Wednesday, December 23, 2015

சந்ததமும் உந்தன்பதம் தரவேணும்

சமீபத்தில் சென்னை சென்றபோது, பெரியவாளின் பரம பக்தரான கீதா கல்யாண் மாமி அகத்திலே, பத்மஸ்ரீ. திருமதி காயத்ரி சங்கரன் அவர்களது பாடல்களைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. "ஸ்ரீ காந்திமதீம்" மற்றும் "கஞ்சதளாயதாக்ஷீ" என்ற தீக்ஷிதர் க்ருதிகளை அவர் பாடக் கேட்டு மெய்மறந்திருந்தேன். (அடியேன் கேட்பதற்காக, telephoneலேயே, பாடல்! என்ன ஒரு எளிமை!)

தீக்ஷிதர், 'குருகுஹ' என்னும் முத்ரை பதித்துப் ஒவ்வொரு பாடலிலும் முருகனை நினத்தவர். முருகன் அருள் பெற்றுப் பாடியவர்.

என்ன ஒரு சந்தம், என்ன ஒரு வார்த்தை நயம், என்ன அழகான பாடல்கள்! 

கஞ்ச தளாயதாக்ஷியை எடுத்துக் கொண்டால், "குஞ்சர கமனே", "மஞ்சுள சரணே", "சசி வதனே", "சுர தனே", "ரக்ஷித மதனே", "ரத்ன சதனே", "ஸ்ரீ காஞ்சனிவசனே", "சுரசனே", "மந்த ஹசனே", என்று ஒரே "அனே" காரந்தமாக வார்த்தகள்! பின்னர், "அக்ஷரி", "புவனேஸ்வரி", "பாஸ்வரி", "ஸ்ரீகரி", "லயகரி", "க்ருஹேஷ்வரி", "சங்கரி" என்று ஒரே ஹ்ரீம்காரமாக வார்த்தைகள்!! 

முருகா! பாடினால், இப்படி இல்லையோ பாடவேண்டும், என்று நினைத்துக் கொண்டே பெங்களுரு திரும்பும்போது, தமிழ் கீர்த்தனைகளைப் பற்றியும் மனதில் அசை போட்டபடி வந்து கொண்டிருந்தேன். 

சந்தம் என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது, அருணகிரியார்தானே!  முருகன் அருள் பெற்று, அவனையே பாடு பொருளாய்க் கொண்டு, அத்தனைப் பாடல்களும் பாடியவர் அருணகிரிநாதர்

"முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்  முற்பட எழுதிய ...... முதல்வோனே"

"அக்குற மகளுட னச்சிறு முருகனை  அக்கண மணமருள் ...... பெருமாளே"

"முத்தைத்தரு பத்தித் திருநகை  அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்" 

என்று மனம் திருப்புகழை, அவன்புகழை அசை போட்டது. 

அவர் பாடல்களில் இருக்கும் அந்த சந்தத்தில் ஒரு லவலேசமேனும் வைத்து அந்த முருகப் பெம்மான் மேலே ஒரு பாடல் பாட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்ததில், வந்த பாடல் இது. 

பாடலில் இருக்கும் பிழையெலாம் கருதாது, அந்த செந்தில் வேலவன், தமிழ்க் கடவுளாம் கந்தன் தான் காத்தருள வேணும்.
********************************************


இந்திரனின்  நிந்தையற சுந்தரியை உந்தனது 
சொந்தமென பந்தமெனக் கொள்வேலா (1)

குந்தியவள் நந்தனவன் நொந்துமிக சிந்தைசெய
விந்தையுரை தந்ததிரு மால்மருகா (2)

சந்தியதை முந்தியொளிப் பந்தமிழத் தந்திரமாம்,
மந்திரமாம் சந்த்ரகுலத் தோன்மருகா (3)

கந்தனெனும் சுந்தரனை சந்தமொடு கந்தமிகு 
செந்தமிழில் சிந்தனையும் செய்வேனோ (4)

அந்திமமும் வந்துமிகத் தொந்தரவும் அந்தகனும் 
தந்துவிடும் அந்தகணம் வருவாயோ (5)

சந்ததமும் உந்தன்பதம் எந்தனது சிந்தையதில்
வந்தமரும் அந்தவரம் தரவேணும் (6)

இந்துதலை தந்தைகொடு செந்திலவன் வந்தெனிள 
புந்தியமர் நந்திமகற் பெருமாளே (7)

பொருள் : 

1. இந்திரனின் கவலையும் நிந்தையும் அகலுமாறு, 'தேவ சேனாபதியென' வந்து, சூரனை அழித்து, அவனது இந்திரப் பட்டத்தை மீட்டுத் தந்து, இந்திரனின் பெண்ணையும் மணந்த வேலா!

2.குந்தியின் புத்திரனாம், 'கௌந்தேயன்' என்றே பெயர் பெற்ற அந்த அர்ஜுனன் மனம் வாடி போரிலே சோர்வுற்ற போது, மிக விந்தையான பார் போற்றும் கீதையுரை தந்த அந்த திருமாலின் மருகா!

3. பாரதப் போரிலே, சந்தி காலத்தில் அந்த ஒளிப் பந்தாய் விளங்கும் சூரியனையே தனது சக்கரத்தால் மறைத்து ஜயத்ரதனை வெளிக் கொணரச் செய்து, தந்திரம் செய்து அர்ஜுனனைக் காத்த அந்த திருமால் என்னும் சந்திர குலத்தில் தோன்றிய மந்திரத்தின் மருகா!

4. இப்படி இந்தப் பெருமையெலாம் பெற்ற கந்தனெனும் அழகனை, சந்தத்துடன், மணம்வீசும் செந்தமிழில் என் மனதில் நினைப்பேனோ? நினைக்கும்படி கந்தா, நீ வருவாயோ?

5. இல்லை, இறுதி வந்தெய்தும்போது, அந்தகன் என்னும் அந்த காலனும் வந்து தொந்தரவே செய்யும்போது, அந்த இறுதியான கணத்திலாவது, கந்தா நீ வருவாயோ?

6. எப்பொழுதும், உனது பதமானது எனது சிந்தையிலே நிறைந்து இருக்கும் அந்த ஒரு வரத்தை, ஐயா, நீ எனக்கு அருள வேண்டும்

7. இந்து எனப்படும் அந்த சந்திரனைத் தலையிலே தரித்தவரான சிவ பெருமான்  முக்கண்ணிலிருந்து தோன்றிய செந்தில் வேலவனே! நந்தியம் பெருமானின் மகனே! நீ வந்து எனது இளைய, ஒரு அனுபவமும், முதிர்வும் இல்லாத எனது புத்தியிலே வந்து அமர்ந்து அருள வேணும்.



No comments:

Post a Comment