Tuesday, January 5, 2016

எனக்கென ஒருமுறை வருவீரோ நீர்?

06.01.2016

இன்று, அனுஷம். இது தவிர, பெரியவாளின் நினைவு நாளும் கூட.  ஆதியும் அந்தமும் இல்லா அந்தப் பரம்பொருளின் பிறந்த நக்ஷத்திரமும், உடலை உகுத்து மறைந்த அந்த நாளும் ஒரே நாளாக வருவதும் மிகப் பொருத்தமாகத்தான் தோன்றுகிறது.

அடியேன் பெரியவாளை, ஒரு சிறுவனாய் ஒருமுறை கண்டிருக்கிறேன். ஆந்திராவில் மும்மூர்த்திகளாய் மூன்று பெரியவர்களும் முகாமிட்டிருந்தபோது, தந்தை, தாய், சகோதரியுடன் சென்றபோது, பெரியவாளைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. ஒரு பெரிய புத்தகத்தை ஒருவர் பிடித்துக் கொள்ள, ஒருவர் பக்கம் புரட்ட, ஒருவர் பூதக் கண்ணாடி பிடித்துக் கொள்ள, அந்தத் தள்ளாத வயதில் அவர் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து வியந்திருக்கிறேன். பின்னர் கல்லூரி படிக்கும் சமயம், காஞ்சி மடத்தின் வாயிலில், அனைவருக்கும் அருளும் நோக்கோடு, பரப்ப்ரம்மமாய் அமர்ந்திருந்த அந்த ப்ரம்மத்தை அந்தக் கடல் போன்ற கூட்டத்தில் கடைசியாக நின்று, கன்னத்தில் போட்டுக் கொண்டு திரும்பி இருக்கிறேன்.

ஆனால், பெரியவாளுடன் பேசியதோ, பக்கத்தில் நின்று அவர் பூஜையைப் பார்த்ததோ இல்லை.

பெரியவாளின் அத்யந்த பக்தர்களும், அடியார்களும், பெரியவாளுடன் தாங்கள் நெருங்கிப் பழகியதைப் பற்றி சொல்லும்போதெல்லாம், பொறாமையல்லவோ வருகிறது! எவ்வளவு பாக்யம் செய்திருக்கிறார்கள் இவர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த பாக்யத்தில் ஒரு திவலை கூட இல்லாமல் போயிற்றே, என்ன ஒரு அபாக்யம் என்று என்னைப் பற்றி எண்ணத் தோன்றுகிறது.

ஒரு முறை, Chief Election Commissioner ஆக இருந்த திரு.சேஷன் அவர்கள் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது : "எந்த பிரச்சினையாயிருந்தாலும், மனது சரியில்லை என்றிருந்தாலும், போவதற்கு என்று, அழுவதற்கு என்று, ஆறுதல் பெறுவதற்கென்று, ஆஸ்வாசத்திற்கென்று பெரியவா சன்னிதானம் என்ற ஒரு இடம் இருந்தது. இப்போது, அது இல்லையே, இனி நாம் என்ன செய்வோம்?"

அந்த சன்னிதானம் இன்றும் இருக்கிறதுதான். இன்றும் பெரியவா நம்முடன் இங்கேதான் இருக்கிறார். இருந்தாலும், நமது ஊனக் கண்களுக்கு அவர் தெரியவில்லையே...நேரே பார்த்துப் பேசி, அந்த மயக்கும் சிரிப்பைப் பார்த்து அனுபவிக்க முடியவில்லையே...

இந்த ஏக்கம் தீர, பெரியவாளே, நீங்களே ஒருதரம் மனமிரங்கி, மீண்டும் எங்களுக்காக, எங்கள் முன்னர் வாருங்கள்...!

இந்த நாளில், இந்த சிறு பாமாலையை அவருடைய பதமலருக்கு சூட்டுகிறேன்.

****************************************************


எனக்கென ஒருமுறை வருவீரோ நீர்? மனக்குறை போக்கி அருள்வீரோ நீர்?
தனக்கென ஏதும் கொள்ளா உம்மை, எனக்கென இங்கே தருவீரோ நீர்?

சிலையாய் நீரே அமர்ந்திருந்தாலும்,  நேரே உம்மைக் காணவே ஏங்கும்
நிலையை அறிந்து வந்திங்கெனக்கும், பதமே தந்து அருள்வீரோ நீர்?

உம்மை நேரில் கண்ட அன்னாளில், ஏதுமறியாப் பாலகனாய் நான்
உம்பதம் தொழவும் அறியா நின்றேன்! உம்பதம் வந்து விழுந்திட எண்ணும்

இந்த நாளில் நீர் சிலையாய், படமாய், 'பெரியவா' என்னும் நாமமாய் நின்றும்
எந்தன் உள்ளம் பட்டிடும் பாட்டை அறிவீர் எல்லாம் தெரிந்தீர் நீரும்!

உமதடி பணிந்தோர் உம்பத அழகை எடுத்திங்கெனக்கு இயம்பும் நேரம்,
மனதிலே உம்மை நேரிலே கண்டு பணிந்திடும் ஆசை மிகுந்ததே ஐயா!

உம்முடன் பேசி உம்குரல் கேட்டோர், தெய்வக்குரல் சுவை சொல்லும் போது
உம் குரல் கேட்கா ஜன்மம் இதன்மேல், வருத்தமே நாளும் வளருதே ஐயா!

உம்கரத் தீர்த்தம் பெற்றவர் உமது பூஜை அழகினைச் சொல்லிடும்போது,
உம் உபன்யாஸம் கேட்டவர் உமது சொல்லதன் சுவையைச் சொல்லிடும்போது,

உம்பதம் பணிந்து ஏவலே செய்தோர், உம்சொடுக்கழகை இயம்பிடும்போது,
உம்முக அழகில், உம்மிலே லயித்தோர், இன்முகச்சுவையைச் சொல்லிடும்போது,

 உம் கைவிரல்கள் காற்றில் வரைந்திங்குரைத்திடும் மொழியை, உம் குறிப்பழகை,
பன்மொழியாளரும் வியந்திடும்போது, ரசித்துச் சுவைத்து சிரித்திடும்போது

அன்னவர் போல நானும் உம்மின் அண்மை ஏதும் அனுபவிக்காமல்
உம்மருகிருந்து உம்மருளாலே உமைப்பணியாமல் போனதை எண்ணி

அழுதிங்குருகிக் கரைந்தும் தேய்ந்தும் நான்படும் பாட்டை அறிவீரே நீர்!
தொழுதுமை வாழ்த்தி வணங்கிடும் இந்த ஜீவனுக்காக வருவீரோ நீர்?

படமாய், சிலையாய், நாமமாய் எங்கும் நிறைந்தே நீரும் உள்ளீர் என்று
திடமாய் அறிந்தும் நேரே உம்மைக் காணும் ஆசை நெருப்பாய் எரிக்க,

துன்பம் அனைத்தும் வருவது ஆசையால் என்பதைத் தெளிவாய் உணர்ந்தேன் நானும்!
உம்மை எண்ணும் இன்பமே இங்குத் துன்பமாய்ப் போன கதையை இங்கே

யாரிடம் சொல்வேன்? ஆறுதல் பெறுவேன்? என்னைப் போலே யாவரும் இங்கே
பாரினில் உம்மைப் பார்க்கவே துடிக்க, ஆறுதல் சொல்லி, அணைப்பதற்காக,

எனக்கென ஒருமுறை வருவீரோ நீர்? மனக்குறை போக்கி அருள்வீரோ நீர்?
தனக்கென ஏதும் கொள்ளா உம்மை, எனக்கென இங்கே தருவீரோ நீர்?














No comments:

Post a Comment