Sunday, March 27, 2016

28. 03. 2016 : அனுஷம் : வந்துடன் காப்பாய் ஐயா!

28.03.2016 : அனுஷம்

நாளை, அனுஷம். பெரியவா பதம் பணிந்து, ஔவையும், மாணிக்க வாசகரும், அருணகிரிநாதரும், சம்பந்த மூர்த்தியும், வள்ளலாரும் அந்த இறைவனைப் பாடிப் பரவிய பாங்கிலே, என் மனதுறை மூர்த்தியை, அந்த ஸ்ரீசரணாளைப் பாடிட முயன்றிருக்கிறேன்.

பெரியவா சரணம்.
**************************************************************



வந்துடன் காப்பாய் ஐயா!

ஐங்கரனுக்கென்று ஔவை அன்று நான்கினையே தந்தாள்
பைங்கனித் தேனும் பாலும் பாகுமோர் பருப்பும் தந்தாள்
பைந்தமிழ் மூன்று மட்டும் தாவென்று கேட்டுப் பெற்றாள்
ஐங்கரன் மகிழ்ந்தான் நான்கைப் பெற்றுடன் மூன்றே தந்தான்

அறுமுகன் வடிவாய் வந்தீர்! குரு உமக்கென்று நானும்
அறுபொருள் தந்தேன், பதிலாய் ஒருபொருள் மட்டும் கேட்டேன்
உறுபதம் ஒன்றை, எல்லாம் தரும்பதம் ஒன்றை, உங்கள்
அரும்பதம் அதனைக் கேட்டேன், பரிந்துடன் தருவீர் ஐயா!

அகத்துளே உம்மை வைத்து, இதுவரை என்னுள் சேர்த்த
அகங்காரம், காமம் கோபம், மதமோக லோபம் என்னும்
மிகச் சிறும் கீழ்மை ஆறும் உமக்கென்று தந்து விட்டேன்
உகந்தெனை ஏற்பீரய்யா!, பதம் மட்டும் தருவீரய்யா!

இன்சுவை பாடல் தந்த மாணிக்க வாசகனார் அன்று,
தந்தது தன்னையென்றார்; கொண்டது உன்னையென்றார்
தன்னையே சிவனுக்கீந்து, சிவனையே தனக்காய்க் கொண்டார்
உன்னால் நான் இன்பம் பெற்றேன்; என்னால் நீ பெற்றதென்னே?

உன்னின்பம் எனதே ஆக, என்துன்பம் உனதே ஆக,
என்னை நீ ஏற்று இங்கே என்னதான் சாதித்தாயோ?
உன்னையே பெற்று நானே பெற்ற சீர் பெரிதேயன்றோ?
உன்னிலும் நானே அன்றோ சதுரனிங்கென்று சொன்னார்!

மாணிக்க வாசகனார் சொன்ன வழியிலே நானும் செல்வேன்!
வாணியாம், காஞ்சித் தாயாம், உம்மையே என்னில் கொண்டு,
நாணிலேன், குற்றம் அன்றி ஏதிலேன் என்னைத் தந்து,
வாணிபம் செய்யும் என்னை, ஏற்றும்மைத் தருவீரய்யா!

ஆடிடும் மயிலை, கந்தன் அழகையே பாடவென்று,
பாடிடும் பணியே இங்குப் பணியாய் நீயருள்வாயென்று,
நாடியே கந்தன் பாதம் பற்றி அருணகிரியார் சொல்ல
தேடிய பாதம் தந்தான்! பாடிடத் தமிழும் தந்தான்!

அன்னையாய் அருகில் நீயும் இருந்திட வேண்டும் எந்தன்
முன்னர் நீ அமர்ந்திருக்க, உன்பதம் பற்றி நானும்
உன்னையே பாடும் வேலை தாவென்று உன்னைக் கேட்டேன்,
அன்னிய வேலையேதும் இல்லாமல் அருள்வாய் ஐயா!

அஞ்சுதல் நீக்கி என்னுள் ஆறுதல் அளிக்கும் கோவே!
கஞ்சிமா முனியே! உன்னைப் பாடிடும் பணியே அன்றி
கொஞ்சியே உன்னைப் பாடி பணிந்திடும் வேலை அன்றி
எஞ்சிய ஏதும் செய்யாப் பணியையே அருள்வாயப்பா!

உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய் கள்வனாய் நீயே என்று
துள்ளிடும் தமிழில் அன்று சம்பந்தர் சொன்னார் இங்கோ,
தெள்ளிய உள்ளம் இல்லை; தெளிந்ததோர் மதியும் இல்லை
கள்ளமும் கபடும் சூதும் வாதுமே நிறைந்த உள்ளம்

அதனையும் உனதாய்க் கொள்வாய், வந்துடன் கொள்ளை கொள்வாய்
சதமுனை என்னுள் வைத்து உன்னுளே என்னைக் கொள்வாய்
பதமதை நெஞ்சில் வைத்து, நானென்பதிறக்கச் செய்வாய்
நிதமுனை அன்றி ஏதும் நினைவிலாதென்னைச் செய்வாய்!


தடித்தவோர் மகனைத் தந்தை அடித்திடில் தாயணைப்பள்
பிடித்தொரு தாயும் வைதால், தந்தையே அணைப்பானங்கே
பொடித்திரு மேனி கொண்டோய்! தாய்தந்தை நீயே இங்கே !
அடித்தது போதும் என்றார், வள்ளலார், அணைக்கச் சொன்னார்!

தாயவள் போல இங்கு கருணையே செய்வோய் நீயே !
தூயவோர் தந்தை போல அணைத்துடன் நிற்போய் நீயே!
மாயமே காட்டும் வாழ்வில் உழன்றிங்கு அடியே பட்டு
காயமே நொந்து வந்தேன், வந்துடன் காப்பாய் ஐயா!
















Tuesday, March 22, 2016

பங்குனி உத்திரம் : 23.03.2016 : மீணாக்ஷி கல்யாணம்

பங்குனி உத்திரம் : 23.03.2016 : மீணாக்ஷி கல்யாணம்

இன்று, பங்குனி உத்திரம். மீனாக்ஷி அம்மை, சுந்தரேஸ்வரரை ஆனந்தமாகக் கல்யாணம் செய்து கொள்ளும் நாள். முருகன் தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட நாள். ராமன் சீதையை மணம் செய்து கொண்ட நாள். ஆண்டாள் ரங்கமன்னாரை அடைந்த நாள். தர்ம சாஸ்தாவான ஐயப்பன் பிறந்த நாள். மன்மதனை எரித்து, உயிர்ப்பித்த நாள். மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை உதைத்த நாள்.
இத்தனை சிறப்பான இந்த நாளில், சென்னையில் இருந்த வரை, வருஷா வருஷம், கொட்டிவாக்கத்தில், திரு. திவாகர் - திருமதி காயத்ரி திவாகர் இல்லத்தில் (மறைந்த திருமதி மீரா சேஷாத்ரி அவர்களின் இல்லத்தில்) நடைபெறும் மீனாக்ஷி கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வது வழக்கம். குடும்ப சகிதமாக அங்கே போய் ஆஜராகி, மீனாக்ஷியைப் பார்த்து, hello சொல்லிவிட்டு, காலை tiffin சாப்பிட்டுவிட்டு, கல்யாண வைபவங்கள் எல்லாம் பார்த்துவிட்டு, மதியம் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, மனசில்லாமல் கிளம்பி வீடு போவது என்பது அனேகமாக கடந்த 20 வருஷங்களாக நடந்து கொண்டிருக்கிறது.
போன வருஷம் கூட, Bangalore லிருந்து drive பண்ணிக்கொண்டு போனோம். இந்த வருஷம், இங்கிருந்தே, மனக்கண்ணால் பார்க்க வேண்டிய நிலைமை. போன வருஷம், கல்யாணத்தன்று, பாடிய பாடலை அசை போட்டு, அன்னை பாதம் பணிகின்றேன்.
Photos : From Meenakshi Kalyana vaibavam at Sri.Diwakar's home at Kottivakkam - different days - different alankaram...
*************************************************
மீனாக்ஷி கல்யாணம் : ஆனந்த பைரவி
*********************************************************
கல்யாணம் காண வாருங்கோ! மீனாக்ஷியின்
கல்யாணம் காண வாருங்கோ! பர்வத புத்ரியின்
கல்யாணம் காண வாருங்கோ!
சுந்தரேஸ்வரருடன் ஆனந்தமாகவே
துந்துபி நாரதரும் மங்கலம் இசைக்கவே
ப்ரம்மனும் அக்னி முன்னே வேதமே ஓதி நிற்க
மாதொரு பாகன் இங்கே மாதுடன் நின்றிருக்க
ஆயிரம் பெயருடையோன் தாரைவார்த்துக் கொடுக்க
வேயுருதோளி பங்கன் கைத்தலம் பற்றி நிற்க
சந்திர சூரியர்கள் புத்தொளி வீசி நிற்க
இந்திராதி தேவர்கள் இன்னிசை பாடி நிற்க
கந்தனும் கணபதியும் கைத்தாளம் போட்டு நிற்க
வந்தவர் எல்லாருமே வந்தனம் செய்து நிற்க
பங்குனி உத்தரத்தில் இன்று நமக்காகவே
பொங்கு கருணையினால் என்றும் அருள் செய்யவே













Monday, March 7, 2016

07.03.2016 : சிவராத்ரி : சிவ சிவ சிவ எனச் சொல்வாய் : பந்துவராளி

07.03.2016 : சிவராத்ரி : சிவ சிவ சிவ எனச் சொல்வாய் : பந்துவராளி

இன்றைய சிவராத்ரிப் பொழுதினில், அந்த சிவபெருமானை நினைத்து, ஒரு பாடல்.

பந்துவராளி ராகத்தில் பாடினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது...

****************************************************************************

சிவ சிவ சிவ எனச் சொல்வாய், நெஞ்சே
சிவ சிவ சிவ எனச் சொல்வாய்,
பவபயம் போக்கிடவே - நீயே (சிவ சிவ சிவ)

அவலநிலை நீங்க, கவலைகள் தாமோட
தவம் நிறை, குணம் உறை, பவபய ஹரனை நீ (சிவ சிவ சிவ)

குவலயத்தோர் வளம் பெற்றிடவும் அவர்
உவந்திடும் வகை இங்கு உற்றிடவும்
நவநவக் கலைபலக் கற்றிடவும் இங்கு
கவசமாய் யமபயம் அற்றிடவும் நீ (சிவ சிவ சிவ)

Sunday, March 6, 2016

07.03.2016 : சிவராத்திரி : சாமகான வினோதா நமோ நம!

07.03.2016 : சிவராத்திரி :

இன்று, சிவராத்திரி. அந்த சாமகான லோலனான சிவபெருமானுக்கு உகந்த நாள். இந்த நாளில், பெரியவாளை, அருணகிரியாரின், "நாத விந்து கலாதீ நமோ நம" என்னும் பாடல் சந்தத்திலே பாடிப் பரவ வேண்டும் என்று தோன்றியது.

இன்றைய புண்ய தினத்திலே, எல்லோரும் குருவருள் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்துக் கொண்டு, இந்தப் பாமாலையை, பெரியவா பாதாரவிந்தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
**************************************************************************

சாமகான வினோதா நமோ நம!
வாமபாகமும் ஆனாய் நமோ நம!
வேதம் தேடிடும் பாதா நமோ நம! குருநாதா! (1)

ஆதியந்த மிலாதோய் நமோ நம!
வேதியர்தொழும் தேவா நமோ நம!
ஸ்வாமியாம் எங்கள் நாதா நமோ நம!  குருநாதா! (2)

காஞ்சியில் உறைக் கோவே நமோ நம!
தீஞ்சுவை ஸ்வர கீதா நமோ நம!
ஞான பங்கயப் பாதா நமோ நம! குருநாதா! (3)

மாய இருள் எரி ஈசா நமோ நம!
தூய ஹ்ருதயநி வாசா நமோ நம!
சந்த்ர சேகர வாணீ நமோ நம! குருநாதா! (4)

நீல கண்டவி நோதா நமோ நம!
பாலஸ் கந்தனும் நீயே நமோ நம!
ஆதி குஞ்சரி ஆனாய் நமோ நம! குருநாதா! (5)

ஆலம் உண்டயென் ஸ்வாமீ நமோ நம!
ஞாலம் உண்டபெம்மானே நமோ நம!
சோகம் நீக்கும் ப்ரகாசா நமோ நம! குருநாதா! (6)

தேச சஞ்சர பாதா நமோ நம!
வாச குஞ்சித க்ரீடா நமோ நம!
கால கால மகேசா நமோ நம! குருநாதா! (7)

தேசுலாவிடும் ஜோதீ நமோ நம!
மாசு ஏதிலா ஞானீ நமோ நம!
ஓரிக்கை உறை தேவே நமோ நம! குருநாதா! (8)

காமகோடிப் ப்ரதீபா நமோ நம!
நாம அமிர்த விலாஸா நமோ நம!
கருணை பொங்கு த்ரிநேத்ரா நமோ நம! குருநாதா! (9)

கோடி சூர்ய ப்ரகாசா நமோ நம!
ஆடிடும் நட ராஜா நமோ நம!
வந்தருள் திவ்ய ரூபா நமோ நம! குருநாதா! (10)













Tuesday, March 1, 2016

01.03.2016 : அனுஷ தினம் : வேல் மாறல் சந்தப் பாமாலை

01.03.2016: அனுஷ தினம்:



இன்றைய அனுஷ தினத்திலே, பெரியவாளின் பத கமலங்களை, அருணகிரியாரின் "வேல் மாறல்" சந்தத்திலே துதிக்க வேண்டும் என்று தோன்றியது.

'வேல் மாறல்" எனும் அரிய ஸ்தோத்திரம், சகல வினைகளையும் போக்கக் கூடியது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

"தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தானம்"

என்ற அழகாக பெருகும் அதே சந்தத்திலே, பெரியவாளின் பத கமலங்களை, நமக்காக நடந்த அந்தத் திருப்பாதங்களைப் பற்றிப் பாடத் தோன்றியது.

இந்தத் திருப்பாதங்கள், அன்றொருநாள், அழுத ஞானசம்பந்தக் குழந்தைக்காக ஓடி வந்த பாதங்கள். பழம் கிடைக்கவில்லையென்றவுடன், நமக்காகப் பழனி மலை சென்று நின்ற பாதங்கள். சூரனைக் கொல்லவென்று, வேல் தொடுத்து நின்ற பாதங்கள். ப்ரஹலாதன் என்னும் அந்தப் பக்தக் குழந்தை எந்தத் தூணைச் சுட்டிக் காட்டுமோ என்று, காத்துக் கொண்டு, அத்தனைத் தூணிலும் துரும்பிலும் காத்து நின்ற பாதங்கள். உலகைக் காக்கவென, தன்னைத் தாழ்த்திக் கொண்டு, 'தா' என்று இரந்து ஏந்தி, இந்த மூவுலகும் அளந்த பாதங்கள். தந்தை சொல் காக்க, கைகேயி சொல் கேட்டு, பாரதம் முழுக்க நடந்த பாதங்கள். பாண்டவர்க்கு, அவரது அரசுரிமையைத் திரும்பிப் பெறவென, தூது நடந்த பாதங்கள். திருக்கையிலை விட்டு, அம்பலத்திலே, நமக்காக நடமாடி நின்ற பாதங்கள். தன்னைக் கட்டிக் கொண்ட அந்த மார்க்கண்டேயக் குழந்தைக்காக காலனையே கடிந்து உதைத்த திருப்பாதங்கள். முடியாமல் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டிக்காக, பிட்டுக்கு மண் சுமந்து அடி வாங்கி நடந்த பாதங்கள். பார்த்தனுக்காக, அவனுடன் மற்போர் செய்து விளையாடி அடிவாங்கிக் கொண்டு, பாசுபதம் தந்து அருள் செய்ய வந்த பாதங்கள். பிரசவ வேதனையில் ஒரு பக்தை துடித்தபோது, உடனே, தாயினும் பரிந்து தாயுமானவராய் ஓடோடி வந்த பாதங்கள்.

இவை எல்லாம் செய்தது போதாது என்று, நம்மைத் திருத்துவதற்காக, நமக்கு அருள் செய்வதற்காக, பாரத தேசமெங்கும் நடையாய் நடந்த பாதங்கள். நலிந்தவர்களை, தன்னைத் தேடி வர முடியாதவர்களையும் தேடித் தேடிச் சென்று அருள் செய்த பாதங்கள். அருள் ஒன்றே கொடுக்கவென நமக்கு அருள் செய்யும் பாதங்கள். அவரைத் துதித்து அழுது முறையிடுவோரின் மனதிலே, நித்தம் வந்து குடியிருக்கும் பாதங்கள்.

இந்தத் திருப்பாதங்களை நினைத்து, தொழுது, இந்தப் பாடலை, பெரியவாளின் பதகமலங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
**************************************************

பசித்தழுத திருக்குழவி புசிக்கவொரு பெருத்தமுலை எடுத்தமுது அளிக்கவென உதித்தபதம் போற்றி (1)

பழத்தையுடன் அடைந்துவிட நினைத்துமயில்  தரித்துலகை சுழன்றுமனம் வெதும்பிமலை நிலைத்தபதம் போற்றி (2)

பெருத்தஇடர்  வளர்க்குமொரு அரக்கருடல்முடிக்கவென எடுத்துவொரு படைக்கலமும் தொடுத்தபதம் போற்றி (3)

இருக்குமிடம் உரைத்திடென அரக்கனவன் சினக்கமகன் குறித்தவிடம் வெடித்தவனை கிழித்தபதம் போற்றி (4)

அரக்கனது மனத்திமிரை அடக்ககரம் தழைத்துடலை சிறுத்துஅடி பெருத்துலகை அளந்தபதம்  போற்றி (5)

கறுத்தமன மொருத்திசொல சிரித்துமனை விடுத்தவுணர் குலத்தையற முடிக்கவென கடிந்தபதம் போற்றி (6)

தனிப்பகடை உருட்டிமிக தொலைத்தமுடி கிடைக்கவென மறுத்தவரை திருத்தநடை  நடந்தபதம் போற்றி (7)

விரித்தசடை வெளுத்தமதி குளிர்த்தமலை கிடக்கநடம் நடிக்கவென எடுத்துஜதி பிடித்தபதம் போற்றி (8)

வெடித்துதடை கடித்துயமன் பிடித்தவனை அணைத்துஅருள் அளித்தவனை இழுத்தவனை உதைத்தபதம் போற்றி (9)

தளும்பியணை உடைத்துமடை பெருக்கியதை தடுக்கமணல் சுமந்துஅடி
பொறுத்துநடை நடந்தபதம் போற்றி (10)

தனஞ்சயனை எதிர்த்தவனை உடற்பொருது கொடுத்தஅடி பொறுத்துகணை
கொடுத்தருளு மளித்தபதம் போற்றி (11)

சுழித்துநதி மிகப்பெருக பெரும்வயிறு துடித்தழுத கணத்திலுடன் சுகப்ரசவ மளித்தபதம் போற்றி (12)

திருப்பரதம் எனத்திகழும் சிறந்தநிலம் திருத்தவென மெலிந்தவுடல் வருந்ததினம் நடந்தபதம் போற்றி (13)

பெருங்கருணை அருள்மழையை நலிந்தவரும் அடைந்துயர தினந்தினமும் நடந்துடலும் இளைத்தபதம் போற்றி (14)

சிறுத்தமதி கறுத்தமனம் மிகுத்தபகை அழித்தொளியை விரித்தருளை அளித்துலகை அணைத்தபதம் போற்றி (15)

நினைத்தவரை துதித்தழுது இளைத்தவரின் மனத்திலொரு தனித்தகமும் அமைத்தவரில் நிலைத்தபதம் போற்றி (16)