Saturday, December 26, 2015

பெரியவாளை, "ன்" விகுதி போட்டுக் குறிப்பிடலாமா?

பெரியவாளைப் பற்றி, அந்த அன்பு மயமான கருணா மூர்த்தியைப் பற்றி எழுதும்போதோ, இல்லை பேசும்போதோ, "அவன்" என்று குறிப்பிடலாமா? "ன்" விகுதி போட்டுச் சொல்லலாமா?

இப்படி ஒரு கேள்வி கேட்பதற்காக, பெரியவாளையே தெய்வமாகக் கொண்டு போற்றும் இந்த group மட்டுமில்லை, பெரியவாளின் தாசானுதாசர்களாய் விளங்கும் அத்தனை பேரும் அடியேனை, "இது என்ன கேள்வி" என்று பார்த்து அடிக்கக் கூட வரலாம்!

ஆனாலும், இந்தக் கேள்வி அடி மனதில் எழும்பத்தான் செய்கிறது.

அடியேனின் நெஞ்சமெலாம் நிறைந்திருக்கும் அந்தக் கருணாமூர்த்தி பற்றி ஏதோ தெரிந்த அரைகுறைத் தமிழில் நானும் பெரியவாளைப் பாடினேனாக்கும் என்ற ரீதியில் அடியேன் கவனம் செய்த பாடல்கள் - at least most of them - அதிலெல்லாம், "அவன் பதம் சரணே" என்று "ன்" விகுதியோடோ, அல்லது அது போன்றே "கருணை மழை பொழிந்தானை" என்பது போல, மறுபடியும் "ன்" போட்டோதான் எழுதியிருக்கிறேன்.

இது தப்பு இல்லையோ?

குருவை மரியாதை இல்லாமல், இப்படி "ன்" போட்டுச் சொல்லலாமா?

பெரியவாளே, குரு பற்றிச் சொல்லும்போது, "தெய்வத்திடம் அத்வைத பாவம் இருக்கலாம். ஆனால், குருவிடம் மட்டும் த்வைத பாவம் மட்டுமே இருக்க வேண்டும்" என்றல்லவா சொல்லியிருக்கிறார்!!

அப்படி இருக்க, ஜகத் குருவான பெரியவாளிடமும் அதே பாவம் அல்லவா இருக்க வேண்டும்? மரியாதையாக அல்லவா விளிக்க வேண்டும்?

சென்னை கீதா கல்யாண் மாமி, ஒருநாள் மிகவும் இதமாக, "பெரியவாளை "ர்" போட்டு எழுதலாமே" என்று guide பண்ணிய போது, இந்தக் கேள்வி பெரிதாக எழுந்தது.

ஒரு முறை, அடியேன் எழுதிய சில பாடல்களை பெரியவாளின் பரம பக்தர் ஒருவர்
அத்தனை "ன்" விகுதியையும் சிரமப்பட்டு நீக்கிவிட்டு, "ர்" விகுதி போட்டு, மறுபதிவு செய்திருந்தார். "பெரியவா மேல், எத்தனை மரியாதை" என்று நினைத்தேன். மற்றபடி ஏதும் சிந்திக்கவில்லை.

ஆனால், இப்போது, கேள்வி எழுகிறது. இப்படி, "ன்" போட்டு, பெரியவா பற்றி எழுதுவது தவறோ?

பெரியவாளைப் பற்றி, மற்றவர்கள் எப்படி எழுதியிருக்கிறார்கள் என்று கொஞ்சம் பார்த்தேன்.

ஸ்ரீ.சாம்பமூர்த்தி சாஸ்திரிகள், பெரியவாளின் சரிதத்தில், பெரியவாளை, "ர்" விகுதி போட்டே சரிதம் முழுதும் குறிப்பிடுகிறார். "குழந்தை ஸ்வாமிநாதர்" என்று, பெரியவாளின் குழந்தைப் பருவத்தைக் கூட, மரியாதையோடுதான் குறிக்கிறார்.

ஸ்ரீ.கணேச சர்மா மாமாவின் பெரியவா பற்றிய "கருணை தெய்வம் காஞ்சி முனிவர்" என்ற புத்தகத்தில், பெரியவாளைப் பற்றி, குழந்தைப் பருவம் பற்றிய செய்திகள் வரும் வரையில் "ன்" விகுதி வருகிறது. பிறகு, "ர்" தான்.

பெரியவா அந்தாதி பாடிய அகத்தியான்பள்ளி ஸ்ரீ.சுப்ரமணிய கிருட்டிணமூர்த்தி அவர்களின் பாடல்களிலும், "ர்" தான் எல்லா இடத்திலும்.

சங்கரானந்தம் தந்த ஸ்ரீ.தேனுபுரீஸ்வரதாசன் ஸ்ரீ.இல.சங்கர் அவர்களின் பாடல்களிலும், பெரியவாளை மரியாதையாகக் குறித்தல் மட்டுமே.

இப்படி எல்லாரும் பெரியவாளை மிக மரியாதையாய்க் குறிக்க, அடியேனின் பாடல்களில் எல்லாம், மிகத் தவறாய்க் குறித்திருக்கிறேனோ? ஒன்றும் தெரியாத அடியேனின் பாடல்களில் தப்பும் தவறும் நிறைந்திருப்பது இயற்கைதான். சந்தப் பிழையும், யாப்புப் பிழையும், பொருட்பிழைகளுமே கூட மலிந்திருக்கும்தான். ஆனால், பாடுபொருளையே தவறாய்க் குறித்தல் மிகப் பெரிய குற்றம் இல்லையா?

Saanu Puthiran அண்ணாவின் பாடல்கள் சிலவற்றில், அடியேன் குறிப்பிடுவது போலவே, "ன்" விகுதி பார்த்தேன். தப்பு செய்வதில், நான் மட்டுமல்ல, என் அண்ணாவும் கூட, இப்படியேதான் செய்திருக்கிறார் என்று மனதில் ஒரு ஓரத்தில் ஒரு சமாதானம்!

ஆனாலும் மனது முழுதாக சமாதானம் ஆகவில்லை!

அந்த முருகப் பெருமானே வந்து, காப்பாற்றி, "என் மேல் எழுது" என்று அடியெடுத்துக் கொடுத்தப் பாடச்சொன்ன அருணகிரியார் என்ன செய்தார் என்று பார்த்தேன். அருணகிரியாருக்கு, முருகப் பெருமானே அல்லவா குருவாய் வந்தான்! "குருவாய் வருவாய் அருள்வாய் குஹனே" அன்றல்லவோ பாடியிருக்கிறார் அருணகிரி!

ஆனால், அருணகிரியார், முருகனை, "ர்" போட்டுப் பாடுவதாகவே காணோம்! திருப்புகழாகட்டும், கந்தர் அலங்காரமாகட்டும், வேல் மாறலாகட்டும், ஒரே "ன்" மயம்தான்!

"அக்குற மகளுடன், அச்சிறு முருகனை, அக்கண மணமருள் பெருமாளே" யென்று, கணபதியைப் புகழும்போது, தனது குருவான அந்த முருகனை, "சிறுவனாக்கி" வேறு பாடுகிறார் அருணகிரி! என்ன ஒரு ஸ்வாதீனம்!

"கந்தர் அலங்காரம்" என்று பெயரில் "ர்" போட்டு மரியாதை தொனித்தாலும், உள்ளே எல்லாம் ஒரே "ன்" மயம்தான்!

"சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
   வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
      காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
         சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.

என்று ஒரே "ன்" மயமாகப் போகிறது பாட்டு! 

 கந்தர் அனுபூதியும் இதே கதைதான்!   "கந்தர்"  என்பதிலே "ர்" வந்தாலும், உள்ளே எல்லாப் பாடலிலும் மஹா ஸ்வாதீனம்! 

"ஆடும் பணிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற் காடுந் தனியா னைசகோ தரனே"                  

என்பதிலிருந்து, "நீ" தான்; "ன்" தான்!

அந்த சிவபெருமானே குருவாய் வந்து தன் தாள் தந்து ஆட்கொண்ட மாணிக்கவாசகர் எப்படிப் பாடியிருகிறார்? 

திருவாசகத்திலே, உள்ளம் உருக்கும் சிவ புராணப் பாடலிலே, ஆரம்பமே ரொம்பவும் உரிமையோடுதான்!

"நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க; இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க; கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ; ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ; ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க"

என்று, ஒரே "ன்" மயம்தான்!  "குருமணிதன் தாள் வாழ்க" என்று தெள்ளத் தெளிவாகச் சொல்கிறார்! இருந்தாலும்கூட, "ன்" தான்!

ஒன்று தோன்றுகிறது. குரு என்பவர் மனிதராக வந்தால், மரியாதை கொடுத்து விளிக்கப் படுதலும், இறைவனே வந்து ஆட்கொண்டால், ரொம்பவும் ஸ்வாதீனம் எடுத்துக் கொள்வதுமாய் இருக்கிறதோ? 

அந்த மனித குருவும் இறைவன்தான் என்றாலும், அவருக்கு மரியாதை கொடுத்து, "த்வைதம்" பாராட்ட வேண்டும் என்று பொருளோ? ஆனால், வந்தது - வருவது - இறைவன் - அவனே குருவாயும் வந்திருக்கிறான் என்று தெரியும்போது, ஸ்வாதீனம் மிகுந்து விடுகிறதோ?

பெரியவாளின் அத்யந்த பக்தர்கள் பல பேர் பெரியவாளை படு ஸ்வாதீனத்துடன், "அது" "இது" என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். "அந்தக் கிழம்" என்று பரம பக்தியுடன், உரிமையுடன் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். "பொல்லாத கிழவனார்" என்று அடைமொழி கொடுத்து கண்களில் நீர்மல்கச் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். 

இவர், வெறும் மனித குரு இல்லை - மனித குருவையும் 'தெய்வமாகவே கொள்ளவேண்டும்' என்பதால் இந்த வடிவத்தை 'தெய்வம்' என்று சொல்வது இல்லை; இந்த வடிவம், நிஜமாகவே, தெய்வம்; நமக்கு அருள வேண்டி, மனித வடிவில், நம்முடன் கலந்து பழகியிருக்கிறது என்று கொண்டால், அந்த தெய்வத்தை மஹா ஸ்வாதீனத்துடன் கூப்பிடுவது போல் கூப்பிடலாம்தானோ?

திருப்பாவையிலே, ஆண்டாள், ஒரு இடத்திலே "அறியாத பிள்ளைகளோம், அன்பினால் உந்தன்னைச் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே" என்று சொல்லுகிறாள். அன்பு மிகும்போது, மரியாதை குறைந்து விடுகிறது என்பது உண்மைதானோ? சரிதானோ? "என் அப்பா, ஐயா, நீ வாயேன், வந்து எனக்கு அருள் பண்ணேன்; தரிசனம் கொடேன்" என்றுதான் சொல்லத் தோணுமோ?

சிறு வயதிலிருந்தே, மஹா பெரியவாளை, "காம கோடிப் பீடத்தின் பீடாதிபதி" என்றோ, "சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்' என்றோ, ஏன்? "பெரியவா" என்றோ, என் தாய் தந்தையர் எனக்கு அறிமுகப்படுத்தியது இல்லை. "உம்மாச்சித் தாத்தா பாரு" என்று அவர், எனது தாத்தாவாகவேதான் எனக்கு அறிமுகம் ஆனார். 

அடியேனுக்கு மாத்திரம் இல்லை, அவரது கோடானுகோடி பக்தர்களுக்கும் கூட, அவர் முதலில் "உம்மாச்சித் தாத்தா"தான். பிறகுதான் "பெரியவா" என்று தோன்றுகிறது. 

அப்படி, "தாத்தா"வாக, குடும்பத்தில் ஒருவராக, உற்ற உறவாக, கூடவே இருந்து குறை தீர்க்கும் குடும்பத்தின் உறு துணையாகவே தெரிந்த ஒருவரை, "ர்" போட்டு அழைப்பது - மரியாதை காட்டும் நிமித்தம் சற்றே 'தள்ளி" நின்று பேசுவது போல, "distance" வந்தாற்போலத் தோன்றுகிறது. 

எனது அகத்தில், அப்பாவையோ, அம்மாவையோ, தாத்தாவையோ, பாட்டியையோ, "நீங்கள்" என்று விளிக்கும் பழக்கம் இல்லை. "அப்பா, அம்மா, நீ, வா, போ" தான். "எப்ப தாத்தா வந்த நீ? எப்படி இருக்க? உடம்புக்கு ஒண்ணும் இல்லாம இருக்கியா" என ஒற்றை விளித்தல் தான். 

என் தாத்தா - பாட்டிக்கு வரும் அதே ஒற்றை விளித்தல்தான் எனது உம்மாச்சித் தாத்தாவிற்கும் வருகிறது! எனது தாத்தா - பாட்டியையும் விடவும் நெருங்கின சொந்தம் இல்லையோ என்னுடைய இந்த உம்மாச்சித் தாத்தா!

என் அப்பா! என் ஐயா! என் உம்மாச்சித் தாத்தாவே! அடியேன் உன்னை - உம்மை ஸ்வாதீனமாய் அழைத்ததை, இனிமேலும் அப்படியே அழைக்கவேண்டும் என்று நினைப்பதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாயோ? சொல்லப்பா! 

இப்படிக் கேட்பதிலும் ஸ்வாதீனம் விட்டுப் போகவில்லையே - என்ன செய்வேன் நான்? 

அறியாப் பிள்ளையிவன், அன்பினால் உன் தன்னைச் 
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே! 
இறைவா நீ வாராய்! அருளாய், உன் சரண் புகுந்தேன்!!

No comments:

Post a Comment