Tuesday, August 20, 2019

எக்காலம் : 17.8.19

உன் நினைவாயிருந்து உனக்காகவே வாழ்ந்து 
உன் நாமம் என் மூச்சு என்றாவதெக்காலம்?

உன்னடியார் பாதம் என் க்ரீடமாயிருந்து
என்னாளும் சத்சங்கம் என்றாவதெக்காலம்?

பொன்மேனி ஒளிவடிவை எப்போதும் என்னகத்தில்
கண்ணாரக்கண்டு மனம் களித்திருப்பதெக்காலம்?

தென்னாடுடைய சிவன் என்னாட்டவர்க்குமிறை
உன்னோடு நானிருந்து உனதாவதெக்காலம்?

வேரோடு வினைதீர்க்கும் பெருங்கருணைப் பேராற்றை
சேராதிருக்குமெந்தன்  வினைதீர்வதெக்காலம்?

அன்புருவாம் உன்னை அனுதினமும் அர்ச்சிக்கும்
இன்பத்தில் என்னை இழந்திருப்பதெக்காலம்?

விதியாலே விளைந்த உயிர் இதனை உன் பாதமதே
கதியென்று சமர்ப்பித்து நிறைந்திடுவதெக்காலம்?

ஓரிக்கை வந்தமர்ந்த ஓருருவை என்னுளத்தில்
வாரித்தொகுத்திழைத்துக் களிகூர்வதெக்காலம்?

கஞ்சி நகர் வளர் கருணைக்கடலை நித்தம்
கொஞ்சிக்கொஞ்சி உயிர் உருகிடுவதெக்காலம்?

பிறவிப் பிணி தீர்க்கும் பேரன்பின் பதம்சேர்ந்து
உறவு நீ ஒன்றே என்றிருப்பதெக்காலம்? 

Saturday, July 6, 2019

பிறை சூடிப் பெரியவா அஷ்டகம்: : 6.7.19

பிறை சூடிப் பெரியவா அஷ்டகம்:
வெண்ணிலா சடையில் வைத்தான்
பெண்ணிலா உடலில் வைத்தான்
எண்ணிலா இன்பம் வைத்தான் 
பெரியவா என்னும் பேரான் (1)
பிறை நிலாப் பெயரான் சற்றும்
குறை நிலாப் பெயரான் உமையாள்
பிறை நிலா நுதலாள் பாகன்
பெரியவா என்னும் பேரான் (2)
திரை நிலா உடலான் என்றும்
நரை நிலாச் சடையான் பாதம்
தரை நிலா அமரர் போற்றும்
பெரியவா என்னும் பேரான் (3)
ஆணிலான் பெண்ணிலான் காண்
தூணிலா அரியும் அயனும்
காணிலாச் சோதியான் காண்
பெரியவா என்னும் பேரான் (4)
ஊணிலான் பிச்சை கொள்வான்
நாணிலான் ஆடை ஏதும்
பூணிலான் பித்தனாம் காண்
பெரியவா என்னும் பேரான் (5)

வானிலாச் சடையான் கங்கை
தானிலாச் சடையான் மங்கை
தேனிலா முகத்தாள் பாகன்
பெரியவா என்னும் பேரான் (6)
 
துண்ணிலா அணியான் நித்தம்
தண்ணிலாச் சொல்லான் தீதே
பண்ணிலான் தூயான் சீலன்
பெரியவா என்னும் பேரான் (7)
மாணிலா எந்தன் தீமை
பேணிலான் செய்த குற்றம்
காணிலான் நன்றே கொள்வான்
பெரியவா என்னும் பேரான் (8)
குறை நிலாப் பெயரான் : குறை நிலா = குறையேதும் நிற்க முடியாத
பிறை நிலா நுதலாள் பாகன் : நுதலாள் = பிறை நிலா போல் நெற்றி உடையவள்
திரை நிலா உடலான் (திரை = உடல் சுருக்கம்; உடல் சுருக்கம் விழா இளமை)
நரை நிலாச் சடையான் (நரை = முதுமை, வெளுத்த முடி; நிலா = நில்லாத)
தரை நிலா அமரர் போற்றும் (தரை நிலா = தேவர்களுக்கு, பாதம் தரை தொடாது)
ஆணிலான் பெண்ணிலான் காண் (ஆணுமில்ல; பெண்ணுமில்லை)
தூணிலா அரியும் அயனும் (தூணிலா = தூணில் நில்லாத அரி - நரசிம்மம்)
ஊணிலான் பிச்சை கொள்வான் (ஊண் = உண்பது)
நாணிலான் ஆடை ஏதும் நாண் இலான் = வெட்கம் இல்லாதவன்)
தானிலாச் சடையான் (தானிலாச் சடையான் = கங்கை தங்காத சடையான்)
துண்ணிலா அணியான் (துண்ணிலா = துண்டான நிலா; பிறை நிலா)
தண்ணிலாச் சொல்லான் (தண்ணிலா = குளுமையான நிலா)
மாணிலா எந்தன் தீமை (மாணிலா = மாண் + இலாத = நாகரீகம் இல்லாத)
பேணிலான் செய்த குற்றம் (பேணிலான் = கருத மாட்டான்)

மணிவாசக பஞ்சகம் 6.7.19

மணிவாசக பஞ்சகம் (தலைப்பு : நன்றி : கார்த்தி நாகரத்தினம் அண்ணா, பெங்களூரு)

மாணிக்கவாசக நின் பக்தியெனும் மாற்றில்லா
ஆணிப்பொன் மாளிகையின் ஓர் துரும்பை பக்தன்போல்
நாணின்றி நடித்திடுமிப் பதருக்கும் தந்திடுவாய்
வேணிச்சந்திரன் சூடி பதம்காணும் வழி சொல்வாய் (1)

திருவாசகம் தந்து உலகோரை உய்விக்கும்
குருவாசக! இந்தக் கல் நெஞ்சுக் கடையேனுக்கு
ஒருவாசகம் தாராய்! உருகாத குறை தீராய்!
கருவாசம் தீர்த்தாளும் கழல் சேரும் வழி கூறாய் (2)

சதுரனார் எனக்கேட்டு சங்கரர்க்குத் தனையீந்த
மதுரவாசக! உந்தன் அனுபூதிப் பெருநிலையின்
மதுவெள்ளத்தோர் சொட்டை நாயேனுக்கருளிடுவாய்
நதிசூடி அவன் தாள்சேர் ஆறதுவும் அருளிடுவாய் (3)

முந்தை வினைமுழுதும் ஓயும் உரைசெய்திங்கு
எந்தை சிற்றம்பலவன் இணயடிவாழ் வாசக! நின்
சிந்தையிலே ஓர் நொடியித் தீயவனை நினைத்திடுவாய்!
விந்தையருள் வித்தகனின் தாள்சேரும் வழி சொல்வாய் (4)

திருவாதவூர் தோன்றி, திருவாசகம் சொல்லி
திருச்சிற்றம்பல வாணன் தாள்வாழும் மறையோனே
ஒருபோதும் உனைக்கல்லா வினைதீர்ந்து அடியேனும்
ஒருபோதும் பிறவாதான் பதம்சேரும் வழி சொல்வாய் (5)

Sunday, June 16, 2019

Anusham : 16.06.2019

Anusham : 16.06.2019



நிதம் நாடு நகரமெல்லாம் சுற்றிவந்தடியாருக்கு
சதமருள் மலர்கள் கண்டேன்; அருளுமம்மலர்கள் நாதன்
பதமலர் என்றும் கண்டேன்; இதமருட் பதமே என்றும்
கதியெனக்கென்றும் கண்டேன்; கழலிணை பணிந்தேனையா!  (1)

அருள்மலை ஒன்றை வையம் யாவைக்கும் தாயாம் உண்மைப் 
பொருள்மலை ஒன்றை, துன்பம், படுதுயர், சோகமென்னும்
இருள்மலையெல்லாம் போக்கும் ஜோதியாம் மலையைத் தூக்கி
வரும் பத மலர்கள் கண்டேன்; கழலிணை பணிந்தேனையா (2)

அறம் பொருள் இன்பம் வீடு அனைத்தையும் அருளும் ஞானத் 
துறவினோர் ஒளியை, எந்தன் தாயொடு தந்தையான
உறவதை, எந்தன் நெஞ்சில் வாழ் துவராடை வேந்தை
பிறப்பறுப்பானைக் கண்டேன்; கழலிணை பணிந்தேனையா! (3)

பவரோகம் தீர்த்து ஆளும் பிஞ்சகப் பெம்மான் தன்னை,
சிவமதை,  அரையில் பூண்ட துவராடை தன்னை நித்தம்
நவநவக் கோலம் காட்டும் மதிபுனற்சடையன் தன்னை
உவந்தெனதுளமே கண்டேன்; கழலிணை பணிந்தேனையா! (4)

வந்திடும் அடியார்க்கெல்லாம் வரமருள் தேவை, நெஞ்சில்
சிந்தனை செய்தோர்க்கெல்லாம் நலமருள் கோவை, நாளும்
வந்தனை செய்வோர் வாழ்வில் ஒளியதாம் ஜோதி தன்னை
எந்தையைக் கண்டேன் உந்தன் கலழிணை பணிந்தேனையா! (5)

கரமலர் தன்னை, நாயிற் கடையனாம் எனக்குமிங்கே
வரமருள் ஹஸ்தம் தன்னை, மெய்யடியாரை வாழ்த்திப்
பரமதும் நல்கும் பேற்றை,  கருணையாம் ஊற்றை,  கஞ்சி
வரதனைக் கண்டேன் அந்தக் கழலிணை பணிந்தேனையா! (6)

அமுததாம் தவத்தை, வாக்கை, உளமுடல் எல்லாமிங்கே
நமக்கென நல்கி நாம்செய் பாவமாம் நஞ்சையெல்லாம்
தமக்கெனக் கொள்ளும் தியாக வேந்தினை, பாகம் வாழும்
உமையவள் தன்னைக் கண்டேன்; கழலிணை பணிந்தேனயா! (7)

நஞ்சுண்ட கண்டன் தன்னை, அரவணி ஈசன் தன்னை
மஞ்சுண்ட கயிலை வாழும் மாமதி சூடி தன்னை,
அஞ்சுண்ட எந்தன் உள்ளம் ஆறுதல் பெறவே வந்த
அஞ்செழுத்தானை கண்டேன்; கழலிணை பணிந்தேனையா! (8)

உலகெலாம் போற்றுமந்த ஒளிமலர் முகத்தைக் கண்டேன்
நலமெலாம் தருமோர் நாமம் சிவமதாய் சிரிக்கக் கண்டேன்
குலம் குணம் செல்வம் தந்து, சீரொடு சிறப்பும் நல்கும்
புலர் கதிர் முகமே கண்டேன்! கழலிணை பணிந்தேனையா! (9)

பொங்கிடும் அன்பு கண்டேன்; பொன்மலர் முகமே கண்டேன்
மங்கலம் பொங்கக் கண்டேன்; முகம் உளம் நிறையக் கண்டேன்
சங்கு சக்கரமும் கண்டேன்! உமையொரு பாகன் கண்டேன்
எங்குமானந்தம் கண்டேன் ; கழலிணை பணிந்தேனையா! (10)

Friday, March 1, 2019

Anusham : 26.2.2019

Anusham : 26.2.2019

அப்பா! நான் உன் குழந்தை இல்லையோ? குழந்தை அப்பா அம்மாவை விட்டுவிட்டு இங்கே அங்கே ஓடிக்கொண்டுதானே இருக்கும். தாய் தந்தையர் தானே கவனமாகப் பார்த்துக் கொள்ள வேணும்? 



சின்னஞ்சிறு குழந்தையது தாயவளை விட்டு புறம்
   ஓடுவதுபோல் நானும் ஓடிடுவேன்! முக்கண்ணா!
என்னுயிரே! ஆரமுதே! தாய்தந்தை ஆனவனே!
   மதலையிவன் பக்கம் நீ விட்டுவிட வேண்டா கேள்!
 
அறியாத பிள்ளையது விளையாட்டு பொம்மையதை
    கண்டவுடன் தாயவளை விட்டகன்று போவாற்போல்
சிறியேனும் வாழ்வினிலே சிறு இன்பம் தனைத்தேடி
     புறம்போகும் வேளையெனை விட்டுவிட வேண்டா கேள்!
 
நெருப்பதனை அழகான பொருளென்று தொட்டுவிட
      சிறு பிள்ளை நெருங்குவது போல் நானும் வாழ்வினிலே
அறுபகைவர் பின்னாலே அலைகின்றேன் எண்தோளாய்!
      எனைவிட்டு எங்கும் நீ போகாதே சொன்னேன் கேள்!
 
உனையென்றும் அகம்தன்னில் வைத்துந்தன் பாதமலர்
       அதைப்பற்றி வாழ்கின்ற அடியாரோ டிணங்காமல்
மனை, மக்கள் என வாழ்வில் புறம்போகும் சிறுவனெனைக்


         கைவிட்டு வேறெங்கும் போகாதே! சொன்னேன் கேள்!

Tuesday, January 8, 2019

08.01.2019 : பெரியவா மறைந்த (english) தினம்


08.01.2019 : பெரியவா மறைந்த (english) தினம்

இன்று, பெரியவா மறைந்த - English Date. இன்றும் என்றும், பெரியவா நம்முடனேதான் இருக்கிறார்கள். ஆனாலும், பூத உடலுடன் பெரியவா நம்முடனே, நம்மருகே இருந்த அந்த நாட்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கம் எல்லா பக்தர்கள் மனதிலும் இருப்பது இயற்கைதான்.

என் மனதின் அந்த ஏக்கத்தினை, இந்தப் பாடலாக வடித்து, பெரியவாளின் பதமலர்களில் சமர்ப்பிக்கிறேன்.




உன்னருகில் நானிருந்து, உன்வதனம் பார்த்திருந்து
உன்மொழியே கேட்டு நிதம் உருகுவதும் எக்காலம்? (1)
கண்ணாலே காண்பதுவும் வாயாலே பேசுவதும்
எண்ணத்தில் எண்ணுவதும் நீயாவதெக்காலம்? (2)
சிந்தையெலாம் நீயாக, எந்தையுனையே நினைத்து
விந்தையுலகை விலக்கி வாழ்வதுமே எக்காலம்? (3)
எந்தனிரு விழிகளிலே உன்னுருவையே எழுதி
சுந்தரனே உனையென்றும் காணுவதும் எக்காலம்? (4)
உன்னருளால் உனையெண்ணி, உன்பதமே நான் பணிந்து
உன்னுருவை என்னுயிரில் எழுதுவதும் எக்காலம்? (5)
உனைப்பாடும் வேலையதே வேலையதாய் இருக்க மறு
நினைவெதுவும் இன்றி இனி இருப்பதுவும் எக்காலம்? (6)
உன் கோடி வார்த்தையிலே ஒன்றினையாயினும் நானிங்கு
என் வாழ்வின் வேதமெனக் கொள்வதுவும் எக்காலம்? (7)
உன் நாமம் மொழியாக, உன்னருளே வழியாக
உனபதமே கதியாக வாழுவதும் எக்காலம்? (8)

Thursday, January 3, 2019

03.01.2019 : அனுஷ நன்னாள்


03.01.2019 : அனுஷ நன்னாள்

பெரியவாளின் இந்த அனுஷ நன்னாளிலே, பெரியவாளிடம் எந்த மாதிரியான பக்தி பாவம் எனக்கு இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

பக்தி இருக்கிறதா என்பது முதல் கேள்வி. பக்தியெல்லாம் ஒன்றும் இல்லை என்பதுதான் honest ஆன பதில். குருவாக, தெய்வமாகக் கொண்டாடப்படும் அந்தப் பெரியவாள் என் கண்களுக்கு, அகத்தில் இருக்கு ஒரு அன்பான தாத்தாதான்.

தாத்தாவிடம், பேரனுக்கு என்ன இருக்கும்? பக்தியா இருக்கும்? இல்லை. பாசம் இருக்கும். சமயத்தில் - especially - தப்பு பண்ணும்போதெல்லாம் - பயமும் இருக்கும்.

தாத்தா என்றால், அந்தப் பேரனிடம் அன்பு காட்டவேண்டாமோ? அன்பு காட்டுவது என்றால், பேரக் குழந்தையை மடியில் போட்டு அந்தத் தாத்தா சீராட்ட வேண்டாமோ? அப்படியில்லை என்றால் அது என்ன தாத்தா?

பேரக்குழந்தை, விஷமம் பண்ணத்தான் பண்ணும். அதுபாட்டுக்கும் ஓடும். விளையாடும். அடிபட்டால், தூக்கம் வந்தால், பசியெடுத்தால்தான் தாத்தா -பாட்டியிடம் வரும்.

ஐயா, பெரியவாளே! இந்தக் குழந்தையும் அப்படித்தான்....

எத்தனை விஷமம் நான் செய்தாலும், எத்தனை தப்பு பண்ணினாலும், எத்தனை உன்னிடமிருந்து விலகி ஓடினாலும், என்னை இழுத்தணைத்து, உன் மடிமீதிட்டு, அன்பு காட்டி அருள்வாய் ஐயா.....

பெரியவா சரணம்.





"வா" வென்றழைத்தணைத்துன் மடிதாராயெந்தாய் நீயே!

உனையெண்ணி உருகிநாளும் உன்நாமம் சொல்லிச் சொல்லி
                உன்பதம் மேவுமுந்தன் அடியார்கள் இருக்க இங்கே
உனையெந்தக் கணமும் நினையா எனக்குமுன் கருணை காட்டி
                 உன்னடியாரோடிங்குன் பொன்னடி போற்ற வைத்தாய்!
அனைத்துலகுக்கும் தந்தை தாயுமாய் ஆன சோதீ!
                  முவத்து முக்கோடித் தேவர் பதம் பணி ஆதி மூலா!
எனையுமுன் சேயாய்க் கொண்டு, என் குற்றமெல்லாம் நீக்கி                
                  "வா" வென்றழைத்தணைத்துன் மடிதாராயெந்தாய் நீயே!  (1)


குணம் ஒன்றுமில்லேன்; குற்றம் மட்டுமே நிறைந்த நாயேன்
                 இனம் என்றுன் தொண்டர் கூட்டம் சேர்ந்திடா புன்மைப் பேயேன்
பணம் போகம் வாழ்வாய்க் கொண்டுன் பதமென்றும் நினையாத் தீயேன்
                  என்னையும் உந்தன் பாதம் பரவுமோர் பேறு தந்தாய்!
பிணமாக இந்த வாழ்வு முடியுமுன் கருணை கூர்ந்து
                   உன்னைப் பாடிடுமோரந்த வேலையே வாழ்வாய்ச் செய்வாய்!
கண நேரம் என்முன் வாராய் ! காட்சியே தந்து காவாய்!
                     "வா" வென்றழைத்தணைத்துன் மடிதாராயெந்தாய் நீயே!  (2)            

மனமென்னும் பேயால் நானும் படும், பாடறிவாய் நீயும்!
                    உனையெண்ணி உருகா நெஞ்சும், கண்டுநீர் சொரியாக் கண்ணும்
தினமுன்னைப் பாடா வாயும், உன்பதம் பணியா உடலும்
                     கொண்டுவாழ்ப் பதராமெனையும் பதம்தந்து காக்கும் தேவா!
புனம் காத்த வள்ளிமாதின் கரம் கொண்ட குமர வேலா!
                      அலைகடல் நஞ்சை உண்டு அமரரைக் காத்த சீலா!
சினமேதும் இன்றி இந்தச் சேயையும் காக்க வாராய்!
                     "வா" வென்றழைத்தணைத்துன் மடிதாராயெந்தாய் நீயே!  (3) 


காமத்தீ வாட்ட; கோபக் கனலெந்தன் உயிரை வாட்ட
                    ஆதரவு ஏதும் இன்றி ஐயா,  நான் அலைந்த காதை
காமனைத் தீயில் சுட்ட நீ நன்றாயறிந்த ஒன்றே!
                    இதழ்க்கடை சிரிப்பால் அந்த முப்புரம் சுட்ட தேவா!
சாமமே சொன்ன வேந்தன் அவனுக்கும் அருளும் வேதா!
                     காஞ்சி மா நகரில் வாழும் கருணை மாக் கடலே உமையாள்
வாமபாகமதாய்க் கொண்டோய்! கருணை கூர்ந்தருளே தாராய்!
                    "வா" வென்றழைத்தணைத்துன் மடிதாராயெந்தாய் நீயே!  (4) 
                      

பக்தி ஒன்றில்லேன் உன்மேல்; பக்தன்போல் நடித்து நின்றேன்!
                    உன் நாமம் சொல்லக்கூட  அருகதை ஏதும் இல்லேன்!
துக்கமே நிறைந்த வாழ்வை நித்தியம் என்றே கொண்டேன்!
                    திருப்புகழ் செப்பென்றருண கிரிக்கன்றுரைத்த பாலா!                     
முக்குணம் நீக்கி வந்த முழுமுதற் பொருளே! வேலா!
                     திக்குகள் எல்லாம் போற்றும் செந்தில்வாழ் அசுரர் காலா!
சக்தி ஆயுதமே நீக்கி வந்தமால் மருகா! என்னை
                  "வா" வென்றழைத்தணைத்துன் மடிதாராயெந்தாய் நீயே!  (5)