Friday, February 3, 2023

ஆஞ்சனேயன் எனும் அற்புதன் : ஹம்ஸா நந்தி : 4/2/23

 பல்லவி:

ஆஞ்சனேயன் எனும் அற்புதன் வரதன்
வாஞ்சையோடு துயர் தீர்த்திடும் அழகன்

அனுபல்லவி
பாடிக் கேட்கும் வரம் யாவையும் தருவான்
நாடிடும் அடியவர்க்குறு துணையாவான்

சரணம்
சுந்தரன் மாருதி ராம நாமமெனும்
மந்திரம் கொண்டு தாய் துன்பத்தைத் தீர்த்தான்
வந்தனை செய்திடும் அடியவர் வாழ்வினில்
சந்ததம் நன்னலம் பொங்கிடச் செய்வான்



சுந்தர ஆஞ்சனேய ஸ்வாமிக்கு சமர்ப்பணம்.

Friday, July 8, 2022

தரிசனம் கண்டேன்

 ராகம்: ஆனந்த பைரவி 


பல்லவி
தரிசனம் கண்டேன் பாத தரிசனம் கண்டேன்
தரிசனன் கண்டேன் ஐயன் தரிசனம் கண்டேன்
அனுபல்லவி
தரிசனம் கண்டேன் கருணை முகமலரை
தரிசனம் கண்டேன் வரம் அருள் கரமலரை
சரணம்
தரிசனம் கண்டேன் காவி உடை பொலிச் சுடரை
தரிசனம் கண்டேன் ஜோதி வடிவாம் மெய்ப் பொருளை
தரிசனம் கண்டேன் வினை கடிந்தருட்கடலை
தரிசனம் கண்டேன் எந்தன் மனம் உறை இறையை

Monday, June 13, 2022

பெரியவா மஹா அனுஷத் திருநாளை ஒட்டி எழுதிய பாடல் : 14/6/22

 ராகம்: ஹிந்தோளம்

பல்லவி:
கயிலை நாதனே மயிலை வாசனே
காபாலியே காஞ்சி காமகோடீஸ்வரனே
அனுபல்லவி
கற்பகம் உடனுறை அற்புதனே காஞ்சி
நற்பதி உறைந்திடும் சந்திரசேகரனே
சரணம்
பற்பல அடியாருன் பொற்பதம் பணிந்திடுவார்
அற்பனும் பணிய வந்தேன் காத்தருள்வாய் ஐயனே

Monday, August 16, 2021

எப்பணி செய்யும்போதும்.....16.8.21 : அனுஷ தினம்

எப்பணி செய்யும்போதும் எங்கு நான் இருக்கும்போதும்

தப்பாது உந்தன் எண்ணம் எனக்குளே இருக்கச் செய்வாய்


இரவு நான் உறங்கும்போதும், மறுபகல் உழலும்போதும்

அரவணி நாதா! உன்தன் நாமம் உள் ஓடச் செய்வாய்


நல்லதாம் நினைவேயின்றி,  தீமையே செய்யும்போதும்

மெல்லவுன் முகமும் இழையாய் என்னுளே தோன்றச் செய்வாய்

 

கண்டதைத் தின்று, பார்த்து, பேசி நான்  நின்றபோதும்

பண்டமிழ்க் கூத்தா! எனையுன் பார்வையில் இருத்திக் கொள்வாய்

 

காமத்தில் அமிழ்ந்து உந்தன் நாமம் நான் மறக்கும்போதும்

காமனை எரித்த கண்ணா! என்னை நீ காத்து நிற்பாய்


எக்குறை நானும் செய்து எவ்விதம் பிதற்றும்போதும்,

அக்குறை, பிதற்றலெல்லாம் உன்பூஜையாக்கிக் கொள்வாய்


என்னையுன் பக்கம் ஈர்க்க என்ன நீ செய்தபோதும்

உன்னைவிட்டோடப் பார்க்கும் அற்பன் நான்; பக்கம் நிற்பாய்!

 

காலமே முடிந்து காலன் கொள்ளவே வந்தபோதும்

காலனை முடித்த காலா! எனையுந்தன் பதமே கொள்வாய்

 



 

 

 

 

 


 




Friday, August 13, 2021

வெண்மதிக் கொழுந்தொன்று சூடும் - 14.8.21

வெண்மதிக் கொழுந்தொன்று சூடும்

தண்புனல் சடைகொண்டு ஆடும்

கண்நுதல் இறைவந்து இந்த

மண்ணதில் நடை பயின்றானே!

 

கொன்றை அம்மலர் ஒன்று சூடும்

மன்றதில் சதிர் ஒன்று ஆடும்

என் இறை ஜகம் நன்கு வாழ

நன்னகர் காஞ்சி வந்தானே!

 

மிடறதில் கறைகொண்ட பெம்மான் 

சுடரெனப் பொலிகின்ற எம்மான்

தடமுலைத் தையலும் தானாய்

இடர் களைந்திருள் நீக்கினானே!

 

புரம் மூன்றெரித்திட்ட தேவன் 

சிரமொன்று கொய்ந்திட்ட நாதன்

வரம்போல மனிதனாய் மண்ணில்

அரனவன் இறங்கி வந்தானே!


 

 





 

 

 

 


உனைக் கண்டு உருகாத......சிவரஞ்சனி 13.08.2021

உனைக் கண்டு உருகாத......சிவரஞ்சனி 13.08.2021

பல்லவி: 

 உனைக்கண்டு உருகாத, நெகிழாத மனம் கொண்ட 

எனைப்பாராய் என் ஐயனே! 

 

அனுபல்லவி: 

கருணைக் கடல்வெள்ளம் பெருகும் உலகெங்கும்! 

பருகிக் களிக்காதென் மூட மட நெஞ்சம்! 

 

சரணம்: 

தருணம் ஈதென்றுன் சரண மலர்பற்றி

வருவார் அடியாரும்; வினையேன் விழையேனே! 

 

குருவின் மலர்ப்பாத பெருமை அறியாத, 

கருமை மனத்தேனென் சிறுமை பொறுத்தென்னைக் 

 

கொஞ்சம் பாராயோ? அருளும் தாராயோ? 

கொஞ்சும் தாயாய் நீ இங்கே வாராயோ?

Sunday, July 26, 2020

Guruvaram songs

8.8.19

சக்தி நாயகன் நீ என்று அறிந்திடும் அறிவு கேட்டேன்
பக்தியால் உருகி உன்னைப் பற்றிடும் நெஞ்சம் கேட்டேன்
எக்கதி ஏதும் இல்லேன்; உன்மலர்த் தாளே இங்கு
திக்கெனக்கென்று வந்தேன் பதம்சதம் அருள்வாயப்பா
 
15.8.19

மடையிலி வெள்ளம் போலக் கருணையே அளிக்கும் பாதம்
குடையென என் சிரத்தில் கொள்ளவே ஓர் பேராசை!
கடையனென் மடியில் உந்தன் பதமலர் வைத்து எங்கும்
நடையாக நடந்த பாதம் பிடிக்கவே ஓர் பேராசை!

26.12.19

குருவருள் துணைவரின் கொடியவை தொலைந்திடும்
குருவருள் அணைதரின் காலனும் கைதொழும்
குருவருள் உடன்வரின் வினையெலாம் வற்றிடும்
குருவருள் ஒன்றினால் பிறவியும் போகுமே

2.1.2020

குவளையாம் கண்கள் கண்டேன்; கடல்போலக் கருணை கண்டேன்
பவளம்போல் மேனி கண்டேன்; பவவினை அழியக் கண்டேன்
துவராடை இடையில் கண்டேன்; துயரெலாம் நீங்கக் கண்டேன்
தவராஜன் பாதம் கண்டேன்; வேறெதும் வேண்டா நின்றேன்

9.1.2020:

உன்னையே காணும் பேற்றை, வேறெதும் காணாப் பேற்றை,
உன்னையே நினைக்கும் பேற்றை, வேறேதும் நினையாப் பேற்றை,
உன்னையே எனக்குள் கொள்ளும் அப்பேற்றை மட்டும் என்றும்
உன்னிடம் கேட்டு நின்றேன்; தந்தருள் புரிவாய் ஐயா!

16.1.2020:

விடையது ஏறும் பெம்மான் வடிவமாய் வந்தோன் நாமம்
இடை முதல் ஈறு என்ன எல்லாமாய் ஆனோன் நாமம்
கடையவன் எனக்கும் இங்கே நற்பதம் அளிக்கும் நாமம்
விடையதாம் பவப்பிணிக்கு, பெரியவா என்னும் நாமம்

23.1.2020
பொழிற் சோலை பூத்திருக்கும் பங்கயத்துப் பதமலர்கள்
எழிற் காந்தி சுடரொளியாய் மின்னிடுமம்மேனியொளி
தொழும்கைகள் வாழ்ந்திடவே வாழ்த்திடுமக் கரமலர்கள்
அழுமுன்னே ஓடிவந்து அரவணைக்கும் கருணைமுகம்!


9.7.20
அற்புதத் திருவடி அற்புதன் திருவடி
கற்றவர் தொழுதிடும் கற்பகத் திருவடி
சொற்பதம் கடந்தவன் நற்பத மலரடி
உற்றவர்க்கருளிடும் நற்கதி உய்த்திடும்