Saturday, June 18, 2016

அனுஷம் : 18.06.2016 : அடியனைக் கொள்வையோ?

18.06.2016 : அனுஷ தினம்

இன்று, அனுஷ தினம். உலகெங்கும் மஹாஸ்வாமிக்கு பூஜைகளும் அராதனைகளும் நடக்கும் நாள். பூமாலைகள் சாற்றி, பாமாலைகள் சாற்றி, கொண்டாடி மகிழும் நாள்.

அடியவர்கள் கூடி, பெரியவா மகிமையைப் பாடி, மகிழும் நாள்.

பெரியவாளுடைய பக்தன் என்று சொல்லிக்கொள்ள தகுதி ஏதேனும் அடியேனுக்கு இருக்கிறதோ என்று சிந்தித்துப் பார்த்தேன். "நிச்சயமாக இல்லை"  என்றுதான் தோன்றுகிறது.

காலையில் எழுந்தது முதல், இரவு உறங்கும் வரை, ஏதேதோ சிந்தனைகள், எண்ணங்கள் வருகின்றன. பெரியவா ஞாபகம் மட்டும் இங்கே எப்போதாவதுதானே வருகிறது? ஏதேதோ கவலைகள் மனதில். ஆனால், பெரியவா சொன்னபடி வாழ்கிறோமா என்ற கவலை மட்டும்  இந்த மனதில் எழுவதாகவே காணுமே?

இன்றைய நாளிலே நாம் என்ன வரம் கேட்டாலும் அதைப் பெரியவா கொடுத்து விடுவாரில்லையா?

அடியேன் கேட்கும் வரம் என்னவோ ஒன்றுதான். வேறெந்த நினைவுமின்றி, அப்பா, உன் நினைவு மட்டுமே இருக்குமாறு என்னைச் செய்துவிடு ...

ஏதோ ஒரு அனுஷ தினத்தில், ஒரு நொடிப்போது தோன்றும் உன் நினைவு, எப்போதும் நிலைக்க அருள் செய்ய்ப்பா! அடியவர்கள் உனக்குச் செய்யும் பூஜையைப் பார்க்கும்போதோ, அவர்கள் உனைப் பற்றிய நினைவுகளைப் பகரும்போதோ, படிக்கும்போதோ, ஒரு நிமிடம் உனைப் பற்றி நினைக்கும் அந்த நினைவே முழு நினைவாக மாற்றி வையப்பா!

"நான் வேறெனாதிருக்க, நீ வேறெனாதிருக்க" என்று அருணகிரியார் கேட்டாற்போல் ஆக்கிவிடப்பா என்ற வரம் மட்டுமே கொடு என்று  கேட்கத் தோன்றுகிறது.

இங்கிருக்கும் அத்தனை பக்தர்களும், இனிதே வாழ வேண்டும் என்னும்  ப்ரார்த்தனையோடு, இந்தப் பாடலைப் பெரியவாளின் திருப்பதங்களில் சமர்ப்பிக்கிறேன்.



அடியனைக் கொள்வையோ?

உற்றுனை அடைந்துனை உயிரெனக் கொண்டிலேன்
பற்றியுன் பதமலர் துணையெனக் கொண்டிலேன்
நற்றவம் புரிந்திலேன் நாணிலேன் செத்திலேன்
குற்றமே பொறுத்தெனை அடிமையாய்க் கொள்வையோ? (1)


வித்தனே, நாதனே என்றுனை ஏத்திலேன்
சித்தமும் உன்பதம் வைத்திடக் கற்றிலேன்
பித்தனாய் ஆக்கியுன் பதமலர் என்சிரம்
அத்தனே வைத்தெனை உனதெனக் கொள்வையோ? (2)


பெரியவா சரணமென்றுளமதும் உருகிலேன்
அரியதாம் பதமலர் நினைவிலே கொண்டிலேன்
விரியவே உன்புகழ் கேட்டிலேன் ஓதிலேன்
பரிவுடன் வந்தெனை நினதெனக் கொள்வையோ? (3)


குருபதம் ஜபமெனக் கொண்டிலேன் கதியிலேன்
திருமுகம் அதனையே உளமதில் நினைவிலேன்
அறுபகை அவைவிடும் வழியிலேன் நாயினேன்
உறுபதம் தந்தெனைத் தனதெனக் கொள்வையோ? (4)


மதியிலேன், தவமிலேன், பாரிலே சீரிலேன்
கதியிலேன், பதியதாம் கஞ்சிவந்துற்றிலேன்
விதியினால் நல்வழி ஏதிலேன், பாவியேன்
துதிமலர்த் தாளிணை தந்தெனைக் கொள்வையோ? (5)


சிந்தனை உன்னுரை கொண்டிலேன் தீயினேன்
புந்தியில் உன்பெயர் ஓதிலேன் பேயினேன்
பந்தமோடாயிரம் பாசமும் விட்டிலேன்
எந்தையே! வந்து இங்கென்னையும் கொள்வையோ? (6)


அடியவர் அவரொடும் கூடிலேன் பாடிலேன்
கடிநகர் காஞ்சியும் வந்துனைக் கண்டிலேன்
மிடியுடை வாழ்வினை மாயமாய் எண்ணிலேன்
வடிவுடை சோதிநீ,  தாளிலே கொள்வையோ? (7)


கண்டிலேன் நாதனின் தாளிணை மலரினை
விண்டிலேன் நாதனின் பெருமையை நாவுற
உண்டியோடுறக்கமே வாழ்க்கையாய்க் கொண்டனன்
அண்டிநீ வந்தெனை அணைத்துடன் கொள்வையோ? (8)


வெள்ளமேந்துறுபொருள் நீயெனக் கற்றிலன்
பள்ளிகொள் மாயனும் நீயெனக் கற்றிலன்
கள்ளமே உள்ளமாயிருக்குமித் தீயனை
அள்ளியே கொண்டுவுன் பதமலர் கொள்வையோ? (9)


உய்வழி அறிந்திலேன்; உண்மையும் உணர்ந்திலேன்
மெய்யதும் அறிகிலேன் பொய்யதாம் மெய்யதை
மெய்யென நினைத்துவாழ் மூடனாம் வீணனை
தெய்வமே! நீயும்வந்தணைத்துனுள் கொள்வையோ? (10)








No comments:

Post a Comment