Thursday, January 3, 2019

03.01.2019 : அனுஷ நன்னாள்


03.01.2019 : அனுஷ நன்னாள்

பெரியவாளின் இந்த அனுஷ நன்னாளிலே, பெரியவாளிடம் எந்த மாதிரியான பக்தி பாவம் எனக்கு இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

பக்தி இருக்கிறதா என்பது முதல் கேள்வி. பக்தியெல்லாம் ஒன்றும் இல்லை என்பதுதான் honest ஆன பதில். குருவாக, தெய்வமாகக் கொண்டாடப்படும் அந்தப் பெரியவாள் என் கண்களுக்கு, அகத்தில் இருக்கு ஒரு அன்பான தாத்தாதான்.

தாத்தாவிடம், பேரனுக்கு என்ன இருக்கும்? பக்தியா இருக்கும்? இல்லை. பாசம் இருக்கும். சமயத்தில் - especially - தப்பு பண்ணும்போதெல்லாம் - பயமும் இருக்கும்.

தாத்தா என்றால், அந்தப் பேரனிடம் அன்பு காட்டவேண்டாமோ? அன்பு காட்டுவது என்றால், பேரக் குழந்தையை மடியில் போட்டு அந்தத் தாத்தா சீராட்ட வேண்டாமோ? அப்படியில்லை என்றால் அது என்ன தாத்தா?

பேரக்குழந்தை, விஷமம் பண்ணத்தான் பண்ணும். அதுபாட்டுக்கும் ஓடும். விளையாடும். அடிபட்டால், தூக்கம் வந்தால், பசியெடுத்தால்தான் தாத்தா -பாட்டியிடம் வரும்.

ஐயா, பெரியவாளே! இந்தக் குழந்தையும் அப்படித்தான்....

எத்தனை விஷமம் நான் செய்தாலும், எத்தனை தப்பு பண்ணினாலும், எத்தனை உன்னிடமிருந்து விலகி ஓடினாலும், என்னை இழுத்தணைத்து, உன் மடிமீதிட்டு, அன்பு காட்டி அருள்வாய் ஐயா.....

பெரியவா சரணம்.





"வா" வென்றழைத்தணைத்துன் மடிதாராயெந்தாய் நீயே!

உனையெண்ணி உருகிநாளும் உன்நாமம் சொல்லிச் சொல்லி
                உன்பதம் மேவுமுந்தன் அடியார்கள் இருக்க இங்கே
உனையெந்தக் கணமும் நினையா எனக்குமுன் கருணை காட்டி
                 உன்னடியாரோடிங்குன் பொன்னடி போற்ற வைத்தாய்!
அனைத்துலகுக்கும் தந்தை தாயுமாய் ஆன சோதீ!
                  முவத்து முக்கோடித் தேவர் பதம் பணி ஆதி மூலா!
எனையுமுன் சேயாய்க் கொண்டு, என் குற்றமெல்லாம் நீக்கி                
                  "வா" வென்றழைத்தணைத்துன் மடிதாராயெந்தாய் நீயே!  (1)


குணம் ஒன்றுமில்லேன்; குற்றம் மட்டுமே நிறைந்த நாயேன்
                 இனம் என்றுன் தொண்டர் கூட்டம் சேர்ந்திடா புன்மைப் பேயேன்
பணம் போகம் வாழ்வாய்க் கொண்டுன் பதமென்றும் நினையாத் தீயேன்
                  என்னையும் உந்தன் பாதம் பரவுமோர் பேறு தந்தாய்!
பிணமாக இந்த வாழ்வு முடியுமுன் கருணை கூர்ந்து
                   உன்னைப் பாடிடுமோரந்த வேலையே வாழ்வாய்ச் செய்வாய்!
கண நேரம் என்முன் வாராய் ! காட்சியே தந்து காவாய்!
                     "வா" வென்றழைத்தணைத்துன் மடிதாராயெந்தாய் நீயே!  (2)            

மனமென்னும் பேயால் நானும் படும், பாடறிவாய் நீயும்!
                    உனையெண்ணி உருகா நெஞ்சும், கண்டுநீர் சொரியாக் கண்ணும்
தினமுன்னைப் பாடா வாயும், உன்பதம் பணியா உடலும்
                     கொண்டுவாழ்ப் பதராமெனையும் பதம்தந்து காக்கும் தேவா!
புனம் காத்த வள்ளிமாதின் கரம் கொண்ட குமர வேலா!
                      அலைகடல் நஞ்சை உண்டு அமரரைக் காத்த சீலா!
சினமேதும் இன்றி இந்தச் சேயையும் காக்க வாராய்!
                     "வா" வென்றழைத்தணைத்துன் மடிதாராயெந்தாய் நீயே!  (3) 


காமத்தீ வாட்ட; கோபக் கனலெந்தன் உயிரை வாட்ட
                    ஆதரவு ஏதும் இன்றி ஐயா,  நான் அலைந்த காதை
காமனைத் தீயில் சுட்ட நீ நன்றாயறிந்த ஒன்றே!
                    இதழ்க்கடை சிரிப்பால் அந்த முப்புரம் சுட்ட தேவா!
சாமமே சொன்ன வேந்தன் அவனுக்கும் அருளும் வேதா!
                     காஞ்சி மா நகரில் வாழும் கருணை மாக் கடலே உமையாள்
வாமபாகமதாய்க் கொண்டோய்! கருணை கூர்ந்தருளே தாராய்!
                    "வா" வென்றழைத்தணைத்துன் மடிதாராயெந்தாய் நீயே!  (4) 
                      

பக்தி ஒன்றில்லேன் உன்மேல்; பக்தன்போல் நடித்து நின்றேன்!
                    உன் நாமம் சொல்லக்கூட  அருகதை ஏதும் இல்லேன்!
துக்கமே நிறைந்த வாழ்வை நித்தியம் என்றே கொண்டேன்!
                    திருப்புகழ் செப்பென்றருண கிரிக்கன்றுரைத்த பாலா!                     
முக்குணம் நீக்கி வந்த முழுமுதற் பொருளே! வேலா!
                     திக்குகள் எல்லாம் போற்றும் செந்தில்வாழ் அசுரர் காலா!
சக்தி ஆயுதமே நீக்கி வந்தமால் மருகா! என்னை
                  "வா" வென்றழைத்தணைத்துன் மடிதாராயெந்தாய் நீயே!  (5) 

No comments:

Post a Comment