எப்பணி செய்யும்போதும் எங்கு நான் இருக்கும்போதும்
தப்பாது உந்தன் எண்ணம் எனக்குளே இருக்கச் செய்வாய்
இரவு நான் உறங்கும்போதும், மறுபகல் உழலும்போதும்
அரவணி நாதா! உன்தன் நாமம் உள் ஓடச் செய்வாய்
நல்லதாம் நினைவேயின்றி, தீமையே செய்யும்போதும்
மெல்லவுன் முகமும் இழையாய் என்னுளே தோன்றச் செய்வாய்
கண்டதைத் தின்று, பார்த்து, பேசி நான் நின்றபோதும்
பண்டமிழ்க் கூத்தா! எனையுன் பார்வையில் இருத்திக் கொள்வாய்
காமத்தில் அமிழ்ந்து உந்தன் நாமம் நான் மறக்கும்போதும்
காமனை எரித்த கண்ணா! என்னை நீ காத்து நிற்பாய்
எக்குறை நானும் செய்து எவ்விதம் பிதற்றும்போதும்,
அக்குறை, பிதற்றலெல்லாம் உன்பூஜையாக்கிக் கொள்வாய்
என்னையுன் பக்கம் ஈர்க்க என்ன நீ செய்தபோதும்
உன்னைவிட்டோடப் பார்க்கும் அற்பன் நான்; பக்கம் நிற்பாய்!
காலமே முடிந்து காலன் கொள்ளவே வந்தபோதும்
காலனை முடித்த காலா! எனையுந்தன் பதமே கொள்வாய்
No comments:
Post a Comment