல் – வருந்துகிறதாம்!

இதே போன்று, அந்தத் தாயின் சௌந்தர்யத்தை வர்ணிக்கும் பாடல் ஒன்று, சௌந்தர்ய லஹரியிலே வருகிறது. சௌந்தர்ய லஹரியிலே, 80 ஆவது பாடலிலே,

குசௌ ஸத்யஸ்வித்யத்-தடகடித-கூர்ப்பாஸபிதுரௌ
கஷந்தௌ தோர்மூலே கனக-கலசாபௌ கலயதா
தவ த்ராதும் பங்காதலமிதி வலக்னம் தனுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ-வல்லிபிரிவ 

 பொருள்: தேவீ ! உன் பதியான பரமேஸ்வரனின் பெருமைகளை , நீநினைத்து ,நினைத்து மகிழ்வதால் , உன் தங்கக்கலசம் போன்ற  ஸ்தனங்கள் ,  அடிக்கடி வியர்த்து ,  பூரிப்பதால் , மன்மதன் , இந்த ஸ்தன 
சுமையினால்உன் இடுப்பு ஒடிந்து விழுந்துவிடப் போகிறதே  என்று உன் இடுப்பை வள்ளிக் கொடிகளால்  மூன்று சுற்றாக சுற்றி 
இருப்பது போல்தோன்றுகிறது  

இப்படி, சௌந்தர்ய லஹரியின் பாடலையும், அந்த ஆதி சங்கரரின் வாக்கையும்கூட, இங்கே ப்ரதிபலிக்கிறார் அபிராமி பட்டர்!

“இப்படிப்பட்ட மனோன்மணி என்ன செய்தாள் தெரியுமா” என்று அழகான கதை ஒன்றைச் சொல்லுகிறார் அபிராமி பட்டர்!

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, ஆலகால விஷம் தோன்றியது. அதனைக் கண்டு அஞ்சி அனைவரும் ஓடியபோது, அந்தப் பரமேஸ்வரன், தானே முன்வந்து, அதனை அருந்திவிட்டான்! ஆனாலும், அந்த சிவனின் வயிற்றிக்குள் அண்டங்கள் அனைத்தும் இருக்கின்றன அல்லவா? அதனால், அம்பிகை, ஓடிவந்து சிவனாரின் கழுத்திலே கையை வைத்து, விஷம் அதற்குக் கீழே பரவாமல் தடுத்திவிட்டாள்! அப்படித் தடுத்ததன் மூலம், அண்டங்களைக் காத்தது மட்டுமின்றி, அந்த சிவனின் உயிரையும் காத்துவிட்டாள் என்று கூறுகிறார் பட்டர்!!

அவள், சிவபெருமான் அருந்திய நஞ்சு பரவாமல் மட்டும் செய்துவிடவில்லை; அவன் உயிரைக் காப்பதை மட்டும் செய்துவிடவில்லை – என்ன செய்தாள்? அவன் அருந்திய நஞ்சானது அமுதாக மாறிவிடும்படி செய்துவிட்டாள்! “அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை”!! நஞ்சை அருந்தியவன் இறவாமல் தடுத்தது மட்டுமல்ல; என்றுமே இறவாமல் இருக்கும்படியும் செய்து விட்டாள் அவள்!!


வார்சடையோன் என்று சிவபெருமானைக் குறிக்கிறார். நீண்ட சடைமுடி உடையவன் என்று சிவபெருமானை இங்கு மட்டுமல்ல - மற்றும் நிறைய பாடல்களிலும் குறிப்பிடுகிறார். ஜடா முடி தாரியாகவே ஈசன் பற்றிப் பேசுகிறார்.

பாரதியார் கூட தன்னுடைய "தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும்" என்ற பாடலிலே, "கற்றைச் சடைமுடி வைத்த துறவியைக் கை தொழுவாள் எங்கள் தாய்" என்று ஈசன் பற்றிப் பேசுவது நினைவு கூறத் தக்கது.


அப்படிப்பட்ட நீண்ட சடைமுடி கொண்ட ஈசன் அருந்திய நஞ்சினையும் அமுதாக்கி ஈசனையே வாழவைத்த சக்தி எம் அன்னை !


நீலகண்டன் என பெயர் பெற்ற அந்த ஈசன் அந்த ஆலகால விஷத்தை உண்டும் கூட ஒன்றும் ஆகாமல் இருந்தது அபிராமி அன்னை அருள்கூர்ந்து அந்த விஷத்தையே அமுதமாக ஆக்கியதால் அல்லவா !

இந்த விஷயத்தை சௌந்தர்ய லஹரி மிக அழகாகச் சொல்லுகிறது :

சுதா மப்யாச்வத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதி-சதமகாத்யா திவிஷத: I 
கராலம் யத் ஷ்வேலம் கபலிதவத: காலகலனா 
சம்போஸ் தன் மூலம் தவ ஜனனி தாடங்க-மஹிமா ii

இதனை மிக அழகாக நம் மஹா பெரியவா விளக்கும்போது சொல்லுகிறார்:

“அம்பாளைவிட மங்கள வஸ்து இல்லை. ஸர்வ மங்கள மாங்கல்யே என்பார்கள். அவளுடன் சேர்ந்திருப்பதாலே பரமேசுவரனும் மங்கள ஸ்வரூபியாகிறார். மங்களமே வடிவான அம்பிகை மகா சுமங்கலி. அவளுடைய சௌமங்கலியத்துக்கு எப்படி பங்கம் உண்டாக முடியும்?இதனால்தான் ஆலஹால விஷம் சாப்பிட்டுக்கூடப் பரமேசுவரன் சௌக்கியமாகவே இருக்கிறார் என்று ஆச்சாரியாள் ஸெளந்தரிய லஹரியில் கூறுகிறார். காதில் தோடு, நெற்றியில் குங்குமம், கழுத்தில் கருகுமணி இத்யாதி மங்கள சின்னங்களெல்லாம் சுமங்கலி லக்ஷணம். அம்பாளும் காதில் தாடங்கம் அணிந்திருக்கிறாள். சாதாரண பனை ஒலையைத்தான் தாடங்கமாகப் போட்டுக் கொண்டிருக்கிறாள். தாலீபலாச தாடங்கம் என்று இதை ஸ்தோத்திரங்கள் சொல்கின்றன. பழைய காலத்தில் எல்லோருமே படாடோபம் இல்லாமல் எளிமையிலேயே சுபிக்ஷமாக இருந்தார்கள் என்பதற்கு இது ஒரு திருஷ்டாந்தமாகத் தோன்றுகிறது. அம்பாளைப் போலவே எல்லா ஸ்திரீகளும் பனை ஒலையைத்தான் போட்டுக் கொண்டிருக்கவேண்டும். இதனால்தான் பிற்காலத்தில் வைரத்தோடு போட்டுக் கொள்கிற டாம்பீகம் வந்தபின்கூட, அதை வைர ஒலை என்றே சொல்கிற வழக்கம் உண்டாகியிருக்கிறது.

அம்பாளுடைய தாடங்கத்துக்கு வருவோம். மங்களச் சின்னமான தாடங்கம் அவள் காதிலிருந்து இறங்கக்கூடாது. அப்படியானால் பரமேசுவரன் எக்காலத்திலும் ஜீவிக்கத்தான் வேண்டும். இதனால்தான் அவள் ஆலஹால விஷம் உண்டும்கூட அது அவரைப் பாதிக்கவில்லை. இது உன் தாடங்க மகிமையம்மா!என்கிறார் ஆசாரியாள். திருவானைக்காவில் அகிலாண்டேசுவரியின் தாடங்கத்திலேயே ஸ்ரீ சக்ர, சிவ சக்ரப் பிரதிஷ்டை செய்து, அவளை ஸெளம்ய மூர்த்தியாக்கின ஆசாரியாள், இப்படி இங்கே தவ ஜனனி தாடங்க மஹிமா என்கிறார்.

விஷத்தைச் சாப்பிட்டும் பரமேசுவரன் சொஸ்தமாக இருப்பதற்குக் காரணம், எந்த விஷத்தையும் முறிக்கிற மருந்தாக, அமிருத்தமாக, அம்பிகை அவரோடு சேர்ந்து இருப்பதுதான். வேத வாக்கியமான ஸ்ரீ ருத்திரத்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது. ருத்திரனாக கோரமாக இருக்கிற உனக்கு சிவா என்று ஒரு மங்கள சரீரம் இருக்கிறது. இந்த சிவாதான் லோகம் முழுவதற்கும் மருந்து. (சிவா விச்வா ஹபேஷஜீ) லோகத்துக்கு மட்டும்தான் அது மருந்தா?இல்லை. ருத்திரனாக உனக்கும்கூட சிவாதான் மருந்து. (சிவா ருத்ரஸ்ய பேஷஜீ) என்று வேதம் சொல்கிறது. கோர ஸ்வரூபியையும் தன் பதிவிரத்யத்தால் மங்களமாக்கி, அவரை என்றென்றும் ஜீவிக்கும்படி செய்கிறவளை ஸ்திரீகள் ஆராதித்தால் பதிபக்தியும், தீர்க்க ஸெளமங்கல்யமும் ஸித்திக்கும்.”

இப்படி ஆலகால விஷமே அன்னை அருளினால் அமுதமாக மாறும் என்றால், எந்த கொடிய வினைப்பயந்தாம் நம்மை அழித்துவிட முடியும் ?அந்த அம்பிகை அனைத்து வினைகளையும் மாற்றி அருள்பவள் அல்லவா !நம் வினைகளையும் கூட அவள் மாற்றி அருள் புரிவாள்.

 'அம்புய மேல் திருந்திய சுந்தரி' என்று சொல்லுவது ரசிக்கத்தக்கது. அம்புயம் என்றால் தாமரை மலர். தாமரை மலர் மேல் இருப்பதோ சரஸ்வதியும் லஷ்மியும் தான். அலை மகளும் கலை மகளுமே தாமரை மலர்மேல் அமர்ந்து அருள் புரிபவர்கள். மலைமகள் தாமரை மேல் வீற்றிருப்பது போல் நாம் பார்த்தது இல்லை. ஆனல் இங்கோ, அன்னை அபிராமியை, தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் தெய்வமாக சொல்லுகிறார் பட்டர்.

பத்மாசனா” என்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

‘அந்தரி’ என்ற பயன்பாடும் அழகான ஒன்று. அந்தரம் என்றால் ஆகாசம் என்று பொருள். ஆகாச ரூபிணியாக இருக்கிறாள் அவள். “தகாராகாச ரூபிணி” என்றும் “பராகாசா” என்றும் லலிதா சஹஸ்ரநாமம் பேசுவதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய அம்மாவின் திருவடி என்மேல் படட்டும் என்று கூறுகிறார் பட்டர்.
  
முப்புரை என்று தொடங்கி முத்தொழில் புரிபவளாய்க் காட்டி, அந்த முத்தேவர்களுக்கும் மூத்த, அந்த முத்தொழில் புரியும் தேவியே முப்பெரும் தேவியருமாய் இருக்கிறாள் என்று சொல்லாமல் சொல்லுகிறார் பட்டர்.
  
இப்படி, முத்தொழில் புரி தேவி, முப்பெரும் தேவியருமாய் விளங்கும் அந்த அபிராமி, நஞ்சினையும் அமுதாக்கி அருளிய அந்த அன்னை தனது பத்ம பாதங்களை நம் மீதும் வைத்து,  நம் வினைகளையும் களைந்து,  நம்மைக் காக்கட்டும்.

25.04.2017 அபிராமி அந்தாதி பாடல் : 6
**********************************************************
சென்னியது உன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே!
“செந்தூரம் போன்று சிவந்த திருமேனியையுடைய அபிராமித் தாயே! உனது தாமரையையொத்த அழகிய திருவடிகளை நான் எப்போதும் என் தலையின் மேல் வைத்துள்ளேன். உனது நாமமே எப்போதும் என் நினைவில் நிலை நிற்பது. என் எல்லா செயல்களும் உன் அடியார்களை முன் வைத்து, அவர்களுக்காகவே நடக்கின்றன. நான் எப்போதும் உன் அடியார்களையே கூடியிருக்கின்றேன். தினந்தோறும் நான் முறையுடன் படிப்பதும் உன்னுடைய மேலான ஆகம வழிமுறைகளையே” என்று சொல்லுகிறார் பட்டர்.
தேவியின் திருவடிப் பெருமையோடு இந்தப் பாடலைத் துவங்குகிறார் அபிராமி பட்டர். அந்த அழகிய திருவடித் தாமரைகளை நான் என் தலைமேல் அல்லவா வைத்திருக்கிறேன் என்று தொடங்குகிறார்.
எப்படிப்பட்டத் திருவடிகள் அவை?
வேதமே தாங்கி நிற்கும், வேதத்தின் உச்சியில் இருப்பவை அல்லவா அந்தத் திருவடிகள்!
லலிதா சஹஸ்ரனாமமும் சொல்லுகிறதே . "ஸ்ருதி சீமந்த சிந்தூரி, க்ருத பாதாப்ஜ தூளிகா" என்று. அந்த வேதமாதா, அவளது காலடியிலே விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்கிறாள். அப்படி அவள் விழுந்து விழுந்து வணங்குவதனாலேயே, அவளுடைய தலை வகிட்டிலிருக்கும் சிந்தூரம், அந்த ராஜராஜேஸ்வரியின் பாதங்களில் பட்டு, பட்டு, அந்த ராஜ மாதங்கியின் காலடிகள் சிவந்து விட்டனவாம்! சிவந்து, சிகப்பான தாமரை மலர்கள் போல இருக்கின்றனவாம்!
அப்படிச் சிவந்த அந்தத் திருவடித் தாமரைகளைத் தனது தலையிலே தரித்துக் கொண்டிருப்பதாகப் பேசுகிறார் அபிராமி பட்டர்.
ஆதிசங்கரரும்கூட, சௌந்தர்ய லஹரியில், அன்னையின் திருவடிகள், வேதங்களின் தலை போன்றதான உபநிடதங்களின் உச்சியில் விளங்குவதாக வர்ணிக்கிறார்.
ச்ருதீநாம் மூர்த்தானோ தததி தவ யௌ சேகரதயா
மம அபி ஏதௌ மாத: சிரஸி தயயா தேஹி சரணௌ
யயோ: பாத்யம் பாத: பசுபதி ஜடாஜூட தடினீ
யயோர் லாக்ஷா லக்ஷ்மீ: அருண ஹரி சூடாமணி ருசி: (சௌந்தர்ய லஹரி : 84)
இந்தப்பாடல் பற்றி பெரிய பெரியவா பேசும்போது, (தெய்வத்தின் குரல் முதற்பாகம்) சொல்லுகிறார்:
இப்படியே அம்பாளுடைய சரண கமலங்களைத் துதிக்கிறபோது "வேதங்கள் தங்கள் சிரசுக்கு ஆபரணமாக எந்த உன் பாதங்களைத் தாங்குகின்றனவோ, அந்தப் பாதங்களை என்சிரசிலும்கூட வைப்பாய் அம்மா" என்கிறார்.
இப்படிக் கேட்பது நியாயமில்லையே என்றால், 'நியாயம் - அநியாயம் என்பவை காரிய - அகாரியங்களை எடை போடுகிறபோதுதான். தயை என்பதோ இப்படி குணங்களை எடைபோட்டுப் பார்ப்பதில்லை. நீயோ தயையே வடிவமானவள். எனவே, அந்த தயையால் என் தலைமீதும்கூட உன் திருவடிகளை வைப்பாய்" என்கிறார் (தயயா தேஹி சரணௌ)
வேதத்தின் சிரஸில் அம்பாளின் பாதம் இருக்கிறது என்பதில் ஒர் உள்ளர்த்தம் உண்டு. உபநிஷத்துக்களுக்கே சுருதி சிரஸ், வேதங்களின் முடி என்கிற பெயர் இருக்கிறது. முன்பே நான் ஞானாம்பிகையையைப் பற்றிச் சொல்கிறபோது கேநோபநிஷத்தில் அவளுடைய ஆவிர்பாவத்தைப் பற்றி வருகிறது என்று சொல்லியிருக்கிறேன். தேவர்கள் அகம்பாவம் அடைந்தபோது, அதைப் போக்கி அவர்களுக்கு ஞானம் தருவதாக அம்பிகை தோன்றியதைக் கேநோபநிஷத் சொல்கிறது. இங்கே ஆசார்யாள் அதை மனஸில் கொண்டே சொல்வதாகத் தெரிகிறது. அகம்பாவ நிவிருத்தி தானே ஞானத்துக்கு வழி என்று அந்த உபநிஷத்திலிருந்து தெரிகிறது. அதற்கு ஏற்றாற்போல் இங்கேயும் அகம்பாவமே இல்லாமல் ரொம்பவும் அடங்கி 'மமாபி' "எனக்கும்கூட திருவடி ஸ்பரிசத்தை அநுக்கிரகிப்பாயம்மா" என்கிறார்.
உலகம் அனைத்தையும் தாங்குவது அந்த இறைவனின் திருவடிதான். அந்தத் திருவடிகள்தாம் அனைத்தையும் தாங்குகின்றன. அந்தத்திருவடிகளிலிருந்தே கங்கை ஊற்றெடுத்து நமது அனைத்துப் பாவங்களையும் போக்க வருகிறது.
அதனால்தான், திருவடிகளுக்குப் பெருமை அதிகம்.
ராமாயணத்தில், ராமபிரானின் பாதுகைகளுக்குத்தான் பரதன் முடி சூட்டி மகிழ்ந்தான். தனது அரசனாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான்.
மூவுலகையும் அந்தத் திருவடிகள்தாம் அளந்தன. “அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி” என்று ஆண்டாளும் அந்தத் திருவடிகளையே பாடுகிறாள்.
அந்தத் திருவடிகளைத் தாங்கும் பாதுகைகளின் மகிமை பற்றி ஸ்வாமி தேசிகன் 1000 பாடல்கள் ஒரே இரவில் புனைந்ததும் நாம் அறிந்ததுதான்.
இப்படி, நல்லன எல்லாம் தரும் அந்தத் திருவடித் தாமரைகள், தனது தலையிலே எப்போதும் இருக்கட்டும், அருள் செய்யட்டும் என்று பேசுகிறார் பட்டர்.
நாமஸ்மரணம், மனதைக் கட்டுக்குள் வைக்கும். அன்னையை அறிய, முதலில் அவளது நாமத்தை விடாது தியானம் செய்ய வேண்டும். “அம்மா, உனது சிவந்த மேனியை எனது நெஞ்சில் வைத்து, உனது நாமத்தை இடைவிடாது தியானித்துக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லுகிறார்.
உலகில் கடைத்தேற, தேவியின் தியானம் இருந்தால் மட்டும் போதாது. இந்த மனது பிய்த்துக்கொண்டு ஓடி, கண்ட விஷய சுகங்களிலும் ஈடுபடும் இயல்புடையது. அப்போதெல்லாம், அந்த அம்பிகையின் பக்தர் குழாத்தின் சங்கம், கூட்டுறவு நமக்கு இருந்தால், அந்த சங்க மகிமையால் நமது உள்ளம் பண்படும். அவர்கள் அன்னையைப் பற்றிப் பேசும்போதெல்லாம், நமது மனமும், விஷய சுகம் நீக்கி, அன்னையின் அழகினிலே, அவளது பாதாரவிந்தங்களிலே ஈடுபடும்.
இதனால்தான், “சத்சங்கத்வே, நிச்சங்கத்வம்” என்றார் ஆதி சங்கர பகவத் பாதர். இதனை உணர்ந்துதான், அபிராமி பட்டரும், “அம்மா, உனது அத்யந்த பக்தர்களோடு, என்னை நான் இணைத்துக்கொண்டு விட்டேன்” என்று கூறுகிறார்.
“அம்மா, நான் நித்யம் வழிபடுவதும், கற்பதும் உனது ஆகம வழிமுறைகளில் சொன்னவிதமே” என்றும் சொல்லுகிறார்.
மாணிக்கவாசகரும், “ஆகம உருவாய் நின்று நமக்கருகில் வருபவன்” என்று பொருள்பட, சிவபுராணத்தில் “ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க” என்று பேசுகிறார்.
“ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனே‌ஸ்வரி” எனத்தொடங்குல் பிரபலமான பாடலிலும்,
“ஆகம வேத கலாமய ரூபிணி” என வருவதும் இந்தப் பொருள் குறித்தே.

இப்படி, அன்னையின் திருவடிகளைத் தாங்கியும், அன்னையின் நாமத்தை விடாது தியானம் செய்தும், அவலது அடியாருடன் கூடி இருந்தும், அவளது ஆகம வழி சென்றும் அவளை வழிபடுவதாக அபிராமி பட்டர் கூறும் இந்த வழிகளில் நாமும் சென்று, அந்த அபிராமி அன்னையின் அருளைப் பெறுவோம்


No comments:

Post a Comment