Friday, May 12, 2017

13.05.207 : எந்தையே ஆதரிப்பாய்!

13.05.207 : எந்தையே ஆதரிப்பாய்!
*********************************************************

நேற்று அனுஷம். பக்த கோடிகள் அனைவரும் அனுஷதினத்தில் ஒன்றுகூடி, உம்மாச்சித் தாத்தாவை ஆராதித்து ஆனந்தம் அடையும் தினம்.

சென்ற அனுஷத்தன்று மும்பை வந்தோம். இதோ அடுத்த அனுஷம். வேலைக்காக, வயிற்றுக்காக, சென்னை விட்டு, பெங்களூர் விட்டு, இதோ மும்பை வந்தாகிவிட்டது. நினைத்துக்கொண்டால், சட்டென்று காஞ்சீபுரம் போய் தாத்தாவைப் பார்ப்பது இங்கிருக்கும் வரை முடியாது. பக்கத்தில் ஏதும் அடியார்கள் கூடி அனுஷ பூஜைகள் நடப்பதாகவும் தெரியவில்லை. மனதிலேயே நினத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் மனது ஒருநிலைப்பட்டு அவரையே நினைத்துவிடுகிறதா என்ன?

உன்னையே நினைக்கும் அந்த நினைவையும், அப்படிப்பட்ட மனதையும் அருள்வாயப்பா, ஆதரிப்பாயப்பா என்று அவரையே வேண்டிக்கொண்டு, இப்பாடலை, பெரியவாளின் திருவடி மலர்களுக்கு, அர்ப்பணிக்கிறேன்.



அறிவொன்றுமில்லேன் நெஞ்சில் அன்பிலேன் நீயன்றிங்குப்
பிறிதொன்றும் இல்லையென்னும் சிந்தையும் இல்லேன் நன்மை
சிறிதொன்றும் இல்லேன் கீழ்மை வடிவெடுத்தேகினேனை
நிறையன்றி வேறேதில்லா எந்தையே ஆதரிப்பாய்! (1)

அன்பர்தம் கூட்டம் தந்தும், அன்புடன் நாமம் தந்தும்
இன்பமாய் வாழ உந்தன் சரணத்தில் இடமே தந்தும்
முன்வினை துரத்த ஓடி முடிவிலாத் துன்பமுற்றேன்
என்னையே நீயும் கொஞ்சம் அருள்கூர்ந்து ஆதரிப்பாய்! (2)

பண்ணொடு பாடல் தந்தாய்; பாடிடத் தமிழும் தந்தாய்
தண்மலர்ப் பாதம் தந்தாய்; தாங்கிடத் தலையும் தந்தாய்
விண்ணவர் போற்றும் உன்னை நினையாமல் அழியும் பொன்னும்
மண்ணுமே தேடும் என்னைப் பரிந்துடன் ஆதரிப்பாய்! (3)

தமிழ்நாட்டில் பிறப்பு தந்தாய்! தமிழறிவும் நீயே தந்தாய்!
அமிழ்தினும் இனிய உன்னை நினைக்கவே மனமும் தந்தாய்!
உமைபங்கா உன்னைப் பாடும் பணி விட்டு ஓடி வாழ்வே
சுமையான பாவியென்னைப் பரிந்துடன் ஆதரிப்பாய்! (4)

உனையன்றி வேறு எந்த உணர்வையும் நீக்கி என்னுள்
நினைவெலாம் நீயே ஆகி, காண்பதும் பேச்சும் மூச்சும்
அனைத்துமே நீயே ஆகி, வாழ்வதன் பொருளும் ஆகி
எனைக்காத்து அருள்வாயப்பா! ஆதரித்தருள்வாயப்பா! (5)

No comments:

Post a Comment