Monday, August 16, 2021

எப்பணி செய்யும்போதும்.....16.8.21 : அனுஷ தினம்

எப்பணி செய்யும்போதும் எங்கு நான் இருக்கும்போதும்

தப்பாது உந்தன் எண்ணம் எனக்குளே இருக்கச் செய்வாய்


இரவு நான் உறங்கும்போதும், மறுபகல் உழலும்போதும்

அரவணி நாதா! உன்தன் நாமம் உள் ஓடச் செய்வாய்


நல்லதாம் நினைவேயின்றி,  தீமையே செய்யும்போதும்

மெல்லவுன் முகமும் இழையாய் என்னுளே தோன்றச் செய்வாய்

 

கண்டதைத் தின்று, பார்த்து, பேசி நான்  நின்றபோதும்

பண்டமிழ்க் கூத்தா! எனையுன் பார்வையில் இருத்திக் கொள்வாய்

 

காமத்தில் அமிழ்ந்து உந்தன் நாமம் நான் மறக்கும்போதும்

காமனை எரித்த கண்ணா! என்னை நீ காத்து நிற்பாய்


எக்குறை நானும் செய்து எவ்விதம் பிதற்றும்போதும்,

அக்குறை, பிதற்றலெல்லாம் உன்பூஜையாக்கிக் கொள்வாய்


என்னையுன் பக்கம் ஈர்க்க என்ன நீ செய்தபோதும்

உன்னைவிட்டோடப் பார்க்கும் அற்பன் நான்; பக்கம் நிற்பாய்!

 

காலமே முடிந்து காலன் கொள்ளவே வந்தபோதும்

காலனை முடித்த காலா! எனையுந்தன் பதமே கொள்வாய்

 



 

 

 

 

 


 




Friday, August 13, 2021

வெண்மதிக் கொழுந்தொன்று சூடும் - 14.8.21

வெண்மதிக் கொழுந்தொன்று சூடும்

தண்புனல் சடைகொண்டு ஆடும்

கண்நுதல் இறைவந்து இந்த

மண்ணதில் நடை பயின்றானே!

 

கொன்றை அம்மலர் ஒன்று சூடும்

மன்றதில் சதிர் ஒன்று ஆடும்

என் இறை ஜகம் நன்கு வாழ

நன்னகர் காஞ்சி வந்தானே!

 

மிடறதில் கறைகொண்ட பெம்மான் 

சுடரெனப் பொலிகின்ற எம்மான்

தடமுலைத் தையலும் தானாய்

இடர் களைந்திருள் நீக்கினானே!

 

புரம் மூன்றெரித்திட்ட தேவன் 

சிரமொன்று கொய்ந்திட்ட நாதன்

வரம்போல மனிதனாய் மண்ணில்

அரனவன் இறங்கி வந்தானே!


 

 





 

 

 

 


உனைக் கண்டு உருகாத......சிவரஞ்சனி 13.08.2021

உனைக் கண்டு உருகாத......சிவரஞ்சனி 13.08.2021

பல்லவி: 

 உனைக்கண்டு உருகாத, நெகிழாத மனம் கொண்ட 

எனைப்பாராய் என் ஐயனே! 

 

அனுபல்லவி: 

கருணைக் கடல்வெள்ளம் பெருகும் உலகெங்கும்! 

பருகிக் களிக்காதென் மூட மட நெஞ்சம்! 

 

சரணம்: 

தருணம் ஈதென்றுன் சரண மலர்பற்றி

வருவார் அடியாரும்; வினையேன் விழையேனே! 

 

குருவின் மலர்ப்பாத பெருமை அறியாத, 

கருமை மனத்தேனென் சிறுமை பொறுத்தென்னைக் 

 

கொஞ்சம் பாராயோ? அருளும் தாராயோ? 

கொஞ்சும் தாயாய் நீ இங்கே வாராயோ?