Sunday, January 17, 2016

மஹா பெரியவா புராணம் : மஹா பெரியவாளின் வரலாறு - தமிழ் பாக்களில் : 2. விஜய யாத்ரா காண்டம் : பாக்கள் : 1 - 419

மஹா பெரியவா புராணம் 
2. விஜய யாத்ரா காண்டம்

மஹா பெரியவாளின் காதை தொடர்கிறது. இதுவரை, அவதாரக் காண்டம் பார்த்தோம். இனி, பெரியவாளின் அருள்பொங்கும் விஜய யாத்திரைகளைக் காண்போம். 

பெரியவாளின் கதையான, "பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு" என்ற அல்லயன்ஸ் பதிப்பகத்தாரினரால் வெளியிடப்பட்ட, "ஸ்ரீ சாம்பமூர்த்தி சாஸ்த்ரிகள், ஸ்ரீ குப்புஸ்வாமி ஐயர், 'சொல்லின் செல்வன்' பி.என்.பரசுமராமன்"  அவர்களால் எழுதப்பட்ட புத்தகத்தின் துணையையும், ஸ்ரீ. கணேச சர்மா அவர்களின் "பெரியவா சப்தாஹத்தின்" துணையையும், ஸ்ரீ. ரா. கணபதி அண்ணாவின் புத்தகங்களையும்,  இந்த முயற்சிக்குத் துணையாகக் கொள்ளுகிறேன்.


ஸ்ரீ சாம்பமூர்த்தி சாஸ்த்ரிகள், ஸ்ரீ குப்புஸ்வாமி ஐயர், 'சொல்லின் செல்வன்' பி.என்.பரசுமராமன், ரா.கணபதி அண்ணா மற்றும் ஸ்ரீ. கணேச சர்மா அவர்களுக்கு, என் பணிவார்ந்த நமஸ்காரங்கள். 


காண்டம் : 2 : விஜய யாத்ரா காண்டம்
படலம் : 1 : திருவானைக்காவல்


இன்று முதல், விஜய யாத்ரா காண்டம் தொடங்குகிறது. பெரியவாளின் 87 ஆண்டு கால பீடாதிபத்யத்தில், அவர் கால் தேய, உடல் நோக, பாரத்தின் மூலை முடுக்குக்கெல்லாம் சென்றிருக்கிறார். கோவில்கள், ஸ்தலங்கள், மலைகள் என்று தரிசனம் செய்து இருக்கிறார். கிராமம் கிராமமாக நடைப்பயணம் செய்திருக்கிறார். அனேக கோடி மக்களுடன் பேசி அவர்கள் குறையெல்லாம் தீர்த்து இருக்கிறார். 

அவருடைய முதல் யாத்திரையான திருவானைக்காவல் கும்பாபிஷேக யாத்திரையிலிருந்து தொடங்குவோம். 


"முதன் முதலில் பெரியவா கலந்து கொண்டது 1908-ம் வருடம் திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்."

- கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் - ஸ்ரீ. எஸ்.கணேச சர்மா


பார்வதி ஒருமுறை, ஈசனின் ஆணையால்
சீர்நிறை கைலாயம் விட்டேகி பொன்னியின்
நீர்கொண்டு லிங்கமே செய்துடன் பூசையும்
பேர்கொண்ட வெண்நாவல் மரத்தடி செய்தனள் (1)

அப்புவாய் நின்றானச் சிவனுமே மகிழ்ந்துடன்
வெப்பினால் தவித்ததன் சகிக்குடன் வந்தனன்
செப்பிநல் உபதேசம், சிவஞானம் தந்தங்கு
அப்பெருமானுமே அருள்புரிந்தாண்டனன்  (2)

தல வரலாறு: புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும்,மற்றும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும். இந்த தல வரலாற்றை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவஸ்தலம் பதிகத்தில் (4-ம் திருமுறை - "ஆதியில் பிரமனார் தாம்" என்று தொடங்கும் பதிகம் - 4வது பாடல்) தெரிவிக்கிறார்.


சிவகணம் ஒருமுறை, சாபத்தால் உருமாறி 
தவம்செய்ய சிலந்தியாய், யானையாய் வந்தனர்
சிவலிங்கம் வெயிலிலே, மழையிலே இருப்பதை
கவனமாய்ப் பார்த்தது அந்தவோர் சிலந்தியும்! (3)

லிங்கத்தின் மீதுதன் வலையினைப் பின்னியே
அங்கு அச்சிலந்தியும் லிங்கத்தைக் காத்தது! 
முங்கி ஓர்குளத்திலே குளித்தேகி யானைதன்
பங்குக்கு அபிஷேகம் செய்யவும் வந்தது! (4)

சிலந்தியின் வலையினைப் பார்த்தது யானையும்!
நலம்தரும் ஈசனின் மேலிது போலவே
உலர்ந்த இவ்வலையினைப் போட்டது யாரென
பலமுடன் துதிக்கையால் அழித்துத் துடைத்தது! (5)

அந்நாள் இரவிலே சிலந்தியும் வந்தங்கு
முன்னாள் பின்னிய வலையுமே இன்மையால்
"என்னே இது"வென வருந்தியே மறுபடி
முன்னிலும் நன்றாய் வலையினை அமைத்தது (6)

"யாரிதைச் செய்வது?" சிலந்தியும் சினந்து
போரிட நினைத்தது;  ஈசனின் இடத்திலே
பேரிடர் விளைப்பாரைக் கொன்றாலும் தகுமென
ஓரிடம் ஒளிந்து வெறியுடன் பார்த்தது (7)

யானையும் மறுநாள் அபிஷேகம் செய்தது
"ஏனிது ஈசன்மேல் எச்சிலைத் துப்பியே
நானிட்ட வலையையும் அழித்திங்கு நிற்குதே?
கோனுக்கு இப்படி அபசாரம் செய்யுதே?"  (8)

நினைத்திட்ட சிலந்தியும் சமயமே பார்த்தது
தானுமே யானையின் துதிக்கையில்  நுழைந்ததன்
ஊனுமே அழிந்திட யானையைக் கடித்தது
வானுமே அதிர்ந்திட, வலியிலே கத்தியே, (9)

கடிபட்ட யானையும் நிலம்புரண்டுருண்டது
அடிபட்டு அதுவுமே  விஷமேறி சுருண்டது
துடித்தங்கு இறந்தது;  களிறதன் துதிக்கையில்
பிடிபட்ட சிலந்தியும் இடிபட்டிறந்தது (10)

இறந்த அவ்வானையும் சிவகணம் ஆனது
இறந்த அச்சிலந்தியோ, அரசனாய்ப் பிறந்தது 
சிறந்த பல்லாலயம் சிவனுக்கு அமைத்தானை
திறந்துளே வரப்புகா ஆனைக்கா அமைத்தது! (11)

அகிலாண்டேஸ்வரி அம்மன் உக்கிரம் மிகுந்தவளாக இருந்தாள். நேரில் நின்று யாரும் தரிசனம் செய்ய முடியவில்லை. அச்சமயம், ஆதிசங்கரர் அங்கு வந்து அவளுடைய உக்கிரத்தைத் தணிக்க, தாடங்கம் பண்ணி அதனில் அவள் உக்கிரத்தை அடக்கி வைத்து நாமெல்லாம் சுலபமாக தரிசனம் செய்யும்படிச் செய்தார். அது முதல், அந்தக் கோயிலின் எல்லா முக்கிய நிகழ்வுகளும் காமகோடி பீடாதிபதிகளால் நடக்க வேண்டுமென்பது சம்பிரதாயம்.


- கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் - ஸ்ரீ. எஸ்.கணேச சர்மா


தல வரலாறு : மேலும் : 
திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள். அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.


கலியின் கொடுமையால் மக்கள் மாறியே
நலிவது கண்டனள்; தேவியும் நொந்தனள்
வலியவர் கொடுமையில் சினந்த தாயுமே
பலியுமே கேட்டங்கு கோபமாய் நின்றனள்  (12)

சங்கரர் வந்தங்கு தாய்நிலை பார்த்துடன்
சங்கடம் தீர்த்திடும் ஸ்ரீசக்ர ரூபமாய், 
மங்கலம் சேர்த்திடும் தாடங்கம் செய்ததை,
அங்கவள் காதிலே ப்ரதிஷ்டையும் செய்திட்டார்!  (13)

சங்கரர் வந்தங்கு தாய்நிலை பார்த்துடன்
சங்கடம் தீர்த்திடும் ஸ்ரீசக்ர ரூபமாய், 
மங்கலம் சேர்த்திடும் தாடங்கம் செய்ததை,
அங்கவள் காதிலே ப்ரதிஷ்டையும் செய்திட்டார்! (14)

மெள்ளவே கோபமும் குறைந்திட உடனவர்
பிள்ளையார் தம்மையே அன்னையின் முன்னிலே
உள்ளம் நிறைத்திடும் ப்ரணவாகாரமாய்
வெள்ளமாய்க் கருணையில் அமரவே செய்திட்டார்! (15)

கோவில் சிறப்பு: திருவானைக்கா பஞ்சபூத ஸ்தலங்களில் அப்புஸ்தலம். மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைபட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். மேலும் இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.

சங்கரரும் தாடங்கம் செய்திட்ட ஸ்தலமதனால்

மங்கலமாய் பூஜையுமே செய்திடவே கோவிலிலே 
சங்கரனார் பீடம்வழி வந்தகுருமாரவர்க்கே
பங்கெதிலும் உண்டங்கு! முதலிடமும் உண்டங்கு! (16)

திருவானைக்காவலாம் பஞ்ச பூதஸ்தலம்
திரு'நீரு' லிங்கத்தைச் சுற்றிலும் கசிந்திடும்!
திருக்கரம் கொண்டீசன் தான்நின்று கட்டிய, 
திருக்கோவில் மதிலுண்டாம்; "திருநீற்றான் மதிலெ"ன்பர்! (17)

திருவானைக்காவல் கோவில் பற்றியும், அன்னை அகிலாண்டேஸ்வரி பற்றியும் பேசும்போது, "அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்" என்றா முத்துஸ்வாமி தீக்ஷிதர் க்ருதி நினைவுக்குவருவது இயல்புதான். இந்த blog படிக்கும் அனைவருமே இந்தப் பாடலை, பாடலின் பொருளை, அந்தப் பாடலில் இருக்கும் அனேக கதைகளை, அந்த அகிலாண்டேஸ்வரி உறையும் திருவானைக்காவலின் தல புராணத்தை நிச்சயம் அறிந்திருப்பார்கள். யாருக்கேனும் இந்தப் பாடல் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றினால் , இந்த blog ஐ, refer செய்யலாம் :



"திருச்சிராப்பள்ளிக்கடுத்த ஜம்புகேஸ்வரம் என்ற திருவானைக்கா க்ஷேத்திரம் ப்ரசித்தி பெற்றது. அங்குள்ள கோவிலை சங்க காலத்து மன்னன் கோச்செங்கட் சோழன் கட்டினான் என்பர். 1908 - ஆம் வருடம், அக்கோயிலுக்குக் கானாடுகாத்தான் சா.ராம குடும்பத்தார்கள் பல லட்ச ரூபாய்கள் செலவிட்டுத் திருப்பணி செய்து, அவ்வருடம் பிப்ரவரி மாதத்தில் (பிலவங்க, தை) கும்பாபிஷெகத்திற்கு நாளும் குறிப்பிடிருந்தார்கள். அக்காலத்தில் தென்னிந்தியாவில் நடந்தேறிய கும்பாபிஷேகங்களில் இது மிகச் சிறந்த ஒன்றாகும். சிருங்கேரி ஸ்ரீ.சாரதா பீடாதிபதிகளான ஜகத்குரு ஸ்ரீ நரசிம்ம பாரதி ஸ்வாமிகளும் அவ்வைபவத்திற்கு எழுந்தருளியிருந்தார்கள்".

"இந்தக் கும்பாபிஷேகத்தை நடத்தி வக்க வேண்டுமென்று திருவானைக்காவிலிருந்து, பால ஸ்வாமிகளுக்கு அழைப்பு வந்தரு. விஜய யாத்திரையைத் தொடங்க விருப்பம் கொண்டிருந்த அவர்களுக்கு இஃது ஓர் அரிய சுப சகுனமாயிற்று. நல்ல வேளையில் அவர்கள் மடத்தினின்று புறப்பட்டு, கும்பாபிஷேக தினத்துக்கு ஒரு வாரம் முன்பே, ஜம்புகேஸ்வரம் போய்ச் சேர்ந்தார்கள். அவர்களுடைய முன்னிலையில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தேறியது".

- பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு


"இதில் இன்னொரு விசேஷம் சிருங்கேரி சங்கராசார்யாரும் அந்த கும்பாபிஷேக வைபவத்தில் கலந்து கொண்டது ஆகும்". 

- கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் - ஸ்ரீ. எஸ்.கணேச சர்மா


இத்தகு சிறப்புகள் கொண்ட அக்கோவிலின்
புத்தொளிர் கும்ப அபிஷேக விழாவிற்கு
உத்தமக் காஞ்சி, சிருங்கேரி முதல்வோரை
சத்குருதேவரை, வருமாறழைத்தனர் (18)

பதிநான்கு வயதிலே, பால சன்யாசியாய்
பதியெலாம் சென்றிட, பணிந்திட நினைத்தவர்
பதியவன் அன்னைக்கு உபதேசம் செய்திட்ட
பதியிலே கும்பாபிஷேகம் எனச் சொல்லி  (19)

திருவானைக்காவலாம் அப்பதி வந்திட
திருச்செல்வர் தமக்கு வந்த அச்செய்தியும் 
திருவடி வைத்திந்த பாரதம் நடந்திட
திருவுளம் கொண்டார்க்கு சுபச் செய்தியாயிற்று!  (20)


பெரியவா கலந்து கொண்ட திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் பற்றி, பெரியவாளே சொல்வதை, பரணிதரன் எழுதுகிறார்: 

பெரியவா பட்டத்துக்கு வந்த அடுத்த வருஷம் [1908]. திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் தாடங்கப் பிரதிஷ்டை கும்பாபிஷேகம் நடந்தேறிய அசாதாரணச் சூழ்நிலையை, நேரில் காண்பது போல் விவரித்தார்.

‘நான் ஒரு சின்னப் பல்லக்கில் போயிண்டிருந்தேன். ரொம்பப் பக்கத்திலே சிருங்கேரி மடம் ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகள் ஒரு பெரிய பல்லக்கில் வந்திண்டிருந்தார். நான் இத்துனூண்டு பையன். சுவாமிகளோ பெரியவர். அவர் எப்படியிருக்கார்னு பார்க்கணும்னு எனக்கு ஆசையாயிருந்தது. மெள்ளத் திரும்பிப் பார்த்தேன். அதே நேரம், அவரும் என் பக்கம் திரும்பினார். பார்க்க ஜோரா, கம்பீரமாயிருந்தார். அவரை அவ்வளவு கிட்டே பார்த்த காட்சி எனக்கு இப்ப கூட நன்னா ஞாபகம் இருக்கு.’

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்நிகழ்ச்சியைத் தத்ரூபமாக நடித்துக் காட்டினார். மேலும் தொடர்ந்தார்:

‘அப்புறம் மடத்திலே இருந்த பெரியவர்கள் என்னை உள்ளே அழைச்சுண்டு போய் அகிலாண்டேஸ்வரிக்குப் பக்கத்திலே ஒரு மூலைல ஒக்கார வெச்சுட்டா. ஒரே இருட்டு. அந்த இடத்தை விட்டு நகரவே கூடாதுன்னுட்டா. ரொம்ப நாழி ஒக்காந்திண்டிருந்தேன். காத்தே இல்லே. வேர்த்து வேர்த்துக் கொட்டித்து. ஒரே பசி வேறே. எப்பக் கும்பாபிஷேகம் முடிஞ்சி, எப்ப வெளியே வரப் போறோம்னு ஆயிடுத்து எனக்கு…’ சொல்லிவிட்டு கடகடவென்று சிரிக்கிறார்.
 - பரணிதரன் 

குருவுமே பதியாம் அப்பதிக்குச் (அப்பு+பதிக்கு) சென்றிட 
திருவுளம் கொண்டுதம் அடியாரைப் பணித்திட்டார் 
ஒருவாரம் முன்னரே ஆனைக்கா ஏகிடும் 
திருவுளம் போலவே அனைத்தும் நடந்தது!  (21)

சிறுதளிர் பல்லக்கில் சென்றிடும் வேளையில்
விருக்ஷமாம் அதனையும் வழியிலே கண்டது!
திருவுடைச் செல்வனாய்க் காஞ்சிமாமுனியுமே
விருத்தராம் சிருங்கேரிக் குருவையே வழியினில் (22)

கண்டார் சங்கரர் தம்மையேதாம் கண்டார்!
கண்டார் ஜோதியின் ரூபமே வருவதை!
கண்கொளாக் காட்சியாய் அக்கினிக் குஞ்சது
கண்ணெதிர் அக்கினிப் பிழம்பையே கண்டது!  (23)

பால ஸ்வாமியையங்கே அம்பாளின் சன்னதியில் 
காலைப் பொழுதே வந்தமர்ந்திடச் சொல்லிவிட்டார்
காலம் முடியும்வரை, குடமுழுக்கு முடியும் வரை
சீலர் அங்கிருக்க வேண்டுமெனக் கேட்டதனால் (24)

குடமுழுக்கெலாமங்கு முடிந்திடும் வரையிலும்
இடம் விட்டகராமல் இருந்திடச் சொன்னதால்
அடமாகப் பசிதாகம் எடுத்தாலும் வேர்த்தாலும், 
திடமாக சுவாமிகள் அங்கேயே இருந்திட்டார்!  (25)

அகிலாண்டேஸ்வரியின் சன்னதியின் உட்சென்று
அகிலமெலாம் ஆளவந்த ஸ்வாமிகளும் சோர்வையெலாம்
சகித்துமனம் அன்னையவள் பதமலரில் லயித்திடவே
மகிழ்வுடனே அன்னையவள் அருகினிலே அமர்ந்திருந்தார்  (26)

விடமுண்ட கண்டர்தம் மருந்தாக ஆனாளை, 
இடப்பாகம் அமர்ந்தாளை, அகிலாண்ட நாயகியை
குடமுழுக்கு செய்வித்து, தாடங்கம் அணிவித்துப்
படமாகத் தம்நெஞ்சில் பதித்தவர்தாம் கொண்டாரோ?  (27)

அன்னையைத், தந்தையை விட்டுவந்த துளிரதுவும்
அன்னையிவள் சன்னதியில் பெற்றுவந்த வரமெதுவோ?
தன்னையிந்த தரணிக்கே தந்துவிட்ட பாலகர்க்கு
மின்னிடையாள் மனமுவந்து தந்துநின்ற பதமெதுவோ? (28)


காண்டம் : 2 : விஜய யாத்ரா காண்டம்
படலம் : 2 : இளையாத்தங்குடி


அதன் பின் பெரியவா இளையாத்தங்குடி என்ற இடத்துக்கு வந்தார். பெரியவாளைத் தேர்ந்தெடுத்த பரமகுருவுக்கும் குருவான பரமேஷ்டி குரு ஸித்தியடைந்த தலம் அது. அதனால் பெரியவா அங்கு சென்று குருவின் குருவை தரிசித்து, அப்பகுதி மக்களின் உபசரிப்பை ஏற்ற பின் கும்பகோணம் திரும்பினார்.


- கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் - எஸ்.கணேச சர்மா

அதன்பின் ஸ்வாமிகளுக்குத் தமக்குமுன் 65-ஆவது குருவாயிருந்த ஸ்ரீ மகாதேவேந்திர ஸரஸ்வதி அவர்களின் அதிஷ்டானத்தைத் தரிசிக்க வேண்டுமென்ற விருப்பம் உண்டாயிற்று.  அந்த அதிஷ்டானம் இராமநாதபுரம் ஜில்லா, இளையாற்றங்குடி என்ற கிராமத்தில் இருக்கிறது.

- பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு


அம்பிகை அணியவென்று தாடங்கம் புதிதாய்ச் செய்தார்
உம்பரும் வாழ்த்தக் கோவில் கும்பாபிஷேகம் செய்தார் 
தம்முளத் தாகம் தீர, குரு அதிட்டானம் காண
எம்மனோர்க் கென்றே வாழும் பெரியவா நினைத்து விட்டார்!  (29)


 ஸ்தல வரலாறு : தேவர்கள் அசுரர்களுக்குப் பயந்து பூலோகம் வந்தபோது இங்கு இளையாத்தங்குடியில் மன நிம்மதி உணர்வை அடைந்தனர்.  இங்கு மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்டனர்.  நித்ய கல்யாணி அம்மையையும் வழிபட்டனர்.  சிவனருளால் வைரவர் தோன்றி அரக்கர்களை வென்று அச்சம் தீர்த்தார். 

தேவர்கள் போரில் தோற்று, களைப்புடன் வந்தபோது
பாவனம் செய்த ஊராம்! இளைப்பாற்றித் தந்த ஊராம்!
ஆவன செய்த ஊரில், மணலாலே லிங்கம் செய்து
சேவடி துதித்த ஊராம்! தேவரும் ஜெயித்த ஊராம்!  (30)


இளைப்பாற்றிக் கொடுத்ததாலே, 'இளையாற்றங்குடி' என்பாராம்!
களையான ஊராம் தர்மம் நிலைத்திடும் ஊராம் அங்கே
விளைந்திடும் பயிரும்கூட சிவநாமம் சொல்லும் ஊராம்
வளைகொண்ட மாதர் தம்மின் பக்தியால் சிறந்த ஊராம்  (31)


சவுந்தரபாண்டியன் என்ற மன்னன் வைசியர்களுக்கு,  கடலுக்கு மேற்கு,  பிரான்மலைக்கு கிழக்கு  வைகையாற்றுக்கு  வடக்கு,  வெள்ளாற்றுக்கு தெற்கு  (இன்றைய செட்டிநாட்டு பகுதி 3 எல்லை கட்டுப்பட்ட நிலப்பரப்பை வழங்கினார்.  கோவில்கள் மடங்கள் வீடுகள் அமைத்துக் கொள்ள உரிமை வழங்கினார்.  அரியூர் நகரம்.  பிரான்மலைக் கோவில்  சுந்தரப்பட்டணம் கோவில் இளையாற்றங்குடி நகரக் கோவில் ஆகியவற்றையும் பாண்டிய மன்னன் வைசியர்களுக்கு வழங்கினார். பாண்டிய மன்னனால் நகரத்தார்க்கு வழங்கப்பட்ட முதற்கோவில் இளையாத்தங்குடி ஆகும்.

http://www.ilayathankuditemple.in/Nagarathar.htm



அகமகிழ்ந்தாங்கோர் மன்னன் வழங்கிய கோவில் தொட்டு
மிகப்பழங்காலம் முதலே தம்குலத்தார்க்கு என்று 
நகரத்தார் செட்டிமார்கள் ஒன்பது கோவில் கட்டி
இகபரம் எல்லாம் நல்கும் சிவனையே துதித்த ஊராம்! (32)


நித்ய கல்யாணி ஸமேத கைலாச நாதன் தன்னை
நித்தமும் துதித்து மக்கள் நிம்மதி அடையும் ஊராம்!
வித்தகர் நிறைந்த ஊராம்! வாணிபம் செழித்த ஊராம்!
உத்தமர் நிறைந்த ஊராம்! அறமது வளரும் ஊராம்!  (33)


காமகோடி பீடத்தில் 65-ஆவது ஆசாரிய மூர்த்தமாக எழுந்தருளியிருந்த ஸ்ரீ மகாதேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் 1889-ஆம் வருடத்தில் செட்டி நாட்டிற்கு யாத்திரையாகச் சென்றிருந்தபோது, இளையாற்றங்குடியில் சில மாதங்கள் தங்கியிருந்தார்கள்.  அவ்வூர் ஆலயத்தைச் சார்ந்த நகரத்தார்கள் ஸ்வாமிகளிடம் மிகுந்த மரியாதை காட்டி, அவர்கள் தங்குதற்குரிய வசதிகள் யாவற்றையும் அமைத்துக் கொடுத்திருந்தார்கள்.  ஸ்வாமிகள் ஒரு நாள் அவ்வூரைக் கால் நடையாகச் சுற்றி வந்த போது, புதர் அடர்ந்த ஓர் இடத்தைக் கண்டு, அதில் ஒரு நாழிகை தங்கினார்கள்.  மறுநாள் அவர்கள் தேவஸ்தான டிரஸ்டியிடம் அந்த இடத்தை மடத்திற்குக் கொடுக்க இயலுமா என்று கேட்க, ஸ்வாமிகளின் கருத்தை உணராத அந்த டிரஸ்டியார் கோயிலுக்கு அருகிலேயே அகன்ற வேறொரு ஸ்தலத்தை ஸ்வாமிகளுக்குக் கொடுப்பதாக வாக்களித்தார்.  ஆனால் ஸ்வாமிகளோ தாம் குறித்த இடமே வேண்டுமென்று வற்புறுத்தினார்.


இது நிகழ்ந்த ஒரு வாரத்திற்குள் ஸ்வாமிகளுக்கு நோய் கண்டு, உடல்நலம் குன்றி, அவர்களும் நிர்விகல்ப சமாதியை அடைந்தார்கள்.  அந்த நாள் விரோதி வருஷம் பங்குனி மாதம் 8-ந் தேதி (20-3-1860) வியாழக்கிழமை, அமாவாசையாகும்.   ஊரார் முன் நடந்த செய்தியைக் கேட்டு வியப்படைந்து ஸ்வாமிகள் குறிப்பிட்ட இடத்திலேயே அவர்களுக்குச் சமாதியை அமைத்து, அவ்விடத்துக்கருகில் ஒரு சிவலிங்கத்தையும் ஆதிசங்கரர் விக்ரகத்தையும் பிரதிஷ்டை செய்தார்கள்.  அந்தக் கோயில் இன்றும் இளையாற்றங்குடி தேவஸ்தானத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.


- பூஜ்யஸ்ரீ. மஹாஸ்வாமிகள் வரலாறு

பீடத்தின் அறுபத்தைந்தாம் குருவுமே வந்து சந்திர , 
சூடனை, கயிலை வாழும் நாதனைப் பணிந்து ஏத்தி, 
கூடதாம் உடலை விட்டு எல்லைகள் யாவும் விட்டு
வீடதை அடைந்து தன்னுள் லயித்தங்கு நிலைத்த ஊராம்! (34)


ஊரதைக் கண்டு, குருவின் அதிட்டானம் தொழவே என்று
ஏரகச் செல்வன் பெயரைத் தாங்கியே உலகில் வந்து
பாரதும் போற்றும் குருவாய் உயர்ந்த அப்பாலர் வந்தார்!
வேரதாம் செல்வர் குருவாம் நீரதை நாடி வந்தார்!  (35)

அதிட்டானம் வந்து அவரும் குருவவர் முன்னே நின்று
விதியையும் வெல்லும் ஆசி தந்திடும் குருவை சிந்தை
பதித்தவர் பாதம் உள்ளம் வைத்ததை முழுதும் குருவின்
பதியதாய் ஆக்கி,"எந்தாய்! கருணையே பொழிவாய்" என்று  (36)

பசிதாகம் மறந்து ஏதும் புசிப்பதும் மறந்து "எந்தன்
சசிதரன் நீயே, வினையை நசிப்பதும் நீயே" என்று, 
கசிந்துளம் உருகிக் கண்கள் பெருகியே கண்ணீர் மல்கி
மசிந்துடல் ஒடுங்கிக் கீழே, கைவிட்ட கோல்போல் வீழ்ந்தார் (37)

தோடகத் துதியைச் சொல்லி, தோத்திரம் எல்லாம் சொல்லி
ஏடவிழ் மலர்கள் கொண்டு பூசைகள் செய்து நின்று,
பாடல்கள் பஜனையோடு, பாதமே பற்றி, யாரும்
தேடரும்  பதமும் கண்டுருகி மெய்விதிர்த்து நின்றார் (38)


காண்டம் : 2 : விஜய யாத்ரா காண்டம்
படலம் : 3 : கும்பகோணம் - மஹாமஹம்

மகாமகத்திற்குக் கும்பகோணம் திரும்புதல்
பன்னிரு வருஷங்களுக்கொருமுறை வரும் மாசிமகத் திருநாள் கும்பகோணத்தில் மகாமகம் என்ற பெரிய திருவிழாவாகும். மேலே கூறிய யாத்திரையை முடித்துக் கொண்டு, நம் ஸ்வாமிகள் 1909-ஆம் வருடம் மார்ச்சு மாதம் கும்பகோணத்திற்குத் திரும்பினார்கள்  அவ்வருக்ஷம் மகாமக வருஷம்.  அதற்கென அரசாங்கத்தாரும், பொது மக்களும் விசேக்ஷ ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.  மடத்திலும் யாத்திரிகர்களுக்காக ஏராளமான இட வசதியும் உணவு வசதியும் செய்து கொடுக்கப்பட்டன. மகாகமகத்தன்று ஸ்வாமிகளை யானையின் மீது அம்பாரியிலமர்ந்து, தஞ்சை அரசர் குடும்பத்தினர் முன் செல்ல, மகாமகக் குளத்திற்கு ஸ்நானத்திற்கு சென்ற காட்சி, அவ்வருட மகாமகத்தில் ஒருதனிச் சிறப்பு வாய்ந்த விழாவாகக் காணப்பட்டது.

 - பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு


பதம்கண்டுருகி நின்றார் யாத்திரை முடித்துப் பின்னர், 
இதம்தந்து இன்பம் நல்கும் தலமதே காண வந்தார்
நிதம் வந்தோர் வினைகள் தீர்த்து வாழவே வைக்கும் ஊராம்
சதகோவில் கொண்ட ஊராம், கும்பகோணம் என்பாராம்  (39)


தல வரலாறு


உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம். சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார்

- தமிழ் வைகிபீடியா

குடத்திலே அமுதம் இட்டு விதியுமே இமயம் வைக்க,
கடல் பொங்கிக் கும்பம்தன்னை, வேகமாய் தெற்கே தள்ள,
கடம் சென்று நின்ற ஊராம்; குடமூக்கு என்று பேராம்
இடம் அது மூவர் மற்றும் யாவரும் வந்த ஊராம்  (40)
  

கும்பமும் தரையைத் தட்டி, நின்ற அவ்விடத்தில் வந்து
கும்பத்தில் விதியும் வைத்த அமுதத்தைக் குறியாய்க் கொண்டு
அம்பொன்று சிவனும் எய்ய, குடமுமே உடைந்து எங்கும்
இம்பரெல்லாரும் உய்ய, அமுதமே நிறைந்த ஊராம் (41)

சிந்திய அமுதம் தோய்ந்த மண்ணையே கொண்டு சிவனும்
தந்ததோர் லிங்கம் தன்னில் தன்னையே வைத்த ஊராம்
வந்தவன் பெருமை எல்லாம் பாடிய பெரியோர் தம்மின் 
சிந்தனை நிறைந்த ஊராம், குடவாசல் என்றும் பேராம் (42)

துன்பமும் துயரும் தீர்க்கும், இன்பமும் வாழ்வில் சேர்க்கும்
ஒன்பதாம் கோள்கள் கோவில் சுற்றியே அமைந்த ஊராம்
என்புமே பிறர்க்கு நல்கும் கருணையால் உயர்ந்த மாந்தர்
அன்பதால் நிறைந்த ஊராம்; அருளதால் நிறைந்த ஊராம் (43) 


மகாமகக் குளம்

கும்பகோணத்தில் நடைபெறும் விழாக்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் பெயர் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருக்கும் சேர்க்கை நடைபெறும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது. மகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்தில் கூடுவர். காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன. மகாமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருகுளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம். இந்த மகாமகக் குளம் சுமார் 20 ஏக்கர் பரப்புடையது.

- தமிழ் வைகிபீடியா


பனிரெண்டு ஆண்டுக்கொன்றில் வந்திடும் நாளாம் வளரும்
பனிமிகும் திங்கள் பொங்கும் பௌர்ணமி நாளும் மகமும்
இனிதுடன் சேரும் நாளாம் மகாமகம் எனச் சொல்வாராம்
கனிவுடன் சப்த நதியும் குளத்திலே பொங்கும் நாளாம் (44)

பாவங்கள் தீர்க்கும் நாளாம், சோகங்கள் போக்கும் நாளாம்
தேவரும் வந்து தீர்த்தம் ஆடியே செல்லும் நாளாம்
சேவடி தொழுத பேரை, அன்றங்கு குளித்த பேரை, 
மூவரும் வந்து காத்துப் பாவனம் செய்யும் நாளாம் (45)

முந்தியே தஞ்சை ராஜன் குடும்பத்தோடு ஏக,
செந்தவச் சுடரேபோல, எங்கள்மா தவமே போல
அந்த நாள் தீர்த்தமாட பாலராம் புனிதர் வந்தார்
வந்தவர் யானை மேலே அம்பாரி ஆடி வந்தார் (46)

மகத்தையே காண வந்தார் மகத்தான காட்சி கண்டார்
மகத்திலே ஆட வந்தார், மகத்தொன்று வரவும் கண்டார்
ஜகமாட ஆடும் நாதர், அம்பாரி ஆடியங்கே 
இகமாட பரமுமாட, அன்பர் அகமாட வந்தார்  (47)


காண்டம் : 2 : விஜய யாத்ரா காண்டம்
படலம் : 4 : வித்யாப்யாஸம்

1909, 1910 இந்த இரண்டு வருடங்களும், , மடத்தின் ஆஸ்தான பண்டிதர்களால், கும்பகோணத்திலேயே ஸ்வாமிகளுக்கு சமஸ்க்ரித காவியங்கள் நாடகங்கள் ஆகியவற்றில் பயிற்சியும், வேதப்பயிற்சியும் செய்து வைக்கப்பட்டன. 

வித்தியாப்யாஸத்தை முன்னிட்டு, ஏகாந்தமான ஒரு இடம் நிர்ணயிக்கப்பட வேண்டியது அவசியமாகிவிட்டது. அகண்ட காவிரியின் வட கரையில், முசிறிக்கு மேற்கே ஐந்து மைலில், இயற்கை அழகுடன் அமைந்த மகேந்திர மங்கலம் என்னும் கிராமத்தை, இதற்கென மடத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டார்கள். 

- பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு


மகமன்று  தீர்த்தம் ஆடி, மகத்தான அருளும் செய்து
இகம் பரம் துக்கம் தீர்க்கும், அன்பர்கள் நெஞ்சம் என்னும்
அகம் அமர்ந்தருளுவார்தம், படிப்புமே மடத்திலேயே
உகந்தங்கு தொடரப் பெற்றார்; கற்றோர்கள் வந்தங்குற்று, (48)

வேதமும் தேடி நிற்கும் வேத நாயகன் அவருக்கு, 
வேதமே கற்றுத் தந்தார்; ஓதிடும் முறைகள் சொன்னார்
நாதத்தின் உருவாய் வந்து ,காவியம் தானானார்க்கு, 
வேதத்தின் மொழியும் அதனில் காவியம் பலவும் சொன்னார் (49)

பாலனாம் வேத மூர்த்தி தரிசனம் காண என்று 
காலமும் கருத்தில் இன்றி பலருமே வந்து நின்றார்
ஆலமே உண்டு, ஆலங்குடி வந்தமர்ந்த மூர்த்தி
போலவே வந்தார் கல்விக்கிடையூறாயிருந்ததென்று (50)

பாடங்கள் சொல்லவென்று இடமுமே மடத்தார் பார்த்தார்
தேடறும் குருவாய் வந்தார், சீடராய் இருக்கவென்று 
நாடதை விட்டுச் சற்றே காடதாய், கிராமப் பாங்காய்
ஈடறும் எழிலே கொஞ்சும் இடமதாய்  தேர்ந்தெடுத்தார் (51)

மக்களைக் காத்து நிற்கும் மகா-இந்திரர்க்கும் மற்றும் 
எக்குலத்தவர்க்கும் நன்மை பயந்திடும் ஊராம்; தானே
திக்கற்றவர்க்குவந்து பரிவையே அருளும் தெய்வம் 
திக்கெலாம் போற்ற கல்வி கற்ற அவ்வூரதம்மா! (52)

மங்கலம் நல்கும் ஊராம்!, "மகேந்திரமங்கலமே" பேராம்!
பொங்குகாவேரிக் கரையில் முசிறிக்கு அடுத்த ஊராம்
திங்களைத் தலையில் சூடி, கங்கையைத் தாங்கி நின்றார்
தங்கியே பாலர் போலக் கல்வியே கற்றார் அம்மா! (53)

நல்லவர் வாழும் ஊராம்; பல்லியம் முழங்கி எங்கும் 
நல்லிசை வாழும் ஊராம்; வல்லவர் போற்றி வாழ்த்தும் 
பல்லவ மன்னன் மகேந்த்ர வர்மனும் மான்யம் தந்து
நல்ல நான்மறையோர் வேதம் ஓதவே செய்த ஊராம் (54)

சதுர்மறை ஓங்கும் ஊராம்;  சதுர்வேதி மங்கல ஊராம்
யதுகுலக் கண்ணன் தொழுவார் சிங்கம் ஐயங்கார் மெத்தப்
பொதுநலம் கருதித் தந்த இடத்திலே தங்கி எங்கள் 
மதுரத்தில் மதுரவாணி படிப்பதாய் நடித்த ஊராம்! (55)

வித்யாப்யாஸம் செய்ய கூத்தனூர் செல்வார் இங்கோ, 
வித்தையே வந்திருந்து வேதமே பயின்ற ஊராம்!
வித்தைக்கு தெய்வம் வாணி படித்த ஊரதனால் இங்கு
வித்யாப்யாஸம் செய்தல் மிக்கவே நன்மை தருமாம்! (56)

பெருவலி வில்லின் ராமன் குருவழி கற்றான் பின்னாள்

திருவழி கீதை சொன்னான் அவனுமே குரு-வாய் கற்றான்
குருவழி கற்றல் ஒன்றே சரிவழி சேர்க்கும் என்னும்
ஒருவழி காட்டவென்றோ பாலரும் கற்றார் அன்று? (57)

ஆலங்குடி வந்தமர்ந்து தெற்கையே பார்த்திருந்தார்
நாலதாம் வேதம் கற்க நானிலம் வந்திட்டாரோ?
பாலராய் குருவின் மூலம் கற்கவே நினைத்திட்டாரோ?
வேலனாம் பாலர் கற்க வேண்டியது ஏதும் உண்டோ? (58)


சித்ரம் வடதரோர் மூலே வ்ருத்தாச்சிஷ்யா குருர்யுவா!
குரோஸ்து மௌனம்வ்யாக்யானம் சிஷ்யாஸ்து சிந்நஸம்சயா:

குருமுகம் கற்பாரெல்லாம் குருவினைப் பணிந்து கற்பார்
குருவிடம் தேடிச் சென்று பாடமே கேட்டு நிற்பார்
குருசொலும் வார்த்தையெல்லாம் மனத்துளே வாங்கிநன்கு
பொருளறிந்தமைதிக் கடலில் மனமமிழ்ந்தடங்கக் காண்பார் (59)

வயதிலே மூத்தோர் குருவும் அமர்ந்தங்கு பாடம் சொல்ல
வயதிலே சிறியோரெல்லாம் நின்றங்கு பாடம் கேட்பார்
நியமமாய் குருவும் சொல்ல, கவனமாய் சிஷ்யர் கேட்க
மயக்கமும் நீங்கிச் சீடர் தெளிவுமே பெருவார், நியதி!  (60)

நியதியாய் உலகோர் செய்யும் வகையெலாம் முறிய யாரும்
வியந்திடும் வகையில் புதிதாய் பாடமே நடந்ததென்பார்!
அயந்தலை கொய்தான் ஆலங்குடி வந்தமர்ந்தான் மோனம்
பயந்தங்கிருக்க சீடர் அனைத்துமே உணர்ந்தார் என்பார்  (61)

தென்திசை பார்த்த மூர்த்தி இளமையாய் அமர்ந்திருக்க,
இன்பதம் சுற்றி வ்ருத்த சிஷ்யர்கள் அமர்ந்திருக்க,
இன்னுரை அதுவும் இன்றி, மௌனமே மொழியாயாக
பின்னொரு கேள்வியின்றி விடையெலாம் கிடைத்ததென்பார்!  (62)


ஸ்வாமிகளின் வித்யாப்யாஸ முறை தனித்தன்மையானது. சாதாரணமாக மக்கள் தமக்குக் கல்வி கற்பிக்கின்றவர்களைத் தம் ஆசார்யர்களென மதித்து, அவர்களிடம் பக்தி செலுத்திக் கல்வி பெறுவார்கள். ஸ்வாமிகளுக்குக் கல்வி கற்பித்த பண்டிதர்களோ, ஸ்வாமிகளைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டவர்கள். பாடம் ஆரம்பிக்கும் முன்னரும், முடிந்த பின்னரும், அவர்கள் ஸ்வாமிகளுக்கு மரியாதை செய்வார்கள். இப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்தும், ஸ்வாமிகள் பாடங்கள் கற்கும்பொழுது, மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும், கல்வியில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடனும், வித்துவான்களிடம் மிகுந்த மரியாதையுடனும் கல்வி கற்று வந்தார்கள்.

 - பூஜ்யஸ்ரீ. மஹாஸ்வாமிகள் வரலாறு

அதிசயம் இதுதானென்று நினைத்து நாமிருந்தால் இங்கோ
ரதிஜயம் அடையச் செய்து, பதிக்கபஜயமே தந்தாள்
விதியவன் பணியும் காஞ்சிக் காமாக்ஷித் தாயின் பாலர்
பதியதில் பாடம் கற்ற அற்புதம் அதனின் மேலாம்!  (63)


குருவெனும் பாலர் தம்மை வயதிலே முதிர்ந்த "சிஷ்ய"
குருவெலாம் நாடி வந்தார்! இருப்பிடம் தேடி வந்தார்!
குருவெனும் பீடம்தன்னை, பாலரைப் பணிந்து நின்றார்!
குரு "சரி" யென்று சொல்ல, நின்றங்கு பாடம் சொன்னார்! (64)



"ஒருநாள், வழக்கம் போல, மடத்துக்குப் பின்னால் இருந்த தோட்டத்தில் கொட்டகை அமைத்து. அதில் காவேரி மணலைப் பரப்பிய இடத்தில் பாடம் தொடங்கியது. ...

ஒருநாள் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது, சீடர் மணலை அளைந்து கொண்டேயிருப்பதை குரு பார்த்தார். எதுவும் சொல்லாமல் தொடர்ந்து பாடத்தை எடுத்து முடித்தார். மறுநாளும் அப்படியே நடக்கவே, குரு பாடத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு எழுந்து, "நான் ஊருக்குப் போகிறேன்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். சீடருக்கு ஒன்றும் புரியவில்லை. "பாடம் நடந்து கொண்டிருக்கிறதே..." என்று நயமாகச் சொல்லிப் பார்த்தார். என்ன பிரச்னை என்பதை எப்படிக் கேட்பது? குருவே சொன்னார், "இப்போது படிப்பது சாதாரணப் படிப்பு அல்ல. மனம், புத்தி முழுவதையும் ஒருமுகப்படுத்த வேண்டிய படிப்பு. கவனம் எங்கேயும் திசை திரும்பக்கூடாது".

ஆத்மார்த்தமாகப் பாடம் நடத்துகிற அந்த குரு, முதல் நாள் தன் சீடர், தான் சொல்வதைக் கவனமாகக் கேட்கவில்லை என்ற மனத்தாங்கலுடன் இருந்தார். பதினைந்து வயதான சீடர் பாடம் நடக்கையில் மணலில் விரலை அளைந்து விளையாடிக் கொண்டிருந்தது, அவருக்குப் பொறுக்கவில்லை. ஆனால், கண்டிக்கவும் முடியவில்லை. அந்த சீடர், ஜகத்குரு ஆயிற்றே! என்ன செய்வது?  "பாடம் கேட்கப் பிடிக்காதவருக்காக நான் ஏன் சிரமப்பட்டு ஊரைவிட்டு ஊர்வந்து காத்துக் கொண்டிருக்க வேண்டும்?" என்று தோன்றிவிட்டது. அதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட பெரியவா, அடக்கமாக, "கோபித்துக் கொள்ளாதீர்கள்! நான் நேற்று மணலில் விளையாடிக் கொண்டிருந்தது உண்மைதான். என்றாலும், நீங்கள் சொன்னதில்தான் என் முழு கவனமும் இருந்தது"! என்று சமாதானப்படுத்த முயன்றார். குருவின் கோபம் குறையவே இல்லை. இதை எப்படி நம்புவது என்றும் புரியவில்லை. அதையும் தெரிந்து கொண்ட பெரியவா, "நான் சொன்னதில் நம்பிக்கையில்லை என்றால், சோதித்துப் பாருங்களேன்.." என்று கேட்டுக் கொண்டார். அதன்படியே முதல் நாள் நடந்த பாடத்தில் சில கடினமான கேள்விகளை குரு எழுப்பினார். அவர் முடிக்குமுன் பதில் பிரமாதமாக பெரியவாளின் வாயிலிருந்து வந்தது. அவர் கேட்டதற்கு மட்டுமில்லாமல், அதற்கு முன்னால் நடந்த செய்திகளையும், பின்னால் வரப் போகிற செய்திகளையும் கூடப் பொழிந்து தள்ளினார். இதைக் கேட்ட குரு ஸ்தம்பித்துப் போனார். "மன்னிக்க வேண்டும்...மன்னிக வேண்டும்.." என்று மனமுருகிக் கண்ணீர் விட்டார். நெடுஞ்சாண் கிடையாய்க் காலில் விழுந்தார். "எனக்கு உத்தரவு தரணும்; நான் ஊருக்குப் போகிறேன்" என்றார்!!

"மறுபடியும் புதிராக இருக்கிறதே!" என்று பெரியவா திகைத்தார். 'முதலிலே நான் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்று கோபித்துக் கொண்டு புறப்பட்டது நியாயம். இப்போது, நான் எல்லாம் சரியாகச் சொல்லியும் ஏன் கிளம்புகிறார்?" என்று நினந்த்த பெரியவா, கேட்டே விடுகிறார் : "நான் சரியாகப் பதில் சொல்லிவிட்டேன் போல் இருக்கே..." என்று தயங்கியபடி பேசினார். உடனே குரு, "நீங்கள் அருமையாக பதில் சொன்னீர்கள். உங்களிடமிருந்து நான்தான் நிறையத் தெரிந்து கொள்ளணும். தண்ணீர் கீழேயிருந்து மேலே பாயும் அதிசயத்தை நான் பார்த்தேன். இனி எனக்கு இங்கு வேலையே இல்லை! உத்தரவு  கொடுங்கள்!" என்றார்.

- கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் - ஸ்ரீ. கணேச சர்மா

ஒருகுரு அந்நாள் வந்து பாடமே சொல்லி நின்றார்!
திருகுருச் சீடர் மண்ணை அளைந்தவாறமர்ந்திருந்தார்!
குரு, ஜகத்குருவின் செய்கை புரியாமல் மனம் வெதும்பி
வருந்தியே விடையும் கொள்ள, அனுமதி கேட்டு நின்றார் (65)

விடையமர்ந்தருளும் அந்த சீடராய் வந்த ஈசன்,
விடைதர மனமில்லாமல், "சோதியும் என்னை" என்றார்!
விடைதரக் கடினமான வினாவெலாம் குருவும் கேட்க,
விடையாறு கிளம்பிற்றங்கே, மடையதை திறந்தாற்போல! (66)

கேள்வியே கேட்ட குருவும் விடைகளால் திகைத்தார்! உடனே
தாள்பணிந்தழுதார் மீண்டும், "விடை தாரும்" என்றே கேட்டார்!
கோள்தொழும் பாதர் ஒன்றும் புரியாமல் விளக்கம் கேட்க,
"தூள்பட்டதெந்தன் கர்வம்; உமக்கினி பாடம் சொல்ல (67)

யாதொன்றும் அறியேன் யானும்; பாலனாய் நினைத்தேன் உம்மை;
"ஏதொன்றும் அறியாப் பிள்ளை", என்றுமை நினைத்து வந்தேன்
மாதொரு பாகம் கொண்ட ஈசனென்றுணரா நின்றேன்
ஓதலிங்குமக்கொன்றேதும் இல்லையென்றுணர்ந்தேன்" என்றார் (68)

1911, 1912,1913 ஆகிய இந்த மூன்று வருடங்களில், நம் நாட்டில், பிரசித்தி பெற்ற பண்டிதர்களுக்கும், தலைவர்களுக்கும், அந்தக் கிராமம் ஒரு யாத்திரை இடம் ஆயிற்று.

இக்காலத்தில், ஸ்ரீஸ்வாமிகளுக்கு முறையாகக் கல்வி உதவியவர்களுக்குள், பைங்கானாடு பஞ்சாபகேச சாஸ்திரிகள், மஹாமஹோபாத்யாய சாஸ்திர ரத்னாகர தி. வேங்கடசுப்பா சாஸ்திரிகள், சாஸ்திர ரத்னாகர விஷ்ணுபுரம் ஸ்வாமி சாஸ்திரிகள், திருவிசைநல்லூர் வே.வேங்கடராம சாஸ்திரிகள் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

இன்னும் அக்காலத்தில் மடத்து ஆஸ்தான வித்வாங்களாக இருந்து ஸ்வாமிகளின் வித்யாப்யாஸத்தில் ஈடுபட்ட மஹாமஹோபாத்யாய பைங்கானாடு கணபதி சாஸ்திரிகள், மஹாமஹோபாத்யாய கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரிகள், கோடி கன்னிகாதானம் உபய வேதாந்த ராஜகோபால தாதாசாரியார் முதலானவர்கள் முக்கியமானவர்கள்.

    - பூஜ்யஸ்ரீ. மஹாஸ்வாமிகள் வரலாறு


குரு இவர் என்று தேர்ந்து, தரும் பதம் சேரவென்று, 
திருப்புகழ் கொண்ட பாலர் இருப்பிடம் தேடிவந்து,
அரும்பெரும் தவமே செய்து, தனிப் பெரும் கல்வி தேர்ந்து
பெரும்புகழ் பெற்றோரெல்லாம் வந்தங்கே பாடம் சொன்னார்!  (69)

பாடமே கற்க நின்ற சீடரே குருவாய் நிற்க,
பாடமே சொல்லவந்த குருவெலாம் பாடம் கற்றார்!
நாடகம் ஆடும் ஈசன், குருவெலாம் தேற என்று
சீடராய் வந்து இங்கே தேர்வுதான் வைத்திட்டானோ? (70)


சிவனுக்குப் பாடம் சொல்லி, குருநாதன் ஆனான் கந்தன்
அவனுக்கு இணையிங்கில்லை என்ற ஓர் நிலைமை மாறி,
சிவன்தானாய் வந்த சீடர் அவருக்குப் பாடம் சொல்லி
சிவகுருவாகிவிட்டார்,  பாடம் சொன்னவரெல்லாரும்!  (71)


இவ்வளவு கல்வியோடு, ஸ்வாமிகள், ஆங்கிலத்துடன், பிரெஞ்சு மொழியையும் கற்று வந்தார். தவிர, மஹாராஷ்டிர மொழியையும், அதிலுள்ள நூல்களையும் கற்றார். தமிழில் ஸ்வாமிகளுக்கு இருந்த ஆர்வம் எல்லாவற்றையும் விட அதிகமாகும். ஓய்வு நேரங்களில், அவர்கள் சில புலவர்களின் துணை கொண்டு, தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்று வந்தார்கள்.  கலைகளுக்கு என்று அவர்கள் தனியாக நேரம் ஒதுக்கிக் கொள்ளவில்லை. கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களுடன் ஓய்வு நேரங்களில் பேசிக்கொண்டிருக்கும்போதே அக்கலைகளின் நுட்பங்களை அவர்கள் அறிந்து கொள்வார்கள். அவற்றுள், சங்கீதக் கலை ஸ்வாமிகளின் மனதை மிகவும் கவர்ந்தது. இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிப்பதிலும், அவற்றைப் படம் பிடிப்பதிலும் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். காமிரா நுட்மெல்லாமும் ஸ்வாமிகளுக்கு அத்துப்படியாயிருந்தது. கணிதம், ஜ்யோதிஷம், வானசாஸ்திரம் ஆகியவற்றிலும் ஸ்வாமிகள் நல்ல விற்பன்னராக ஆனார்கள். 

ஸ்வாமிகள் மகேந்திரமங்கலத்திலிருந்து திரும்பியபோது, அவர்களுக்கு வயது இருபது. இக்காலத்தினுள், அவர்கள்  பல துறைகளிலும் அறிவு நிரம்பி விளங்கினார்கள். புராணங்கள், ஸ்தல வரலாறுகள், கல்வெட்டுக்கள் ஆகியவற்றியப் பற்றிய அறிவு, நவீன உலக ஞானம் ஆகிய பல துறைகளிலும் அவர்களுக்கு நல்ல பரிச்சயம் ஏற்பட்டிருந்தது. 

ஒருமுறை அறிந்தவற்றை, அவர்கள் என்றும் மறப்பதில்லை. தம்மைக் காண வரும் அறிஞர்களிடமிருந்து தாம் அறிந்தவற்றோடு, தம் ஊகத்தால் ஒவ்வொரு அறிவின் தத்துவத்தையும் ஆராய்ந்து உண்மையைக் கண்டு கொள்வதில், நம் ஸ்வாமிகள் மஹா மேதைகளுள் ஒருவராகத் திகழ்ந்தார்கள். பிறரோடு பழகும் திறமைகளிலும், ஒவ்வொருவருடைய தாரதம்யத்தைச் சீர்தூக்கி அறியும் நிபுணத்துவத்திலும் அவர்களுக்கு இணையாக மிகச் சிலரையே கூறலாம். 

- பூஜ்யஸ்ரீ. மஹாஸ்வாமிகள் வரலாறு

வேதசாத்திரங்கள் ஓதி, சமய நூல்கள் எல்லாமோதி
பூதலத்தில் பேசும் மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சும் கூட
மாதலத்து மொழியாம் தமிழும் மற்றவும் தேர்ந்து நாதம்
கீதமும் மற்றும் யாவும் ஆதியோடந்தம் தேர்ந்தார்!  (72)

வான சாஸ்திரமும் கணித ஜ்யோதிஷம்  ஸ்தலபுராணம்
கோனவர் கதையைச் சொல்லும் கல்வெட்டு, பார்க்கும் காட்சி
தானதுவாகி நிற்கும் நிழற்படக் கலையும் , உலக 
ஞானமென்றெல்லாமுமிங்கே ஓதாது உணர்ந்து நின்றார்  (73)

கற்பவையெல்லாம் கசடறக் கற்றவை நெஞ்சம் நிற்கக்
கற்றவர் அவரொடு கலந்துடனளாவி பல்கலையும்  
கற்றவை உள்ளொளிர் தத்துவம் உணர்ந்தவையெலாம்
மற்றவர் அறிந்திடும் வகை எளிதாய் உரைசெய்தங்கு (74)

வந்திடும் அடியவர் தராதரமறிந்தவரை வழிநடத்தி 
முந்திடும் கருணையாலணைத்து அன்னவர்க்கருள் செய்து 
சிந்திடும் குரலோசை குழலோசையென கீதைசொல
சுந்தரப் பதமருள் தந்தெமைக் காக்கவே நடந்ததம்மா! (75)

1911 முதல் 1915 வரை மடத்தின் நிர்வாகம்: 
***********************************************************


1915ஆம் வருடம், மே மாதம் நடைபெற்ற சங்கர ஜயந்தி அன்று, ஸ்வாமிகளுக்கு, இருபத்தோராவது வயது பூர்த்தியாகவே, அன்று முதல் மடத்தின் நிர்வாகத்தை ஸ்வாமிகளே நேரில் ஏற்றுக் கொண்டார்கள். 

1915ல் சங்கர ஜயந்தி மடத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. 

ஆர்ய தர்மம் என்னும் தமிழ் சஞ்சிகையை மடத்தின் மாத வெளியீடாக அன்று ஸ்வாமிகள் ஆரம்பித்து வைத்தார்கள். மடத்தின் நிர்வாகத்திலும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. பலமொழிகளில் மடத்தின் சரித்திரம் வெளியிடப் பெற்றது. 

சங்கர ஜயந்தியன்று இருபத்தொன்றகவையேக
சங்கரர் சொன்ன பாதை போவது மட்டும் இன்றி,
சங்கரர் சொன்ன தருமம் காப்பது மட்டும் இன்றி,
சங்கர மடத்தைக் காக்கும் பொறுப்பும் வந்துற்றதம்மா!  (76)

சங்கர ஜயந்தி ஒன்றில், பண்டிகை எல்லாம் கண்டார்
சங்கரர் பெயரைத் தாங்கி வந்த இச்சீடர் என்றும்!
சங்கர ஜயந்தி அன்று, பாலரும் இளைஞராக,
சங்கர ஜயந்தி சீரும் சிறப்புமாய் நடந்ததம்மா!  (77)


காண்டம் : 2 : விஜய யாத்ரா காண்டம்

படலம் : 5 : சங்கர மட நிர்வாகம்


பெயரளவில் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளப்பட்டதேயொழிய, சர்வமுக்தியார் நாமா என்னும் அதிகாரம் பெற்ற ஏஜெண்டு ஒருவராலேயே மடத்தின் நிர்வாகக் காரியங்களெல்லாம் கவனித்து வரப்பட்டன. 

அக்காலத்தில், பால பருவம் தொடங்கியே ஸ்வாமிகளிடம் விசேஷப் பற்றும் பக்தியும் கொண்டிருந்த திருப்பாதிரிப்புலியூர்வாசியான அடையபலம் பசுபதி ஐயர் என்னும் சீடர், ஊதியமின்றி மடத்தின் நிர்வாகத்தை ஏற்று, எல்லாத் துறைகளிலும் திறம்பட பணியாற்றி வந்தார். அவரே இப்போதும், மடத்தின் நிர்வாகத்தை ஏற்று நடத்தி வந்தார். 

 - பூஜ்யஸ்ரீ. மஹாஸ்வாமிகள் வரலாறு

"தமக்குப் பரோபகாரம் புரிந்துள்ளவர்களில் முதலாமவர் என்று ஸ்ரீசரணாள் எந்நாளும் நெஞ்சார்ந்த நன்றி பாராட்டிய பசுபதி ஐயரின் நெருக்கமான தொடர்பு திருப்பதிரிப் புலியூரில் ஸ்ரீமடத்துக்கு ஏற்பட்டது. அவர் செய்த பரோபகாரம் என்னவென்றால், ஸ்ரீசரணாள் வார்த்தையிலேயே, "அவர்  மாத்திரம் நான் ஸ்வாமிகளானதுலேர்ந்து பத்து வருஷம் போல, என்னை ரூபம் பண்ணனும் எங்கிறதுக்கே தன் லைஃபைப் பூர்ணமா அர்ப்பணம் பண்ணி, ஸதாவும் என்னைக் கண்காணிச்சுண்டு, நல்லது பொல்லாததுகளை நயமாகவும் பயமாகவும் - ஆமாம் - பயமாகவும்தான் ; னன்னாவே கோவிச்சுக்கிண்டு, கடுமையாகவே கண்டிச்சுங்கூடத்தான் - சொல்லிச் சொல்லிக் கொஞ்சத்திலே கொஞ்சம் புத்தியிலே ஏத்தியில்லாட்டா நான் என்னதான் ஆயிருப்பேனோ தெரியாது! நான் ரூபமாயிட்டதா இன்னிவரைக்கும் எனக்குத் தெரியலைதான்; இருந்தாலும் அந்தத் தெசையிலே போகணும்-ங்கற லஷ்யமாவது எனக்கு இருந்திண்டுருக்குன்னா - அதுக்கு அவர் பட்ட பாடு - பண்ணின த்யாகந்தான் - காரணசக்தி"

அவதாரம் பண்ணின பெரியவாளை ரூபம் பண்ணவும் வேண்டுமா? அப்படியே பண்ணுவதாக இருந்தாலும், அவர் சரண் புகுந்த அம்பாளே தோன்றாத்துணையாக அதைச் செய்திருப்பாளே! யாரோ மனிதர், "பயமாகவும், கோவிச்சுக்கிண்டு, கடுமையாகவே கண்டிச்சுங்கூட" உருவம் செய்ய வேண்டிய அளவுக்கா அவர் குறைப் பிறவியினர்?" - நாம் இப்படியெல்லாம் நினைக்கிறோம். ஆயினும், அவர் சொன்னது, மெய்யுணர்ச்சியுடன் சொன்னது, அதுதான். 


- கருணைக் காஞ்சி கனகதாரை - ஸ்ரீ.ரா.கணபதி அண்ணா

சாலவும் சிறந்த நெஞ்சர், பசுபதி ஐயர் என்பார்
பாலரும் பீடமேறி நின்ற அன்னாள் முதலாக
சீலமும் தவமும் மேவி, சிந்தையால் சிவனாயந்த
பாலரும் ஆகவென்று, அரும்பெரும் பாடுபட்டார்  (78)


பசுபதி ஐயர் என்னும் மானுடர் வடிவில் இங்கு 
பசுபதியாக நிற்கும்  ஈசனே நேரில் வந்து  
பசுவது கன்றைக் காக்கும்  பரிவுடன் பாலர்தம்மை
பசுபதீஸ்வரனாய் மாற்றி நம்மிடம் கொடுத்திட்டானோ? (79)



மடத்தினைக் காக்கவென்றும், முத்ராதிகாரியாக, 
திடமனம் கொண்ட ஆளாய், பசுபதி ஐயர் நின்றார்!
உடனிருந்தனைத்தும் செய்து, கூலியேதுமில்லாமல்
கடமையாய் மடத்தைக் காத்துக் கவனமாய்ப் பேணிநின்றார்!  (80)


காண்டம் : 2 : விஜய யாத்ரா காண்டம்
படலம் : 6 : சங்கர மட நிர்வாகம் - நவராத்திரி உற்சவம்

நவராத்திரி உற்சவம்: 

1916 - ஆவது வருடம், அக்டோபர் மாதத்தில், கும்பகோணம் ஸ்ரீ மடத்தில் நவராத்திரி விழாவானது மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது, இந்த ஒன்பது நாட்களிலும் அம்பிகைக்கு லட்சார்ச்சனை செய்யப்பட்டது. 

லட்சம் பேர்களுக்கு மேல் அன்னதானம் செய்யும் பணியை, மஹான் தேப்பெருமாள்நல்லூர் சிவன் அவர்கள் ஏற்று நடத்தினார்கள்

பத்தாவது நாளாகிய விஜயதசமி அன்று இரவில், ஸ்ரீஸ்வாமிகள் உள்ளூர் கோயில்களுக்கு விஜயம் செய்து ஸ்வாமி தரிசனம் செய்து கொண்டார்கள். அன்று, யானை மீது அம்பாரியில், ஸ்வாமிகள் பவனி வந்த காட்சியைப் பல்லாயிரம் மக்கள் கண்டு களித்தனர். சுமார் ஒரு மைல் நீளமுள்ள அந்த ஊர்வலத்தை பெத்தாட்சி செட்டியாரும், ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்கத் தம்பிரான் ஸ்வாமிகளும் முன்னின்று நடத்தி வைத்தனர். இருபுறமும் நூற்றுக்கணக்கான பவர் விளக்குகள், கண்ணைக் கவரும் வாண வேடிக்கை, ஆறு ஜதை நாயனம், மூன்று ஜதை பாண்டு, வேத பாராயணம், தேவார கோஷ்டி, பஜனை கோஷ்டி, நாங்கு யானைகள், நாட்டியக் குதிரைகள் இவைகளுடன் அன்று தேஜோமயமாய் விளங்கிய ஸ்வாமிகளின் திருமேனியை தரிசித்து அனைவரும் பாக்கியசாலிகளானார்கள். 

- பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

1916-ம் வருடத்தில் மிக விமரிசையாக நடந்த வைபவம் அது.  லட்சார்ச்சனை, லட்ச தீபம் என்று அமர்க்களப்பட்டது. திரும்பின இடமெல்லாம் வேதகோஷம், பாராயணம், கச்சேரி என்று முழங்கியது. அந்தக் காலத்திலேயே ஒரு லட்ச ரூபாய் இதற்காக செலவழிக்கப்பட்டதாம்! ரூபாய் நோட்டையே அனேகம் பேர் கண்ணால் பார்த்தேயிராத காலம் அது. இப்போது கூட இத்தனை செலவழித்து நவராத்திரி கொண்டாடுவோமா என்பது சந்தேகமே. 

- கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் - எஸ்.கணேச சர்மா


நவராத்திரி உற்சவம் செய்து அன்னைக்கு ஒன்பது நாளும்
நவநவமாய் அலங்காரங்கள், அர்ச்சனைகள் எல்லாம் செய்து
பவரோகம் போக்கும் அன்னை அவளுக்காய் வீணை கானம்
உவந்திடும் வேதகோஷம், பாட்டுக் கச்சேரி வைத்து  (81)

அன்னையின் நாமம் அந்த ஆயிரம் சொல்லிச் சொல்லி
மின்னிடும் நாமம் எல்லாம் நாத்தழும்பேறி ஏறி
தன்னையே இழந்து அந்த அன்னையாய் மாறி மாறி
அன்னையாய்க் காட்சி தந்தார், கஞ்சிக் காமாக்ஷி பாலர்! (82)

விஜயதசமி அன்று, கோவில்கள் சென்றுவந்து
பஜனை கோஷ்டியோடு, கண்கவர்காட்சியாக
கஜத்தின் மேலமர்ந்து மக்கள் காணவூர் வலமுமாக
நிஜமிதோ என்றூர் வியக்க, வந்தார் காமாக்ஷி பாலர்! (83)

லட்ச ரூபாய்க்கு மேலே செலவுமே ஆனதென்பார்
லட்சமாம் தீபம், அங்கே அர்ச்சனை லட்சம் என்பார்
லட்சம் பேர் பார்த்தார் அங்கே லட்சம் பேர் உண்டாரென்பார்
லட்சியம் தேவி பூஜை , லட்சமும் துச்சம் என்பார் (84)



காண்டம் : 2 : விஜய யாத்ரா காண்டம்
படலம் : 7 : சங்கர மட நிர்வாகம் - கல்விக்கும் கலைகளுக்கும் ஊக்கம் அளித்தல்

1917 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், ஸ்வாமிகள் ஒரு வித்வத் சபையைக் கூட்டி, அக்காலத்தில் மஹா வித்வாங்களாக விளங்கிய பழமாநேரி ப்ரம்மஸ்ரீ ராமஸ்வாமி சாஸ்திரிகள், ப்ரம்மஸ்ரீ திருவிசைநல்லூர் வேங்கடசுப்பா சாஸ்திரிகள் ஆகியோருக்கு, சாஸ்த்ர ரத்னாகரம் என்னும் பட்டத்தை வழங்கி, இரட்டை சால்வை, வெள்ளி ஜாரி முதலிய சன்மானங்களை செய்து, அவர்கலை கௌரவித்தார்கள். இதே போன்று, நிறைய வித்துவாங்கள் ஸ்வாமிகளால் அவ்வப்போது, நன்கு கௌரவிக்கபட்டார்கள்.

அதே வருடம், கல்லூரி மாணவர்கள் நம் மதத்தில் பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை எண்ணி, அவர்களுக்கென ஆங்கிலத்தில் ஒரு கட்டுரைப் போட்டியை ஸ்வாமிகள் ஏற்படுத்தினார்கள். "காலத்தின் மாறுபாடுகளை அனுசரித்து, ஸநாதன தர்மத்தைக் காப்பாற்றும் முறையை எவ்விதம் நிர்ணயிக்கலாம்?" என்பது அப்போட்டியின் தலைப்பு. சென்னை, திருச்சி, மதுரை போன்ற பெரிய நகரங்களின் கலாசாலை மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

- பூஜ்யஸ்ரீ. மஹாஸ்வாமிகள் வரலாறு

கல்வி சிறக்கவென்று, கலைகள் வளரவென்று,
பல்விதமான வித்வத் சபைகளும் கூட்டி அங்கே
சொல்லிடும் "சாஸ்த்ர ரத்னாகர"ப் பட்டம் தந்து
நல்விதமாகக் கல்விமான்களை கௌரவித்தார் (85)

அனாதிகாலம் தொட்டு வந்திடும் தர்மம் இந்த
சனாதன தர்மம் இனியும் வாழுமோ வளமாய் என்னும்
வினாவதற்கு உடனே விடைகாண, நலமே வாழும்
கனாவில் இளைஞர் பங்கு சிறக்கவே வழியும் கண்டார்! (86)

தருமமே நிலைக்க என்ன தேவையென்றுணர்ந்த தேவர்
கருமமே கண்ணாயிங்கே சனாதன மதத்தைக் காக்க,
அருமையாய்த் தொண்டு செய்ய, இளைஞரை, அதிலும்கூட,
உருவாகிக் கொண்டிருக்கும் மாணவர் தம்மைச் சேர்க்க (87)

ஒருவழி கண்டார்! அதிலும், ஆங்கிலம் பயிலுவோரை
குருவழி ஈர்க்கவென்று தனிவழி கண்டார்! அவரை,
அருமையாய்த் தலைப்பு ஒன்று கொடுத்ததில் ஆங்கிலத்தில்
பெருமையாய் தருமம் வாழ வழியையே மொழியச் சொன்னார்! (88)

இந்த வருடத்திலும், வரும் வருடங்களிலும், மாணவர்களுக்கென உபகாரச் சம்பளம் கொடுப்பதென ஓர் ஏற்பாடும் செய்தார்கள். 

அக்காலத்தில் மடத்தில் ஒர் ஆயுர்வேத வைத்திய சாலையை நிறுவி, ஏழைகளுக்கு இலவசமாக வைத்திய வசதி கிடைக்கும்படி ஸ்வாமிகள் செய்திருந்தார்கள். 

- பூஜ்யஸ்ரீ. மஹாஸ்வாமிகள் வரலாறு

நகரங்கள் தோறும் இந்த கட்டுரைப் போட்டி வைத்து
சிகரமாய் வந்தோருக்கு, பரிசெலாம் தந்திளைஞர்
அகமெலாம் குளிர உதவித்தொகையதும் தந்து வேதம்
தகவுடன் வாழ இங்கே வழியதும் செய்து நின்றார்! (89)

வேதத்தை வாழ வைக்கும் வழியது மட்டும் இன்றி
சேதம் ஒன்றேதுமின்றி ஏழைகள் வாழ ஆயுர்
வேதமும் வளர வைத்ய சாலையும் ஏற்படுத்தி
ஏதமொன்றில்லா வாழ்வு வாழ்ந்திட வகையும் செய்தார் (90)

கலைகளுக்கு ஊக்கமளித்தல் : 
1914 முதல் 1918 ஆம் ஆண்டு வரை, ஸ்வாமிகள் கும்பகோணத்தில் தங்கியிருந்த காலத்தில், வடமொழி, தென்மொழி வித்வான்களும், சங்கீத வித்வாங்களும், கல்வியில் ஆர்வமுள்ள அன்பர்கள் பலரும், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஸ்வாமிகளை தரிசிக்க வந்து கொண்டிருந்தனர். காரசாரமாக சாஸ்திர விவாதங்கள் நடைபெறும். ஸ்வாமிகள் எல்லோருடைய கட்சியையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, முடிவில் ஒவ்வொருவருடைய கட்சியின் உண்மைகளையும் விளக்கி, யாவரும் ஏற்றுக் கொள்ளுமாறு விவாதத்தை முடிக்கும் அழகைப் பார்த்து யாவரும் ஆச்சரியமடைவார்கள். 
- பூஜ்யஸ்ரீ. மஹாஸ்வாமிகள் வரலாறு

வித்வான்கள் பலர் வருவார்; சபையிலே வந்திருந்து 
சத்தான விஷயங்கள் அவர்முன்னே பேசிடுவார்!
தத்துவங்கள் சொல்லி பலவாதங்கள் செய்தவரும் 
முத்தான கருத்துக்கள் எடுத்தங்கே வைத்திடுவார்! (91)

வாதம் பிரதிவாதம் ஸ்வாமிகளும்  செவிமடுப்பார்
நாதக் குரல் இனிமை நாவில் குழைந்து வர
நாதர் எடுத்துரைப்பார்; வாதம் முடித்து வைப்பார்!
வேதம் சொல்லுவதைத் தீர்ப்பாகச் சொல்லி நிற்பார்! (92)

அவதானக்கலை:

அந்நாளில், அஷ்டாவதானிகள், சதாவதானிகள் என்னும் பெயர் பெற்ற புலவர்கள் இந்த சபைகளுக்கு வந்து தங்கள் புலமைகளைக் காட்டுவதுண்டு. சதாவதானி என்பவர் நூறு விஷயங்களின் கேள்விகளை மனதில் வாங்கிக் கொண்டு, பின்னர் அவைகளுக்கு ஒன்று விடாமலும், தவறு இல்லாமலும் விடை கூறுவர். 

அவர்கள் திறனைப் பரீட்கிக்கும்போது, பண்டிதர்கள் அவர்களைச் சுற்றி உட்கார்ந்திருப்பார்கள். வடமொழியிலோ, தென்மொழியிலோ, ஒருவர், ஒரு செய்யுளின் முதலடியை மாத்திரம் கூறிவிட்டு, அடுத்த வித்வானிடம் விட்டு விடுவர். அடுத்தவர், ஒரு கணித சாஸ்திரியாய் இருந்தால், ஒரு பெரிய கணக்கை அவரிடம் கூறிவிட்டு, அதன் விடைக்காகக் காத்திருப்பார். மற்றொருவர், ஒரு சோதிடராக இருக்கலாம். அவர் ஒரு ஜாதகத்தை வாயால் கூறிவிட்டு, அதனுடைய இராசி பலனையும், அம்ச பலனையும் எதிர்பார்ப்பார்; சங்கீத வித்வான் ஒருவர் அபூர்வ ராகத்தைப் பாடுவார்; ஒருவர் ஒரு புஷ்பத்தின் பெயரைச் சொல்லி வைப்பார்; ஒருவர் ராமாயணத்தில் ஒரு குறிப்பிட்ட செய்கையை நிகழ்த்திய ஒரு அரக்கனது பெயரைச் சொல்லும்படி கேட்பார். இப்படி, இன்னும் பலவிதமான கேள்விகள் பிறக்கும்.  பரீட்சக்கு உட்படும் அவதானி, வரிசைக் கிரமமாக, அவற்றிற்கு ஒரு தவறும் இல்லாத விடைகளைக் கூறிக் கொண்டே வருவார்கள். பார்ப்பவர்களுக்கு, இக்காட்சி ஆச்சரியம் அளிக்கும். 
- பூஜ்யஸ்ரீ. மஹாஸ்வாமிகள் வரலாறு

அவதானம் செய்யவென்று அவதானித்தவரெல்லாம்
அவதாரம் செய்தவரின் அவையினிலே வந்திடுவார்!
அவகாசம் ஏதுமின்றி, அவதானம் செய்பவரை
நவநவமாய்க் கேள்வியெலாம் கேட்டங்கே சோதிக்க  (93)

பண்டிதர்கள் பலர் வருவார்; பரிட்சித்துப் பார்த்திடுவார்!
வெண்பாவில் ஈற்றடியே கொடுத்தங்கே பாடென்பார்; 
பண்ணதனைப் பாடியந்த ராகம்தான் கூறென்பார்; 
அண்ணல் இராமன் அம்பில் தப்பியவர் யாரென்பார்! (94)

ஐந்திலக்க எண் கொடுத்து பதிமூன்றால் வகு என்பார்
இந்த ஜாதகர் பலனை இங்கெமக்கு சொல்லென்பார்
சந்தமொன்றுரைத்ததிலே பாட்டொன்றைப் பாடென்பார்
நந்தா விளக்கதற்கு வடமொழிப்பேர் சொல்லென்பார்! (95)

புஷ்பத்தால் தொட்டிடுவார்; மணியொன்றை அடித்திடுவார்
இஷ்டம்போல் செய்துவிட்டு, எண்ணிக்கை சொல்லென்பார்!
அஷ்டாவதானியவர் பெரியவரேயானாலும், 
கஷ்டமான கேள்வியெலாம் கேட்டங்கே குடைந்திடுவார்! (96)

கேட்கப்படும் கேள்வியெல்லாம் அவதானம் செய்பவரும் 
வாட்டமின்றி கேட்டுளத்தில் பதித்து வைத்து மனமதுவும்
ஆட்டமின்றி ஊன்றி கேட்ட கேள்விகளை நினைத்திருக்க
கேட்ட அந்த வரிசையிலே பதில்களையும் சொல்லிடுவார்!  (97)

பூவதனால் தொட்டமுறை, மணியடித்த எண்ணிக்கை,
பாவதனை சந்தமுற முடித்தண்ணல் வாளிபெய்தும்
சாவதனில் தப்பியவன் பேர்சொல்லி ஜாதகமும்
மேவியதோர் கணக்கதையும் மற்றனைத்தும் சொல்லிடுவார்! (98)

ஸ்வாமிகளும் அவதானமும்: 
ஒரு சமயம், ஸ்வாமிகளைக் காண, மிகவும் வயோதிகரான ஸ்ரீ வைஷ்ணவ சதாவதானி ஒருவர் மடத்திற்கு வந்திருந்தார். வழக்கம்போல், வித்வான்கள் அவரை, இவ்விதமாகப் பரீட்சைக்கு உள்ளாக்கினார்கள். வித்வாங்கள் கேள்விகளையெல்லாம் கேட்டு வரும்போதே, ஸ்வாமிகள் மற்றொருவரைக் கொண்டு, தாம் கூறிவரும் விடைகளைக் குறித்துக் கொள்ளும்படி சொல்லியிருந்தார்கள். அந்தப் பெரியவர், சற்றும் தயங்காமல் விடைகளை அளித்தார். ஸ்வாமிகள் சொல்படி குறித்து வைத்திருந்த விடைகளும், அவர் கூறிய விடைகளும் ஒன்றாகவே இருந்தன. ஸ்வாமிகளின் மேதைமையைப் பற்றி, அங்கிருந்த அனைவருக்கும் வியப்புண்டாயிற்று. ஸ்வாமிகள் அந்த சதாவதானிக்கு, காஷ்மீர் சால்வையையும், பிற வெகுமானங்களையும் அளித்து பெருமைப் படுத்தினார்கள். 

ஒருநாளோர் வைணவப்பெரியார், ஸ்வாமிகளின் அவைக்கு வந்தார்
திருமுகம் மலர்ந்த தேவர், அழைத்தவரை அமர்த்தி வைத்தார்
"ஒருநூறு செயல்கள் செய்யும் அவதானக் கலையை உங்கள்
திருச்சபையதனில் காட்டி அருள் பெற வந்தேன்" என்றார் (99)

இதழ்க்கடை மலரும் அந்தக் குறுநகை ஒன்றால் முக்தி
அதனையும் தருமக் கஞ்சி காமாக்ஷித் தாயின் மைந்தர்
வதனமே மலர்ந்து, அங்குப் பண்டிதர் குழாத்தைக் கூட்டி
"சதஅவதானம் செய்ய வந்தவர் தம்மை நீரும், (100)

சோதித்துப் பார்ப்பீர்" என்றார்; தாமுமோர் அடியாரவரின்
காதிலே சொன்னார், "இந்தப் பண்டிதர் இங்கே அவையில்
வாதிலே கேட்கும் கேள்வி தமக்குமே நானும் காதில்
ஓதிடும் பதில்கள் தம்மை குறித்துவைத்திடுவீர் என்றார்" (101)

பண்டிதர் குழாமுமங்கே கேள்விகள் கேட்டு நிற்க
விண்டுடன் சதாவதானி பதில்களும் சொல்லி நிற்க
தண்மலர் மதிமுகத்துப் பெரியவா தானும் அங்கே
பண்ணினும் இனிமையோடு பதில்களைச் சொல்ல எல்லா (102)

பதில்களும் சரியானபடி  வைணவப் பெரியார் சொன்ன
பதில்களோடொத்துப் போக, அடியவர் குழாமுமங்கே
அதிசயப்பட்டு நின்றார்! வேதவேதியனாம் நாதன் 
உதிர்த்திடும் வார்த்தை எல்லாம் சத்தியம் தானே அன்றோ! (103)

கும்பகோணம் அரசாங்கக் கல்லூரியின் பௌதிகப் பேராசிரியராகவும் பின்னர் பிரின்ஸிபாலாகவும் விளங்கிய ஸ்ரீமான் ப்.ராஜகோபால ஐயர் ஸ்வாமிகளின் கலையறிவையும், மேதைமையையும் நண்பர்கள் மூலம் கேள்வியுற்று, அவர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாட வேண்டுமென்று விருப்பம் மொண்டிருந்தார்...

 ஆச்சார்ய ஸ்தானத்தில் உள்ள ஸ்வாமிகளுக்கு, எவ்விதம் வந்தனை வழிபாடுகளைச் செய்யவேண்டும் என்பதை அவர் உண்மையில் அறிந்தவரல்லவர். அப்படியிருந்தும், அவரது உள்ளத்திலிருந்த அன்பை மட்டும் ஸ்வாமிகள் உணர்ந்து கொண்டு, அவரை ஆதரவுடன் ஏற்று, அவரிடம் பேசத் தொடங்கினார்கள்....

பௌதிக சாஸ்திரத்தின் நுட்பங்கள் பலவற்றை, எளிதில் விவரிக்கும் ஸ்வாமிகளின் புத்தி நுட்பத்தைக் கண்டு ராஜகோபால ஐயர் வியந்தார்....

பின்னர் வான சாஸ்திரத்தைப் பற்றிப் பேச்சு தொடங்கியது. இந்தக் கலையில் நமது புராதன வழிக்கும், மேனாட்டார் வழிக்கும் உள்ள ஒற்றுமைகளை ஸ்வாமிகள் விளக்கிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் கூறிய விளக்கங்களைக் கல்லூரியிலிருந்து, ஒரு தூரதிருஷ்டிக் கண்ணாடியை வரவழைத்து மேலும் தெளிவுபடுத்தினார்கள். வான சாஸ்திரங்களின் நுணுக்கங்களை, ஸ்வாமிகள் தெளிவுபடுத்தியதைக் கண்டு, அந்த விஞ்ஞானிகள் மிகவும் வியப்படைந்தனர். சர்வகலாசாலைப் படிப்பு இல்லாமலேயே, இப்பயிற்சிகள் எல்லாம் ஸ்வாமிகளுக்கு எவ்விதம் ஏற்பட்டன என்று, அவர்கள் பெரிதும் வியப்பை அடைந்தனர். 

மெய்ஞான முனியைப் பார்க்க, விஞ்ஞானியெல்லாம் வருவார்
 உய்ஞ்ஞான வழியைச் சொல்லும் , தவஞானமுனியும் அங்கே
 செய்முறை வழியைச் சொல்லும் பௌதிகம் மற்றும் வானம்
 நெய்த அவ்வழகையெல்லாம் சொல்லும் அவ்வியலும் சொல்வார்!  (104)

பாரத நாட்டின் முன்னோர் அறிவினோர் மாட்சி சொல்வார்!
மாரதராக வந்தார் மேலையார் அறிவும் சொல்வார்!
சாரதி சொல்லிவைத்த கீதையின் நுட்பம் சொல்வார்!
ஏரது பூட்டிச் செய்யும் உழவினோர் அறிவும் சொல்வார்! (105)

பிற மதங்களில் சம திருஷ்டி: 
கடவுளை ஒப்புக்கொண்ட மதம் எந்த மதமாக இருந்தாலும், ஸ்வாமிகளுக்கு அதனிடம் நல்ல மதிப்புண்டு. அந்தந்த மதத்தினர் அவரவர் மதத்திலிருந்துகொண்டே கடவுளை வழிபட வேண்டுமென்பது  ஸ்வாமிகளின் அபிப்ராயமாகும். பலர் ஸ்வாமிகளின் பரந்த நோக்கத்தையும் சகிப்புத் தன்மையையும் நேரில் கண்டும் கேள்வியுற்றுமிருந்தனர். ப்ரம்ம ஞான சபையைச் சேர்ந்த ஸ்ரீ ஜினராஜ தாஸர், ஸ்வாமிகளை ஒருமுறை தரிசித்து உலக மதங்களைப் பற்றி விரிவாக உரையாடி, ஸ்வாமிகளின் பரந்த நோக்கங்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். 

இறைவனை ஏற்கும் மார்க்கம் எதுவுமே  சரியேயென்பார்!
கறையிலா உள்ளம் என்னும் சிறையிலே இறையை வைத்து 
மறைநான்கும், சிலுவைதானும், பிறையதும் தொழுவார் இங்கே
நிறைவுடன் வேண்டி நிற்க, இறையுமே வருமே என்பார்! (106)

நவமென நினைத்து வேறு மதத்திலே சேர வேண்டாம்!
கவர்ந்தடுத்தவரை நமது மதத்திலே சேர்க்க வேண்டாம்!
தவமென நினைத்து தத்தம் மதவழி கற்றுத் தேர்ந்து
அவரவர் மதத்தில் சொன்ன வழியதே செல்க என்பார்! (107)

சங்கீதத்திற்கு ஆதரவு:


சங்கீதத்திலுள்ள சாஸ்த்ரீயமான அம்சங்களைச் சுவைப்படில் ஸ்வாமிகளுக்கு இணையாக எவரையும் கூற முடியாது. பெரிய வித்வாங்கள் மடத்திற்கு வந்து கச்சேரிகள் நடத்தும் பொழுதெல்லாம் அவர்கள் பாடும் கீர்த்தனைகளின் அர்த்தங்களிலும், ராகம், தாளம் இவைகளின் நுட்பங்களிலும், ஸ்வாமிகள் தமது கவனத்திச் செலுத்தி, வித்வாங்கள் வியப்படையும்படியாகப் பல கேள்விகளைக் கேட்டுத் தம் சந்தேகங்களையும் அவர்களிடம் தெரிவிப்பதுண்டு. தெலுங்கு மொழியில் ஸ்வாமிகளுக்கு இருக்கும் பயிற்சியினால், ஸ்ரீ தியாகைய ஸ்வாமிகள் முதலானோரின் கீர்த்தனைகளின் பொருளை அறிந்தே கீர்த்தனைகளைப் பாட வேண்டுமென்றும், ஆகையால் வித்வான்கள் தமிழ், தெலுங்கு, சமஸ்க்ருதம் ஆகிய இம்மூன்று மொழிகளையாவது நன்கு கற்க வேண்டுமென்றும், பழைய காலத்தில் வித்வான்கள் இவ்விதம் பல மொழிகளைக் கற்று வந்திருந்தார்கள் என்றும் ஸ்வாமிகள் அடிக்கடி வற்புறுத்திக் கூறுவார். 

அக்காலத்தில் சங்கீத வித்வான்களும், கதாகலாக்ஷேபம்  செய்வதில் ஈடுபட்டிருந்த பாகவதர்களும், ஸ்வாமிகள் முன்னிலையில் தங்கள் கச்சேரிகளையும், கத காலக்ஷேபங்களையும் நிகழ்த்தி, அவர்களின் ஆசியைப் பெறுவதை ஒப்பற்ற பெருமையாகக் கருதி வந்தார்கள். 

தெய்வத்தில் சேர்த்து வைக்கும் சங்கீதம் அதனையும் நம்
தெய்வமா முனியும் மிகவே ரசித்துணர்வொன்றிக் கேட்பார்!
மெய்ப்பொருள் தானாய் நிற்கும் அவருமே சங்கீதத்தின் 
மெய்ப்பொருள், நுட்பம் என்று அனைத்துமே எடுத்துச் சொல்வார்! (108)

பாடலைப் பொருள் அறிந்து பாடுதல் வேண்டும் என்பார்
பாடல்கள் இருக்கும் மொழிகள் அறிதலும் வேண்டும் என்பார்
பாடல்கள் பாடும் தமிழும், தெலுங்குடன் சமஸ்க்ருதமும் 
நாடியே அறிதல் வேண்டும் பாடுவோர் இங்கே என்பார் (109)


பாடுவோர் எல்லாம் வந்து பெரியவா சபையில் பாட
நாடுவார்! பெரியவா ரசித்துக் கேட்க, ஆனந்தக்கூத்துமங்கே
ஆடுவார்! அவர்முன் பாடி, ஆசிகள் அனைத்தும் வாங்கிச்
சூடுவார்! பாட்டின் மூலம் இன்புற்று இனிதே வாழ்வார்! (110)



படலம் : 8 : விஜய யாத்திரை : கும்பகோணம் முதல் ராமேஸ்வரம் வரை : 1919 மார்ச்சு மாத சிவராத்திரி அமாவசை அன்று தொடங்கப்பட்டது

நம் நாட்டிலுள்ள திவ்ய ஸ்தலங்களைத் தரிசிக்கவும், புனித தீர்த்தங்களில் ஸ்னானம் செய்யவும், சிஷ்யர்களுக்கு உபதேசங்களைச் செய்யவும் ஸ்வாமிகள் 1919 - ஆவது வருடம் மார்ச் மாத சிவராத்திரி அமாவாசையன்று கும்பகோணத்திலிருந்து யாத்திரை துவங்கினார்கள் இந்த யாத்திரையில் சுமார் நூற்றைம்பது பேர்களுக்கு மேற்பட்ட சிப்பந்திகள் உடன் சென்றார்கள். மற்றும் இருபது மாட்டு வண்டிகள், யானை, குதிரைகள், பசுக்கள், முதலான கால்நடைகள் உடன் சென்றன. 
- பூஜ்யஸ்ரீ. மஹாஸ்வாமிகள் வரலாறு


திவ்விய ஸ்தலங்கள் காண, புனிதநீர்த் தீர்த்தம் ஆட,
செவ்விய வார்த்தை சொல்ல, உலகுக்கு வழியைச் சொல்ல,
அவ்வியம் தீர்த்து நம்மை ஆட்கொள்ள மற்றும் இங்கே,
எவ்விதமாகவேனும் எளியோர்தம் குறையை போக்க, (111)

மானுட ஈசனங்கே யாத்திரை செல்லச் சென்றார்!
ஊனுடை உடம்பு நோக, உடன்வந்தோர் அவரும் நோக,
வானுறு அமிர்தக் கும்பம் உடைந்த அவ்விடம் தொடங்கி,
ஆனிறை, குதிரை யானை பின்வர, முன்னே சென்றார்!  (112)

யாத்திரை தொடங்கும் முன்னே, அடியார்கள் நினைத்த அந்த
மாத்திரம் வினைகள் தீர்ப்பான், அண்டங்கள் யாவற்றிற்கும்
சூத்திரம் ஆவான் விக்ன விநாயகன் தாள் பணிந்து
தோத்திரம் சொல்லிப் பூவால் அருச்சனை செய்து நின்றார்! (113)

வினைகளைத் தீர்ப்பான் பதமே பணிந்துடன் தரணிக்கென்று
தனைமுழு தாகத் தந்த குருமார்கள் பெருமையெல்லாம்
நினைந்தவர் பிருந்தாவனமும் சென்றுடன் தொழுது பாரில்
அனைவரும் நலமே வாழ, தானுளம் கனிந்து நின்றார்! (114)

அந்தணர்க்கென்று யாத்ரா தானமும் மிகவும் நல்கி
சந்த்ரமௌளீஸ்வரர்க்கு பூஜையும் செய்து மக்கள்
வந்தனம் ஏற்று, பிக்ஷை, பாத பூஜையையும் ஏற்று,
சிந்தனையெல்லாம் அந்த சிவனையே ஏற்று நின்றார்!  (115)

"வேப்பத்தூர்" என்னுமோர் எழில்மிகு ஊரே சென்று
மூப்பத்திரண்டு நாட்கள் மழைக்காலம் ஓரிடத்தில் 
காப்பதும் செய்து வ்யாஸ பூஜயையும் செய்து அங்கே
மாப்புகழ் தேவியாளின் நவராத்ரி பூஜை செய்தார்! (116)

1920 ஆவது வருடம், மார்ச் மாதம், கும்பகோணத்திற்கு அடுத்த சிறுகளத்தூருக்கு விஜயமானார். அங்கே விஜய யாத்திரையின் முதல் வருடம் கொண்டாடப்பட்டது. பிறகு, ஸ்வாமிகள், திருவாரூருக்கு எழுந்தருளினார்கள். திருவாரூரில், சிஷ்யர்கள் அவர்கலது விஜயத்தை மிகச் சிறந்த முறையில் கொண்டாடி, ஸ்வாமிகளை வழிபட்டார்கள். அங்கு தங்கியிருந்த ஒவ்வொரு நாளும், ஸ்வாமிகள் தியாகராஜ ஸ்வாமியைத் தரிசித்து வந்தார்கள். 

- பூஜ்யஸ்ரீ. மஹாஸ்வாமிகள் வரலாறு

1920 : மார்ச்சு மாதம்: 

சிறுகளத்தூரென்றங்கோர் சிறியதோர் ஊராம் மிக்க
தருமமே தழைக்கும் ஊராம்; வேதமே மணக்கும் ஊராம்
அருமையாய் ஊராரெல்லாம் பெரியவா விஜய யாத்ரா
வருடமொன்றான அந்தப்  பெருமையை உலகுக்கெல்லாம் (117)

தெரியவே விழா எடுத்துக் கொண்டாடி மகிழ்ந்தார்; ஊரார்,
அரி அரன் அன்னையோடு அவனியோரெல்லாம் காண
பரிவுடன் வந்தமாறு வந்ததோர் உருவம் கண்டு
பெரிதுமே பூஜை,  பிக்ஷா வந்தனம் எல்லாம் செய்தார்! (118)

திருவாரூர் : 

தல வரலாறு

  • திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்; அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. (இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த(ஏழு) விடங்கத் தலங்கள் எனப்படும்.
  • இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.
  • கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதி.
  • எல்லாச் சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.


அங்கிருந்தவரும் பின்னர் திருவாரூர் தலமே சென்றார்
பொங்கிடும் அருளே தருமாம்; இறைவனின் வாசஸ்தலமாம்!
சங்கொடு சக்கரக் கையன் சிவனையே மார்பில் வைத்து 
பங்கயப் பாதம் பற்றி பூஜித்த தலமாம் மாலின் (119)

மூச்சதற்கேற்ப, சிவனும் அஜபாநடம் ஆடும் தலமாம்
பேச்செதும் இன்றி கமலை தவமதே செய்த தலமாம்
ஆச்சரியமான சப்த விடங்கமாம் தலத்தில் மிக்க
வீச்சுடைத் தலமாம் முதலாய் விளங்குமோர் தலமாம் அம்மா! (120)

பஞ்சபூத தலங்களுள்ளே,  ப்ருத்வித் தலமாம் இதுவே!
அஞ்சிடச் செய்யும் அந்த நவக்ரஹம் எல்லாம் இங்கே
வஞ்சமே செய்யாதொருநேர்க் கோட்டிலே நிற்கும் இங்கே!
வஞ்சியைப் பார்க்கத் தூது சுந்தரர்க்காக ஈசன் (121)

சென்றதும் இத்தலம்தான்! ஆடிடும் அம்பலத்தும் 
முந்திய தலமாமென்பார்! நீதியில் வழுவாச் சோழன் 
மன்றினில் ஆவுக்காக மகனையும் தேரின் காலில் 
முந்தியோர் நாளில் இங்கே பலியாகத் தந்தான் என்பார்! (122)

பொங்கிடும் பாடல் பாடி, ஈசனை, தேவியை, வில்லை
அங்கமாய்க் கொண்ட ராமன் கீர்த்தியைப் பாடி வையம்
எங்கிலும் மகிழ்ச்சி தங்க வைத்த மும்மணிகள் என்னும்
சங்கீத மூர்த்தி மூவர் வந்துதித்த தலமாம் இதுவே! (123)

"திருவாரூர்த் தேராம்" என்று யாவரும் வியக்குமாறு
உருப்பெறும் தேரும் உள்ள அழகுடை ஊராம் தாயின்
கருக்கொண்டிவ்வூரில் வந்தால் முக்தியே என்றிவ்வூரார் நித்தம்
செறுக்கொண்டிருக்கும் ஊராம்; திருவும் தவமிருந்த ஊராம்! (124)

இத்தனை பெருமை கொண்ட திருவாரூர் தலத்துக் கோவில்
சித்தனை, சிவனைக் காண, பெரியவா தினமும் சென்றார்!
பித்தனென்றடியார் சொல்லும் முத்தினை ஞானம் நல்கும் 
வித்தினைத் தியாகராஜ மூர்த்தியைக் காணச் சென்றார்! (125)

ஞானத்தின் அரசர், தன்னுள் பேச்சின்றி லயித்திருக்கும்
மோனத்தின் அரசர், மண்ணில் வந்தவர்க்கெல்லாம் நல்கும்
தானத்தின் அரசர், நம்மில் த்யாகத்தின் அரசர், சென்று
வானத்தின் அரசாம் அந்த த்யாகராஜனையே கண்டார்! (126)

1920 ல் மஹோதய புண்ணிய காலம்: வேதாரண்யம் மற்றும் நாகப்பட்டினம்

1920 - ஆவது வருடம் ஏற்பட்ட மஹோதய புண்ணிய காலத்திற்கு ஸ்வாமிகள் வேதாரண்யத்திற்கு விஜயம் செய்து, அங்கு ஒரு வாரம் தங்கியிருந்தார்கள். ஸ்ரீ ஸ்வாமிகள்  மஹோதய தினத்தன்று கோடிக்கரைக் கடலில் ஸ்னானம் செய்தார்கள். இந்தத் தலத்தின் அருகிலுள்ள அகத்தியாம்பள்ளி முதலான க்ஷேத்திரங்களிலும் ஸ்வாமிகள் அப்பொழுது தரிசனம் செய்து கொண்டார்கள். 

அங்கிருந்து அவர்கள் நாகப்பட்டினத்திற்கு விஜயம் செய்து, அவ்விடம் பொது மக்களால் நன்கு வரவேற்கப்பட்டு, நீலாயதாக்ஷி அம்மன் கோயிலில் தங்கினார்கள். கோயிலில் ஸ்வாமிகளை வரவேற்கும் பொழுது, பல்லாயிரக்கஅணக்கான மக்கள் அங்கு கூடியிருந்தார்கள். 
          - பூஜ்யஸ்ரீ. மஹாஸ்வாமிகள் வரலாறு

திருவாரூர் தலத்தில் நித்தம் தியாகராஜனையே கண்டு
திருவுளம் நிறைந்தபின்னர், தரிசனம் முடித்தபின்னர் 
திருமறைக்காடு என்னும் வேதமா அரண்யம் காண
திருவடி எடுத்து வைத்து பெரியவா நடந்து சென்றார்! (127)

வேதங்கள் நான்கும் வந்து ஈசனைத் தொழுது நின்று
நாதனை வணங்கி நித்தம் நாமமே சொன்ன ஊராம்
வேதமா அரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும்
பூதலம் புகழ்ந்து வாழ்த்தி வழிபட்டு நிற்கும் ஊராம் (128)

திருமறைக்காட்டுக் கோவில் தீபத்து நெய்யை ஓர்நாள்
சிறுஎலி வந்து தின்னும் ஆசையோடணைந்து தீண்ட
திருவிளக்கதையும் மூக்கால் தெரியாமலங்கே தூண்ட
பெருவாழ்வு கொண்ட பலியாம் அரசனாய்ப் பிறந்ததென்பார்! (129)

மறைநான்கும் பூஜை செய்து, தாளிட்டு சென்ற வாசல்
இறைநாவுக்கரசர் பாடத் திறந்ததும் பின்னர் வந்து 
மறைஞானக் குழந்தை அந்த சம்பந்தர் பாட மூடி
உறைந்ததும் நடந்ததிந்தத் திருமறைக்காடே அம்மா! (130)

பாண்டிய நாடு செல்ல, சம்பந்தர் ஏக, அப்பர்
வேண்டியே நாளும் கோளும் நலமில்லை என்று சொல்ல
ஆண்டியாம் சிவனும் இங்கிருக்கவே நாளும் கோளும் 
தீண்டுமோ அடியார் தம்மை எனச்சொல்லிக் காழிப்பிள்ளை (131)

கோளறு பதிகம் சொன்ன இடம்திரு மறைக்காடம்மா!
நாளதும் சொல்லக் கோளும் நன்மையே செய்யும் அடியார்
தாளது பற்றி இங்கே க்ரஹமெலாம் இறைஞ்சி நிற்கும் 
தூளது ஆகும் துன்பம், இன்பமே நிறையும் அம்மா! (132)

இலங்கையின் மன்னன் மூட ராவணன் தன்னை மாய்த்துக் 
கலக்கிடும் ப்ரம்மஹத்தி தோஷமே சேர ராமன் 
தலமிங்கு வந்த நாளில், தோஷமே நீங்கி மிக்க
நலமிங்கு தந்த தலமாம், வேத ஆரண்யம் இதுவாம்! (133)

நவக்கிரகங்கள் எல்லாம் ஒரே கோட்டில் நிற்கும் இங்கே!
புவனிவிடங்கர் ஹம்ஸ பாதத்தால் நடனம் செய்ய,
தவமிங்கு செய்து ப்ரம்மன் ஸ்ருஷ்டியைத் துவக்கி நின்றான்!
தவம் செய்து விஸ்வாமித்ரன் ப்ரம்மரிஷி இங்கே ஆனான்! (134)

உவர்நீரே ஊரில் எல்லா கிணற்றிலும் பெருகி ஓட,
சுவைமிகு நன்னீர் கோவில் கிணற்றிலே பெருகும் காட்சி
தவநலம் மிக்க இந்த ஊரிலே கிடைக்கும் அம்மா!
எவர்தான் அறியார் இந்த மறைக்காட்டின் பெருமை இங்கே! (135)
தலத்தினுக்கிறைவி பெயரோ, "யாழினும் இனிய மொழியாள்"!
நலந்தரும் வீணை அதிலும் இனிமையாம் குரலே கேட்டு,
மலரமர் வாணி வீணை துறந்திங்கு தவம் மேற்கொண்டாள்!
துலங்கிடும் கோலம் கண்டார், வேதமே உருவாய் வந்தார்! (136)

திருமறைக்காடு கண்டு யாழினும் இனிய மொழியாள் 
திருமுகம் கண்டு விம்மி உளமுமே பொங்க நின்று
திருநகர் பெருமையெல்லாம், கோவிலின் அழகையெல்லாம்
திருவிழி வாயால் அள்ளிப் பருகியே நாகை வந்தார்! (137)

நாகப் பட்டினம் என்னும் நாகைக் காரோணம் ஊராம், 
நாகராஜனாம்  ஆதிசேஷனும் துதித்த ஊராம்
தேகத்துடனே புண்டரீகரும் சொர்க்கம் செல்ல
பாகம் பெண்ணானான் அவனை துதித்திங்கு நின்ற ஊராம்! (138)

காயத்துடனம்முனியை சொர்க்கமே அனுப்பி வைத்தான்
காய ஆரோஹண மூர்த்தியாய் நாகை நின்றான்
மாயனும் அயனும் காணா நேயன் நல்லிமையோர் போற்றும் 
தூயனோர்  விடங்கன் தானாய் வீற்றிருந்தருளும் ஊராம் (139)


நீலாய தாக்ஷி அன்னை தாளினை,  விழிகள் என்னும் 
வேலால் வினைகள் எல்லாம் களைந்திடும் அருள் உருவை,
மாலாம் அம்மாயந்தன் உடன்பிறப்பை, வணங்கி அங்கே  
மேலான பதங்கள் நல்கும் விடங்கனைத் தொழுது நின்றார் (140)

1920 : மாயவரம்:

நாகையிலிருந்து அவரும் மாயூரம் தலமே சென்றார்
மாகையாள் தவமே செய்ய மாயூர நாதன் தாளை
தோகையாள் மயிலாய் மாறிப் பற்றியே சாபம் தீர்ந்து
பாகையும் வெல்லும் மொழியாள் அஞ்சல்நாயகியாய் இங்கே (141)

வந்தமர்ந்திருக்கும் ஊராம்; கங்கையும் இங்கே வந்து
எந்தையை வணங்கித் தன்னில் நீராடுவோரின் பாவக்
குந்தகம் நீக்கும் ஊராம்;  பிரம்மன்பூஜித்த ஊராம்
சிந்தை செய்தோர்க்கும்கூட, வரமெலாம் அளிக்கும் ஊராம் (142)

1920 ஆவது வருடத்திய வியாஸ பூஜையை ஸ்வாமிகள் மாயூரத்தில் (மாயவரத்தில்) நடத்திப் பின்னர் மூன்று மாதங்கள் அங்கு தங்கி இருந்தார்கள். அப்போது, பள்ளியில் பயிலும் பிரம்மச்சாரி சிறுவர்கள் சுமார் முன்னூறு பேருக்கு வேத வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 
   - பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

கார்த்திகை முதல்நாளன்றோர் முடவனும் துலா நீராட,
சீர்மேவும் மாயூரப் பதியே தாமதமாக வந்தேகி
பார்போற்றும் சிவனே எனக்கு அருள் செய்வாய் என்றே கதற,
ஓர் நாளை அதிகமாக்கி முடவனும் முழுக்கு செய்த (143)

ஊராம் இவ்வூரில் வ்யாஸ பூஜையும் செய்தார் பின்னர்
வேராம் நம் வாழ்க்கைக்கெல்லாம் வேதமே வாழவென்று
பாராளும் துறவி வேந்தர் குருகுலம் தொடங்கி வைத்து
சீராக  சிறாருமங்கே வேதமே கற்கச் செய்தார் (144)

பின்னர், ஸ்வாமிகள், திருக்கடையூர், திருப்புங்கூர், வைத்தீஸ்வரன் கோவில் முதலிய க்ஷேத்திகங்களில் அவர்கள் ஸ்வாமி தரிசனம் செய்து கொண்டார்கள். 
பின்னர், 1920-ஆவது வருடம், மார்கழி மாதம் ஸ்வாமிகள் சீகாழியில் தங்கி, ஸ்ரீ சட்டநாத ஸ்வாமியைத் தரிசனம் செய்து கொண்டார்கள். பின்னர், திருவெண்காடு என்னும் க்ஷேத்திரத்திற்கு விஜயம் செய்து அவ்விடம் சுவேதாரண்யேஸ்வரரைத் தரிசனம் செய்து கொண்டார்கள். அத்தலத்தில் இருக்கும் ஸ்ரீ காமகோடி பீடத்தின் 57ஆவது ஆசார்ய ஸ்வாமிகளான பரம சிவேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தையும் அவர்கள் தரிசித்துக் கொண்டார்கள். 

திருக்கடையூர்:

நாகப்பட்டினத்தையடுத்து திருக்கடையூர் தலமே சென்றார்
நாகமே அணியாய்க் கொண்டார் எமனையே உதைத்துத் தள்ளி
சோகமே நீக்கி மார்க்கண் டேயனைக் காத்த ஊராம்
பாகமே அமர்ந்தாள் நிலவை வானிலே தவழ விட்டு (145)

பட்டரைக் காத்த ஊராம்; குங்கிலியத் தொண்டைச் செய்யத்
திட்டமே கொண்டாரவரும் வறுமையால் வாடும்காலம் 
இட்டமுடந்தன் மனையாள் தாலியே விற்றுத், தொண்டே
சட்டமாய் செய்த ஊராம்; இன்பமே அளிக்கும் ஊராம்!  (146)


உலகிற்கோர் ஒளியை, கதிரை, ஞானத்தின் விழுதை, விண்ணில்
புலற்கின்ற இன்பப்பொழுதை, நல்லவர் வாழ்வில் என்றும் 
துலங்கிடும் மணியை, யாரும் அறிந்திடா மறையை யார்க்கும்,
நலந்தரும் தாயைத் தனயர் பார்த்துயிர் உருகி நின்றார்! (147)

பிறையணிப் பெம்மான் நஞ்சை அமுதாக்கி நின்ற பெண்ணை
கறைக்கண்டன் பாகத்தாளைக், கறையிலா நெஞ்சத்தாளை,
மறைதேடும் பாதத்தாளை, குறையேதும் இல்லாதாளை,
நிறையதே வடிவை, திருவைப் பார்த்துளம் உருகி நின்றார்! (148)

சுந்தர வடிவை, மாயத் தீவினை எல்லாம் போக்கும்
சிந்துர வண்ணத்தாளை,  இளவஞ்சிக் கொம்பை, வேத
மந்திரம் எல்லாம் சேர்ந்து வந்ததோர் வடிவினாளை,
சந்ததம் அருளும் தாயைப் பார்த்தவர் உருகி நின்றார்! (149)

உள்ளத்தே விளையும் அன்பை, ஆனந்தக் களிப்பெருக்கை,
விள்ளவும் ஒண்ணா இன்பப் பரவச ஊற்றை எங்கும்
வெள்ளமாய்ப் பெருகும் கருணை பொங்குமா கடலைக் கண்ணால்
அள்ளியே பருகி நெஞ்சம் நெகிழ்ந்துடல் சிலிர்த்து நின்றார்! (150)

விண்ணவர் ஏத்தும் அன்னை அபிராமித் தாயைத் தொழுது
அண்ணலும் மனம் நிறைந்து, விடைபெற்றுக் கிளம்பிச் சென்றார்!
பண்வளர் நந்தனாராம் இறையவர் தொண்டர் ஏத்தும்
கண்கவர் திருப்புங்கூராம் தலமதே பார்க்கச் சென்றார்! (151)

திருப்புங்கூர்

நந்தனார் இறையைப் பார்க்கத் தடையதாய் இருந்த அந்த
நந்தியை சற்றே தள்ளி இருக்கவே அவரும் சொல்ல
வந்ததம் பக்தர்க்காக நந்தியும் விலகி நின்ற
விந்தையே நிறைந்த ஊராம்; திருப்புங்கூர் என்றே பேராம்! (152)

நாட்டிலே நிலவும் பஞ்சம் தீர்க்கவே அரசன் வந்து 
பாட்டினால் மழையைக் கொணர சுந்தரர் தமையே வேண்ட,
வீட்டையே தந்திடும் ஒர் பாட்டினால் மழையை மண்ணில்
கூட்டிய தலமாம் அதனை ஸ்ரீசரணரும் தொழுது நின்றார் (153)

வைத்தீஸ்வரன் கோவில்:

வைத்திய நாதன் எங்கள் ஸ்ரீசரணருமே அடுத்து 
வைத்தீஸ்வரனையுடன் காணவே கிளம்பி விட்டார்
எத்தனை பிணியும் தீர்க்கும் பவப்பிணிதானும் போக்கும்
அத்தனைக் காணப் புள்ளிருக்கும் வேளுரே வந்தார்!  (154)

சம்பாதி ஜடாயு வந்து பூஜித்த தலமாம் இதுவே 
வெம்பவம் தீர அப்பர் பாடிய தலமாம் என்றும்
உம்பரும் போற்றும் குமரன் பூஜித்த தலமாம் இதுவே
நம்பவம் போக்கும் மறையும் பூஜித்து நின்ற தலமாம்! (155)

அங்காரகனின் நோயும் தீர்த்தவோர் தலமாம் இதுவே
சங்கரன் தாளைப் பற்றி பானுவும் நின்ற தலமாம்
மங்கலம் சேர்க்கும் நீறும், சாம்பலும் சேர்த்துருண்டை
சங்கடம் தீர்க்கும் உடல் மன நோயையெல்லாம் போக்கும் (156)

1920-ஆவது வருடம், மார்கழி மாதம்: சீர்காழி

புள்ளிருக்கும் வேளூர் தன்னில் வைத்தீஸ்வரனைப் பார்த்து
அள்ளியே ஆனந்தத்தை அன்பர்க்களித்துத் தானும்
துள்ளியே நடை நடந்து சம்பந்தப் பெருமான் பிறந்த
தெள்ளுதமிழ் மணக்கும் சீர்காழி சென்றடைந்தார் (157)

பால்நினைந்தழுத ஞானசம்பந்தக் குழந்தைக்கன்று 
நால்மறையோடு தமிழும் பாலொடு கொடுத்த தேவி
சேல்விழி மாது பெரியநாயகி தன்னைத் தோணி
மேல்வரும் அப்பன் தன்னைக் கண்டுளம் மகிழ்ந்து நின்றார் (158)

இரண்யனைக் கொன்ற மூர்த்தி தனைத்தடிந்தவரின் தோலை
அரனவன் சட்டையென்ன அணிந்ததோர் கோலம் கண்டார்
ஜுரமெலாம் தீர்க்கும் சிவனாம் ஜுரஹரேஸ்வரரும் கண்டார்
பிரம்மனும் பணிந்த ப்ரம்மபுரீஸ்வரரையுமே கண்டார் (159)

 திருவெண்காடு:

சீர்காழிக் கோவில் எல்லாம் தரிசனம் செய்த பின்னர்
சீர்மல்கும் திருவெண்காடு தனைக் காண விரைந்து சென்றார்
நால்வரும் பாடிமிக்க பேர்பெற்ற தலமாம் இதுவும் 
ஓர்வெண் யானை வந்து தவம் செய்த தலமாம் அம்மா! (160)


வால்மீகி ராமாயணத்தில் திருவெண்காடு தலக்குறிப்பு
திருவெண்காடு வடமொழியில் "சுவேதாரண்ய க்ஷேத்திரம்" என்றழைக்கப்படுகின்றது. வால்மீகி ராமாயணத்தில்,
"சபபாத கரோபூமன் தஹ்யமான சராக்னி
நருத்ரேநேவ வினிர்தக்த ஸ்வேதாரண்யே யதாந்தகஹா"
(ஆரண்யகாண்டம் - ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்)
"யமனை ஸ்வேதாரண்ய க்ஷேத்திரத்தில் சுவேதாரண்யேஸ்வரர் வதம் செய்ததைப் போன்று கர, தூஷண அரக்கர்களை ராமபிரான் வதம் செய்தார்." என்று வால்மீகி ராமாயணம் திருவெண்காட்டு இறைவனைக் குறிப்பிடுகின்றது

நவக்ரஹ தலமாம் இதுவே, புதனாட்சி செய்யும் தலமாம்
சிவனவன் அகோர மூர்த்தி வடிவதாய்த் திகழும் தலமாம்
சிவவரம் கொண்டோரசுரன் தாக்கவே நந்தி மேனி
சுவடுகொள்ளசுரன் தன்னை சிவனுமே எரித்த தலமாம் (161)

ருத்திரபாதம் இருக்கும் தலமிதாம் வால்மீகியின்
சித்திரம் அதில் குறிப்பு கொண்டதோர் ஊராம் இதுவே
சத்திபீடம் ஐம்பத்தொன்றிலே விளங்கும் ஊராம்
நித்தியம் சிவனே ஆட, ஆதிசிதம் பரமென்பாராம் (162)

பரமனைப் பார்த்துப் பாதம் பணிந்தருள் ஊற்றில் தோய்ந்து
பரம சிவேந்த்ரர் ஐம்பத் தேழாம்நற் குருவின் பீடம் 
கரமதே குவித்துப் பாரில் உயிர்க்கெலாம் நலமே வேண்டி
சிரம் உளம் சிந்தையெல்லாம் குவித்தடி தொழுது நின்றார் (163)

சீர்காழிப் பதியில் அமைந்திருக்கும் வைணவத் திருத்தலங்கள்


திருவெண்காடு சென்று தரிசனம் செய்த பின்னர்
திருக்காழிப் பதியில் உள்ள பனிரெண்டு திருமால் கோவில் 
திருவுடல் நிலமே தோய தரிசனம் செய்து நின்றார்
திருநகரி நாங்கூர் கண்டு, தாடாளங்கோவில் கண்டு, (164)


திருவைகுந்தத் திருவரிமேய விண்ணகரம் திருவள்ளகமும்
திருச்செய்கோவில், தெற்றியம்பலம், திருமணக்கூடம்,
திருக்காவளம்பாடியோடு திருப்பார்த்தன் பள்ளி கண்டு,
திருத்தேவனார் தொகையாம் கோவிலும் கண்டு நின்றார் (165)


1921 : பட்டீச்சுரம்:

ஞாலமதுண்டான் கோவில் கண்டுளம் களித்த தேவர்
ஆலமதுண்டான் தலமாம் பட்டி பூசித்த கோவில்
காலமே காண வந்தார்; மஹாமஹப் போதில் அழகுக்
கோலமும் காண வந்தார்; பட்டீச்சுரமே வந்தார் (166)

சம்பந்தப் பெருமானுக்கு முத்துப் பந்தல்தாம் ஈந்து 
தம்முடைப் பிள்ளை வந்த அழகையே காணவென்று
"நம்பியே! நந்தி நீயும் விலகிடும்" என்றீசன் சொல்ல
உம்பியாம் நந்தி சற்றே விலகியே நின்ற ஊராம் (167)

வாலியைக் கொன்ற தோஷம் நீங்கிட ராமன் வந்து
கோலிய தீர்த்தம் கோடித் தீர்த்தமும் கொண்ட ஊராம்
நூலிடை கொண்டாள் மகிடன் தலையிலே நின்றாள் கையில்
வேலினைக் கொண்டாள் துர்க்கை சன்னதி கொண்ட ஊராம் (168)

1921 மஹாமகம்:

பரமனைத் தொழவே பட்டீச்சுரமதே வந்த தேவர்
வரமஹா மகக் குளத்தில் மகத்து நீராடி நின்றார்
அரனவன் காசிவிஸ்வ நாதனைக் காண யாத்ரை
சிரமதில் கொண்டதாலே மடமுமே செல்லா நின்றார் (169)


அந்த மஹாமஹத்தில் பொதுஜன சேவை செய்யச் சென்னை முஸ்லீம் இளைஞர் சங்கத்திலிருந்து சுமார் இருநூறு தொண்டர்கள் கும்பகோணத்திற்கு வந்திருந்தார்கள். ஜனக் கூட்டத்தில் அவர்கள் செய்த ஒப்பற்ற பணியை ஸ்வாமிகள் நேரில் கண்டு மகிழ்ந்தார்கள். அவர்கள் யாவரும் ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த பட்டீஸ்வரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு நல்ல உணவளிக்கப்பட்டது. ஸ்வாமிகள் அவர்கள் ஒவ்வொருவருடனும் பேசி அவர்களுடைய பெற்றோர்களைப் பற்றியும் கல்வியைப் பற்றியும் அன்புடன் விசாரித்தார்கள். அவர்களது சேவையைப் பாராட்டி ஒரு வெள்ளிக் கோப்பையை அவர்களது சங்கத்திற்கு ஸ்வாமிகள் பரிசாக அளித்தார்கள்.

 - பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு


மகத்தந்த வேளை தன்னில், சேவையே செய்ய அங்கே
உகப்பொடும் வந்த முஸ்லிம் இளைஞர்கள் தொண்டைக் கண்டு
மிகப்பெரும் மகிழ்ச்சி கொண்ட ஸ்வாமிகள் அவரை வாழ்த்தி
அகத்துளோர் பற்றிக் குசலம் கேட்டொரு கோப்பை தந்தார்! (170)

நிறைபொருள் வாழ்த்த எங்கும் கரையிலா அன்பு சூழ,  
மறையதை ஓதுவோரும், இறைவனை ஐந்து வேளை
குறைவேதுமின்றித் தொழுது வழிபடுவோரும் நெஞ்சில்
உறைந்திடும் பொருளைத் தங்கள் எதிரிலே நிற்கக் கண்டார்! (171)

அம்மஹாமஹத்திபோது கும்பகோணத்திற்கு வந்திருந்த பழுத்த தேசபக்தரான சுப்ரமண்ய சிவம் என்பவர் தம் உடல் நிலையையும் பொருட்படுத்தாது பட்டீஸ்வரம் வந்து ஸ்வாமிகளைத் தரிசிக்க வேண்டி ஜனக்கூட்டத்தினிடையே ஒரு புறத்தில் காத்திருந்தார். ஸ்வாமிகள் அவரை அதற்கு முன் சந்தித்ததில்லை; ஆயினும், வெகு தூரத்தில் நின்று கொண்டிருந்த அவரைக் கண்டவுடன் தொண்டர்களை அனுப்பி, அவரைத் தம்மிடத்தில் அழைத்து வரச் செய்தார்கள். தன் பால், ஸ்வாமிகளுக்கு ஏற்பட்ட கருணையைக் கண்டு சிவம் உள்ளம் பூரித்தார்; தேசத்தின் விடுதலையில் பூரணமாக ஈடுபட்டிருந்த அவர், அப்பொழுது துறவிகளுக்கான காவி உடையைத் தரித்திருந்தார். அன்னிய ஆட்சியிலிருந்து பாரத பூமியானது சீக்கிரம் விடுபடவேண்டும் என்றும், மக்கள் எல்லோறும் கடவுள் பக்தியோடு இருக்க வேண்டுமென்றும், இவ்விரண்டிற்கும் ஸ்வாமிகளின் ஆசி பூரணமாகத் திகழ வேண்டும் என்றும் அவர் ஸ்வாமிகளிடம் விண்ணப்பித்துக் கொண்டார். அவ்விதமே நடைபெறுமென்று ஸ்வாமிகள் அருள் புரிந்தார்கள்.

 - பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

அரும்பெரும் தேசபக்தர், சுப்ரமண்ய சிவனும் அங்கே
பெரும் சிவம் தம்மைக்கண்டு, பதமலர் தொழவே வந்தார்!
துரும்பென இளைத்து அன்னார் உடல் தளர்ந்திருந்த போதும்
விரும்பியே தேவர் தம்மைக் காணவே காத்து நின்றார் (172)

சுதந்திர தாகம் கொண்ட சிவத்தையே கண்ட ஞானப்
பதந்தரும் முனிவர் அருகில் அழைத்துடன் ஆசி தந்தார்!
முதலிந்த தேசம் அடிமைத் தளையின்றி மீண்டு வாழ, 
இதயத்தில் பக்தி மாறா வாழ்க்கையே மக்கள் வாழ, (173)

சிவமே உம் கருணை வேண்டும் என்றந்த சிவமும் கேட்க, 
சிவமும் புன்முறுவல் பூத்து, ஆசியே நல்கி நின்றார்!
தவமுனிக் கருணைப் பார்வை தன்னிலே சிவனும் அங்கே
நவபாரதமாதாவைக் கண்டுளம் மகிழ்ந்து நின்றார்! (174)

அந்த (1921 -ஆவது) வருடத்து வியாஸ பூஜையையும் சாதுர்மாஸ்ய ஸங்கஸ்பத்தையும் ஸ்வாமிகள் குற்றாலத்துக்கு அருகிலுள்ள கதிராமங்கலத்தில் (நெறிவெளி) நிறைவேற்றினார்கள். அதற்கடுத்த ஒரு வருடம் தஞ்சை மாவட்டம் சீகாழி, மாயூரம், நன்னிலம், மன்னார்குடி தாலுகாக்களில் உள்ள கிராமங்களில் விஜய யாத்திரை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்பொழுது ஸ்வாமிகள் காவிரியின் வடகரை, தெங்கரையிலுள்ள பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களையும், வைணவ திவ்ய தேசங்கள் பலவற்றையும் தரிசித்து, ஒவ்வொரு ஆலயத்திலுள்ள விக்ரகங்களுக்கும் பட்டுப் பீதாம்பரம் அணிவித்து வழிபட்டார்கள். எவ்வளவு சிறிய ஆலயமாயினும் அது ஸ்வாமிகளின் கவனத்தைக் கவராமல் இருந்ததில்லை.
 - பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

1921 - ஆவது வருடம்: 

வியாதிகள் போக்கும் அருவி கொண்ட குற்றாலத்தருகில்
கியாதியே கொண்ட கதிராமங்கலம் கிராமம் தன்னில் 
வியாஸ பூஜையையும் சாதுர் மாஸ்ய சங்கல்பம் அதையும் 
தியாகமே உருவாய் வந்த ஸ்வாமிகள் செய்து கொண்டார் (175)

பின்னரோர் வருடம் தஞ்சை மாவட்டம் முழுக்கச் சுற்றி
நன்னிலம், மன்னார்குடியும், சீகாழி மாயூரம் எல்லாம்
மின்னிடும் வைணவ சைவ கோவில்கள் சென்று மூர்த்தி
தன்னையே சாலத் தொழுது இறையதை எங்கும் கண்டார் (176)

ஹரிஜனங்களுக்குத் தரிசனம் அளித்தது:

தஞ்சை மாவட்டத்தில் ஸ்வாமிகள் யாத்திரை செய்து கொண்டிருந்தபோது, ஒருநாள் குடவாசலிலிருந்து கொரடாச்சேரி செல்லும் மார்க்கத்தில் செல்லூர் என்னும் கிராமத்தில் ஹரிஜனங்கள் முதியோர், பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் இருநூறு பேர்கள் நீராடி, விபூதி அணிந்து ஸ்வாமிகளைத் தரிசிப்பதற்காகச் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டதும், ஸ்வாமிகள் சிவிகையிலிருந்து இறங்கி, அவர்கள் யாவருக்கும் தரிசனம் அளித்தார்கள்.
 - பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

ஈசனின் குழந்தைகள்தாம் நாமெலாம் என்றே சொல்வார்
பாசமாய் ஹரிஜனங்கள் பார்க்கவே வந்து விட்டால்
நேசமாய் சிவிகை விட்டு இறங்கியே அவர்முன் வந்து
ஆசியே கூறி நலமும் ஆவலாய்க் கேட்டு நிற்பார் (177)

விளைநிலப் பயிரைப் பற்றி, நிலச்சுவாந்தாரைப் பற்றி
வளைகொண்ட மாதர் வீட்டின் வாழ்க்கையின் இனிமை பற்றி,
இளைப்பின்றி கிராமத்தீசன் பூஜையும் நடத்தல் பற்றி
திளைத்தெல்லோரும் ஒன்றாய் வாழ்தலைப் பற்றிக் கேட்பார்!  (178)


மன்னார்குடி முதலான இடங்களுக்கு விஜயம்:

நன்னிலம் தாலுகாவிலுள்ள கிராமங்களில் யாத்திரையை முடித்துக் கொண்டு, ஸ்வாமிகள் மன்னார்குடி தாலுகாவிலுள்ள கிராமங்களில் பெரும்பான்மையாக யாத்திரையைத் தொடர்ந்து நடத்தி வந்தார்கள். 
 - பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

நன்னிலம் முழுக்கச் சுற்றி, நடந்த அக்கால்கள் பின்னர்
மன்னார்குடியே செல்ல ஏகின; சென்று அங்கே
மன்னர்மன்னன் ராஜகோபாலனைக் கண்டவனை
சென்னியும் நிலமே தோய நமஸ்கரித்துளம் நிறைந்தார் (179)


ஆவுடையார் கோவிலுக்கு 1922 - ஆவது வருடம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் விஜயம் செய்தார்கள். வியாஸ பூஜையை ஆவுடையார் கோவிலில் நடத்தி, அங்கு இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார்கள். இதுவே திருப்பெறுந்துறைத் தலம் என்று பேர் பெற்றது. 
 - பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

மன்னார்குடித் தலத்து மன்னனைத் தொழுது பின்னர்
தென்னாடுடைய சிவனார் கோவிலே காணவென்று
என்னாட்டவர்க்குமிறை திருப்பெறுந்துறையை நாடி
பன்னாட்டவரும் போற்றும் ஆவுடையார் கோவில் வந்தார் (180)

திருவாசகமே தந்த மாணிக்க வாசகர் இங்கு 
ஒருவாசகமே பெற்ற ஊராம் திருவாதவூரார்
குருந்தமர நிழலின் கீழிருந்தீசன் ஆட்கொண்டவர்க்கு
குரு உபதேசம் செய்த ஊராம் உலகுய்த ஊராம்! (181)

உருவம் இல்லாத கோவில்; கொடிமரமிலாத கோவில்
அருவமாய் அவனும் வீற்றிருக்குமோர் கோவில் நந்தி
ஒருவன் இல்லாத கோவில் தீபத்தின் ஜோதி கைகள்
அருகில் வராத கோவில் ஆவுடையார் கோவிலம்மா! (182)


பாவுடையாரை நலமிக்க தேசுடையாரை அடியார் வாழ்த்தும்
நாவுடையாரை யாரும் செய்யவொண்ணாக் கொடுங்கைப்
பூவுடையாரை என்றும் தமிழால் மாணிக்க வாசகரேத்தும்
ஆவுடையாரைப் பார்த்து ஆருயிர் அவரில் கோர்த்து (183)

சேவித்து நின்ற தேவர், யாத்திரை தொடர்ந்தாரம்மா!
காவியே பூண்ட மேனி வாட பதமலர்கள் வாட
ஓவியத்தன்ன முகமலர் இதழ் குறுநகையே பூக்க
ஆவியை இறைக்களித்தார், யாத்திரை தொடர்ந்தாரம்மா! (184)


முதல் இராமேஸ்வர யாத்திரை: 
ஆவுடையார் கோவிலிலிருந்து ஸ்வாமிகள் உப்பூர், தேவிப்பட்டினம் வழியாக இராமேஸ்வரத்திற்குப் பயணமானார்கள். ஸ்வாமிகள் பாம்பன் ஜலசந்தியை, ரயில் பாலத்தின்மீது நடந்து சென்று கடக்கத் தென்னிந்திய ரயில்வே அதிகாரிகள் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்கள்.
 - பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

ராவணஹத்தி தோஷம் நீங்கவே ராமன் தேவ
காவலன் ஈசன் தன்னை பூஜையே செய்து தன்னைப்
பாவனம் செய்து கொள்ள வந்தவோர் தலமே நோக்கி
சேவடி வைத்து யாத்ரை ஸ்வாமிகள் தொடங்கி விட்டார்! (185)


இராமேஸ்வரத்தில் தேவஸ்தான அதிகாரிகளும், பரம்பரைப் பண்டாக்களும் தேவஸ்தான மரியாதைகளுடன் வரவேற்று, ஸ்ரீ இராமநாதஸ்வாமியை தரிசனம் செய்து வைத்தார்கள்.

துந்துபி வருடம் (1922) புரட்டாசி மாதம் பௌர்ணமி அன்று, ஸ்வாமிகள் இராமசேதுவில், கங்கையில் கலப்பதற்கென்று மணல் எடுத்துக் கொண்டார்கள்.
 - பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

தேவிப்பட்டினம் வழியே ராமேஸ்வரமே செல்ல
பாவிய பாம்பன் ரயில் பாலத்தின் வழி நடந்தார்!
ஆவியை நோக்கி அண்ணல் ராமனும் கடலின் மீது
மேவிய பாலம் மேலே நடந்தாற்போல்  நடந்து சென்றார்! (186)

ராமநாதனை, சிவனை,  தரிசித்து பூஜை செய்து
வாமபாகத்துறை பர்வத வர்த்தினித் தாயைக் கண்டு
நாமமே நவின்று உள்ளம் உருகியே நெகிழ்ந்து நின்று
ராமசேதுவிலே மணலும் எடுத்துடன் வைத்துக் கொண்டார்! (187)

தெற்கோடி முனையாமந்த தனுஷ்கோடி சென்று அங்கு 
பற்காலம் பூஜை செய்து, நவராத்திரி விழாவும் கண்டு
பொற்கோலம் காட்டும் கடற்சங்கமநீராடிப் பின்னர்
விற்கோல ராமன் ஈசன் தொழுத அத்தலமே வந்தார் (188)

இராமநாதபுரம், சிவகங்கை விஜயம்:

இராமேஸ்வர யாத்திரையை முடித்துக் கொண்டு, ஸ்வாமிகள் இராமநாதபுரத்திற்கு 1922 - ஆவது வருடம் அக்டோபர் மாதம் பத்தாம் தேதி விஜயமானார்கள். ஸ்வாமிகள், இராமநாதபுரத்திலிருந்து மானாமதுரை வழியாக சிவகங்கையை அடைந்தார்கள். 
 - பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

ராமேஸ்வரனைக் கண்டுப் பதமலர் தொழுதபின்னர்
காமேஸ்வரியின் மைந்தர் ராமநாத புரமே சென்றார்
நாமேஸ்வரனை மாதோர் பாகனை நல்லோர் போற்றும்
சாமேஸ்வரனை  அங்குக் கோவில்கள் எங்கும் கண்டார் (189)

ராமனைக் கண்டு ராமன் தொழுதஅவ்வீசன் கண்டு
வாமமே உறையும் பெண்ணாள் அவளையும் கண்டு நன்றாய்
சேமமே எங்கும் பொங்க, சிவகங்கைச் சீமை வந்தார்
ஊமனும் போற்றும் கஞ்சிக் காமாக்ஷித் தாயின் மைந்தர்! (190)

பாண்டி நாட்டுத் திருத்தலங்களுக்கு விஜயம்:

1922 அக்டோபர் 28  ஆம் தேதி காளையார் கோவில் - சோமேஸ்வரர், காளீஸ்வரர், சுந்தரேஸ்வரர், அம்பிகை சன்னதிகள் தரிசனம்; அப்பர் சுந்தரர் பாடிய தலம்; மாணிக்க வாசகர் பிறந்த திருவாதவூர் பத்து மைல் தூரத்தில் உள்ளது
 - பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

சிவகங்கை விட்டுத் தேவர் காளையார் கோவில் வந்தார்
சிவன் கோவில் காணவென்று சுந்தர் வந்தபோது 
சிவலிங்கம் பாதையெங்கும் தெரிந்தததால் தவித்து நின்ற
அவருக்குக் காளையொன்று வழிகாட்டி நின்ற ஊராம்! (191)

முப்புரம் எரித்த மூர்த்தி முச்சிவமூர்த்தியாக 
இப்புரம் சோம காளீஸ்வர சுந்தரேஸ்வரென்று
எப்பவும் வாமபாகம் தேவியோடிருக்கும் ஊராம்
செப்பவும் ஒண்ணாப் பெருமை திகழ்ந்திட விளங்கும் ஊராம் (192)

சுந்தரர், அப்பர் வந்து பாடலால் சிறந்த ஊராம்
எந்தையை நினைத்துக் கண்ணீர் பெருகியே பாடி நின்ற
சிந்தையை நிறைக்கும் சீர்திரு வாசகர் பிறந்த ஊரும்
விந்தையாய் அருகில் கொண்டப் பெருமையும் கொண்ட ஊராம் (193)

திருப்பத்தூர் : 

திருக்காளையாரக் கண்டு சிவகங்கை சீமைக்கருகில்
திருப்பத்தூரும் வந்தார் தளிநாதஸ்வாமி கண்டார்
திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசும் பாடத்
திருவுளம் கனிந்து வாழ்த்தும் சிவகாமித் தாயும் கண்டார் (194)

நவம்பர் 2  ஆம்தேதி இளையாற்றங்குடி விஜயம்: நகரக் கோவில் மற்றும் பூர்வ ஆசார்யார்கள் அதிஷ்தான தரிசனம்

திருப்பதூரும் வந்து தரிசனம் முடித்த பின்னர்
திருநிறைக் குருமார் தாமிளைப் பாற்றுமக்குடியே சென்றார்
திருவிலே சிறந்த ஊராம்; கருவிலே சிறந்த ஊராம்!
குருவவர் அதிட்டானமுமே இருப்பதால் சிறந்த ஊராம்! (195)

அதிட்டானம் வந்து மஹாதேவரடி தொழுது நின்றார்
உதித்திங்குறைந்த குருமார் அடிபணிந்துருகி நின்றார்
பதியுறை இறைமலர்ப்பாதமும் தொழுது நின்றார்
துதித்தவர் தனை மறந்து பக்தியில் திளைத்து நின்றார்! (196)

1922, நவம்பர் 6  ஆம் தேதி பிரான்மலை:

இளையாற்றங்குடியே சென்று குருமார்களடியே கண்டு
விளைந்தவோர் பக்தி வெள்ளம் தனிலமிழ்ந்துணர்வையெல்லாம்
அளைந்தவாரவரும் கொடுங்குன்றீசனெம்பிரான் மலை வந்தார்
களையுமாம் பாவமிவ்வூர்; விலக்குமாம் சோகமிவ்வூர் (197)

அருணகிரிநாதர் வந்துளமுருகி செந்தமிழால்
முருகனையே பாடிநின்ற தலமாம் சம்பந்தருமே
திருப்பிரான்மலைச்சிவனை வாயாரப் பாடியரும்
திருமுறையே கண்ட அரும் பெருமை கொண்ட பதியுமிதாம்! (198)

நவம்பர் 11 ஆம் தேதி : திருமாலிருஞ்சோலை விஜயம்: 

திருப்பிரான்மலை தொழுது மதுரையம்பதியின்னருகே
திருமாலிருஞ்சோலை சென்றார் நம்தேவர் சென்று அங்கே
திருமங்கையாழ்வார் பாடி, திருக்கோதை நாச்சி பாடி
இரும்பூதடைந்த சுந்தரராஜரை, தாயைக் கண்டார் (199)

மதுரை விஜயம்: 

1922 ஆவது வருடம், நவம்பர் மாதம் 12ஆம் தேதி மதுரை விஜயம். மதுரையின் முக்கிய வீதிகளில், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தரிசனம் கொடுத்து, மீனாட்சி அம்மன் கல்யாண மண்டபத்தில் வந்து இறங்கினார்கள். மதுரை முழுவதும் அன்று கோலாகலமாக இருந்தது. அன்று, ஸ்வாமிகள், மீனாக்ஷி அம்மனையும், சுந்தரேஸ்வரரையும் தரிசனம் செய்து கொண்டார்கள். அவர்ளது பூஜையைக் காணவும் அவர்களது பிரசங்கத்தைக் கேட்கவும், ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்தனர்.
- பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு

திருமாலைத் தாயாருடனே அவர் சோலை சென்று கண்டு
திருவளர்ப் பதியாம் மதுரை திருத்தலம் சென்றடைந்தார்
திருவாலவாயாம் இன்பத் திருக்கூடல் நகராம் இன்பத்
திருவிளையாடல் எட்டோடெட்டுமே நடந்த தலமாம்! (200)

  
மருத மரங்கள் எல்லாம் இருந்ததால் 'மதுரை'யென்றாரோ?
எருததில் ஏறும் எந்தை மதுரத்தால் 'மதுரை' யென்றாரோ?
அருந்தமிழ்ப் புலவரெல்லாம் கூடலால் 'கூடல்' என்றாரோ?
பெருமானின் அணியாம் பாம்பு நினைவாக ஆலவாயோ? (201)


எப்படி வந்தாலென்ன? காரணம் ஏதிருந்தாலென்ன?
அப்பனும் விளையாட்டெல்லாம் நடத்திய தலமீதன்றோ?
செப்பறும் கருணையோடு அம்மையும் ஆட்சி செய்யும்
ஒப்பறும் தலமே அன்றோ! மதுரையே மதுரம் அன்றோ!  (202)

குமரகுருபரரும் வந்து மீனாக்ஷி அம்மை மீது
அமரரும் போற்றும் பிள்ளைத் தமிழ்செய்த தேசம் அன்றோ?
சமணரை ஒறுத்த பிள்ளையுடனப்பர் வாகீசருமே
நமச்சிவாயம் தன்னைப் பாடிய ஊரே அன்றோ! (203)


இடதுகால் வலித்ததென்று வலதுகால் தூக்கியிங்கு
நடனமே ஆடியந்த நடராஜன் நின்றிட்டானோ? 
கடம்பமார் வனமாய் நின்ற தலத்திலே அவனும் ஆட
இடமதாய், வெள்ளிச் சபையாய் தனதெனக் கொண்டிட்டானோ? (204)

சொக்கிடும் அழகோடெங்கள் அம்மையும் இருக்கக் கண்டு 
சொக்கியதாலே சொக்கன் என்று பேர் பெற்றிட்டானோ?
பக்கமே என்றும் அந்த மரகதவல்லி  நிற்க
திக்கெலாம் போற்ற சொக்கன் சுந்தரேஸ்வரனானோ? (205)



சுந்தரேஸ்வரனை, அழகு மீனாக்ஷித் தாயைக் கண்டு
வந்தனை செய்து பாதம் பணிந்து மெய்யுருகி நின்று
சிந்தனை எல்லாம் சிவமும் சக்தியும் ஆகிப்பின்னர்
எந்தையும் மதுரை விட்டு, யாத்திரை தொடர்ந்தாரம்மா! (206)



தாமிரபரணி தீர விஜயம்: 

1922 டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு, ஸ்வாமிகள் திருநெல்வேலி சென்றார். 
- பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு

வெள்ளிச்சபை ஆடுவாரை தரிசனம் முடித்த பின்னர்
தெள்ளிய நீரோடும் தாமிரபரணியின் ஓரம் நெஞ்சை
அள்ளிடும் நெல்லையப்பர் அமர்ந்தாட்சி செய்து நடம்
உள்ளிருந்தாடும் தாம்ரசபையாம் நெல்வேலி வந்தார் (207)

"திக்கெல்லாம் புகழுறும் நெல்வேலி' எனச் சம்பந்தர்
பக்தியோடுரைத்த பதியாம், 'தண்பொருநைப் புனல் நாடென்று'
சேக்கிழார் புகழ்ந்த பதியாம், காந்திமதியம்மன் என்றோர்
சக்தியும் விளங்கும் பதியாம் திருநெல்வேலி பதியீதம்மா! (208)


வேதபட்டர் என்றோர் பக்தரும் நெல்லைச் சேர்த்து
சாதமாய் ஆக்கிச் சிவனின் நைவேத்யம் செய்வார் ஓர்நாள்
சோதனையாக அங்கே சேர்த்த அந்நெல்லையெல்லாம்
சேதமே விளைவிப்பாற்போல் மழை பெய்யத் தொடங்கிற்றம்மா! (209)

நெல் நனைந்திடுமோ என்று பயந்தவர்  வந்து பார்க்க,
புல்லுக்கும் புசியும் மழையோ நெல்மேல் விழாது அங்கே
நல்வெயில் நெல்மேல் காய, பார்த்தவர் அதிசயித்து நிற்க
நெல்வேலி நாதர் என்று இறைப் பெயர் ஆனதம்மா! (210)

சுரங்கள் ஏழிசைக்கும் தூண்கள் விளங்கிடும் தலமாமன்று
அரனவன் அகத்தியர்க்கு மணக்கோலம் தந்த தலமாம் 
அரனைத்தன் மார்பில் தாங்கி ஹரியும் வீற்றிருக்கும் தலமாம்
அரனவன் கோலம் எல்லாம் சரணரும் களித்தாரம்மா! (211)


பின்னர், 1923 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஆழ்வார்திருனகரி, ஸ்ரீவைகுண்டம், நாங்குனேரி முதலிய திவ்ய தேசங்களைத் தரிசித்துக் கொண்டு, 11-2-1923 ஆம் தேதி, ஆதிசங்கரரால் புஜங்க ஸ்தோத்திரம் பாடப் பெற்ற திருச்செந்தூர் க்ஷேத்திரத்திற்குச் சென்று, அங்கு ஐந்து நாட்கள் தங்கி ஷண்முகனாதனைத் தரிசித்துக் கொண்டார்கள். பின்னர், அம்பாசமுத்திரம், பாபநாசம், தெங்காசி, திருக்குற்றாலம், சங்கரநாராயணர் கோவில் ஆகிய திருத்தலங்களுக்கெல்லாம் யாத்திரை செய்தார்கள்.

- பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு


ஆழ்வார்திருனகரியோடு, ஸ்ரீவைகுண்டம் நாங்குனேரி
ஏழ்பிறப்பினும் காணர்கறியவாம் பதிகள் கண்டார்
தாழ்சடை வள்ளல் கோலம் கண்டவர் இங்குவந்து 
சூழரவதிலே பள்ளி கொண்டவன் அழகும் கண்டார் (212)


திருச்செந்தூரும் வந்தார்; திருச்செந்தில் நாதன் கண்டார்
அருணகிரிநாதர் வாழ்த்தித் திருப்புகழிலேயுரைத்த
திருமுருகன் தாளைக் கண்டு அறிவாலே அறிந்திரைஞ்சி
திருவடியார் இடரே நீங்க முருகா நீ வருவாயென்று (213)

அலைவாயுகந்த பெருமாள் அவனையே தொழுது நின்றார்
மலைமகள் உகந்தளித்த வேல்கொண்டு சூரபதுமன்
தலையரிந்தருளே செய்து குகனவன் நின்ற ஊராம்
மலையென வரும் துன்பங்கள் அனைத்துமே போக்கும் ஊராம்! (214)

சங்கு சக்கரத்தான் மருகன் தன்படை தாகம் தீர்க்க,
பொங்கிடும் நாழிக் கிணறு தந்ததோர் ஊராம் இங்கே
சங்கரர் குஹனைப் போற்றி, புஜங்க தோத்திரமே செய்து
எங்குமே இன்பம் தோன்ற பாடியே நின்ற ஊராம்! (215)

தேவர்க்கு வெற்றி வாகை தந்த அக்குமரனுக்கு
தேவரின் சிற்பி விஸ்வகர்மாவே நிர்மாணித்த
கோவிலே கொண்ட ஊராம்; தேவரைக் காத்த தேவன்
சேவடி கொண்ட ஊராம்; காத்தருள் தந்த ஊராம் (216)

குமரனை, செந்தில் வேலை, முருகனை, குஹனை நித்தம்
அமரர்கள் போற்றும் அந்தப் பரமனை, முனிவர் வாழ்த்தும்
நிமலனை, உமைக்கொழுந்தை, சங்கரர் உள்ளம் என்னும்
கமலத்தில் வாழும் தேவை, கண்டுளம் உருகி நின்றார் (217)

செந்திலாண்டவனைக் கண்டு, மன்னுயிர் எல்லாம் வாழ
வந்தனை செய்து வேலைப் பணிந்தவன் பாதம் பற்றி
சிந்தனை எங்கும் அந்தக் குஹனையே நிறைத்துப் பின்னர்
கந்தனின் தலம் விட்டேகி, யாத்திரை தொடர்ந்தாரம்மா! (218)


1923  ஆம் வருடம் ஏப்ரல் மாதம் திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்குத் தாடங்கப் பிரதிஷ்டைக்குண்டான நாள் குறிக்கப்பட்டிருந்தது. ஆதலால், திருனெல்வேலி மாவட்ட யாத்திரையை முடித்துக் கொண்டு, கோவில்பட்டி, சாத்துர், அருப்புக்கோட்டை, மதுரை வழியாகத் திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் வழியில், ஸ்வாமிகள் திண்டுக்கல்லில் மூன்று நாட்கள் முகாம் செய்திருந்தார்கள். 

- பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு


குகன் தரிசனம் முடித்து, சென்றிடும்  வழியில் மக்கள் 
உகந்திடுமாறு திண்டுக்கல்லுமே சென்றடைந்தார்
ஜகமெலாம் போற்றும் வேந்தர் அங்கேயே மூன்று நாட்கள்
அகமெலாம் இனிக்க பூஜை செய்துளம் மகிழ்ந்தாரம்மா! (219)

அகந்தை கொண்டலைந்த திண்டி மன்னனின் வாழ்வைச் சிவனும்,
தகர்த்தன்றுப் பொடியாய்ச் செய்த செயலதால் வந்த ஊராம்!
மிகப்பெரும் திண்டைப் போல மலையதும் இருந்ததாலே
புகன்றனர் "திண்டுக்கல்" என்றுமே சொல்வாரம்மா!  (220)


பின்னர் பழனிக்கு 23-03-1923 அன்று விஜயம் செய்து மூன்று நாட்கள் அங்கு தங்கி, தண்டாயுதபாணி தரிசனம் செய்து கொண்டார்கள். 

- பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு

திண்டுக்கல்லில் தங்கி பூஜையும் செய்து பின்னர்
அண்டமே போற்றும் செல்வர் பழனிக்குச் சென்றாரம்மா!
சண்டமாருதமாய் செந்தில் கடற்கரை இருந்த செல்வன் 
தண்டபாணியவனாய் இங்கே தரிசனம் அளிக்கக் கண்டார்!  (221)

விதியதை மாற்றும் ஊராம்; மதியதே சேர்க்கும் ஊராம்!
பதியையே அடையத் திருவும் தவம் செய்திருந்த ஊராம்!
"அதிசயமனேகமுற்ற ஆவினன்குடி"யென்றிங்கே
துதித்திருப்புகழே கொண்ட அறுபடைவீட்டில் ஒன்றாம் (222)

திரு, ஆ, இனனும், பூமி, அக்கினி, வாயு எல்லாம் 
பெருந்தவம் செய்ததாலே "திரு - ஆ- இனன்-கு-டி" என்றாரோ?
பெரும்வள்ளல் பேகன் என்றோர் ஆவியர் குலத்தலைவன்
அரும்பெரும் ஆட்சி செய்த ஊரதால் அந்தப் பேரோ? (223)

(திரு= லட்சுமி, ஆ= காமதேனு, இனன்= சூரியன், கு= பூமி, டி= அக்கினி- வாயுபகவான் ஆகியோர் தவமிருந்து பலன் பெற்றதால் பழநி திருஆவினன்குடி என்று ஆனது)

அகத்தியர் ஔவையோடு, நக்கீரர், கச்சியப்பர்
ஜகமெலாம் புகழும் வேலன் திருப்புகழுரைத்த நாதர்
திகழ் பாம்பன் ஸ்வாமியென்று குஹன் மனம் குளிரவந்து
மிகப்பெரும் புலவரெல்லாம் பாடிய தலமாம் இதுவே! (224)

உகப்புடன் தெற்கு வந்து இறைமணக் கோலம் கண்ட
அகத்தியருக்குத் தமிழைக் குமரனும் தானே வந்து 
மிக உபதேசம் செய்த ஊராம், நற்பழனம் சூழ்ந்து
திகழ்ந்ததோர் ஊராமதனால் 'பழனி'யென்றங்கே பேராம்! (225)

இறைவனாம் பழனிவேலன் கருவறை கிழக்குப் பக்கம்
பிற மதத்தவரும் வந்து பணிந்திங்கே தூபம் காட்டி
சிறப்புறும் 'பழனிபாபா' என ஓதிவருமக் கோலச்
சிறப்பினால் சிறந்த ஊராம் ; அருளினால் நிறைந்த ஊராம்! (226)


பிரம்மனும் ருத்ரசாபம் கொண்டுவேடுவனாய் வந்து 
முருகனை வழிபட்டிங்கே விமோசனம் அடைந்த ஊராம்!
பரம் தனை நினைக்க இங்கே சனிதோஷம் நீங்கும் என்று
வரமந்த குஹனும் தந்து அருள்தந்து நின்ற ஊராம்! (227)

அங்காரகனும் வந்து முருகனைக் கண்டு இங்கே
மங்கிடா நலமும் பெற்ற ஊரிதாம்; அடியாரெல்லாம்
பொங்கிடும் பக்தியாலே காவடி தூக்கி வந்து
செங்கண்மால் மருகன் அவனைப் போற்றியே நிற்கும் ஊராம்!  (228)

நவபாஷாணத்தால் முன்னர் போகரால் வடிக்கப்பெற்ற
பவரோகம் தீர்க்கும் பெருமான், உலகத்தின் அரசன் வந்து
தவக்கோலம் கொண்டே இங்கு ஆண்டியாய் நிற்கக் கண்டார்
சிவனார் தம் குமரன் தன்னை கொலு வீற்றிருக்கக் கண்டார் (229)

பழம்வேண்டி மயில்மீதேறி, உலகத்தை சுற்றி வந்தும்
பழம்கிடைக்காமல் கோபம் பொங்கிட தமிழவேளும்
பழனியாம் பதியில் ஞானப்பழமாகி நின்ற கோலம்
அழகாகக் கண்டார் இன்பக் கடலிலே திளைத்து நின்றார் (230)

பின்னர், திண்டுக்கல், விராலிமலை, இளையாற்றங்குடி, கண்டனூர், திருமயம், புதுக்கோட்டை, கீரனூர் மார்கமாக 1923 ஆம் வருடம், ஏப்ரல் மாதத்தில் திருவானைக்காவுக்கு எழுந்தருளினார்கள். 
                

திருவானைக்கா க்ஷேத்திரம், ஜம்புகேஸ்வரம் என்றும் அழைக்கப்பெறும். இது பஞ்சபூதத் தலங்களில் அப்பு க்ஷேத்திரமாக விளங்குகிறது. அப்பு என்பது தண்ணீரைக் குறிக்கும். திருவானைக்கா க்ஷேத்திரத்தில் லிங்கத்தைச் சுற்றி எப்பொழுதும் தண்ணீர் ஊறிக் கொண்டிருக்கும். அந்த க்ஷேத்திரத்தின் ஸ்வாமியின் பெயர் ஸ்ரீ ஜம்புநாதர். அம்பிகை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி; ஆதிசங்கரர் பாரததேசத்தில் திக்விஜயம் செய்தபோது, காசியில் அன்னபூரணீ, வட கன்னடத்தில் மூகாம்பிகை, காஞ்சியில் காமக்ஷி, திருவொற்றியூரில் திரிபுரசுந்தரி, ஜம்புகேஸ்வரத்தில் அகிலாண்டேஸ்வரி - இவ்விடங்களில் எல்லாம் ஸ்ரீ சக்ரப் ப்ரதிஷ்டை செய்திருக்கிறார். இந்தச் சக்ரப் ப்ரதிஷ்டை ஒவ்வோரிடத்திலும் ஒவ்வோர் விதமாக அமைந்துள்ளது. 

அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்குத் தாடங்கம் என்னும், காதிலணியும் ஆபரணத்தில், ஸ்ரீசக்ரத்தை சங்கரர் ப்ரதிஷ்டை செய்துள்ளார். அதனுடன், அம்பிகையின் முன் ஒரு வினாயகரையும் அவர் ஸ்தாபனம் செய்து, தேவியின் அனுக்ரஹம் பக்தர்களுக்குக் கிடைக்கும்படி, அம்பிகையை சாந்த சௌம்ய தேவியாக மாற்றினார். அன்று முதல், அம்பிகையின் திருச்செவிகள் இரண்டிலும் அத்தாடங்கங்கள் அணீவிக்கப்பட்டு வருகின்றன. ரத்தினங்களால் பதிக்கப் பெற்ற அந்தத் தாடங்கங்களுக்கு எப்பொழுதாவது பழுதேற்பட்டால், அவைகளைப் புதுப்பித்து மறுபடியும் ப்ரதிஷ்டை செய்யும் பொறுப்பு, ஸ்ரீ காமகோடி பீடத்தின் ஆசார்யர்களுக்கே உரியதாகும். 1848 - ஆம் வருடத்தில் அக்காலத்திலிருந்த காஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளால் தாடங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

அந்தத் தாடங்கங்களுக்குப் பழுது ஏற்பட்டிருப்பதாயும், அவைகளைச் சீக்கிரம் புதுப்பித்துத் தாடங்கப் ப்ரதிஷ்டை செய்ய வேண்டுமென்றும் தேவஸ்தானத்து அதிகாரிகள் 1920 ஆம் வருடத்திலேயே ஸ்ரீ மடத்திற்குத் தெரிவித்துக் கொண்டனர். இவ்விஷயத்தில் ஸ்வாமிகள் தீர்க்கமாக ஆலோசனை செய்து, அவை வெகுகாலம் அழியாமலிருக்க வேண்டுமென்பதை உத்தேசித்து, பழமையான அந்தத் தாடங்கங்களைச் சீர்த்திருதம் செய்வதுடன், அவைகளை உள்ளடக்கி வைக்கும்படி ஸ்ரீசக்ர வடிவமாக ரத்தினங்கள் பதித்த, புதிய இரண்டு மேலுறைகளையும் தயாரிப்பதென முடிவு செய்தார்கள். 

இந்தப் ப்ரதிஷ்டையை முன்னிட்டு ஸ்வாமிகள் திருச்சிராப்பள்ளிக்கு விஜயமான பொழுது, திருச்சி மக்கள் ஸ்வாமிகளுக்கு அச்சமயம் அளித்த வரவேற்பு, அது வரையில் எவருக்கும் அளிக்கப்படாத வகையில் விளங்கிற்று. 

பிரதிஷ்டை

குறிப்பிட்ட நல்ல வேளையில், (ருத்ரோத்காரி சித்திரை 17 - ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை; 29-04-1923) ஸ்வாமிகள் தமது திருக்கரங்களால் இரண்டு தாடகங்களையும் ஏந்தி அம்பிகையின் இரு காதுகளிலும் அணிவித்தார்கள். இந்தக் காட்சியை அன்று தரிசித்தவர்களே பாக்கியசாலிகள். 

       - பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு

பழனியில் குஹனைக் கண்டு உளம் திளைத்தவரும் பின்னர்
அழகிய திருவானைக்கா அடைந்திட எண்ணம் கொண்டார்
உழன்றிடும் அடியார் துன்பம் தீர்த்திடும் தலமாம் பேரைக் 
கழறிடும் பக்தர் நெஞ்சில் இன்பம் கூட்டிடுமோர் தலமாம் (231)

திருவானைக்காவல் என்னும் ஜம்புகேஸ்வரத்தில் அன்னை 
திருத்தாடங்கம் தன்னைத் திருத்தியே சாற்ற வேண்டி
திருக்கோவில் அன்பர் வந்து பொருத்தமாய்ப் பெரியவாளை
வருந்தியே கேட்டுக் கொண்ட வேண்டுகோளை நிறைவேற்ற (232)

பெரியவாளும் வந்தார், திருச்சிராப் பள்ளி வந்தார்
பெரிதாமிவ் வுலகின் தாயாம் அன்னைக்கு அணிசெய்விக்க
சரியான நாள் குறித்து, ஸ்ரீசக்ர வடிவில் மிகவும் 
அரிதான ரத்ன உறையும் வடித்திங்கு அணிசெய்வித்தார் (233)

தாடங்கமாகச் சூர்ய சந்த்ரரைக்  காதில் கொண்டாள்
தாடங்க மகிமை ஒன்றால் சிவன்குடி விஷத்தை வென்றாள்
நாடகம் ஆடும் மயிலாள் உலகையும் ஆட்டி வைப்பாள்
ஆடகம் வார்த்த மேனி அழகவட்கணிசெய்வித்தார் (234)

சங்கரர் போற்ற தில்லை அம்பலர் போற்ற தங்கை
மங்கலம் பூண்டவாற்றை ஹரியுமே போற்ற அன்னை
பங்கய முகமலரொளியதனை கணபதி முருகன் போற்ற
எங்கணும் இன்பம் தோன்ற அன்னைக்கு அணிசெய்வித்தார் (235)


தாடங்கப் பிரதிஷ்டை முடித்த பின்னர், ஸ்வாமிகள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதரையும், மலைக்கோட்டை ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரரையும் தரிசனம் செய்து கொண்டார்கள்.
      - பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு

காதணி பூட்டி அன்னை அழகினை விழிக்கு ஊட்டி
மாதவள் தாள் பணிந்து, மாதவன் தாள் பணிய
மாதவம் புரிந்து தாயாம் காவிரி பெற்ற பேற்றை
வேதமே தழைக்கும் ஊராம் ஸ்ரீரங்கம் சென்று கண்டார் (236)

திருப்பாற்கடலிற்தோன்றி, ப்ரம்மாவும் பூஜை செய்த
திருவரங்கத்தை மன்னன் இஷ்வாகு தூக்கிச்செல்ல
திருமகள் காந்தன் பின்னர் விபீஷணர்க்களித்துமன்று
திருவரங்கத்தானும் அரங்கம் அதனிலே தங்கி விட்டான்! (237)

தென் திசையிலங்கை பார்த்து  விபீஷண அரசு வாழ
மன்னுயிர் எல்லாம் போற்றும் அரங்கனும் இங்கு சாய்ந்து
தன்னுடல் கிடத்திவிட்டான்!  திருமகள் துணை இருக்கப்
பொன்னுடல் கிடத்தி இங்கே சேவையே தந்து நின்றான்! (238)

சீதையைத் தேடியெங்கும் நடந்தலுத்தாவி நொந்து
பேதைமை போக்க நூறு பேர்க்காக நடந்து நொந்து
கீதையே சொல்லித் தேரும் நடத்தியே உடலும் நொந்து
வாதையே போக்கவென்று பள்ளி கொண்டுறங்கினானை (239) 

மோகனவடிவை, காக்கும் நாரண வடிவை தேவர்
சோகமே போக்கும் திவ்ய  ஜோதியாம் வடிவை மாதோர்
பாகமே கொண்டான் போற்றும் மங்கள வடிவை என்றும்
நாகமே குடையாய் நின்ற அரங்கத்து வடிவைக் கண்டார் (240)

அரங்கத்தானைக் கண்டு ஆனந்தம் கொண்டபின்னர்
அரனையே காணவென்று மலைக்கோட்டை கோவில் சென்றார்
நரைவெள்ளேறு ஊர்ந்து, பெண்ணுக்கு ப்ரசவம் பார்த்து
பரனவன் தாயுமாகி நின்றதோர் கோலம் கண்டார்! (241)

நெரூரிலிருந்து கேரளம் வரை 
தாடங்கப் பிரதிஷ்டை முடிந்தவுடன் ஸ்வாமிகள் காவிரியின் தென்கரை வழியாகக் குழித்தலை, கிருஷ்ணராஜபுரம், மகாதானபுரம் முதலான ஊர்களிச் தங்கி, கரூர் வரை விஜயம் செய்து, பின் நெரூரில் ஸ்ரீ சதாசிவ ப்ரம்மத்தின் அதிஷ்டானத்தையும் தரிசனம் செய்து கொண்டார்கள்.
      - பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு

திருவரங்கத்தானைப், பின்னர் தாயுமாகி நின்றான் தன்னை
உருகியே தொழுதார் சென்றார்; நெரூரெனும் தலமே வந்தார்
கருமுகில் மேனி வண்ணன் ராமனின் ரசம் பருகி
உருவமும் குணமும் இல்லா ப்ரம்மமாய் நின்று விட்ட (242)

சதாசிவ ப்ரம்மேந்திரரின் அதிஷ்டானம் வந்து நின்று
சதா அவர் ப்ரம்ம நிஷ்டை கலந்ததாம் நிலையை அந்த
சிதானந்த நிலையை யோக சிவானந்த நிலையை எண்ணி
பதாரவிந்தம் அதனைப் பணிந்தடி தொழுது நின்றார் (243)


காண்டம் : 2 : விஜய யாத்ரா காண்டம்
படலம் : 9 : விஜய யாத்திரை : 1924 : திருக்காட்டுப்பள்ளி விஜயம்

1924 - ஆம் வருடத்தில், திருக்காட்டுப்பள்ளியில் சர்.பிஎஸ்.சிவஸ்வாமி ஐயரால் நிறுவப்பட்ட உயர்நிலைப் பள்ளிக்கு (22-03-1924) விஜயம் செய்தார்கள்.

குழந்தைகள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் முதலில் தங்கள் தாய், தந்தையரைக் குறித்தும், பின்னர் உலகிற்கெல்லாம் தாய், தந்தையாக விளங்கும் பார்வதி பரமேஸ்வரனைக் குறித்தும் வணக்கம் தெரிவித்துவிட்டுப் பாடங்களைப் பயில ஆரம்பிக்க வேண்டுமென்றும் உபதேசித்தார்கள்.
      - பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு

சிரங்குவித்ததிட்டானத்தில் ப்ரம்மத்தைத் தொழுத பின்னர்
பரனென்று தம்மை வந்து அண்டினோர்க்கருளிப் பின்னர்,
அரனை வந்திங்கு அந்த அக்கினியும் பணிந்த ஊராம்,
அரன் தீயாடியப்பன் வாழும் திருக்காட்டுப்பள்ளி சென்றார் (244)

சிவஸ்வாமி ஐயரென்பார் திருக்காட்டுப்பள்ளி தன்னில்
உவந்தொரு பள்ளி தானும் திறம்பட நடத்தி வந்தார்
சிவஸ்வரூபர் அங்கே எழுந்தருள வேண்டுமென்று
அவருமே விரும்பிக் கேட்க, பெரியவா அங்கு சென்றார் (245)

குழந்தைகள் அனைவருக்கும் பெரியவா கரம் உயர்த்தி
அழகாக அருளே செய்து, அனைவரும் உய்யும் வழியைப்
பழகிடும் தமிழில் சொன்னார்; தாய் தந்தை வணங்கச் சொன்னார்
உழன்றிடும் வாழ்வில் கௌரீ, சிவனையே நினைக்கச் சொன்னார் (246)

1924 - ஆம் வருடம், ஜூலை மாதம், ஸ்வாமிகள் திருவையாற்றில் அவ்வூர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்கி காவிரியின் வடகரையில் புஷ்ய மண்டபத்தில் தங்கி, அவ்வருட வியாஸ பூஜைய மிகவும் விமரிசையாக நடத்தினார்கள்.
         - பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு

விதியையும் மாற்றும் காட்டுப் பள்ளியில் தொழுத பின்னர்
பதியிலே உயர்ந்த திருவையாறடைந்திடச் சென்றார் சிவனை
துதித்திங்கு அப்பர் பெருமான் கயிலையைக் கண்ட ஊராம்
எதிரிலே ராமபிரானை த்யாகையர் கண்ட ஊராம் (247)

காவிரி வெள்ளமும், ஸ்ரீ ஆசார்யார் கருணையும்:

அந்த வருடம் ஆடிப்பெருக்கின்போது, எதிர்பாராதபடி காவிரி நதி கரைபுரண்டு ஓடியது. சில இடங்களில் கரைகள் தகர்ந்தன; பல இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டன. ஸ்வாமிகளின் பூஜா மண்டபத்திலும் தண்ணீர் புகுந்துவிட்டது. இருந்தாலும் ஸ்வாமிகள் சாதுர்மாஸ்ய சங்கல்பம் முடியும் வரை, எவ்வித ஆபட்து நேர்ந்த போதிலும், வேறு இடத்திற்குப் பூஜையை மாற்ற இயலாது என்று சொல்லிவிட்டார்கள். ஏழைகளின் குடிசைகளும் நீரில் மூழ்கின, அவர்கள் மேடான இடங்களில் வந்து தங்கினார்கள். மடத்தின் உக்கிராணத்திலிருந்த உணவுப் பொருட்களைக் கொண்டு, அன்றாடம் உணவு தயாரிக்கச் செய்து, பெரிய அண்டாக்களில் நிரப்பி, மடத்தின் வண்டிகளில் ஏற்றி, ஏழை எளிய மக்களுக்கு வினியோகம் செய்யும்படிக் கட்டளை இட்டார் ஸ்வாமிகள்.
         - பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு

பெரியவா சாதுர்மாஸ்ய விரதமே இருக்கும் காலம் 
பெரியவா பூஜை பார்க்க விரும்பியே பொன்னி நங்கை
விரிந்தன்று கரைபுரண்டோடியே வந்துவிட்டாள்!
பெரியவா பூஜைக் கட்டு வரையிலும் வந்து விட்டாள்! (248)

வீடுகள், இடங்கள் எல்லாம் நீரிலே மூழ்க, உணவு 
தேடியே மக்கள் எல்லாம் மடத்தை வந்தண்டி நிற்க,
ஓடியே சென்றவர்க்கு உதவவே சொன்னார் தேவர்!
நாடியே வந்தவர்க்கு உணவளித்தருளும் செய்தார்! (249)

வல்லம் விஜயம் : 

1924 ஆம் வருட இறுதியில் ஸ்வாமிகள் தஞ்சைக்கு அடுத்த வல்லத்திற்கு விஜயம் செய்தார்கள். ஏராளமான ஹரிஜனங்களும் ஸ்வாமிகளின் வரவேற்பில் ஈடுபட்டனர். தஞ்சை கலெக்டர் எச்.எம்.ஹூட் என்பாரும் ஸ்வாமிகளை சந்தித்து சந்தோஷமடைந்தார். 

திருக்காட்டுப்பள்ளி விட்டு பெரியவா வல்லம் சென்றார்
அருமையாய் அவரைப் போற்றி, வரவேற்க என்று மிக்கப்
பெருவாரியாக அங்கே ஹரிஜன மக்கள் வந்தார்!
தெருவெலாம் நின்று வாழ்த்தி, பெரியவா அருளைப் பெற்றார்! (250)

பெரியவா பெருமை கேட்டு, கலெக்டராம் "ஹூட்" என்பாரும்
அரியவோர் வாய்ப்பென்றங்கு தரிசனம் செய்ய வந்தார்!
பரிந்தங்கு சிவஸ்வரூபர் தனக்கென அமர்ந்து பேசி 
விரிந்துரை செய்தவாற்றை பெரிதோர் பேரெனவே கொண்டார்! (251)

ஸ்வாமிகள், பின்னர், சித்தன்னவாசல், நார்த்தாமலை, குண்டாண்டார் கோவில், குடுமியான் மலை, திருக்கோகர்ணம், திருமயம் முதலான இடங்களுக்கு விஜயம் செய்தார்கள். சித்தன்னவாசல் சித்திரங்களையெல்லாம் ஸ்வாமிகள் புகைப்படம் எடுக்கச் செய்தார்கள். குடுமியான் மலை மஹேந்த்ரவர்ம பல்லவனின் நீண்ட கல்வெட்டைப் பார்த்தார்கள். (சங்கீதக் கலை பற்றியது), நார்த்தா மலையில் தண்ணீர்ச்சுனைகளுக்கடியிலிருந்த சிவலிங்களுக்கு அபிஷேகம் செய்தார்கள். 

சித்தன்னவாசல் சென்றார்; குடுமியான் மலையும் சென்றார்
சித்திரம், கல்வெட்டெல்லாம் பார்த்துடன் மகிழ்ச்சி கொண்டார்
பத்திரமாக அந்த கலையெல்லாம் பாதுகாக்க
சித்திரம், கல்வெட்டெல்லாம் புகைப்படம் எடுக்கச் சொன்னார்! (252)

நகரத்தார் நாட்டில் யாத்திரை

கண்டனூருக்கு 15-04-1925 இல் விஜயம் செய்தார்கள். அவ்வூரை அடுத்த சாக்கோட்டை என்னும் தலத்தில் ஸ்வாமி தரிசனம் செய்து கொண்டார்கள்

சாக்கோட்டை என்னும் தலமும் பெரியவா சென்றார் அதுவும்
சாக்கிய நாயன்மாரும் சிவனையே தொழுத ஊராம்
சாக்கியர் வாழ்ந்த ஊராம்; ஊழிக்காலத்தில் அமுதம்
தேக்கிய கலசம் தங்க, "கலசநல்லூர்" என்றே பேராம்! (253)

பின்னர் 1925 இல் பிப்ரவரி மாதம் தேவகோட்டையில் சுமார் ஒரு மாதமும், பிறகு, காரைக்குடியில் ஒரு மாதமும் தங்கியிருந்து பக்தர்களை ஆசீர்வதித்தார்கள். பின்னர், பள்ளத்தூர், கடியாபட்டி, ராயவரம், அரிமளம், கோனாப்பட்டு முதலான இடங்களுக்கு ஸ்வாமிகள் விஜயம் செய்தார்கள்

கோனாப்பட்டு வந்தார் பெரியவா; அறிஞரெல்லாம்
வானோரும் போற்ற வாழும் ஊரிதாம்; எந்தைதன் தாய்
தேனோடு பாலும் கொண்டு சிவனைபூசித்த ஊராம்
ஊனதும் நலிய ஆன்றோர் உலகிற்காய் வாழும் ஊராம் (254)

1925 ஆம் வருடத்து வியாஸ பூஜை இளையாற்றங்குடியில் நடைபெற்றது. அதே சமயம், ஸ்ரீ ஸ்ருங்கேரி ஜகத்குரு ஸ்ரீசந்த்ரசேகர பாரதீ ஸ்வாமிகள் ஐந்து மைல் தூரத்திலுள்ள குன்றக்குடியில் தம் சாதுர்மாஸ்ய விரதத்தை நடத்தி வந்தார்கள். மடத்திற்கு வரும் அன்பர்கள் மூலம் இரு மஹான்களும் ஒருவருக்கொருவரின் நலம் பற்றி விசாரிப்பதுண்டு.

குருவுக்கு பூஜை செய்ய, வியாஸ பூஜையையும் செய்ய
குருவவர் அறிஞர் போற்றும் இளையாற்றங்குடிக்கு வந்தார்!
அருகினில் குன்றக்குடியில், பெரியவா பெயரே கொண்ட
பெரும்குரு சந்த்ர சேகர பாரதி ஸ்வாமி வந்தார்! (255)

சரஸ்வதி என்றால் என்ன? பாரதி என்றால் என்ன?
வரம்தரும் வாணி என்னும் தெய்வத்தின் பெயரே அன்றோ?
நரவேடம் இட்டு வந்த தெய்வத்தின் வடிவே அன்றோ?
அரனவன் ஆடும் லீலை அற்புதச் சுவையே அன்றோ? (256)

அப்பெரியவாளைப் பார்த்து, இவ்விடம் வந்த பேரை
இப்பெரியவாளும்,"அங்கே, பெரியவா பூஜை நீங்கள்
தப்பாமல் பார்க்க வேண்டும்; அவர் நலம் இங்கே வந்து 
செப்பவும் வேண்டும்; நாங்கள் இருவரும் ஒன்றே" என்றார்! (257)

அருகினில் இருந்திட்டாலும், மிகப்பழங்காலம் தொட்டு,
குரு அவர் இருவர் நேரில் சந்திக்கும் வழக்கம் இல்லை!
இரு உடல் இரண்டு பேராய் இயங்கினும் நிஜத்தில் அங்கே
ஒருவரே இருந்தாரம்மா! இறைவனே இருந்தானம்மா! (258)

1925 - ஆம் வருடம், ஜுலை மாதம் ஸ்வாமிகள் இளையாற்றாங்குடியில் தங்கியிருந்தபோது, ஒரு நாள் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் தரிசிக்க வந்தார். செட்டியார் தமிழிலும், சமஸ்க்ருதத்திலும் நல்ல புலமை வாய்ந்தவர். ஸ்வாமிகள் சுமார் மூன்று மணி நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்தார்கள். தமிழும், சமஸ்க்ருதமும் அன்றிருந்த நிலையில், புறக்கணிக்கபடுகின்றன என்றும், பண்டிதமணி போன்ற புலவர்கள், அம்மொழிகளில் சிறந்த வித்வான்களை உண்டாக்க வேண்டுமென்றும் கூறினார்கள். பின்னர் ஸ்வாமிகள் அவரது புலமையை மெச்சி அவருக்கு ஒரு பீதாம்பரம் அளித்து மரியாதை செய்தார்கள்

பண்டிதமணியென்றுலகம் போற்றிடும் புலவர் வந்தார்
தொண்டிலே சிறந்தவராம் கதிரேச செட்டியாரும் 
அண்டியே பெரியவாளை தரிசனம் செய்ய வந்தார்
மண்டிடும் இருளையெல்லாம் மாற்றுமாதவன்முன் வந்தார்! (259)

தேவபாஷையதில் தமிழில் பண்டித மணியவருடனே
தேவரும் மனமினிக்க பலமணி பேசி நின்றார்!
தேவபாஷையதுவும் தமிழும் வாழ்வாங்கு வாழ மிக்க
ஆவனசெய்யுமாறு தேவரும் சொல்லி நின்றார்! (260)

முஸ்லிம் பக்தர்

1926 - ஆம் வருடம், ஜனவரி மாதத்தில் ஸ்வாமிகள், புதுக்கோட்டையைச் சேர்ந்த கரம்பக்குடியில் ஒரு நாள் தங்கினார்கள். மறுநாள், ஸ்வாமிகளை வழியனுப்ப, கரம்பக்குடி மக்கள் ஊர் எல்லை வரை வந்தனர். அவர்களுள் சில இஸ்லாமியர்களும் காணப்பட்டனர். ஒரு இஸ்லாமியர் மாத்திரம் ஸ்வாமிகளின் பல்லக்கைப் பிடித்துக் கொண்டு, சுமார் மூன்று மைல்கள் வரை தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். இதைக் கவனித்த ஸ்வாமிகள் , அந்த இஸ்லாமியரை அழைத்து விசாரித்தார். அவர் ஸ்வாமிகளிடம் தன் சொந்த விஷயங்கள் பலவற்றைத் தெரிவித்துவிட்டு, ஸ்வாமிகளின் பேரில், தாம் இயற்றிய சில பாடல்களையும், ஒரு பூமாலையையும், மற்ற காணிக்கைகளையும் ஸ்வாமிகளின் பாதங்களில் சேர்ப்பித்தார். பின்னர், அவர் ஸ்வாமிகளைப் பார்த்து, "என் கண்களுக்கு, ஸ்வாமிகள் அல்லாவின் உருவமாகவே தோன்றுகிறார்கள்; ஏகாந்தமான தரிசனம் வேண்டியே நான் பல்லக்குடன் அவ்வளவு தூரம் ஓடிவந்தேன்" என்றார். ஸ்வாமிகளும், கருணையோடு, அவருக்குப் பரிபூரண அனுக்கிரகம் செய்து, விடை கொடுத்து அனுப்பினார்கள்


புதுக்கோட்டைக் கரம்பக்குடியில் பூஜையும் செய்த தேவர்
பதம்பணிந்தோர்க்கு ஆசி நல்கியே கிளம்பிச் சென்றார்
நிதமவர் சேவை விரும்பி இஸ்லாமிய அன்பர் ஒருவர்
இதமுடன் தேவர் பல்லாக்கதையுமே சுமந்து சென்றார்! (261)

கண்ணுற்ற தேவர் அவரை அன்புடன் அழைக்கச் சொன்னார்
கண்களும் பொழிய அந்த இஸ்லாமிய அன்பர் வந்தார்
பண்ணுடன் பாடல் சொன்னார்; பதத்திற்கு மாலையிட்டார்
எண்ணுதற்கரிய அந்த அல்லாவாய்ப் பார்த்தேன் உம்மை (262)

அரியதோர் காட்சி கண்டேன்; பிறவியின் பயனும் பெற்றேன்
பிரியவே மனமும் இல்லை, பல்லக்கு தூக்கி வந்தேன்
சிறியவன் எனக்கும் நீங்கள் அருளவே வேண்டும் என்றார்
பெரியவா கருணையோடு விடைகொடுத்தனுப்பி வைத்தார்! (263)

1926 - மார்ச் மாதம் : ஸேத் ஜமன்லால் பஜாஜ், ராஜாஜியுடன் சந்திப்பு 

சுதந்திர தாகம் கொண்டு,விடுதலை இயக்கம் சேர்ந்து 
நிதம் நிதம் துன்பம் கண்டும் பாரதத் தாயின் துன்பம்
அதனையே மாற்றி இன்பம் என்றுமே நிலைக்க வந்த
சுதர்கள் ராஜாஜி ஜமன்லால் பஜாஜும் அங்கு வந்தார் (264)

வந்தவர் எல்லாம் அங்கே பெரியவாவிடமே வந்தும்
சிந்தையில் பக்தி தோய்ந்தும், உளமெலாம் இறையே கொண்டும்,
விந்தையாய் ராஜாஜி மட்டும் ஆசிகள் பெறவரவில்லை!
எந்தையும் 'என்னாயிற்றென்றார்'; உடனிங்கு வரச்சொல்லென்றார்! (265)

பெரியவாளைப் பார்க்கவென்று இவ்வளவு தூரம் வந்தும்
பெரிதுமே வேலைப் பளுவில் ஸ்நானமே செய்யவில்லை
சரியோயிதுங்கள் முன்னால் மடியின்றி வந்து நிற்றல்?
பரிந்தெம்மை மன்னிப்பீரே, ராஜாஜி பதிலும் சொன்னார்! (266)

தேவரும் சிரித்தார், அவரைப் பார்த்துடன் உரைக்கலானார்,
சேவையே தொழிலாய்க் கொண்டு, தேசமே உயிராய்க் கொண்டு
ஆவியே நாட்டிற்காகக் கொடுத்திடும் பேருக்கெல்லாம்
தேவையே இல்லை ஸ்நானம் என்னிடம் வரவே என்றார்! (267)


கதர் இயக்கத்திற்கான நன்கொடை ரூ.1000/- (1926ல்..!!)
*************************************************************************************

தேசத்தின் நிலையைக் கண்டு, வெளிநாட்டுத் துணியை இங்கு
நாசமே செய்து நமது கதரினை உடுத்தவென்று 
பாசமாய் காந்தி நாதர் சொன்னது நல்லதென்று
நேசமாய்ப் பெரியவாளும் கதரிங்கு உடுத்தலானார்! (268)

கதரினை எல்லோருக்கும் எடுத்துணர்வூட்டி நிற்க, 
முதலதும் தேவையென்று, தலைவர்கள் வேண்டி நிற்க,
இதமுடன் ஆசி நல்கி, ஆயிரம் ரூபாய் தன்னை
கதரியக்கம் அதற்கு நன்கொடை கொடுத்தார் தேவர்! (269)


உடையார்பாளையம் விஜயம்:

உடையார்பாளையம் ஜமீன்கள் காஞ்சி மடத்திற்கு மிக நெருங்கியவர்கள். பரம்பரை பரம்பரையாக, மடத்திற்கும், ஸ்வாமிகளுக்கும், பாதுகாப்பு அளித்து வருபவர்கள்.

பங்காரு காமாக்ஷி, உடையார்பாளையம் மேல வீதியில் இன்றும் அருள்பாலிக்கிறாள். காஞ்சி ஆச்சார்யரே, தஞ்சாவூர் பங்காரு காமக்ஷி அம்பாள் ஆலய தர்மகர்த்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.

1926 ல் ஸ்வாமிகள் விஜயம் செய்தபோது, சீரிய முறையில் வரவேற்பளிக்கப்பட்டது.  சுமார் 15 நாட்கள், ஸ்வாமிகள் அரண்மனையிலும், அவ்வூர் ஆலயத்திலும் தங்க வசதி செய்து கொடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக மழையே காணாத அந்த சமஸ்தானப் பகுதியில், அவ்வாண்டு, நல்ல மழை பொழிந்து, பயிர் செழித்துப் பலன் பெருகியது.
    
     - பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு

புதுக்கோட்டை விடுத்துப் பின்னர் உடையார்பாளையமும் சென்றார் 
பதமலர் போற்றி காஞ்சிப் பரம்பரைக் காத்த ஊராம்
பதமலர் தந்து காஞ்சிக் காமாக்ஷி வந்த ஊராம்
உதவியே நல்கும் தோழ உடையார்கள் உடைய ஊராம்! (270)

வரவேற்றுப் பெரியவாளை மரியாதை செய்துமிக
சிரம்தாழ்த்திப் பணிந்தேத்திக் கொண்டாடி நின்றவூரில்
வரமென்று அங்கு வானம் பொழிந்தாட்சி புரிய பூமி
உரமேறி பயிர்செழித்துப் வளம்பூத்துக் குலுங்கியதாம்! (271)


காண்டம் : 2 : விஜய யாத்ரா காண்டம்
படலம் : 12 : விஜய யாத்திரை : 1926 : மற்ற இடங்களுக்கு யாத்திரை

1926 ஆம் வருஷ வியாஸ பூஜையை ஸ்வாமிகள், சிதம்பரத்துக்கு அடுத்த காட்டுமன்னார் கோவிலில் நடத்தினார்கள்.
நவராத்திரி பூஜை, திருப்பாதிரிப்புலியூரில், கடியாபட்டியில் நடைபெற்றது
- பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு

சிதம்பரத்தடுத்த ஊராம், காட்டுமன்னார் கோவில்
இதம்தருமிடமும் சென்றார் வியாஸ பூஜையுமே செய்தார்!
பதம்தரும் திருப்பாதிரிப்புலியூரும் சென்று அங்கு
சதமருள் அம்பிகைக்கு நவராத்திரி பூஜை செய்தார் (272)

கல்லினை உடலில் பூட்டி, கடலிலே போட்ட போதும்
சொல்லிடும் நாமம் நாவுக்கரசரைக் காத்த ஊராம்!
தொல்லிறைச் சிவனை வியாக்ர பாதரும் வந்து நின்று
நல்மனம் வைத்துத் தவமும் இயற்றியே நின்ற ஊராம்! (273)

தமிழ்ப் பண்டிதையும், காங்கிரஸ் சேவகியும், காந்தி மகான் சரித்திரத்தை செய்யுட்களாக இயற்றியவருமான அசலாம்பிகை அம்மையார் ஸ்வாமிகள் பெயரில் 5 செய்யுட்கள் இயற்றி ஸ்வாமிகள் முன்னிலையில் வாசித்தார். அவர், ஸ்வாமிகளின் பூர்வாசிரமத் தந்தையாரிடம் கல்வி பயின்றவர். அக்காலத்தில் குழந்தையாயிருந்த நம் ஸ்வாமிகளை அவர் அன்புடன் பாராட்டியதுண்டு. குழந்தை இப்போது பெரும் குருவாக விளங்குவதை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். மௌன நிலையில் இருந்த ஸ்வாமிகளும் கண்களாலேயே அனுக்ரஹித்தார். 
     - பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு

தேசபக்தர், காந்திபக்தர், அசலாம்பிகை அம்மையாராம்
நேசமுள்ள பக்தையங்கு தரிசனம் செய்ய வந்தார்
பேசுமித்தெய்வமங்கோர் குழந்தையாயிருந்தபோது
பாசமாய் வார்த்தை சொல்லி அன்பு பூண்டிருந்திருந்தார் (274)

குழந்தையும் நடந்திடும் ஓர் தெய்வமாய் வந்து சேர,
உழன்றிடும் வாழ்வில் இங்கோர் விடியலும் வந்ததென்று
அழகுடன் தமிழில் பாட, கண்களால் நோக்கி, ஆசி
வழங்கியே மௌன மூர்த்தி அனுக்ரஹம் செய்து நின்றார்! (275)

விழுப்புரத்திற்குத் தெற்கேயுள்ள சேந்தனூர் ரயில் நிலையத்திற்குக் கிழக்கே வடவாம்பலம் என்னும் சிற்றூர் உண்டு. ஸ்வாமிகள் 1926 ஆம் வருடம், நவம்பர் மாதத்தில் அவ்வூருக்கு விஜயம் செய்தார்கள்.  ஸ்ரீ. காமகோடி பீடத்தின் 58ஆவது ஆசார்யர்களான ஆத்மபோதேந்த்ர சரஸ்வதீ ஸ்வாமிகள் அவ்வூரில் சித்தி அடைந்திருந்தார்கள். 
   - பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு

விழுமிய புரமாம் அந்த விழுப்புரம் அருகேயுள்ள 
செழுமிய ஊராம் வடவாம்பலம் என்றோர் சிற்றூருக்கு 
கெழுதகைப் பெரியோரெல்லாம் வாழ்ந்திடும் அவ்வூருக்கு
குழுவினருடனே தேவர் விஜய யாத்திரையாய் வந்தார் (276)

ஆத்ம போதேந்திரராம் ஆசான், காமகோடிப் பீடத்தாசான், 
சாத்திரம் போற்ற வாழ்ந்த ஐம்பத்து எட்டாம் ஆசான், 
யாத்திரையாக தேசம் முழுக்கவே சுற்றிப்  பின்னர்
பாத்திரம் போன்றிருக்கும் உடம்பையே உகுத்த ஊராம்! (277)


அதிட்டானம் கட்டவென்று, மறைந்த அவ்விடத்தைத் தேடி
பதியெங்கும் சென்று பார்த்தார் தேவரும் ஊரார் சூழ!
கதிதரும் சன்னிதானம் எங்குமே கண்டாரில்லை!
விதியினோர் விளையாட்டென்று கண்ட நம் பெரியவாளும் (278)

ஓரிடம் நின்றார் அங்கே, தோண்டியே பார்க்கச் சொன்னார்!
"நீறிட்ட நெற்றி மின்ன, உடலிலே காவி மின்ன, 
பேரிடர் தீர்க்கும் தண்டம், ருத்திராக்ஷமாலை மின்ன
பாரெலாம் வணங்கிப் போற்றும் உருவமே தோன்றிற்றென்று" (279)


அங்கிருந்த சாம்பமூர்த்தி சாஸ்த்திரிகள் எடுத்துச் சொல்ல
பொங்கிடும் மகிழ்ச்சியோடு, பெரியவா புன்னகைத்து
"இங்குதான் குருமாரவரும், சமாதியாயிருக்க வேண்டும்,
இங்குடன் அதிஷ்டானத்தை அமைக்கலாம்" என்று சொன்னார்! (280)

போதேந்திரப் பெரியவாளின் அதிஷ்ட்டானம் அமைத்து அங்கே
நாதமே வடிவாமந்த சிவனருட்செல்வருக்கு
வேதோக்தமாக பூஜை செய்யவும் ஆஞ்ஞாபித்தார்!
பாதமே பணிந்து அவரின் அதிஷ்ட்டானம் தொழுது நின்றார் (281)

1926 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஸ்வாமிகள் புதுச்சேரிக்கு விஜயமானார்கள். மத வேற்றுமையின்றிப் பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் ஊர் எல்லையில் ஸ்வாமிகளை வரவேற்றார்கள். மிகப் பெரியதொரு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்வாமிகளும், அவர்களெல்லோரது அன்புக்கும் தம் சந்தோஷத்தைப் புன்னகையுடன் தெரிவித்தார்கள். சுமார் ஒரு வாரம் ஸ்வாமிகள் புதுச்சேரியில் தங்கியிருந்தார்கள். 
   - பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு

அதிஷ்ட்டானம் தொழுத பின்னர் , குருப்பதம் பணிந்தபின்னர்,
புதுச்சேரி செல்லவென்று, பெரியவா நினைத்து விட்டார்
வேதமே நிறைந்த ஊராம்; வேதபுரி என்றும் பேராம்
பாதமே பதித்து உள்ளே வந்தாரைக் காக்கும் ஊராம் (282)

அரவிந்தர், அன்னை,பாரதி மாகவி வாழ்ந்த  ஊராம்!
பரனைத்தம் உள்ளம் கொண்ட சித்தரும் வாழ்ந்த ஊராம்!
நரவாழ்வை விளக்கிவைக்கும்  திருவருட்பாவைத் தந்த
அரனையிங்குளத்தில் கொண்ட வள்ளலார் வாழ்ந்த ஊராம்! (283)

மணற்குளக் கரையில் அன்று, சிவசுதன் வந்து நின்றான்
குணக்கடல் அவனைப் போற்றி வாழ்ந்த ஊர் மக்களோடு 
பிணக்குடன் வந்த புதுவை கவர்னரை வாட்டிப் பின்னர்
வணங்கவே வைத்துக் கோவில் கொண்டதால் சிறந்த ஊராம்! (284)

வேதத்தால் சிறந்த ஊரில், வேதபுரி என்னும் ஊரில், 
வேதபுரீஸ்வரனாம் சிவனும் கோவிலே கொண்ட ஊரில்
வேதரக்ஷகனும் தங்கி ஒரு வாரம் இருந்தாரம்மா!
வேதமே வளர்ந்து ஞானம் பொலிந்திடச் செய்தாரம்மா! (285)

ஒரு வாரம் புதுவையில் தங்கியிருந்த பின்னர், ஸ்வாமிகள், கடலூர், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர் வழியாக, 1927 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 31ஆம் தேதி, சேலம் வந்தடைந்தார். 
   - பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு

புதுவையிலிருந்து தேவர் புறப்பட்டு சேலம் சென்றார்
அதிசயக் கோவில் பலவும் கொண்டதோர் ஊராம் இங்கே
பதியெனக் கைலாசநாதர் கோவில்கொண்டிருக்கும் ஊராம்
கதியென சுகவனேஸ்வரரைக் கிளிவந்து போற்றிய ஊராம் (286)

சேரர்கள் ஆண்ட ஊராம்; "சேரலம்" என்றும் பேராம்
சேரலம் என்னும் பேரே "சேலம்" என்றாயிற்றென்பார்!
பேரெழில் மலைகள் சூழ்ந்த இடத்தையே "சைலம்" என்பார்
பேரதும் 'சைலம்' என்பார்; 'சேலமாய்' மாறிற்றென்பார்! (287)

சேலைகள் நெசவினாலே பெயர்பெற்ற சேலையூரே
சேலமென்றாயிற்றென்று சொல்லுமோர் வழக்குமுண்டாம்!
காலனை உதைத்த கால சங்கர  வடிவார் சற்றே
காலமிங்கிருந்து பின்னர் ஈரோடு விஜயம் செய்தார்! (288)
  
பிரம்ம தோஷத்தைப் போக்க சிவன் சுற்றி வந்தபோது
கரமொட்டி நின்ற ஈர  ஓடகன்று விழுந்த ஊராம்
புரமிதன் புறத்தில் "வெள்ளோடு","பேரோடு", "சித்தோடென்று"
அரன் செயல் சொல்லும் ஊர்கள் இருப்பதும் சான்றாமென்பார்! (289)

ஆருத்ர கபாலத்தோடு ஈஸ்வரன் விளங்கும் ஊரில்
சீருடன் இருந்த முஸ்லிம் அன்பராம் ஒருவர் வந்தார்
பேருடன் சொல்லித் தேவர் பாதமே தொழுது நின்று
கோருமோர் வரமாய் தேவ பாஷையில் பாடி வைத்த (290)

பாடலை தேவர் முன்னால் படித்திடக் கேட்டு நின்றார்
வீடதைத் தரும்நம் தேவர் புன்சிரிப்பொன்று செய்து
பாடலைப் படிக்கச் சொன்னார்; கேட்டுடன் வியந்து வாழ்த்தி
"ஈடெதும் இல்லாப் பாடல்! முஸ்லிமாய் இருந்தும் நீங்கள் (291)

சமஸ்க்ருதம் கற்றதென்னே? ஸ்லோகமும் படைப்பதென்னே?
உமக்கிந்த திறமை இங்கே எவ்விதம் வந்ததென்று
நமக்குமே சொல்வாயப்பா! எனச்சொல்ல முஸ்லிம் அன்பர்
எமது முன்னோர்கள் எல்லாம் சமஸ்க்ருத வல்லுனர்தாம் (292)

நானுமே எனது தந்தை அவரிடம் கற்றேன் மொழியை
வானகம் போற்றும் இந்த உலகத்தின் தந்தை அல்லா
தானருள் செய்ய உங்கள் முன்வந்து நிற்கும் பேற்றை
யானுமே பெற்றேனென்றார்; பெரியவா சொல்லலானார் (293)

"பரம்பரையாக வந்த இம்மொழித்திறமை மேலும்
உரம்பட்டு நிற்கச் செய்வீர்; மென்மேலும் கற்றுயர்வீர்!
பரனவன் அருளால் வாழ்வில் நலம்பெற்று வாழ்வீர்" என்று
கரமது உயர்த்தி ஆசி தந்தருள் செய்து நின்றார்! (294)

காண்டம் : 2 : விஜய யாத்ரா காண்டம்
படலம் : 14 : விஜய யாத்திரை : 1927 : மேட்டூர் மற்றும் கோயம்பத்தூர்


பாரதும் போற்றும் வேந்தர், ஆர்த்ர கபாலீஸ்வனை, அந்த
ஏறதில் ஏறும் பெம்மான் அவனையே தொழுது பின்னர்
நீரதைத் தேக்கவென்று அணைகட்டும் பணி நடக்கும்
தீரமே சென்றார் மேட்டூர் அணை இடம் சென்றாரம்மா! (295)

ஸ்வாமிகள் சூலூர் வழியாக கோயம்பத்தூருக்ரு, 1927 அம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வந்தடைந்தார். உள்ளூரிலிருந்த சிருங்கேரி சங்கர மடத்தில் ஸ்வாமிகளத் தங்க வைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்றன.  அடியவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், இனிய தமிழில், தனக்கே உரித்தான பாணியில், "சிவ-விஷ்ணு அபேதம்" பற்றி நான்கு மணி நேரம் உரையாற்றினார்கள். கடந்த ஆறு மாதமாக ஒரு துளி மழைகூட இல்லாமலிருந்த ஊரில், வருண பகவான் கண் திறக்க, நல்ல மழை பொழிந்து, பூமியும் , மக்கள் மனமும் குளிர்ந்ததது. ஸ்வாமிகள் கோவையில் நான்கு நாட்கள் தங்கியிருந்தார்கள். 
   - பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு

மேட்டூரில் அணையைக் கட்டும் வேலையைப் பார்வையிட்டு,
நாட்டிலே உயர்ந்த கொங்கு நாட்டினை கோவை நகரை,
ஏட்டிலே எழுதவொண்ணா அதிசயம் நிறைந்த ஊரை,
பாட்டுடைத் தலைவர் பின்னர் பார்க்கவே கிளம்பிச் சென்றார்! (296)

மருதமா மலைமேலங்கே முருகனும் நின்ற ஊராம்
திருச்சிதம்பரத்தையொத்த பேரூருரும் கொண்ட ஊராம்
பெருவயிறுடையோனந்த கணபதி ஈச்சனாரி
திருத்தலமமர்ந்து காக்கும் ஊருமே கொண்ட ஊராம்! (297)

கோவையில் பெரியவாளும் நான்கு நாளிருந்தாரங்கே
சேவையே செய்த அன்பர் மனமெலாம் குளிர ஓர்நாள்
காவியம் போல ஹரியின் ஹரனின் அபேதம் சொன்னார்
ஓவியம் போல வந்தோர் உரையையே கேட்டிருந்தார்!  (298)

வேண்டுதல் பூர்த்தி செய்வோன் ஹரியெனச் சொன்னாரந்த
வேண்டுமத் தேவையின்றி செய்வது ஹரனாமென்றார்!
பாண்டவர் தம்மைக் காக்க வந்தவன் ஹரியாமாங்கே
ஈண்டரும் அஸ்த்ரம் தந்து காத்தது ஹரனேயன்றோ!  (299)

நாகத்தில் பள்ளி கொண்டோன் ஹரியவன் என்றாலங்கே
நாகபூஷணனாய் வந்து அருள்பவன் ஹரனேயன்றோ!
சோகத்தை நீக்கி நிற்போன் ஹரியென்றால் வினைகள் ஆற்றும்
வேகத்தை கெடுத்து ஆளும் வித்தகன் ஹரனாமன்றோ! (300)

அரிஅரன் ஒன்றேயென்னும் தத்துவம் எடுத்துச்  சொல்லிப்
பெரியவா மக்கள் எல்லாம் ஒற்றுமை காக்கச் சொன்னார்!
அரிஅரன் ஐக்யம் கேட்டு வருணனும் மகிழ்ச்சி பொங்க
பெருமழை கொட்டித் தீர்த்தான்! அனைவரும் உளம் குளிர்ந்தார்! (301)

கேரள விஜயம்:

ஸ்வாமிகள் 1927 ஆம் ஆண்டு, மே மாதம் 2 ஆம் தேதி, பாலக்காட்டிற்கு விஜயம் செய்தார்கள். அங்கு அவர்கள் பதினெட்டு அக்ரஹாரங்களுக்கும் சென்று, ஒரு மாதம் தங்கியிருந்தார்கள். பக்கத்திலுள்ள கிராமங்களியும் சென்று பார்த்தார்கள். 

ஸ்வாமிகள் சென்றா கிராமங்களெல்லாம் விழாக் கோலம் பூண்டன. கேரள மக்கள், ஸ்வாமிகள் பேசும் மலையாளத்தைக் கேள்வியுற்று, ஸ்வாமிகள், மலையாள தேசத்தைச் சேர்ந்தவர் என்றே நினைத்திருந்தனர். அந்த வருடத்திய வ்யாஸ பூஜை, பாலக்காட்டிற்கு அருகே உள்ள கஞ்சிக்கோடு என்னுமிடத்தில் நடைபெற்றது. ஸ்வாமிகள் அங்கு சுமார் இரண்டு மாத காலம் தங்கியிருந்தார்கள். 

கோவையிலிருந்து தேவர் கேரள நாடு சென்றார்
பூவையர் கொஞ்சும் கண்ணன் குழந்தையாய் நிற்கும் ஊராம்
தேவியைப் போற்றும் ஊராம்; பரசுடன் வந்த ராமன்
கோவிலே கொண்ட ஊராம்; இயற்கையே கொஞ்சும் ஊராம்! (302)


மெய்யதை மாற்றிச் சொல்லி, மக்களை மயக்கி இங்கே 
பொய்மையால் பிழைத்திருந்த மதங்களைப் பார்த்தும் நல்லோர் 
செய்வது ஒன்றும் அறியாதிருந்ததைக் கண்டு அந்த
தெய்வமே மனமிரங்கிப் பிறந்தருள் செய்த ஊராம்! (303)

சங்கரன் என்ற நாமம் கொண்டு அத்தெய்வம் தேசம்
எங்கணும் நடந்து சென்று, "காலடி" பதித்த ஊராம்!
சங்கொலி முழங்க வேத சமயமும் அன்னாள்தொட்டு
பொங்கிடும் மேன்மையோடு வளர்வதால் சிறந்த ஊராம்!   (304)


அம்மனைப் போற்றும் ஊராம்! பெண்மையைப் போற்றும் ஊராம்!
நிம்மதியாக மக்கள் ஈசனை நினைக்கும் ஊராம்!
அம்மையாய், அப்பனாகி, தர்மத்தைக் காக்க வந்த
எம்மதத்தாரும் போற்றும் ஐயப்பன் வாழும் ஊராம்! (305)

சிறப்புகள் நிரம்பி நிற்கும் கேரள தேசம் வந்த
அறத்தினோர் தெய்வம்தன்னை, அனைவரும் காண வந்தார்!
"பிறப்பினால் எங்கள் ஊர்தான்" என்றந்த மக்கள் எண்ணும்
திறலுடன் மக்களோடு மலையாளம் பேசி நின்றார்! (306)


ஸ்வாமிகள், மலையாள நாட்டில், "பாறை:" என்னும் தலத்திற்கு விஜயம் செய்தபோது, அத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்றைப் பக்தர்களுக்கு அடுத்துக் கூறினார்கள். அவ்வரலாறு பின்வருமாறு: 

சரகங்கா தீர்த்தத்தின் மகிமை: 

மலையாள பிரதேசம், பரசுராமரால் உருவாக்கப்பட்டது. வெளி நாட்டவர் எவரும், அந்நாட்டின் எல்லைக்குள் னுழையலாகாது என பரசுராமர் சாபமிட்டிருந்தார். ஸ்ரீ ராமபிரான் வன வாசம் செய்த காலத்தில், கேரள நாட்டின் எல்லையான வாழையாறு நதியில் நீராடி, அச்சாபத்தின் தன்மையை மறந்தவராகி, ஆற்றைக் கடந்து அக்கரை சென்று அத்தேசத்தின் எல்லையில் நின்றவாறு, தம் மரவுறி ஆடையைக் கொண்டு வரும்படி எதிர்க்கரையில் இருந்த லட்சுமணருக்குக் கட்டளையிட்டார். ஆனால், அச்சாபத்தையறிந்த லட்சுமணர் அந்த ஆடையை அக்கரைக்கு எடுத்து வர மறுத்துவிட்டார். லட்சுமணரது இந்த மாறுபட்ட செயலைக் கண்டு ராமர் மிகுந்த வியப்பை அடைந்தார். பின்னர், இளையவர், ராம பிரானுக்கு பரசுராமரின் சாபத்தை நினைவூட்டினார். ராம பிரான் சற்று ஆளோசித்து, கங்கா நதியில் ஸ்நானம் செய்தால் மட்டுமே இந்தச் சாபக்கேடு விலகுமென்ஞ்சும் தீர்மானத்துக்கு வந்தார். ஆனால் பதினான்கு ஆண்டுகள் முடிந்த பிறகல்லவோ கங்கையைடையலாம். இந்நிலையில் ஸ்ரீராமர் அவ்விடத்திலேயே கங்கையை வரவழைக்க நினைத்த்வராகித் தாம் நின்றிருந்த இடத்டிலிருந்தே பூமியை நோக்கி ஒரு அம்பு எய்தார். அந்த இடம் இரண்டு மைல் விஸ்தீரணத்திற்கு சமதளமான பாறையாக அமைந்திருந்தது. ராமர் விடுத்த அம்பு, பாறையைப் பிளந்து கொண்டு உள் சென்றதும், பிளக்கப்பட்ட இடத்திலுந்து கங்கை னீர் பெருகி வர, ராமபிரான் அதில் நீராடிச் சாபத்தை விலக்கிக் கொண்டார். லட்சுமணரும் அப்புனித கங்கையில் நீராடினார். பல வருடங்களுக்கு முன்பே இந்த வரலாற்றைக் கேட்டிருந்த நம் ஸ்வாமிகளும் அப்புனித தீர்த்தத்தில் நீராடினார்கள்.  

மலையாள மொழியில் தேவர் கதையொன்று சொல்லலானார்!
அலைகடல் ஆண்ட தேசம் அதனையே பரசுராமர்
கலைவளர் தேசமாக்கி, தனதென்று ஆக்கிப் பின்னர்
நிலைகொண்டு வாழ்ந்தார் அங்கு வேறு தேசத்தவரே வந்தால் (307)

குறை கொண்டு வாழ்வாரென்று சாபமும் கொடுத்து விட்டார்!
சிறைப்பட்டு சீதை செல்ல, ராமனும் அலைந்து கங்கைத்
துறையெலாம் கடந்து கேரள தேசத்தின் எல்லை வந்தான்
இறையவன் கொடுத்த சாபம் மறந்தவன்  எல்லை தாண்டி, (308)

 ஓடுமோர் வாழையாற்றில் குளித்துடன் தம்பி நீயும்
ஆடிடவாவென் சொல்ல, தம்பியும் மறுத்து நின்றான்!!
நாடியே அண்ணல் வந்து காரணம் கேட்கத் தம்பி
வாடியே பரசுராமர் சாபமும் எடுத்துச் சொன்னான்! (309)

பரிகாரம் என்னவென்று ராமனும் சிந்தை செய்து
உரியதோர் காலம் கங்கை ஆற்றில்நீராடல் ஒன்றே
சரிவழி என்றுணர்ந்தான்; கோதண்டம் எடுத்து அம்பைப்
பரிவுடன் பூமிக்குள்ளே அனுப்பிட, கங்கை வந்தாள்! (310)

இதைச் சொன்ன தேவர் அங்கோர் தீர்த்தத்தைக் காட்டிச் சொன்னார்,
இதையே "சரகங்கா தீர்த்தம்" எனச் சொல்வார் இங்கே ராமன்
வதைக்குமோர் சாபம் தீர்த்தான்; நாமுமே குளிப்போம் என்றார்!
கதை கேட்ட மக்கள் எல்லாம் அங்கே சரகங்கா ஆடி நின்றார்! (311)

திருப்புகழ் மணி - பட்டமளிப்பு : 

ஸ்வாமிகள் பாலக்காட்டில் விஜயம் செய்திருந்தபொழுது, சென்னை வக்கீல் டி.எம். கிருஷ்ணஸ்வாமி ஐயர் தம் பக்த கோடிகளுடன், ஸ்வாமிகளைத் தரிசித்து அவர்கள் முன்னிலையில் திருப்புகழ் பஜனை செய்தார்கள். கந்தன் புகழை எவர் பாடினாலும், ஸ்வாமிகள் அதைக் கேட்டு மகிழ்வார்கள். அன்று, ஐயர் அவர்கள், நல்ல இசையுடன் உள்ளம் உருகிப் பாடியதைக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்வாமிகள், ஐயரைத் "திருப்புகழ் மணி" எனப் பெயரிட்டு அழைத்து, அவர்களுக்குக் காஷ்மீர் சால்வை போர்த்திப் பெருமைபடுத்தினார்கள். குருநாதரிடமிருந்து கிடைத்த இப்பெருமையை, ஐயர் சிரமேல் தாங்கி ஸ்வாமிகளை வணங்கினார்.


தேவரைப் பார்க்கவென்று, திருப்புகழ் ஓதும் முருக
சேவகர், கிருஷ்ணஸ்வாமி, சென்னையிலிருந்து வந்தார் 
சேவலை, மயிலை, வேலை, திருப்புகழ் கொண்டு பாடி
ஆவலாய்ப் பெரியவாளின் பாதமே பணிந்து நின்றார்! (312)

முருகனைப் பாடுவோர்க்கு அன்புடன் ஆசி கூறி
அருளிடும் எங்கள் தேவர் திருப்புகழ் கேட்டுச் சொன்னார்
"திருமகன் கிருஷ்ணஸ்வாமி உனக்கொரு பட்டம் தந்தேன்,
திருப்புகழ் மணி"யென்றுன்னை உலகமே அறியுமென்றார்! (313)


மகாத்மா காந்தியுடன் சந்திப்பு

1927- ஆம் வருடம் பிற்பகுதியில் மகாத்மாகாந்தி தென்னாட்டிற்கு விஜயம் செய்து காங்கிரஸின் நிர்மாண திட்டங்களைப் பிரசாரம் செய்யவும், அதற்காக நிதி திரட்டவும், ஓர் சுற்றுப் பிரயாணத்தை மேற்கொண்டார்.  மதத்தலைராக விளங்கும் ஸ்வாமிகளின் தெள்ளிய அறிவையும், பரந்த நோக்கத்தையும், எவரையும் ஏற்றுக் கொண்டு அருள் புரியும் தன்மையையும் பற்றி ‘ஹிந்து‘ பத்திராதிபர் ஏ.ரங்கஸ்வாமி அய்யங்கார், எஸ்.ஸத்தியமூர்த்தி ஆகியோர் மூலம் காந்தியடிகள் முன்பே கேள்வியுற்றிருந்ததால் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு ஸ்வாமிகளைச் சந்தித்து அவர்களுடன் பேசவேண்டுமென்ற தீர்மானத்தைச் செய்து கொண்டார். அதையொட்டியே சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பு 15-10-1927ல் நிகழ்ந்தது.


ஊழ்கொண்டு போன பாதை, தான் கொண்டு போனதாலே
தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, தரணியில் பெயரும் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற நாட்டை, அஹிம்சையின் துணையைக் கொண்டு
வாழ்விக்க வந்த காந்தி, தேவரைக் காண வந்தார்! (314)

சத்தியம், நேர்மை, நியாயம், உள்ளதைச் சொல்லும் வாய்மை,
எத்தனை துயர் வந்தாலும் நன்மையே என்றும் யார்க்கும்
நித்தியம் செய்யும் போக்கு, நேர்கொண்ட பார்வை அன்பே
மொத்தமாய் வந்ததென்ன ஒளிர்ந்திடும் மேனி கொண்டார், (315)

மெலிந்தவோர் தேகம் தன்னில்  காந்திஜி கதர் உடுத்தி,
மலிந்த அஞ்ஞானம் என்னும் இருள்தனை அகற்ற வந்த
கலி எனும் மாயை தன்னை அருளதால் போக்க வந்த
வலிமிகும் தெய்வம்தன்னைக் காண பாலக்காடு வந்தார்! (316)


பாலக்காட்டைச் சேர்ந்த நல்லிச்சேரியில் ஸ்வாமிகள் தங்கியிருந்த ஜாகையின் பின்புறம் அமைந்திருந்த மாட்டுக் கொட்டிலில் காந்தியடிகளுக்கும் ஸ்வாமிகளுக்கும் சந்திப்பு ஏற்பட்டது.  குறிப்பாக இரண்டொருவரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.  பத்திரிகை நிருபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.  காந்தியடிகளும் ஸ்வாமிகளை நெருங்கியதும் இந்து முறைப்படி அவர்களை வணங்கினார்.  காஷாயக் கதராடை ஒன்றை அணிந்து தரையில் அமர்ந்திருந்த ஸ்வாமிகளின் ஒளி நிறைந்த திருமேனியில் காந்தியடிகளின் மனம் ஈடுபட்டுவிட்டது.  அப்பொழுது சற்று நேரம் மௌனம் நிலவியது. பின்னர் ஸ்வாமிகள் ஸமஸ்கிருதத்தில் இரண்டடொரு வார்த்தைகள் கூறி, காந்தியடிகளை வரவேற்று உட்காரும்படி தெரிவித்தார்கள்.  காந்தியடிகளும் கீழே அமர்ந்து, தமக்கு ஸமஸ்கிருதம் பேசுவதற்கு பழக்கமில்லையென்றும், ஹிந்தியிலேயே பேச அனுமதிக்க வேண்டுமென்றும், ஆனால் கூடியவரையில் ஸமஸ்கிருதமொழிகளைப் புரிந்துகொள்ள முடியுமென்றும் தெரிவித்துக்....கொண்டார்.  ஹிந்தியில் பேசுவதை ஸ்வாமிகளும் புரிந்து கொள்ளக் கூடியவர்களாதலால், இந்த ஏற்பாட்டின்படி, ஸ்வாமிகள் ஸமஸ்கிருதத்திலும் காந்தியடிகள் ஹிந்தியிலும் பேசத் தொடங்கினார்கள்.   கடவுள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே ராஸ்யங்கள் அமைய வேண்டுமென்றும், ஆத்ம சிந்தனையைப் புறக்கணித்து மனித சக்தியை மாத்திரம் பயன்படுத்தி அமையும் எந்த ராஜ்யமும் சீக்கிரத்தில் அழிவுதான் அடையுமென்றும், இதன் உண்மையைக் காந்தியடிகள் உலகிற்கு எடுத்துக் கூறுவதைத் தாம் மிகவும் பாராட்டுவதாகவும், ஹரிஜன ஆலயப்பிரவேச விஷயத்தில் சாஸ்திரங்களையும் பழைய வழக்கங்களையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்களென்றும், அவர்களுடைய மனம் நோகும்படி செய்யும் எந்த மாறுதலும் ஹிம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வரவேண்டியிருக்கிறதென்றும் ஸ்வாமிகள் காந்தியடிகளிடம் தெரிவித்தார்கள்.  மேலும் பரமார்த்த விஷயங்களிலும் சம்பாஷனை தொடர்ந்து நடைபெற்றது.  பேச்சுக்களெல்லாம் ஒருவருக்கொருவரது உள்ளன்பை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருந்தன. வாதப்பிரதி வாதங்கள் எதுவும் அப்போது நடைபெறவில்லை.  தம் மனதில் தோன்றியதை ஒன்றையும் ஒளிக்காமல் வெளியிடுவதில் காந்திக்கு நிகராக வேறு எவரையும் காண முடியாது.  மக்கள் தம்மை ஏற்றுக் கொள்வார்களோ ஏற்றுக் கொள்ளமாட்டார்களோ என்பதைப்பற்றி அவர் கவலைப்படுவதேயில்லை.  அவரது ஒவ்வொரு சொல்லிலும் உள்ளப்பற்று நிறைந்திருக்கும்  காந்தியடிகளின் அந்தக் குணத்தை ஸ்வாமிகள் அடிக்கடி பாராட்டுவதுண்டு.  சுமார் ஒருமணிநேரம் காந்தியடிகள் ஸ்வாமிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.  ஸ்வாமிகளது மேதையைக் கண்டு அவர் வியந்தார்.  முடிவில் ஸ்வாமிகளிடம் விடைபெற்றுக் கொள்ளும்பொழுது, ஸ்வாமிகளுடைய தரிசனத்தினால் தாம் மிகவும் பெரியதொரு பயனை அடைந்ததாகவும், ஸ்வாமிகள் விருப்பங்களை எல்லாம் மனஸில் வைத்துத் தம்மால் முடிந்தவரை அவைகளை நிறைவேற்றுவதாகவும் தெரிவித்துக் கொண்டு ஸ்வாமிகளை வணங்கி அவர் விடைபெற்றுக் கொண்டார்.

          - பூஜ்யஸ்ரீ மஹாபெரியவா வரலாறு

தன்னையே பார்க்க வந்த காந்திஜி தம்மை தேவர்
அன்புடன் அமரச் சொன்னார்; காந்திஜி பணிந்தமர்ந்தார்
இன்னமுதென்ன தேவர் தேவபாஷையிலே பேச
உன்னித்துக் கேட்டு காந்தி இந்தியில் பேசலுற்றார்! (317)

மனித சக்தியினால் மட்டும் ஆவது ஒன்றும் இல்லை!
கனிவுடன் காக்கும் அந்தக் கடவுளை நம்பி வாழ்வை
இனிதுடன் அமைக்க ஆத்ம சக்தியால் உறுதி சேரும்!
தனிவாழ்வில் மட்டுமின்றி, ராஜ்யமும் வளமாய் வாழும்! (318)

ஆன்ம சக்தியினை நம்பா அரசுகள் வாழ்ந்ததில்லை!
கோன் தன்னை மட்டும் நம்பி, தெய்வத்தை நம்பாவிட்டால், 
வான் பொய்க்கும்; வளியும் பொய்க்கும்; பூமியாம் தாயுமிங்கே
தான் பொய்த்துப் போவாள்; இந்த தரணியே பொய்த்துப் போகும்! (319)


சாத்திரம் சொன்னவாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டால்
தோத்திரம் செய்து அந்தக் கடவுளைத் தொழுது நின்றால்,
சூத்திரதாரி அந்தக் கடவுளே பார்த்து நம்மைப்
பாத்திரமாக மாற்றி அருள்மழை பொழிந்து நிற்பான்! (320)

வழிவழியாக வந்த ஏதையும் மாற்றி வைக்கப்
பழியதே சேரும் இங்கே; புதுமையால் பழைய வாழ்க்கை
அழிந்திடுமானால் நமது குலதர்மம் குலையுமானால்
இழிவுதான் வந்து சேரும்; முன்னவர் சென்ற பாதை (321)

நாமுமே செல்ல நன்மை யாவுமே சேருமென்றார்!
தாமதைக் கேட்டு காந்தி மனதிலே பட்டவற்றைத்
தாமுமே சொன்னார் கேட்டு, தேவரும் உளம் மகிழ்ந்தார்!
"நாமுளம் மகிழ்ந்தோம் உங்கள் மனம் - வாக்கு-செய்கை ஒன்றாய் (322)

இருந்திடல் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தனம் இதுபோல் என்றும்
இருந்திடல் வேண்டும்" என்றார்; காந்திஜி நெகிழ்ந்து போனார்!
"திருமுகம் கண்ட இந்நாள் திருநாளே எனக்கு" என்றார்!
"பெருமகன் சொன்னவற்றில், முடிந்ததைச் செய்வேன்" என்றார்! (323)

காந்தியடிகள் ஸ்வாமிகளிடம் உரையாடிக் கொண்டிருந்த பொழுது நிகழ்ந்த ஓர் சம்பவத்தை இவ்விடம் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.  அப்பொழுது மாலை 5-30 மணியாகிவிட்டதால் வெளியில் இருந்த ராஜாஜி உள்ளே வந்து, காந்திஜியிடம் அவரது ஆகாரத்தைப்பற்றி நினைவூட்டினார்.  காந்திஜி மாலை 6-மணிக்கு மேல் ஆகாரம் எதுவும் உட்கொள்வதில்லை.  அப்பொழுது காந்திஜி ராஜாஜியைப் பார்த்து, ‘ஸ்வாமிகளிடம் சம்பாஷணை புரிவதே எனக்கு இன்றை ஆகாரம்எனக் கூறினார்கள்.  ஸ்வாமிகள் காந்திஜிக்கு ஓர் பம்பளீஸ் நாரத்தம்பழத்தை அளித்த பொழுது, அதைக் காந்திதிஜி வெகு பரிவுடன் பெற்றுக் கொண்டு, அது தனக்கு மிகவும் பிரியமான பழம் என்பதாகத் தெரிவித்தார்.  அன்று மாலை கோயம்புத்தூர் பொதுக்கூட்டத்தில் காந்தியடிகள் பேசிய பொழுது, கூட்டத்தில் ஒருசிலர் அவர் ஸ்வாமிகளிடம்  சம்பாஷணை செய்த விஷயங்களைத் தெரிவிக்கும்படி காந்தியடிகளைக் கேட்டனர்.  காந்தியடிகள் ஸ்வாமிகளிடம் தாம் பேசியதெல்லாம் அந்தரங்கமான விஷயங்களென்றும், அவைகள் தமக்கும் ஸ்வாமிகளுக்கும் தனி முறையில் நிகழ்ந்தவை யென்றும், அதன் காரணமாகவே பத்திரிகை நிருபர்கள் அப்பொழுது அனுமதிக்கப்படவில்லை யென்றும், ஆகையினால் அவைகளை வெளியிடத் தாம் விரும்பவில்லையென்றும் பதில் கூறிவிட்டார்.  இந்தச் சம்பாஷணையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைப்பற்றி ஸ்வாமிகளும் எதையும் வெளியிடவில்லை.  சம்பாஷணையின்போது கூட இருந்த ஒருவரது மூலமாகத் தெரிந்து கொண்டவைகளை ஆதாரமாகக் கொண்டு இவ்விஷயம் இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளது....

 - பூஜ்யஸ்ரீ மஹாபெரியவா வரலாறு

தேவரோடுரையும் செய்து காந்திஜி கிளம்பும் நேரம்
“தேவரீர் உணவு ஏதும் உட்கொள்ளவில்லை” என்று
ஆவன செய்து காந்தி மஹாத்மாவைப் பார்த்துக் கொள்ளும்
சேவகர், தோழர், அன்பர் ராஜாஜி வந்து சொன்னார்! (324)

மாலைக்குப் பின்னர் காந்தி உணவேதும் கொள்வதில்லை
வேலை நேரத்தில் உணவு உட்கொள்ள மறந்துவிட்டால்
காலையே ஆகும் வரையில், பட்டினி என்பதால்தான்
நூலையே ஒத்த தேகம் வாடுமென்றஞ்சிச் சொன்னார்! (325)

காந்திஜி அவரைப் பார்த்துப் புன்னகையோடு சொன்னார்,
“காந்தமாய் என்னை ஈர்த்த தேவரைப் பார்த்து இன்று
சாந்தமாய்ப் பேசி நின்ற பொழுததே உணவு!! வேறு
பாந்தமாய் உணவு ஏதும் வேண்டுமா என்ன?” என்றார்! (326)

இதைக் கேட்ட தேவர் உடனே நாரத்தம் பழமெடுத்து
இதமுடன் கொடுக்க காந்தி மகிழ்வுடன் எனக்குகந்த
அதனையே பெற்றேனின்று மாலைக்கு உணவாயென்றார்!
பதம்பணிந்தவரும் மெல்ல விடைபெற்று நீங்கிச்சென்றார் (327)

“தனியாக தேவரோடு, சொன்ன அவ்வார்த்தையெல்லாம்
இனியிங்கு எமக்குச் சொல்வீர்” என்றே மற்றாரும் கேட்கக்
கனிவுடன் காந்தி சொன்னார்: பேசிய எல்லாம் நன்றே
எனினுமே அவற்றை வெளியில் சொல்வதற்கில்லையென்றார்! (328)

தேவரும் காந்தியோடு பேசிய வார்த்தையெல்லாம்
யாவரும் அறியச் சொல்ல மறுப்புதான் சொல்லிவிட்டார்!
மூவரும் அறியவொண்ணா சேதியோ? அங்கிருந்த
சேவகர் சொன்னதாலே சிலபொருள் விளங்கிற்றம்மா! (329)

கொச்சி – திருவனந்தபுரம் ராஜ்யங்களில் யாத்திரை
ஸ்வாமிகள் கஞ்சிக்கோடு என்ற ஊரில் தம் சாதுர்மாஸ்ய விரதத்தை முடித்துக்கொண்டு, மேலும் மலையாளம் ஜில்லா தென் பாகத்தில் உள்ள பல பக்தர்களின் வேண்டுகோளின்படி, அங்குள்ள பல ஊர்களுக்கு விஜயம் செய்தார்கள். 2-2-1928 இல் குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைத் தரிசனம் செய்தார்கள்.
 
பெரியவா நெல்லிச்சேரி நீங்கியே கஞ்சிக்கோடாம்
பெரியதோர் ஊரே சென்றார்; சதுர்மாஸ்ய விரதம் செய்தார்
சிறிய ஊர் பலவும் சென்றார்; சிறுவனாய் கண்ணன் நிற்கும்
அரிய ஊர் தாமும் வந்தார்; குருவாயூர் வந்து சேர்ந்தார்! (330)
கண்ணனாம் மன்னன் உன்னிக் கிருஷ்ணனாய் நிற்கும் ஊராம்
விண்ணவர் தலைவன் கையில் சங்கொடு சக்கரம் ஏந்தி
தண்மலர் ஏந்திக் கதையும் தானுமே ஏந்தி நிற்கும்
வண்ணமே காட்டும் ஊராம்; நன்மையே கூட்டும் ஊராம்! (331)


வாயுவும் குருவும் சேர்ந்து உலகெலாம் அலைந்துதேடி
மாயனை, ஞாலம் காக்கும் தூயனை, அன்பர் நெஞ்சின்
நேயனை, தீயோர் வாழ்வின் காலனை, கண்ணன் என்னும்
சேயனை, மூத்த ராமன் இடத்திலே கண்டு நின்றார் (332)

வாயுவும் குருவும் சேர்ந்துக் கண்டதால் குருவாயூராம்!

தாயவள் போல அண்டி வந்தவர் தம்மைக் காக்கும்
தூயவன் நிற்கும் ஊராம்; கள்ளனாய் வெண்ணை உண்ட
வாயனே நிற்கும் ஊராம்; குழைந்தையாய் நிற்கும் ஊராம்! (333)

நாராயணீயம் சொன்ன பட்டத்ரிக்கன்று வந்து
தீராத நோயைத் தீர்த்து, அவர் சொன்ன பாட்டையெல்லாம்
சீராகக் கேட்டு “ஆமாம்” எனச்சொல்லி தலையை ஆட்டி
பாராயணம் நாம் செய்யத் தந்தவன் நிற்கும் ஊராம்! (334)

கண்ணனைக் கண்டார் மன்னர் மன்னனைத் தொழுது நின்றார்
மண்ணதைத் தின்று வாயில் ஏழுலகங்கள் காட்டி
வெண்ணையைத் தின்று தாயின் அன்பினால் கட்டப்பட்ட
அண்டங்களெல்லாம் போற்றும் தேவனைத் தொழுது நின்றார் (335)



பின்னர் ஸ்வாமிகள், சித்தூர் வழியாகத் திருச்சூர் சென்று,  1928ஆம் ஆண்டு, பிப்ரவரி 5ஆம் தேதி அன்று,  வடக்குநாதர் கோவிலில் தரிசனம் செய்து கொண்டார்கள். 

- பூஜ்ய ஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

குருவாயூரப்பன் தன்னைக் கண்டுளமுருகிப் பின்னர்
குரு அவர் அடுத்த ஊராம் திருச்சூரும் சென்றடைந்தார்!
திருப்பூரத் திருவிழாவால் பெயர் பெற்று விளங்கும் ஊராம்!
“திருச்சிவப் பேரூர்” மருவித் திருச்சூராய் ஆன ஊராம்! (336)

திருத் தேக்கின் காட்டின் குன்றில், சிவன் குடிகொண்ட ஊராம்!
திருநெய்யால் குளிக்கும் ஈசன் லிங்கமாய் இருக்கும் ஊராம்!
திருவடக்கு நாதர் என்று பெயர் பெற்று விளங்கும் ஊராம்!
அருமறை செழிக்க பாட சாலைகள் கொண்ட ஊராம் (337)


திருச்சூரில் நான்கு சங்கர மடங்கள் இருந்தன. ஆனாலும், இரண்டு மடங்களில், நம்பூதிரிகள், சன்யாஸம் மேற்கொண்டு விட்டார்கள். ஸ்வாமிகள், மடங்களைச் சென்று பார்த்து, அவற்றின் வரலாற்றையும், அங்கிருந்த ஸ்ரீ ஆதி சங்கரரின் வரலாற்றைச் சொல்லும் பழமை வாய்ந்த ஆவணங்களையும் பார்வையிட்டார்.
- பூஜ்ய ஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

வடக்கநாதர் தம்மைக் கண்டு, அவர் பதம் பணிந்து நின்றார்
மடங்களும் சென்று பார்த்து, அதன் வரலாற்றை எல்லாம்
படமென நெஞ்சில் கொண்டார்; சங்கரர் காதை சொன்ன
இடங்களும் சென்று பார்த்து தகவல்கள் மனதில் கொண்டார் (338)

ஸ்வாமிகள், கடற்கரையில் இருந்த கிரங்கனூர் என்னும் ஊருக்குச் சென்றார். அங்கே, அந்த ஊரின் அரசரால் நல்ல முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  ஸ்வாமிகள் அங்கே, பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து கொண்டார். அதற்குப்பின், அவர், 1928 ம் ஆண்டு, மார்ச்சு மாதம் 19 ஆம் தேதி, கொச்சின் சென்றாடைந்தார். அவருக்கு, அரச குடும்பத்தால், தகுந்த முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்வாமிகள், திருப்பணித்துராவில் மாத இறுதி வரை தங்கியிருந்தார். பின்னர் அவர், புனித ஊராம் வைக்கம் சென்று ஒரு நாள் தங்கி, கோவிலை தரிசனம் செய்து கொண்டார். திருவனந்தபுரத்திலுள்ள முக்கியமான ஸ்தலங்களை தரிசனம் செய்து கொண்டு, ஸ்வாமிகள் 1928 ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி, கோட்டயம் வழியாக ஆலப்புழை சென்றடைந்தார். அங்கே, அவரது பெயரிலேயே அமைந்திருந்த ‘ஸ்ரீ சந்திரசேகரேந்திர” வேத பாடசாலையை சென்று பார்வையிட்டார். அங்கு வேதம் பயிலும் வித்யார்த்திகளை சோதித்து, வாழ்த்தி மகிழ்ந்தார். பின்னர், “மான்கொம்பு” என்னும் இடத்திற்கு, கடல் வழியே பயணமானார்கள்.
- பூஜ்ய ஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

கிரங்கனூர் சென்றார் தேவர் பகவதி அம்மன் கண்டார்
திருப்பணித்துராவும் சென்று, கோவில்கள் பலவும் கண்டார்
திருவூராம் வைக்கம் சென்று சோமநாதரையும் கண்டார்
திருஆலப்புழையும் சென்று, தன் பெயரிலே இருந்த (339)

பாடசாலையையும் கண்டார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர
பாடசாலையிலே படிக்கும் வித்யார்த்திகளையும் அவரின்
பாடமே கேட்டு கற்ற வேதமே கேட்டு நன்றாய்ப்
பாடமே படிக்குமாறு வாழ்த்திமான் கொம்பும் சென்றார்! (340)



சங்கர ஜயந்தி அந்த வருடம், அங்கே, மிகச் சிறந்த முறையில் கொண்டாடப்பட்டது. 

- பூஜ்ய ஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

சங்கரர் பிறந்த நாளை, உலகெலாம் உய்ந்த நாளை,  
மங்கல நாளை வேதம் மலர்ந்த அன்னாளை வானோர்
சங்கடம் தீர்ந்த நாளை, மான்கொம்பில் ஜயந்தியாக
பொங்கிடும் மகிழ்ச்சியோடு, தேவரும் கண்டாரம்மா! (341)

ஸ்வாமிகள் ஆலப்புழை வழியே, கொல்லத்துக்கு 1928 ஆம் வருடம், மே மாதம் 3ஆம் தேதி சென்றடைந்தார். அங்கிருந்து, கொட்டாரக்கரை, புனலூர், ஆரியங்காவு முதலிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு, செங்கோட்டை வழியே குற்றாலம் சென்றடைந்தார்.
- பூஜ்ய ஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

மான்கொம்பிலிருந்து பின்னர் கொல்லமே சென்றார் தேவர்
வானிருந்தளிக்கும் தெய்வக் கோவில்கள் பலவும் கண்டார்
தானிருந்தவற்றிலெல்லாம் தெய்வத்தைத் தொழுது நின்றார்
கோனவன் நாடாம் தெய்வக் கேரள எல்லை வந்தார்! (342)


காண்டம் : 2 : விஜய யாத்ரா காண்டம்

படலம் : 16 : விஜய யாத்திரை : 1928 : குற்றாலத்திலிருந்து செங்கல்பட்டு வரை

திருக்குற்றாலம் சென்றார் ; சங்குபோல் கோவில் கண்டார்!
குறுமுனி மாலை அண்டி,  வேண்டியே கேட்க அங்கு, 
திருமாலே சிவனாய் மாறி லிங்கமாய் நிற்கும் ஊரில்
குறுமுனி தொட்ட வடுவும் லிங்கத்தில் இருக்கக் கண்டார்! (343)

தலைவலி தீரவென்று தைலாபிஷேகம் கொள்ளும்
மலைமகள் நாதன் கடுக்காய் கஷாயமே ஏற்கும் ஊராம்!
சிலையாக முருகன் அங்கே வில்லேந்தி நிற்கும் ஊராம்!
நிலையாக தில்லை நாதன் சித்ரசபை ஆடும் ஊராம்! (344)

ஸ்வாமிகள் திருனெல்வேலியிலுள்ள புனித தலங்களையெல்லாம் தரிசித்தார்கள். தாமிரபரணி பிறக்கும் பாண தீர்த்தத்தில் ஜுன் 9ஆம் தேதி நீராடினார்கள். பின்னர், நாகர்கோயில் வழியே கன்யாகுமரிக்குப் பயணமானார்கள். ஜுன் 17ஆம் தேதி, கன்யாகுமரி அம்பாளைத் தரிசனம் செய்து கொண்டார்கள். அங்கு இரண்டு நாட்கள் தங்கி, கடலிலும் நீராடினார்கள். பின்னர், நாங்குனேரி, திருனெல்வேலி, கோயில்பட்டி, சாத்தூர், விருதுனகர் வழியே, திருவேங்கடத்தை அடைந்தார்கள். 


- பூஜ்ய ஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு

குற்றால நாதர் தம்மைப் பணிந்தேத்தித்  தொழுதபின்னர்
கற்றோர்கள் நிறைந்த திரு நெல்வேலி வந்தடைந்தார்
வற்றாத பரணியாறு வளம்சேர்க்கும் ஊரில் ஆறு
உற்பத்தியாகும் பாண தீர்த்தமும் ஆடி நின்றார் (345)

நெல்வேலி அப்பன் காந்திமதியன்னை தொழுதபின்னர்
பல்கலைவாணர் போற்றும் குமரியும் வந்தடைந்தார்
தொல்லுலகெல்லாம் ஏத்தும் பரதத்தின் முனையில் ஆழி
பல்லியம் பாடி வாழ்த்தும் குமரியைக் கண்டு நின்றார்! (346)

கன்னியால் மட்டும் மரணம் என்றொரு வரமே பெற்று
தன்னையே வெல்ல யாரும் இல்லையென்றலைந்த பாணன்
தன்னையே மாய்க்க வந்தாள் பின்னுமே நித்யமங்கு 
கன்னியாய் நின்ற கன்யா குமரியைக் கண்டு நின்றார் (347)

குமரியாய் அன்னை நிற்கும் முனையிலே கடலில் ஆடி
கமலையும் சுத்தஸ்படிக விமலையும் பணிந்து நிற்கும்
நிமலையை, இமயத்தாளை, தேவியைத்  தொழுது பின்னர்
அமரர்கள் தேவைக் காண, வேடகம் கிளம்பிச் சென்றார்! (348)

திருவேடகமே வந்தார் தேவரும்  அமணர் வாதில் 
திருஞான பாலர் ஏட்டில்  எழுதியே புனலில் வீச
திருவேடும் ஆற்றின் ஓட்டம் எதிர்த்துடன் சென்று நின்ற
திருவூராம் அழகில் மிக்க திருவேடகம் என்பாரம்மா! (349)

ஏடகத்தீசன் தன்னை ஆடிடும் பாதன் தன்னை
ஆடகப் பொன்னை யாரும் தேடறும் நாதன் தன்னை
ஈடிலா தேவன் தன்னைக் கண்டுடல் சிலிர்த்து அந்தப்
பாடலால் நிறைந்த ஊரில் வ்யாஸ பூஜையுமே செய்தார்! (350)

திருவேடகத்தில் சாதுர்மாஸ்யமும் முடித்துத் தேவர்
கருங்கயற்கண்ணி வாழும் மதுரையம்பதியே சென்றார்
பெரும் தலைவர்கள் எல்லாம்  தேசத்தின் நலனுக்காக
அரும்பணி ஆற்றி மிக்கக் கொடுஞ்சிறை புகுந்த நேரம் (351)

தொண்டராம் தேஜ்பஹாதூர் சப்ரு என்பாரும் ஓர்நாள்
அண்டமும் போற்றும் தேவர் அவரையே வந்து பார்த்தார்!
சண்டை சச்சரவும் இன்றி அமைதியே செழிக்க  நாட்டில் 
திண்ணமாய் நன்மை பொங்க வேண்டியே வந்தேன் என்றார் (352)

ஆசியே கூறி தேவர், பாரத நாடிதென்றும்
காசினி போற்ற வாழும், அமைதியும் ஓங்கும் என்றார்!
தேசுடைத் தேவர் பின்னர் மதுரையம்பதியை விட்டு
ஈசனே வாழும் அம்மையநாயகனூரும் வந்தார்! (353)

அம்மையநாயகனூர் தன்னில் இருவாரம் தங்கி அங்கே
அம்மைக்குகந்த நாளாம் நவராத்ரி பூஜை செய்து
மும்மைசால் உலகைக் காக்கும் அன்னையைப் பணிந்து ஏத்தி
அம்மையைப் பிரிந்து வாழும் பழனியைக் காணச் சென்றார்! (354)

ஸ்வாமிகள்,  பழனி சென்று தண்டாயுதபாணியை தரிசித்து, அபிஷேகம் செய்தார்கள். பழனியம்பதியின் மக்கள் எல்லோரும் ஸ்வாமிகளை வரவேற்று, பிக்ஷாவந்தனமும் பாத பூஜையும் செய்தார்கள். பழனியிலிருந்து, ஸ்வாமிகள் தாராபுரம் சென்றார்கள். பின்னர், கொழிஞ்சிவாடி, சின்ன தாராபுரம் மற்றும் கரூர் வழியாகத் திருச்சிக்கு 1929 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் சென்றடைந்தார்கள். 1929, பிப்ரவரியில், திருச்சியிலிருந்து கிளம்பி தென்னார்க்காடு யாத்திரை கிளம்பினார்கள். ஸ்வாமிகள்,  ஏழு மாதங்கள் கள்ளக்குறிச்சியிலும், திருக்கோவிலூரிலும் தங்கிய பின்னர், மணலூர்ப்பேட்டையில் 21-07-1929 அன்று, வ்யாஸ பூஜை செய்தார்கள். 

- பூஜ்யஸ்ரீ மஹா பெரியவா வரலாறு

பழனி நின்றானை ஞானப் பழமாகினானைக் கண்டு
தொழுதுடன் திருச்சி சென்றார்; பல ஊர்கள் சென்றபின்னர்
செழுமையே நிறைந்த மணலூர்ப்பேட்டையும் சென்று வ்யாஸக்
கெழுதகைப் பெரியோருக்கு பூஜையும் செய்து நின்றார் (355)

பெரியவா அங்கிருந்து பூஜையே செய்யும் காலம்
அரியதோர் ஜுரமும் வந்து அவரையே பிடித்தம்மா!
சிறியதோர் கவலையின்றி, தன்னுடல் அதனின்மேலே
பரிவெதும் இன்றித் தேவர் தன்பணி தொடர்ந்தாரம்மா! (356)

கடும் ஜுரம் வந்தும் தேவர் மூவேளை ஸ்நானம் செய்தார்!
கொடும்பிணி பீடித்துடலைப் பெரும்பாடு படுத்தும்போதும்
அடமுடன் நியமம்  ஏதும் விடுவதாயில்லை! ஆங்கே
அடியவர் அழுது நொந்து, தேவரைப் பணிந்தார்; தொழுது (357)

"ஜுரமதே போகத் தாங்கள் மருந்தையே ஏற்க வேண்டும்
விரதமாய் மூன்று வேளை செய்திடும் ஸ்நானம் கூட
ஒருமுறையாகக் கொண்டு, உடலையும் காக்க வேண்டும்
மறுக்கவே கூடாதய்யா! நன்கு நீர் உறங்க வேண்டும்" (358)

அந்த சமயத்தில், ஸ்வாமிகளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. ஒரு மாதம் வரை அவருக்கு ஜுரம் நீடித்தது. இருந்தாலும், ஸ்வாமிகள், குளித்துவிட்டு, மூன்று முறை அவரது பூஜைகளை தினமும் செய்து வந்தார்கள்.  பக்த கோடிகள் ஸ்வாமிகளின் உடல் நிலை குறித்து மிகவும் கவலை அடைந்தார்கள். ஸ்வாமிகள் தமது உடல்நிலையை நல்லபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்கள்.   ஸ்வாமிகளோ, பக்தர்களின் கோரிக்கைகளைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அவர், துளசி தீர்த்தம் மட்டுமே அருந்தி வந்தார். 

- பூஜ்யஸ்ரீ மஹா பெரியவா வரலாறு

என்றேலாம் வேண்ட, தேவர் புன்சிரிப்புடனே, "துளசி
ஒன்றிங்கிருக்க வேறும் மருந்தெதும் தேவையுண்டோ?
குன்றதை எடுத்து ஆயர் குளிர்மழை காத்தான் அந்த
மின்னொளிர் கண்ணன் துளபத் தீர்த்தத்திற்கிணையுமுண்டோ? (359)

மந்திரம் ஆகும் நீறு; மருந்ததும் ஆகுமன்றோ? 
தந்திரம் வேறு ஏதும் செய்யவும் தேவையுண்டோ?
சிந்தனை ஏதும் வேண்டாம்; கவலையே படவும் வேண்டாம்!
சந்திர சேகரன் தாள் பணிவதே போதும்" என்றார்!! (360)

உடலது மெலிந்து தேவர் இளைத்தங்கு அயர்ந்து ஓர்நாள்
நடக்கவும் இயலா நிலையை அடியவரெல்லாரும் நொந்தார்
கிடந்தவர் மேனி வாடி படுத்த படுக்கையாக,
“விடமுண்ட கண்டா நீயும் செய்வது முறையோ ஐயா? (361)

தஞ்சமே அருளும் ஹஸ்தம் துவளவே செய்திட்டாயோ?
வஞ்சமே செய்திட்டாயோ? அம்மா உன் கருணை ஈதோ?
அஞ்சியே நிற்கும் நேரம் ஆறுதல் இல்லை” என்று
நெஞ்சமே உடைந்தரற்றி அழுதனர் அடியாரெல்லாம்! (362)

1929ஆம் ஆண்டு, நான் ஒரு சன்யாஸியை வட ஆற்காடு மாவட்ட கிராமம் ஒன்றிலே சந்தித்தேன். அவர் தமிழோ தெலுங்கோ அறிந்திருக்கவில்லை. மராட்டியும் இந்தியும் மட்டுமே அறிந்திருந்தார். ராமேஸ்வரம் சென்றபோது, தனது தண்டம் தொலைந்துவிட்டதாக அவர் எங்களிடம் சொன்னார். புதிய தண்டம் கிடைக்கும் வரையிலும் அவர் உண்ணா நோன்பு இருந்திருக்கக்கூடும். அவருக்கு, மந்திர தீக்ஷையுடன், ஒரு புதிய தண்டம் அளிக்கப்பட்டது.

அச்சமயத்திலிருந்து, அவரது சன்யாச ஆஸ்ரமத்தைக் காத்துத் தந்ததால், அவர் என்னைத் தனது குருவாகக் கருதத் தொடங்கினார். அவருக்கு அப்போதே, 80 வயதுக்கு மேல் இருக்கும். 1954ல் அவர் சித்தி அடையும் வரை, அவர், என்னை விட்டு நீங்க மறுத்து, என்னுடனேயே இருந்தார்.

1929ஆம் ஆண்டு சாதுர்மாஸ்யத்துக்குப் பின்னர், நான் மலேரியா நோய் கண்டு, 40 நாட்கள் போல, படுத்த படுக்கையானேன். அது வரையிலும், யாரும் என்னைத் தொடும் வழக்கம் இல்லாமலிருந்தது. ஆனால், என்னால் நிற்கக் கூட முடியவில்லை. துணையின்றி, நடக்கவும் முடியவில்லை. இந்த வயதான சன்யாஸிதான் எனக்கு எல்லாம் செய்து வந்தார்.

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சார்யார் “பவான் ஜர்னல்” லில் எழுதிய “எனக்கு வாழ்க்கை சொல்லிக் கொடுத்தது என்ன” என்ற கட்டுரையிலிருந்து.

தாயவள் முறுவலித்தாள்! அடியவர் துன்பம் போக்க,
சேயவன் துயரம் தீர்க்க, எண்ணமும் கொண்டுவிட்டாள்!
தூயவோர் மராட்டியராம் துறவியார் ஒருவர் தண்டம்
மாயமாய்ப் போக வைத்தாள்! அவரையே தேவர் தங்கும் (363)

தலத்தையே தேடி வந்து அவரையே நாட வைத்தாள்!
“நலமது துறவிக்கிங்கே, தண்டமே என்பார் எனினும்
இலையது இங்கெனக்கோர் பெரியவர் தம்மை நாடி
வலம் வந்து தண்டம் பெறவே இங்கு நான் வந்தேனெ”ன்றார் (364)

அகவையில் மூத்த அந்த துறவியும் தேவர் தம்மை
அகமது குளிர வீழ்ந்து வணங்கியே “தண்டம் அதுவும்
சுகமுறப் பெறவே வந்தேன் அருள்வீர் நீர்” என்று சொன்னார்
ஜகமதைக் காக்கும் தேவர் துறவியின் தருமம் காக்க (365)

மந்திரம் சொல்லி தண்டம் தந்திடத் துறவி ஐயன்
சந்திர முகமே கண்டு மெய்ம்மறந்துருகி நின்றார்!
“சந்திர சேகரன் நீர்” என்றவர் தாள் பணிந்தார்!
“எந்தையும் தாயும் குருவும் இனி இங்கு நீரே” என்றார் (366)

ஐயனைத் தொட்டுப் பொன்னார் மேனியைத் தொட்டு சேவை
செய்யவே தொடங்கி விட்டார் துறவியும் அங்கு வந்து
கையதைக் கற்பகத்தை, பதகமலக் காமதேனு
மெய்யதைத் தொட்டு சேவை புரிந்திட தேவர் உடலும் (367)

நலமதே அடைந்ததம்மா! உயிரெலாம் மகிழ்ந்ததம்மா!
புலருமோர் காலையேபோல், மலர்ந்தவோர் பங்கயம்போல்
அலர்கதிர் ஞாயிறேபோல், உலகெலாம் உவக்க அங்கே
அலகிலா லீலைசெய்யும் தேவரும் பொலிந்தாரம்மா! (368)
"ஒரு நாளும், அவர் எனது பாதங்களுக்குப் பூஜை செய்யாமல் இருந்ததே இல்லை. எந்த ஒன்றாலும் அவரை, இந்த விஷயத்தில் கட்டுப்படுத்த முடியாது. பாதங்களுக்குப் பூஜை செய்யும்போது, அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடும்."
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சார்யார் “பவான் ஜர்னல்” லில் எழுதிய “எனக்கு வாழ்க்கை சொல்லிக் கொடுத்தது என்ன” என்ற கட்டுரையிலிருந்து.

துறவியும் தேவர்க்கிங்கே சீடராய் இருந்து நித்தம்
குறைவறப் பணிகள் செய்தார்; பங்கயப் பாத பூஜை
அறமென விரும்பிச் செய்தார்; தந்தை-தாய்-குரு மற்றன்றி
“பரமிவர்” என்று எல்லா தெய்வமும் இவரில் கண்டார்! (369)

ஒரு முறை, நாங்கள் திருப்பதி சென்றிருந்தோம். வயதான் இந்தத் துறவியும் வந்திருந்தார். நான், மலை மீது ஏறி, பாலாஜியைத் தரிசனம் செய்யச் சென்றேன். திரும்பிக் கீழே வரும்போதுதான், மலை மீது ஏறிக் கொண்டிருந்த இந்த வயதான மராட்டித் துறாவியைப் பார்த்தோம். கோவில் அதிகாரிகள், அவரின் வயதினையும், நமது மடத்து சம்பந்தத்தையும் கருத்தில் கொண்டு, பாலாஜி தரிசனம் செய்து வைக்கட் தயாரானார்கள். ஆனால், அந்தத் துறவியோ, என் காலில் விழுந்து, “என்னை மன்னிக்க வேண்டும். இவரே எனக்கு பாலாஜி. உங்கள் உதவியை என்னால் ஏற்க முடியவில்லை” என்று சொல்லி, பாலாஜியை தரிசனம் செய்யாமலேயே, திரும்பி விட்டார்!

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சார்யார் “பவான் ஜர்னல்” லில் எழுதிய “எனக்கு வாழ்க்கை சொல்லிக் கொடுத்தது என்ன” என்ற கட்டுரையிலிருந்து.

திருப்பதி மலையின் மேலே, தேவரோடவரும் ஓர்நாள்,
திருவாயில் வரையில் வந்தும் தரிசனம் காணா வந்தார்!
“குரு அவர் நடந்த பாதை நடக்கவே நானும் வந்தேன்
திருப்பதி உறையும் அந்த பாலாஜி இவரே! மற்றோர் (370)

தெய்வமும் உண்டோ இங்கே? குரு இவர் இருக்க” என்றார்!
உய்வழி தேடி அந்த வேங்கடன் பதமே நாடி
செய்யவள் கொழுனன் வாழும் மலைசெல்வோர் இங்கிருக்க
மெய்வழி குருவின் பதமே என்றிவர் இருந்ததென்னே!! (371)

உடல்நிலை தேற தேவர், பயணமே தொடர்ந்து விட்டார்!
விடையதே ஏறும் தேவன் படையுடன் சென்றார்போல
நடையதே கொண்டு தொண்டர் படையுடன் தேவர் சென்று
உடல்கொண்டு வந்த ஊராம் விழுப்புரம் வந்து சேர்ந்தார்! (372)
விழுமிய புரமாமந்த விழுப்புரம் நகரம் தன்னில்
குழுமினர் மக்கள் எல்லாம்! திருவடி வைத்த அந்த
எழுதவும் ஒண்ணா உருவை, பழுதறு நிலையை, குருவை,
தொழுதனர் பணிந்து; இன்பம் மிகுந்திட அழுது நின்றார்! (373)

“எங்கள் ஊர் ஐயன்”என்பார்; “பாலனாய்க் கண்டேன்” என்பார்
“திங்களைச் சூடினானே வந்தனன், கண்டோம்” என்பார்
“இங்கினி வீடுபேறும் வேண்டுமோ? இல்லை” என்பார்
“எங்களைக் காக்கவென்று வந்தையோ ஐயா” என்பார் (374) 
“பொங்கிடும் அமுதை, எங்கும் தங்கும் மங்கலத்தை அள்ளி
இங்கொரு குருவாய் இந்த தரணியே போற்றத் தந்த
“எங்களூர்ப் போல வேறு ஊரெதும் இல்லை” என்பார்
அங்கம் பூரித்து நிற்பார்; குருபுகழ் பாடி நிற்பார் (375)

ஆடிப்பாடிக் கொண்டாடிடுவார்; ஓடியோடி பதமே பணிவார்
நாடிநாடி குருவைக் கண்டு, “ஈடு எங்கும் இல்லை” என்பார்
“வாடி நின்ற நாட்கள் எல்லாம் இனிமேல் என்றும் இல்லை” என்பார்
கூடிக்கூடி குருவின் பெருமை நாளும் பொழுதும் பேசிக் களிப்பார்! (376)

அன்பினோர் எல்லை நின்று வணங்கிடும் அடியார் தம்மை
இன்முகம் தந்து வாழ்த்தி, ஆசிகள் அளித்துப் பின்னர்
சின்னவோர் வயதில் பாடம் படித்ததப் பள்ளி காண
நன்னலம் கொண்ட திண்டி வனமதாம் ஊரும் சென்றார்! (377)

பாலனாயிருந்தபோது பயின்ற அப்பள்ளி சென்று
நாலதாம் வேதமன்னார் பார்வையிட்டகமகிழ்ந்தார்!
“சீலமே உருவாய் வந்த புண்ணியன் படித்த பள்ளி”
“ஆலமே உண்டான்ரூபன் பயின்றவோர் பள்ளி” யென்று (378)

பள்ளியைச் சேர்ந்தோர் எல்லாம் சொல்லியே மகிழ்ந்திருந்தார்
அள்ளியே பாலன் அவனை அணைத்தவன் குணத்தையெல்லாம்
உள்ளமே கொண்டு போற்றி வாழ்த்திய பெரியோரெல்லாம்
வெள்ளமாய் வந்திருந்தார்; பாலனும் வளர்ந்து இன்று (379)
“தானமும் தவமும் சேர்ந்தோர் தனிப்பெரும் வடிவமாக
வானவர் தாமும் போற்றும் கருணையின் விளக்கமாக
மோனமே வாக்காய்க் கொண்ட குருவவன் வந்தாற்போல
ஞானமே உருவம் கொண்டு வந்தனன் இங்கு” என்றார்! (380)

“கிறித்துவப் பள்ளியிங்கு பயின்றதோர் பாலன் இன்று
அறிவிலே உயர்ந்து, அன்பின் ஆழியாய், சான்றோனாக
‘பெரியவா’ என்றுலோகம் முழுதுமே அழைக்குமாறு
பெரிதுமே உயர்ந்து நிற்கும் பெருமையைப் பாரீர்”  என்றார்! (381) 
“தந்தையே மறைந்தாரென்று சேதியே வந்தபோதும்,
சிந்தையில் கவலை தோயா சுந்தரவதனர் எங்கள்
எந்தையே அன்றோ” என்றார்; “இவரையே காணும் பேறு
எந்தையும் தாயும் செய்த தவத்தினாலன்றோ” என்றார்! (382)


ஸ்வாமிகள் யாத்திரை செல்லும்போது, தண்டலம் என்னுமிடத்தில் ஒரு ஆடு- மாடு மேய்ப்பவன் தனது நிலங்களை எல்லாம் விற்று, வரும் பணத்தை ஸ்வாமிகளுக்குக் கொடுக்க விரும்பினான். ஸ்வாமிகள் வேண்டாம் என்று சொல்லியும் அவன் கேட்பதாயில்லை. தனது நிலங்களை உள்ளூரிலுள்ள ஒரு பணக்கார தொழிலதிபருக்கு விற்று, கிடைத்த பணத்தை மிகவும் சந்தோஷமாக ஸ்வாமிகளுக்கு அவன் கொண்டுவந்து கொடுத்தான். அவனது பக்தி ஸ்ரத்தையைக் கண்டு, ஸ்வாமிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அவனது பக்தியை மெச்சியவாறு அதனை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர், அந்த ஊரின் தாசில்தாரிடம் சொல்லி, நாலு காணி நிலத்தை மறுபடியும் அவனது பெயருக்கே எழுதி வைக்குமாறு செய்தார்.

- பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு
திண்டிவனத்தில் பள்ளி கண்டபின் ஊரைவிட்டு
தண்டலம் என்னுமூரும் யாத்திரை சென்றார் தேவர்!
அண்டமே போற்றும் தேவர் அவரையே இடையன் ஒருவன்
கண்டனன்; காதலுற்று அவரையே அண்டி நின்று (383) 
செப்பினன், “ஐயா நீங்கள் இறைவனே போலும் வந்தீர்!
துப்பெனக் கொண்ட பூமி, விற்றுரும் பொருளை எல்லாம்
முப்பெரும் தேவதேவர் உமக்கெனத் தருவேன், கொள்வீர்
தப்பெனக் கொள்ளல் வேண்டா; பாவியென்றெள்ளல் வேண்டா (384)
நிலமதை வைத்து நானும் ஏதுதான் செய்வேன் இங்கு?
நலமுமே சேரும் பொருளாய் நிலத்தையே மாற்றியிங்கு
உலகுக்காய் வாழும் தேவர் உமக்கெனத் தந்துவிட்டால்!
பலனாக நெஞ்சில் நீரே நிலைத்திட வேண்டும்” என்றான்!! (385)

நெகிழ்ந்திட்டார் தேவர்! அவனை வாஞ்சையாய்ப் பார்த்துச் சொன்னார்
“மகிழ்ந்தனன் உனது நல்ல மனம், செய்கை கண்டு நானும்!
பகிர்ந்தளித்துண்டு வாழ்தல் நல்லதே எனினும் உனக்கோர்
அகமென்று ஒன்றும் இன்றி எனக்கெனக் கொடுத்தாய் அதிலே (386) 
சம்மதம் இல்லை அப்பா! உனக்கென்றும் கொஞ்சம் கொள்வாய்!
நிம்மதியாகிப் போகும்!” என்றிடும் தேவர் வாக்கின்
அம்மொழி கேட்டானில்லை! “தேவரீர் கொள்ள வேணும்;
அம்மையே அப்பா நீரும் ஆதரித்தருள வேணும்!” (387)


என்றிட தேவர் ஏற்றார்! ஏற்றுடன் நாலு காணி
அன்றுடன் அவனுக்கென்று மாற்றிடச் சொல்லி வைத்தார்!
கன்றுடன் ஆவும் மேய்ப்போன் தேவரின் நினைவில் அன்று
நின்றதை நினைவில் கொள்ள நம் பிணி அகலும் அம்மா!! (388)

ஸ்வாமிகள், 1929 ஆம் வருடம், டிசம்பர் மாதம், திருவண்ணாமலை சென்று கார்த்திகை தீப தரிசனம் செய்தார்கள்.

- பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு
தண்டலம் விடுத்துத் தேவர் கார்த்திகை தீபம் காண
விண்ணவர் போற்றும் அண்ணாமலையுமே விரைந்தடைந்தார்!
பண்ணுடன் நால்வர் பாடிப் போற்றிய ஊராம்; குமரன்,
கண்ணுதற் கடவுள் மைந்தன், திருப்புகழ் கொண்ட ஊராம்! (389)

நினைத்திட முக்தி நல்கும் மாமலை; சித்தர் எல்லாம்
நினைத்துடன் தொழுது ஏத்தும் ஓர்மலை அக்னி ரூபம்
கனத்துடன் வந்ததென்ன மலையதாம் சிரத்தையோடு
தனைக்கிரி வலம் வந்தார்க்கு நினைத்ததைத் தருமிம்மலையாம் (390)

ரமணமா ரிஷியும் வாழ்ந்து சிறந்தவோர் மலையாம் சூரத்
குமரராம் யோகி வாழ்வால் ஒளிர்ந்தவோர் மலையாம் ஞானம்
நமக்கென வாரித்தந்து மகிழ்ந்திடும் மலையாம் வந்தோர்
தமது வாழ்வதிலே மாற்றம் தந்திடும் மலையாம் அம்மா! (391)


ஜோதியாம் அண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றி
ஆதியாம் நாதன் அவனை, முக்கண்ணன் அவனை மாதைப்
பாதியாயிடம் கொண்டானை, வேதமே ஆன ஞான
போதனை, சிவனை, அண்ணாமலையனை தேவர் கண்டார்! (392)



அருணாசலனை, உண்ணாமுலையுமை நேசன் தன்னை
பிருங்கிமா முனிவன் தானும் வணங்கிய தெய்வம் தன்னை
அருட்சோதி வடிவம் தன்னை, அருட்பெரும் கருணையானை
திருவலம் வந்து தேவர் கண்களும் குளிரக் கண்டார்! (393)

ஸ்வாமிகள், காவேரி ஆற்றின் இயற்கை அழகை ரசிக்க விரும்பி, திருவண்ணாமலையிலிருந்து கிளம்பி, செங்கம், ஹரூர், தர்மபுரி வழியாகச் சென்றார். அவர், தீர்த்தமலையில் அருவியில் ஸ்னானம் செய்து கொண்டார். பின்னர் அவர் ஹொகேனக்கல் அருகே "மேகதாது" என்ற இடத்தில், காவிரியனது, இரு பாறைகளுக்கு இடையே தன்னைக் குறுக்கிக் கொண்டு , ஒர் ஆடு கூடத் தாண்டும் விதத்தில் ஓடும் இடத்திலே ஸ்னானம் செய்து கொண்டார். "மேக" என்றால்ம் கன்னடத்தில், "ஆடு" என்று பொருள். ஆடு தாண்டுமளவு காவிரி சிறுத்து ஓடுவதால், இந்த இடத்திற்கு, "மேகதாது" என்ற பெயர் வழங்கலாயிற்று.


கிரிவலம் வந்து ஈசன் தாள் பணிந்தேத்திப் பின்னர்
பரிவாரங்கள் சூழ தேவரும் கிளம்பிச் சென்றார்!
அரியவோர் காட்சியாகக் காவிரி ஆடும் தாண்டும்
சிறியவோர் ஓடை போலே போவதும் கண்டு நின்றார்!(394)


மேகதாதுவிலே ஆற்றில் நீராடி வ்யாஸ பூஜை
ஏகமாம் சித்தம் கொண்டு நடத்திட கிராமம் நான்கு
போகமும் விளையும் பூமி பூசை மலைக் குப்பம் தானும்
வேகமாய்ச் சென்றடைந்தார் வ்யாஸ பூஜையுமே செய்தார் (395)

அவ்விடம் ஓர்நாள் யானை கட்டிய பந்தலில் தீ
கவ்விட யானை கட்டை அறுத்தோடி விட்டதம்மா!
எவ்விடம் தேடிக் காணாத் திகைத்தனர் மடத்துளோரும்
அவ்வியம் தீர்க்கும் தேவர் அவரிடம் சென்று சொன்னார்! (396)

தேவரும் யாவரோடும் தேடியே பார்க்க யானை
பாவமாய் குட்டையொன்றில் பதுங்கியே கிடந்ததம்மா!
காவியின் அரசர் அங்கே வந்தெதிர் நிற்க, மேனி
மேவிய புண்கள் காட்டி யானையும் எழுந்ததம்மா! (397)

வாயிலா ஜீவன் பட்ட பாடெலாம் உணர்ந்தார் தேவர்!
தீயினால் சுட்ட புண்ணை ஆற்றவே மருந்தும் சொல்ல,
தாயவள் அன்பு காட்டி ஆதரித்தணைத்துக் காக்கும்
சேயதைப் போலக் கரியும் அடிபணிந்தெழுந்ததம்மா! (398)

சுடர்முகம் கருணைபொங்கக் கஜத்திற்கும் அருளே செய்தவ்
விடம்விட்டு தேவர் மற்றோர் ஊருமே சென்றாரம்மா!
அடயபலமென்னும் ஊராம், அப்பய்யப் பெருமானூராம்
விடமுண்ட கண்டன் பக்தர் தீக்ஷிதர் வாழ்ந்த ஊராம் (399)

வடமொழியில் பல நூல்கள் இயற்றி, ஒப்பற்ற சிவபக்தராக விளங்கிய அப்பய்ய தீக்ஷிதர் அவர்களின் சொந்த தலமாகிய அடையபலம் என்னும் சிற்றூருக்கு, ஸ்வாமிகள் விஜயம் செய்தார்கள். இந்த ஊர், ஆரணிக்கு அருகில், ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஸ்வாமிகள் அவ்வூர் சிவன் கோவிலில் தங்கி பூஜைகளை முடித்துக்கொண்டு, நானூறு வருடங்களுக்கு முன் அவ்வூரில் வாழ்ந்த அந்த மஹானைப் பற்றிய சரித்திரத்தையும் அவர் இயற்றிய நூல்களையும் பற்றி பிரசங்கம் புரிந்தார்கள். தீக்ஷிதரின் நாளை ஒவ்வொரு வருடமும் கொண்டாட வேண்டும் என்று ஸ்வாமிகள் அவ்வூராரிடம் வற்புறுத்தினாரள். தீக்ஷிதர் பிறந்த ஊராகிய விரிஞ்சிபுரத்திற்கும் ஸ்வாமிகள் விஜயம் செய்தார்கள். அவர்களின் சந்ததியார் தீக்‌ஷிதரின் வம்சத்தில் பிறந்ததாக மாத்திரம் பெருமை கொள்ளாது, அவர் நூல்களைக் கற்று அவரது பெருமையை என்றும் உலகில் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும் என்று ஸ்வாமிகள் கூறினார்கள்.

- பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு
பெரியவா சென்று அந்த ஊரிலே பூஜை செய்தார்
அரியதோர் உரையுமந்த தீக்ஷிதர் பற்றிச் செய்தார்
அரியுமே தொழுமச் சிவனின் பெருமையை பேசும் நூல்கள்
புரிந்தருள் செய்த பெம்மான் பெருமையைப் பேசி நின்றார்! (400)


ஒருகதை சொன்னார் தேவர், அப்பய்யப் பெம்மான் பற்றி!
"ஒருமுறை, அப்பய்யப் பெம்மான், தஞ்சைக்கு வந்திருந்தார்!
தருமத்தின் மூர்த்தி சாஸ்தா சிந்தையில் ஆழ்ந்தாற்போலே
ஒருசிலை இருந்த்ததங்கே! தஞ்சையின் அரசன் பார்த்து, (401)

'தருமத்தைக் காக்கும் தெய்வம் கவலையுற்றிருப்பாற்போலே
ஒரு விரல் உதட்டில் வைத்து சிலையுமிங்கிருப்பதேனோ?
“தருவரோ விளக்கம் யாரும்? சாஸ்தாவின் சிந்தைக்கிங்கே?
பொருத்தமாய் விளக்கம் சொல்ல, சிலையுமே இயல்பாய் மாறும்! (402)

வந்துடன் விளக்கம் சொல்வீர்! சிலையையும் இயல்பாய் மாற்றி,
பந்தள மன்னன் பாதம் பணிந்திட வாரும்” என்றான்!
விந்தையாய் விளக்கம் எல்லாம் பலருமே சொல்லி நின்றார்
கந்தனின் தம்பி தோற்றம் மாறவே இல்லையங்கே! (403)

இக்கதை முழுதாகத் தெரிந்து கொள்ள :http://periva.proboards.com/thread/4134
மோகினியாக வந்து எந்தையின் மனம் கவர்ந்து
ஸ்ரீ பரம சிவனின் பக்தரும், ஸம்ஸ்க்ருதத்தில் 104 நூல்களை எழுதி “அபர சங்கரர்” என்று புகழ் பெற்றவருமாகிய அப்பைய தீக்ஷிதர், ஊமத்தைக் காயை உண்டு உன்மத்த (சித்த மயக்கத்தில்) நிலையிலும் கூட சிவனை மறக்காமல் பாடி எழுதப் பட்ட நூல்தான் “உன்மத்த பஞ்சாசத்”, ஆத்மார்ப்பண ஸ்துதி என்று புகழ்பெற்ற 50 ஸ்லோகங்கள். இத்தகைய பெருமை வாய்ந்த தீக்ஷிதர் சாஸ்திரங்கள் மட்டுமல்லாது அலங்காரத்திலும், சமத்காரத்திலும் கூறப் புகழ்பெற்றவர்.
ஒரு சமயம் தஞ்சாவூர் ப்ருஹதீச்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது நரசிம்ம வர்மன் என்கின்ற மஹாராஜா தனது ஆஸ்தானத்திற்கு அப்பய்ய தீக்ஷிதரையும், தாத்தாசார்யர் என்ற மற்றுமொரு பண்டிதரையும் வரவழைத்து அவர்களோடு பல க்ஷேத்ரங்களைத் தரிசித்து வந்தார். அப்போது ஒரு கோயிலில் ஹரிஹரபுத்ரனான ‘சாஸ்தா’ (ஐயப்பன்) தனது முகவாய்க் கட்டை மீது வலதுகை ஆள்காட்டி விரலை வைத்துக் கொண்டு ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போன்ற விக்ரஹத்தைப் பார்த்தார்.
உடனே அந்த ஊரில் வயது முதிர்ந்த ஒரு பெரியவரைப் பார்த்து இந்த விக்ரஹம் இப்படிக் கவலையோடு இருப்பதன் காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு அவர், ‘நான் கேள்விப் பட்ட வரையில் இந்த ஊருக்கு ஒரு நாள் ஒரு மஹான் வருவார். அப்போது அவர் இதன் காரணத்தை விளக்கிப் பாடுவார்’ என்றார். உடனே ராஜா, தாத்தாச்சாரியாரிடம் இதன் காரணத்தை விளக்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தாத்தாசாரியாரும் இதற்கு சம்மதித்து ஒரு செய்யுள் இயற்றினார்.
விஷ்ணோஸ் ஸுதோஹம் விதினா ஸமோஹம்
தன்யஸ்த தோஹம் ஸுரஸேவிதோஷம் |
ததாமி பூதேச ஸுதோஹ மே தை:
பூதைர் வ்ருதச் சிந்தயதீஹ சாஸ்தா ||
பொருள்: “நான் விஷ்ணுவுக்கு (மோஹினீ ரூபமாய்) இருந்தபோது பிறந்த பிள்ளை. பிரம்மாவுக்குச் சமமானவன். எனவே நான் மிகச் சிறந்தவன். தேவர்கள் என்னைப் போற்றுகிறார்கள். ஆனாலும் என்னைச் சுடுகாட்டில் வாழும் பூதகணங்கள் சூழ்ந்த பரமசிவனின் பிள்ளை என்று சொல்கிறார்களே என்ற வருத்தத்துடன் சாஸ்தா இருக்கிறார்” என்றார் தாத்தாச்சாரியார். இந்த விளக்கும் சரியாக இல்லாததால் சாஸ்தாவின் கை விரலில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.
உடனே, ராஜா அப்பய்ய தீக்ஷிதரை நோக்கித் தாங்கள் விளக்கம் தர வேண்டும் என்றார். தீக்ஷிதரும் ஒரு ஸ்லோகம் சொன்னார்.
அம்பேதி கௌரீமஹ மாஹவயாமி
பந்த்ய: பிதுர்மாதர ஏவ ஸர்வா: |
கதந்து லக்ஷ்மீதி சிந்தயந்தம்
சாஸ்தாரமீடே ஸகலார்த்த ஸித்யை ||
பொருள்: “நான் பரமசிவனுக்கும் விஷ்ணுவுக்கும் (மோஹினி) பிறந்தவன். ஆகவே எனது தந்தை சிவனைத் தரிசிக்கும் போது அருகிலுள்ள பார்வதீ தேவியை ‘அம்மா’ என்று அழைப்பேன். ஆனால், எனது தாயான விஷ்ணுவைத் தரிசிக்கின்ற போது அருகிலுள்ள அவர் மனைவியான லக்ஷ்மீ தேவியை என்ன சொல்லி அழைப்பேன்? என்று கவலையில் ஆழ்ந்துள்ள சாஸ்தாவை எனது எண்ணங்கள் நிறைவேறப் போற்றுகின்றேன்!”என்று பாடினார்.

உடனே விக்ரஹமாயிருந்த ‘சாஸ்தா’ தனது கைவிரலை முகவாய்க் கட்டையிலிருந்து எடுத்து விட்டாராம்.

அரசனும் பார்த்திருக்க, தீக்ஷிதர் உடனே சொன்னார்,
“அரனையே பணியும்போது, ‘தந்தையே’ என்பார் சாஸ்தா!
பரசிவன் மனைவியாரைத் ‘தாயெ’ன்று அழைப்பாரவரும்!
விரிகடல் துயின்ற பெம்மான் அவனையே “அன்னை” என்பார், (404)  

என்னவென்றழைப்பார் லஷ்மி தேவியை, அரியின் துணையை?
அன்னையின் துணையும் அன்னை ஆவரோ அவனியில்தான்?
என்னுமோர் சிந்தையில்தான் சாஸ்தாவும் ஆழ்ந்துளாரே”
என்றிடச் சிலையுமங்கே தன்னிலை மாறிற்றென்பார்!  (405)

இப்படியெல்லாம் தெய்வ சிந்தையும் தெரிந்த பெம்மான்,
அப்பய்ய தீக்ஷிதர்தம் பெருமையை தேவர் சொன்னார்!
இப்பெரும் பெருமையெல்லாம் கொண்டவர் நாளை நாமும்
தப்பாமல் உற்சவமாய் கொண்டாட வேண்டும் என்றார்!! (406)

பெரியவா ஊர்கள் எல்லாம் சுற்றியே சென்னை வழியே
சிறியதோர் ஊராம் செங்கல்பட்டுமே வந்தடைந்தார்
திருக்கழுக்குன்றம் சென்றார், வேதமே உருவாம் வேத
கிரியனை வணங்கி நின்றார்; இறையதே உருவாய் நின்றார் (407)


இறையதை உணர உண்மை நிலையதை அறிய, நெஞ்சில்
குறையிலா நன்மை ஓங்க, அமைதியில் நிலைத்து உள்ளம்
நிறைந்தருள் செல்வம் சேர, பாரத தேசம் நாடித்
திரைகடலோடி வந்தார் “பால் பிரண்டன்” என்பாரொருவர்! (408)

பல இடம் அலைந்திளைத்தார்; பலரையும் ஞானியாய் ஐம்
புலனதால் நினைத்திளைத்தார்; நற்குருவுக்காக ஏங்கித்
தலமெலாம் நடந்திளைத்தார்; “பாரதம் வந்ததற்கோர்ப்
பலனில்லை” என்றிளைத்தார்; தென்னாடும் வந்து சேர்ந்தார்! (409)

“புண்ணிய பூமி என்றார்; ஆன்மீக ஒளியாம் இந்த
மண்ணுளோர் என்றும் சொன்னார்! நம்பியே வந்தேனையா!
“உண்மைத் துறவியிங்கு யாருண்டு? சொல்வாருண்டோ?
கண்ணிலே உண்மை குருவைக் காட்டியே கொடுப்பாருண்டோ? (410)


கேள்வியே கேட்டவர்க்கு, உணர்ந்தவர் பதிலைச் சொன்னார்!
“கோள்நிலை உமக்கு நன்கு உள்ளதோ ஐயா? நல்ல
நாளிலே இங்கு வந்தீர்! பெரியவா என்னும் தேவர்
தாளிணைப் பணிவீர்; உண்மை ஞானியை அறிவீர் நீரே! (411)


செங்கல்பட்டு என்னும் கிராமமும் அருகில் உண்டு!
எங்களின் தேவர் தற்போதிருந்திடும் தலமாம், செல்வீர்!
உங்களின் எண்ணம் போல குருவினைக் கண்டு வாழ்வு
மங்கலம் பொங்க வாழ்வீர்! விரைந்து நீர் செல்வீர்” என்றார் (412)


வெங்கடரமணி என்னும் அன்பரின் துணையோடங்கே
செங்கல்பட்டு கிராமம் சென்றார் பால் பிரண்டன் அன்றே
அங்கொரு அகத்தில் தேவர் இருப்பதாய் சேதி கண்டார்
பொங்கிடும் மக்கள் வெள்ளம் எங்கணும் இருக்கக் கண்டார்! (413)

ஆயிரம் பேர்கள் அங்கே காத்துக் கொண்டிருக்கும்போது
ஓய்வெதும் அறியா தேவர் பதம் பணிந்தவரைக் கண்டு
தாயினைத் தேடும் கன்றாய் வந்தவர் தேவர் தாளைப்
போய்ச் சேர்வதெவ்வாறென்று திகைத்தங்கு நின்றிருந்தார்! (414)


கருணையால் தேவர் அவரை உடன் பார்க்க வரவும் சொல்ல,
உருகியே ஆங்கிலேயர் நண்பரோடுள்ளே சென்றார்!
அருகிலே சென்று தேவர் பதம் பணிந்தெழுந்தமர்ந்தார்
பருகினார் தருமமூர்த்தி அருட்திருக்கோலம் தன்னை! (415)

“கேள்விகள் உண்டு எந்தன் மனதிலே அவற்றை தேவர்
தாளினில் வைப்பேன் தங்கள் விடையினால் மகிழ்வேன்” என்றார்
தூளென வினையைத் தூர்க்கும் கமலக்கண் திறந்து தேவர்
கேளெனச் சொன்னார்; பிரன்டன் கேள்விகள் கேட்கலானார்! (416)

உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றி ஸ்வாமிகளை, பிரண்டன் சில கேள்விகள் கேட்கத் தொடங்கினார். ஸ்வாமிகள் அவற்றிற்கு விடையளித்து வந்தார். வேங்கடரமணி அவர்கள், ஸ்வாமிகள் கூறுவதை, பிரண்டனுக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினார்.
கேள்வி : உலகத்தின் தற்கால ராஜீய நிலைமையும், பொருளாதார நிலைமையும் எப்பொழுது சீர்படும் என்று தாங்கள் நினைக்கிறீர்கள்?
பதில் : நிலைமை திருந்துவதென்பது சுலபமாகவும் வேகமாகவும் நடைபெறக்கூடியதல்ல. அது காலக்கிரமத்தில்தான் நடைபெற வேண்டும். பெரிய நாடுகள் ஒவ்வொரு ஆண்டிலும், மக்களை அழிக்கும் ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் ஏராளமான பொருளைச் செலவிட்டுக்கொண்டிருக்கும்போது எவ்விதம் உலகம் சீர்திருந்த முடியும்?
- பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் வரலாறு
நாடுகள் செழித்து எங்கும் அமைதியும் நிலைப்பதென்று?
வாடிடும் மக்கள் இங்கே வாட்டமே தீர்வதென்று?
நாடிடும் நலங்கள் வந்து நன்மையும் சேர்வதென்று?
தேடியே வந்தோம் உம்மை; எடுத்துரைத்தருள்வீரென்றார்! (417)
புன்னகை மிளிர தேவர் பதிலுமே சொல்லலுற்றார்!
தன்னிலை உணர்ந்து பெரிய நாடுகள் மாற வேண்டும்!
“இன்னிலை மாற நேரம் காலமே கூட வேண்டும்!
அன்னிய தேசத்தாரை அழித்திடும் நோக்கத்தோடு (418)

ஆயுதம் பெருக்கவென்று நாடுகள் முனையும்போது
பாய்ந்தயல் நாட்டார் தம்மை அடக்கியே ஒடுக்கி மண்ணில்
சாய்க்கவே முனையும்போது, மாய்க்கவே முயலும்போது,
ஓயுதல் வருமா என்ன? அமைதிதான் வருமா என்ன? (419)


No comments:

Post a Comment