Wednesday, December 16, 2015

பெரியவா திருப்பாவை : 1 - 30

17.12.2015

இன்று மார்கழித் திங்கள் முதல் நாள். திருப்பாவையும் திருவெம்பாவையுமாய் அனைவரும் கூடி அந்தப் பெருமாளையும் சிவபெருமானையும் துதிக்கும் நாள்.

இந்த நாளிலே, திருப்பாவை மெட்டிலேயே, பெரியவாளையும் பாட ஆசை.

காலையில் எழுந்து, காஞ்சி நகர் சென்று, பெரியவாளின் பொன்னடி போற்றுவது போல் அமைந்திருப்பதும் பெரியவா கருணையே.

பெரியவா பாவை : 1

மார்கழித் திங்கள், அதிகாலை துயிலெழுந்து
நீராடி இங்குந்தன் நாமமதே செப்பிடுவோம்
சேர்ந்தே உன்னடியார் எல்லோரும் கூடிவந்து
சீர்மேவும் காஞ்சீபுரந்தனையே நாடிடுவோம்
பார்போற்றும் உந்தன் பொன்னடியே போற்றிடுவோம்
தேரேற்றி எம்பெருமான்  உந்தனையே எங்கணுமே
ஊரெல்லாம் கண்டிடவே புறப்பாடு செய்திடுவோம்
தேர்ந்தெம்மை அடியாராய்க் கொண்டிடுவாய் சரண்புகுந்தோம் (1)

18.12.2015
இன்று மார்கழித் திங்கள் இரண்டாம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

வையத்து வாழ்வீர்காள், வாரீரோ காஞ்சிக்கு
ஐயன் அடிமலரை அனுதினமும் அர்ச்சிப்போம்
நெய்யாலும் பாலாலும் அபிஷேகம் செய்திடுவோம்
மையலே நீக்கிடும் அம்மன்னவனைப் பணிந்திடுவோம்
பொய்யுடல் அழிந்திங்கு உயிர் மெய்யை விட்டிடுமுன்
மெய்யுருக மனமுருக அவன் புகழே பாடிடுவோம்
செய்திடும் பணியெல்லாம் அவன் பணியாயாகிடவே
உய்யுமாறெண்ணி அவன்பதமே சரண்புகுவோம் (2)

19.12.2015
இன்று, மார்கழித் திங்கள் மூன்றாம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

ஓங்கி உலகளந்து காத்தருளும் மாதவனும்
பாங்காய் மாதவளைத் தன்னுடலில் கொண்டவனும்
ஏங்கி அழுத நல்லடியவர்க்காய் விண்ணுலகை
நீங்கி மிகப்பரிந்து ஓருருவில் வந்தனரே
ஆங்கோர் காஞ்சி அருள்நிறைசீர்ப் பதிதன்னில்
நாங்களும் வந்தவன் பதமலர்கள் தாம்பற்றித்
தாங்கரும் துயரப் பிறவிப் பிணிக் கொடுமை
தீங்கெலாம் தீர, அவன்பதமே சரண்புகுந்தோம் (3)

20.12.2015
இன்று, மார்கழித் திங்கள் நான்காம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

ஆழி மழைக்கண்ணன் அருளுருவாய் வந்துதித்து
வாழ உலகெல்லாம் வழி செய்த மாமணியை
ஏழுலகும் போற்றும் அப்புண்ணியனை, சங்கரனை
தாழ்சடையும், நீள்முடியும், ஒண்மழுவும் நீக்கியிங்கு
சூழ்கலியை செற்றிடவே நடைநடந்த நாயகனை
தோழியென, மைத்ரியென, அன்புருவாய் நின்றோனை,
வாழியென்று வாழ்த்திடவே சீர்காஞ்சி நகர்செல்வோம்
பாழ்மனமுன் புகலென்று அவன்பதமே சரண்புகுவோம் (4)

21.12.2015
இன்று, மார்கழித் திங்கள் ஐந்தாம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

மாயனை, மனிதனாயிங்கே மாமாயம் செய்தானை,
தூயனை, பாலாற்றங்கரை வந்தமர்ந்தானை,
காயம் கடந்தெங்கும் வியாபித்து நின்றானை,
சேயன் எனையாண்டு மலர்ப்பதமே தந்துவினை
ஓய அருளாசி தந்தானை, காமாக்ஷி
சேயனை, சீர்காஞ்சி நகர் சென்றவன் பெருமை
வாயினால் பாடி, மலர்தூவிக் கைதொழுவோம்
ஆய பயனும் அவன் பதமே! சரண் புகுந்தோம்! (5)

22.12.2015
இன்று, மார்கழித் திங்கள் ஆறாம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

புள்ளும் சிலம்பினகாண்!  எழுந்திங்கே வாரீரோ
வெள்ளிக் கதிரோனும் சீர்காஞ்சி நகர்வந்தான்
அள்ளக் குறையாத அருளமுதம் தருமுனிவன்
வெள்ளமெனக் கருணை பொங்கிடவே வீற்றிருக்க
உள்ளம் எடுத்தவனின் பதமலரில் ஸமர்ப்பித்து
மெள்ள வரும் அழுகை கொண்டிங்குள்ளிருக்கும்
கள்ளம் கபடெல்லாம் நீங்கத் துடைத்தமைதி
கொள்ளச் சென்றிடுவோம், அவன்பதமே சரண்புகுந்தோம் (6)

23.12.2015
இன்று, மார்கழித் திங்கள் ஏழாம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

கீசுகீசென்றிங்கே பறவைகள் எல்லாம் சேர்ந்து
பேசியே வந்தன காண், சீர்காஞ்சி நகர் வாயில்
ஆசுகவிப் புலவர், பேரறிஞர், பண்டிதரும்
வாசி வாசியென்று வாசித்த செந்தமிழும்
நேசித்தவன் புகழைப் பாடிடவே வந்தனர் காண்
மாசில் மனத்தவராய் அடியார் நாம் நல்வாசம்
வீசும் மலரெடுத்து அவன்மேனி அலங்கரிப்போம்
தேசுடைய பொற்கழல்கள் பணிந்திங்கு சரண்புகுந்தோம்  (7)


24.12.2015
இன்று, மார்கழித் திங்கள் எட்டாம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

கீழ்வானம் வெள்ளென்ன, கதிரோனும் எழுந்திங்கு
தாய்வீடாம் எழில்கொஞ்சும் சீர்காஞ்சி நகர் வந்தான்
தேவாரம் ஓதுமவன் அடியாரும் வந்திடுவார்
நாவார அவன் பெருமை நாளெல்லாம் பேசிடுவோம்!
சாவா வரந்தரும் அம்மூவா மருந்தாவான்
தேவாதி தேவனவன் பொற்கழலே பணிந்திடுவோம்!
பாவாலவன் புகழே பாடிடுவோம்! பவக்கடற்கு
நாவாயவனன்றே! அவன் பதமே சரண்புகுந்தோம் (8)


25.12.2015
இன்று, மார்கழித் திங்கள் ஒன்பதாம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

தூமணி மாடத்தில் நெய்விளக்கொளி வீச
சாமகானம் வந்தெங்கணும் செவிநிறைக்க
ஹோமப்புகை எழுந்தக் கதிரோனின் வழிமறைக்க
நேமம் மிக்கடியார் ஜய சங்கரவென்றே
நாமம் மிகச்சொல்லி நாவெலாம் இனித்திருக்க
தேமதுரத் தமிழில் சீர்காஞ்சி நகர்த்தேவை
மாமனித தெய்வத்தைப் பாடியவன் பதமலர்க்கே
சேமமிக மங்களமும் சொல்லியவன் சரண்புகுவோம் (9)

26.12.2015
இன்று, மார்கழித் திங்கள் பத்தாம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

நோற்றுச் சுவர்க்கம் புகுமாசை கொண்டு பெரும்
ஏற்றம் மிகுந்ததாம் சீர்காஞ்சி நகர்வாழும்
ஊற்றாய்ப் பெரும்கருணை உலகத்திற்களித்துவரும்
கூற்றைக் கடிந்துதைத்து மாற்றும் விழுப்பொருளை,
பேற்றைப் பணிந்திடவே அடியவர்கள் அனைவருமே
நாற்றத் துழாயதுவும் மாலைகளும் கொண்டிங்கு
போற்றியே வந்தோமச் சன்னதி அடைந்து விட்டோம்
ஆற்றோம் இனியேதும்; அவர் தாளே சரண்புகுந்தோம்  (10)


27.12.2015
இன்று, மார்கழித் திங்கள் பதினொன்றாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

கற்றுக் கறவைக் கணமும் வந்திங்கு
நிற்றலே கண்டோமச் சன்னதி வாசலிலே
கற்றார் போற்றிடும் கஜராஜன் மகிழ்ந்தேக
உற்றிங்கு கோபூஜை, கஜபூஜையும் கண்டோம்
சுற்றத்தாரெல்லாரும் கண்பனிக்க நின்றிட்டு
முற்றும் துறந்தாரின், முத்தேவருமாகி எமைப்
பெற்றாரின், சீர்காஞ்சி நகர்வாழ் பெருந்தேவின்
நற்றாள் தொழுதவரின் பதமலரே சரண்புகுந்தோம் (11)


28.12.2015
இன்று, மார்கழித் திங்கள் பன்னிரெண்டாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

கனைத்திளம் கற்றெருமை சுரந்தருள் பால்போல் நாம்
நினையாமலிருந்தாலும் தாமே வந்தருள்தந்து
வினையாவும் தீர்த்தாளும் சீர்காஞ்சி நகர் வேந்தை,
தினையளவு வேதநெறி தழைத்திடத் துணைசெய்தால்
பனையளவு கொண்டிங்கு பார்போற்ற வைப்பாரை,
அனைவருமே அடிபணிவோம்; அபிஷேகம் கண்டருளில்
நனைந்திடுவோம், அடியாரின் நெஞ்சமாம் ராஜாங்கம்
தனையாட்சி புரிந்தருள்வார்,  பதமிங்கு சரண்புகுந்தோம் (12)


29.12.2015
இன்று, மார்கழித் திங்கள் பதிமூன்றாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

புள்ளுக்கும் அன்றுருகி கதிமோக்ஷம் தந்தானும்
கள்ளனாய் வெண்ணெயோடுள்ளம் கவர்ந்தானும்
வெள்ளமெனக் கருணை பொழித்தாயாய் சீர்காஞ்சிப்
பிள்ளையாய் வந்திங்கே அருளாட்சி புரிகின்றார்
துள்ளியே வந்திடுவோம்! கருணைமழை நனைந்திடுவோம்!
தெள்ளத் தேனமுதாய் தித்திக்கும் குரலோரை,
பள்ளித் துயின்றறியா வள்ளலவர் முகமலரை,
அள்ளிப் பருகிடுவோம், அவர் தாளே சரண் புகுவோம்! (13)


30.12.2015
இன்று, மார்கழித் திங்கள் பதிநான்காம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

உங்கள் புழைக்கடை தோட்டத்து மலரெல்லாம்
திங்கள் திருமுகத்தார் திருப்பாதம் சேர்ந்திடவே
பொங்கும் பரவசத்தில் பூத்திங்கே குலுங்கினவே!
அங்கவரைக் கண்டிடவே, செங்கதிரோன் எழுந்தானே!
மங்காப் புகழுடை மந்தகாசர் தம்மை
சங்கத் தமிழினால் பாடியவர் கொலுவிருக்கும்
சிங்காதனமாம் இச்சீர்காஞ்சி நகரினிலே
பங்கய மலர்ப்பாதம் பணிந்தவரைச் சரண்புகுவோம்!  (14)


31.12.2015
இன்று, மார்கழித் திங்கள் பதினைந்தாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

எல்லே இளங்கிளியே!  வாராய் எங்களுடன்!
தொல்லுலகமெல்லாம் படைத்தழித்து விளையாடும்
தில்லை அம்பலத்தான் சீர்காஞ்சி நகர் தன்னில்
செல்லக் குழந்தைகளாம் நமைக்காக்க வந்திங்கு
இல்லமே கொண்டிட்டான்! அவர் நாமம் உளமுருகிக்
கல்லாப் பிழைபொறுத்தார்! அவர் சொன்ன வழியிங்கே
நில்லாப் பிழைபொறுத்தார்! அவர்பாதம் பணிந்திடவே
எல்லோரும் வாருங்கள்! மலர்ப்பதமே சரண்புகுவோம்! (15)


01.01.2016
இன்று, ஆங்கிலப் புது வருஷம். மார்கழித் திங்கள் பதினாறாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

நாயகனை, அம்மாவெனக் கதறி ஓடிவரும்
சேயவரைக் காத்தருளி, சீர்காஞ்சி நகர்வாழும்
தாயவளை, பெரியவா என்னும் பெயர்கொண்ட
மாயவனை, வந்திங்கு நம்மிடை மனிதனாய்க்
காயமே கொண்ட நல்லமுதினை, கற்பகத்தை,
தூயவனை, கண்டோம் இச்சன்னதியில்! நம்வினைகள்
ஓய, ஜய சங்கரவென்போம்! பெரியவா சரணமென்போம்!
தீயவையெலாம் மாய, அவர்பதமே சரண்புகுந்தோம்! (16)


02.01.2016
இன்று மார்கழித் திங்கள் பதினேழாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

அம்பரமாய்த் திக்கணிந்து ஆனந்த நடமாடும்
எம்பிரான் நீயிங்கினிதே எழுந்திராய்!
கம்பனாய் எழுந்தருளி, காஞ்சிமாநகரமர்ந்த
உம்பர் கோமானே, உறங்காதெழுந்திராய்!
சம்புவாய், சங்கரனாய், காமாக்ஷித் தாயவளாய்
அம்புவியில் வந்துதித்த அருளே எழுந்திராய்!
நம்பிவந்துனைத்துதிக்கும் அடியவர்க்கரணாவாய்
செம்பொற்கழலிணையே துணையென்று சரண்புகுந்தோம்! (17)


03.01.2016
இன்று மார்கழித் திங்கள் பதினெட்டாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

"உந்து மத களிறு" என்று இன்றைய திருப்பாவைப் பாசுரம் ஆரம்பிக்கிறது. நந்தகோபனின் பெருமைகளை பேசும் ஆண்டாள், அவனிடம் இருந்த யானைப் படைகளைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறாள்.

ஆனால், 'மத களிறு' என்று பெரியவா சம்பந்தமாகக் களிற்றைப் பற்றி - யானையைப் பற்றி நினக்கும்போது, அவர் அந்த மத களிற்றை விளையாட்டாய் அடக்கிய நிகழ்ச்சிகள்தான் நினைவுக்கு வருகின்றன. ஒன்றல்ல - இரு நிகழ்ச்சிகள்!!

இரண்டும், பெரியவா பக்தர்கள் அனைவரும் மிக நன்றாக அறிந்தவையே. ஆனாலும் எத்தனை முறைதான் பெரியவா நடத்திய அற்புதங்களைப் பற்றிப் படித்தால் என்ன? அலுக்கவே போவதில்லை!  இந்த இரு நிகழ்ச்சிகளையும் பெரியவாளின் அத்யந்த பக்த கோடிகள் எழுதியது. அடியேன் internet / blog ல் பார்த்ததை, அப்படியே இங்கே தருகிறேன்.

Incident 1 : 

"செம்மங்குடியில் பட்டாமணியார் வீட்டில் பூஜை. மடத்தின் ஸ்ரீகார்யம்,ஸ்வாமி அபிஷேகத்துக்காக பட்டத்துயானை மேல் ஒரு வெள்ளிக்குடத்தில், செம்மங்குடி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்தார். பட்டாமணியார் வீட்டுவாசலுக்கு வந்ததோ இல்லையோ, யானைக்கு மதம் பிடித்துவிட்டது!

நல்லவேளை, ஸ்ரீகார்யம் வெள்ளிக்குடத்தோடு கீழே குதித்து வீட்டுக்குள் சென்றுவிட்டார். யானைப்பாகனோ, உயிர் பிழைத்தால் போதும் என்று எங்கேயோ ஓடிவிட்டான்! ஒரே அமளிதுமளி! தெருவில் உள்ளவர்கள் அத்தனை பேரும் கிடைத்த வீட்டுக்குள் புகுந்து கொண்டு கதவை சாத்திக் கொண்டு, ஜன்னல் வழியாக கிலியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

யானை, கிழக்குக்கோடியிலிருந்து மேற்குக் கோடிவரை கன்னாபின்னாவென்று ஓடி, அட்டஹாசம் பண்ணிக் கொண்டிருந்தது! ஒரே பிளிறல்! பெரியவாளை வரவேற்க போட்டிருந்த பந்தக்கால்கள், தூண்கள், திண்ணையில் போட்டிருந்த தட்டிகள் எல்லாவற்றையும் அடித்து இழுத்து த்வம்ஸம் பண்ணிக் கொண்டிருந்தது! உள்ளே ஓடிய ஸ்ரீகார்யம் பெரியவாளிடம் "யானைக்கு மதம் பிடிச்சுடுத்து!......பெரியவா" மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கக் கூறினார். குடத்தோடு கீழே குதித்த பயம் இன்னும் போகவில்லை. தெருவில் ஈ காக்காய் இல்லை. யானை மட்டும் இங்கே அங்கே ஓடிக் கொண்டிருந்தது.

இதோ.........கஜேந்த்ரவரதனாகவீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தார் பெரியவா கையில் நம் எல்லாருடைய மதத்தையும் அடக்கவல்ல தண்டத்தோடு! தன்னந்தனியாக மதம் கொண்ட யானையின் எதிரே போய் நின்றார்!

"கஜேந்த்ரா! என்ன இது போக்கிரித்தனம்? பேசாமப் போய் படு!" தெய்வத்தின் குரல்....... நம் போன்ற ஆறறிவு, பகுத்தறிவு என்று பீற்றிக்கொள்ளும் மானிட ஜாதியை விட, ஐந்தறிவு, ஏன்? அறிவேயில்லாத அசேதன வஸ்துக்களுக்கு கூட உள்ளே சென்று வேலை செய்யும் தெய்வத்தின் குரல்..ஓங்கி ஓலித்தது!

இதோ ஐந்தறிவு ஜீவனாக, ப்ரம்மாண்டமாக அட்டஹாசம் பண்ணிக் கொண்டிருந்த யானை, பூஞ்சை மேனியரைக் கண்டதும் கட்டிப்போட்ட பசு மாதிரி வடக்குப்பக்கம் தலையும், தெற்குப்பக்கம் வாலும் வைத்து, தெருவையே அடைத்துக் கொண்டு பெரிய மூட்டை போல் மஹா சாதுவாகப் படுத்துக் கொண்டது! ஜன்னல், மேல்மாடிகளில் இருந்து இந்த கண்கொள்ளாக் காட்சியை, அதிசயத்தை அன்று கண்டு களித்த பாக்யவான்கள் ஏராளம்!

வாசலில் இருந்து கஜேந்த்ரவரதனை பார்த்துக் கொடிருந்த ஸ்ரீகார்யத்தை அழைத்து, "கல்பூரம், சாம்ப்ராணி,வாழைப்பழம், பூ.....எல்லாம் ஒடனே கொண்டா"எட்ட இருந்தே பெரியவா சொன்னதை குறித்துக் கொண்ட ஸ்ரீகார்யம், அவர் கேட்டதை ஒரு மூங்கில் தட்டில் வைத்து, யானையின் மேல் உள்ள பயத்தால், திண்ணையிலேயே வைத்து விட்டுப் போய்விட்டார், உயிருக்கு பயந்து!

பெரியவா தானே அந்த மூங்கில் தட்டை கொண்டுவந்து, ஒருமணிநேரம் முன்பு தெருவையே பிய்த்துப் போட்டுவிட்டு, இப்போது சமத்து சக்கரைக்கட்டியாக வாலை சுருட்டி, உடலைக் குறுக்கி, காதைக் காதை ஆட்டிக் கொண்டிருந்த யானைக்கு கஜபூஜை பண்ணி, பூ சாத்தி, கல்பூரம் ஏற்றி சாம்ப்ராணி காட்டி விட்டு, வாழைப்பழத்தை தன் திருக்கரங்களால் அதன் வாய்க்குள் குடுத்தார். "எழுந்து போ! இனிமே விஷமம் கிஷமம் பண்ணாதே!" என்றதும், அந்த பெரிய சர்க்கரை மலை மெல்ல எழுந்து அடக்க ஒடுக்கமாக, அந்த இத்தனூண்டு தெருவில் கால்வாசி இடம் விட்டு ஒரு ஓரமாக நின்றது.





******************************

Incident 2 : 


தேனம்பாக்கத்தில் பெரியவா தங்கியிருக்கிறதுன்னு தீர்மானம் ஆன உடனே, அவர் அங்கே வாசம் பண்றதுக்கு ஓரளவுதான் வசதி செஞ்சு கொடுக்க முடிஞ்சுது. ஆனா, பெரியவா அதைப்பத்தியெல்லாம் கவலைப்படலே! அவர் வசதி பத்தியெல்லாம் என்னிக்கும் லட்சியம் பண்ணினதே இல்லே!’ என்று தொடர்ந்தார் சங்கர பக்த ஜன சபா செயலர் ஜி.வைத்தியநாதன்.”ஒரு முறை, சாயங்கால வேளையில பெரிசா பட்டாசெல்லாம் வெடிக்கிற சத்தம் கேட்டுது். பெரியவா உடனே, ‘என்ன, பட்டாசு சத்தம் எல்லாம் பலமா கேட்கிறது? எங்கே பட்டாசு வெடிச்சுக் கொண்டாடறா? எந்தக் கோயில்ல இருந்து ஊர்வலம் கிளம்பறது?’ன்னு எங்களிடம் விசாரிச்சார்.


‘காஞ்சி காமாட்சி அம்மன் திருவீதி உலா முடிஞ்சு, திரும்பி வந்துண்டிருக்கா. அதைத்தான் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடி, சம்பிரதாயமா நடத்திண்டிருக்கா!” என்று நாங்கள் விசாரிச்சுத் தெரிந்துகொண்ட சேதியைப் பெரியவாகிட்டே சொன்னோம்.
அதைக் கேட்டதும் பெரியவாளுக்கு இருப்பே கொள்ளலே. அம்பாள் காமாட்சியை எப்படியாவது தரிசனம் பண்ணணும் என்கிற ஆசை அவருக்கு வந்துவிட்டது. பெரியவா நடந்து காஞ்சிபுரம் போய்ச் சேர்றதுக்குள்ளே, திருவீதியுலா முடிஞ்சு, அம்பாள் திரும்பியிருப்பாள். இதைப் பெரியவாளிடம் தெரிவிச்சோம். ‘அதனால நாம இனிமே நடந்து போய்ப் பிரயோசனம் இல்லையே, பெரியவா!’ என்று நாங்கள் சொன்னது அவருக்குக் கேட்க கஷ்டமாக இருந்தது.

அன்னிக்கு எப்படியாவது அம்பாள் காமாட்சியை தரிசனம் பண்ணிவிடுவது என்று தீர்மானமாக இருந்தா பெரியவா. காஞ்சிபுரம் போய்ச் சேர்வதற்குள் ஊர்வலம் முடிஞ்சுடும் என்பதை அவர் பொருட்படுத்தலே. ரொம்பவும் பிடிவாதமா இருந்தார். மடத்து சிஷ்யர்கள் எத்தனை சொல்லியும் அவர் கேட்கிற மாதிரி இல்லே. போய்த்தான் தீருவது என்று நிச்சயம் பண்ணிவிட்ட மாதிரி இருந்தது.

பெரியவா வெளியிலே வந்து நின்ன உடனே கிளம்பிடலே. விநாயகர் சந்நிதிக்குப் போனார். அவர் பிள்ளையாரிடம் காதருகில் போய் என்னமோ ரகசியம் பேசுகிற மாதிரி இருந்தது. புறப்படறதுக்கு முன்னால் கணேசரிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறாராக்கும் என்று நினைத்தோம்.

விநாயகரிடம் அனுமதி வாங்கியவர், மளமள என்று காஞ்சியை நோக்கி நடக்கஆரம்பித்துவிட்டார். சிப்பந்திகள் சிலர் அவர் கூடவே தொடர்ந்து ஓடினார்கள். பெரியவா நடையே ஓட்டம் மாதிரிதான் இருக்கும். அந்த வேகத்துக்கு சாதாரணமாக யாராலும் ஈடுகொடுக்க முடியாது!
காஞ்சியை அடைந்தபோது, எல்லோருக்கும் ஆச்சரியம்!

அம்பாள் காமாட்சி இடத்தை விட்டு அசையாமல், உண்மையைச் சொல்லப் போனால் ஓர் அங்குலம் கூட நகராமல், அப்படியே அங்கேயே இருந்தாள். பெரியவா வந்து தரிசனம் பண்ணும் வரை அம்பாள் காத்துக்கொண்டிருந்த மாதிரி இருந்தது.

மடத்து சிஷ்யர்களுக்கு ஆச்சரியம் தாங்கலே. எதனால அம்பாள் ஊர்வலம் நகராம அப்படியே நின்றுவிட்டது என்று விசாரித்தார்கள். கோயிலில் பூஜை செய்யறவர் உடனே முன்னால் வந்து, ‘வெடிகள் வெடிச்சு முடிஞ்சதும், ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கற மாதிரி நிற்கிற யானை, என்ன பண்ணியும் இந்த இடத்தைவிட்டு ஒரு இன்ச் கூட அசையலே. அதை அதட்டி மிரட்டி விரட்டப் பார்த்தால் கோபத்தைக் காண்பிச்சுது. எதுவும் இசகு பிசகா நடந்துடக் கூடாதேன்னு சும்மா இருந்துட்டோம். ஆனா, ஊர்வலம் நகராம அப்படியே இருக்கிறபோது யானையும் சாதுவா சும்மா இருந்ததுதான் எங்களுக்கு ஆச்சரியம்! இது என்னடா, இந்த யானை இப்படி விநோதமா நடந்துக்கிறதேன்னு ஒரேயடியா குழம்பிப் போயிருந்தோம்’னு சொன்னார்.

ஆனா பெரியவா வந்து, காமாட்சி அம்பாளை தரிசனம் பண்ணி முடிஞ்சதும்,அவருக்குச் சொல்ல முடியாத திருப்தி. சந்தோஷமா இருந்தார். யானைகிட்டே போய், செல்லமா அதைத் தட்டிக்கொடுத்தார். உடனே யானை, ஏதோ அவரோட உத்தரவுக்குக் காத்திருந்த மாதிரி மேலே நடக்கத் தொடங்கியது!

தேனம்பாக்கத்தில் புறப்படுகிறபோது விநாயகர் காதில் பெரியவா என்னவோ சொன்னாரே… அதன் அர்த்தம் இப்போதான் புரிஞ்சுது! அன்னிக்குப் பெரியவா அடைஞ்ச சந்தோஷத்தைவிட, எங்களுக்குக் கிடைச்ச திருப்தியும் பாக்கியமும் இருக்கே, அது என்னைக்கும் மறக்கவே முடியாது!
காஞ்சி காமகோடி மஹா பெரியவா திருவடிகள் சரணம்!


**************************


இந்த இரண்டு நிகழ்ச்சிகளும், இந்த முதல் வரியான 'உந்து மதகளிறு' என்று தொடங்கும் அந்த ஒரு வரிக்கு உண்டான நிகழ்ச்சிகள். அதிலும், யானையுடன் பெரியவா நடத்திய அத்தனை திருவிளையாடல்களும் இடம் பெறவில்லை! மாங்காடு கோவிலுக்கு பெரியவாளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றதும் ஒரு களிறு என்று சொல்வார்கள். இன்னும் எத்தனை எத்தனையோ இருந்திருக்கலாம்...


பாடலின் மற்ற வரிகளுக்கும் பெரியவா சரிதத்திலிருந்து நிகழ்ச்சிகளை, அவர் நடத்திய அற்புதங்களைச் சொல்வதென்றால்...? இந்த ஜன்மமே போதாது என்றுதான் தோன்றுகிறது.


இன்றைய பெரியவா திருப்பாவை: 


உந்து மதகளிறும் அடிபணிந்தடங்கி நிற்கும்
சிந்துமிசைக் குரலோன் சன்னதி நின்றவன்தன்
கந்தம் கமழும் கழலே பணிந்தெழுவோம்!
அந்தமில் ஆதி ஸ்வரூபன் குணநலமே
சந்ததம் செந்தமிழ் சந்தத்தில் இசைத்திடுவோம்!
வெந்துயர் போக்கும் சந்திர ஒளிமுகத்தை
குந்தகம் நீக்கும் பங்கயக் கரமலரை
வந்து நாம் பாடி, அவன் பதமே சரண்புகுந்தோம்!  18


04.01.2016
இன்று மார்கழித் திங்கள் பத்தொன்பதாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

குத்து விளக்கெரிய, சன்னதியில் திருமுகமும்
முத்துச் சுடராக ஒளிதந்து பளபளக்கப் 
பித்தாக்கி இங்கெந்தன் உள்ளம் கவர்ந்தானை,
சித்தம் தனதாக்கி, எனையடிமை கொண்டானை,  
நித்தம் பாடிப் பரந்திங்கிருந்திடுவோம்!
வித்தக வேதவினோதனை, முக்தனை, 
அத்தனை, சுத்தனை, எங்கள் மா சொத்தினை, 
உத்தமனைத் தொழுது, அவன்பதமே சரண்புகுந்தோம்! 19



05.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபதாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.


முப்பத்து மூவர் அமரர்களும் வந்தேத்தும்
அப்பனைக் கண்டோமிக் காஞ்சி நகரினிலே
கப்பிடும் கவலைக் காரிருள் போக்கிடும்
செப்பரும் ஒளியை, காணரும் ஜோதியை,
ஒப்பிலா மணியை, தித்திக்கும் தேனமுதை
தப்பெலாம் மன்னித்தருளொன்றே புரித்தாயை
எப்போதும் எல்லோர்க்கும் எளியவனாம் அன்புருவை
இப்போதே பணிந்தருள்செய் பதமலரே சரண்புகுந்தோம் 20



06.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபத்து ஒன்றாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.


ஏற்ற கலமாக, உன்கருணை மழை தாங்க,
மாற்றுவாய் எங்களை, அருகதை ஏதுமில்லோம்,
ஆற்றுப் படுத்தி அருகழைத்தணைத்திடுவாய்,
போற்றியே நின்றோம், வேறேதும் செயலொழிந்தோம்
காற்றாய் எங்களுயிர் மூச்செலாம் நிறைந்தோய் நீ,
கூற்றும் கடிந்தெம்மைக் காப்போய் நீ உனைக்காண
ஆற்றாது சீர்காஞ்சி நகர்வந்துன் அடி பணிந்தோம்
தேற்றியே எங்களைக் கொள்வாயுன் சரண் புகுந்தோம்  (21)



07.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபத்து இரண்டாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

அங்கண் மாஞாலத் தரசெலாம் அடிபணியும்
எங்கள் மா தவமே! உன்னடி பணிந்திடவே
மங்காப் புகழுடை சீர்காஞ்சி நகர் வந்தோம்!
பங்கயக் கண்ணாலே எங்களை நோக்கிடுவாய்
இங்கெந்தம் பாவங்கள் இழிந்திங்கெம் பிறவியெலாம்
தங்காதொழிந்திட, மனமென்னும் மேடையிலே
சிங்காதனமிட்டோம்! வந்தமர்ந்து மங்கலமே
பொங்கும் வரமளிப்பாய்! உன்பதமே சரண் புகுந்தோம்!  (22)



08.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபத்து மூன்றாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.


மாரிபெய் கானகம்போல் இருளடைந்தழுக்கும் சேறும்
ஊறியே உழலும் எந்தன்  மனத்துளே வந்தமர்ந்து
வாரித்தந்தருளை நல்கி வளமெலாம் தந்த தாயை
கோரிய யாவும் தந்து கோராத பதமும் தந்து
சீரிய வாழ்வு தந்து, சிறப்பெலாம் தந்து பின்னும்
பாரித்துக் காத்தணைக்கும் கருணையின் கடலை இங்கே
ஓரிக்கை தன்னில் கண்டோம், காஞ்சி மா நகரும் கண்டோம்
சேரிடம் இதுவேயென்று, தாயவள் சரணே கொண்டோம்   (23)



09.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபத்து நான்காம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

அன்று இப்பாரதம் நடந்தாய் அடி போற்றி
நின்றாய் அடியாரின் உள்ளமெலாம் குணம் போற்றி
நன்றாய் வரமதையே வழங்கிடுமுன் கரம் போற்றி
என்றும் கார்முகிலாய்க் கருணைபொழி கண் போற்றி
மன்றாய் சீர்காஞ்சி நகரமர்ந்தாய் பதம் போற்றி
வென்று மனமுருக்கும் உன்தெய்வக் குரல் போற்றி
கன்றாய் தாயுந்தன் இடம்தேடி ஓடிவந்தோம்
ஒன்றே அபயமென உன்பதமே சரண்புகுந்தோம்  (24)



10.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபத்து ஐந்தாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து உலகன்னை 
ஒருத்தி மகனாய்ச் சிறந்த தயாபரனை,
திருத்தி எமையாண்டு, எப்போதும் எங்கள்பிழை
பொறுத்தானை, பிணியெலாம் அறுத்தானை, பவவினை
ஒறுத்தானை, ஐம்புலன் வெறுத்தானை, போகங்கள்
மறுத்தானை அடிபணிந்துய்யவே வேண்டிநாம்
அருத்தித்து வந்தோம் சீர்காஞ்சி நகருக்கு!
வருத்தமும் தீர்ந்தோம்; அவன்பதமே சரண் புகுந்தோம்!  (25)



11.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபத்து ஆறாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

மாலே! மணிவண்ணாவுன் ஆருயிர் மைத்துனன்
மூலமா முதல்வன்,  சங்கரன், படையேயின்றி
ஜாலமாய் வந்திங்கு எங்களைக் காக்குமந்தக்
கோலமே கண்டாயோ?  எம்முடன் காஞ்சிவந்து
ஆலமே உண்டவாயன் காவியே பூண்டுவந்து
ஓலமிட்டழுது நின்ற மாந்தரை அணைத்துத் தாயைப்
போலக்காத்தன்பு ஊட்டி அருள்மழை பெய்யுமந்த
சீலமே காணவாராய்! அவன்பதம் சரண்புகுந்தோம்!  (26)




12.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபத்து ஏழாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.


கூடாரை வெல்லும் எம்பெரியவா உங்களைப்
பாடி மகிழுவதே வேலையாய் யாம் கொண்டோம்!
ஆடி அம்பலத்திருப்பானும் அரங்கத்தில் 
கூடித் திருவோடு சயனமே கொண்டானும்
நாடி நமக்காக ஓருருவாய் வந்தாரை
வாடிய அடியாரின் வாட்டம் களைந்தாரை
தேடி நாம் வந்திங்கு சீர்காஞ்சி நகர் கண்டோம்
கோடாதும்பதமே என்றென்றும் சரண் புகுந்தோம்! (27)



13.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபத்து எட்டாம் நாள்.  பெரியவா திருப்பாவை தொடர்கிறது.


கறவைகள், வேதியர், சதுர்வேதம் காப்போய் நீ!
அறவழிதனைக் காத்து, அறிஞரையும் காப்போய் நீ!
மறவாமல் அடியாரை அனுதினமும் காப்போய் நீ!
சிறியேன், கடையேன், எனையென்றும் காப்போய் நீ!
அறிவேதுமில்லாமல்,”நீவாபோ” என்றுன்னை
உறவாக நினைத்ததனால்,  உள்ளன்பின் மிகுதியினால்
சிறு பேரழைத்திட்டோம், கோபம் நீ கொள்ளாதே
இறைவா, என் ஐயா, உன் பதமே சரணடைந்தோம் (28)


14.01.2016
இன்று மார்கழித் திங்கள் இருபத்து ஒன்பதாம் நாள் முடிந்து முப்பதாம் நாளும் வந்துவிடுகிறது. அதனால், பெரியவா திருப்பாவையின் கடைசி இரண்டு பாசுரங்களை இன்றே பார்ப்போம்.

சிற்றம் சிறுகாலே வந்துன் அடிபணிந்தே
பொற்றாமரை முகமே பார்த்து ரசித்திருப்போம்!
நற்றவ மாமுனி, நற்பதம் தருவாயென் (று)
உற்றுனை நாடி உன்னேவல் செய்திருப்போம்!
பெற்றவன் நீயென, உற்றவன் நீயென, 
முற்றுமே நீயென,   சீர்காஞ்சி வந்துன்னைப், 
பற்றியே உன்னடிமை எற்றைக்கும் பூண்டுவிட்டோம்!
குற்றமில் குணக்கடலே! உன்பதமே சரண்புகுந்தோம் !  (29)



வங்கக் கடல்துயின்ற மாதவனும் இமயத்து
நங்கையும், மணவாளன் தானுமே ஒருவராய்,
எங்களைக் காக்கவே சீர்காஞ்சி வந்ததை,
இங்கிப்பாமாலையால் செப்புவார் யாவர்க்கும்
எங்கணும் என்றென்றும் மங்கலம் தங்கிடும்!
பொங்கிடும் பொங்கலில் அவரருள் பொங்கிடும்!
மங்காத வாழ்வையும் இன்னருள் தந்திடும்!
பங்கயச் சீரடிக்கே, வந்திங்கே சரண்புகுந்தோம் !  (30)


No comments:

Post a Comment