Thursday, December 6, 2018

06.12.2018 : அனுஷ நன்னாள்

06.12.2018 : அனுஷ நன்னாள் : பெரியவா என்னும் பெரு நெருப்பு

இந்த அனுஷ நன்னாளிலே, பெரியவாளை வணங்கி, அந்தப் பெரியவாளின் நாமம் சொல்லப்போய் நான் பட்ட பாட்டை விளக்கி ஒரு பாடலாய் எழுதி, அந்தப் பாடலையும் பெரியவா பாதத்திற்கே அர்ப்பணிக்கிறேன்.

பெரியவா சரணம்.





அரனவன் நாமம் சொல்ல, அழுக்குகள் அழியும்; அந்தப்
பரனவன் பாதம் பற்ற நல்லவை சேரும் என்றெம் (1)

பெரியவர் சொன்னார்; அந்த அரனவன் வடிவேயான
பெரியவா நாமம் சொல்வாய்; நன்மையே விளையும் என்றார்! (2)

நல்லதே நடக்கும் இங்கென்றெண்ணியே நானும் காஞ்சிச்
செல்வனின் நாமம் சொன்னேன்! நடந்த அக்கதையைச் சொல்வேன்! (3)

"முக்கணா! புரமே செற்றோய்! பெரியவா!" என்று சொன்ன
அக்கணம் ஜ்வாலையொன்று நெஞ்சுளே புகுந்ததம்மா! (4)

கரும்பினை சுவைக்க நாவும் நெஞ்சுமே இனிக்கும்; ஜ்வாலை
நெருப்பினை சுவைத்து உண்டால் வாயொடு நெஞ்சும் வேகும் (5)

இரும்பினோர் இதயம் கொண்டேன்; பெரியவா நாமமென்னும் 
நெருப்பினை உண்டேன்; காமக் க்ரோதத்தாலான எந்தன் (6)

நெஞ்சமும் எரிந்ததம்மா! காமனன்றெரிந்தாற்போல
கொஞ்சமும் 'நான்' இல்லாமல் முற்றுமாய் எரிந்தேனம்மா! (7)

எரிவதைத் தடுக்க இங்கே செய்வதென்னென்று கேட்க
'அரியவன் நாமம் சொல்வாய்'! 'காப்பன்' என்றறிந்தோர் சொன்னார்! (8)

'அரியவன் வேறு - எங்கள் பெரியவா வேறு' - இல்லை!
"பெரியவா நாமம் சொல்ல, அரியவன் வருவான்" என்றார்! (9)

நீரினை உண்ட மேக வண்ணமே கொண்டான் நாமம்
வாரியே உண்டேன் - அந்தப் பெரியவா நாமம் சொல்லி! (10)

தீயினை அணைக்க நீரை ஊற்றுவார்; நாம நீரை
வாயினில் ஊற்றி நின்றேன்; நெருப்பினை வளர்க்கும் நீரை (11)

யாரிங்கே பார்த்ததுண்டு? இன்னாம நீரோ அந்தப்
பெரியவா நாமத்தீயை இன்னமும் வளர்த்த்தம்மா! (12)

வளர்ந்த அந்நெருப்பு எந்தன் முன்வினை எல்லாம் சுட்டுக்
கிளர்ந்திடக் கண்டேன்! பின்னர் வரும் ஜன்மம் எல்லாம் சுட்டு (13)

அமைந்திடக் கண்டேனிங்கே 'நான்' இல்லா என்னின் உள்ளே
அமைதியும் நிறைய எங்கும் பெரியவா நிறையக் கண்டேன்!! (14)

Saturday, October 20, 2018

14.10.18 : அனுஷ நன்னாள்

14.10.2018 : அனுஷ நன்னாள்:

இந்த நவராத்திரி சமயத்தில், இந்த அனுஷ நன்னாளிலே, அனுஷதேவனை, இந்தப் பாடலால் ஆராதனை செய்கிறேன்.

பெரியவா சரணம்.

காருண்ய மூர்த்தி வந்தார்!!



பத்தவதாரம் செய்து, பூமியே வந்த தெய்வம்
உத்தம முனிவனாக, சங்கர நாமம் தாங்கி
சித்தனாய் வேடம் பூண்டு அவனியே வந்ததம்மா!
பத்தரைக் காக்கவென்று இத்தரை வந்ததம்மா!

ஒன்பது நாட்கள் போரில் அரக்கரை அழித்த தேவி
துன்புற்றுழன்று வாடி அன்னையைத் தேடுமந்த
அன்பருக்காக கைலை நாதனை விட்டு பூமி
தன்பதம் பதித்து வந்தாள்; காவியே உடுத்தி வந்தாள்!

அட்டமா சித்தி என்னும் தேவியர் போற்றும் தேவி
சிட்டரின் வாழ்வு மேன்மையாகிடவென்று,  தீய
துட்டரை அழித்திடாமல் நல்லோராயாக்கவென்று
இட்டமாய்ப் பாதம் வைத்து பாரத பூமி வந்தாள்!

ஏழுலகெங்கும் வாழ காத்தருள் புரியும் ஈசன்
ஊழ்வந்துறுத்தக் கதறி அழுதிடும் மாக்கள் மாற
தாழ்சடை நீக்கிக் கையில் மான்மழுவதுவும் நீக்கி
ஆழிசூழ் உலகம் வந்தான்; காஞ்சிமா நகரம் வந்தான்!

அறுமுகம் கொண்டு சூரர் படைவென்ற தேவன், மாந்தர்
உறுபயம் போக்க வந்தான்; கவலைகள் நீக்க வந்தான்
அறுபகை வென்று வாழும் வகை சொல்ல தண்டம் ஏந்தி
குருவென இறங்கி வந்தான்; குவலயம் வாழ வந்தான்!

பஞ்சமா பொறிகள் வாட்டத் தவித்துடல் நடுங்கி நோயால்
அஞ்சியே அரற்றி வாழும் மாந்தரைக் காக்கத் தாயின்
நெஞ்சுகொண்டிங்கே வந்தான் தரணியைக் காக்க வந்தான்
பஞ்சின் மெல்லடியால் இந்தப் பாரை சீராக்க வந்தான்!

சதுர்வேதம் நொந்து நைந்து  கவனிப்பாரின்றி  வாடி,
விதிதனைத் தொழுதரற்றி அழுதிங்கே நின்றபோது,
மதுசூதன் அன்றோர் நாளில் வேதத்தைக் காத்தாற்போல
மதிசூடன் மறையைக்காக்க அவதாரம் செய்து வந்தான்!

முத்தேவர் சேர்ந்து இங்கே ஒன்றாகிப் புவியைக்காக்க
சித்தனின் ரூபம் கொண்டார்! தீஞ்சுவைத் தமிழில் வேதம்
மொத்தமாய் தெய்வக் குரலில் சொல்லவே வந்தார்; எங்கள்
உத்தமக் குருவாய் வந்தார்! உலகெலாம் உய்ய வந்தார்!

இருவினை அறுத்து மாய இருளினைக் களையும் ஞானத்
திருவென வந்தார்! ஜோதிச் சுடரென வந்தார்! லோக
குருவென வந்தார்! வாழ்வில் நிறையதே நிரம்ப வந்த
அருளென வந்தார்! இறையதாய் இனிதே வந்தார்!

ஓருண்மையன்றி இங்கே வேறுண்மையில்லை யென்னும்
பேருண்மை சொல்ல வந்தார்! பேருண்மை தானாய் வந்தார்!
ஆறுண்ட கொண்டை நீக்கி, மான்மழு சூலம் நீக்கி,
காருண்ய மூர்த்தி வந்தார்! காஞ்சிமா நகரே வந்தார்!

Sunday, September 16, 2018

15.09.2018 : அனுஷ நன்னாள்

15.09.2018 : அனுஷ நன்னாள்

பாரதியின் "தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு 
சூழ்கலை வாணர்களும்" என்ற பாடல் வரிகளின் சந்தத்திலே பெரியவாளைப் பற்றிப் பாடவேண்டும் என்று தோன்றியது.  

ஆனை முகனாய், குஹனாய், அன்னை பராசக்தியாய், அந்த அன்னை சிவகாமி உளம்கவர் நடராஜனாய், அந்த அன்னையேயான திருமாலாய் விளங்கும் பெரியவாளை நமஸ்கரித்து, பாடலை, பெரியவாளின் பாதாரவிந்தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.



ஐந்து கரத்தவன் ஆனை முகக்கண
நாதனருட் கனியோன் - நித்தம்
சிந்துமருள் அமுதக்கடலாய் வரும்
முக்தனவன் நீயே! (1)

மன்றினில் ஆடிடும் வார்சடையன் நட
ராஜனெனும் தலைவன் - அவன்
சிந்தையில் ஆடிடும் சீர் மகனாம்
நடை ராஜன் அவன் நீயே! (2)

பாற்கடலிற் துயில் மாபொருளாம்
பரந்தாமனெனும் இறையோன் - அவன்
கூறும் உரைப் பொருள் தானது வாய்
திகழ்ந்திட்டவனும் நீயே! (3)

அண்டமனைத்தருள் நாயகியாம் பரா
சக்தி எனும் அன்னை - அவள்
விண்டமுதாமந்த வேதமதன் பொருள்
முற்றதுதுமாம் நீயே! (4)

வேலது கொண்டசுரர் குலம் மாய்த்திடும்
சூரனவன் முருகன் - எழில்
கோலமதே உரு கொண்டருள் செய்திடும்
சித்தனவன் நீயே! (5)

அத்தனை தெய்வமும் ஆனவுரு குரு
முத்தனவன் நீயே - எங்கள்
சித்தம் உறைந்தென்றும் இன்னருள் செய்திடும்
வித்தகனும் நீயே! (6)

Monday, July 23, 2018

23.07.2018 : அனுஷ நாள்


23.07.2018 : அனுஷ நன்னாள்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை. இந்த அனுஷ நாளிலே அடியார்களுக்கெல்லாம் என்னவெல்லாம் ஆசைகள் இருக்கும்? பெரியவா அதிஷ்டானம் செல்லவும், காஞ்சிவாழ் முனியின் அபிஷேகம் காணவும், அவருக்கு பூஜைகள் செய்யவும் என்று நிச்சயம் ஆசைகள் இருக்கும்.

அடியேனுக்கும் அவ்விதமே.

ஆனால், இந்த அனுஷ நாளிலே, வேறு வேறு விதமான ஆசைகள் மனதிலே தோன்றுகின்றன. ஒரு “time machine” ல் ஏறி, அந்த உம்மாச்சித் தாத்தாவின் குழந்தைப் பருவத்திலிருந்து, அந்தத் தெய்வக் குழந்தையின் பக்கத்திலேயே இருந்து பார்த்துப் பார்த்துக் களிக்க வேண்டுமென்று தோன்றியது.

மனதிலே கண்டு களித்த அந்த ஆசைகளையெல்லாம், இங்கே பட்டியலிடுகிறேன்.

பெரியவா சரணம்.



*************************************************************************************************************************

குழந்தையாய்த் தவழும் உன்னை அள்ளியே அணைக்க  ஆசை
பொழுதெலாம் உன்னை மார்பில் தூக்கியே சுமக்க ஆசை

சதுர்வேதம் மணக்கும் வாயில் வந்திடும் மழலை எல்லாம்
நிதமுமே கேட்க ஆசை; மறையதால் நிறைய ஆசை

ஓடியே ஆடும் தெய்வச் சிறுவனாம் உந்தன் பக்கம்
நாடியே நித்தம் நானும் இருந்துளம் களிக்க ஆசை

விளையாட்டுப் பிள்ளை நீயும் அலுத்தகம் திரும்பும்போது
களைப்பெலாம் போக்கி உண்டி கொடுத்துனைப் பார்க்க ஆசை

பள்ளிக்குப் பாடம் நீயும் படிக்கவே செல்லும்போது
துள்ளி நீ செல்லும் அழகை பார்த்து நான் ரசிக்க ஆசை

உலகுக்கே குருவாம் நீயும் வகுப்பிலே இருக்கும்போது
பல கற்கும் குழந்தை உன்னைப் பார்த்துளம் களிக்க ஆசை

கேட்டிடும் கேள்விக்கெல்லாம் விடைகளைச் சொல்லும் செல்லச்
சூட்டிகைக் கன்றைக் கண்டு வியக்கவே நெஞ்சில் ஆசை

உன்பாத ரேகை கண்டு, உருகியே நின்றாரந்த
நன்மகனாரைக் கண்டு வணங்கியே நிற்க ஆசை

குருவினைக் கண்டு நெஞ்சம் சிலிர்த்தவர் அண்மை தேடிக்
கருக்கலில் ஓடிச்சென்ற குழந்தையைக் கொஞ்ச ஆசை

வந்த அச்சிறுவன் பின்னாள் "பெரியவாள்" ஆகப் போகும்
விந்தையை அறிந்த பரம குருவையும் பார்க்க ஆசை

உலகுக்கே குருவாம் உன்னைத் தரணிக்குத் தந்த பெற்றோர்
தலம் நாடி நமஸ்கரித்துப் போற்றியே நிற்க ஆசை

குருமார்கள் இறையைச் சேர, மடமுன்னை அழைக்க நீயும்
அருந்தவ வாழ்வை நாடிச் சென்றதைப் பார்க்க ஆசை

எதற்கிந்த அழைப்பு என்று அறியாமல் வண்டி ஏறிப்
பதறிய குழந்தை தன்னை அணைத்தங்கு நிற்க ஆசை

எதற்கிந்த அழைப்பு என்று அறிந்தபின் ராம நாமம்
அதனையே சொல்லிச் சென்ற குழந்தையோடிருக்க ஆசை

சிறுவனாய்ச் சென்று லோக குருவாக உயர்ந்த நாதன்
திருமலர்ப் பாதம் தன்னை வணங்கியே நிற்க ஆசை

குருகுல வாசம் செய்யும் பரமனைத் தொழுது நாளும்
அருகினில் இருந்து சேவை செய்யவே மனதில் ஆசை

பாடமே சொல்ல வந்த குரு அவர் உன்னிடத்தில்
பாடமே கேட்ட அந்த நாளுன்கூடிருக்க ஆசை

காவிரியாற்றில் நீந்தி அக்கரை சேரும் நாதன்
சேவடி சென்னி வைத்து வாழ்வினைக் கடக்க ஆசை

காசியாத் திரையாய்ச் செல்லும் பால சன்யாசியோடு
பேசியே ஊரூராக யாத்திரை செல்ல ஆசை

பால சன்யாசி காஞ்சி ஸ்வாமியாய் உயர்ந்திருக்கும்
கோலமே கண்டு நித்தம் கூடவே இருக்க ஆசை

பாத யாத்திரையாய் எங்கும் பெரியவா செல்லும் நேரம்
பாதைசீர் திருத்தி வைத்துப் பாதமே தாங்க ஆசை

பள்ளிக் கல்லூரி பாடம் சந்தேகமெல்லாம் கூட,
மெள்ள உம்மாச்சித் தாத்தா அவரிடம் கேட்க ஆசை

உம்மாச்சித் தாத்தா உண்ட உச்சிஷ்டம் உண்டு நானும்
சும்மாவே இருந்து சொல்லும் அற்றுப் போய்விடவே ஆசை

மானுடப் போர்வை போர்த்து நாடெலாம் நடந்த தெய்வக்
கோனினை நாளும் போதும் நெஞ்சிலே சுமக்க ஆசை

Monday, June 25, 2018

26.06.2018 : அனுஷ நன்னாள்


26.06.2018 : அனுஷ நன்னாள்
இன்றைய அனுஷ நன்னாளிலே, பெரியவாளை, “விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே” என்று தொடங்கும் தோடகாஷ்டகத்தின் அந்த சந்தத்திலே பாடவேண்டும் என்று தோன்றியது.
பக்தி மயமா, பகவத் பாதாளைப் பாடின அந்தத் தோடகாச்சார்யாளோட பக்தி, வினயத்தில் கோடியில் ஒரே ஒரு துளியாவது அடியேனுக்கும் வரட்டும்.

உனை நான் நிதமும் தொழுதே பணியும்
ஒருமா வரமே தருவாய், வருவாய்!
வினையா வையுமே பொடியாக்கிடுவாய்
குரு சங்கர தேசிகனே சரணம்! (1)

அறுமா பகைவர் குடியேறியழி
உளமீதினிலே குருவே வருவாய்
உறுபா வியிவன் பொறுத்தே அருள்வாய்
குரு சங்கர தேசிகனே சரணம்! (2)

உனையோர்க் கணமும் நினையா மனமா
கியசேற்றினிலே பதபங்கயமா
இணையே தருவாய் இனிதே வருவாய்
குரு சங்கர தேசிகனே சரணம்! (3)

திருவின் மகனே! பெருமாமலைதன்
மகளின் மகனே! குருபுங்கவனே
ஒரு சீருமிலேன் பதமே அருள்வாய்
குரு சங்கர தேசிகனே சரணம்! (4)

குறையேது மிலா தவமா மலையே
விலையேதுமிலா அருள்மா மழையே!
நிறையேதுமிலா எனையும் தடுத்தாள்
குருசங்கர தேசிகனே சரணம்! (5)

பிறைசூடியசன் திரசேகரனே!
விதி நாடிபணி சுடர்க்கோமகனே!
இறையாமுனையே கதியாயடைந்தேன்
குருசங்கர தேசிகனே சரணம்! (6)


மதியேதுமிலேன் கதியேதுமிலேன்
சிறையாமுடலே சுகமென்றுழல்வேன்
துதிசெய்துனது கழலே பணிந்தேன்
குருசங்கர தேசிகனே சரணம்! (7)


மறை நாயகனே சரணம் சரணம்
மலைமா மருகா சரணம் சரணம்
கறைக் கண்ட நடேசா! சரணம்!
குருசங்கர தேசிகனே சரணம்! (8)



Saturday, April 7, 2018

Anusham Day :5.4.2018

5.4.2018 : அனுஷ தினம்
இன்றைய அனுஷத்தில், பெரியவாளை ஸ்மரிக்கும்போது, தன்னை முற்றும் மூடி மறைத்துக்கொண்டல்லவ அந்த “மறை” நாயகன் இங்கே வந்திருக்கிறான் என்று தோன்றியது. 
 சிரசிலே சந்திரகலை மறைத்து, கங்கையை மறைத்து, சூலப்படையை தண்டமாக ஏந்தி, ஜடாபாரத்தை நீக்கி, நாக அணிகலங்களை நீக்கி, நெற்றிக் கண்ணை ஒளித்து, தன்னொரு பாதியாம் உமை – அவளையும் ஒளித்து, கையில் சுடரும் நெருப்பினை ஒளித்து, அம்பலத்தில் ஆடிய பாதங்களை,, இந்த பாரதம் முழுக்க நடக்கச் செய்து…என்று, எத்தனை எத்தனை ஒளித்து, மூடி மறைத்து அந்த ஈசன் நம்மிடையே மானிடனாய்த் தோன்றி நடமாடி இருக்கிறான்!
 எத்தனை மறைத்தாலும், ஒளித்தாலும், ஈசா, உம்மை நாங்கள் கண்டுகொண்டுவிட்டோம் அப்பா!!



பாதி மதியது தானும் மறைத்தருள்
சோதி முகம்தனை கண்டு கொண்டேன்
சோதி முகத்தவர் நாமத்தை நித்தமும்
திடல் நிம்மதி என்றும் கண்டேன் (1)

வானின் பெரு நதி தாங்கி மறைத்தருள்
கோனினை நானிங்கு கண்டு கொண்டேன்
கோனினிரு பதம் எண்ணுகையில் கண்ணில்
வானதி பொங்கி வழியக் கண்டேன் (2)

சூலப் படையதை தண்டமாய் ஏந்திடும்
கோல அழகனைக் கண்டுகொண்டேன்
மாலவன் போற்ற்டும் சீலநின் நாமமே
காலனைக்கொல் சூலம் என்றும் கண்டேன் (3)

பாரமுடியதும் நீக்கி ஒளிர்ந்தருள்
தாரணி மார்பனைக் கண்டு கொண்டேன்
ஆரமுதன்னவன் பாதம் பணிய நம்
பாரமும் நீங்கிடும் என்றும் கண்டேன் (4)

நாக அணியதும் நீக்கித் திகழ்ந்தருள்
ஏகம்பனையிங்கு கண்டு கொண்டேன்
ஏகன் அனேகந்தன் நாமமே சொல்கையில்
சோகமாம் நஞ்சுமழியக் கண்டேன் (5)

நெற்றியில் கண்ணதை மூடி மறைத்தருள்
குற்றமில் சீலனைக் கண்டு கொண்டேன்
உற்றவன் பாதம் பணிந்திடப் பாவத்தைச்
செற்றிடும் நெற்றிக்கண் என்றும் கண்டேன் (6)

மாதொரு பாகத்தை மூடி மறைத்தருள்
வேதத்தலைவனைக் கண்டு கொண்டேன்
வேதமுழுப்பொருள் தானிங்கு வந்தது
மாதவளாகவே என்றும் கண்டேன்(7)

கையில் நெருப்பதை மூடி மறைத்தருள்
ஐயனிவனென்று கண்டு கொண்டேன்
வையமளந்த அம்மாலயன் போற்றியே
உய்யும் நெருப்பிவன் என்றும் கண்டேன் (8)

ஆடிய பாதமொளித்து அடியரை
நாடிய பாதனைக் கண்டு கொண்டேன்
வாடிடும் பக்தரைக் காக்கவென்றே விரைன்
தோடிடும் பாதமாம் என்றும் கண்டேன் (9)

எத்தனை எத்தனை மூடி மறைத்திங்கு
சித்தனும் வந்தனன் கண்டு கொண்டேன்
அத்தனையும் இங்கு தானருள் செய்யவே
அத்தனும் வந்தனன் என்றும் கண்டேன் (10)

Thursday, February 8, 2018

09.02.2018 : அனுஷ நாள் : இன்னொரு பிறவியென்னும் ஓர்வரம் கேட்டேன் அப்பா


09.02.2018 : அனுஷ நாள் : இன்னொரு பிறவியென்னும் ஓர்வரம் கேட்டேன் அப்பா

இன்று, அனுஷம். பெரியவாளின் பக்தர்கள் ஒன்றுகூடி அந்த தெய்வத்தை ஆராதிக்கும் திருநாள்.

இந்த நாளிலே, பெரியவாளை ஒரு வரம் கேட்க வேண்டும் என்று தோன்றியது. “அப்பனே, எனக்கு இன்னொரு பிறவி தருவாய் அப்பா” என்று கேட்கத் தோன்றியது.


பெரியவா சரணம். 



ரோஜாவாய்ப் பிறந்திருந்தால், அப்பனே! தேவர்க்கெல்லாம்
ராஜாவே! உன் கழுத்தில் மாலையாய் விழுந்திருப்பேன்!

மல்லியாய் மலர்ந்திருந்தால், ஐயனே! அடியார்க்கெல்லாம்
நல்லனே! உந்தன் தோளை, அலங்கரித்திருந்திருப்பேன்!

முல்லையாய் இருந்திருந்தால் பிறவியாம் பிணியை நீக்கும்
எல்லையாம் உந்தன் பாதம் அலங்கரித்திருந்திருப்பேன்!

சம்பங்கிப் பூவாய் நானும் பிறவியே எடுத்திருந்தால்
சம்புவின் பாதம் தீண்டும் ஓர் பூவாய் இருந்திருப்பேன்!

அரளியாய் நானுமிங்கே பிறவியே எடுத்திருந்தால்
அரனேயுன் தண்டம்தன்னை அலங்கரித்திருந்திருப்பேன்!

பவழமல்லிப் பூவாய் பிறந்திருந்தாலோ உந்தன்
நவ நவக் கோலம் கண்டுன் மேனியே சேர்ந்திருப்பேன்!

தாமரை மலராய் நானும் இருந்திட்டால் உந்தன் பாதத்
தாமரை மலரில் சாற்றும் ஓர் பூவாய் இருந்திருப்பேன்!

ஓர் பூவாய் நானுமிங்கோர் பிறவியோ எடுக்கவில்லை!
பார் காக்கும் ஐயனே உன் பாதமும் சேரவில்லை!

இந்த ஓர் அனுஷ நாளில், உன்னையோர் வரம் நான் கேட்டேன்!
இந்த ஓர் பிறவி நீங்கி, இன்னொரு பிறவி கேட்டேன்!

மனிதனாய்ப் பிறவி வேண்டேன்! செல்வமும் நிதியும் வேண்டேன்!
பனிசடைக் கடவுளே, என் அப்பனே! ஐயா! என்றும்,

உன்மேனி அலங்கரிக்கும் ஓர் பூவாய் உன்னைச் சேர,

இன்னொரு பிறவியென்னும் ஓர்வரம் கேட்டேன் அப்பா!

Saturday, January 13, 2018

13/01/2018 : அனுஷ தினம்

13/01/2018 : அனுஷ தினம்

சென்னையிலிருந்து குடிபெயர்ந்து பெங்களூர் வாழ்வு. பெங்களூரிலிருந்து குடிபெயர்ந்து மும்பாய். சரியாய் 1 வருஷம் மும்பாய் வாழ்க்கை. மறுபடி இப்போது பெங்களூர் வாழ்வு. அலைச்சல். மறுபடியும் குழந்தைகளுடைய school; மறுபடியும் வீடு தேடும் படலம். வேலை. அடுத்து என்ன அடுத்து என்ன என்று மென்மேலும் உத்யோக நினைவு. சாப்பாடு. தூக்கம்.

பெரியவாளை நினைக்க எங்கே நேரம்?

துளி பக்தி இருந்தாலும் ஓடி வந்து அருளும் அந்த தெய்வமேதான் அந்த ஒரு துளி பக்தியையும் கொடுத்து அருள வேண்டும்.

பெரியவா சரணம்.




****************************************************************


ஊனதும் உருகி நில்லேன்; உள்ளொளி ஏதும் இல்லேன்
தேனுனை அறியாப் பிறவி படைத்திங்கும் கவலை இல்லேன்
நானெனதென்றே வாழும் வாழ்வதே குறியாய்க் கொண்டேன்
வானவர் ஏத்தும் கோனே! வந்தெனைக் காப்பாய் ஐயா (1)

சிந்தையில் உன்னை வைத்து செந்தமிழ் கொண்டு பாடி
எந்தையே ஐயா என்று சந்ததம் போற்றி நில்லேன்
வெந்துயர் வாழ்வை மெய்யாய் கொண்டு நாள் கழிக்கின்றேனே!
முந்தைய வினையோ? எந்தாய்! வந்தெனைக் காப்பாய் ஐயா! (2)

உண்டுவீண் உறங்கி நாளும் வாழ்வினைக் கழித்தும் என்றும்
விண்ணவர் ஏத்திப் போற்றித் தொழுதெழும் அமுதாம் உந்தன்
தண்மலர்ப் பாதம் எண்ணாக் கடையனாய் இருக்கின்றேனை
அண்ணலே அபயம் தந்து அன்னையாய்க் காப்பாய் ஐயா! (3)

அன்பதே சிவமாம்; அன்பில் என்பதும் உருகும் என்பார்
என்மனம் என்னும் பாலை வனத்தினில் உன்பால் வைக்கும்
அன்பது துளியும் இல்லேன்; இலையெனும் பதைப்புமில்லேன்
நன்மையே அறியா நெஞ்சன் என்னையும் காப்பாய் ஐயா (4)

நாமமே கேட்க உள்ளம் உருகியே நிற்பாரந்த
சேமமே கொண்டார் கூட்டம் சேர்ந்துமே மாறா நெஞ்சில்
காமமும் களவும் கோபம் மட்டுமே கொண்டேன் உமையாள்
வாமமே கொண்டோய் வந்து என்னையும் காப்பாய் ஐயா (5)

அருளதே வடிவாய் வந்தோய்! உன்னருள் நாடேன்; வீணாம்
பொருளதே நாடும் தீய வழக்கதே வாழ்வாய்க் கொண்டேன்
மருளதே மனமாய்க் கொண்டேன்; அந்தகன் வருமுன் வந்துக்
குருபரா நீயும் இந்தக் கடையனை காப்பாய் ஐயா (6)

மனைவியை மக்கள் தம்மை, போற்றிடும் சுற்றம் தம்மை
அனைத்துமாய் எண்ணி வாழ்வேன்; பரமனே உன்னை நெஞ்சில்
தினையளவேதும் எண்ணா நிலையதில் பயமும் இல்லேன்
வினைப்பயன் தானோ? எந்தாய்! வந்து நீ காப்பாய் ஐயா (7) 

உறவென்று உன்னைக் கொள்ளேன்; உன்பதம் நினையேன் வாழ்வில்
பிறருக்கே உழைத்து நின்றேன்; பணத்திற்கே குறியாய் நின்றேன்
அறநெறி ஏதும் இல்லேன்; பக்தியோ சிறிதும் இல்லேன்
மறலியே வருமுன் வந்து என்னை நீ காப்பாய் ஐயா (8)

பதவியைப் பொருளை, போக வாழ்வினை அடைவதொன்றே
சதமெனக் கொண்டேன்; துன்பம் துயருமே வந்தும் உந்தன்
பதமதை நாடி வீழ்ந்துக் கதறிடா நெஞ்சம் கொண்ட
அதமனைக் கடைக்கண் பார்வை கண்டு நீ காப்பாய் ஐயா! (9)

இன்னருள் ஒன்றே வேண்டி உன்பதம் நாடி என்றும்
உன்னடி போற்றி நிற்கும் அடியவர் கோடி உண்டு
உன்னருள் நாடா நிற்கும் ஒருவனை எங்கு காண்பாய்?
அன்னையே! அப்பா! வந்தேன்! என்னையும் காப்பாய் ஐயா! (10)