Sunday, September 10, 2017

கிருத்திகைப் பாடல்கள்

05.08.2018 : கிருத்திகை நாள்

ஒவ்வொரு கிருத்திகை நாளிலும், அந்த வடிவேலனேயான உம்மாச்சித் தாத்தாவின்மீது, அந்த குருகுஹனுக்குப் பிடித்தமான திருப்புகழின் ஒரு சந்தத்திலே ஒரு பாடல் புனைய முற்படுவது, இன்றைய கிருத்திகை தினத்திலும், பெரியவாளின் பரம கருணையாலே நடந்திருக்கிறது.

“எருவாய் கருவாய் தனிலே யுருவா
     யிதுவே பயிராய் ...... விளைவாகி”        என்று தொடங்கும் திருப்புகழ் பாடலின்

“தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான”  என்ற சந்த்தத்திலே இன்றைய கிருத்திகைப் பாடல் அமைந்திருக்கிறது.

பெரியவா சரணம்.
***********************************************************************************************


முனியே கருணா நிதியே அருணா
சலனே பரனே அரிதான (1)

குருவே ரகனே திருமா மணியே
மருவே துமிலா  பெரியோனே (2)

கதியே விதியே மதியே பதியே
முடியா வினைமே லிடியாக 93)

எனதா ருயிரே வருவாய் உறைவாய்
எனதா வியிலே    இனிதாக (4)

மதிசூ டிறைவா! நதிசூ  டரனே!
அதிவா னவனே! சதிராடி! (5)

முருகா வெனெவே ஒருகா லுனையே
நினைவோ ரிடரே களைவோனே (6)

புதிதா நவனே! பழமா வமுதே!
அதிவே கமொடே வருவாயே! (7)

இருதா ளிணையே சிரமீ தினிலே
பரிவோ டுடனே அருள்வாயே! (8)



12.06.2018 : கிருத்திகை நன்னாள்

ஒவ்வொரு கிருத்திகை நாளிலும், அந்த குருபரனேயான பெரியவா மீது, அந்தக் குருபரன் உகக்கும் திருப்புகழின் ஒரு சந்தத்திலே ஒரு பாடல் புனைய முற்படுவது, பெரியவாளின் அனுக்ரஹத்திலே இன்றும் நடந்திருக்கிறது.

ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே
     உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே”

என்ற திருப்புகழ் பாடலின்

தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான
     தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான

என்ற சந்தத்திலே, அமைந்திருக்கிறது இன்றைய பாடல்.

பெரியவாளி நினைத்து மனதுருகிப் பாடிச் சேவை ஏதும் அடியேன் செய்ததில்லை. கஞ்சிமா நகர் சென்று அந்த அருட்கடலைச் சேவித்து எத்தனையோ நாட்கலாகி விட்டன. பெரியவாளின் மலரிணைகள நினைத்து நித்தமும் பூஜை செய்வதில்லை. பெரியவாளின் அத்யந்த பக்தர்களையும், அடியவர்களையும் நாடிச் சென்று கலந்து இன்புறுவதும் இல்லை. எது நடந்தாலும், அது பெரியவாளின் அனுக்ரஹம் என்று பெரியவாளின் அருள் ஒன்றையே நாடும் பக்குவமும் இல்லை. பெரியவாளின் சரன கமலங்களையே நினைத்து உருகி இருக்கும் பக்தியும் இல்லை.

அப்பனே! அடியவர்கள் எல்லோரும் போற்றும் காருண்யனே! அரனும், அரியுமென ஒன்றாய் வந்த ஹரிஹரஸ்வரூபமே! உன்னை என்றென்றும், என்றென்றும் நினைத்து உருகி நிற்கும் அந்த ஒரு வரம் தா என்னப்பனே!

பெரியவா சரணம்.



******************************************************

உனையெனது மனதுருகி பாடிச் சேவைப் புரியேனே
 உனதுபதி நகரதனை தேடிச் சேவித் தறியேனே

உனதுபத மெனதிருகை கூப்பிப் பூசை புரியேனே
 உனதுஅடி யவரைதின மோடிக் கூடிச் சுகியேனே

வரதகர அருளமுது நாடித் தேடல் அறியேனே
 சரணமதை ஒருகணமும்  த்யானத் தேவைத் தறியேனே

திரளுமடி யவரெவரு மேற்றிப் பாடும் பெரியோனே
 அரனவனு மரியவனு மாகக் காட்சித் தருவோனே

18.04.2018 : கிருத்திகை நாள் : திருப்பொற் பாதம் தருவாயே

கிருத்திகை நாளிலேனும், அந்த குருபரனேயான பெரியவாளை ஒரு கணம் நினைத்து, அந்த முருகப் பெருமான் மிகவும் உகந்த திருப்புகழ் சந்தத்திலே அடி ஒற்றி, ஒரு பாடலை சமர்ப்பிப்பது, இந்த கிருத்திகையை ஒட்டியும், பெரியவா அனுக்ரஹத்தில் நடந்திருக்கிறது.

“கருப்பற் றூறிப் ...... பிறவாதே; கனக்கப் பாடுற் ...... றுழலாதே” என்ற பாடலின்
“தனத்தத் தானத் ...... தனதான” என்ற சந்தத்தில் அமைந்திருக்கிறது இந்தப் பாடல்.

பெரியவா சரணம்.



பிறப்பில் லாதப் பெரியோனே
இறப்பில் லாதுத் திரிவோனே
அறத்தின் மூலப் பொருளோனே
துறப்பின் கோடிக் கரையோனே

அகம்னின் றாடும் பிணிமாற
உடம்பில் மோகம் களைவாயே
பதத்தில் தாகம் தருவாயே

திருப்பொற் பாதம் அருள்வாயே



28.04.2017 : கிருத்திகை நன்னாள் : திருஞான சுந்தரக் ….கிழவோனே!
***************************************************************************************************************

ஒவ்வொரு கிருத்திகையிலும், அந்தக் குமரனுக்குப் பிடித்த அழகிய திருப்புகழின் ஒரு சந்தத்திலே, ஸ்வாமிநாதனாய் அவதாரம் செய்த நம் பெரியவாளைப் பாடும் சந்தோஷம், அவர் அருளாலே இன்றும் தொடர்கிறது. 

அபகார நிந்தைபட் ...... டுழலாதே ....     அறியாத வஞ்சரைக் ...... குறியாதே என்ற பாடலின் 

தனதான தந்தனத் ...... தனதான     தனதான தந்தனத் ...... தனதான     என்ற சந்தம்.  

பெரியவா சரணம். 



ஒருநாளு முன்பதம்….நினையாதே
     தவயோக மென்பதும் ….அறியாதே
உருகாத ழிந்திடும் …..மனதாலே
     உனைநான டைந்திடப் …..பெறுவேனோ?
அரனோடு சக்தியின்…….வடிவோனே!
     தவராஜ சங்கரப் …பெயரோனே!
அடியார வர்மனம்…உறைவோனே!
     திருஞான சுந்தரக் ….கிழவோனே!




25.05.2017 : கிருத்திகை நன்னாள்

இன்று, கிருத்திகை நன்னாள். இன்றைய தினத்தில், அந்த அருணகிரியார் தந்த திருப்புகழ் சந்தத்ததிலே, அந்த ஸ்வாமிநாதனேயான நம் பெரியவாளைப் பாடும் பாக்யம் தந்ததும், பெரியவாளின் அருளாலே அல்லவா!


பெரியவாளின் தாள் பணிந்து, அவரது பாத கமலங்களுக்கு, இப்பாடலை அர்ர்பணம் செய்கிறேன். 


அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி என்ற பாடலின், 

தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான  என்ற சந்தம். 




உளமதி லேகி உதிரமு மாகி உயிரது ஆளும்…இறையோனே
இளமதி சூடி கனலது மேந்தி சபையினி லாடு மிளையோனே
கெழுதகை ஞான அறிஞரும் தேடு மறைமுடி வானப் பெரியோனே
இருபத மேவி அடியனும் வாழ எனதகம் தேடி.. வரவேணும்
அதியழ கான முகமது காண அடியனுக் காசி தரவேணும்
பலமதப் பேரும் அடிபணின் தேகும் திருவடி சேவை தருவாயே
உனைமற வாத மனமது மீந்து மகிழ்வுடன் வாழ அருள்வாயே


வளமது கூடி மனநிறை வாக அடியனும் வாழ அருள்வாயே


21.06.2017 : கிருத்திகை.

ஒவ்வொரு கிருத்திகை தினத்திலும், அந்த குருபரனேயான பெரியவாளின் 

மேலே, திருப்புகழின் ஒரு சந்தத்திலே ஒரு பாமாலை புனைந்து 

சமர்ப்பிப்பது, இன்றைய கிருத்திகை தினத்திலும், அவர் அருளாலே தொடர்கிறது.

“வசனமிக வேற்றி ...... மறவாதே
     மனதுதுய ராற்றி ...... லுழலாதே” என்ற பாடல்.

“தனதனன தாத்த ...... தனதான
     
தனதனன தாத்த ...... தனதான” என்ற சந்தம்.

பெரியவா சரணம்.





வயதுமிக போக்கி ..….உடலாலே
  துயரமிகு தேக்கி……..மனதாலே

உனதுபத மேத்தி……நினையாதே
   எனதுசிறு வாழ்வி…..லுழல்வேனே

குருபரனு மேத்து….மிறையோனே
    உலகமுழு தீந்த …..அரியோனே

அடியவனைக் காக்க வருவாயே
   சரணமெனக் கீந்து…..அருள்வாயே


19.07.2017 : கிருத்திகை.

ஒவ்வொரு கிருத்திகை தினத்திலும், அந்த குருபரனேயான பெரியவாளின் மேலே, திருப்புகழின் ஒரு சந்தத்திலே ஒரு பாமாலை புனைந்து சமர்ப்பிப்பது, இன்றைய கிருத்திகை தினத்திலும், அவர் அருளாலே தொடர்கிறது.

"ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத
     
நாடண்டி நமசி வாய ...... வரையேறி"

என்னும் பாடலின் சந்தமாம்,

“தானந்த தனன தான தானந்த தனன தான
     
தானந்த தனன தான ...... தனதான” என்ற சந்தத்தில் இந்தப் பாடல்

ஓரந்த மெதுவி லாத ஆனந்த மயம தான
   கோனுந்த னடிக ளேக….அருள்தாராய் (1)

தாயுந்த னறிவி லாத சேயிந்த கடைய னான
   ஈனன்இ வனையு மாள…வருவாயே (2)

ஆறங்க முடையதான வேதங்கள் தினமு மோது
   பாதங்கள் பணியு சேவை – தருவாயே (3)

பாரெங்கும் புகழு ஞான போதத்தை எளிமை யாக
   யாரும்பு ரியும தான - சுவையான (4)

தேனுந்த னுரைக ளோதி நானுந்த னடிகள் சேர
   நாதன்உ னடியில் வாழ – அருள்வாயே (5)

கிருத்திகை : 15.08.2017 :  மதியொடு மடந்தை சூடி


இன்று கிருத்திகை. கிருத்திகை தோறும், அந்த குருபரனேயான பெரியவாள் 

மேலே அந்தக் குருபரன் மேல் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழின் ஒரு

சந்தத்திலே ஒரு பாடல் புனைவது, இன்றும், அவர் அருளாலே 

நிகழ்ந்திருக்கிறது.


இன்றைய பாடல்,

“இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி

     னிருவினை யிடைந்து போக ...... மலமூட


என்னும் திருப்புகழின் சந்தத்திலே அமைந்திருக்கிறது. 


“தனதன தனந்த தான தனதன தனந்த தான
     தனதன தனந்த தான ...... தனதான”             என்னும் சந்தம்.




பெரியவா சரணம். 


......... இன்றைய பாடல் .........



மதியொடு மடந்தை சூடி, விதியரி அயன்று போக

   தழலுரு விரித்த  தேவர்…..பெருமானே

கடலதைக் கடைந்த போது, பெருகிய விடத்தை வாரி

   அமுதென விழுங்கி  க்ஷேமம் அருள்வோனே

கதியென சிறந்த தூய பதமதை அடைந்த பாலன்

     நலமுடன் உவந்து வாழ……..அருள்தேவே

மலையினை எடுத்து கோப ரனைவரும்  வியக்க வான

     மழையினைத் தடுத்த வேதப் …..பொருளோனே

கொடுவினை தொடர்ந்து ஏக, மதியது மயங்கி மோக

   மயலிடை உழன்று வாட….…அதிமூட

இருளது கிடந்து பாடு படுமொரு சிதைந்த ஆவி

   அடுதுய ரடர்ந்து வீழ….விடலாமோ?

முகமல ரமிழ்தை வாரிப், பருகிட உயர்ந்த சீல

     அருகதை அளித்து சேவை ……தருவாயே

பதமல ரடைந்து ஞான ஒளியது விரிக்கு மோன

    சுகமதி லமிழ்ந்து வாழ…அருள்வாயே


11.09.2017 :  அந்தகனு மோடி வந்திடும கால

இன்று கிருத்திகை. கிருத்திகை தோறும், அந்த குருபரனேயான பெரியவாள் மேலே அந்தக் குருபரன் மேல் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழின் ஒரு சந்தத்திலே ஒரு பாடல் புனைவது, இன்றும், அவர் அருளாலே நிகழ்ந்திருக்கிறது.

இன்றைய பாடல்,

“அஞ்சுவித பூத முங்கரண நாலு
     மந்திபகல் யாது ...... மறியாத

என்னும் திருப்புகழின் சந்தத்திலே அமைந்திருக்கிறது.

தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான”             என்னும் சந்தம்.

பெரியவா சரணம்.




அந்தகனு மோடி வந்திடும கால
    அந்தமது மேகி அழிவேனோ

தஞ்சமென நாடி உந்தனது பாத
    கஞ்சமதை ஓடி…அடைவேனோ

பந்தமது நீத்து உன்னையுயிர் சேர்த்து
    சந்ததமு மாக நிறைவேனோ

கஞ்சியினி லேகு மஞ்சுநிற மாது
    கஞ்சமலர்ப் பாத முறைவோனே

இந்துதனை சூடி நஞ்சுதனை வாரி
    உண்ணுகிற தேவர் தலைவோனே!

செந்தமிழில் ஞான இன்பஅமு தூட்டி
    நெஞ்சமதில் வாழு மிறையோனே!

செந்திலிள நாத னின்பவடி வான
    சுந்தரவி னோதப் பெருமாளே!

எண்ணுகிற நேர மென்னெதிரெ நேரே
    வந்தருளும் நேயப் பெருமானே!


10.10.2017 :

நேற்று கிருத்திகை. கிருத்திகை தோறும், அந்த குருபரனேயான பெரியவாள் மேலே அந்தக் குருபரன் மேல் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழின் ஒரு சந்தத்திலே ஒரு பாடல் புனைவது, இன்றும், அவர் அருளாலே நிகழ்ந்திருக்கிறது.

இன்றைய பாடல்,
மூல மந்திர மோத லிங்கிலை
யீவ திங்கிலை நேய மிங்கிலை
மோன மிங்கிலை ஞான மிங்கிலை ...... மடவார்கள்
என்னும் திருப்புகழின் சந்தத்திலே அமைந்திருக்கிறது.

தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன ...... தனதான” என்னும் சந்தம்.

பெரியவா சரணம்.



......... இன்றைய பாடல் .........


ஞான சங்கர னாதி நற்குரு
பாத பங்கஜ மோது நல்வினை
ஏது இல்மிக மூட மட்டியெ…. னிலைமாற

கால னென்றொரு பாத கன்வரு
நேர முன்நினை வோடு உன்பத
மேகி நின்னரு ளேழை அன்பனும் பெறுவேனோ

நாத மும்சது ரான மந்திர
வேத மும்தவ யோக சித்தியு
மான உன்ஜப மோடு உன்னிடம் …வருவேனோ

தீது அன்றிவெ ரேது மல்லது
பாத கம்புரி பாவி என்றனை
மாத வன்னுரு ஆக வந்தனை…..பரிவாயோ

நால தும்பொரு ளான சுந்தர
ஞால மும்தின மோது பங்கய
பாத மும்நித மோது மன்னிலை….தருவாயோ?

வேல வன்சிவ காமி நற்றவ
பால கன்தவ ரூப முன்றனை
நாள தும்மன தேவி தைத்திட….அருள்வாயோ?

மால வன்மரு கோனை உத்தமி
சேய னைப்பெரு மானை இப்புவி
வாழ வந்தபி ரானை புந்தியி….லிடுவேனோ?

நாக கங்கண நாய கன்உட
னேகு சக்திம யூர கந்தனை
தீன ருக்கருள் ஞான வெற்பினை….அடைவேனோ?


05.11.2017 : கிருத்திகை

ஒவ்வொரு கிருத்திகை நாளிலும், அந்தக் குமரனேயான பெரியவாளை 

ஒரு க்ஷணமாயினும் நினைத்து, அந்தக் குமரனுக்குப் பிடித்தமான 

திருப்புகழ் சந்தத்திலே, “பாடல்” என்ற பெயரில் ஒன்றை வரைவது, 

இந்தக் கிருத்திகை நன்னாளிலும், பெரியவா கருணையில் 

நடந்திருக்கிறது.



காவி யுடுத்தும் ... தாழ்சடை வைத்தும் என்ற பாடலின்

தான தனத்தம் தான தனத்தம்
     
தான தனத்தம் ...... தனதான     என்ற சந்தத்தில், இன்றைய பாடல் 

அமைந்திருக்கிறது. 



பெரியவா சரணம்.




பாவி மனத்தும் தேடி நிலைக்கும்

   தேவ பதத்தில் …நிறைவேனோ?

ஆடி அடங்கும் நாளி லுறங்கும்

  போது மயக்கம் …..தெளிவேனோ?

 பாச மயக்கம் வேரை அறுக்கும்

   பாத மலர்கள்…பெறுவேனோ?

பாரி லிடர்கள் தேடி எரிக்கும்

   ஞானி பதத்தில் ….கிடவேனோ?


காவி உடுத்தும் வாணி உனக்கும்

    ஜீவனை தத்தம் …தருவேனோ?

வாதனை முற்றும் தூர அடிக்கும்

 வாமப தத்தைப் …பிடியேனோ?

போதனை கற்கும் சாதனை அற்றும்

  தாளது பற்றப்….பெறுவேனோ?

ஆதவ னுந்தன் ஆதர வுற்றென்


  கூமதி சித்தம் …..அறுவேனோ?




02.12.2017 : கார்த்திகை தீபத் திருநாள் :

ஒவ்வொரு கிருத்திகை அன்றும், ஒரு திருப்புகழின் சந்தத்தில் அந்த முத்துக்குமரனேயான பெரியவாளின் மீது ஒரு பாடல் பாடுவது, இன்றும், அவர் அருளாலே இனிதே நடக்கிறது.

இன்றைய பாடல்,

வசனமிக வேற்றி ...... மறவாதே
மனதுதுய ராற்றி ...... லுழலாதே

என்ற,

தனதனன தாத்த ...... தனதான
தனதனன தாத்த ...... தனதான

சந்தத்தில் அமைந்திருக்கிறது.

சிறிய அழகான பாடல். திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் தமது உரையை முடிக்கும் போது சில சமயங்களில் இந்தப் பாடலைப் பாடியும் முடித்திருக்கிறார்கள் (பல உரைகளிலே “உருவாய் அருவாய் உளதாய் இலதாய்”…என்ற கந்தர் அனுபூதிப் பாடலைப் பாடி முடிப்பது அனைவரும் அறிந்த ஒன்றே)



இந்த சந்தத்தில் அமைந்த இன்றைய பாடல் இதோ:

பதகமல வீட்டை…நிறைவாக
எனதிதய மேற்ற…அருள்வாயே

மதிமுழுதி லேற்றி….உணர்வாலே
சதமுமுனை போற்ற…அருள்வாயே

விசனமிக வாழ்வு….முடிவாக
துயரமிகு கூற்று …வருவானே

அசடனெனை காக்க….வருவாயே
கயிலைமலை வீற்ற …..பெருமானே



30.12.2017 : கிருத்திகை :

ஒவ்வொரு கிருத்திகை அன்றும், ஒரு திருப்புகழின் சந்தத்தில் அந்த முத்துக்குமரனேயான பெரியவாளின் மீது ஒரு பாடல் பாடுவது, இன்றும், அவர் அருளாலே இனிதே நடக்கிறது.


இன்றைய பாடல்,


வரதா மணிநீ ...... யெனவோரில்
     வருகா தெதுதா ...... னதில்வாரா


என்ற பாடலின் சந்தமான
தனனா தனனா ...... தனதான      தனனா தனனா ...... தனதான


என்ற சந்தத்தில் அமைந்திருக்கிறது.
......... பாடல் .........
குஹனா கியமா…மறையோனே
கிருபா நிதியே….வருவாயே 
மறவா துனைநான் ….தினமோதும்
ஒருமா வரமே….தருவாயே 
பெருமா யையினால் ….அழியாது
கருவா தனையால்….. உழலாது 
அறுமோ சகரால்…மடியாது

இருதா ளிணைதான்….தருவாயே


26.01.2018 : கிருத்திகை :

ஒவ்வொரு கிருத்திகை அன்றும், ஒரு திருப்புகழின் சந்தத்தில் அந்த முத்துக்குமரனேயான பெரியவாளின் மீது ஒரு பாடல் பாடுவது, இன்றும், அவர் அருளாலே இனிதே நடக்கிறது.


இன்றைய பாடல்,

"காலனிடத் ...... தணுகாதே; காசினியிற் ...... பிறவாதே" என்ற பாடலின் சந்தமான

தான தனத் ...... தனதான என்ற சந்தத்தில் அமைந்துள்ளது.
......... பாடல் .........

வேத மறைப் பொருளோனை
மாத வனைப் பெரியோனை
பாத மலர் நினையாதே
பாத கமும் ஒழியாதே 
கால னவன் பிடியாது
தார ணியில் பிறவாது
மூல அருட் பெருஞான
சீல மதும் தருவாயே



23.02.2018 : கிருத்திகை நன்னாள்:


ஒவ்வொரு கிருத்திகை அன்றும், ஒரு திருப்புகழின் சந்தத்தில் அந்த முத்துக்குமரனேயான பெரியவாளின் மீது ஒரு பாடல் பாடுவது, இன்றும், அவர் அருளாலே இனிதே நடக்கிறது.



இன்றைய பாடல்,


இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
     இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே

என்ற பாடலின் சந்தமான

"தனதனத் தனனத் ...... தனதான"

என்ற சந்தத்தில் அமைந்துள்ளது.
......... பாடல் .........




அறுவகைக் கொடியர்…..அவராலே

கருபுகுன் திழியும்….உடலாலே

மிகுபெருன் துயரம்…அடைவேனே

குருகுஹன் அருளைப் …..பெறுவேனோ?


பெருபயம் விளையும்…..ஒருபோது
கிருபையும் புரியத் தடையாமோ?

திருமுகம் பரியும் ஒருவேளை
அதுவரும் தருணம் எதுதானோ?


22.03.2018: கிருத்திகை


ஒவ்வொரு கிருத்திகை நாளிலும், அந்த முருகப் பெருமானேயான பெரியவாளின் மீது, அருணகிரினாதரின் அற்புதமான திருப்புகழினோர் சந்தத்தில் ஒரு பாடல் பாட விழைவது, இன்றும் பெரியவாளின் அருளால் நடந்திருக்கிறது.


அருணகிரியாரின்

“அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட ...... அவளோடன்

றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள ...... மவையாட”


என்று தொடங்கும் இந்தப் பாடல், அடியேனுக்கு மிகவும் பிடித்தமான திருப்புகழ் பாடல்களில் ஒன்று. மன்னன் பிரபுடதேவமகாராஜா, “எனக்கு முருகனைக் காட்டு” என்று அருணகிரியாரை வேண்ட,, அருணகிரிநாதர் இந்தப் பாடலைப் பாடினார் என்று சொல்வார்கள்.


“தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான”


என்ற மெட்டிலே வரும் வரும் இந்தப் பாடலைப் பெரியவாளின் திருவடிகளுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.



......... பாடல் .........




கவலை சோக நோயாலிங் கழியும் காய மீதூறு
அவல ஆசை ஓயாது….அழிவேனோ? (1)


உனது பாதம் காணாது, உனது வாக்கு கேளாது
எனது வாழ்வு வீணாக....விடுவாயோ? (2)


குமையு மோக காமாதி, சினமதோடு பேராசை,
பிணிக ளோடு வாடாமல்...அருள்வாயே (3)


கருணையாறு பாயாத, தரிசதாக வீணாக
உளமு மாறிப் போகாது...அருள்வாயே (4)


உரிமை யோடு பாமாலை, அடிமை நானுன் தோள்சூட
தருண மீது ஓடோடி....வருவாயே (5)


பதும பாதமே நாட, அமுத நாமமே கூற
மனது மேடை மீதேறி..வருவாயே (6)


உலக மேழும் தான்வாழ, அடியர் வாழ்வு சீராக
பவள மேனி நோகாது ....வருவாயே (7)


அரனு மாகி தாயாகி, அரியுமான தேவாவுன்
பதம தேக ஓராசி....தருவாயே (8)




9.7.18 : கிருத்திகை நாள்

ஒவ்வொரு கிருத்திகை நாளிலும், அந்த முருகப் பெருமானேயான என் பெரியவாளை, ஒரு க்ஷணமாவது நினைத்து, அந்த முருகன் உகக்கும் திருப்புகழின் ஒரு சந்தத்திலே பாடிப் பரவுவது, இந்த கிருத்திகையிலும், பெரியவாளின் கருணையாலே நடந்திருக்கிறது.

‘கற்பார், இராமபிரானையல்லால், மற்றும் கற்பரோ?” என்பார்கள். கற்றால், அந்தக் கல்வி, உயர்ந்த விஷயத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும். அந்தக் கல்வியின் பயனாக, உயர்ந்த விஷயங்களைச் செய்ய வேண்டும்.

ஆனால், கற்ற கல்வியை விற்றுப் பொருளீட்டும் ஒரு வாழ்க்கையாகத்தான் எந்தன் வாழ்க்கை அமைந்திருக்கிறது. இந்த உள்ளம், பெரியவாளியே முற்றுமாகப் பற்றும் நாள் எந்த நாளோ?

பித்தன் போன்று, எந்த நேரமும் சித்தனாம் அந்தப் பெரியவாளின் பதத்தையே நினைந்திருக்கும் அந்த நாள் எந்த நாளோ?

பெரியவாளின் அன்பர்களின் அண்மையில் இருந்து, அவர்களின் ஆசியினாலே சற்றேனும் பக்தி கிடைக்கப் பெற்று இருக்கும் நாள் எந்த நாளோ?

“எந்தன்”, “என்னை”, “நான்” என்னும் எண்ணங்கள் அற்றுப் போய் எண்ணம் எல்லாம் அந்தப் பெரியவாளே நிறைய நிறைவாய் இருக்கும் நாள் எந்த நாளோ?

அந்தகன் வந்து பிடித்திழுத்து இறுக்கும் அந்தக் கணத்தில் ஐயா, உன்னை சற்றேனும் நினைக்கும் வரம் எனக்குத் தருவாயோ?



இன்றைய பாடல்,

தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
தத்த தன்ன தய்ய ...... தனதான

என்ற சந்தத்திலே,

“அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி
அத்தை நண்ணு செல்வ ...... ருடனாகி”

என்ற அழகிய திருப்புகழ் பாடலின் அடியொற்றி அமைந்திருக்கிறது.

பெரியவா சரணம்.
***************************************************************************************************

கற்ற கல்வி விற்று சொத்து பற்று முள்ள
மிற்று உன்னை வந்து அடையேனோ
சித்த னென்ன கஞ்சி முக்த நென்ன எந்தன்
அத்த நென்ன வுன்னை அறியேனோ

பித்த னென்று என்னை சுற்றம் நின்று சொல்ல
உற்று உன்னை என்றும் பணியேனோ

இட்ட தெய்வ முந்தன் சிட்ட ரண்மை கொண்டு
பட்ட பந்தம் விட்டுத் தொலையேனோ

சித்தம் விட்டொ ழித்த சித்தர் வந்து பற்றும்
நித்த னுந்தன் பத்ம பதம்சூடி

குற்ற முற்ற ழித்து பற்று முற்ற ழித்து
உன்னை உள்ளி ருத்தப் பெறுவேனோ

எந்த னென்னை யென்னு மெண்ண முற்றொ ழித்து
சிந்தை முற்று முன்னை நிறையேனோ

அந்த கன்பி டித்தி ழுக்கு மக்க ணத்தில்
எந்தை உன்னை சற்று… நினையேனோ




29.09.2018 : கிருத்திகை நாள்
ஒவ்வொரு கிருத்திகை தினத்திலும், அருணகிரியாரின் ஒரு அழகான சந்தத்திலே, அந்த முருகனேயான என் உம்மாச்சித் தாத்தாவின்மீது, ஒரு பாடல் புனை முற்படுவது, பெரியவாளின் அனுக்ரஹத்தில் இன்றும் நடந்திருக்கிறது.

“சந்தனங் கலந்த குங்கு மம்புனைந் தணிந்த கொங்கை
     சந்திரந் ததும்ப சைந்து ...... தெருவூடே”

என்ற திருப்புகழ்ப் பாடலின் அழகிய

"தந்தனந் தனந்த தந்த, தந்தனந் தனந்த தந்த
     தந்தனந் தனந்த தந்த ...... தனதான"

என்னும் சந்த்திலே, இந்தப் பாடல் உருக்கொண்டிருக்கிறது. 

பெரியவா சரணம்.



***********************************************************************************************
உன்னரும் பதம்ப ணிந்து என்மனம் உனில்ப தித்து
சொல்லரும் அருள்சு கத்தி .....லமிழேனோ?

சந்திரன் சிரம்ப டர்ந்த சுந்தரன் பதம்ப ணிந்து
மந்திரம் பெயர்து தித்து.....உருகேனோ?

நல்லறம் விரும்பி வந்து சொல்லறம் அதையு ணர்ந்து
என்னுளில் உனையு ணர்ந்து....கிடவேனோ?

கந்தனிங் கிரண்டு வஞ்சி விட்டுவன் திருக்கு மன்பு
எந்தையுன் முகத்த மிழ்தை....பருகேனோ?

எங்கிலும் நிறைந்த உன்னை என்னிலும் நிறைத்து ணர்ந்து
பொங்கிடும் உணர்வி லென்னை....அழியேனோ?

சந்ததம் தமிழ்ப தத்தி லின்பமும் கொழிக்க உன்னை
சந்தமும் மிகுக்க சிந்தை ....நிறையேனோ?

முந்திடும் வினைக்க லக்க நொந்து என்உளம்க லங்க
இந்துநின் சிரம்வி ளங்க...அருள்வாயோ?

அந்தகன் வரும்தி னத்தி லுன்கரம் கொடுத்து என்னை

உன்னிடம் எடுத்த ணைக்க....வருவாயோ?


23.11.2018 : பெரிய கார்த்திகைத் திருநாள் : அண்ணாமலையார் தீபம்

ஒவ்வொரு கிருத்திகை நாளிலும், அந்த முருகப்பெருமான் மனம் கவர்ந்த திருப்புகழின் ஒரு சந்தத்திலே, அந்த முருகப்பெருமானேயான நமது உம்மாச்சித் தாத்தாவின் மீது ஒரு பாடல் கவனம் செய்ய முல்வது, அந்தப் பெரியவாளின் கருணையினால், கார்த்திகைப் பண்டிகையான  இன்றும் நிகழ்ந்திருக்கிறது. 

"சிவமா துடனே அநுபோ கமதாய்
     சிவஞா னமுதே ...... பசியாறி" 

என்று தொடங்கும் 

"தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான"

......... என்ற சந்தத்தில் அமைந்த பாடல் .........

----------------------------------------------------------------



தவவே டமதே உருவா யழகாய்
தவபூ மியிலே .............நடைபோட

கயிலா யமதே விடுயோ கியனே!
கடிகாஞ் சியதே......உறைவோனே!

சுடுகா டதிலே நடமா டிடுமோர்
மதிசூ டிசதா ....சிவதேவா!

நரவே டமதே புனைசூ டியெ பூ
நடைபோ டுருவே...முருகோனே!

மிகுகோ பமதே வெகுஆசை யதே
பெருமா யையினோ ...டுடனேகி

அதிமோ கமதால் சதிகா மமதால்
விதியா லடியேன்......மிகவாட

மனமே டையிலே நிலையா யுனையே
நினையா வினையேன் ....எனையாள

உடனே வருவா யருளே தருவாய்

எனதா ருயிரே! குருநாதா!



No comments:

Post a Comment