Wednesday, January 20, 2016

அணுக்கத் தொண்டரை எல்லாம் நீர் அழைத்துச் சென்றுவிட்டால், நாங்கள் இனி என்ன செய்வோம்?

நேற்று, திருவாளர். வானதி திருநாவுக்கரசு அவர்கள் சிவபதம் அடைந்தார்.

இன்று, ஸ்வாமிநாத இந்திர சரஸ்வதி எனத் துறவுப் பெயர் கொண்ட, அன்பர்குழாம் எல்லாம் கொண்டாடும் பாலு மாமா பெரியவாளின் திருவடி சேர்ந்து விட்டார்.




















இப்படி, பெரியவாளுடன், இருந்து, கலந்து, பழகி, சேவை செய்தவர்களை எல்லாம் பெரியவா தன்னுடன் அழைத்துக் கொண்டு விட்டால், ஒன்றும் தெரியாமலிருக்கும் நாங்களெல்லாம் என்ன செய்வோம்? யாரிடம் பெரியவா பற்றிப் போய்க் கேட்டுக் கொள்வோம்? "பொல்லாத பெரியவா" என்று உரிமையோடு சொல்லும் அந்த அன்பினை இனி எங்கு போய்ப் பார்ப்போம்?

பெரியவாளிடம் சற்று வருத்தத்தோடும், அழுகையோடும் ஒரு கேள்வி...


சம்புவே நீர்தான் என்று நாங்களும் அறிவோம் ஐயா!
அம்புவி மீது வந்தீர்; தொண்டராய் கணங்கள் சூழ!

மானுட தேகம் விட்டு, எங்களை அழவும் விட்டு,
வானுடை தெய்வமாக திரும்பியே சென்று விட்டீர்!

கனவிலே உம்மைக் கண்டும், தீபத்தில் உம்மைக் கண்டும்
நனவிலே தென்படாமல் நாங்களே தவித்து நின்றோம்

உம்முடை அணுக்கத் தொண்டர் உமைப்பற்றிச் சொல்லும் காதை
தம்மையே கேட்டு நீரும் இல்லாத துயர் தணித்தோம்

உமக்கங்கு பேச என்று, உம் வார்த்தை கேட்க என்று
உம்முடை சைகை பார்த்து, நும்பணி செய்ய என்று

திருமுகம் பார்த்து எல்லாம் செய்யவே என்று பக்கம்
இருப்பவர் போதா தென்றா மேலுமே எடுத்துக் கொண்டீர்?

உமக்கிங்கு தொண்டு செய்த அத்தனை பேரும் அங்கே
உம்மிடம் வந்து விட்டால், எம்மை யார் பார்த்துக் கொள்வார்?

பெரியவா கருணை  பற்றி, பெரியவா குறும்பு பற்றி,
பெரியவா லீலை பற்றி, எமக்கிங்கே சொல்ல என்று

யாரேதான் இங்கிருப்பார்? யாரேதான் சொல்லி நிற்பார்?
யாரிடம் செல்லுவோம் யாம்? யாரிடம் கேட்டிருப்போம்?

பதில் சொல்ல வாரும் ஐயா! எமைக் கொஞ்சம் பாரும் ஐயா!








No comments:

Post a Comment