Monday, September 25, 2017

25.09.2017 : அனுஷ நன்னாள் : "பெரியவா நவரத்தின மாலை"

25.09.2017 : அனுஷ நன்னாள்

இன்று அனுஷ நன்னாள். நவராத்திரியும் அனுஷமும் கூடி வந்திருக்கும் இந்த நன்னாளிலே, “லலிதா நவரத்தின மாலை” பாடலின் மெட்டிலே பெரியவாளுக்கு ஒரு நவரத்தினப் பாமாலை சாற்றத் தோன்றியது.

ஒரு கூழாங்கல் கூடப் பெறாத இந்தப் பாடலை, என் ஆசைக்காக “நவரத்தின மாலை”யாக பெரியவாள் மேல் சாற்றுகிறேன்.


பெரியவா சரணம்.
**************************************************




கணபதி காப்பு

ஆனை முகனே சரணம் சரணம் ஆறு முகனே சரணம் சரணம்
ஞான குருவே சரணம் சரணம் தாயும் நீயே சரணம் சரணம்

நாவொன்றிதனால் நாளும் பொழுதும் , பாமாலைகளால் கருணைக் கடலாம்
தேவன் பதமே தொழுதே அழுது பாடும் பணியே பணியாயருள்வாய்

குருநாதா நின் திருவடி சரணம்! குருநாதா நின் திருவடி சரணம்!
குருநாதா நின் திருவடி சரணம்! குருநாதா நின் திருவடி சரணம்!


1. வைரம்

முதலும் முடிவும் இடையும் நீயே பிறப்பும் இறப்பும் வாழ்வும் நீயே
பதமும் பொருளும் குணமும் நீயே படைப்பாய் அழிப்பாய் காப்பாய் நீயே
பதமலர் தனிலே ஒன்றிடுமாறு, வைர நெஞ்சம் தருவாய் நீயே
பதறும் வாழ்வினில் நிம்மதி தருவாய், குருநாதா நின் திருவடி சரணம்!



2. நீலம்:

ஏலவார் குழலி காஞ்சித் தாயின் பாலனாக வந்தோன் சரணம்
மூலப் பொருளே மறையும் தேடும் ஞானப் பொருளே சரணம் சரணம்!
ஆலம் உண்டான் வடிவே சரணம் நீல கண்டன் உருவே சரணம்
பாலக் கண்ணன் நீயே சரணம்! குருநாதா நின் திருவடி சரணம்!



3. முத்து:

முத்தேவரும் இணைந்தோருருவாகவே வையம் காக்கவே வந்தோன் சரணம்
பித்தேறியயிவ்வுலகை மாற்ற, சித்தன் வடிவில் வந்தோன் சரணம்
எத்தேவரும் போற்றிடும் கழலிணைகள், நோக நடந்திங்கு வந்தோன் சரணம்
அத்தா அபயம் தருவாய் வருவாய், குருநாதா நின் திருவடி சரணம்!


4. பவழம்

செக்கச் சிவந்த பதக்கமலங்கள் பக்தர் மனம் ஒளிர் செம்பவழங்கள்
துக்கமகற்றிடும் மனதினில் தூய சுத்தியளித்திடும் நித்தமும்தாமே!
எக்கணமும் தனை நினைத்திருப்போர்க்கு நற்கதி தந்திடும் பொற்கமலங்கள்
இக்கணம் என்னையும் காத்திட வருமோ? குருநாதா நின் திருவடி சரணம்!



5. மாணிக்கம்

எங்கும் நிறைந்ததோர் இறையுமிப்புவியில் வந்து நடந்ததோர் அற்புதம் நீயே!
பொங்கிடும் அன்பினோர் பூரணம் நீயே எங்களை வாழ்விக்கும் இன்னருள் நீயே
திங்களொடிரவியைக் கண்களாய்க் கொண்டாள் நெற்றியில் குங்கும மாணிக்கம் நீயே
பங்கயக் கனிமுகம் காட்டிடுவாயே! குருநாதா நின் திருவடி சரணம்!



6. மரகதம்

பரமன் வடிவே சரணம் சரணம்! அருள்நிதி அமுதே சரணம் சரணம்
நரனுரு ஹரனே சரணம் சரணம்! கருணையாம் கடலே சரணம் சரணம்!
மரகதவல்லியின் மகனாய் வந்த அரிதிரு மருகா சரணம் சரணம்
கரமலராலே வரமது தருவாய், குருநாதா நின் திருவடி சரணம்!



7. கோமேதகம்

விதியோ? வினையோ? வினையின் பயனோ? கதியே அறியேன் கலங்கத் தகுமோ?
சதியால் நமனும் எனையே விழுங்க விடுவாயோ நீ குஹனே சரணம்!
சதிஉத்தமிபா லகனே சரணம்! கோமேதகமே குமரா சரணம்!
நதிபுத்திரனே சரணம் சரணம்! குருநாதா நின் திருவடி சரணம்!



8. பதுமராகம்

ஞாலம் தொழும் உயர் சீலனே சரணம் ஆலமர்ந்தருள் குருநாதனே சரணம்
காலனைக் கடியும் காலனே சரணம்! மாலயன் அறியா ஜோதியே சரணம்
வேலவன் தாயவள் பார்வதி பதும ராகவிலாஸினி ரூபனே சரணம்!
ஓலமிட்டழுதிடும் அடியனைக் காப்பாய், குருநாதா நின் திருவடி சரணம்!



9. வைடூரியம்

கலைமாமதியை முடிசூடிடுவாய், நிலையாய் மதனுக்குயிரே தருவாய்
மலைமாமகள் நீ, கலைமாமகள் நீ, அலைமாமகள் நீ அருளே தருவாய்!
சிலையெனக் கரும்பைக் கரம்பிடித்தாளும் காஞ்சித் தாயே! மலரடி சரணம்!
விலையேதுமிலா வைடூரியமே! குருநாதா நின் திருவடி சரணம்!


பயன்

தினம்தினம் பெரியவா பதமலர் தொழுது நவரத்தினபா மாலையை நவில்வார்
சினமுடன் அறுபகை வென்றிடுவாரே! புகழ்பொருள் உயர்நலம் அடைந்திடுவாரே!
குருநாதா நின் திருவடி சரணம்! குருநாதா நின் திருவடி சரணம்!
குருநாதா நின் திருவடி சரணம்! குருநாதா நின் திருவடி சரணம்!

No comments:

Post a Comment