Wednesday, April 22, 2015

Periyava : Periyava Anthathi 100 poems on Periyava Chandra sekarendra saraswathi






பெரியவா அந்தாதி

இது பெரியவா என்னும் பெருங்கடலுக்கு அடியேன் சூட்ட நினைக்கும் ஒரு சிறு பாமாலை.

படைப்பு: சா.விஸ்வனாதன் 23.04.2015

நூற்காப்பு

கணபதி உன்னையே கைதொழுது நின்றேன்
கணபதி என்றிடத் தடையெலாம் ஓடிடும்
கணபதி வாழ்த்தொடு இவ்வுரை தொடங்கினேன்
கணபதி நீ செய் அருள்



அருளொளி எனவே ஐயன் தோன்றினான்
அருளொளி சங்கரன் அவனும் தானுமாய்
அருளொளி அம்பிகை அவளும் தானுமாய்
அருளொளி உதித்தது உலகம் உய்யவே  (1)

உய்யப் பிறந்தனை நீ உன்னடியாரெல்லாம்
உய்யப் பிறந்தனை நீ வேதனெறியெல்லாம்
உய்யப் பிறந்தனை நீ அன்பும் அறமும்
உய்யப் பிறந்தனை நீ தருமம் என்றுமே (2)   
          
என்றும் நிலைத்திடும் நின் திருக் கீர்த்தி
என்றும் இருந்திடும் உன் திரு நாமம்
என்றும் கிடைத்திடும் உன்னருட் செல்வம்
என்றும் சிறந்திடும் நின் திருக் கோலமே (3)

திருக்கோலம் கண்டிட கண்ணாயிரம் வேண்டும்
திருக்கோலம் பாடிட நாவாயிரம் வேண்டும்
திருக்கோலம் தொழுதிட கையாயிரம் வேண்டும்
திருக்கோலம் நினைத்திட தீர்ந்திடும் வினையே (4)

வினையே விளைத்த இவ்வுடல் கொண்டிங்குமிக
வினையே விளைத்தனன் உன்னடி சேராமல்
வினையே தடுத்திட, பரிந்திங்கு வந்து என்
வினையை அழித்துன் பதம் சேர்த்துக்க் கொண்டிடப்பா (5)
அப்பனை, அமுதினை, எங்கள் இன்னுயிரினை,
அப்பனாய், அம்மையாய் யாதுமாய் நின்றானை
அப்பனே, ஐயனே என்றழைக்க வருவோனை
அப்பெரும் ஜோதியை, என்று நான் காண்பெனோ (6)

காண்பெனோ, உன் சுடர் திருமுகத்தினை?
காண்பெனோ, உன் அருள்தரு பதத்தினை?
காண்பெனோ, உன் அபய திருக்கரத்தினை?
காண்பெனோ, உன் கருணையின் பெருக்கினை? (7)

பெருக்கினை அன்புவெள்ளம் பாரெலாமுய்ய நீயும்
பெருக்கினை கருணைவெள்ளம் பக்தர் எல்லாருமுய்ய
பெருக்கினை ஞான ஜோதி இருளெலாம் நீங்குமாறு
பெருக்கினை ஏக்கம் என்னுள், உன்னை நான் அடைவதற்கே (8)

அடைவதற்கரிய நின்றன் திருவடி மலர்கள் இங்கே
அடைவதற்கரிய பேறும் வீடுமே தந்திடாதோ?
அடைவதற்கரிய உந்தன் திருவடி நிழலைத்தேடி
அடைவதற்கென்று வீடு பேறும்தான் வந்திடாதோ? (9)

வந்தன பக்தர் கூட்டம், உன் இடம் நாடி இங்கே
வந்தனர் தேவரெல்லாம் உன்னருள் நாடி இங்கே
வந்தனர் சிவகணங்கள் உன்னேவல் கொள்ள இங்கே
வந்தன உயிர்கள் எல்லாம் வந்தனம் செய்வதற்கே (10)



செய்வது ஏதறியேன், சிறியேன் நன்மையொன்றும்
செய்வது தானறியேன், பாமாலை உனக்குச் சூடச்
செய்வதும் நீயே, பிழையெலாம் பொறுத்து அருள்
செய்வதுன் கடனே, மற்றென்ன சொல்லுவனே (11)

சொல்லுவன் உன் பெருமையை நித்தம் நித்தம்
சொல்லுவன் உன் நாமம் நாவும் தழும்பேற
சொல்லுவன் உன் அடியாரின் சிறப்பினை எந்த நாளும்
சொல்லுவன் எந்தன் வினை முற்றுமே ஓயுமாறே (12)

ஓயும் பழவினை நின்னாமம் சொல்லிட
ஓயும் காலன் வேகம் உன்னடிபணிய
ஓயும் துன்பமெல்லாம் என்னுடல் வீழ்ந்திங்கு
ஓயும் போதும் உன்னை மறவாவரம் வேண்டுவனே (13)

வேண்டுவது யாதுமில்லை உன்னடி சேர்தலன்றி
வேண்டுவது யாதுமில்லை உன்னருட் பார்வையன்றி
வேண்டுவது யாதுமில்லை உன்னடியர்களுக்கே
வேண்டுவது ஒன்றே - என்றும் உன்னை வணங்குவதே (14)

வணங்குதல் அன்றி வேறோர் வேலையில்லை இங்குன்னை
வணங்கினோம் வாழ்த்தி நின்றோம் கருணையின் கடலாம் நின்னை
வணங்கினார் தொழுது நின்றார் தேவர்கள் உன்னையிங்கு
வணங்கினார் பிறந்திடாரே சத்தியம் சத்தியமே (15)


 சத்தியம் வந்ததிங்கு மானுட உருவெடுத்து

சத்தியம் நடந்ததிந்த பாரதபூமி முற்றும்
சத்தியம் செய்த கோடித் தவப் பெரும் பயனாய் வந்த
சத்தியம் வந்து இங்கே நித்யமாய் அமர்ந்ததன்றோ! (16)

அமர்ந்த உன் கோலம் தன்னில் அன்னை காமாக்ஷி கண்டேன்
அமர்ந்த உன் தவக் கோலத்தில் அமைதியே பொங்கக் கண்டேன்
அமர்ந்திருந்தளுகின்ற ஐய, நின் கோலம், அருகில்
அமர்ந்திருந்து காணவொட்டேன் பாவியேன் பாவியேனே (17)

பாவியேனை, கொஞ்சமும் பக்தியில்லா இக்கொடும்
பாவியேனை, புழுவினும் கடையனாம் இவ்வெறும்
பாவியேனை, அடைக்கலம் நீ மறுத்தால்
பாவியேன் என்ன சொல்வேன்? என்செய்வேன் அம்மா! (18)

அம்மாபொருளுணர்ந்த யோகிகளும் உனைக்கண்டு
அம்மாபொருள் நீயே என்று உன்னடி பணிவார்
அம்மாதவன் பணியும், விதிபணியும், குஹன் பணியும்
அம்மாதொருபாகன் வந்தனனே உன்வடிவில் (19)

வடிவம் வார்த்தையில் வடித்திடக் கூடுமோ?
வடிவம் வடித்திட மயனாலும் ஆகுமோ?
வடிவம், காண்பவர் மனம்போல் அமைந்திடும்
வடிவுக்கு அரசியாய், காமாக்ஷியாய் ஒளிரும் (20)

ஒளியே! என் நெஞ்சகத்து இருளையெல்லாம் நீக்க வந்த
ஒளியே! ஓளியால் நிறைந்த இன்ப வெளியே! ! தன்னை
ஒளித்து விளையாடும் சிவமே! அன்பர் மனதில்
ஒளிரும் ஒளியே! ஆனந்தக் களியே! என் அற்புதமே! (21)


அற்புதனே! இங்கு நீயும் மனித உடல் எடுத்துவந்த
அற்புதமே! உன் பொற்பதமே விளைக்கும் பல
அற்புதமே! அடியார்க்கெல்லாம் நற்பதமே தந்து நிற்கும்
அற்புதனே! உன்னையன்றி வேறோர் தெய்வம் யாதுமுண்டோ? (22)

யாதுமாகி நின்றாய், நீ உன் அடியார்க்கெல்லாம்
யாதுமே இலாத இவ்வீணனை, உன்னடிசேர்த்து
யாதுமே வேண்டாத நிலைதந்து, நீ எங்கும்
யாதுமாகி நிற்கும் நிஜ, தரிசனமும் தந்தருள்வாய் (23)

தந்தனை சீரடி என்றுமுன் அடியார்க்கெல்லாம்
தந்தனை வாழ்வின் வழி, உன் குரலால், தாயுமாகித்
தந்தையுமாய் வந்தனை, வேதபுரி சிறக்க இங்கு
தந்தனை தன்னையே தரணியெல்லாம் மகிழவே (24)

மகிழ்ந்தது உலகம் எல்லாம் உத்தமன் உதித்ததற்கு
மகிழ்ந்தது வேதம், அந்த வேதியன் வந்ததற்கு
மகிழ்ந்தனர் தேவர் இங்கு தர்மம் நீ செலுத்துதற்கு
மகிழ்ந்தனள் காஞ்சி அன்னை, கண்மணி வரவை எண்ணி (25)


எண்ணினார் பகவத்பாதர், மீண்டும் இவ்வுலகம் உய்ய
எண்ணினார் பகவத்பாதர், மீண்டும் இப்புவி நடக்க
எண்ணினார் எளிமையாக சனாதன தர்மம் சொல்ல
எண்ணிய எண்ணம் இங்கெம் இறைவனாய்த் தோன்றிற்றன்றே (26)

தோன்றினை, மான் மழுவும் ரிஷபமும் மதியுமின்றி
தோன்றினை, பாம்பும் வில்லும் சூலமும் புனலுமின்றி
தோன்றினை நஞ்சு உண்ட கண்டமும் சடையுமின்றி
தோன்றினை தெற்கில் நீயும், கைலாயக் குளுமை விட்டே (27)


விட்டனை வைகுண்டம்தன்னை, சேஷனை, பாற்கடலை
விட்டனை கருடாழ்வாரை, சக்ரத்தை, கதாயுதத்தை
விட்டனை வீட்டை, தாயை, தந்தையை, உறவையெல்லாம்
விட்டனை குழந்தை ப்ராயம். தொட்டனை சிகரம்தன்னை (28)

தன்னை அறிந்த தவயோக முனிவர்க்கே
தன்னை அறிவிக்கும் தவப்பொருள் வந்திங்கு
தன்னை இழந்து, சிவமாய் இருந்து பின்னும்,
தன்னை இந்த தரணிக்கே கொடுத்ததுவே (29)

கொடுத்தனை இந்தப் பிறவியை, உந்தன் மீதன்பும்
கொடுத்தனை உன் நாமம் மறவா நெஞ்சம்
கொடுத்தனை உந்தன் மேல் மாளாக் காதல்
கொடுத்தனை தரிசனம் மட்டுமின்னும் கொடுத்திலையே (30)




இலையே என்றுமுன்னைப் பணிந்தார்க்குத் துன்பம்
இலையே உன்போலிங்கு வழிகாட்டும் ஆசான்
இலையே உன்போல் ஓர் தெய்வம் வேறெங்கும், பின்னும்
இலையே உன்சன்னிதியில் நானிருக்கும் யோகம் (31)

யோகம், பெரும்பணம், பதவி கிடைப்பதன்று
யோகம், புகழும் மற்றின்பங்களும் அன்று
யோகம் உன்னடி மலர் தரிசனம் கிடைத்தலே
யோகம் ஏதுமில்லேன் நானுன் தரிசனம் கண்டிலேனே (32)

கண்டிலேன் பாத பத்மம், ஆயுளே கழிய இன்னும்
கண்டிலேன் பரம மூர்த்தி மலர்முகம் நேரில் நானும்
கண்டிலேன் கனவிலும் உன் அருள்மிகு தரிசனம்
கண்டிலேன் நடமாடும் தெய்வமாய் நீயிருந்தும் (33)


இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பதுன்னை
இருந்தும் நின்னருள் என்பால் சுரக்கவில்லை, நான்
இருந்தும் உன்னருள் இல்லாத நிலையில் இங்கு
இருந்தும் பயன் என்ன? வாழ்ந்தும் பயனென்ன? (34)

என்ன சொல்லி அழைப்பேன் நானுன்னை இங்கு
என்னவென்று சொல்வேன் உந்தன் பெருமையை
என்ன செய்து பெருவேன் உன்னருளை நானும்
என்ன வழி ஏதென்று தெரியாத அற்பன் ஐயா! (35)

ஐயனை, ஆரா அமுதினை, என் அப்பனை, என்
ஐயனே என்றழைப்பார் தம்முன் தோன்றும் மெய்யனை,
ஐயனும் அம்மையுமாய் வந்த ஐயாரனை,
ஐயமின்றி அடிபணிந்தார் தாள் தொழுமின்களே (36)

தொழுதுனை வாழ்த்தி வணங்குதல் அறியேன்
தொழுதுனை நினைத்து அழுதலும் அறியேன்
தொழுதுனை வாழ்த்தி வணங்கிடும் அடியாரைத்
தொழுதலும் அறியேன் பாவியேன் நானே (37)

நானே இங்குனக்கு மீளா அடிமையானேன்
நானென் செய்யினும் கடைத்தேற்றல் உன் கடனே
நானுன்னை நினைப்பினும் நினைவொழிந்து உன்னை
நானே மறப்பினும் ஆண்டருள்தல் உன் கடனே (38)

கடன்பட்டேன் நான் ரா.கணபதி அண்ணாவிற்கே
கடன்பட்டேன் நான் என்றும் தெய்வத்தின் குரலிற்கே
கடன்பட்டேன் நான் உந்தன் பெருமையை சொல்லும் யார்க்கும்
கடன்பட்டேன் நான் உந்தன் அடியார் அடிமலர்க்கே (39)

மலரடி வாழி! விரிந்த பங்கய
மலர்முகம் வாழி! நாபி என்னும்
மலர்மிசை வாழும் அந்தணன் தேடும்
மலர்ப்பதம் வாழி! வாழ்க நின்னடியாரெல்லாம்! (40)



எல்லாம் உன்னாலென்று அறியாரும் உளரோ இங்கு
எல்லாம் நீதானென்று தெரியாரும் உளரோ?
எல்லாமுமாய் நின்றாய், எனையும் நீ ஆட்கொண்டாய்
எல்லாமும் உனதென்று எனை அடிமை நீ கொண்டாய் (41)

கொண்டாயுன் அடியாரை, கொடுத்தாய் நீ தன்னையே
கொண்டாரும் கொடுத்தாரும் ஒன்றாயிங்கானாரே
கொண்டும் கொடுத்தும் உறவாடி நின்ற உன்னைக்
கொண்டோம், உய்தோம், சரணம் சரணமென்றே (42)

சரணம் சரணம் உந்தன் பொற்பதமலரடிக்கு
சரணம் உன்மேல் தவழ் காஷாய உடைக்கு இன்னும்
சரணம் கை கொலுவிருக்கும் தண்டமாம் செங்கோலுக்கு
சரணம் உன் பாதம் தாங்கும் பொற்பாதுகைகளுக்கு (43)

பாதுகை சிரம்மேற் கொண்டு பரதனும் ஆட்சி செய்தான்!
பாதுகை ராமனேதான், பரதனும் அறிவான் இங்குன்
பாதுகை இருக்கும் அன்பர் அகத்தில் உன் ஆட்சியேதான்
பாதுகை கிடைக்கப் பெற்றார் உன்னையே தானும் பெற்றார்! (44)

பெற்றோர் இலாமல் ஆதித் தென் திசை அமர்ந்தானை,
பெற்றம் மேய்த்துண்டு கீதை பகர்ந்தானை,
பெற்றவள் 'சரி' என்ன, முதலை வாய் மீண்டானை
பெற்றோமே நாங்கள் குருவாக உன்னுருவில் (45)

உருவாய் வந்தானை, அருவாய் நின்றானை,
உறுதுயர் களைவோனை, வரும்பகை வெல்வோனை
உறுவது காட்டி நல்வழி நடத்துவோனை, குரு
உருவில் கண்டு வணங்கினோம் உனையே (46)

உனையே அடைந்தோம் அடைக்கலம் என்றழுது
உனையே தொழுதோம் உனக்காட்பட்டு நின்றோம்
உனையன்றி வேறோர் தெய்வமும் யாமறியோம்
உனக்கடிமை செய்தோமை நீ மறுத்தல் ஆகாதே (47)

ஆகாதுனக்குக் கண் பாராதிருத்தல் உன்னடியாரை
ஆகாதுனக்கு அடியார் குறை கேளாதிருத்தல்
ஆகாதுனக்கு வேதம் பயில்வோர் படுதுயரம்
ஆகாதுன் அடியார்க்கும் உன்னிடம் வாராதிருத்தலே (48)

வாராதிருப்பாயோ உன்னடியார் முறை கேட்டும் நீ
வாராதிருப்பாயோ உன்னாமம் சொல்லும் இடத்திலெல்லாம்
வாராயோ தேவி பூஜை நடக்கும் அகத்திலெல்லாம்
வாராயோ, வந்து தீராயோ, இச்சகப் பிணியையெல்லாம் (49)

பிணி வரின், மருந்தொன்று வேண்டும் இங்குனை நினைந்து
பிணியே போல் நானும் உருகிக் குலைவதனால் இப்
பிணிக்கு மருந்தும் பிணியே என்றானதுவே!
பிணியே! மருந்தே! வந்தெழுந்து அருளுகவே (50)



உகப்பது யாதுனக்கு? வேத நெறி ஓங்கல்
உகப்பது யாதுனக்கு? உன் அடியாரைக் கொண்டாடல்
உகப்பது யாதுனக்கு? தனக்கென வாழாதிருத்தல்
உகப்பது யாதுனக்கு? எளிமையாய் வாழ்ந்திருத்தல் (51)


வாழ்வு நீ கொடுத்தாய் எங்கள் ப்ரதோஷ மாமாவிற்கு
வாழ்வான வாழ்வளித்தாய். நாயன்மாராக்கி வைத்தாய்
வாழ்வான வாழ்வளிக்கும் வள்ளல் நீ இருக்க எங்கள்
வாழ்விலோர் குறையுமுண்டோ? உன்போல தெய்வமுண்டோ? (52)

உண்டோ தெய்வம் எனச்சிலபேர் கேட்டிடுவார்
உண்டு தெய்வம் என்றால் அஃதிங்கே கண்டாரும்
உண்டோ என்பார், நடமாடும் தெய்வம் நீ
உண்டெனவே தெளிந்தபின்னர் உன்னிடமே திளைத்து நிற்பார் (53)

நிற்பார் கைகட்டி உன்முன் தேவரும் கணங்களும்
நிற்பர் அரியும் அயனும் உன் சன்னிதிமுன்னே
நிற்பாய் நீயோ உந்தன் பக்தர்களின் வீட்டின் முன்னே
நிற்பாய், செவி மடுப்பாய், புன்சிரிப்பால் குறை களைவாய்! (54)

களைந்திடப்பா எந்தன் குறைகளை உடனே நீ
களைந்திடப்பா எந்தன் முன்வினைக் கொடுமையெல்லாம்
களைந்திடப்பா இந்தப் பிறவி எனும் பிணியை
களை நீக்கி இம்மண்ணை, உன் பாத தூளியாய்க் கொள்! (55)

கொள்வாயோ எனையும் உன் அடியார்க்கு அடியானாக?
கொள்வாயோ என்னையும் என் பிழைகளெல்லாம் பொறுத்து?
கொள்வாயோ என்னையும் கோபம் ஏதுமின்றி?
கொள்வாயோ உனதடியில்? தாயே! தயாபரனே! (56)

தயாபரனே நானுமுன் கைக் கமண்டலமாய் ஆகிடேனோ?
தயாபரனே நீ அணியும் ருட்ராக்ஷமாகிடேனோ?
தயாபரனே நீ தாங்கும் தண்டமாய் ஆகிடேனோ?
தயாபரனே இவ்வுடலெரிந்துன்மேனித் திரு நீராய் ஆகிடேனோ? (57)


ஆகிடேனோ ஒரு புழுவாய் உன்மடத்து வாய்க்காலில்
ஆகிடேனோ ஒரு பூவாய் உன் மேனி அலங்கரிக்க
ஆகிடேனோ ஒரு நெல்லாய் உன் பக்தன் உணவினிலே
ஆகிடேனோ ஒரு புல்லாய் உன்னடியார் நடக்கும் வழி (58)

வழியும் அறியாது வகையும் தெரியாது நின்றேனை
வழி மறித்து ஒரு வகை செய்வித்து அன்பு ஊட்டி
வழி நீயே என்றுணர்த்தி உன்னினைவு கொடுத்து
வாழ்வித்தாய் இங்குன் தரிசனமும் தருவாயே (59)

தருவாய் கேட்கும் வரம் நின்னடியர்க்கு கற்பகத்
தருவாய் காமதேனுவாய், கேட்கா வரமும்கூடத்
தருவாய் கருணைக் கடலாயிருந்து உன்பதம்
தருவாய் உனைஎண்ணி உருகும் உன் சேயனுக்கே (60)



சேயெனை காக்கும் என் தாயே, காமாக்ஷியே
சேயது சிறக்கவென்று பரிந்து அனைத்தும் தந்தாய்!
சேயுனைக் காணாமல் பதைத்தபோதும் மறைந்திருந்து
சேயழும்போதும் அணையா நின்றாய், கல் நெஞ்சமே! (61)

நெஞ்சிலோர் பீடமிட்டுக், கண்ணீரால் கோலமிட்டு,
நெஞ்சக பீடந்தன்னில் என்னிறை உன்னை ஏற்றி
நெஞ்செலாம் நெகிழ இங்கு ஊனுமே உருக நின்று
நெஞ்சிறை உன்னை எந்தன் நெஞ்சகச் சிறை வைத்தேனே (62)

தேனே, தெள்ளார் அமுதே என் தேவே
தேன்மொழியாள் இடம் கொண்டு, வீணே இருன்
தேனின் உள்ளம் கவர்ந்து, ஆட்கொண்டு அருட்
தேனைச் சுரந்த உனையே பாடிப் பரவுவனே (63)


பறவை விலங்கொடு மனிதராய் தேவராய்ப்
பரவிய எம்பெருமானை தினமும் பாடிப்
பரவி இங்குன் தொண்டர் தம்மையும் போற்றிப்
பரவுதலன்றி வேரோர் செயலும் உளதோ? (64)

உளனவன் உடலாய் அன்றி அடியார்கள் மனதிலெல்லாம்
உளனவன் சர்வ வ்யாபி,சர்வேஸ்வரன் எனப்பரந்து
உளனவன் வேத கோஷம் கேட்கும் அவ்விடத்திலெல்லாம்
உளனவன் இன்றும் என்றும் காஞ்சி மா நகரந்தன்னில் (65)


தன்னில் மூழ்கித் தவயோகியாய் இருப்பார்
தன்னிலை மறந்திங்கே ஆனந்த நடமிடுவார்
தன்னை இழக்கவும் தயங்கார் விடமருந்தி
தன்னைக் கொடுத்தார் இவ்வுலகிற்கு உன் வடிவில் (66)


வடிவு இல் இறை எம்மேல் கருணை மிகக் கொண்டு
வடிவொன்றெடுத்து வந்திட நினைத்துத் தாய்
வடிவாகிகுரு வடிவாகிஇரண்டும் சேர்ந்த உன்
வடிவாகி அன்பின் ஊற்றாய் நடந்தது அன்றே! (67)


அன்றே உனதென்று அளித்துவிட்டேன் என்னை
அன்றே உறவென்று கொண்டுவிட்டேன் உன்னை
அன்று முதலே உனை எண்ணி உருகினின்றேன்
அன்றும் என்றும் உனக்காய்த் தவமிருப்பேன் (68)


தவமேதவம் செய்த தவமே அடியார்செய்
தவமேகருணையால் இங்கு வந்த எங்கள்மா
தவமேஉமையும் ஹரனும் விதியும் மா
தவனுமாய் நின்ற எம் தவமே உன்னைப் போற்றுவமே (69)

போற்றி துயர் துடைக்கும் எழில் பதமலர்கள்
போற்றி இருளகற்றும் சுடர் திரு மேனி!!
போற்றி அருள்பொழி முக மலர் என்றும்
போற்றி கருணை மழைபொழி நயனங்களே! (70)



நயனங்கள் மூன்றுடை நாதனின் ரூபமோ?
நயனங்கள் ஈறாறு கொண்டவன் ரூபமோ?
நயனங்கள் எட்டுடை நாதனின் எழுத்தையும்
நயனங்கள் இரண்டும் எளிதில் மாற்றுமே! (71)

மாற்றினாய் அன்பராக உனை பார்த்தவரை எல்லாம்
மாற்றினாய் அடியாராக குரல் கேட்டவரையெல்லம்
மாற்றினாய் பக்தராக தெய்வத்தின் குரல் படித்தோரை
மாற்றினாய் உலகையே நீ உன் கருணை பார்வை ஒன்றால் (72)

ஒன்றே மூர்த்தி. சந்த்ரசேகர சதாசிவ மூர்த்தி.
ஒன்றே நாமம். சந்த்ரசேகர இந்த்ர சரஸ்வதி நாமம்
ஒன்றே ஸ்தலம். அன்னை காமாக்ஷியாய் உறையுமக்காஞ்சி
ஒன்றே வரம். எங்கும் என்றுமுன் பாத தரிசனம் (73)

தரிசனம் தாருமைய்யா! ஐயனே உந்தன் பாத
தரிசனம் தாருமைய்யா! சுடர் திரு முகமண்டல
தரிசனம் தாருமைய்யா! அபயவர ஹஸ்தமதன்
தரிசனம் தவிர வேறும் வேண்டுமோ இவ்வையகத்தே (74)

அகத்தே இருந்த தீய குணமெனும் விஷம் கொடுத்துன்
அகத்தே பெருகும் அருளை அமிர்தமாய் பெற்றுக்கொண்டுன்
அகத்தே பொங்கும் கருணை ஊற்றினால் மனம் துடைத்தென்
அகத்திலே உன்னை வைத்தேன். நெக்கு நெக்குருகி நின்றேன் (75)

நின்றேன் உன்னை இரு கரம் கூப்பித் தொழுது
நின்றேன் உன்னடியாருடன் கூடி உனைப் பாடி
நின்றேன் வீய்ன் செய்த வாழ் நாளை நினைத்தழுது
நின்றேன் நின் பக்தர் குழாத்திலெல்லாம் கடையனாய் (76)


கடையனை, பக்தி இல் கயவனை, அற்பருள்ளும்
கடையனை, உனை நினைத்து உளம் உருகா நாயினும்
கடையனை, தீ மதியிர் சிறந்த விலங்கினும்
கடையேனாய், நிற்கும் என்னை ஆட்கொள்வதும் நின் திருவுள்ளமே (77)

உள்ளம் நெகிழ்ந்து உருகி அழுதுனைத் தொழுகிலேன் நின்
உள்ளம் மகிழும்வண்ணம் ஏதும் செய்கிலேன்! என்
உள்ளம் உனக்குவந்து கொடுதிலேன்! நீயே பரிந்தென்
உள்ளம் புகுந்து நின்று அருள் புரிகவே! (78)

புரியாத தத்துவத்தை, கோட்பாட்டையெல்லாம்
புரிய வைக்கவந்த சத் குருனாதன் நீயே முப்
புரினூலும், அறுமுகமும் நீக்கிக் காஞ்சீ
புரிதன்னில் வந்தமர்ந்த ஸ்வாமி நாதனே (79)

நாதன் நீ. வேதனாதன் நீ. விஸ்வ
நாதன் தினம்தொழும் போதன் நீ. ஆதி
நாதன் நீ. அனாதி நீ. சோதி
நாதன் நீ. அருணாசல ரமணனும் நீயே (80)


நீயே உன்சேயைத் தகாது எனத் தள்ளுவதோ?
நீயே கதி என்று வந்தவனைச் சாடுவதோ?
நீயே எந்தாய், எந்தை, என் குரு என் இறை இனி
நீயே பராமுகமாயிருந்தால் அது தகுமோ? முறையோ? (81)

முறையே ஒன்றும் கற்றிலன் உன்பதம் பற்றும்
முறையும் ஒன்றும் அறிந்திலன் உன்னை நெஞ்சில்
முறையே தொழுது என்றும் வணங்கிலன் பக்திசெய்யும்
முறையும் எதும் தெரிந்திலேன் ஏழையேனே (82)

ஏழையேனை, மூடருள் மூத்த, உன்னருளறியா
ஏழையேனை, உன் கருணை செல்வம் எதுமில்லா
ஏழையேனை, உன்னடியார்க்கேதும் செய்யாப் பொருள்கொண்ட
ஏழையேனை, அளித்துக் காப்பதும் உன் பணியே (83)


பணியெனக்கருள்வாய் உன் பத்ம பாதம் சூடும்
பணியெனக்கருள்வாய் உன்னையே பாடிப் பணிந்திடும்
பணியெனக்கருள்வாய் உன்னையன்றி வேறொன்று நினையாப்
பணியெனக்கருளி ஆள்வாய், எந்தாய், தயாகரனே (84)

தயையால் காலனை உதைத்த காலனே!
தயை இல் காலன் எனை விழுங்கு முன்னம்
தயை ஊற்றால் என் மனம் கழுவி என்னையே
தயையே வடிவாம் உன் சரணத்தில் சேர்ப்பாயே (85)

சேர்த்திட்டாய் பூத பிசாச கணங்களையுன் தொண்டராக
சேர்த்திட்டாய் முயலகனை, பாம்பை உன் கூட்டதுள்ளே
சேர்த்திட்டாய் சாம்பலையும் நஞ்சையும் உன் மேனியொடே
சேர்த்திடப்பா இக்கசடனையும் உன்பாத தூளியோடே (86)

பாததூளி இங்கே பண்ணிடா விந்தையுண்டோ?
பாததூளிபட்டுக் கடைத்தேரா ஜன்மமுண்டோ?
பாததூளிபட்டு அஹல்யையும் புதிதாய் வந்தாள் நின்
பாததூளியே திலகமாய்க் கொண்டாளே வேதமாதா (87)

வேதம் வாழ வந்த வித்தகன் நீயே அந்த
வேதம் வாழ்த்தி நின்ற வேதியன் நீயே
வேதம் போல் மறைந்து நின்ற இறையொளி நீயே அந்த
வேதமே தேடி நிற்கும் அந்தமும் நீயே (88)

அந்தமில் இறை இங்கோர் மானுடவடிவெடுத்து,
அந்தம் வந்துற்றாற்போல நாடகம் நடித்ததன்று!
அந்தமில் ஆதி தேவா! உனக்கேது அந்தம் இங்கே?
அந்த நாடகம் விலக்கி, இங்கெழுந்தருள்வாயப்பா! (89)


அருள்வாய் உலகமெல்லாம் உன்னடி சேர்ந்திடவே
அருள்வாய் என்றும் நானும் உன்னடி போற்றுதற்கே
அருள்வாய் எப்பிறப்பும் உன்னடியார் உடனிருக்க
அருள்வாய் உன்னையே எண்ணி நான் வாழ்வதற்கே (90)


வாழ்க்கையை வாழ்வதற்கு வழிசொன்னாய் இங்கு உந்தன்
வாழ்க்கையே எங்களுக்கு வழியாக அமையச் செய்தாய்
வாழ்வான வாழ்வருளும் வளமருளும் நீயே எம்
வாழ்க்கையாய் ஆகி நிற்க வரமிங்கு கேட்டோமுன்னை (91)

உன்னைச் சரணடைந்தேன், உன்னையே நம்பி வந்தேன்
உன்னை அடைவதற்கே உன்னருள் வேண்டி நின்றேன்
உன்னை அடைந்தபின்னர் அடைவது யாதுமில்லை
உன்னை அடைந்திலேனே, உன்னருள் பெற்றிலேனே (92)

பெற்றிலேன் உன்னை இங்கு, விட்டிலேன் ஆவி இன்னம்
பெற்றிலேன் அருளை இன்னம், பெற்றிலேன் பாத பத்மம்
பெற்றிலேன் உன்னருகில் உற்றிருந்து செய்யும் சேவை
பெற்றிலேன் அபய ஹஸ்தம், வீணன் நான் நாயினேனே (93)


நாயினும்கடையன் இவனென்று கைவிடல் தகாதுனக்கு
நாயினேனை ஒறுத்தல் முறையே எனினும் இங்கு
நாயினும் கடையனுக்கும் இரங்கலே கருணை அன்றோ?
நாயேனிவன் - நல்லவனிவனென்று பார்க்காதே கருணைமழை (94)

கருணையால் வந்துதித்தாய், உலகெலாம் வாழ நீயும்
கருணையே காட்டி நின்றாய், உயிரெலாம் வாழ நீயும்
கருணையே உருவாய் வந்து, தாயுமே தானாய் நின்ற
கருணையின் கடலே! இந்தக் கடையனைக் கண் பாராயோ? (95)

பார்புகழ் ஜகத்குருவே! பதமலர் பணிந்து நின்றேன்
பார் தனைக் காக்கும் சிவனே! சாரதியாகவந்து
பார்த்தனைக் காத்த கண்ணா! அடிமையை இங்கே கொஞ்சம்
பார்! அடி சேர்! தயை கூர்! எனையாள்வாய் இன்றே! (96)

இன்றே, வேண்டுமென்று அழுவது குழந்தையின் குணமே
இன்றே, இக்கணமே அருள்செய்தல் தாயின் குணமே
இன்றே இக்கணமே அருள்செய்வாய், அல்லது உயிருடம்பு நீங்கி 
இன்றே போகச் செய்யினும் நன்றே, நினது அருட்செயலே (97)

செயலற்ற நிலை கொண்ட சிவமே! மிக உறங்கி
செயலற்ற நிலை காட்டி சயனம் கூட்டி
செயலாற்றும் பரமே! விதியின் வலிய அந்த
செயல் மாற்றும் தாயே! நானுன் அடைக்கலமே! (98)

அடைக்கலமென்று உனை அடைந்தேன், ஏற்காவிடில் நான்
அடையும் கதி ஏதென்று அறியேன், கருணை கொண்டுன்னை
அடைவிப்பது உன் பணியே, தீமை என்றும் வந்து
அடையா ஒளியே. அன்னையே! காமாக்ஷியே! (99)

காமனை எரித்த கால காலனை ஜெயித்த சக்தி!
காமனை உயிர்த்த தேவி, காலனை உதைத்த 
காம காமனாய் நடந்த காம ஈஸ்வரன் கிழத்தி! 
காமன் பணி, காஞ்சினகர்வாசி நீ ! ஜகத்குருவே! வந்தருளே! (100)


நூற்பயன்

குருவின் பதம் பணிந்து அந்தாதி ஓதியோர்க்கு,
குருவருள் பூரணமாய் சித்திக்கும், அவர்க்குமந்த
குருவே மனம் கனிந்து அருள்புரிவன் அவனருளால், 
குருவை நாமடையு மாறு





No comments:

Post a Comment